நாமம் சூட்டப்பட்டதன் காரணங்கள்
வணக்கம் நேசங்களே...!!!
இத்தளத்தை அனைவரும் ஒருமுறையேனும் முழுமையாக சுற்றி பார்த்து இருப்பிர்கள். என்னடா இது!? எல்லா இடத்திலும் பூக்களின் பெயர் என்ற எண்ணம் தோன்றும்! இது என்ன பூ என்று சிலதை வெகு சிலர் தெரியாது குழம்பியும் போயிருப்பிர்கள். உங்களுக்கான பதிவு - பதில் இங்கே உள்ளது.!!! அதற்குமுன் முத்தென ஒரு முதலாக, தள பெயரின், பெயர் வைத்த காரணத்தின் மொழியை அறிக.
வைகை நதி - இதன் சிறப்பே தனி அல்லவா?
மனித குலத்தின் நாகரிகங்கள் எல்லாம் நதிக்கரையின் ஈரமணலில்தான் தொடங்கின. வருடம் முழுவதும் தண்ணீர் ஓடும் ஜீவநதிக் கரையில்தான் பெரு நகரங்களும் நாகரிகமும் தழைத்தோங்கும் என்பது இல்லை.
ஜீவநதி அல்லாத வரளும் நதிக்கரையிலும் மனித நாகரிகம் தழைத்தோங்கும் என்பதற்கான சான்றுதான் வைகை. தமிழ் நாகரிகத்தின் தொட்டிலாக வைகையே இருந்துள்ளது. வருடத்தில் நான்கு மாதங்களே நீர் ஓடும் வைகையின் கரையில், பல்லாயிரம் ஆண்டுகளாக மக்கள் கூட்டம் செழித்தோங்கி வளர்ந்துள்ளது.
சங்க இலக்கியங்களில் வைகை பெயர் இல்லாத இடமே இல்லை என்னும் அளவிற்கு பல இடங்களை தன் பெயராலும் சிறப்பாலும் நிரப்பிய பெருமை வைகையையே சேரும். இங்கு இந்த நம் தமிழ் மொழி - எழுத்து தளமும் அதன் சிறப்பை பின் தொடர்ந்து ஒரு பெரும் ஆறாக இல்லை என்றாலும், சிறு ஓடையாகவாவது... கிளை நதியாகவாவது... இணைந்து செயல்பட, பெருமை சேர்க்க பேராசை கொண்டு வைத்த பெயர் - தளத்தின் பெயர் "வைகை".
*******************************
இனி பிரிவுகளின் பெயர் காரணம்!!!
1) குறிஞ்சி: பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூப்பது தான். எனினும் எல்லா ஆண்டுகளும் பூக்கும். எல்லாச் செடிகளிலும் பூக்கும். இச்செடியின் பூத்த இடமாக இந்தக் குறிஞ்சி பக்கம்.
2) சூரிய காந்தி: பெரிய, மஞ்சள் உடல் கொண்டது, பார்த்ததும் மனதில் மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் பரப்பும் மலர்.
3) அனிச்சம்: ஆண்டுக்கு சில முறை மட்டுமே சிறிய அளவில் பூக்கும் மலர். முகர்ந்தாலே வாடிவிடும் இம்மலரைத் தூர இருந்து ரசித்தால், இன்பம் அதிகம். அதுபோல, கேட்கப்படும் கேள்விகளும், கொடுக்கப்படும் பதில்களும், பிற சந்தேகங்களும், முன் வைக்கு முன், மென்மையான அனிச்சமாக எதிர் நபரை எண்ணி யோசித்து வார்த்தைகளைப் பகிரவும்.
4) தாழை: பசுவின் கன்றுக்கு அடுத்து, ஒரு தாழை செழித்துப் பூத்தால், அதைவிடச் சந்தோஷம் ஒரு விவசாய வீட்டில் வேரேதுமில்லை. அதேபோல் தான் இங்கும். ஒவ்வொரு எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் இணைதலும், எங்களுக்குத் தாழைக்கு இணை.
5) பன்னீர் ரோஜா: மனதிற்கு இன்பமான வாசம் வீசட்டும், கொடுக்கும் ஒவ்வொரு அறிவிப்பும். அதற்கான எதிர்வினையும்.
6) வாகை: வெற்றி பெரும் வீரர்களுக்குத் தான் வாகையா? இங்குப் பங்குபெறும் ஒவ்வொரு எழுத்திற்கும் வாகை சூடப்படும்.
7) குறுநறுங்கண்ணி: இதில் வரும் விதை, சிவப்பில் மூழ்கி, வழவழப்பைப் போர்வையாகக் கொண்ட ஒன்று. அக்காலத்தில் பெரும்பாலான அணிமணிகளில் இதன் இடம் அதிகம். அதன் பண்புகள் எப்படி ஒரு மணியைக் கட்ட எனத் தேர்வு செய்ய உதவியதோ, அதுபோல், இந்தப் பொது விஷயங்கள், உங்கள் வாழ்வை வண்ணமயமாகக் கொண்டு செல்லும் பண்பிடமாகத் தேர்வு செய்யப்படட்டும்.
8) தாமரை: மிகவும் அழகான மலர் தான். நம் தேச மலரைப் போல், தேசம் முழுவதும் படர்ந்திருக்கும், திரை கலைகளைப் பற்றி இங்கே பகிரலாம்.
9) தும்பை: வீட்டுத் தோட்டம் முதல் சாலையோரம் வரை, வயல் வரப்பு, காடு கரை என எங்கும் காணும் தும்பை அளவில் சிறியது. நசுக்கிவிடாமல் அழகுற அமைப்பது நம் கையில். இத்தும்பையே நம் பிள்ளைகள்!
10) மல்லிகை: பல விதங்கள், பல மணங்கள், பல வடிவங்கள்! இருந்தும் ஒவ்வொன்றும் தனித் தன்மை உடையது! இங்கும் எங்கள் எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் தனித் தன்மை கொண்டது! உயர்வானது! வைகை நதியில் பூக்கும் மல்லிகையின் மனம் பற்றித் தனியே கூற வேண்டுமா?
11) கதம்பம்: பல வகைப் பூக்களைக் கோர்த்துக் கட்டப்படும் கதம்பம் போல், இங்கே வாழ்த்து, நன்றி, வருத்தம் எனப் பல கலவையான உணர்வுகளைப் பகிரலாம்! கதம்பம் அந்த இறைவனுக்குச் சூட்டப்படும் ஒன்று! பார்த்துப் பதமாக அழகு பூக்களை (வார்த்தைகளை) தேர்ந்தெடுத்துக் கோர்க்கவும்.