• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

யாத்திசை - 09

kkp 52

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 7, 2023
46
27
18
Tamilnadu
பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தாள் நர்மதா. பாத்திரங்களின் அழுக்கு அகல்வது போல அவள் மனதின் இருளும் அகன்று மின்னத்தொடங்கியது. அந்த வீதி நாடகம் யாரை பாதித்ததோ இல்லையோ நர்மதாவின் கண் முன் மீண்டும் மீண்டும் வந்து அவள் மூளையை குடைந்துக்கொண்டிருந்தது.


குழாய் நீர் பாத்திரத்தில் நிறைந்து வலிந்தோடிக்கொண்டிருந்தது.

"ஹேய் நர்மதா , என்ன செஞ்சிகிட்டுருக்க? தண்ணி பாட்டுக்கு தண்ணி போகுது. அப்புடி என்னத்த யோசிச்சிகிட்டுருக்க ? தண்ணிக்கும் நாங்க காசு கட்டுறம் தெரியும்ல? உங்க வீட்டுல போல எங்களுக்கு தண்ணி சும்மா கெடக்கல. அத மூடு மொதல்ல, "

தடபுடலாய் அந்த குழாயைச் சுற்றிய வேகத்தில் திருகாணி த்ரெட் உடைந்துவிட்டதோ என்னவோ , எந்தப் பக்கம் சுற்றினாலும் தண்ணீர் நின்றபாடில்லை. பாத்திரத்தில் நிறைந்த தண்ணீர் சிங்கையும் நிறைத்து சமையலறை தரை முழுதும் உருண்டோட தயாரானது. சட்டென சிங்கின் மேல் இருந்த பாத்திரத்தில் உள்ள தண்ணீரை கவிழ்த்தாள். அந்த பாத்திரத்தில் இருந்த சோற்றுப்பருக்கைகள் எல்லாம் சிங்கின் துவாரத்தை அடைத்துக்கொண்டு நிர் செல்வதை முற்றாக தடை செய்தது. மொத்த நீரும் தரையை சரணடைந்தது. குழாயை மூடவும் முடியாது, நிறையும் நீரை வெளியேற்றவும் முடியாது தடுமாறினாள் சிறுமி.

எங்கோ ஓடிச்சென்று அவளது சட்டையை கிழித்துக்கொண்டு வந்து பார்த்தாள். சமையலறையே ஆறாக மாறியிருந்தது. அந்த சட்டைத்துணியால் குழாயை இரண்டு சுற்று சுற்றி இறுக கட்டிவிட்டு தரை நீரை முற்றாக வழித்து பின் வாசல்வழியே வெளியே தள்ளி முடித்துவிட்டு வந்து "அப்படா...." என அமர்ந்தாள் பிளாஸ்டிக் கதிரையில்.

அத்தனையையும் வேடிக்கை பார்த்துக்கொண்டாருந்த அந்த வீட்டம்மா ஆற அமர வந்து சோபாவில் அமர்ந்தாள்.

"ஏண்டி நர்மதா? வேலைல கவனம் இல்லாமல் அப்படி என்ன நெனப்புல மெதக்குற? இப்படி வேல செய்யவா சம்பளம் கொடுக்குறம்? "

வாய்த்திறக்காது அமைதியாய் இருந்தாள் சிறுமி.

"ஹேய்....உன்ன தாண்டி கேட்குறன். வாய தொறந்து பதில் சொல்லு. வாய மூடிக்கிட்டு அமுக்கிணி மாதிரி நிக்குற."

"அது....அது வந்து அம்மா..."

"என்ன, எவனயாவது மனசுல...."

"அய்யோ அப்படிலாம் எதுவும் இல்லங்கம்மா. நா படிக்கணும். என்னால இனி இங்க வேல செய்ய முடியாது. நா படிக்கபோறேன். " என்றாள்.

" ஓஹோ..... படிக்கணுமோ....? சரி சரி படி அந்த கத எங்களுக்கு தேவை இல்லை. இந்த மாசம் வாங்கின சம்பளத்துக்கு வேல செஞ்சிட்டு போ. இதுக்குதான் மாச கடைசில சம்பளம் கொடுக்குறது. ஒங்க அம்மாதான் அவசரமா வேணும்னு வாங்கிட்டு போனாள். "

"சரிங்ம்மா. நா இந்த மாசம் மட்டும் வேல செய்றேன். அடுத்த மாசத்துலருந்து வேற ஆள வச்சிகோங்க. "

"ஹா... அதெல்லாம் எங்களுக்கு தெரியும். நீ ஒன்னும் சொல்ல தேவையில்ல. இருக்கவர ஒழுங்கா வேலய செய். ஒரு வேலய ஒழுங்கா செய்ய தெரியல.... நீயெல்லாம் படிச்சி என்னத்த கிழிக்க போற? "

தொட்டிலிருந்த குழந்தை அழும் சத்தம் கேட்க...

"பாப்பா எழுப்பிட்டா போல. போய் கொஞ்சம் தொட்டில ஆட்டி தூங்க வை"

சிறுமி கொஞ்சம் தயங்கினாள்.

"என்ன, ஓ தங்கச்சியயும் ஸ்கூல் லீவ் போட்டுட்டு நீ பாத்துகிட்டதானே? அப்படி நெனச்சி ஏ பாப்பாவயும் பாத்துக்க. எனக்கு கையெல்லாம் வலிக்குது. உடம்பு கஷ்டமா இருக்கு. கொஞ்சம் தூங்கிட்டு வாரேன். பாப்பா எழும்பிட்டா தூங்கவிடமாட்டா"

"சரிங்கம்மா, நீங்க தூங்குங்க. நா பாப்பாவ தூங்கவைக்கிறேன்"

அறைக்கதவைத் திறந்து உள்ளேச் சென்று "ஆராரோ...." பாடி தொட்டிலை ஆட்டினாள் சிறுமி நர்மதா.


" மலரக்கா... நர்மதா எங்க...? "

"இல்ல ஔவியன் தம்பி... இந்த மாச சம்பளத்த முன்கூட்டியே வாங்கிட்டேன். இந்த மாசம் மட்டும் வேலக்கி அனுப்பி வச்ச. அடுத்த மாசத்துலருந்து கட்டாயம் ஸ்கூல் போவாள். மன்னிச்சிடுங்க தம்பி."

"எங்கிட்ட எதுக்குக்கா மன்னிப்பு கேட்குறிங்க? உங்க புள்ள நல்லா படிச்சா உங்களுக்குதான் அது... எனக்கென்ன? புள்ளைய பெத்து வேலக்கி அனுப்புறிங்க? உங்களுக்கு உழச்சி போடவா புள்ள பெத்துக்குறிங்க? " சற்று கடுமையாக பேசினான் ஔவியன்.

மலர் முகம் கறுத்து விட்டது. பதில் பேசமுடியாது திக்காடி நின்றாள். வேறு யாருமென்றால் எடுத்து வாயாடிருப்பாள். உண்மையான அக்கறையோடு பேசுபவனை எதிர்த்து எப்படிதான் பேசுவது? ஒரு விதத்தில் அவன் பேசுவதும் சரிதானே?

"இவர் அப்படித்தான் அக்கா பேசுவாரு. நீங்க கண்டுக்காதிங்க. கட்டாயம் ஸ்கூலுக்கு அனுப்புங்க மலரக்கா." யாத்ரா அன்பாய் பேசி முகம் வாடி மலரை சற்று மலரச்செய்தாள்.


"நாங்க டேனியல் அண்ணா வீட்டுக்கு போய்ட்டு வாரம். "

"சரி தாயி.... பத்திரமா போய்ட்டு வாம்மா" வழியனுப்பி வைத்தாள் மலர்.


அதற்குள் ஔவியன் சுந்தமாஸ்டரோடு கைவாறுக்காகச் சென்றுவிட்டான்.

"பாட்டி...." என்று சொல்லிக்கொண்டு யாத்ராவும் போய் அமர்ந்தாள்.

"யே பாட்டியம்மாவுக்கு ஒன்னு வாங்கிட்டு வந்துருக்கேன்...என்னன்னு சொல்லுங்க பார்ப்பம்..."

"வெற்றிலையா?"

"நோ நோ இல்லையே.."

" அப்போ... நெய் பூந்தி?"

"இல்லை..."

"நில கடலை"

"அதெல்லாம் சாப்பிட எத்தின பல்லு இருக்கு கெழவி? ஆசைய பாரு "

சரியாக யூகித்து சொல்லமுடியாத கிழவி, யூகித்து சொல்லும் ஆர்வத்தில் வாயில் வந்ததையெல்லாம் சொன்னாள்.

மெதுவாக கிழவியின் கையைவிரித்து
பாட்டி எழுந்து கைப்பிடித்து நடப்பதற்காக அழகான உறுதியான விலை உயர்ந்த தடியொன்றை கையில் வைத்து பற்றிபிடிக்கச் செய்தாள் யாத்ரா.


"எனக்கெதுக்கு தாயி இதெல்லாம்? இந்தா கோப்பி கம்பு வெட்டி கொடுத்துருக்கான் யே பேரே. இத வச்சி நடந்து நோய்க்குவேனே... எதுக்கு தாயி சல்லி செலவு செஞ்சி இதெல்லாம்..." என கதிரையோடு சாய்த்திருந்த கோப்பி மரத்தடியை எடுத்து காட்டினாள்.

"அத வைங்க அம்மாயி. இத பிடிங்க. இதுல உங்களுக்கு பயமில்லாமல் நடந்து போகலாம்." பாட்டி எழும்பி ஈரடி நடந்து பார்த்துவிட்டு மீண்டும் அமர்ந்தாள்.

"பிடிச்சிருக்கா சுந்தர மாஸ்டர்? " ஓவியன் கேட்டான்.

"பாத்தியா...யே பேத்திய.... இந்த கெழவிய பார்க்க வெறுங்கையோட வரமாட்டா என் பேத்தி. நீயும்தா இருக்கியே..." என ஔவியனை குமட்டில் பிடித்து தள்ளினாள்.

என்ன தாயி...ரெண்டு உசுரா இருக்கியா?

எப்படி அம்மாயி... ?

பாட்டி சிரித்தாள்.

"சுந்தர மாஸ்டர் மகள்னா சும்மாவா...? ஜோசியம், வைத்தியம் எல்லாம் அத்துப்படி " சொல்லி சிரித்தான் ஔவியன்.

சிரித்தாள் கிழவி.

"இப்படி சிரிச்சிக்கிட்டே இருங்க அம்மாயி." என மனதுக்குள் சொல்லி கிழவியின் சிரிப்பை இரசித்தாள் யாத்ரா.

"அம்மாயி...நாங்க டேனியல் அண்ணா வீட்டுக்கு போய்ட்டு வாரோம்."

" அவன் வீட்டுக்கா? அவன் வீட்டுக்கெல்லாம் யேப்பா போறிங்க? இந்து மதத்திலருந்து வேதத்துக்கு சேர்ந்துட்டு என்னமோ பரம்பர பரம்பரயா வேதத்துல இருக்க மாதிரி என்ன ஆட்டம் போட்டான். அவெ வீட்டுக்கு ஏப்பா போற?"

"அப்படி இல்ல அம்மாயி, டேனியல் அண்ணன் இப்ப ஒரு பிரச்சினைல இருக்காரு. ரெண்டு பேரு அடிச்சி போட்டுடாங்க. ஆஸ்பத்திரிக்குப் து இப்பதான் வீட்டுக்கு வந்துருக்காரு. பாவம் அம்மாயி."

"அவனுக்கெல்லாம் அப்படிதான் நடக்கும்.அவன் ஆட்டத்த எல்லாரும் பாத்துகிட்டு இருபாங்களா? நம்ம கோயிலுக்கெல்லாம் கல்லடிச்சவன் தானே அவன். "

"அட அம்மாயி.... இருக்குற இந்த கொஞ்ச பல்ல வச்சிகிட்டு நீ இப்படிலாம் பேசலாமா? "

" பல்லில்லனு கிண்டல் பணிறியா? " என முனங்கிக்கொண்டு அமைதியானாள்.

"அட அம்மாயி...கோவிச்சிகிட்டியா? அப்படில்ல, டேனியல் அண்ணாவுட்டு அப்பா சுகமில்லாமல் சாக கெடக்குறப்போ நாமெல்லாம் என்ன செய்தோம்? ஆனா ச்சேர்ச்ல பிரேயர் பண்ணி, மன ஆறுதல் கொடுத்து தேத்தி எடுத்தாங்கல்லயா? நம்மாக்கல் ஒன்னுமே செய்யலயே. அந்த கோபத்துல தான் டேனியல் அண்ணா அப்படி மாறிட்டாரு. நம்மாக்கல்ட ஒற்றும இல்ல. ஊர்கூடி வாழ்ற தன்மை இல்ல. டேனியல் அண்ணா பாவம். கஷ்டபடும்போது ஆறுதல் கூட சொல்லாமல் ஒதுங்கி இருந்ததாலதான் டேனியல் அண்ணா இப்படி மாறிட்டாரு. அதே தப்ப திரும்ப செய்து அவர இன்னும் கெட்டவனா மாத்தனுமா பாட்டி? இப்ப நாம அவரோட இருந்தாதான் நம்ம அரும அவருக்கு புரியும். அதோட கஸ்டபடும்போது கூட இருக்கதுதானே மனுத் தன்மை. "


"சரிப்பா.... நீ சொல்றதும் சரிதான். நல்ல மனசுப்பா ஒனக்கு. போ தாயி போய் பாத்துட்டு வாங்க ரெண்டு பேரும். " ஔவியனை பெருமையாய் பார்த்துவிட்டு யாத்ராவை எழுப்பி விடை கொடுத்தாள் கிழவி.

"அம்மாயி... நா ஒன்னு சொல்லவா?"

"சொல்லு தாயி"

" மதப்பெயரச் சொல்லியும் ஜாதிப்பெயர சொல்லி மனுசன்கள ஒதுக்கி வச்சும் ஒதுங்கியும் வாழ்ந்ததாலதான் நாம இன்னமும் இந்த லயத்துக்குள்ளயே வாழ்ந்துகிட்டுருக்கம். எவ்வளோ விஷயங்கள அனுபவிக்காமலயே வாழ்றம். அத பத்தியெல்லாம் கவலபடாமல் சாதியையும் மதத்தையும் பத்தி பெருசா கவலபட்டுகிட்டுருக்கம். இல்லையா பாட்டி?"

" என்னமோ தாயி... சாதி மதம் எங்களுக்கு சின்ன வயசுலருந்தே சொல்லி கொடுத்து வழத்தாங்க. நானும் யே புள்ளங்களுக்கும் பேரன் பேத்திகளுக்கும் சொல்லிகொடுத்துதான் வழத்துருக்கென். என்ன தாயி பண்றது? நாங்க பழகிட்டம்..."

" ம்... அம்மாயி... ஆனா நாம செய்யவேண்டியது நெறைய இருக்கு. அது பத்தி கவலபடுவம் இனி. சரியா? "

"சரி தாயி சரி தாயி. படிச்ச புள்ளைங்க சொன்னால் சரியாதான் இருக்கும். கவனமா போய்ட்டு வாங்க ரெண்டு பேரும்."


டேனியலின் வீட்டில் பியதாச இவர்களுக்கு முன்பே சென்று அமர்ந்திருந்தான்.

" ஹா... எண்ட் எண்ட..(வாங்க வாங்க)

முகமன்காக சிரித்துவிட்டு உள்ளேச்சென்று அமர்ந்தார்கள். டேனியலை காணவில்லை. வரும் வரை காத்திருந்தார்கள். நேரத்தை எதற்கு வீணாக்க? சந்தர்ப்பத்தை பயன்படுத்திகொள்வோமே என்றெண்ணிய பியதாச மெதுவாக யாத்ராவிற்கு அருகாமையில் இருந்த கதிரைக்கு நலுவினான்.

பார்த்தும் கண்டுகொள்ளாதவன் போல வேரெங்கோ பார்த்துக்கொண்டிருந்தான். ஔவியன்.

(சிங்கள மொழி உரையாடல் தமிழிமொழியிலேயை எழுதப்படுகிறது.)


" அவள் இங்க வந்துட்டா மா? "

என்ன இது? யாரை கேட்கிறான்? புரியாது விழித்தாள் யாத்ரா.

" அதான்... அவள கண்டென். அவ எப்ப இங்க வந்தாள்?"

",யாரப்பா கேட்குற நீ? " என்பது போல புருவங்களைச் சுருக்கி கண்களால் விழித்தாள்.

" அய்யோ தங்கச்சி... நா யார கேட்குறன்னால்... எப்படி சொல்லுறது..?" வெட்கமா? தயக்கமா? பயமா? என்னவென்று புரிந்துக்கொள்ளமுடியாதபடி வளைந்து குழைந்து நெளிந்தான். ஊர் ச்சண்டி... இவன் இப்படி வளைந்து நெளிவது யாத்ரா விற்கு புதுமையாகத்தான் இருந்தது.

" நீங்க வேற யாரையோ பத்தி விசாரிக்கிறிங்கன்னு புரியுது. ஆனால் யார பத்தி கேட்குறிங்கண்ணுதான் புரியவேமாட்டிக்குது. கொஞ்சம் தெளிவா சொல்றிங்க மா?". நயமாக பேசி அவன் பேசுவதற்கு தைரியத்தை கொடுத்தாள் யாத்ரா.

" அதுவந்து... தங்கச்சி... இலங்கோ தங்கச்சி தீபா ...." தைரியம் வந்ததும் வராததுமாய் சொல்ல,

" ஹா... தீபா அக்காவா?" என்றாள் யாத்ரா.

"ஆமா, தீபாவ நா இங்க கண்டென். அவ இங்க எப்ப வந்தா? இனி எப்ப போவா? தனியாவா வந்துருக்கா? "

யாத்ரா முறைத்தாள்.

"இல்ல...அன்னைக்கு தனியாத்தான் ரோட்ல நின்னுகிட்டுருந்தா. அதுதான்... தனியாவா வந்தான்னு...."

",ஆமா தனியாத்தான் வந்துருக்கா. "

" எப்ப நோவா?"

"தெரியாது. "

"ஏன் இங்க வந்துருக்கா?"

"உங்க எல்லா கேள்விக்கும் பதில் சொல்லிகிட்டு இருக்கமுடியாது "என்பது போல அவள் பார்க்க, "இல்லை சொல்லிதான் ஆக வேண்டும் " என்று அவன் பார்வை அவளை வற்புறுத்தி பிடிவாதமாய் இருந்தது. அந்த பார்வையில் நீண்ட நாள் தவிப்பும் இருந்து.


விஞ்ஞானம் தீண்டாத கலைகள் தொடரும்....