அத்தியாயம் 1
வெள்ளை நிற மார்பில் தரை, வெள்ளை நிற சுவர், வெள்ளை நிற திரைசீலை என்று எப்பக்கம் திரும்பினாலும் மனதை அமைதியடைய செய்யும் வெண்மையில் முங்கியது போலிருந்தது அந்த அறை.
ஆனால், அந்த அறையின் நடுவே இருந்த நீள்சாய்விருக்கையில் சாய்ந்தபடி அரைக்கண்களை திறந்து, அவள் முன்னிருந்த தொலைக்காட்சியில் ஏதோ ஒன்றை ஓடச் செய்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ மன அமைதி எட்டா தூரத்தில் இருந்தது என்று தான் கூற வேண்டும்.
அப்படி அவளுக்கு என்ன பிரச்சனை?
வறுமையில் வாடுபவளா?
இல்லையே, இன்னும் நான்கு தலைமுறைக்கு வேலையே செய்யாமல் சுகபோகமாக வாழும் அளவுக்கு செல்வம் இருந்ததே அவளிடம். போக, அந்த மாநிலத்தை ஆளும் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் வாசுதேவனின் ஒரே புதல்வி அவள். அவளின் செல்வநிலையையும் அதிகாரத்தையும் இதற்கு மேல் விவரிக்க வேண்டுமா என்ன?
பிறகு, காதல் தோல்வியால் துவள்கிறாளா?
காதலித்தால் தானே அது தோல்வியில் முடிவதற்கான சந்தர்ப்பம் இருக்கும். அது என்னவோ, இதுவரை அவளின் இதயம் யாரைக் கண்டும் துடிக்கவில்லை.
அவளின் மனம் அமைதியின்றி தவிக்க வேறு என்ன தான் காரணம்?
இந்த அமைதியின்மை இன்று, நேற்று வந்ததல்ல, நினைவு தெரிந்த நாளிலிருந்து அவளுடன் ஒட்டிக் கொண்டது. காரணம், மனம் விட்டு பேச அவளுக்கென்று யாருமே இல்லை!
பிறந்தபோதே தாயை பறி கொடுத்தவள். அரசியல் அவளின் தந்தையையும் அவளிடமிருந்து தூர நிறுத்தி வைக்க, அவளின் வளர்ப்பு வேலையாட்களின் பணியானது.
அதற்காக தந்தைக்கு மகளின் மீது பாசமில்லை என்றெல்லாம் இல்லை. அவரின் பாசத்தின் அளவு தான் அவளின் வாழ்வையே இனி மாற்றவும் போகிறது. ஆனால், பாசத்தை நேரிடையாக வெளிப்படுத்த அவருக்கு நேரம் தான் இல்லை.
ஆக, தங்க கூண்டுக்குள் தனியே கிடக்கும் கிளி போல தான் இருந்தது நம் நாயகியின் நிலையும்!
ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், அவளே கூண்டுக்குள் அடைபட்டு இருக்கிறாள் என்பது தான். வெளியே சென்றாலே, எந்நேரமும் காவலாளிகள் புடைசூழ வலம் வருவர். இதில், எங்கிருந்து அவள் மகிழ்ச்சியாக நகர்வலம் வருவதாம்?
அதனாலேயே பெரும்பாலான ஓய்வு நேரங்களை, இதோ இந்த வெண்ணிற அறையிலேயே கழித்து விடுவாள்.
இதோ, இப்போது கூட அவளின் தந்தை ஏதோ அலுவல் விஷயமாக காலையில் வெளியூர் சென்று விட்டார் என்ற தகவல் மாலை அவள் வீடு திரும்பும்போது தான் வேலையாள் மூலமாக தான் தெரிய வந்தது.
பழகிப் போன ஒன்று என்றாலும், ‘இந்த அப்பாக்கு ஃபோன் பண்ணி சொல்லக்கூட நேரமில்லையா?’ என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை அவளால்.
அந்த நினைப்பு கொடுத்த ஏக்கத்திலும், அது உண்டாக்கிய வீம்பிலும், நள்ளிரவான போதும், விழிகள் உறங்க சொல்லி கெஞ்சிய போதும், நித்திரா தேவியை தள்ளி நிற்க வைத்து விட்டு, ஸ்பீக்கர் ஒலியை சத்தம் கூட்டி வைத்து விட்டு, அந்த வெண்ணிற நீள்சாய்விருக்கையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டாள்.
அது ஒலிக்காப்புடைய அறை என்பதால் அந்த சத்தத்திலிருந்து மற்றவர்கள் உறக்கம் தப்பித்தது.
அவள் கை போன போக்கில் சேனல்களை மாற்ற, அப்போது கை தவறி அந்த செய்தி சேனலில் வந்து நின்றது.
சரியாக அதே சமயம், ஆடவன் ஒருவனின் பக்கவாட்டு தோற்றம் காட்டப்பட்டு, அவனைப் பற்றி சூடான செய்தி ஒன்று ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தது.
அவன் ‘காண்டீபன்’!
அப்படி தான் தன்னை வெளியுலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்டான். அவன் உண்மை பெயர் எதுவென்று யாருக்கும் தெரியாது. பெயரே தெரியாத போது அவனையா தெரிந்திருக்க போகிறது?
செய்தியில் காட்டப்பட்ட புகைப்படம் கூட அவனை தூரத்திலிருந்து பார்த்த நிழலுருவத்தை கொண்டு சித்தரிக்கப்பட்டதே ஆகும்.
சுடச்சுட செய்தியாக வரும் அளவுக்கு காண்டீபன் என்ன செய்து விட்டான்? ஒருவேளை, அவன் பிரபலமானவனா?
ஆம், பிரபலம் தான்!
ஒன்றரை வருடங்களாக காவல்துறையின் கண்களில் மண்ணை தூவி விட்டு சில சமூக விரோத செயல்களை முகமூடிக்கு பின்னே மறைந்து கொண்டு செய்யும் ‘பிரபலம்’ தான் காண்டீபன்.
அவனின் அடையாளங்களில் ஒன்று முகமூடி என்றால் மற்றொன்று அவன் கையில் இருக்கும் வில்லும், இரு தொடைகளிலும் தொங்க விடப்பட்டிருக்கும் அம்பறாத்தூணிகளும் ஆகும்.
நம் நாயகியின் கவனத்தையும் அப்படி தான் கவர்ந்திருந்தான் கள்வன்!
நம் நாயகியின் கனவு, ஆசை, லட்சியம் அனைத்துமே அந்த வில்லும் அம்பும் தான்.
“யாதவி வாசுதேவன்” என்ற அவளின் பெயர் எட்டுத்திக்கும் ஒலிக்க, தேசிய கீதம் முழங்க, பாரத நாட்டின் கொடியை முதுகிலும், தங்கப்பதக்கத்தை கழுத்திலும் சுமந்து, பெருமிதத்துடன் அவள் நிற்கும் காட்சி இப்போதும் கனவாக கண்முன் வந்து போனது.
அத்தனை பிடித்தம் வில்வித்தையில்!
பிடித்தம் என்னும் நிலை முற்றி பைத்தியமாகும் நிலையின் விளிம்பில் இருக்கிறாள் என்று தான் கூற வேண்டும்.
ஆம், பைத்தியமே!
எங்கும் வில், எதிலும் வில் என்பது போல, அவள் அறை மொத்தமும் வில்லும் அம்பும் தான் தென்படும். அவள் அமர்ந்திருக்கும் நீள்சாய்விருக்கை முதல், படுக்கும் படுக்கை வரை, அனைத்தும் வில்லை போன்ற அமைப்பிலேயே இருக்கும்.
‘வில்’ போன்ற புருவம் மட்டுமல்ல, விட்டால் வீட்டைக் கூட வில் போன்ற அமைப்பில் மாற்றி கட்ட உத்தரவிடுவாள் போலும்!
இவள் வயது பெண்கள் கொரியன் சீரியல்களை பார்த்து பைத்தியமானால், இவள் அவர்களின் வில்வித்தை வீரர்களை கண்டு பைத்தியமாகி சுற்றுவாள்.
அத்தகையவளுக்கு காண்டீபனின் செய்தி சுவாரசியத்தை கொடுக்காமல் இருந்தாள் தான் ஆச்சரியம்.
இப்போது கூட செய்தியில் காட்டப்பட்ட படத்தை அரைக்கண்ணில் பார்த்தவள், “வாவ், எவ்ளோ அழகா இருக்கு இந்த வில்லு. இவனே டிசைன் பண்ணுவானோ?” என்று அரைகுறை உறக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.
பின்னர், பக்கவாட்டு சுவரில் தன் முழுநீள படத்தை பார்த்தவள், “ஹ்ம்ம், எனக்கும் இப்படி வில்லும் அம்பும் வச்சு கெத்தா போஸ் குடுக்க ஆசையா தான் இருக்கு. ஆனா, நான் விடுற அம்பு மட்டும் புல்ஸ்ஐ (இலக்கின் நடுப்பகுதி) பக்கத்துல கூட போக மாட்டிங்குதே! நானும் அகாடெமி மாத்திட்டேன், டிரைனர் மாத்திட்டேன். ஆனா, டிரைன் மட்டும் ஆகவே மாட்டிங்குறேன். இப்படியே போனா, என் கனவு, லட்சியம், ஆசை எல்லாம் என்னவாகுறது. நோ, இனி ஒரு செகண்ட் கூட வேஸ்ட் பண்ணக்கூடாது. நேரா போறோம், புல்ஸ்ஐல அம்பை சொருகுறோம்.” என்று சபதம் ஏற்றவள், கீழே சுருண்டிருந்த மிதியடியில் எசகுபிசகாக காலை வைத்து தடுமாறி விழ, முன் நெற்றியில் காயம் ஏற்பட்டது தான் மிச்சம்.
“அவுச்…” என்று வலியில் முனகியவாறே நிமிர, அங்கு பால்கனி கதவுக்கு முன் முகத்தை முகமூடி கொண்டு மறைத்தபடி கையில் வில்லுடன் நின்றிருந்தான் காண்டீபன்.
அவனையும் தொலைக்காட்சியில் தெரிந்த அவன் புகைப்படத்தையும் மாறி மாறி பார்த்தவள், “அடிப்பட்டதுல மூளை குழம்பி, எல்லாம் ரெண்டு ரெண்டா தெரிய ஆரம்பிச்சுடுச்சோ?” என்று குழம்பியவள், “இல்லையே, சரகடிச்சா தான இந்த சிம்டம்ஸ் இருக்கும்னு கேள்விப்பட்டுருக்கேன்.” என்ற தானே கேள்வி தானே பதிலாக சமைந்திருந்தவளை கண்டு கொள்ளாத காண்டீபனோ, அந்த அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தான்.
அதில் சற்று தெளிந்தவளுக்கு பதற்றத்தில் அரைத்தூக்கமும் பறந்து விட்டிருக்க, “ஹே ஹலோ, யாரு நீ? எப்படி உள்ள வந்த?” என்று வினவியிருந்தாள்.
அவளின் கேள்விகளுக்கு பதிலாக எதிரிலிருந்தவனின் விழிகள் முதலில் தொலைக்காட்சியிலும் பின்னர், பால்கனி கதவிலும் பதிந்து, மீண்டும் அவளை பார்த்தன.
“க்கும், பெரிய ஆர்ட்டிஸ்ட் இவரு! கண்ணாலேயே பதில் சொல்வாராம்!” என்று சற்றும் பயமின்றி முணுமுணுப்பவளை, இம்முறை அந்த கண்கள் ஆழ்ந்து அளவெடுத்தன.
“மிஸ்டர். காண்டு, எத்தனை முறை கூப்பிடுறது? எதுக்கு இங்க வந்துருக்கீங்க? கண்ணால சைகை செய்யாம இதுக்காவது வாயை திறந்து பதில் சொல்லுங்க.” என்று மிரட்டினாள் அவள்.
அதில், அவனின் ஆராய்ச்சி பார்வை சற்று மாறி கோபத்தை தத்தெடுக்க, “ஹலோ, நியாயமா பார்த்தா நான் தான் கோபப்படனும். நானும், பாவமே நம்ம இனமாச்சேன்னு சாதாரணமா பேசிட்டு இருக்கேன். இதுவே, நான் என் அப்பாக்கு கால் பண்ணா என்னவாகும் தெரியுமா?” என்று வீரப்புடன் வினவினாள் பாவை.
அவனோ கைகளை மார்பு மீது கட்டியபடி, “கால் பண்ணு. என்னவாகுதுன்னு பார்ப்போம்.” என்று கூறினான்.
‘ஹையோ, என்ன இது உடனே கால் பண்ண சொல்றான்! இப்போ கால் பண்ணா, அந்த கூகிள் அங்கிள் தான அட்டெண்ட் பண்ணுவாரு. இப்போ இங்க நடந்ததை சொன்னா கூட ஒருத்தரும் நம்ப மாட்டாங்களே!’ என்று மனதோடு புலம்பினாள் அவள்.
காரணம், முன்னர் பலமுறை பொய்யாக தன்னை யாரோ கடத்தி விட்டார்கள் என்று அழைப்பு விடுத்து அதிரச் செய்திருந்தாளே. அதிலிருந்து தான் வெளியே எங்கு சென்றாலும், ஒரு பட்டாளமும் அவளின் பாதுகாப்புக்காக உடன் வரும்.
அதற்கு, ‘சொந்த செலவுல சூனியம் வச்சுக்கிட்டேனே!’ என்று அவள் புலம்பியது எல்லாம் தனிக்கதை!
“காத்துல கால் பண்றியா?” என்று அவன் நக்கலாக வினவ, பேச்சை மாற்றும் பொருட்டு, “அட, காண்டு சார், உங்க வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கே.” என்றாள்.
அது அவனது குரல் அல்ல, கணினியால் உருவாக்கப்பட்ட குரல் என்று அதை கூறிய பின் தான் உணர்ந்தாள்.
ஒரு சமாளிப்பு புன்னகையை தந்தவள், “டெக்னாலஜில அப்டேட்டடா இருக்கீங்களே.” என்று கூறி, அவனை திசை திருப்ப முயற்சித்தாள்.
அவன் சிக்கினால் தானே!
ஒருமுறை அறையை சுற்றி வந்தவன், ஏதோ யோசித்து பின் அவளை நோக்கினான்.
அவள் செயல்களை எல்லாம் உன்னிப்பாக கவனித்தவள், திடீரென்று அவன் பார்வை அவள் புறம் திரும்பவும், “சார் சார், என்னை கடத்தி உங்க நேரத்தையும் எனர்ஜியையும் எதுக்கு வேஸ்ட் பண்றீங்க? உங்களுக்கு எவ்ளோ பணம் வேணும்னு சொல்லுங்க. அதை இப்போவே வாங்கிட்டு போங்க.” என்றாள்.
அத்தனை நேரம் சற்று இலகுவாக இருந்தான் என்று கூற வேண்டும் போலும், ஏனெனில், என்னதான் அவன் முக இறுக்கம் முகமூடியின் மறைவில் தெரியவில்லை என்றாலும், எஃகின் உறுதியோடு ஒப்பிடும் வண்ணம் அவன் தேகம் இறுகிப் போனதை யாதவியால் நன்கு கண்டுகொள்ள முடிந்தது.
அவள் என்ன பேசினாள், அடுத்து என்ன பேசுவது என்று யோசிக்கும் முன், “நான் ஒன்னும் உன்கிட்ட பிச்சை கேட்டு வரல.” என்று கூறியவன், சட்டென்று தன் கால்சராய் பையிலிருந்து ஒரு குப்பியை எடுத்து, மின்னல் வேகத்தில் அவனுக்காக அவனே செய்து கொண்ட அம்பில் இணைத்து, தன்முன் என்னவென்று புரியாமல் குழம்பி நின்றவளின் கரத்தில் குத்த, வலியில் லேசாக முனகியபடி தள்ளாடி கீழே சரிந்தாள்.
விழும் அவளை அவன் தாங்கிப் பிடிக்கும் காட்சி எல்லாம் இப்போது இல்லை!
ஆனால், அந்த கடமையை கீழே இருந்த விரிப்பு எடுத்துக் கொண்டது.
“ஹே காண்டு… என்னை பார்த்து உனக்கு என்ன காண்டு?” என்று அரை மயக்கத்தில் அவள் உளறிக் கொண்டிருக்க, அவளைக் கண்டு கொள்ளாமல், அந்த இடத்தில் தான் வந்ததற்கு ஏதாவது தடயம் இருக்கிறதா என்று அவன் கழுகு கண் கொண்டு தேடிப் பார்த்தான்.
அவனின் தேடுதல் வேட்டை முடிந்ததும், இன்னும் முழுதாக மயங்காமல் ஏதேதோ முணுமுணுப்பவளை கண்டவன், நடுவிரல் கொண்டு புருவத்தை மறைத்திருக்கும் முகமூடியை வருடியவன், ஒரு பெருமூச்சுடன், கீழே குனிந்து அவளைக் கைகளில் அள்ளிக் கொண்டான்.
“ஹே என்னை விடு மேன். நீ ஒரு தைரியமான ஆர்ச்சரா இருந்தா, என்கிட்ட மோதி பாரு யா. நான் யாரு தெரியுமா? வருங்காலத்துல இந்தியாக்கு கோல்ட் மெடல் வாங்கி குடுக்கப் போற தங்கமங்கை நான். வா வா என்னோட ஒண்டிக்கு ஒண்டி வா.” என்று புலம்ப, அவனோ பக்கவாட்டிலிருந்த அவள் ஆளுயர புகைப்படத்தை பார்த்தான்.
கையில் ‘ரீகர்வ்’ வகை வில், இடுப்பில் தொங்கும் அம்பறாத்தூணி, ஒற்றை கண்ணை மறைக்கும் பேட்ச், கையில் பாதுக்கப்புக்காக கார்ட் என்று அனைத்து உபகரணங்களையும் அணிந்தபடி இருக்கும் யாதவியின் புகைப்படம் அது.
மீண்டும் ஒரு பெருமூச்சை விட்டவன், அதற்கு மேல் அவள் உளறலை கேட்க முடியாமல் தலையில் கொட்ட, உள்ளே சென்ற மருந்தின் வீரியமோ, இல்லை அவனின் நங்கென்று கொட்டோ, அவளை முழு மயக்கத்திற்கு அழைத்துச் சென்றிருந்தது.
பால்கனிக்கு வந்தவன், கீழே பார்க்க, அங்கு அவனின் கைங்கர்யத்தில் மயங்கியிருந்த காவலாளிகளை பார்த்து, அவர்கள் மயக்கத்தில் தான் இருக்கின்றனர் என்பதை உறுதி செய்து கொண்டான்.
ஆம், வீட்டிற்குள் நுழையும் முன், தன் மின்னல் வேக அம்புகளின் மூலம், காவலுக்கு இருந்த அனைவரையும் சத்தமே இல்லாமல் மயக்கத்தில் ஆழ்த்தி விட்டு தான் பெண்ணின் அறைக்குள்ளே நுழைந்தான்.
வரும்போது, வெளி சுவற்றுக்கும் பால்கனி சுவற்றுக்கும் இடையே அம்பின் துணை கொண்டு, தான் கட்டிய கயிற்றின் உறுதியை பரிசோதித்தவன், எதிர்முனையில் இருந்தவனுக்கு சைகை செய்தான்.
பின், தான் கொண்டு வந்த, மாற்றி வடிவமைக்கப்பட்டிருந்த போர்வை போன்றிருந்த துணியைக் கொண்டு அவளை சுற்றியவன், கனமான கொக்கியின் உதவி கொண்டு போர்வை சுற்றப்பட்டவளை கயிற்றில் மாட்டியவன், மிதவேகத்தில் தள்ளி விட்டான்.
மேலிருந்து கீழ் என சாய்வாக செல்வதால், மயங்கியிருந்தவள் சிரமமே இல்லாமல் மறுமுனையை அடைந்து விட, அவள் பின்னே அவனும் அதே கயிற்றில் சறுக்கினான்.
பின், கயிற்றை மட்டும் தன்னுடன் எடுத்துக் கொள்ள, அவனுடன் வந்தவன், “சார், கயிறை மாட்ட பால்கனிக்கு விட்ட அம்பு அங்கேயே இருக்கே?” என்று வினவினான்.
ஒரு நக்கல் புன்னகையுடன், “யாரு கடத்தியிருக்கான்னு தெரிய வேண்டாமா?” என்றபடி கீழே கிடத்தவளை துண்டு போல தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்.
*****
யாதவி அவளின் அறையில் இல்லை என்ற விஷயம் மறுநாள் தான் வேலையாட்களுக்கு தெரிய வந்தது. வெளியே மயங்கிக் கிடந்த காவலாளிகளும் அப்போது தான் கண் விழித்தனர்.
உடனே, தகவல் வாசுதேவனுக்கு தெரிய வர, வந்ததும் அனைவரையும் திட்டி தீர்த்தார் அந்த அமைச்சர்.
“மினிஸ்டர் வீடு, புகுந்து மினிஸ்டர் பொண்ணையே தூக்கிட்டு போயிருக்கான். வெளிய தெரிஞ்சா மானம் போகும்.” என்று கத்திய வாசுதேவன், அங்கு வந்த ஆணையர் மதுசூதனனிடம், “சிசிடிவி ஃபூட்டேஜ் எல்லாம் செக் பண்ணுங்க. கடத்துனவன் யாருன்னு எனக்கு இப்போவே தெரிஞ்சாகணும்.” என்றார்.
“சிசிடிவி எல்லாம் செக் பண்ண வேண்டிய அவசியமே இல்ல சார்.” என்ற மதுசூதனன், தன் கையிலிருந்த அம்பை காட்டி, “உங்க பொண்ணோட பால்கனில இருந்துச்சு. உங்க பொண்ணை கடத்துனவன் பெயர் காண்டீபன்.” என்றார்.
தொடரும்...
வணக்கம் மக்களே. கதையின் முதல் அத்தியாயம் எப்படி இருந்ததுன்னு உங்க கருத்துகளை சொல்லுங்க.
Kkp4