• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Nuha Maryam

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
128
மொபைலைத் தூக்கி சுவற்றில் அடித்தவன் அன்றைய தினம் நடந்தவற்றை நினைத்துப் பார்த்தான்.


இரவு முழுவதும் நித்யாவுடன் பேசிக்கொண்டு இருந்தவன் விடிந்த பின் தான் உறக்கத்தைத் தழுவினான்.


அவன் உறங்கி சற்று நேரத்திலேயே அலைபேசி ஓசை எழுப்பி அவன் தூக்கத்தைப் பறித்தது.


தூக்கக் கலக்கத்திலேயே எடுத்து காதில் வைக்க மறுபக்கம் ஜீவிகாவின் அழு குரலே கேட்டது.


பதறி எழுந்தவன், "ஹேய்... ஜீவி... என்னாச்சுடி... ஏன் அழுதுட்டு இருக்காய்... ஏதாவது பிரச்சனையா..." என சஜீவ் கேட்க,


ஜீவிகா, "அண்ணா... அம்... அம்மா... அம்மா..." என சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.


சஜீவ், "அழாம சொல்லு ஜீவி... அம்மாக்கு என்னாச்சு...." எனக் கேட்க,


"அம்மாவுக்கு ஹார்ட் அட்டேக் அண்ணா.... ஏதோ ப்ளாக் இருக்குன்னு டாக்டர் சொல்றாருணா...எனக்கு ரொம்ப பயமா இருக்கு..." என ஜீவிகா அழ அதிர்ந்தான் சஜீவ்.


சஜீவ், "ஜீவிமா... இங்க பாரு... அழாம இரு... அம்மாக்கு ஒன்னும் ஆகாது... ஒழுங்கா என்ன நடந்துச்சின்னு சொல்லு..." என்க,


ஜீவிகா, "காலைல மாமா வந்திருந்தாரு... அம்மா கூட ரொம்ப கோவமா பேசினாரு... சுச்சிக்கு உன் பையன கட்டி தரேன்னு சொல்லி சொல்லி அவ மனசுல ஆசைய வளர்த்துட்டு இப்போ வேற யாரு கூடயோ சம்பந்தம் பேசுறீங்களான்னு அம்மாவ கண்ட படி திட்டினாரு... அம்மா எவ்வளவோ சொல்லி சமாதானப்படுத்தியும் அவரு கேக்கவே இல்ல... அதுக்கப்புறம் இனிமே உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லன்னு சொல்லிட்டு கோவமா போய்ட்டாரு... அவர் போனதுல இருந்தே அம்மா அழுதுட்டே இருந்தாங்க... எனக்கிருந்த ஒரே ரத்த சொந்தமும் என்ன விட்டு போய்டுச்சுன்னு சொல்லிட்டு அப்படியே நெஞ்ச பிடிச்சிட்டு விழுந்துட்டாங்க... நாங்க உடனே அம்மாவ ஹாஸ்பிட்டலுக்கு தூக்கிட்டு வந்துட்டோம்..." எனக் கூறி அழுதாள்.


சஜீவ்வுக்கு அங்கிருந்து கொண்டு என்ன செய்ய என்றே விளங்கவில்லை.


ஜீவிகாவிடம், "ஜீவி... அப்பா கிட்ட ஃபோன குடு..." என்றதும் ஜீவிகா பிரபுவிடம் மொபைலை வழங்க,


பிரபு, "நல்ல நேரம் நீ கால் பண்ணது சர்வா... உங்க அம்மா உன் கிட்ட பேசாம ட்ரீட்மன்ட் எடுத்துக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறா... நான் உனக்கு வீடியோ கால் பண்ணுறேன்... நீ அம்மா கூட பேசு..." என்றவர் சஜீவிற்கு வீடியோ கால் எடுத்தார்.


நினைவு தெரிந்த நாளிலிருந்தே தன் தாயை இப்படி நோய் வந்து படுத்து பார்த்திராதவன் முதன் முறையாக அவரை இப்படி பார்க்கவும் உடைந்து விட்டான்.


சஜீவ், "அம்மா... ஏன்மா ட்ரீட்மன்ட் எடுத்துக்க மாட்டேன்னு சொல்றீங்க..." என்க,


ஈஷ்வரி, "சர்வா கண்ணா... எங்க அண்ணன் என்ன தலை முழுகிட்டாருடா..." எனக் கண்ணீர் வடிக்க,


"ஐயோ அம்மா அழாதீங்க... மாமா கூட நான் பேசுறேன்..." என்றான் சஜீவ்.


ஈஷ்வரி, "இல்லப்பா... யாரு என்ன சொன்னாலும் அவர் கேக்க மாட்டாரு... நீ அம்மாக்காக ஒரே ஒரு விஷயம் பண்ணுப்பா..." என்க சஜீவ் என்னவென்று கேட்டான்.


"தயவு செஞ்சி சுச்சிய கல்யாணம் பண்ணிக்கோப்பா... அப்போ தான் எங்க அண்ணன் சமாதானம் ஆகுவாரு..." என சஜீவ் தலையில் இடியை இறக்கினார் ஈஷ்வரி.


பிரபு, ஜீவிகா இருவரும் அதிர சஜீவ்,


"என்னம்மா சொல்றீங்க... நான் எப்படி சுச்சிய கல்யாணம் பண்ணிப்பேன்... நான் யுவிய காதலிக்கிறேன்மா..." என்க,


"அந்தப் பொண்ணு உனக்கு வேணாம் கண்ணா... இந்த அம்மாக்காக இத பண்ணுப்பா..." என்றார் ஈஷ்வரி.


சஜீவ், "ப்ளீஸ்மா... என்ன இப்படி தர்ம சங்கடப்படுத்த வேணாம்... நீங்க வேற என்ன சொன்னாலும் கேக்குறேன்.. இது மட்டும் முடியாதுமா... என்னால யுவிய தவிர வேற யாரையும் என் மனசுல நெனச்சி பாக்க முடியாதுமா..." எனக் கெஞ்சினான்.


ஈஷ்வரி, "சரி சர்வா... நீ உன் முடிவ சொல்லிட்டாய்... நானும் என் முடிவுல உறுதியா இருக்கேன்... நான் ட்ரீட்மன்ட் எடுத்துக்க மாட்டேன்... உனக்கு தான் அம்மாவ விட நேத்து வந்தவ ஒசத்தியா போய்ட்டாள்ல.. நான் இப்படியே போய் சேருறேன்... நீ அவ கூட சந்தோஷமா இரு..." என்க சஜீவ்விற்கு என்ன கூற என்றே தெரியவில்லை.


"யுவி இதை ஏத்துக்க மாட்டாமா... அவளால நிச்சயமா இதை தாங்கிக்க முடியாது..." என சஜீவ் கடைசியாக ஒரு தடவை மீண்டும் கெஞ்சிப் பார்க்க,


ஈஷ்வரியோ, "அந்த பொண்ணு கிட்ட நான் பேசுறேன்பா... என்ன சொல்லி சரி அவ மனச மாத்துறேன்..." என்க,


சஜீவ் தாயின் உடல்நிலையை எண்ணி விருப்பமே இல்லாமல் சம்மதித்தான்.


அழைப்பைத் துடித்தவன் மனம் முழுவதும் நித்ய யுவனியே நிறைந்திருந்தாள்.


அதன் பின் ட்ரீட்மெண்ட் எல்லாம் அவசரமாக நடக்க மறுநாளே ஈஷ்வரி பிடிவாதம் பிடித்து டிஸ்சார்ஜ் ஆகினார்.


டிஸ்சார்ஜ் ஆகியதும் அவர் செய்த வேலை சுசித்ராவை அழைத்துக் கொண்டு நித்ய யுவனியைக் காணச் சென்றது தான்.


ஆனால் அப்பாவி சஜீவ்வோ இவை அனைத்தும் ஈஷ்வரி, சுசித்ரா மற்றும் சுசித்ராவின் தந்தை ரகுவரனின் திட்டப்படி அரங்கேற்றப்பட்ட நாடகம் என அறியாது போனான்.


நித்யா பல முறை அழைத்தும் தன்னால் அவளுக்கு முகம் கொடுக்க முடியாதென்றே அழைப்பை ஏற்காமல் இருந்தான்.


இறுதியில் நடப்பது நடக்கட்டும் என அழைப்பை ஏற்ற பின் தான் அவ்வளவும் நடந்தது.


நித்ய யுவனியைக் காதலிக்க ஆரம்பித்த பின் விட்டிருந்த குடியை மீண்டும் அவளை மறக்கவென்றே குடிக்க ஆரம்பித்தான்.


நித்ய யுவனியை மறக்க வேண்டும் எனக் குடித்தவன் முழுதாக சுய நினைவை இழந்த பின்னும் யுவி யுவி என உளரிக் கொண்டே தூங்கினான்.


இங்கு நித்ய யுவனியோ அவ்வளவு நேரமும் யார் கூறியும் நம்பாமல் இருந்தவள் இறுதியில் சஜீவ்வே தன் வாயால் அவளை ஏமாற்றத் தான் காதலித்தேன் எனக் கூறியதும் முற்றாக உடைந்து விட்டாள்.


பிரம்மை பிடித்தவள் போல் மொபைலையே வெறித்துக் கொண்டிருந்தவள் திடீரென, ஆஹ்ஹ்ஹ்ஹ்...... என கதறினாள்.


நித்யாவின் கதறல் கேட்டு ஓடி வந்த பக்கத்து வீட்டுப்பெண்மணி அவர்களின் கதவைத் தட்ட நித்யா இருந்த மனநிலையில் எந்த சத்தமும் அவள் செவியை எட்டவில்லை.


தட்டித் தட்டிப் பார்த்து பதில் வராது போக ராஜாராமுக்கு அழைத்து தகவல் தெரிவிக்கவும் வசந்தி, ராஜாராம் இருவரும் அவசரமாக கிளம்பினர்.


நித்யாவோ சஜீவ்வின் டீ ஷர்ட்டை அணைத்துக் கொண்டு, "ஏன் இப்படி பண்ணினாய் சஜு... ஏன்..." என கதறி அழுது அழுது ஓய்ந்தவள் மேசையில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்து மணிக்கட்டை அறுத்துக் கொண்டாள்.


முழு வேகத்தில் வந்து இருவரும் வீட்டை அடைந்தனர்.


மாற்று சாவி கொண்டு கதவைத் திறந்தவர் நடு ஹாலில் கையை அறுத்துக் கொண்டு இரத்தம் கொட்ட மயங்கி விழுந்து கிடந்த தன் செல்ல மகளைக் கண்டு அதிர்ந்தார்.


நித்யாவின் நிலையைக் கண்டு வசந்தி ஒப்பாரி வைக்க,


ராஜாராம் அவசரமாக நித்யாவைக் காரில் ஏற்றிக்கொண்டு ஹாஸ்பிடல் விரைந்தார்.


இரவு நேரம் என்பதால் பாதையில் அதிக வாகனங்கள் இருக்கவில்லை.


அதனால் அவசரமாக ஹாஸ்பிடலை அடைந்தவர் நித்யாவின் நிலையை கூற மருத்துவரும் அவசரமாக அவளைப் பரிசோதித்தார்.


மருத்துவர் ராஜாராமிடமும் வசந்தியிடமும் அவசரமாக கொண்டு வந்ததால் எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறவும் தான் அவர்களுக்கு உயிரே வந்தது.


ராஜாராமோ இதுவரை வசந்தியைக் கூட நித்யாவை அதட்டக் கூட விடாமல் பார்த்துக்கொள்ள,


ஆனால் இன்று தன் மகளின் இந்த நிலைக்கு காரணம் யாரென சிந்தனையிலிருந்தார்.


சட்டென அவருக்கு ஜனனியின் ஞாபகம் வர அவளுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க தன் தோழியின் நிலையை எண்ணி வருந்தியவள் இரவு நேரம் என்று கூட பாராது பிரேமுடன் ஹாஸ்பிடல் வந்தாள்.


இருவரும் ராஜாராமிடம் நித்யாவைப் பற்றி விசாரிக்க அவளுக்கு இப்போது எந்தப் பிரச்சினையுமில்லை சாதாரண மயக்கத்தில் தான் இருக்கிறாள் எனக் கூறவும் இருவரும் சென்று அவளைப் பார்த்தனர்.


எப்போதும் உற்சாகமாக இருக்கும் தன் தோழி இன்றோ வாடிய கொடியாய் உறங்குவதைக் கண்ட ஜனனியின் கண்கள் கலங்கின.


பிரேம் அவளை ஆறுதலாக அணைத்துக் கொண்டான்.


அவனுக்கும் தன்னை எப்போதும் அண்ணா அண்ணா எனக் கூறிக் கொண்டு ஏதாவது வம்பு பண்ணும் தன் உடன் பிறவா தங்கையின் நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது.


பின் இருவரும் வெளியே வர ராஜாராம் ஜனனியிடம் நித்யா ஏதாவது பிரச்சினையில் இருந்தாளா என விசாரிக்க ஜனனி மறுப்பாக தலையசைத்தாள்.


ஏற்கனவே நித்யாவின் செயல்களை வைத்து சந்தேகத்தில் இருந்த ராஜாராம் அவள் யாரையாவது காதலித்தாளா எனக் கேட்க,


தயங்கியபடி நித்ய யுவனியின் காதல் விவகாரத்தை அவரிடம் ஜனனி கூறினார்.


அதன் பின் எதுவுமே கேட்காது ராஜாராம் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொள்ள ஜனனி இன்னும் அழுது கொண்டிருந்த வசந்தியை சமாதானப்படுத்தினாள்.


பிரேம் அவர்களை விட்டு சற்று தள்ளிச் சென்றவன் சஜீவ்விற்கு தகவல் தெரிவிக்க அழைக்க அவனுக்கோ அழைப்பு செல்லவே இல்லை.


அவன் தான் மொபைலை தூக்கி அடித்து உடைத்து விட்டானே.


அதன் பின் அங்கிருக்கும் அவன் நண்பனொருவனுக்கு அழைத்து சஜீவ்வைத் தொடர்பு கொள்ளக் கூற,


சஜீவ்வின் அறை பூட்டியிருக்கும் தகவலே வந்தது.


மறுநாள் காலையில் நித்யா மெதுவாக கண் விழிக்க அவளைச் சுற்றி வசந்தி, ராஜாராம், பிரேம், ஜனனி, ஆரவ், பிரியா என அனைவரும் இருந்தனர்.


ஆரவ்விற்கு பிரேம் தகவல் தெரிவிக்க அவன் விடிந்ததும் பிரியாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தான்.


அவள் கண் விழித்ததும் வசந்தி அவளை அணைத்துக் கொண்டு,


"ஏன்டி இப்படி பண்ணாய்... பாவி மகளே.." என அழ அவரை அதட்டி அமைதியாக்கினார் ராஜாராம்.


ராஜாராம் மெதுவாக ஜனனியின் தலையை வருட நித்யாவின் கண்கள் கலங்கின.


யாரோ ஒருவன் தன்னை ஏமாற்றினான் என தன் மீது இத்தனை பாசம் வைத்த சொந்தங்களை விட்டு சாக முனைந்த தன் மடத்தனத்தை எண்ணி நித்ய யுவனிக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது.


அவள் கண்கள் கலங்கியதைக் கண்டு அதனை அவசாரமாகத் துடைத்து விட்ட ராஜாராம்,


"என்னம்மா ஆச்சு... அந்தப் பையன் ஏதாவது சொன்னானா.." எனக் கேட்க,


அவரின் கேள்வியில் அதிர்ந்த நித்யா ஜனனியைக் கேள்வியாகப் பார்க்க அவள் ஆம் எனத் தலை ஆட்டவும் தந்தைக்கு அனைத்தும் தெரிந்துள்ளது என அறிந்தவள் அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு நேற்று நடந்த அனைத்தையும் கூறி கதறி அழுதாள்.


நித்யா கூறியதைக் கேட்டு அனைவருமே அதிர்ச்சியாகினர்.


பிரேம், ஆரவ் இருவருக்குமே சஜீவ்வை நினைத்து வெறுப்பாக இருந்தது.


சஜீவ்வுக்கு பல முறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை.


சஜீவ் வேண்டுமென்றே அனைவரையும் தவிர்த்தான்.


அவன் யாருடனும் கதைக்கும் மனநிலையில் இருக்கவில்லை.


எப்போதும் குடி, புகை பிடித்தல் என்றே இருந்தான்.


நித்யாவை மறக்கவே அனைத்தையும் செய்தான்.


ஆனால் பாவம்.. அவன் செய்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.


நித்ய யுவனி சஜீவ்வின் உயிரோடு கலந்தவளாயிற்றே.


அவளை மறக்க வேண்டுமெனில் அவன் இறக்க வேண்டும்.


நித்யாவை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


சில நாட்கள் கழித்து ஜனனி, நித்ய யுவனி இருவரும் மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தனர்.


அங்கு தான் சித்தார்த்தும் படித்துக் கொண்டிருந்தான்.


தன் கவலை மறக்க வேண்டி எப்போதும் புத்தகமும் கையுமாக இருப்பாள்.


தனக்காக இல்லாவிடினும் தன்னைப் பெற்றவர்களுக்காகவாவது தான் நன்றாகப் படித்து அவர்கள் விருப்பப்படி மருத்துவர் ஆக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருந்தாள்.


ஆனால் முன்பிருந்த உற்சாகம் குறைந்து நடை பிணமாகத் தான் சுற்றினாள்.


படிக்காத மற்ற நேரம் அனைத்தும் அறையிலே அடைந்து கிடந்து சஜீவ்வின் டீ ஷர்ட்டை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள்.


பல முறை ஜனனி திட்டியும் அவள் கேட்கவில்லை.


யார் என்ன கூறினாலும் சஜீவ் தன்னை ஏமாற்றினான் என அவள் மனம் நம்ப மறுத்தது.


நித்யாவால் சஜீவ்வை வெறுக்கவும் முடியவில்லை.


நித்யா இவ்வாறு இருப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாத ராஜாராம் ஒரு நாள் அவளை அழைத்து,


"யுவிம்மா... எங்கையாவது ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறியாம்மா... இங்க இருந்தா உனக்கு எப்பவும் அந்த பையன் பத்தி ஏதாவது நினைவு வந்துட்டே இருக்கும்..." என்க நித்ய யுவனியும் எதுவும் கூறாது சம்மதித்தாள்.


ராஜாராமும் மனமேயின்றித் தான் இம் முடிவை எடுத்தார்.


வசந்தி மகளை விட்டுப் பிரிந்திருக்க முடியாதென அழுது வடிக்க ராஜாராம் மனதினுள்ளே கண்ணீர் வடித்தார்.


பின் குடும்பம், நண்பர்கள் என அனைவரையும் பிரிந்து பேங்களூரில் இருந்த பிரபல மருத்துவக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தாள்.


காயத்ரி மூலம் சித்தார்த்தும் அங்கு தான் கற்கிறான் என அறிந்தவள் ஏற்கனவே அவனுடன் பழக்கம் இருந்ததால் இருவருக்குள்ளும் நல்ல நட்பொன்று உருவாகியது.


நித்ய யுவனிக்கு ஜனனி தன்னுடன் இல்லாத குறையை சித்தார்த் தான் தீர்த்தான்.


இருவரும் நன்றாகப் படிப்பதால் அவர்கள் மற்றவர்களுக்கு முன்னதாகவே இளம் வயதில் மருத்துவர்கள் ஆகினர்.


சித்தார்த் நரம்பியல் நிபுணராகவும் நித்ய யுவனி பெற்றோரின் கனவுப்படி மகப்பேற்று வைத்தியர் ஆகினாள்.


அந்த ஐந்து வருடங்களில் ஒருமுறை கூட ஊருக்கு வரவில்லை.


அங்கேயே இருந்து படிப்பை முடித்து அங்கிருந்த மருத்துவமனையொன்றிலே தற்காலிகமாக வேலை பார்த்தாள்.


சஜீவ்வின் நிலையோ மோசமாக இருந்தது.


காலையிலிருந்து இரவாகும் வரை வேலையில் தன்னை மூழ்கடிப்பவன் வேலை முடிந்து வந்ததும் நித்யாவின் நினைவில் அவளை மறக்க வேண்டும் என்றே குடிப்பான்.


பிரேமும் ஆரவ்வும் சஜீவ்விற்கு பலமுறை அழைத்தும் அவன் அழைப்பை ஏற்காததால் அவர்களும் அதன் பின் அழைப்பதைக் கை விட்டு விட்டனர்.


அன்று நித்ய யுவனியுடன் இறுதியாகப் பேசி ஒரு மாதத்திற்கு மேல் கடந்திருந்த நிலையில் வழமை போன்று வேலை விட்டு வந்து மது அருந்திக்கொண்டிருக்க ஜீவிகாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.


மீண்டும் ஈஷ்வரிக்கு ஏதாவது ஏற்பட்டு விட்டதோ எனப் பயந்தவன் அவசரமாக அழைப்பை ஏற்க மறுபக்கம் ஜீவிகா கூறிய செய்தியில் கையிலிருந்த மதுக்கோப்பையைத் தவற விட்டான்.


அன்று சுசித்ராவும் ரகுவரனும் ஈஷ்வரியை சந்திக்க வந்திருந்தனர்.


ஈஷ்வரியின் அறையில் மூவரும் அவர்கள் நடத்திய நாடகத்தைப் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அவ் வழியாக வந்த ஜீவிகா அவர்கள் பேசுவதைக் கேட்டு விட்டாள்.


அதனைக் கேட்டு அதிர்ந்தவள் உடனடியாக சஜீவ்விற்கு அழைத்து தெரிவித்தாள்.


மீண்டும் ஒரு ஏமாற்றம்... மீண்டும் ஒரு துரோகம்...


ஆனால் இம்முறை யாருக்காக தன் உயிராக நினைக்கும் காதலியையே இழந்தானோ அவரே ஏமாற்றி விட்டார்.


பெற்ற தாய் தன் சொந்த மகனுக்கு எவ்வளவு பெரிய வலியைக் கொடுத்துள்ளார்.


பின் நித்யா இறுதியாக தன்னிடம் அழுது கெஞ்சியது நினைவு வர,


அதனை நினைக்கவே சஜீவ்விற்கு உயிர் பிரியும் வலி ஏற்பட்டது.


இனிமேலும் தன் காதலை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க தேவையில்லை என முடித்தவன் தன்னிலை விளக்கமளிக்கவென நித்யாவுக்கு அழைத்தான்.


ஆனால் அவள் தான் தன் அலைபேசி எண்ணைக் கூட மாற்றி விட்டாளே.


நித்யாவுக்கு அழைப்பு செல்லாமலிருக்க பிரேமிற்கு அழைத்தான்.


ஆரவ்வும் பிரேமுடன் தான் இருந்தான்.


சஜீவ்வின் அழைப்பு வந்ததும் பிரேம் துண்டிக்கப் பார்க்க ஆரவ் தான் எடுத்துப் பேசக் கூறினான்.


அழைப்பு ஏற்கப்பட்டதும் சஜீவ், "பிரேம்... நான் யுவி கூட பேசணும் ப்ளீஸ்டா... அவள் யூஸ் பண்ற நம்பர குடுடா..." என்க,


"எதுக்கு... ஒரு தடவை அவள தற்கொலை பண்ணிக்க வைக்க தூண்டிட்டு இன்னும் அவள் உயிரோட இருக்காளேன்னு திரும்ப கொல்லப் பாக்குறியா..." என கோவமாகக் கேட்டான் பிரேம்.


"என்னடா சொல்ற... யுவி சூசைட் அட்டம்ட் பண்ணாளா..." என சஜீவ் அதிர்ந்து கேட்க,


"அவளை அந்த முடிவ எடுக்க வெச்சதே நீயும் உன் ஃபேமிலியும் தானேடா... இப்போ திரும்ப என்ன இதுக்குடா வந்து யுவி யுவின்னு சொல்ற..." என்று பிரேம் கேட்க,


சஜீவ் ஈஷ்வரி போட்ட நாடகத்திலிருந்து இன்று வரை நடந்த அனைத்தையும் கூற ஆரவ், பிரேம் இருவரும் அதிர்ந்தனர்.


சஜீவ் மீது கோவத்தில் இருந்தவர்கள் அவன் அவ்வாறான முடிவு எடுக்கக் காரணமான செய்தியைக் கேட்டு அவனுக்கு ஆறுதலளித்தனர்.


ஆரவ், "உன் சைடுல இருந்து பார்த்தா நீ செஞ்சது சரியா இருந்தாலும் நித்து ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா... இப்போ அவள் எங்க எல்லாரையும் விட்டு தூரமா இருக்கா... நீ தயவு செஞ்சி அவ கூட பேச ட்ரை பண்ணாதே... நித்து இப்போ தான் கொஞ்சம் சரி நிம்மதியா இருக்கா... அத கெடுத்துடாதே..." என்று விட்டு அழைப்பைத் துண்டித்தான்.


நித்ய யுவனியின் நிலையைக் கேட்டவனால் தன்னை நினைத்தே வெட்கமாக இருந்தது.


முடிந்த மட்டும் கதறி அழுதான்.


இதற்கு காரணமானவர்களை பலி வாங்கும் வெறி ஏற்பட்டது.


ஈஷ்வரிக்கு அழைத்து அவர் செய்த செயலால் தான் இனி அவர் முகத்தில் கூட முழிக்க விருப்பமில்லை என்று கூறினான்.


அதன் பின் அவர் போட்ட எந்த நாடகமும் அவனிடம் செல்லுபடியாகவில்லை.


அதன் பின்னும் நித்யாவுடன் பல முறை தெடர்பு கொள்ள முயற்சித்தும் எதுவும் சரி வரவில்லை.


இனி அவளாக தன்னை மன்னித்தால் தான் உண்டு என நினைத்தவன் இந்தியா செல்லும் நினைவை அடியோடு விட்டு விட்டு எப்போதும் வேலை வேலை என அதிலேயே தன்னை ஓய்வில்லாமல் வைத்துக் கொண்டான்.


தன் நிலை தனது தங்கைக்கும் ஏற்படக் கூடாது என ஜீவிகாவிடம் அவள் யாரையாவது காதலிக்கிறாளா எனக் கேட்க அவள் வீராஜைப் பற்றிக் கூறவும் வீராஜ் பற்றி நன்றாக விசாரித்தவன் அங்கிருந்தபடியே ஜீவிகாவின் திருமணத்தை ஏற்பாடு செய்தான்.


ஈஷ்வரியிடம் பெயருக்குக் கூட யாரும் சம்மதம் கேட்கவில்லை.


அவர் செய்த செயலில் கணவன் பிள்ளைகள் என அனைவரும் தேவைக்கு மட்டுமே அவருடன் பேசினர்.


ஜீவிகாவின் திருமணத்துக்கு கூட சஜீவ் இந்தியா வரவில்லை.


பிரேம், ஜனனி இருவரின் திருமணத்துக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தான் மீண்டும் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தான்.


அதுவும் பிரேமின் வற்புறுத்தலால் தான்.


சஜீவ் அன்று பிரேமிடமும் ஆரவ்விடமும் கூறியவற்றை அவர்கள் தம் துணைகளிடம் கூற அவர்களும் யாரோ செய்த சதியால் நித்யா, சஜீவ் இருவரும் இரு வேறு பக்கம் இருப்பதை நினைத்து வருத்தமடைந்தனர்.


நித்ய யுவனியோ பெற்றோரிடமும் ஜனனி, திவ்யா, அஞ்சலி என தன் தோழிகளுடன் மட்டும் தான் தொடர்பில் இருந்தாள்.


சில சமயம் மட்டும் பிரேம், ஆரவ், பிரியாவுடன் பேசுவாள்.


நித்ய யுவனியுடன் பேசும் போது அவர்கள் சஜீவ் கூறியவற்றை கூற முயற்சிக்கும் போதெல்லாம் வேறு ஏதாவது பேசி பேச்சை திசை திருப்புவாள்.


சஜீவ் பற்றிய பேச்சை எடுப்பதையே அவள் விரும்பவில்லை.


இப்படி எந்தவிதத் தொடர்பிலும் இருக்காத நித்ய யுவனி மற்றும் சஜீவ் சர்வேஷ் ஐந்து வருடங்கள் கழித்து பிரேம், ஜனனியின் திருமணத்தில் மீண்டும் சந்தித்தனர்.


❤️❤️❤️❤️❤️





- Nuha Maryam -
 
Top