• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தீராப்பகை தீர்வானது - 9.

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
பகுதி – 9.

வைஷாலி மறுநாள் கண் விழிக்கையிலேயே அவளது அப்பா பைரவனின் குரல் அவள் இருந்த வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது. முதலில் கனவு என நினைத்து ஒதுக்கியவள், அது அப்படி இல்லை எனத் தெரியவே அடித்துப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

அவள் அவ்வளவு பயந்து எழுந்ததன் காரணம் தகப்பனது குரலுக்காக மட்டும் இல்லை. அவருடனே சேர்ந்து ஒலித்த அவளது மாமா கோபால் மற்றும் முத்துப்பாண்டியின் குரலைக் கேட்டும்தான் திடுக்கிட்டுப் போனாள்.

‘அப்பா எதுக்காக வந்திருக்காங்க? அதுவும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து நிற்க மாட்டாங்களே. கண்டிப்பா அருணா எதையோ சொல்லி இருக்கணும்’ அவளது ஆழ்மனது அடித்துச் சொன்னது.

அவள் அப்படி எழுந்து அமர்ந்த விதத்தில், ரூபியுமே அதிர்ந்து எழுந்து அமர்ந்தாள்.

“ஷாலு... என்னடி? எதுக்கு இப்படி எழுந்து உட்கார்ந்து இருக்க?” அவளிடம் கேட்டாள். அப்படிக் கேட்டவளின் கண்களில் இன்னும் உறக்கம் மிச்சம் இருந்தது.

“ஷ்...ஷ்... சத்தம் போட்டு பேசாதே” என்றவள் வேகமாக தங்கள் ஆடையை சரி பார்த்துக் கொண்டாள். ‘தோழி அவளது ஆடையை சரி பார்த்தாள் சரி, அதென்ன என் ஆடையையும் சரி பார்க்கறா?’ என்ற யோசனையில் அவளைப் பார்த்தாள்.

“என்னதான்டி ஆச்சு? எதுக்கு இப்படியெல்லாம் பண்ற?” குரலைச் சற்று தாழ்த்திக் கொண்டு கேட்டாள்.

“ரூபி... பேசாதே...” என்றவளுக்கு அவளிடம் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

வைஷாலியின் செவிகள் வெளியே கேட்ட குரலில் பதிய, தானும் அதை கவனித்தாள். “அவளுக்கு எப்படி அடி பட்டதுன்னு நீ கேட்கவே இல்லையா?” அவளது மாமா மகன் முத்துப்பாண்டியின் குரல் ஓங்கி ஒலிக்க, கேள்வியாக வைஷாலியைப் பார்த்தாள்.

“யாருடி அது? இப்படிக் கத்தறது?” ரூபிக்கு எதுவும் புரியவில்லை.

“அது... முத்துப்பாண்டி...” என்றவளின் குரலிலும், முகத்திலும் எதற்கு இப்படி ஒரு வெறுப்பு, அருவருப்பு என அவளுக்குப் புரியவே இல்லை.

“கேட்கறது உன் காதில் விழுதா இல்லையா?” முத்துப்பாண்டி கத்த, வெளியே அருணாவுக்கும், உள்ளே வைஷாலிக்கும் உடம்பு ஒருமாதிரி நடுங்கி, தூக்கிப் போட்டது.

அவள் நடுங்குவதைப் பார்த்த ரூபி, “ஏய் ஷாலு...” என்றவாறு தோழியை மென்மையாக தோளோடு அணைத்துக் கொண்டாள்.

“ஐயா... நான் கேட்டேன்ங்க...” அருணா மென்று விழுங்கினாள். அருணாவுக்கு ரத்னாவின் அண்ணன் கோபாலைப் பார்த்தாலே கன்னடப் படங்களில் வரும் வில்லன்கள் நினைப்புதான் வரும். கூடவே அவனது மகன்கள் விநாயகம், வேலவன், முத்துப்பாண்டி என இவர்களையும் சேர்த்தால் பத்துப் பொருத்தமும் பக்காவாகப் பொருந்தும்.

கன்னடப்பட அடியாள் வில்லன் கோஷ்டிக்கும் இவர்களுக்கும் தோற்றத்தில் மட்டுமே வித்தியாசம் வித்தியாசம் இருக்கும். மற்றபடி குணத்தில், கொடூரத்தில் எல்லாம் ஒன்றுதான். அருணா பைரவனிடம் தகவல் சொன்ன பொழுது, இவர்களும் சேர்ந்து வந்து நிற்பார்கள் என கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை.

“கேட்டேன்னு சொல்ற, அவ என்ன சொன்னான்னு சொல்ல மாட்டேங்கற?” முத்துப்பாண்டி அவளிடம் எகிறினான்.

“முத்துப்பாண்டி, நீ கொஞ்சம் பொறுமையா இரு, நாம என்னன்னு விசாரிக்கலாம். அருணா, நீ போய் அவ எழுந்துட்டாளான்னு பார்த்துட்டு வா, போ...” கோபாலின் குரல் ஒலிக்க, மறு நிமிடம் அருணா அங்கே இருந்து கிளம்பப் போனாள்.

அது வைஷாலிக்கும் கேட்க அவள் சற்று பரபரப்பானாள். ஆனால் மறு நிமிடம், பைரவனோ... “அருணா, பாப்பா நிம்மதியா தூங்கி எழுந்து வரட்டும். நீ அவளைத் தொல்லை செய்யாதே” தகப்பன் சொல்ல, இழுத்து வைத்திருந்த மூச்சை வெளியேற்றினாள்.

“என்ன மச்சான், சுரத்தே இல்லாமல் பேசறீங்க? இவன் கட்டிக்கப் போறவ தானே, அந்த தவிப்பு இவனுக்கு இருக்காதா?” கோபால் பைரவனிடம் கேட்க, அவருக்கு பதில் சொல்லவே பிடிக்கவில்லை.

அவர்களது பேச்சைக் கேட்ட ரூபி, தோழியைப் பார்க்க அவளோ ஒரு மாதிரி படபடத்துப் போய் அமர்ந்து இருந்தாள். அந்தப் பேச்சுக்கு தன் அப்பா ஏதாவது மறுப்பு சொல்வார் என வைஷாலி எதிர்பார்த்திருக்க அப்படி ஒன்று நடக்கவே இல்லை.

அதை எண்ணி உள்ளுக்குள் அப்படி தவித்துப் போனாள். ‘எல்லாம் அவ்வளவுதானா? முடிந்ததா? ரெண்டே நாளிலா?’ மனம் பிசைந்தது. வெளியே நடந்த பேச்சைக் கேட்ட ரூபியும் தோழியைத்தான் அதிர்வாகப் பார்த்தாள்.

அவளிடம் விஷயம் என்ன எனக் கேட்க ஆவல் பிறந்தாலும், தோழியின் முகத்தைப் பார்த்துவிட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். அவளாக ஏதாவது சொல்வாளா எனப் பார்க்க, அவள் அப்படியே அமர்ந்து இருந்தாள்.

“ரூபி... குளிச்சு சாப்ட்டுட்டு நீ உன் வீட்டுக்கு கிளம்பிடு” அவள் சொல்ல, ரூபி மறுத்து எதையும் சொல்லவில்லை. அங்கே சூழல் சரியில்லை என அவளுக்கே புரிகையில் அவளும் மறுத்து எதையும் பேசவில்லை.

“சரி ஷாலு... நீ உன் கையைப் பார்த்துக்கோ. இப்போ வலி, எரிச்சல் எல்லாம் குறைஞ்சு இருக்கா?” அவளது கரத்தைப் பற்றி ஆராய்ந்தவாறே கேட்டாள்.

“அது ரெண்டு நாள்ல சரியாப் போய்டும். உதவிக்கு அருணா அக்கா இருக்காங்களே, நான் பார்த்துக்கறேன்” எப்படியாவது தோழியை முத்துப்பாண்டினின் கண்களில் இருந்து மறைத்து அனுப்பிவிட வேண்டும் என்று இருந்தது.

அவன் கண்ணில் ரூபி பட்டுவிட்டால் என்ன ஆகும் என்ற பயம் பயப்பந்தாக அவளது அடிவயிற்றைக் கவ்வியது. “ஷாலு... ஏதும் பிரச்சனையா? நான் உனக்கு துணைக்கு இருக்கவா?” தோழியை அப்படியே விட்டுச் செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.

“இதை நான் பார்த்துக்கறேன் ரூபி... நீ இப்போ கிளம்பியாகணும். உன் வண்டியை நீ பிறகு எடுத்துக்கறியா? கேப் புக் பண்றேன்... பின்னாடி வழியா போய்டு” வைஷாலி சொல்ல, ரூபிக்கு அத்தனை அதிர்வுதான்.

ஆனாலும் தோழி விஷயம் இல்லாமல் இப்படிச் சொல்ல மாட்டாள் எனப் புரிய சம்மதித்தாள். “சரி நான் கிளம்பறேன், நீ டென்ஷன் ஆகாதே...” என்றவள் குளித்துவிட்டு, வைஷாலியின் ஒரு சுடிதாரை அணிந்து கொண்டாள்.

ஒரு நிமிஷம் இரு... என்றவள் தன் அலைபேசியை எடுத்து, “அக்கா ரெண்டு டீ வேணும்” என அருணாவுக்கு ஒரு குறுந்தகவலை அனுப்பிவைத்தாள். அந்த நேரம் அவள் அதைப் பார்ப்பாள் என்ற நம்பிக்கை இல்லை என்றாலும் அதைச் செய்தாள்.

“அங்கே பிளாஸ்கில் வச்சிருக்கேன் பாப்பா” என பதில் தகவல் வர, பரபரப்பானாள்.

“ரூபி... அதோ பார் டீ இருக்கு... சீக்கிரம் குடி. தெரு முனையில் கால் டேக்சியை நிக்கச் சொல்லி இருக்கேன்... பின்னாடி வழியா போய், அந்த கார்னர்ல போய் ஏறிக்கோ. உன் வண்டியை நானே கொண்டு வந்து தர்றேன்...” அவள் வேகமாகச் சொல்ல ரூபி அவள் சொன்னவாறே செய்தாள்.

அங்கே இருந்தவற்றைப் பார்த்த ரூபி, “எப்படிடி...? அருணா அக்கா உன் மனசைப் படிச்சவங்க மாதிரி செய்து இருக்காங்க” ரூபி சொல்ல, அதற்கு அவள் எந்த பதிலையும் சொல்லவில்லை.

அங்கே ஒரு பிஸ்கட் பேக்கெட்டும் இருக்கவே, அவள் அதையும் உண்டு, டீயையும் குடித்து முடித்தாள். ரூபி தோழியையும் டீயைக் குடிக்க வைக்க, அந்த நேரம் அவளுக்கு அது தேவையாகத்தான் இருந்தது.

“நான் இந்த ரூம்ல இருக்கறதும் நல்லதுக்குத்தான் போல. நான் வெளியே போய், அந்தப்பக்கம் போறது வரைக்கும் நீ ரூமை விட்டு வெளியே வராதே. அதற்குப் பிறகு, கிச்சனுக்குள்ளே போயிட்டு, அப்படியே வெளியே போய்டு. நான் சொல்றது புரியுதா?” அவள் கேட்க, தோழியை கூர்மையாகப் பார்த்தாள்.

“என்னடி நடக்குது இங்கே? கேட்டாலும் சொல்ல மாட்ட... நான் கிளம்பறேன். நீ போ... கையைப் பார்த்துக்கோ, தண்ணியில் நனைக்காதே” என்றவள் அமைதியாகிவிட்டாள்.

“எல்லாத்தையும் சொல்றேன், ஆனா இப்போ அதுக்கு நேரமில்லை, சோ ப்ளீஸ்... சொல்லக் கூடிய விஷயமா இருந்தால் நான் எப்போவோ சொல்லி இருப்பேன். இது...” அவள் ஒரு மாதிரி கண் கலங்க, அவளுக்கு ஒரு மாதிரியாகிப் போயிற்று.

“ஷாலு... நீ அழாதே.... எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்... நீ பார்த்துக்கோ” என்றவள் தன் அலைபேசி அதிரவே அதை எடுத்தாள்.

“கால் டேக்சி தான்...” அவள் சொல்லிவிட்டு டிரைவரிடம் பேசினாள். “நீ சொன்ன மாதிரியே அந்த கார்னர்ல வந்து நிக்கச் சொல்லிட்டேன். இப்போ நான் கிளம்பறேன்...” அவள் சொல்ல, இருவரும் பரபரப்பானார்கள்.

“நேற்று இருந்த அளவுக்கு கை ரொம்ப இதா தெரியலை தானே?” அறையை விட்டு வெளியே செல்லும் முன்னர் தோழியிடம் கேட்டாள்.

“இல்ல ஷாலு... இப்போ கொஞ்சம் காய்ந்து இருக்கு. நேற்று பார்த்த அளவுக்கு ஊறிப் போய் இல்லை. அதனால் அது ரொம்ப பெரிய காயம் மாதிரி தெரியலை. நல்ல வேளை ஹாஸ்பிடல் போனோம், இல்லைன்னா கொஞ்சம் கஷ்டமாகி இருக்கும்” ரூபி சொல்ல வைஷாலி கதவின் அருகே சென்றாள்.

“உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கோ... வீட்டுக்கு போய் சேர்ந்த உடனே எனக்கு ஒரு மெஸ்சேஜ் போட்டு விடு” என்றவள் கதவை மிகவும் மெதுவாகத் திறந்தாள். அப்பொழுது பைரவனும், கோபாலும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருக்க, முத்துப்பாண்டியை அங்கே அப்பொழுது காணவில்லை.

நிம்மதியாக மூச்சு விட்டவள், “ரூபி... நீ வா...” என்றவள் தோழியை அவசரமாக கிச்சன் வழியாக பின்னால் அனுப்பி விட்டவள், பெற்றவரிடம் வந்தாள்.

“அப்பா...” அவள் அழைக்க, அப்பொழுதுதான் இருவரும் அவளைப் பார்த்தார்கள்.

“என்ன மருமகளே, என்னவோ கையில் அடி பட்டுருக்குன்னு அருணா தகவல் கொடுத்தாளாம்? கைக்கு என்ன ஆச்சு?” என்றவாறே கோபால் அவளது கரத்தைப் பார்த்தார். பைரவனும் சிறு பரிதவிப்பாக மகளைப் பார்த்தார்.

‘என்னப்பா இது?’ என்பதுபோல் பார்வையால் மற்றவர்களைக் காட்ட, பைரவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. பைரவனும் அமைதியாக கிளம்பி வரத்தான் பார்த்தார். ஆனால் அருணா பேசுகையில் மனைவி உடனிருக்க அவள் அனைத்தையும் கேட்டுவிட்டாள்.

பைரவன் உடனே சென்னைக்கு கிளம்ப, ரத்னா தன் வேலையைக் காட்டிவிட்டாள். உடனே தன் அண்ணனுக்கு விஷயத்தைச் சொல்ல, அவரும் தன் மகனோடு, மருமகளைக் காணும் சாக்கில் உடன் வந்துவிட்டார்.

பைரவன் தான் மட்டும் கிளம்பிச் செல்வதாகச் சொன்னதை எல்லாம் அங்கே யாரும் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கிளம்பிவிட்ட பிறகு, போகவில்லை என மறுக்கவும் முடியாமல் இவர்களோடு வந்தாக வேண்டிய நிலை, வந்தும் விட்டார்.

மகளிடம் ‘என்ன நடந்தது?’ எனக் கேட்கலாம் என்றால் அவர்களை தனிமையில் விட வேண்டுமே. கோபாலின் முன்னால் எதையும் கேட்க பைரவனும் விரும்பவில்லை.

“அது ஒன்றும் இல்லை மாமா...” அவள் சமாளிக்கப் பார்த்தாள். அந்த நேரம் அங்கே வந்தான் முத்துப்பாண்டி. வந்தவன் அவளைத்தான் ஒரு மாதிரியாக நின்று ரசித்துக் கொண்டிருந்தான். இத்தனைக்கும் அவள் அந்த நேரம் ஒரு சாதாரண சுடிதாரில்தான் நின்று இருந்தாள்.

ஒரு சிறு அலங்காரம் கூட செய்யவில்லை, அவ்வளவு ஏன் முகத்துக்கு பௌடர் கூட போடாமல், தலை கூட ஒழுங்காக வாராமல் தான் இருந்தாள். அப்படியும் அவள் அழகி என அவனது புத்தி சொல்ல, அந்த மொத்த அழகையும் எப்பொழுது தன் சொந்தமாக்குவோம் என்றுதான் இருந்தது.

முன்னரே அவளைப் பார்த்தால் சும்மாவே இருக்க மாட்டான். இப்பொழுது அவள் வீட்டில் பேசி, தன் அத்தையின் முழு சம்மதம் கிடைத்துவிட்டது எனத் தெரிந்த பிறகு அவன் சும்மா இருந்தால்தான் ஆச்சரியம்.

அவளை கிட்டத்தட்ட உரசும் விதத்தில் வந்து நிற்க, அவளுக்கு ஒரு மாதிரி அருவருப்பாக இருந்தது. “அப்பா, அதெல்லாம் இவகிட்டே எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க? நேற்றைக்கு இவ இன்டர்வியூவுக்கு போன இடத்தில்தான் ஏதோ நடந்து இருக்கு. நாமளே பார்த்துக்கலாம்...” அவன் சொல்ல, அவள் அதிர்ந்தாள்.

வைஷாலி விஷயத்தைச் சொல்லாமல் நிற்பதிலேயே ‘என்னவோ இருக்கிறது?’ என் முத்துப்பாண்டியின் குறுக்கு புத்தி சொன்னது.

இவர்கள் அங்கே போய் கேட்டால், தான் அங்கே நேர்முகத் தேர்வுக்கே செல்லவில்லை என்ற விஷயம் இவர்களுக்குத் தெரிய வந்து விடுமே. அப்படித் தெரியவந்தால் விஷயம் இன்னும் சிக்கலாகும் எனப் புரிய அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

“அப்பா... நான் என்ன சொல்ல வர்றேன்னா...” அவர்களை எப்படியாவது தடுத்துவிட மாட்டோமா என்று இருந்தது.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்... அட்ரஸை மட்டும் சொல்லு போதும்” முத்துப்பாண்டி அதிலேயே நின்றான். தகப்பன் தன் துணைக்கு வருவாரா எனப் பார்க்க, அவரும் சூழ்நிலைக் கைதியாக இருப்பது புரிந்தது.

மகளின் முகத்தைப் பார்த்தவர், “இப்படி வந்து உட்காரும்மா” என தன் அருகே கை காட்ட, வேகமாகச் சென்று தகப்பனின் அருகே அமர்ந்துகொண்டாள்.

“இது எப்படிம்மா ஆச்சு? கையெல்லாம் இந்த அளவுக்கு கொப்பளித்து, தோல் வழண்டு போகும் அளவுக்கு போயிருக்குன்னா, என்னம்மா ஆச்சு?” பொறுமையாகக் கேட்டார். தகப்பன் தனியாக இருக்கையில் கேட்டிருந்தால் உண்மையைச் சொல்லி இருப்பாளோ என்னவோ? ஆனால் தன் மாமனையும், மாமன் மகனையும் வைத்துக்கொண்டு அவர் கேட்க, அவளால் உண்மையைச் சொல்ல முடியவில்லை.
 
  • Love
Reactions: Shanbagavalli

Infaa

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 7, 2022
1,149
50
113
Chennai
தான் உண்மையைச் சொன்னால் ‘அவனுக்கு பிரச்சனை வருமோ?’ என்ற பயத்தை விட, ‘இவர்கள் அதை வைத்து என்னவெல்லாம் பிரச்னையை இழுத்துக்கொண்டு வருவார்களோ?’ என்றுதான் இருந்தது.

இவர்களைப்பற்றி பிறந்தது முதலே அவளுக்குத் தெரியும். அப்படி இருக்கையில் அவள் இப்படி யோசிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்.

“அப்பா... ஒரு சின்ன விபத்துப்பா... அவங்களை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு வர்றப்போ... இல்ல நான் இன்டர்வியூ போனது ஒரு கெமிக்கல் கம்பெனி தானே... அங்கே... எனக்கு எப்படிப் பட்டதுன்னு தெரியலைப்பா. இதை இப்படியே விடுங்களேன்” திக்கித் திணறி, என்னவோ சொல்ல முயன்று முடியாமல் இறுதியில் கெஞ்சலாக முடித்தாள்.

தகப்பனுக்கு தன் மகள் சொன்னதில் மனதை என்னவோ செய்ய, அதை அப்படியே விட்டுவிடத்தான் நினைத்தார். ஆனால் உடன் வந்திருக்கும் வில்லன் கோஷ்டி அப்படி நினைக்க வேண்டுமே?

தன் அப்பாவுக்கு விஷயம் தெரியவரும், அப்பொழுது இதைச் சொல்லி சமாளிக்கவேண்டும் என அவள் நினைத்து வைத்திருந்தால் கோர்வையாக எதையாவது சொல்லி சமாளித்து இருப்பாள். அவசரத்துக்கு எந்த பொய்யும் அவளுக்கு நினைவுக்கு வரவும் இல்லை.

“சரிம்மா... வேற எதுவும் பெருசா இல்லையே...?” மகள் ஒன்றும் இல்லை என்கையில், அதைத் தோண்டித் துருவ அவர் விரும்பவில்லை. அதைவிட தன் மச்சான் முன்னிலையில், அவன் மகனையும் வைத்துக்கொண்டு தன் மகளை விசாரிப்பது அவருக்கு சுத்தமாகப் பிடிக்கவே இல்லை.

“என்ன மாமா விஷயத்தை வாங்காமல் என்னவோ கொஞ்சிகிட்டு இருக்கீங்க? அவளை என்கிட்டே விடுங்க நான் கேட்கறேன். ஏய்...” அவன் கோபமாக எதையோ சொல்லப் போக, “முத்துப்பாண்டி போதும்...” என கோபால் இடையிட்டு தடுத்தார்.

“அதான் மருமக எதுவும் இல்லைன்னு சொல்றா தானே... பார்த்துக்கலாம் விடு. அந்த கம்பெனிக்கே போய் ஒரு காட்டு காட்டிட்டா போச்சு” கோபால் வில்லத்தனமாக பேசினார். அவர் இப்படி பேசவில்லை என்றால்தான் ஆச்சரியம் என எண்ணிக் கொண்டாள்.

உள்ளுக்குள் இதயம் கிடந்தது ஒரு மாதிரி மத்தளம் வாசித்தது. “ஆக்சிடென்ட் எங்கே நடந்ததுன்னு சொன்ன?” முத்துப்பாண்டி கேட்க, அவள் கரம் சற்று நடுங்கியது.

“அங்கே போற வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில்...” அவள் சொல்ல, முத்துப்பாண்டி உடனே ஆட்களை கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

‘ஐயோ... இவன் எங்கே போய் என்னவெல்லாம் செய்து வைக்கப் போறானோ?’ என அவள் உள்ளம் நடுங்க அமர்ந்திருந்தாள்.

“பார்த்தியா மருமகளே, உனக்கு ஒன்று என்றால் அவனால் தாங்கிக்கவே முடியாது. எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான். நடுவில் உள்ளவன்தான் வர்றதா இருந்தது, அவன் வந்தால் அவனைக் கண்ட்ரோல் பண்றது கஷ்டம்னு சொல்லிட்டு இவனே வந்தான்னா பார்த்துக்கோ” அவர் சொல்ல, ‘என்ன நடுவில் உள்ளவனா?’ அதை நினைத்துப் பார்க்க கூட அவளால் முடியவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தையே தங்கள் அரசியல் பலத்தால் ஆட்டி வைக்கும் இவர்களை எதிர்க்க அங்கே யாரும் கிடையாது. அரசியல் செல்வாக்கு, பதவி பலம்... பண பலம், படை பலம் என அனைத்தும் பொருந்தியவர்கள்தான் இவர்கள்.

பெரியவன் கட்டப்பஞ்சாயத்தை எல்லாம் கச்சிதமாக பார்த்துக் கொள்ள, இரண்டாமவன் ஆளும் கட்சி MLAவாக இருக்க, இந்த முத்துப்பாண்டியோ இளைஞர் அணித் தலைவன். கட்சிக் கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது, பணம் பட்டுவாடா செய்வது என அனைத்தும் இவன்தான்.

கட்சித் தலைமை வரைக்கும் செல்வாக்கு பெற்ற குடும்பம். கோபால்தான் முதலில் அரசியலில் இருந்தார். தன் மகன்கள் கட்சிக்குள், பதவிக்கு என வர விரும்பவே அவர் கொஞ்சம் ஒதுங்கிக் கொண்டார். ஆனால் அங்கே சாணக்யன் யார் எனக் கேட்டால் அது கோபால் தான்.

அவர் ஒதுங்கி இருக்கிறார் எனச் சொல்லிக் கொண்டாலும், அவர் இன்றி ஒரு அணுவும் அங்கே அசையாது. மகன்கள் செய்யும் திருகுத்தனம் முதல், அனைத்தும் அவருக்குத் தெரிந்தாலும், அவரும் ஒரு காலத்தில் மிகவும் மோசமானவராகவே இருந்ததால் மகன்களை எல்லாம் கண்டிப்பது கிடையாது.

‘ஒரு வயசு வரைக்கும் இதெல்லாம் இருக்கறதுதான்’ என மகன்களை ஆடவிட்டு வேடிக்கை பார்த்தார். ஆனால் மகன்களை மட்டுமல்ல, அவரையே அடக்கி ஒடுக்கி மூலையில் போட்டு வைக்க ஒருவன் வளர்ந்து விருட்சமாகி இருப்பது அவருக்குத் தெரியாதே.

மூங்கில் மரம் வளரத் துவங்குகையில் முதல் மூன்று, நான்கு வருடங்கள் வரைக்கும் பூமிக்கு மேலே உயரமாக வளரவே செய்யாதாம். தன் வேரை மட்டுமே அத்தனை வருடங்கள் பூமிக்குள் நிலை நிறுத்திய பிறகே தலை காட்டி உயரும்.

அப்படித்தான் ஒருவனும் பதினைந்து வருடங்களாக தன்னை பலப்படுத்திக்கொண்டு அவரோடு மோதத் தயாராகி இருந்தான். ஆனால் தனக்கு இப்படி ஒரு எதிரி இருக்கிறான் என்று கூட தெரியாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

“சரி மச்சான்... எனக்கு முதலமைச்சர் கூட மீட்டிங் இருக்கு, அதுக்கு நான் போகணும். இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கறேன்” என்றவர் தனக்கென புக் செய்திருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார்.

முத்துப்பாண்டி போயிருக்கும் விஷயத்தைப் பற்றி எல்லாம் அவருக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை. அதை அவன் பார்த்துக் கொள்வான் என்று வெகு அசட்டையாகவே இருந்தார்.

அவர் செல்லவே, தகப்பனுக்கும் மகளுக்கும் அப்படி ஒரு ஆசுவாசமாக இருந்தது. “முதல்ல நீ சாப்பிடும்மா” தகப்பன் சொல்ல, அவளுக்கு என்ன நடக்குமோ என்ற பதட்டத்தில் எதுவும் முடியவே இல்லை.

அவளது முகம் வெளிறிப் போயிருக்க, “என்னம்மா நடந்தது? என்கிட்டே உண்மையைச் சொல்லு...” சிறு கவலையும், பெரும் அக்கறையுமாகக் கேட்டார்.

“அப்பா... அது...” என்றவள், நடந்ததை அப்படியே சொல்லிவிட்டாள். நடந்த விபத்து, அதில் அவன் காரில் கறை ஆனது, அதை அவன் கழுவ வைத்தது என மட்டும் சொன்னாள். அவன் தங்களை அலைக்கழித்தது, மீண்டும் மீண்டுமாக கழுவ வைத்து கஷ்டப்படுத்தியது என எதையும் அவள் சொல்லவில்லை.

“ஓ... நீ யூஸ் பண்ண லிக்விட் உனக்கு ஒத்துக்கலையா? அதுதான் கை பொத்துப் போயிடுச்சா? இருந்தாலும் அவன் செய்தது சரியே இல்லை பாப்பா...” சற்று வருத்தமாகச் சொன்னார்.

“உங்களுக்கு கோபம் வரலையாப்பா?” தகப்பனிடம் கேட்டாள்.

“இதில் உன் மாமனை பொருத்திப் பாரு...” அவர் சொல்ல, “என்ன...?” வாய்விட்டே அலறி இருந்தாள்.

“சில பணக்காரங்க அப்படித்தான் பாப்பா... அவரோட கார் கறை ஆனதை அவரால் தாங்கிக்க முடியலை. அதனால் உன்னை வைச்சு அதைக் கழுவி இருக்கார்... அவ்வளவுதான்... விஷயம் அதோட போச்சேன்னு சந்தோஷப்படு. உன்னை வேற எதுவும் கஷ்டப்படுத்தலையே?” அவர் கேட்க, தான் பட்ட துன்பங்களை எல்லாம் அவள் சொல்லவில்லை.

ஒரு விதத்தில் சர்வஜித் தங்களை இதோடு விட்டானே என அவளே அப்பொழுதே நினைத்தாள் தானே.

“அப்பா... முத்துப்பாண்டி விஷயம்...?” என்றவளுக்கு அதைக் கேட்க கூட பிடிக்கவில்லை. கண்கள் கலங்கி, குரலும் கூட நடுங்கிப் போனது.

“பாப்பா, இந்த அப்பா உயிரோட இருக்கற வரைக்கும் அவங்க நினைக்கறது எதுவும் நடக்காது. உன்னை எங்கே எப்படி அனுப்பி பாதுகாக்கணும்னு எனக்குத் தெரியும் பாப்பா” அவர் சொல்ல, அவளுக்கு இதில் இருந்து தப்ப முடியும் என்ற நம்பிக்கையே இல்லை.

“உங்களை விட்டு கண்காணாத இடத்துக்குப் போய் வாழறது எல்லாம் ஒரு வாழ்க்கையாப்பா?” என்ன முயன்றும் அவளால் முடியாமல் போக அழுதுவிட்டாள். நீர் சுழலுக்குள் சிக்கி மூச்சுக்குத் திணறும் உணர்வு.

அங்கே தங்களைக் காப்பாற்ற வரும் ஆட்களையும் அந்த நீர்சுழி உள்ளே இழுத்துக்கொள்ளுமே தவிர, அவர்களை காப்பாற்ற முடியாது. ஏதேதோ எண்ணங்கள் மனதை அழுத்த தகப்பனின் தோள் சாய்ந்து கதறித் தீர்த்தாள்.

நேற்றைய அழுத்தம், மன உளைச்சல், பட்ட துன்பம் எல்லாம் சேர அந்த அழுகை ஒன்றே மருந்தானது.

“அழாத பாப்பா... நீ அழுதால் என்னால தாங்கிக்க முடியாது. இந்த அப்பா உயிர்வாழ்வதே உனக்காகத்தான். அப்படி இருக்கும்பொழுது நீ அழுதால் நான் எப்படி தாங்கிக்க?” தகப்பன் கேட்க, தன் அழுகையை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“இப்போ என்னப்பா ஆகும்? புதுசா ஏதாவது பிரச்னையை இழுத்துட்டு வந்தால், எனக்கு இங்கேயும் நிம்மதி இருக்காதுப்பா” அத்தனை வருத்தமாகச் சொன்னாள்.

“அதையெல்லாம் அவங்களோட முடிச்சுக்க அவங்களுக்குத் தெரியும் பாப்பா. அவனுக செய்யாத திருகுத்தனமா? நீ அதையெல்லாம் நினைக்காதே” அவர் சொல்ல, அமைதியாகிவிட்டாள்.

“நீங்க சாப்ட்டீங்களாப்பா? வாங்க சாப்பிடலாம்...” தான் சாப்பிடாமல் அவரும் உண்ண மாட்டார் என்பதால் அழைத்தாள். அதற்கு மேலே பெரிதாக எந்த பேச்சுக்களும் இல்லாமல் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்டார்கள்.

இங்கே இவர்கள் உண்டு கொண்டிருக்க, விபத்து நடந்த இடத்துக்குச் சென்ற முத்துப்பாண்டி அங்கே இருந்த சிசிடிவி காட்சிகளை எல்லாம் பார்வையிட்டான். அங்கே விபத்து, அதைத் தொடர்ந்து அந்த பெண்ணை ஏதோ வண்டியில் ஏற்றிச் செல்வது வரைக்கும்தான் பதிவாகி இருந்தது.

வைஷாலி சொன்னது உண்மை எனப் புரிய, அதை விடுத்தவன் அவள் நேர்முகத்தேர்வுக்குச் சென்ற இடத்துக்குச் சென்றான். அவன் வண்டியில் கட்சிக் கொடியும், அத்தனை அடியாட்களும் இருக்க பொதுவாகவே இப்படி படையோடு சென்றால் மற்றவர்கள் அச்சப்படுவார்கள்.

ஆனால் சர்வஜித்தின் கம்பெனிக்குச் சென்றவன் உள்ளே நுழைய முயல, கேட்டின் அருகிலேயே அவனைத் தடுத்து நிறுத்தினார்கள்.

“நேற்றைக்கு இன்டர்வியூ வந்தவங்களை என்னடாப் பண்ணீங்க? எங்க வீட்டுப் பொண்ணு கையெல்லாம் அடிபட்டு வந்திருக்கா? இங்கே என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். இல்லன்னா இங்கே நடக்கறதே வேற...” கேட்டை காலால் எட்டி உதைத்து கத்தினான்.

விஷயம் உடனே வேறு இடத்தில் இருந்த சர்வஜித்துக்கு தெரிவிக்கப் பட்டது. அங்கே இருந்த கேமரா வழியாக அனைத்தையும் பார்த்துக்கொண்டு இருந்தவனின் முகத்தில் கோபம் தாண்டவமாடிக் கொண்டு இருந்தது.

‘இவனை அடக்கணுமே...’ என்றவன் ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்புதான் செய்தான். அதற்கான எதிர்வினை அடுத்த பத்தே நிமிடங்களில் அவனது அலைபேசி வழியாக வெளிப்பட்டது.

“நான் கேட்டால் பதில் சொல்ல மாட்டீங்களா? போலீசோட வர்றேன் டா... அது மட்டும் இல்லை, இந்த கம்பெனியை நான் இழுத்து மூடிக் காட்டறேன்டா. இதோட முதலாளி யாருடா? எனக்கு உடனே அவனைப் பார்த்தாகணும். இல்லைன்னா விளைவுகள் பயங்கரமா இருக்கும்னு சொல்லு...” அங்கே இருந்த செக்யூரிட்டியிடம் கத்தினான்.

அனைத்தையும் சர்வஜித் பார்த்துக் கொண்டேதான் இருந்தான். உடனே செக்யூரிட்டிக்கு அழைத்த சர்வஜித், “அவன்கிட்டே ஃபோனைக் கொடு” அவன் சொல்ல, அவர் கேட்டுக்கு வெளியே ஓடினார்.

“தம்பி உங்ககிட்டே முதலாளி பேசணும்னு சொல்றார்” அவன் சொல்ல, தன் அடிபொடிகளோடு உள்ளே செல்ல முயன்றான்.

“நீங்க மட்டும் போங்க தம்பி...” மரியாதையாகவே சொன்னார். ஆனாலும் ‘என்னை மீறி வேறு யாரும் உள்ளே செல்ல முடியாது’ என்பதுபோல் உடல்மொழியில் அவர்களுக்கு உணர்த்தினார்.

“ஏய்... உன்னை அடிச்சுப் போட்டுட்டு உள்ளே போக எங்களுக்கு எவ்வளவு நேரமாகும்?” ஒருவன் எகிற, அவன் காலுக்கு அருகே ஒரு துப்பாக்கித் தோட்டா வெடித்துச் சிதறியது. அதோடு இன்னும் இரண்டு மூன்று தோட்டாக்கள் சிதற வெலவெலத்துப் போனார்கள்.

அவர்களது அதிகபட்ச ஆயுதம் கத்தி அருவாள், கடப்பாறை, உருட்டுக்கட்டை தான். அப்படி இருக்கையில் துப்பாக்கி எல்லாம் அவர்களுக்கு பழக்கம் இல்லாதது. இங்கே என்றால் தோட்டாக்கள் விடாமல் சிதற, வேகமாக பின்வாங்கினார்கள்.

“டேய்... நீங்க இருங்கடா... நான் என்னன்னு பார்த்துட்டு வர்றேன்” என்றவன் அந்த செக்யூரிட்டியோடு முன்னால் சென்றான்.

செக்யூரிட்டியோ அந்த தொலைப்பேசியை அவனிடம் நீட்ட, “டேய்... யாருடா நீ? எங்ககிட்டேயே விளையாடிப் பார்க்கறியா? உன் பருப்பெல்லாம் என்கிட்டே வேகாதுடி. இந்த கம்பெனியவே மூடிக் காட்டறேன் பார்க்கறியா? பார்க்கறியா?” முத்துப்பாண்டி கத்த, சர்வஜித் ஸ்பீக்கரில் ஒலித்துக் கொண்டிருந்த அலைபேசியை பார்த்துக் கொண்டே இருந்தான்.

சர்வஜித்தின் கை கடிகாரம் ‘பீப்...பீப்...’ என ஒலிக்கத் துவங்கவே, வேகமாக ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்து புகைத்தான். அவன் இன்னுமே விடாமல் கத்திக் கொண்டே இருக்க, முத்துப்பாண்டியின் அலைபேசி இசைத்து அவனைக் கலைத்தது.

“அந்த ஃபோனை எடுத்துப் பேசுடா நாயே...” சர்வஜித் கர்ஜித்ததில் முத்துப்பாண்டியின் கரத்தில் இருந்த ரிசீவர் நழுவி கீழே தலைகீழாகத் தொங்கியது.

அதை பட்டென கரத்தில் எடுத்தவன், “****மகனே என்னடா சொன்ன?” கொச்சையாகப் பேசினான்.

சர்வஜித்தின் ரத்த அழுத்தம் எகிற, “உனக்கு உன் பிரச்னையை யோசிக்கத்தான் இனிமேல் நேரம் இருக்கும். வைடா ஃபோனை” என்றவன் கேமராவையே பார்த்திருந்தான்.

“ஹலோ... ஹலோ... என்னடா மிரட்டிப் பார்க்கறியா? ஹலோ...” கத்திப் பார்த்தவன், போன் ரிசீவரை நொறுக்கினான்.

அதைப் பார்த்த சர்வஜித், “தப்பு பண்ணிட்டடா... பெரிய தப்பு...” கண்கள் ரத்தமென சிவக்க கத்தினான். அதே நேரம் முத்துப்பாண்டி ஒலிக்கும் தன் அலைபேசியை எடுத்தவன், “என்ன? என்னடா சொல்ற? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுடா” எகிறினான்.

மறு நொடி இருவர் வந்து அவனை கேட்டுக்கு வெளியே கொண்டுபோய் விட, அவன் அதைக் கவனிக்கும் நிலையிலேயே இல்லை. அந்தப்பக்கம் இருந்து வந்த செய்தி இடியென அவன் காதுக்குள் இறங்கி இருந்தது.

முத்துப்பாண்டி அப்படியே ஸ்தம்பித்து நிற்க, சர்வஜித் விடாமல் சிரிக்கத் துவங்கி இருந்தான். ஒருவித பேய் சிரிப்பு சிரித்தான் என்று சொல்ல வேண்டுமோ? அதைப் பார்த்த ஹரீஷ்... ‘இந்த கேரக்டருங்க யாரு?’ தலையைப் பிய்த்துக் கொண்டான்.

பகை முடிப்பான்.........