• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வலி - அத்தியாயம் 5

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
சகுந்தலாவை மருந்துகளை வாங்க கீழே அனுப்பி வைத்து விட்டு பரத்தின் அருகே சென்றான் துஷ்யந்த்.

"அங்கிள்... இங்க பாருங்க. நல்லா இருக்கா?" என தான் வரைந்த சித்திரத்தைக் காட்டிக் கேட்டான் பரத்.

ஒரு இளம் பெண்ணும் அவளின் மகனும் தனியாக விளையாடிக் கொண்டிருக்க, தூரத்தில் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் மாட்டி அவர்களை நோக்கி நடந்து வந்தான் ஒருவன்.

அச் சித்திரத்தைப் பார்க்கும் போதே பரத் தம்மைத் தான் சித்திரமாக வரைந்துள்ளான் என்று புரிந்து கொண்ட துஷ்யந்த்தின் மனதில் என்னவென புரிந்து கொள்ள முடியாத ஒரு ஏக்கம் வந்து சென்றது.

அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாதவன், "வாவ் சேம்ப். சோ பியூட்டிஃபுல். உனக்கு ட்ராவிங் ரொம்ப பிடிக்குமா?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

"ஆமா அங்கிள். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விட நான் தான் சூப்பரா ட்ராவிங் பண்ணுவேன்னு எங்க டீச்சர் சொல்லுவாங்க." என உற்சாகமாகக் கூறிய பரத் மறு நொடியே முகம் வாடிப் போய், "ஐ மிஸ் மை ஃப்ரெண்ட்ஸ் அங்கிள். எனக்கும் அவங்கள போல திரும்ப ஸ்கூல் போக ஆசையா இருக்கு. பட் மம்மி நோ சொல்லிட்டாங்க." என்றான் வருத்தமாக.

பரத்தைத் தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்ட துஷ்யந்த், "மம்மி பரத்தோட நல்லதுக்கு தானே சொல்லி இருப்பாங்க. பரத் ரொம்ப இன்டலிஜென்ட் தானே. சோ மத்த பசங்க போல ப்ரீ ஸ்கூல் எல்லாம் போக வேண்டிய அவசியம் இல்ல. பரத்தோட ஹெல்த் ரெகவர் ஆனதும் டேரெக்டா ஸ்கூலுக்கே போகலாம்." என்கவும் பரத்தின் கண்கள் அகல விரிந்தன.

"நிஜமாவா சாக்லெட் அங்கிள்?" என ஆவலாகக் கேட்ட பரத்திடம், "ஆமா சேம்ப். பட் அதுக்கு பரத் ஹெல்த்தியா இருந்தா தானே மம்மி ஓக்கே சொல்லுவாங்க. ஹெல்த்தியா இருக்க என்ன பண்ணணும்? ஹெல்த்தி ஃபூட்ஸ் சாப்பிடணும். ட்ரீட்மென்ட்ஸ் எல்லாம் குட் பாய் போல எடுத்துக்கணும்." என்றான் துஷ்யந்த்.

"ட்ரீட்மென்ட்டா? வேணாம் அங்கிள். எனக்கு மெடிசின்ஸ் எல்லாம் பிடிக்கல. ஆப்பரேஷன் பண்ணா வலிக்குமாம். என் ஃப்ரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க." என்றான் பரத் பிடிவாதமாக.

துஷ்யந்த், "மெடிசின்ஸ் சாப்பிடலன்னா, ட்ரீட்மெண்ட் சரியா எடுத்துக்கலன்னா எப்படி பரத் க்யூர் ஆவீங்க? அப்போ உங்க ஃப்ரெண்ட்ஸ் போல ஸ்கூல் போக வேணாமா?" எனக் கேட்கவும், "போகணும் தான். பட் ட்ரீட்மென்ட் வேணாம் அங்கிள்." என சிணுங்கினான்.

"பரத் மெடிசின்ஸ், ட்ரீட்மென்ட் சரியா எடுத்துக்கலன்னா மம்மி எப்படி உங்கள ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாட விடுவாங்க? மம்மி பாவம் இல்லையா? பரத் க்யூர் ஆனா தானே மம்மி ஹேப்பியா இருப்பாங்க." என்ற துஷ்யந்த் அறிந்திருந்தான்‌ பரத் தன் தாயின் மீது வைத்துள்ள பாசம் பற்றி.

சில நிமிட யோசனைக்கு பின் மனமேயின்றி பரத் சம்மதமாகத் தலையாட்டவும், "குட் பாய்..." என்ற துஷ்யந்த் பரத்தின் இரு கன்னத்தில் மாறி மாறி முத்தமிட, சிறுவனின் முகத்தில் புன்னகை.

அதே நேரம் சகுந்தலாவும் மருந்துடன் வர, துஷ்யந்த்தைப் பார்த்து கண்களால் பரத்தைப் பற்றிக் கேட்க, தன் கண்களை மூடித் திறந்து அவளை ஆறுதல் படுத்தினான் துஷ்யந்த்.

மறுநாளே பரத்துக்கு கார்டியக் மானிட்டரைப் பொருத்தும் அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஏதேதோ கூறி பரத்தின் மனதை மாற்றி சம்மதிக்க வைத்த துஷ்யந்த்துக்கு சகுந்தலாவை சமாதானப்படுத்தும் வழி தான் தெரியவில்லை.

மாலை அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, அன்று காலை முதல் பரத்தை நொடி நேரம் கூட பிரியாது அவனை அணைத்தவாறே கவலையுடன் காணப்பட்டாள் சகுந்தலா.

"சகுந்தலா. நீயே இப்படி இருந்தா பரத் எப்படி தைரியமா இருப்பான்? உன்ன பார்த்து அவன் பயப்பட மாட்டானா?" எனக் கேட்டான் துஷ்யந்த் சற்று அதட்டலாக.

"துஷ்யந்த். பரத்துக்கு எதுவும் ஆகாது இல்லயா?" எனப் பதட்டமாகக் கேட்ட சகுந்தலாவை முறைத்த துஷ்யந்த், "இது ஜஸ்ட் ஒரு சின்ன சர்ஜரி தான் சகுந்தலா. அவ்வளவு நேரம் கூட எடுக்காது. இதுக்கே இப்படி பண்ணா நெக்ஸ்ட் ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளான்ட் பண்ணுறது எப்படி?" எனக் கேட்டான்.

எவ்வளவு சமாதானம் கூறியும் சகுந்தலாவின் மனம் திருப்தி அடையவில்லை.

ஒருவித பயத்துடனே காணப்பட்டாள். இறுதியில் துஷ்யந்த்தே சலிப்படைந்து சகுந்தலாவை அவள் போக்கில் விட்டு விட்டான்.

அறுவை சிகிச்சை ஆரம்பமானதும் எங்கும் நகராமல் ஒரு இடத்திலேயே அமர்ந்து தனக்கு தெரிந்த அனைத்து கடவுள்களிடமும் தன் மகனுக்காக வேண்டுதல் வைத்தாள் சகுந்தலா.

முதலில் பரத்திற்கு அனஸ்டீசியா கொடுத்து விட்டு அவனை மயக்கமடையச் செய்தனர்.

தோள்பட்டை எலும்புக்கு சற்று கீழே மானிட்டரை பொருத்துவதற்காக ஒரு அங்குல நீளமான கீறல் போட்டு அதனுள் மினி கார்டியக் மானிட்டரைப் பொருத்தினர்.

இதயத்தில் இருந்து வரும் சமிக்ஞைகள் உடனுக்குடன் இம் மானிட்டருக்கு அனுப்பப்படும்.

அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்ததும் பரத்தை வார்டுக்கு மாற்றினர்.

சகுந்தலா பரத் கண் விழிக்கும் வரை அவனுடனே இருந்தாள்.

சற்று நேரத்தில் கண் விழித்த பரத் ஒரே அழுகை. மருத்துவமனையையே இரண்டாக்கி விட்டான்.

அனஸ்டீசியா கொடுத்த பின்னர் நோயாளிகள் மூன்று விதமாக நடந்து கொள்வர்.

முதல் வகையினர் உறங்கிக் கொண்டே இருப்பர். இரண்டாவது வகையினர் வளவளத்துக்கொண்டு திரும்பத் திரும்ப ஒரே விடயத்தைக் கூறிக் கொண்டிருப்பர். மூன்றாவது வகையினர் எதற்கெடுத்தாலும் அழுவர். அழுது கொண்டே இருப்பர்.

பரத்தும் மூன்றாவது வகையினர் போல் அழுது கொண்டே இருந்தான்.

நல்ல வேளை தனியார் மருத்துவமனை என்பதால் தனியறை கிடைத்திருந்தது.

இல்லாவிடில் பரத் அழுத அழுகைக்கு மற்ற நோயாளிகள் என்னவோ ஏதோவென அச்சம் அடைந்திருப்பர்.

சகுந்தலா எவ்வளவோ பரத்தின் அழுகையை நிறுத்த முயன்றும் எதுவும் பயனளிக்கவில்லை. இறுதியில் தன் மகன் படும் வேதனையைப் பார்த்து அவளும் பரத்துடன் சேர்ந்து கண் கலங்கினாள்.

சகுந்தலாவை பார்வையால் அதட்டிய துஷ்யந்த் பரத்திடம் பேச்சுக் கொடுத்தவாறு அவனை சமாதானப்படுத்த முயல, எதற்கும் மசியவில்லை சிறுவன்.

துஷ்யந்த் நீட்டிய சாக்லெட்டையும் வாங்கிக்கொண்டு பரத் தன் அழுகையைத் தொடர, ஐயோ என்றானது துஷ்யந்த்திற்கு.

ஒரு கட்டத்தில் அழுது அழுதே களைத்துப் போய் உறங்கி விட்டான் பரத்.

அதன் பின் தான் துஷ்யந்த்தாலும் சகுந்தலாவாலும் நிம்மதியாக மூச்சு விட முடிந்தது.

பரத் உறங்கிய நேரம் பார்த்து அவனின் மானிட்டர் சரியாக வேலை செய்கிறதா எனப் பரிசோதித்தான் துஷ்யந்த்.

சகுந்தலா உறங்கும் மகனையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருக்க, "இனிமே இன்னும் கேர்ஃபுல்லா இருக்கணும் சகுந்தலா. பரத்துக்கு நல்ல ரெஸ்ட் தேவை. அதே நேரம் எனர்ஜிய ரொம்ப வேஸ்ட் பண்ணக் கூடாது. அவன் கூடவே இருந்து எல்லாம் பார்த்துக்கணும்." என்ற துஷ்யந்த்திடம் சரி எனத் தலையசைத்த சகுந்தலா பரத்திடமிருந்து பார்வையைத் திருப்பவே இல்லை.

சகுந்தலாவின் முகத்தில் இருந்த கவலை துஷ்யந்த்தின் மனதை வதைத்தது. அவளை அணைத்து ஆறுதலளிக்க பரபரத்த கைகளை பாக்கெட்டுக்குள் போட்டு அடக்கினான்.

தாய்க்கும் தனையனுக்கும் தனிமையைக் கொடுத்து விட்டு வெளியேறிய துஷ்யந்த் மற்ற நோயாளிகளைக் காணச் சென்றான்.

சில மணி நேரங்கள் பரத்தின் அருகேயே அமர்ந்திருந்த சகுந்தலாவிற்கு பசி வயிற்றைக் கிள்ளவும் பரத்தின் அருகே தாதி ஒருவரை காவலுக்கு வைத்து விட்டு கேன்டினுக்கு செல்ல வேண்டி வெளியே வந்தாள்.

அதே சமயம் அவளை விட்டு சற்றுத் தள்ளி ஒரு தாதியிடம் துஷ்யந்த் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தான்.

சகுந்தலாவைக் கவனிக்காத துஷ்யந்த் தாதியிடம் ஏதோ கட்டளைகள் இட்டுக் கொண்டிருக்க, சகுந்தலாவின் பார்வை துஷ்யந்த்தின் மீது நிலைத்திருந்தது.

'ஃபேர்வெல் அன்னைக்கு மட்டும் நான் கூப்பிட்டப்போ நீங்க வந்திருந்தீங்கன்னா இன்னைக்கு நம்ம கதையே வேற மாதிரி இருந்து இருக்கும்ல துஷ்யந்த்.' என்றாள் சகுந்தலா மனதுக்குள்.

சகுந்தலாவையும் மீறி அவளின் கண்கள் லேசாகக் கலங்கின.

_______________________________________________

வகுப்புத் தோழர்கள் அனைவரும் துஷ்யந்த்தையும் சகுந்தலாவையும் சேர்த்து வைத்து கேலி செய்ய, அதனை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் படிப்பே கண்ணாக இருந்த துஷ்யந்தின் குணம் சகுந்தலாவை வெகுவாகக் கவர்ந்தது.

பெண்களிடம் அவன் காட்டும் கண்ணியம் முதற்கொண்டு ஆசிரியர்களை மதிக்கும் விதம், சந்தேகம் கேட்டு வருபவர்களை நடத்தும் விதம் என துஷ்யந்த்தின் ஒவ்வொரு அசைவும் சகுந்தலாவை அவன் பக்கம் சாய்த்தது.

யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாக அவனை ரசிக்க ஆரம்பித்தாள் சகுந்தலா.

துஷ்யந்த்தின் ஒவ்வொரு அசைவும் அவளின் மனதில் கல் மேல் எழுதிய எழுத்துப் போல் பதிந்தது.

சில சமயங்களில் தன்னையே மறந்து அவனைப் பார்த்துக் கொண்டிருப்பாள்.

துஷ்யந்த் பார்க்கும் சமயம் சட்டென தலையைக் குனித்துக் கொள்வாள்.

வேறு ஆண்களாக இருப்பின் சகுந்தலாவின் பார்வையையும் அவளின் கள்ளத்தனத்தையும் வைத்து அவள் தன்னை விரும்புவதை இலகுவாகவே உணர்ந்திருப்பர்.

ஆனால் பெண்களுடன் அவ்வளவு பழகாத, பெற்றோரின் கட்டுப்பாட்டில் வளர்ந்து, படிப்பில் மட்டுமே கண்ணாக இருந்த துஷ்யந்த்தை சகுந்தலாவின் பார்வை எதையும் உணர்த்தவில்லை.

சகுந்தலாவின் மனதைப் பற்றி அவளைச் சுற்றி இருந்த யாருமே அறியாமல் போனது தான் விந்தை‌.

அவ்வளவு கமுக்கமாக தன் மனதை மறைத்தாள் சகுந்தலா.

_______________________________________________

"இங்க தனியா என்ன பண்ணிட்டு இருக்குற சகுந்தலா?" என்ற துஷ்யந்த்தின் குரலில் தன் கடந்த காலத்தை விட்டு வெளியே வந்த சகுந்தலாவுக்கு அவனின் கேள்வி புரியவே சில கணங்கள் எடுத்தது.

"அ...அது... அது... சாப்பிடலாம்னு..." எனத் தடுமாறினாள் சகுந்தலா.

தன் கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்த துஷ்யந்த், "ஓக்கே... எனக்கும் ஃப்ரீ தான் இப்போ. ரெண்டு பேரும் கேன்டினுக்கு போலாம்." என்று விட்டு முன்னே நடக்கவும் தலையாட்டி பொம்மையாய் அவனைப் பின் தொடர்ந்தாள் சகுந்தலா.

துஷ்யந்த்தே இருவருக்குமான உணவை எடுத்து வரச் செல்ல, சகுந்தலா சுற்றியும் வேடிக்கை பார்த்தாள்.

உணவு வரவும் இருவரும் அமைதியாக சாப்பிட, அம் மௌனத்தைக் கலைத்தான் துஷ்யந்த்.

"சகுந்தலா... கேட்குறேன்னு தப்பா நினைக்காதே. பரத் ரெகவர் ஆகணும்னா அவன் மென்டலியும் ஹெல்த்தியா ஸ்ட்ரெஸ் இல்லாம இருக்கணும். அது... அவன் மனசுல ஒரு அப்பாவுக்கான ஏக்கம் இருக்குறத நேத்து வந்தவன் என்னாலயே புரிஞ்சிக்க முடியுது. உனக்கு புரியுதா?" எனக் கேட்டான் துஷ்யந்த் தயக்கமாக.

அவனை வெட்டும் பார்வை பார்த்த சகுந்தலா, "பரத்துக்கு அப்பா, அம்மா, குடும்பம் எல்லாம் நான் மட்டும் தான். வேற எந்தக் கொம்பனும் என் பையனுக்கு அவசியம் இல்ல." என்றாள் ஆவேசத்துடன்.

"பெரியவங்களுக்கு இடைல இருக்குற பிரச்சினையால அந்தச் சின்னப் பையன் எதுக்கு அவஸ்தைப்படணும்? அட்லீஸ்ட் அவனோட அப்பா நல்லவனோ, கெட்டவனோ அதைப் பத்தி தெரிஞ்சிக்கிற முழு உரிமை பரத்துக்கு இருக்கு." என அழுத்தமாகக் கூறியவனுக்கு பரத்தின் ஏக்கத்தை போக்க முடிந்தால் என்ற எண்ணம் மட்டுமே அச் சமயம் இருந்தது.

அதனால் சகுந்தலாவின் பக்கம் யோசிக்கத் தவறினான்.

ஒரு கசந்த புன்னகையை உதிர்த்த சகுந்தலா, "புருஷனோட வர சின்ன சண்டைக்கு புருஷனே வேணாம்னு கையில குழந்தையோட வாழாவெட்டியா வரவன்னு என்னை நினைக்கிறீங்களா? எதுக்கு அந்தக் கேடு கெட்டவன பத்தி என் பையன் தெரிஞ்சிக்கணும்? அப்படியே நான் அந்த ஆள பத்தி சொன்னா பரத் எ..என்னை விட்டுட்டு அவன் கூட போயிட்டா?" எனக் கேட்டவளுக்கு குரல் நடுங்கியது.

"அப்படி இல்ல சகுந்தலா. சரி இதை சொல்லு. இப்போ நீ பரத் கிட்ட உண்மைய மறைக்கலாம். ஆனா அவன் பெரியவனானதுக்கு அப்புறம் சுயமா அவன் அப்பாவ பத்தி தெரிஞ்சிக்கிட்டு இத்தனை வருஷமா நீ அவன் அப்பா கிட்ட இருந்து அவன பிரிச்சி வெச்சிட்டதா நினைச்சி அப்போ உன்ன விட்டு போய்ட்டா என்ன பண்ணுவ?" எனக் கேட்டான் துஷ்யந்த்.

துஷ்யந்த்தின் கேள்வியில் அப்பட்டமாக முகத்தில் அதிர்ச்சியை வெளிப்படுத்திய சகுந்தலாவின் கண்கள் கண்ணீரை சிந்தத் தயாராக இருந்தன.

தன் மனம் கவர்ந்தவளின் கண்ணீர் துஷ்யந்த்தின் மனதை வாட்டினாலும் பரத்தின் நலம் தான் அப்போது அவனுக்கு முக்கியமாகப் பட்டது.

"சகுந்தலா... உன் எக்ஸ் ஹஸ்பன்ட் மோசமானவனா இருந்தா பரத்துக்கு புரியும் படி அவனுக்கு உண்மைய எடுத்து சொல்லு. அதை விட்டுட்டு அவன திட்டியும் கண்டிச்சும் உண்மைய மறைக்க பார்த்தா பரத்துக்கு அவன் அப்பாவ பத்தி எப்படியாவது தெரிஞ்சிக்க வேணும்ங்குற வைராக்கியம் வரும். அது உங்க ரெண்டு பேரோட ரிலேஷன்ஷிப்புக்கும் நல்லதில்ல. உண்மை தெரிஞ்சா கண்டிப்பா அவன் உன்ன புரிஞ்சிப்பான். பரத் சின்ன வயசுல இருந்து நீ தான் தனியாளா அவன வளர்க்குற. இவ்வளவு மோசமான அப்பனுக்காக நிச்சயம் அவன் உன்ன விட்டு கொடுக்க மாட்டான்." என ஆறுதல் அளித்தான் துஷ்யந்த்.

சில நொடிகள் மௌனம் காத்த சகுந்தலா தன்னை சமன் செய்து கொண்டு, "அ...அவன் என்...னை ரொம்பவே டார்ச்சர் பண்ணான். பிஸிக்கலி, மென்டலி அபியூஸ் பண்ணான்." என்றவளுக்கு அச் சம்பவங்களை நினைக்கும் போதே உடல் நடுங்கியது.

"ஹே சகுந்தலா... கூல் கூல்... பயப்படாதே... நான் இருக்கேன் உன் கூட. உனக்கு சொல்லப் பிடிக்கலன்னா விடு. இட்ஸ் ஓக்கே." என்ற சகுந்தலா அவசரமாக தண்ணீரை எடுத்து அவளுக்கு குடிக்கக் கொடுத்தான்.

இவ்வளவு நேரமும் பரத்திடம் உண்மையைக் கூறச் சொல்லி கட்டாயப்படுத்தியவனுக்கு சகுந்தலாவின் நடவடிக்கையைப் பார்த்ததும் எங்கு தான் அவளைப் புரிந்து கொள்ளாமல் பேசி விட்டோமோ என வருத்தப்பட்டான்.

துஷ்யந்த் தந்த தண்ணீரைக் குடித்து தன்னை சமன் செய்து கொண்ட சகுந்தலா, "அவன் பெயர் ரிஷிகேஷ். கல்யாணம் ஆன நாள்ல இருந்து ஒவ்வொரு நொடியும் எனக்கு நரக வேதனைய மட்டும் தான் காட்டினான். பிஸிக்கலா, மென்ட்டலா என்னை ரொம்ப டார்ச்சர் பண்ணான். பல முறை என் சம்மதமே இல்லாம எ...என்னை ரே....ப் பண்ணான்." என சகுந்தலா குரல் நடுங்கக் கூற, துஷ்யந்த்தின் நரம்புகள் ஆத்திரத்தில் முறுக்கேறின.

தன் கரத்தை இறுக்கிய துஷ்யந்த்துக்கு அந் நொடியே சென்று ரிஷிகேஷை கொன்று போடும் வெறி வந்தது.

சகுந்தலா யாரைப் பற்றி இவ்வளவு அச்சத்துடன் பேசிக் கொண்டிருக்கிறாளோ அவனே சகுந்தலாவைத் தேடி லண்டனில் இருந்து விமானத்தில் வந்து கொண்டிருந்தான்.

_______________________________________________

ப்ளஸ் டூ முடிந்ததும் சிறந்த மதிப்பெண்களை எடுத்து துஷ்யந்த் மருத்துவ கல்லூரியில் சேர, ஓரளவு நல்ல மதிப்பெண்களை எடுத்த சகுந்தலா ஒரு கலைக் கல்லூரியில் சேர்ந்தாள்.

துஷ்யந்த்தை விட்டுப் பிரிந்தாலும் மனம் முழுவதும் நிறைந்திருந்த அவன் மீதான காதல் மட்டும் அப்படியே இருந்தது.

ஆனால் தன் நிறைவேறாத காதலுக்காக பெற்றோரைக் கஷ்டப்படுத்த விரும்பாது படிப்பு முடிந்ததும் பெற்றோர் அவளுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்க, அவர்களை மறுத்துப் பேசவில்லை அவள்.

இருந்தும் ஏதாவது அதிசயம் நடந்து பெற்றோர் பார்க்கும் மணாளன் துஷ்யந்த்தாக இருக்க மாட்டானா என்ற ஏக்கமும் வந்து சென்றது.

ஒருநாள் தன்னைப் பெண் பார்க்க வருவதாக அவளின் பெற்றோர் கூறவும் மனதைக் கல்லாக்கிக்கொண்டு தயாரானாள் சகுந்தலா.

சொன்னபடியே தன் பெற்றோருடன் பெண் பார்க்க வந்த ரிஷிகேஷிற்கு சகுந்தலாவின் அழகு ஆளை மயக்க, உடனே தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.

சகுந்தலாவின் பெற்றோருக்கும் கை நிறைய லட்சங்களில் சம்பாதிக்கும் வரன் கிடைக்கவும் மறுப்பதற்கு மனமில்லை.

சகுந்தலாவின் விருப்பத்தைக் கேட்க, பெற்றோருக்கு ஏற்கனவே சம்மதம் என்பதால் அவர்கள் ஆசைப்பட்டதாவது நடக்கட்டும் என்று தன் காதலை மனதுக்குள் பூட்டி வைத்து விட்டு திருமணத்துக்கு சம்மதித்தாள்.

இனிமேல் தன் காதல் நிச்சயம் கை கூடப் போவதில்லை என்று முடிவான பின் மனதில் ஒருவனை எண்ணி இன்னொருவருடன் வாழும் கேடு கெட்ட வாழ்வை விரும்பாது தன் எதிர்க்காலக் கணவனுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று துஷ்யந்த் மீதான காதலுக்கு மனதுக்குள்ளேயே சமாதி கட்டினாள்.

சரியாக ஒரு மாதத்தில் திருமணத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.

சகுந்தலாவின் பெற்றோருக்கே எதற்காக இவ்வளவு அவசரம் என்ற கேள்வி எழ, மணமகனின் ஜாதகத்தில் ஒரு மாதத்திற்குள் திருமணத்தை நடத்த வேண்டும் என்றுள்ளதாக ரிஷிகேஷின் பெற்றோர் கூறினர்.

அதன் பின்னர் திருமண வேலைகள் துரிதமாக நடைபெற, சகுந்தலாவின் தோழி ஒருத்தி அவளை சந்திக்க வந்தாள்.
 

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
29
63
Kumbakonam
அருமையான பதிவு. ஐயோ இந்த ரிஷிகேஷ் வந்து என்ன கலவரம் பண்ண போறானோ
 
  • Love
Reactions: MK1

MK1

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 22, 2023
85
67
18
Thanavur
அருமையான பதிவு. ஐயோ இந்த ரிஷிகேஷ் வந்து என்ன கலவரம் பண்ண போறானோ
நன்றி சகி 🤗