• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பகுதி 9

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
பகுதி_ 9



சுபிம்மா....


ஆ...என்னத்தை??


அவசரமாக விழிநீரைத் துடைத்தபடியே நிமிர்ந்து அமர்ந்தாள் சுபாங்கி...


ஜூஸ் தம்ளருடன் உள்ளே வந்த பிரபாவதியின் விழிகள் ஒரு கணம் மருமகளின் முகத்தைக் கூர்ந்தன..


அழுதியா சுபிம்மா??


இல்.. இல்லையேத்தை...


பொய் சொல்லாதேடா....அவன் வேறு முகத்தை கடுகடுவென்று வைத்துக்கொண்டு போகிறான்....அவன் தான் ஏதோ சொல்லியிருப்பான்...என்னடா சொன்னான்??


அப்..அப்படி எல்லாம் ஒன்றுமில்லை அத்தை....

சரி விடு ..இதுவே உன் அம்மா என்றால் உன் மனதில் இருப்பதை சற்றும் தயங்காமல் பகிர்ந்து கொண்டிருப்பாய்..என்ன இருந்தாலும் அத்தை அத்தை தானே....



ச்சே...ச்சே ....அப்படி எல்லாம் ஒன்றுமில்லத்தை...
அப்படியானால் சொல்லும்மா.... என்ன நடந்தது??



அது....அவர் ....என்னைத் தூக்கி வந்தது.....வேண்டாம் என்று சொன்னேன்..அது ...அதற்கு உன் மேல் உள்ள ஆசையில் தூக்கி வரவில்லை.....மனிதாபிமானத்தில் தான் செய்தேன் அப்படி என்று.....


நடந்ததை கோர்வையாக கூற முடியாமல் தட்டுத் தடுமாறி கூறிய சுபாங்கியின் முகம் அப்போதும் வாட மாறாக பிரபாவதியின் முகம் சட்டென மலர்ந்தது..



சுபிம்மா....ஒன்று சொல் உன் இந்த வாட்டம் எதனால்?? அவன் திட்டியதாலா அல்லது அவனுக்கு உன் மேல் ஆசை இல்லை என்று கூறியதாலா??



பிரபாவதியின் கேள்வியில் சுபாங்கி திகைத்து தடுமாறிப் போனாள்..அவள் கன்னங்களில் செம்மை படர..அது வந்து..அது அப்படி இல்லை அத்தை....அவர் கடுமையாக பேசவும்....அதனால்......அதனால் தான்...



அவளின் முகச் சிவப்பையும் தடுமாற்றத்தையும் பார்த்து வாய்விட்டுச் சிரித்த பிரபாவதி விழிகளில் நீர் அரும்ப அவளை இழுத்து அணைத்துக் கொண்டார்...



நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் டா..ஒன்றும் சொல்ல வேண்டாம்....எனக்கு புரிந்துவிட்டது..தனா அதிஷ்டசாலி...ம்ஹும்...அவனை விட நான் தான் அதிஷ்டசாலி.....என்றார் நெகிழ்ந்த குரலில்..

அச்சோ...அப்படி எல்லாம் ஒன்றுமில்லைத்தை.....என்று சுபி லேசான வெட்கத்துடன் முணுமுணுக்க...அவளின் முகத்தை நிமிர்த்தியவர்



அப்படியா செல்லம்?? எங்கே இந்த அத்தையின் கண்ணைப் பார்த்துச் சொல்லு ஹ்ம்ம்... என்று சிரிக்கவும்.... சுபாங்கிக்கும் சிரிப்பு வந்துவிட வெட்கத்துடன் அவர் மடியிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டாள்...


வெட்கத்துடன் அவர் மடியில் தலை சாய்த்திருந்த சுபாங்கி கன்னத்தில் சூடாக விழுந்த கண்ணீர்த்துளிகளில் திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள்..



அத்..அத்தை ..என்னாச்சு?? ஏன் அத்தை அழுகிறீர்கள்?

இல்லைடா...நான் அழவில்லை...இத்தனை நாட்களாக நெஞ்சில் அடைத்திருந்த பாரம் சட்டென விலகியதால் வந்த ஆனந்தக் கண்ணீர் டா இது...



பாரம்..?? என்னத்தை??



ஹ்ம்ம் ..ஆமாம் டா....இவன் உன்னை கடத்தி வந்த நாளில் இருந்து நெஞ்சை அடைத்திருந்த பாரம்.... உனக்கு தெரியாது சுபிம்மா....இவன் தனா உன்னை இப்படி திருமணம் செய்ததில் நீ எனக்கே மருமகளானதில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி தான். ஆனால் திருமணம் நடந்தாலும் நீங்கள் இருவரும் இரண்டு துருவங்களாய் தனித்தனியே தான் இருந்தீர்கள்...என்னால் இருவரிடமும் பேச முடியவில்லை சுபிம்மா....உன் மனதைப் பற்றி தெரியாமல் உங்கள் வாழ்க்கையை சீராக்க என்னால் எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை...


உன் மனதில் என்ன இருக்கிறது என்று என்னால் அறிய முடியவில்லை.. பகலில் எல்லோர் முன்பும் நீ இயல்பாக நடமாடினாலும் இரவில் நான் உறங்கி விட்டேன் என்று எண்ணிக்கொண்டு நீ சோபாவில் அமர்ந்து சத்தமின்றி அழுவதைக் பல தடவை கண்டிருக்கிறேன் சுபிம்மா....உண்மையை சொன்னால் அப்போதெல்லாம் என் நெஞ்சு குற்றவுணர்ச்சியில் எப்படித் துடிக்கும் தெரியுமா??


ஏன் அத்தை இதில் நீங்கள் குற்றவுணர்ச்சி கொள்ள என்ன இருக்கிறது???


இருக்கிறது சுபிம்மா...நிறைய இருக்கிறது... முதலாவது அவன் உன்னை கடத்தி வந்து கட்டாயப்படுத்தி தான் திருமணம் செய்கிறான் என்று எனக்கு தெரியும்..நான் நூறு வீதம் மனது வைத்திருந்தால் அதைத் தடுத்திருக்க முடியும்..ஆனால் தெரிந்தும் மனதின் ஒரு பக்கம் உனக்காக துடித்தாலும் நீ தனாவின் மனைவியாய் இந்த வீட்டுக்கு வர வேண்டும் என்ற ஆசையில் அமைதியாய் இருந்துவிட்டேன்.... ஏனோ நீ தனாவின் மனைவியாய் வந்துவிட்டால் எல்லாம் நேராகிவிடும் என்ற ஒரு நம்பிக்கை...



ஆனால் திருமணம் நடந்து நீ இங்கு வந்த பின் இப்படி நீ இரவு நேரங்களில் அழுவதைப் பார்க்கும் போது நெஞ்சை ஏதோ பிசையும் சுபிம்மா....ஒரு சிறு பெண்ணின் வாழ்வை என் சுயநலத்துக்காக அழித்துவிட்டேனோ என்று எத்தனை இரவு உறங்காமல் கண்ணீர் விட்டிருக்கிறேன் தெரியுமா??


சில விஷேச வீடுகளில் சரோஜா தன் மகன் ரிஷிக்கும் உனக்கும் முடி போட்டு பேசுவதைக் கேட்டிருக்கிறேன்...முதலில் அதைப் பெரிதாக எடுக்காவிட்டாலும் இப்படி நீ அழும் சமயங்களில் உனக்கும் அவன் மேல் ஏதாவது ஈடுபாடு இருந்திருக்குமோ....அவனை மறக்க முடியாமல் தவிக்கிறாயோ என்றெல்லாம் எண்ணி எண்ணி....எத்தனை முறை வேதனைப் பட்டிருக்கிறேன் தெரியுமா??



அய்யோ...அத்தை..போதும்..போதும்.... நீங்கள் தவறு செய்துவிட்டதாக எண்ணி வேதனைப்பட்ட ஒவ்வொரு விடயத்திற்கும் அர்த்தமே இல்லை. அதனால் இனி கவலையே படாதீர்கள்....சரியா??


நான் அழுதது....அத்தை நீங்களே சொல்லுங்கள் திருமணமாகி புகுந்த வீட்டுக்கு செல்லும் ஒவ்வொரு பெண்ணும் தன பிறந்த வீட்டை மிஸ் பண்ணுவாள் தானே....என்ன வழக்கமான திருமணங்களில் புதுப்பெண்ணுக்கு அவள் கணவனின் ஆதரவு இருக்கும்..இங்கே....உங்கள் சத்புத்திரனைப் பற்றித்தான் தெரியுமே......


ஒரே உர்ர்ர் தான்....உன் அப்பாவைப் பழிவாங்கத்தான் உன்னை திருமணம் செய்தேன்...உன் வீட்டில் யாருடனும் பேசகூடாது...அப்படி பேசுவதாய் இருந்தால் உன் வீட்டுக்கே போய் விடு.....என்று வார்த்தைகளாலேயே விளாசினார்....போதாத குறைக்கு உன் மேல் ஆசைப்பட்டு ஒன்றும் மணக்கவில்லை என்று சுருக் சுருக் குத்தல்கள் வேறு....கோபமும் அழுகையும் எப்படி வரும் தெரியுமா?? கோபத்தை நேரேயே காட்டி விடுவேன்...ஆனால் அழுகை...?? இப்படி பேசுபவர் முன்னாலேயே அழுதால் என் தன்மானம் என்னாவது..?? அதுதான் நம் ரூமில் தனிமை கிடைக்கும் போது தான் அழுகை பொத்துக்கொண்டு வரும்.....அதோடு அங்கு வீட்டில் அம்மா , அப்பா, விபு, பப்பு என்று அவர்கள் நினைவு வேறு....



ஹ்ம்ம்...எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து நான் அழுததை நீங்கள் இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டீர்களா ....அத்தை உங்களுக்கொன்று தெரியுமா??


என்னடா??


ரிஷிக்கும் எனக்கும் திருமணம் செய்ய வேண்டுமென்ற ஆசை அப்பாக்கு சரோஜாத்தைக்கு இருந்தது தான்..ஆனால் எனக்கு அப்படி எந்த எண்ணமும் எப்போதும் இருந்ததில்லை...புரிந்ததா?? இனிமேல் இப்படி அர்த்தமில்லாத எதைப்பற்றியும் எண்ணி வருத்தப்படக்கூடாது சரியா?? என் வீட்டினர் கூட பேச முடியவில்லை என்ற ஒரு குறையைத் தவிர நான் இங்கு மகிழ்ச்சியாய்த் தான் இருக்கிறேன் அத்தை.....


 

Tharsan Thanu

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
72
46
18
SRILANKA
அவள் பேச்சைக் கேட்ட பிரபாவதியின் முகம் நிம்மதியில் மலர...அவள் கன்னத்தை பாசத்துடன் வருடியவர் ரொம்ப சந்தோசம் டா...என்றார்..நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த குரலில் தொடர்ந்து..

ஏன் சுபிம்மா..... நீ உன் வீட்டினருடன் பேச நான் ஏற்பாடு பண்ணட்டுமா?? என வினவினார்.


அத்தை அவர் என்ன சொல்வாரோ?? அவருக்கு பிடிக்காது அத்தை...


அவன் கிடக்கிறான் விடும்மா....முரடன்....அவனுக்கு தெரியாமல் நான் உனக்கு நம்ம முகில்கிட்ட சொல்லி ஒரு சின்ன போன் வாங்கி கொடுக்கிறேன்..நீ அதை நம்ம ரூமில மறைச்சு வைச்சு தேவைப்படும் போது பேசிக்கோ சரியா??


ஆமா ..உன் அப்பா உன்னை மன்னிச்சு உன் கூட பேசுவாராடா??


ம்ஹும்....அப்பாவ பற்றி என்னை விட உங்களுக்கு நல்லா தெரியுமே அத்தை அவர் பேசமாட்டார்.....அப்பா பேசாம அம்மாவும் பேச மாட்டாங்க...ஆனா விபுவும் பப்புவும்....என்ன புரிஞ்சுப்பாங்க....


அப்போ சரிம்மா நீ அவங்க கூட பேசு நான் ஏற்பாடு பண்றேன்...


ம்ஹும்....வேணாம் அத்தை....

ஏண்டா??


அது தப்புத்தை..என்ன இருந்தாலும் அவர் என் கணவன் ....எதுவா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லி அவர் அனுமதியோட செய்வேனே தவிர இப்படி அவருக்கு தெரியாம ஒளிச்சு மறைச்சு பண்ணுறது தப்பு... என்றவள் சட்டென கண்ணில் தோன்றிய குறும்புடன் என்னத்தை நீங்க எனக்கு இப்படி தப்பு தப்பா எல்லாம் சொல்லிக்கொடுக்கிறீங்க.?? என்று சிரித்தாள்.


கூடச் சேர்ந்து சிரித்த பிரபாவதி முகம் கனிய நிஜமாவே தனா அதிஷ்டசாலி தான். தன அதிஷ்டத்தை அவன் சீக்கிரமே புரிந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுதல் போல கூறியவர் தொடர்ந்து கண்ணில் ஒரு குறுகுறுப்புடன்



ஏன் சுபிம்மா நீ தனாவை இந்தளவு தூரம் விரும்ப என்ன காரணம்டா?? இது அவன் உன் கணவன் என்பதால் வந்த நேசமா ?? இல்லை..??? என்று இழுக்கவும்


அவரின் கேள்வியில் ஒரு குமிழ் சிரிப்பை இதழ்களுக்குள்ளேயே ஒதுக்கியவள் அவர் அருகில் நெருங்கி ரகசியம் பேசும் குரலில் “அத்தை... உங்க பையன் செம handsome தெரியுமா?? ..... என்று கூறி கண்சிமிட்டி சிரித்தாள்....


அவளின் பேச்சில் தானும் வாய்விட்டுச் சிரித்தவர் இரு இரு உன் பொண்டாட்டி உன்னை ரொம்ப ரசிக்கிறாடா பையான்னு அவன்கிட்ட சொல்லுறேன்.... என கேலியாக கூறவும்



சட்டென சுபாங்கியின் முகம் மாறியது....இல்லைத்தை....வேணாம் ...தயவுசெய்து அப்படி ஒரு காரியத்தை மட்டும் செய்துடாதீங்க..என் மனதில் இருப்பது அவருக்கு தெரியக்கூடாது...


ஏய்...சுபி ..ஏன்மா?? உனக்கு அவனைப் பிடித்திருக்கிறது தானேடா...

ஹ்ம்ம்.... ஆனால் உங்க பையனுக்கு..?? வார்த்தைக்கு வார்த்தை உன் மேல் எதுவித ஆசையும் இல்லை....பழிவாங்க வெறுமே பழிவாங்க மட்டுமே உன்னைத் திருமணம் செய்தேன் என்று கூறும் ஒருவரிடம் போய் நான் அவரை விரும்புவதாய் எப்படி அத்தை கூற முடியும்??? எனக்கும் கொஞ்சமாவது தன்மானம் இருக்குமில்லையா ??


அதோடு இங்கு வந்த நாளில் இருந்து நானும் பார்க்கிறேன் அவரின் பார்வையில் கூட கடுகளவு ஈடுபாட்டைக் கூட நான் காணவில்லை அத்தை.. ஏதோ தாலி கட்டி என்னை இங்கு கொண்டுவந்து சேர்த்தாகி விட்டது.அதோடு தன கடமை முடிந்துவிட்டது என்பது போலத்தான் நடந்துகொள்கிறார்....அவரிடம் போய் எப்படி அத்தை??


எப்போது உங்கள் மகனுக்கு என் மேல் சற்றாவது ஈடுபாடு வருகிறதோ அப்போது பார்க்கலாம்... அதுவரை நீங்கள் இது சம்பந்தமாக அவரிடம் எதுவும் பேசகூடாது அத்தை இது என் மேல் சத்யம் ...


ஏய்....சுபி என்னடா இது சத்யம் அது இதுவென்று பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிக்கொண்டு....ஹ்ம்ம்...ஒரு பெண்ணாய் என்னால் உன் மனநிலையைப் புரிந்து கொள்ள முடிகிறது சுபிம்மா...நான் அவனிடம் இது குறித்து எதுவும் பேசவில்லை...


ஆனால் சுபிம்மா ... கணவன் மனைவி உறவில் இந்த ஆணவம் சுய கெளரவம் எதுவும் இருக்க கூடாதுடா....






வாழ்க்கை ஒன்றும் நாம் சினிமாவில் பார்ப்பது போன்றோ கதைகளில் படிப்பது போன்றோ அவ்வளவு இலகுவாக இருந்துவிடாது.... நல்லபடியாக இரு தரப்பும் சம்மதித்து நடக்கும் ஒரு திருமணத்திலேயே அந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நேசிக்க ஆரம்பிக்க சில காலம் தேவை ... உங்களது முற்றிலும் வேறுபட்ட ஒரு திருமணம்....ஏதோ நல்லவேளையாக நீ அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டாய்..... ஆனால் உடனேயே அவனும் உன்னை நேசிக்க தொடங்க இது ஒன்றும் சினிமா இல்லடா வாழ்க்கை... அவன் என்னை நேசிக்காமல் நானும் என் நேசத்தை வெளிப்படுத்த மாட்டேன் என்று நீ வீம்பு பிடிப்பதால் என்ன இலாபம் சொல்லு???



நான் உன்னை நேசிக்கிறேன் பதிலுக்கு நீயும் என்னை நேசித்தாக வேண்டும் என்று சொல்ல அது ஒன்றும் கடைப்பொருள் இல்லைடா...அது ஒரு உணர்வு ஒருவர் மேல் இயல்பாக அரும்ப வேண்டியது ...

சரி இதுவரை அவன் உன்னை நேசிக்கவில்லை என்றால் போகட்டுமே....ஆனால் இனிமேல் நேசிக்க கூடாது என்று இல்லையே.... எந்த வாயால் உன் தந்தையை பழிவாங்க மட்டுமே உன்னை மணந்தேன் என்று கூறினானோ அதே வாயால் நீ இன்றி எனக்கு வாழ்க்கையே இல்லை என்று கூற வை..... உன் மேல் ஆசையே இல்லை என்று சொன்னவனை உன் பின்னாலேயே சுற்றி வரச் செய்.... அது உன்னால் முடியாதா?? நிச்சயம் முடியும்டா...


சுபி ஒன்றைப் புரிந்துகொள் ...நீ அவன் மனைவி மா....அவன் ஒத்துக்கொள்கிறானோ..இல்லையோ... உனக்கென்று சில உரிமைகள் இருக்கிறது....அதை அவன் அனுமதித்துத் தான் ஆக வேண்டும்...அதை நீ புரிந்துகொள்.... அவனை விட்டு விலகி நிற்காதே...நெருங்கி நின்று அவனை உன்னை நெருங்கச் செய்....

ஆனால் அத்தை அது என்னை நானே அவமதிப்பது போல் ஆகாதா??

நிச்சயம் இல்லைடா..... உன்னை ஒன்றும் நீயே கதி என்று அவன் காலில் விழ சொல்லவில்லையே.....அவன் மனைவி என்ற நிமிர்வுடன் அவனை நெருங்கு...அதோடு சுபிம்மா... கணவன் மனைவி உறவில்....மான அவமானம் ...சுயமரியாதை .... என்று வேறு எந்த உணர்வுக்குமே இடமிருக்க கூடாது.... அங்கு இருக்க வேண்டியது முக்கியமாய் அன்பு , புரிந்துணர்வு , பரஸ்பர மரியாதை....அவ்வளவுதான்....புரிந்ததா...

அதோடு சுபிம்மா ஒன்றைப் புரிந்துகொள்....தனாக்கு உன் மேல் நேசம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்...ஆனால் அக்கறை இருக்கிறது...அதற்கு அன்று உன் காலில் காயம்பட்டதும் அவன் காட்டிய அக்கறையும் பதட்டமுமே சான்று.... அந்த அக்கறையை அவன் மனைவியான உன்னால் நேசமாய் மாற்ற முடியாதா என்ன?? சிறு சிரிப்பும் ஒரு கேள்வியுமாய் பிரபாவதி தன பேச்சை முடித்த நொடி சுபாங்கி தனக்குள்ளும் ஒரு தெளிவு பிறந்ததாய் உணர்ந்தாள்..

அதுதானே ....யார் அவன் இத்தனை வருடங்களாய் அவள் நெஞ்சில் பொத்தி வைத்து நேசித்த அவள் அத்தான் அல்லவா?? அவளின் நேசத்துக்கான பிரதிபலிப்பு அவனிடம் இல்லை என்பது ஏமாற்றம் தான் என்றாலும் இனி அவள் மேல் நேசம் மலரக்கூடாது என்று இல்லையே?? எது எப்படியோ இப்போது அவன் அவளுக்கே அவளுக்கான கணவன்...அவனைக் காதலிப்பதற்கும் நெருங்குவதற்கும் அவள் ஏன் தயங்க வேண்டும்...

முகம் மலர பிரபாவதியை அணைத்துக் கொண்டவள் இப்போ எனக்கு ஒரு தெளிவு கிடைச்சிருக்கு.... தாங்க்ஸ் அத்தை என்று கூறி கன்னத்தில் இதழ் பதித்தாள்.

அவள் தலையைக் கோதி அவள் உச்சியில் முத்தமிட்ட பிரபாவதியின் மனம் தன மகனினதும் அவளினதும் வாழ்வு மலர வேண்டும் என்று அவர்கள் குல தெய்வத்தை வேண்டியது....

 
  • Love
  • Like
Reactions: Mani and Joss uby