நீண்ட வராண்டாவில் தன் இரு பக்கமும் பார்வையைப் பதித்தவாறு, முகத்தில் என்றும் இருக்கும் மென் புன்னகையுடன், கழுத்தில் ஸ்டெதஸ்கோப் சகிதம் வலம் வந்தான் டாக்டர் துஷ்யந்த். முப்பது வயது விஷேட இளம் இதயநோய் நிபுணர்.
ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், முறுக்கேறிய புஜங்கள், எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை என அடித்துக் கூறும் அழுத்தமான இளஞ்சிவப்பு இதழ்கள், ட்ரிம் செய்யப்பட்ட தாடி, மீசை, பாதி நெற்றியை மறைத்திருந்த முடியை ஜெல் பூசி கட்டுக்குள் வைத்திருந்தவனின் மீது பெண்களின் பார்வை விழாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.
ரவுண்ட்ஸ் செல்லும் போது எதிரில் வலம் வந்தவர்கள் மரியாதை நிமித்தம் அவனுக்கு வணக்கம் கூற, அவற்றை மென் புன்னகையுடன் ஏற்றவாறு நடந்த துஷ்யந்தின் செவிகளை அடைந்தது ஒரு பதட்டமான பெண் குரல்.
நெற்றி சுருங்க, குரல் வந்த திசையை நோக்கியவனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய, அவன் இதழ்களோ, 'சகுந்தலா' என முணுமுணுத்தன.
ப்ளஸ் டூ படிக்கும் போது இருவரும் ஒரே வகுப்பு. இதுவரை பேசிக்கொண்டது கிடையாது. ஆனால் அவர்கள் இருவரையும் வைத்து முழு வகுப்புமே கேலி கிண்டல் செய்து பேசிக் கொண்டனர்.
காரணம் இருவரின் பெயர்ப் பொருத்தம். 'துஷ்யந்த் - சகுந்தலா' காவியக் காதலர்கள்.
ஆனால் படிப்பில் மட்டும் கண்ணாக இருந்த துஷ்யந்த் அவர்களின் கேலிப் பேச்சைக் காதிலே வாங்வில்லை.
இருந்தும் ஓரிருமுறை சாதாரணமாக சகுந்தலாவின் முகம் நோக்கி இருந்தாலும் துஷ்யந்த்தின் மனதில் வேறு எண்ணங்கள் எழவில்லை.
அதன் பின் ப்ளஸ் டூ முடித்து இத்தனை வருடங்கள் கழிந்து பிரபல இதய மருத்துவன் ஆன பின் தான் மீண்டும் சகுந்தலாவைக் காண்கிறான் துஷ்யந்த்.
பள்ளிக் காலத்தில் சக மாணவி என சகுந்தலாவை சாதாரணமாகக் கடந்த துஷ்யந்த்தினால் ஏனோ இன்று அவளை விட்டுப் பார்வையை அகற்ற முடியவில்லை.
இத்தனை நாட்களாக அவனின் பெற்றோர் திருமணம் செய்யக் கூறி எவ்வளவோ வற்புறுத்தியும் அதனைத் தட்டிக் கழித்து வந்த துஷ்யந்த்திற்கு சகுந்தலாவைக் கண்டதும் மனம் அவள் பால் சரியத் தொடங்கியது.
எத்தனையோ பெண்கள் ஒவ்வொரு விதமாக அவனை அணுகியும் யாரையும் நிமிர்ந்து பார்த்திராதவன் இன்றோ இமைக்க மறந்து சகுந்தலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ப்ளஸ் டூ படிக்கும் போது சீருடை அணிந்து, இரட்டை ஜடை பிண்ணி, கோதுமை நிறத்தில் சற்று பூசிய உடல்வாகுடன் இருந்த சின்னப் பெண் இன்று அளவான உடல்வாகுடன் முன் இருந்ததை விட பல மடங்கு எழிலுடன் திடீரென அவன் முன் வந்து நின்றால் அவனும் என்ன தான் செய்வான்?
சகுந்தலா கைப்பேசியில் யாருடனோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருக்க, நொடிக்கொரு முறை மாறும் அவளின் முக பாவனைகளையே தூரத்தில் இருந்து ரசித்துக் கொண்டிருந்தான் துஷ்யந்த்.
'என்ன டா பண்ணிட்டு இருக்க? நீ ஒரு டாக்டர். அது ஞாபகம் இருக்கா? வெட்கமே இல்லாம நாழு பேரு போற வர இடத்துல நின்னு பச்சையா சைட் அடிச்சிட்டு இருக்க...' என துஷ்யந்த்தின் மனசாட்சி அவனைக் காரி உமிழவும் தன்னிலை அடைந்தவன் அவளை நோக்கி நடக்க காலை ஒரு அடி எடுத்து வைக்க, "டாக்டர்..." என அவனை நோக்கி ஓடி வந்தாள் ஒரு தாதி.
"டாக்டர்... உங்கள சீஃப் டாக்டர் அவசரமா கூப்பிடுறாங்க." என அத் தாதி வந்து கூறவும், "ஆஹ் ஓக்கே... நீங்க போங்க. நான் வரேன்." எனப் பதிலளித்து விட்டு மீண்டும் சகுந்தலா இருந்த திசையை நோக்க, அவளோ அங்கிருந்து சென்றிருந்தாள்.
'ஷிட்... மிஸ் பண்ணிட்டேன்.' என மனதில் எண்ணியவனைக் கடமை அழைக்கவும் சகுந்தலாவின் நினைவை மனதில் ஒரு ஓரமாக பூட்டி வைத்து விட்டு சீஃப் டாக்டரைக் காணச் சென்றான் துஷ்யந்த்.
துஷ்யந்த் சீஃப் டாக்டரைக் காணச் செல்லும் வழியில் எங்கிருந்தோ ஓடி வந்து அவனை மோதினான் ஒரு ஐந்து வயது சிறுவன்.
கீழே விழுந்த சிறுவனைத் தூக்கி நிறுத்திய துஷ்யந்த், "ஹேய்... ஆர் யூ ஓக்கே?" எனக் கேட்டான் பதட்டமாக.
ஆனால் அச் சிறுவனோ துஷ்யந்த்தின் கேள்விக்குப் பதிலளிக்காது துஷ்வந்தின் பின்னால் பார்த்து விட்டு அவனிடமிருந்து விடுபட்டு ஓட முயன்றான்.
"எங்க சேம்ப் ஓட பார்க்குறீங்க?" எனக் கேட்டான் துஷ்யந்த் குறும்புடன்.
அவனுக்கு ஏனோ அச் சிறுவனைக் காணும் போது ஒரு இனம் புரியா உணர்வு.
ஆனால் அது என்னவென்று தான் அவனுக்குப் புரியவில்லை.
துஷ்யந்த்தின் கேள்வியைப் பொருட்படுத்தாத அச் சிறுவன், "அங்கிள்... லீவ் மீ. அந்த பேட் ஆன்ட்டி வராங்க. அவங்க என்னைப் பார்த்துட்டா அப்புறம் டாக்டர் கிட்ட சொல்லி ஊசி போடுவாங்க." என்று திமிறினான்.
குழப்பத்துடன் திரும்பிப் பின்னால் பார்த்த துஷ்யந்த் ஒரு வயதான தாதி யாரையோ தேடியவாறு துஷ்யந்த் இருந்த பக்கம் வந்து கொண்டிருந்தார்.
இவ்வளவு நேரமும் துஷ்யந்த்திடமிருந்து விடுபடத் திமிறிய அச் சிறுவன் சட்டெனக் குனிந்து துஷ்யந்தை அணைத்தவாறு ஒளிந்து கொள்ளவும் துஷ்யந்த்தின் முகத்தில் புன்னகை.
"ஓஹ்... அவங்கள பார்த்து தான் நீங்க பயப்படுறீங்களா?" என துஷ்யந்த் கேட்கவும் ஆம் எனத் தலையசைத்த சிறுவன், "ஷ்ஷ்ஷ்... நான் இங்க ஹைட் பண்ணிட்டு இருக்கேன்னு அவங்க கிட்ட சொல்லாதீங்க." என்றான் கிசுகிசுப்பாக.
அதே நேரம் அத் தாதி அச் சிறுவனைக் கண்டு அங்கு வந்து ஏதோ கூற வாய் திறக்க, கண்களால் அவரைப் பேச வேண்டாம் என சைகை காட்டிய துஷ்யந்த் தான் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தான்.
பின் அச் சிறுவனிடம் குனிந்து, "அந்த ஆன்ட்டி ஒன்னும் பேட் இல்ல சேம்ப். அவங்களுக்கு சின்ன பசங்கன்னா ரொம்ப பிடிக்கும். ஊசி எல்லாம் போட மாட்டாங்க. சாக்லெட் தருவாங்க." என்கவும் துஷ்யந்த்திடமிருந்து சட்டென விலகிய அச் சிறுவன், "ரியலி?" எனக் கேட்டான் ஆவலாக.
துஷ்யந்த் ஆம் எனத் தலையசைக்க, "ஹை... அப்போ ஜாலி... எங்க மம்மி எனக்கு சாக்லெட்டே வாங்கி தர மாட்டாங்க. சாக்லெட் சாப்பிட்டா கேவிட்டீஸ் வருமாம்." என்றான் சோகமாக.
"ம்ம்ம்... மம்மி பொய் சொல்ல மாட்டாங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்லி இருப்பாங்க. பட் ஒரு சாக்லெட் சாப்பிட்டா எதுவும் ஆகாது. டெய்லி நிறைய சாப்பிட்டா தான் கேவிட்டீஸ் வரும். மம்மிக்கு இது தெரியலயா இருக்கலாம். நீங்க சொல்லிக் கொடுங்க." என துஷ்யந்த் கூறவும் சிறுவனின் முகம் சந்தோஷத்தில் மலர்ந்தது.
பின் துஷ்யந்த் அத் தாதியிடம் கண் காட்டவும் அவர் அச் சிறுவனை நெருங்கி, "ஊசி எல்லாம் போட மாட்டேன் கண்ணா. ஆன்ட்டி கூட வந்தா உனக்கு சாக்லெட் தரேன். அங்க உன்ன போல இன்னும் நிறைய சின்னப் பசங்க இருக்காங்க. அவங்க கூட எல்லாம் ஜாலியா விளையாடலாம். வரியாப்பா?" எனக் கேட்டார் புன்னகையுடன்.
தாடையில் விரல் வைத்து யோசித்த அச் சிறுவன் துஷ்ய்ந்த்திடம் திரும்பி கேள்வியாக நோக்க, துஷ்யந்த் சரி எனத் தலையசைக்கவும் அத் தாதியிடம் சென்றான் சிறுவன்.
தாதியுடன் அங்கிருந்து கிளம்பிய சிறுவன் துஷ்யந்த்தைப் பார்த்து கை காட்டி விட்டு அவனுக்குப் பறக்கும் முத்தத்தை வழங்க, துஷ்யந்த்தும் பதிலுக்கு அவ்வாறே செய்தான்.
பின் நேரத்தைப் பார்த்தவன் அவசரமாக சீஃப் டாக்டரின் அறையை அடைந்து அனுமதி கேட்டுக்கொண்டு உள்ளே செல்ல, அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த சகுந்தலாவைக் கண்டு துஷ்யந்த்தின் முகத்தில் தௌசன்ட் வாட்ஸ் பல்ப் எரிந்தது.
ஆனால் சகுந்தலாவோ துஷ்யந்த்தை அங்கு எதிர்ப்பார்க்காது முதலில் அதிர்ந்தவளின் முகம் அதன் பின் ஏமாற்றம், வருத்தம், விரக்தி என பல பாவனைகளைக் காட்டி விட்டு இறுதியில் கண்களை எட்டாத புன்னகை ஒன்றை உதிர்த்தாள்.
"சகுந்தலா... வாட் அ சர்ப்ரைஸ்? ஆஃப்டர் லோங் டைம்..." என்றவாறு துஷ்யந்த் அவளை நோக்கி நடக்க, சகுந்தலா பதில் கூற வாய் திறந்த சமயம் பார்த்து, "மம்மி..." என ஓடி வந்து அவளின் காலைக் கட்டிக் கொண்டான் சற்று முன்னர் துஷ்யந்த்துடன் மோதிய சிறுவன்.
அதனைக் கண்டு துஷ்யந்த்தின் முகத்தில் அதிர்ச்சி.
சகுந்தலாவோ தன் காலைக் கட்டிக்கொண்ட மகனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டவள், "மை சன்... பரத்." என துஷ்யந்த்துக்கு அறிமுகப்படுத்தினாள்.
அவனோ இன்னும் அதிர்ச்சி மாறாமல் அவர்களையே நோக்கிக் கொண்டிருக்க, "ஹை... சாக்லெட் அங்கிள்..." என துஷ்யந்த்தைப் பார்த்துக் கத்தினான் சிறுவன் பரத்.
பரத்தின் குரலில் தன்னிலை அடைந்த துஷ்யந்த் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன், "ஓ... சோ க்யூட்." என்றான் பரத்தின் கன்னம் கிள்ளி.
இவர்களின் உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்த சீஃப் டாக்டர், "உங்க ரெண்டு பேருக்கும் ஆல்ரெடி பழக்கமா?" எனக் கேட்டார் குழப்பமாக.
துஷ்யந்த்தோ அவனின் மனதில் ஏற்பட்ட பிரளயத்தில் இருந்து மீள முடியாதவனாக தலையை மட்டும் அசைக்க, "ஜஸ்ட் க்ளாஸ்மேட்ஸ் டாக்டர்." என்றாள் சகுந்தலா.
இப்போது துஷ்யந்த்தின் முகத்தில் விரக்திப் புன்னகை.
'ஜஸ்ட் க்ளாஸ்மேட்ஸ்...' எனத் தன் மனதுக்குள்ளே சொல்லிக் கொண்டான்.
"வாவ்... தெட்ஸ் குட்." என்ற சீஃப் டாக்டர் பரத்தைப் பார்த்து, "லிட்டில் ப்ரின்ஸ். நர்ஸ் ஆன்ட்டி கூட போய்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடுறீங்களா? டாக்டருக்கு அம்மா கூட கொஞ்சம் பேச வேண்டி இருக்கு." எனக் கேட்டார் புன்னகையுடன்.
பரத்தோ உடனே மறுப்பாகத் தலையசைக்கவும் சகுந்தலா, "பரத்..." என்றாள் அழுத்தமான குரலில்.
தாயின் அதட்டலில் உடனே முகம் வாடிய சிறுவன் உதடு பிதுக்கியவாறு இறங்கி தாதியுடன் வெளியே சென்றான்.
அவன் செல்லும் வரை காத்திருந்த சீஃப் டாக்டர், "துஷ்யந்த்... நான் உங்கள கூப்பிட்டது ஒரு முக்கியமான விஷயம் பேசுறதுக்காக தான்." எனப் புதிர் போடவும் இவ்வளவு நேரமும் தனக்குள் புழுங்கிய துஷ்யந்த் ஒரு சிறந்த மருத்துவராக தன் கவலையைப் புறம் தள்ளி விட்டு சீஃப் டாக்டரின் முகத்தை நோக்கினான் கேள்வியாக.
"இவங்க பையனுக்கு ஒரு ரேர் ஹார்ட் டிசீஸ் இருக்கு. துஷ்யந்த்... நீங்க NDCM பத்தி கேள்விப்பட்டு இருப்பீங்க. பரத் பிறந்ததுமே அவருக்கு இந்த நோய் இருக்குறத டாக்டர்ஸ் கண்டு பிடிச்சிட்டாங்க. இத்தனை நாட்களா மெடிசின்ஸ் அன்ட் ட்ரீட்மென்ட்னால தான் இந்தளவுக்காவது ஆக்டிவ்வா இருக்கார். பட் இதே நிலை தொடருமாங்குறது கேள்விக்குறி தான்.
நியோனாட்டல் டிலேட்டட் கார்டியோமயோபதி. இது ரொம்ப ரேர் என்ட் உயிருக்கு ஆபத்தான ஒரு ஹார்ட் டிசீஸ். இது முதன்மையா குழந்தைகளையும் சின்ன பசங்களையும் தான் பாதிக்கிறது. இதயத்துல இருக்கும் நான்கு அறைகளும் விரிவடைந்து பலவீனமடைவதால ப்ளெட்ட திறம்பட பம்ப் செய்யும் இதயத்தோட திறன் பாதிக்கப்படுது.
NDCM உள்ள குழந்தைகளுக்கு வேகமான சுவாசம், ஃபீடிங் பண்ணுறது சிரமம், வெய்ட் கெய்ன் மற்றும் ஸ்கின் கலர் மாதிரி சிம்ப்டம்ஸ் அடிக்கடி காணப்படும். சில சந்தர்ப்பங்களில் இந்த நோய் இதய செயலிழப்ப கூட ஏற்படுத்தலாம்.
இந்த டிசீஸ் நிறைய காரணங்கள் காரணமா ஏற்படலாம். உதாரணத்துக்கு சொல்லப்போனா ஜெனட்டிக் ரீசன்ஸ், ப்ரெக்னென்சி டைம்ல ஏற்படுற வைரஸ் இன்ஃபெக்ஷன்ஸ் இப்படி நிறைய இருக்கு. இது வெர்ரி ரேர் டிசீஸ் என்பதால இந்த நோய்க்கான காரணத்தை கண்டு பிடிக்கிறதும் சக்சஸ்ஃபுல் ட்ரீட்மெண்ட்ட கொடுக்குறதும் ஒரு பெரிய சவால்.
NDCM ஒரு ரேர் டிசீஸ் என்பதனால அதைக் குணப்படுத்துறது ரொம்ப சவாலானது. என்ட் ட்ரீட்மெண்ட் ஆப்ஷன்ஸும் ரொம்ப குறைவு. இந்த நோயால பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இதயத்தோட ஃபங்ஷன இன்க்ரீஸ் பண்ண மெடிசின்ஸ், மெஷின்ஸ் எல்லாம் கண்டிப்பா தேவை. ரொம்ப சிவியர் கேஸ்னா கண்டிப்பா ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணி ஆகணும்.
லைஃப் லாங் மெஷின்ஸோட வாழுறத விட ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் இஸ் அ பெட்டர் ஆப்ஷன். பட் இப்போ பிரச்சினை என்னன்னா பரத்தோட ப்ளெட் க்ரூப் ஓ நெகட்டிவ். சோ அதுக்கான டோனர கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்." என்று சீஃப் டாக்டர் கூறி முடிக்கவும் துஷ்யந்த்திற்கு அதிர்ச்சி என்றால் சகுந்தலாவின் கண்களிலோ கண்ணீர் குளம் கட்டியது.
தன் மகன் படும் துன்பத்தை இத்தனை நாட்களும் பார்த்து, முடியாமல் தான் இறுதியில் இதய சிகிச்சைக்கு இம் மருத்துவமனை சிறந்தது எனக் கேள்விப்பட்டு சென்னையில் இருந்து ஹைதராபாத் வரை வந்திருக்கிறாள் சகுந்தலா.