பகுதி – 26.
வைஷாலிக்கும், சர்வஜித்துக்கும் இடையே ஒரு சின்ன மனக்கசப்பு. சர்வஜித் வந்தது முதலே அலைபேசியில் நிறைய பேசிக் கொண்டே இருக்க, அவளுக்கு டென்ஷன் ஆனது. அவன் ஒன்றும் அவளுக்கு ஒளித்து மறைத்து என எதையும் செய்யவில்லை.
வைஷாலி அந்த கோபாலுக்கு சாதகமாகப் பேச, சர்வஜித்துக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது. ‘இவளால் எப்படி அவங்களுக்கு இரக்கம் பார்க்க முடிகிறது?’ என்பதுதான் அவனது எண்ணமாக இருந்தது.
சர்வஜித் பெரிதாக ஏதோ ப்ளான் செய்வது புரிய, அதுவே அவளுக்கு அதிக பட்டத்தைக் கொடுத்தது. “நீங்க என்னவோ ப்ளான் பண்றீங்கன்னு தெரியுது. ஆனால் இதெல்லாம் அவசியமா? வேண்டாமே...” அவனிடம் சொன்னாள்.
“இதை ஆரம்பிச்சாச்சு... இனிமேல் நிறுத்த முடியாது” அவன் அத்தனை உறுதியாகச் சொல்ல, அவளுக்கு பயம்தான்.
“அதான் முத்துப்பாண்டியை கடத்தி, அவனை பைத்தியமாக்கியாச்சே. இதுக்கு மேலே என்ன செய்யப் போறீங்க? அவனோட வாழ்க்கையே போச்சு... போதும், நிறுத்துங்க” பழி பாவங்களுக்கு அஞ்சும் மனது, அவனைத் தடுக்க முயன்றது.
“உன் மாமனைப் பற்றியும், அவன் மகன்களைப் பற்றியும் முழுசா தெரிஞ்சுமா இப்படி பேசற?” என்றவனுக்கு அத்தனை கோபம்.
நடக்கும் விஷயங்களின் கனம் தெரியாமல் பேசுகிறாளே என்ற கோபம் அவனுக்கு. அதைவிட அவர்கள் இப்பொழுது திட்டமிடும் விஷயங்கள் ஒவ்வொன்றும் அவனுக்குத் தெரியவர, அவன் கொந்தளித்துக் கொண்டிருந்தான்.
“அவங்க என்னவோ செஞ்சுட்டுப் போகட்டும்... விடுங்க” அவள் சொல்ல கடுப்பானான்.
“விஷயம் தெரியாமல் பேசாதன்னு சொன்னேன். உண்மை எல்லாம் உனக்குத் தெரியவரும்போது நீ இதே வார்த்தையைச் சொல்லு நான் கட்டுப்படறேன்” என்றான். அவனுக்கு கண்மண் தெரியாத கோபம் வந்தது.
‘இவ்வளவு அநியாயம் பண்ற அவனுக மேலே இவளுக்கு அப்படி என்ன பாசம் வேண்டிக் கிடக்கு?’ அவனுக்கு ஆத்திரமென்றால் அவ்வளவு ஆத்திரம். ‘பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிட்டது என நினைக்குமாம். அப்படி இவளும், அவர்கள் செய்வது தெரியாமல் போனால், அவர்கள் நல்லவர்களாகி விடுவார்களா?’ தன் கோபத்தை அவளிடம் காட்டாமல் இருக்க அவ்வளவு போராடினான்.
ஆனால் அது அவனது கைகடிகாரத்தின் மூலம் வெளிப்பட, வைஷாலி பின்வாங்கினாள். ஆயிரம் இருந்தாலும் அவனது உடல்நிலை அவளுக்கு மிகவும் முக்கியம் ஆயிற்றே.
மிகக் கடுமையாக எரிந்து கொண்டிருக்கும் அவன்மேல், நீரைத் தெளிக்கும் அவளது செய்கை அவனை என்ன செய்துவிடும்? மேலும் கொதிக்கச் செய்வதைத் தவிர, அதனால் எந்த பலனும் இல்லை என அவளுக்குப் புரியவே இல்லை.
அவள் அவனைத் தடுக்க முயன்றது முதல், அவன் அவளை விட்டு விலகி இருக்க, அதுவேறு அவளது கோபத்தை அதிகரித்தது. ‘பொண்டாட்டின்னா தப்பு செய்தால் கேட்கத்தான் செய்வா. அப்படிக் கேட்டால் விலகி இருப்பாராமா?’ அவளுக்குள் ஆற்றாமை பெருகியது.
அவன் தன்னோடு ஒன்றாக இருக்கும் நேரங்கள் மட்டுமே, அவனவளாக அவள் உணர்ந்தாள். மற்ற நேரங்களில் அவன் ஒட்டாமல் விலகி நிற்க, தனித் தீவாக அவன் நிற்பது போன்ற பிரம்மை. ‘தான் இருந்தாலும், இல்லை என்றாலும் அவனுக்கு ஒன்றுமே இல்லையா?’ என்ற ஆதங்கம் அவளுக்குள் நிறைந்தது.
இவை எல்லாம் சேர, அவன் முகம் பாராமல் இருந்துகொண்டாள். அவள் அப்படி இருக்க, அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் வீட்டில் இருந்தாலே, அவனை ஒட்டிக்கொண்டு, உரசிக்கொண்டு இருப்பவள், திடுமென விலகி இருந்தால் அவன் எப்படி சகிக்க?
‘ஒரு வேளை விலகி இருந்து அவளைக் காண்பதைத்தான் அவள் விரும்புகிறாளோ?’ என்ற எண்ணம் எழ, உடனே சென்னைக்கு கிளம்பிவிட்டான்.
“நான் சென்னைக்கு கிளம்பறேன்” என்றவாறு அவன் நிற்க, உள்ளம் அதிர அவனைப் பார்த்தாள்.
“இனிமேல் கொஞ்சநாள் இங்கேதான்னு சொன்னீங்க?” அவன் இல்லாமல் அவள் அவளாகவே இருப்பதில்லை என்பதால் தன் வலியை மறைத்துக்கொண்டு கேட்டாள்.
“அதான் ஒரு வாரம் இருந்தேனே... நான் இல்லாத நேரம் என்ன வேணா நடக்கலாம். கொஞ்சம் கவனமா இருந்துக்கோ, என்ன நடந்தாலும் உன்னை நான் விட்டுட மாட்டேன்னு நம்பு” எனச் சொல்ல, புருவம் நெரித்தாள். அவன் சொல்வதன் முழுக் காரணமும் அவளுக்குப் புரியவில்லை என்றாலும், ஏதோ ஒன்று இருப்பது புரிந்தது.
“அம்மா... பார்த்து இருந்துக்கோங்க. ஹரீஷ் கவனம்...” என்றவன் அவனை ஒரு பார்வை பார்க்க, புரிந்தது என்பதுபோல் தலை அசைத்தான் ஹரீஷ். தாயை கட்டிக்கொண்டு அவன் விடைபெற, தன்னைக் கண்டு கொள்ளாதது அவளுக்குள் எதையோ உடைந்து போகச் செய்தது.
இதயத்தில் விழுந்த இடியில் கண்கள் கலங்கிப் போக, வேகமாக தன் அறைக்குச் சென்றுவிட்டாள். கண்கள் தன்போக்கில் கண்ணீரை வடிக்க, குலுங்கி அழுதாள்.
“ஷாலு... மால்’க்குப் போகலாமா?” என்றவாறு ரூபி அவளது அறைக்கதவை தட்டிக் கொண்டிருந்தாள்.
“இல்ல ரூபி... எனக்கு கொஞ்சம் தலைவலியா இருக்கு, நான் வரலை” என அவள் பதில் கொடுக்க, அவளது குரலே சரியில்லை என அவள் உணர்ந்து கொண்டாள். சர்வஜித் அவளை தனியாக விட்டுச் சென்றதால் வந்த சோர்வு என ரூபிக்குப் புரிய அவளைத் தொல்லை செய்யாமல் திரும்பிவிட்டாள்.
கீழே வந்தவள், விசாலாட்சியை தேடித் போனாள். “அம்மா, ஷாலு கொஞ்சம் அப்சட்டா இருக்கா. ‘மால்’க்கும் வரலைன்னு சொல்லிட்டா. நான் கிளம்பறேன்...” அவரிடம் சொல்லிவிட்டு கிளம்ப, அடுத்த அரைமணி நேரத்தில் அந்த அசம்பாவிதம் நடந்து இருந்தது.
வைஷாலியின் வீட்டுக்குள் புகுந்த சிலர், விசாலாட்சியை அடித்துப் போட்டுவிட்டு அவளை அடாவடியாகத் தூக்கி இருந்தார்கள். ஹரீஷ் ரூபியை அழைத்துக்கொண்டு சென்றிருக்க, அவன் அங்கே இல்லாதது அவர்களுக்கு வசதியாகப் போயிற்று.
வைஷாலியோ அவர்கள் இழுப்பிற்கு முரண்டு பிடிக்காமல் அவர்களோடு சென்றாள். சர்வஜித் சொல்லிச் சென்றதன் காரணம் புரிய, ‘இவங்களுக்கு பட்டாலும் புத்தி வராதா?’ என்றுதான் நினைத்தாள்.
அவளைக் கடத்திய மறு நிமிடம் விஷயம் சர்வஜித்துக்கு அறிவிக்கப்பட, அவன் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவே இல்லை. சொல்லப்போனால் அவளை எங்கே கூட்டிச் செல்கிறார்கள் என்பது எல்லாம் அவளிடம் இருந்த ட்ரேக்கர் மூலம் அவன் கண்காணித்துக் கொண்டே இருந்தான்.
வைஷாலியை கோபால் தனது கொடவுனுக்கு அழைத்துச் செல்ல, அந்த இடம் அவளுக்கும் புதியதே. அங்கே கோபால் இருக்க, அவரைப் பார்த்தவள் சீறினாள். “என்ன மாமா இது? எதுக்காக என்னை இப்போ இங்கே கூட்டி வந்தீங்க? என்னை விட்டுடுங்க மாமா, இல்லன்னா உங்களுக்குத்தான் கஷ்டம்” தன்னவனைப் பற்றி தெரிந்தவள் என்பதால் சொன்னாள்.
இப்பொழுது எல்லாம் கோபால் மீதான பயத்தை விட, சர்வஜித் எதையும் எப்படியும் செய்து முடிப்பான் என்ற உண்மை அவளுக்குப் புரியத் துவங்கி இருந்தது. அதுவும் கோபாலின் குடும்பத்தை வாரிசு கூட இன்றி அவன் நிர்மூலமாக்குவேன் எனச் சொன்னது வெறும் வாய் வார்த்தை இல்லை என அவளுக்கு புரிய வரத் துவங்கியது.
எனவே எப்படியாவது கோபாலை தடுத்துவிட மாட்டோமா என எதிர்பார்த்தாள். ஆனால் அவர் அப்படி கேட்டுவிடும் ஆளா என்ன?
“என்ன பயம் காட்டுறியா? இது எங்க கோட்டைடி. இதுக்குள்ளே வந்த பிறகும், நீ இவ்வளவு தைரியமா பேசறன்னா, அதுவும் எங்க முகம் பார்த்து பேசறன்னா உனக்கு தைரியம்தான்” என்றவாறு அங்கே வந்தான் விநாயகம்.
“எங்க அப்பாவைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தீங்களா? உங்க தங்கச்சி பொண்ணு தானே நான்? அந்த பாசம் கூடவா உங்க நெஞ்சில் இல்லை?” மிரட்டல் வேலைக்கு ஆகவில்லை என்றவுடன், பாசத்தைக் காட்ட முயன்றாள்.
“ஐ... வைஷாலி... இவ வைஷாலி தானே... வைஷாலி...” என்றவாறு முத்துப்பாண்டி அங்கே வந்தவன் அவளைத் தொட முயன்றான். அந்த முத்துப்பாண்டியை பார்த்த அந்த நொடி, பயந்து போனாள்.
“டேய் பாண்டி... இவ உனக்குத்தான்... கூட்டிப் போடா...” கோபால் சொல்ல, முதல் முறையாக வைஷாலியின் மனதுக்குள் ஒரு பயம் பிடித்துக் கொண்டது.
“வாடி...” என்றவாறு முத்துப்பாண்டி அவளை அங்கே இருந்த ஒரு அறைக்கு இழுத்துச் சென்றான்.
“டேய்... விடுடா... என்னை விடுடா... மாமா என்னை விடச் சொல்லுங்க. என் புருஷன் உங்களை எல்லாம் சும்மா விட மாட்டார்” கத்தி கதறினாள். அவர்கள் யாருமே அதைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை.
‘ச்சீ... இவர்களுக்கா பாவம் பார்த்தேன்?’ என அவளுக்கே வெறுத்துப் போனது.
அவளை அந்த அறைக்குள் இழுத்துச் சென்றவன், அவளை அந்த அறைக்குள் வீசி எறிந்தான். ஒரு மாதிரி கோணல் சிரிப்பு சிரித்தவன், “என்னடி... என்கிட்டே இருந்து தப்பிச்சுட்டோம்னு நினைச்சியா? அவ்வளவு சீக்கிரம் விட்டுடுவேனா? உன்மேலே எனக்கு எவ்வளவு வெறின்னு இன்னைக்கு காட்டறேன்டி...” என்றவாறு அவளை நெருங்கிச் சென்றான்.
“வேண்டாம் பாண்டி... நான் சொல்றதைக் கேளு...”.
“கேட்க முடியாதுடி... அப்படி என்னடி அவன் என்னைவிட உசத்தி? அப்படி என்கிட்டே இல்லாதது என்னது அவன்கிட்டே இருக்கு? என்ன உன்னை முழுசா அனுபவிச்சுட்டானா? ஆனா கூட பரவாயில்லை... எனக்கு உன்னை ஆசை தீர அனுபவிக்கணும்” அவன் சொல்லிக் கொண்டே போக, அவனை ஆராய்சியாகப் பார்த்தாள்.
அவள் பார்வையை உணர்ந்தவன், “என்னடி பார்க்கற?” அவளிடம் கேட்டான்.
“நீ... உனக்கு பைத்தியம் இல்லையா?” அவள் கேட்க, வில்லச் சிரிப்பு சிரித்தான்.
“ஹா...ஹா...ஹா... பைத்தியமா எனக்கா? என் அப்பாவை வெறி ஏற்றிவிட நான் செய்த ட்ரிக் தான் அது. இல்லன்னா உன்னை இன்னைக்கு இங்கே தூக்கிட்டு வந்திருப்பாரா? என்ன அதுக்காக கொடுத்த விலைதான் கொஞ்சம் அதிகம்.
“ஆனாலும் என் அப்பாவுக்கும், அண்ணன்களுக்கும் என்மேலே ரொம்ப பாசம்டி. என் பைத்தியத்தை தெளிய வைக்கறேன்னு விதம் விதமா பொண்ணுங்களை இறக்கினாங்க. ஆனா உன்னை மட்டும் கண்ணில் காட்டவே இல்லை. அதுக்குத்தான்... கடைசியா ஒரு பொண்ணை கொலையே செய்ய வேண்டியதா போச்சு” அவன் சொல்லிக்கொண்டே போக, அருவருத்துப் போனாள்.
அதுவும் அவன் விதம் விதமான பெண்களை சிதைத்தேன் எனச் சொன்ன பொழுது, ‘இவனுக்கு வேண்டியா அவர்கிட்டே சண்டை போட்டேன்? இவன் எல்லாம் திருந்தாத ஜென்மம். இவன் சாக வேண்டியவன்’ மனதுக்குள் அத்தனை ஆத்திரம் வந்தது.
அதைவிட பைத்தியம் என வேஷம் போட்டிருக்கிறான் எனப் புரிய, தன்னவன் சொன்னதன் காரணம் முழுதாக அவளுக்குப் புரிந்தது. சர்வஜித் பார்த்த அந்த பார்வை... அதன் பொருள் இப்பொழுது புரிய, தன் முட்டாள்த்தனத்தை நொந்து கொண்டாள்.
“ச்சீ.... நீயெல்லாம் மனுஷனா? இப்படி மிருகம் மாதிரி நடந்துக்கறியே, உனக்கு கொஞ்சம் கூட கூசல?” ஆத்திரத்தில் கத்தி, அவன் மூஞ்சியில் எச்சிலை துப்பினாள். அதைக் கொஞ்சம் கூட சலனமே இன்றி வாங்கிக் கொண்டவன், அவளைப் பார்த்து இளித்தான்.
“இப்போ நீ துப்புற... கொஞ்ச நேரத்தில் நான்...” என்றவாறு அவன் வக்கிரமாகப் பேச, தன் செவிகளை மூடிக் கொண்டாள்.