• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

14. இதயம் பகிர்ந்திட வா

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
684
நீண்ட அமைதியின் பின்னர் கோவிலை அடைந்தவர்கள், காரிலிருந்து இறங்கவில்லை.
"தம்பி...." என கையினை நீட்டினார் வயது முதிர்ந்த பெண் ஒருவர்.

கண்டு கொள்ளவில்லை அவன். அவனது அனுபவத்தில் இப்படி எத்தனை பேரைப் பார்த்திருப்பான். தர்மம் என்ற பெயரில் மற்றவர்களை மடையன் என நினைக்கும் கூட்டத்தை.


"அம்மா நீங்களாவாது உதவுங்கம்மா... நல்ல சாப்பாடு சப்பிட்டு மூணு நாள் ஆச்சு." அவன் கண்டு கொள்ளவில்லை என்றதும், அவளிடம் இரந்தவர் முகமே பசியில் வாடிப் போயிருந்தது. அவரை பார்த்ததும் பிரியாவுக்கு பாவமாகிப் போக,


"இருங்கம்மா..." என்றவாறு கைபையினை திறந்தவள் கையினைத் தடுத்தவன்,

"இப்போ என்ன செய்ய போற...?" என்றான் அழுத்தமான குரலில்.

"பார்த்தா என்ன மாதிரி இருக்கு...?" அவனை நோக்கி கையினை அவர் நீட்டும் போது, சற்றும் இரக்கம் காட்டாது முகத்தை திருப்பிக் கொண்டு சொன்றவன் செயலை கவனித்தவளுக்கு, தன்னையும் தர்மம் செய்ய விடாது தடுப்பது எரிச்சலை கொடுத்தது. அதனால் தான் எரிந்து விழுந்தாள்.


"கண்ணெல்லாம் எனக்கு நல்லாத் தான் தெரியுது. ஆனா எதுவும் போடாத." என்றான்.

"எதுக்கு போடக்கூடாது. தர்மம் போடுறதும் போடாததும் என் விருப்பம். என் பணத்தை குடுக்கிறதுக்கு யாரோட அனுமதியும் எனக்கு தேவையில்லை." வீணாக வாயினை அவனிடம் விடக்கூடாது என்று தான் அவள் நினைக்கிறாள். ஆனால் அதற்கு அவனும் விட வேண்டுமே.


"தாயே உன் பணம்... தாராளமா நீ குடு! நான் தடுக்கவும் மாட்டேன். ஆனா பாத்திரம் அறிந்து பிச்சை இடுன்னு ஒரு முதுமொழி இருக்கு தெரியுமா...?" முண்டிய எரிச்சலை மறைத்தவனாய் நையாண்டி போல் கேட்டான்.

"ஐயோ சாரி... அம்மாட்ட பாத்திரம் இல்லை.. வெறும் கை தான் இருக்கு." அவனுக்கு சளைத்து விடவில்லை அவள்.

"காமடி.. ஆனா சிரிப்பு வரல..." உதடு பிரிக்காது வேண்டா வெறுப்பாக வார்த்தைகளை வெளிப்படுத்தும் கலையினை அவனிடம் தான் கற்க வேண்டும். அவள் மேலான பார்வையினை விடுத்து முதியவரிடம் தாவியவன்,

"ஏம்மா தர்மம் கேக்கிறீங்க... ஏன் உங்களுக்கு யாருமே இல்லையா...?" என்றான் எதையோ தெரிந்து கொள்ளும் நோக்கில்.

"இருந்தா நான் ஏன் சாமி பிச்சை எடுக்கப் போறேன். எனக்குன்னு சொல்லிக்க ஒரே ஒரு அக்கா இருந்தா.. அவளும் கல்லாயணம் செய்து கண் காணாத தேசமா போயிட்டா... இப்போ இருக்கக் கூட இடமில்லாம தனிமரமா இருக்கிறேன்." தொண்டைக் குழியில் பெரும் பள்ளம் விழும் அளவிற்கு மூச்சு விடக்கூட முடியாது பேசியவரை காண்கையில் பெரும் கவலையாகிப் போனது.

"ஏன் உங்க கணவர் எங்க.?" என்றான் அடுத்த திருட்டு தனத்தை பிடிப்பதற்கு.

"நான் கல்யாணமே செய்துக்கல சாமி... கல்யாண வயசு இருக்கிறப்போ, அம்மா படுத்த படுக்கை ஆகிட்டாங்க. அவங்கள பார்க்கிறேன்னு என்னோட இளமை எல்லாம் ஓடிடுச்சு. அதுக்கப்புறம் கையில பணமோ, கல்யாணத்தை முன்ன நின்னு நடத்த ஆளோ இல்ல.. விதியோட போக்கில வாழ்க்கையை விட்டுட்டேன். முடிஞ்ச வரைக்கும் உழைச்சு சாப்பிட்டேன். இப்போ மனசிலயும் சரி, உடம்பிலயும் சரி தென்பில்ல சாமி. அதான் கோவில்லை கை ஏந்துறேன்." இதுவரை கொட்ட ஆளில்லாத சோகத்தை கொட்டித் தீர்தவர் கண்கள் கசிந்து போனது.


அவர் கதையினை கேட்ட இருவரது மனமும் கனந்து போக, கையில் எடுத்த பணத்தை குடுக்க எடுத்த கையினை மீண்டும் தடுத்தான் அவன்.
இத்தைனை சோகக் கதையினை கேட்ட பின்னரும் தடுக்கிறானே என்ற கோபம் அவன் மேல் எழ.

"என்ன...?" என்றாள் பற்களிடையே வார்த்தையினை சினத்தில் துப்பி.

"நீ ஒண்ணும் போட வேண்டாம்." என்று விட்டு, கோவிலின் முன்பிருந்த கடைக்கு ஓடியனை பார்த்திருந்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

'இப்போ இந்த மலைமாடு எங்க போகுது? தனக்குள் கேட்டவள் விழிகள் அவனையே ஆராய்ந்தது. ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். அவர்களை நோக்கி வந்தவன் கையிலிருந்த ஒரு பெரும் பொதி. அதை அந்த அம்மாவிடம் நீட்டினான்.


அதில் ஓர் குடை உட்பட கோவிலின் அர்சனைக்கு வேண்டிய பொருட்கள் இருக்கவே,

"இது என்ன தம்பி?" என்றார்.


"இதில குறைஞ்சது பத்து பேருக்கான அர்ச்சனை பொருள் இருக்கும்மா... இதை அந்த கடைய விட, அஞ்சு ரூபா அதிகமா வைச்சு வில்லுங்க. யாரும் எதுவும் கேட்க மாட்டாங்க. இது தீர்ந்திட்டா.. இந்த முதல வைச்சு திரும்ப வாங்கி வில்லுங்க. இது உங்களுக்கு நல்ல தொழிலாவும் சுய மரியாதையோட வாழ்றோம் என்கிற தைரியத்தையும் தரும்." என்றவன் பிரியாவிடம் திரும்பி.


"அம்மா இனிமே பெரிய பிஸினஸ் வுமன் ஆகப்போறாங்க.. அந்த பிஸினஸ நீ தான் ஆரம்பிச்சு வைக்க போற... முன்னாடி அம்மாக்கு குடுக்க பணம் எடுத்தல்ல... அதை இப்போ குடு! அம்மா பணத்துக்கு ஏத்த பொருள் தருவாங்க. இல்லையாம்மா...?" என்றான் சின்னதாய் அரும்பிய புன்னகையுடன்.


அவனது அந்த செயலை கண்டவளுக்கு அவளை அறியாமலே ஓர் மரியாதை அவனிடம் உண்டானது. கூடவே அவனுடன் தானும் வந்தேன் என்ற கர்வமும் எழ, அவனையே பார்த்தவாறு பணத்தினை நீட்டியவள் கையிலிருந்த பணத்தினை பார்த்தவன்.


"அம்மா... இதில இருபது ரூபா குறையுது. மீதிய கறார கேட்டு வாங்குங்க" என்றான்.
அவனது பேச்சில் அவர் சிரித்துக் கொண்டே
,
"அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுட்டு இருந்த எனக்கு ஒரு வழி காட்டின. உங்ககிட்டையே எப்பிடி தம்பி...?" என்றார் நெளிந்து.


"தப்பும்மா... பிஸினஸ்ன்னு வந்திட்டா... சொந்தம் பந்தம், தெரிஞ்சவன் தெரியாதவன் பார்த்து விடக்கூடாது. அதுவும் நீங்க ஆரம்ப படியில நிக்கிறீங்க.. அப்புறம் முதலுக்கே மோசம் வந்திடும்." என்றான் நடப்பினை கூறி எச்சரிப்பது போல.


"இருந்தாலும்.... இது எல்லாம் நீங்க...." மேல பேச வந்தரை,


"இப்பத்தில இருந்து இது உங்களோடது. தர்மம் செய்திருந்தா அந்த பணத்தை திரும்ப என்கிட்ட தருவீங்களா...? இல்லன்னா நான் அதை வாங்குவேனா? அடுத்த தடவை பார்க்கிறப்போ, அந்தக் கடைக்கு எதிர்ல உங்க கடை இருக்கணும். ஓகே!" என்றவன்,


"பிரியா... மீதிப் பணத்தை குடுத்துட்டு, பொருளை வாங்கிட்டு வா! நான் உள்ள போறன்." என திரும்பியவன் கையினை பற்றியவர்,


"வயசான காலத்தில என்னால என்ன செய்ய முடியும்ன்னு முடங்கிக் போயிட்டேன். ஆனா சொந்த கால்ல நிக்கிறதுக்கு இப்பிடியும் ஒரு வழி இருக்குன்னு உதவின நீங்களும், உங்க சம்சாரமும் நல்லா இருக்குனும் தம்பி" என பிரியாவின் தலையிலும், அவன் தலயிலும் கை வைத்து கூறியவர் கையினை தட்டிக் கொடுத்து அவன் செல்ல, பிரியாவுக்குத் தான் ஒரு மாதிரியாகிப் போனது.


'அவர் கூறியதை பெரிது படுத்தாது சென்றவன், அவர் கூறியதை உள் வாங்கினானா இல்லையா...? நின்று தான் அவன் மனைவி இல்லை என்பதை விளக்கிட இஷ்டம் இல்லை. எல்லோர் எண்ணங்களுக்கும் விளக்கம் தந்து கொண்டிருக்க முடியாதல்லவா.. கீற்றாய் உதயமாகிய புன்னகையுடன், அர்ச்சனை பாெருட்களை வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தவர்கள் நேரமோ என்னமோ! அர்ச்சனை செய்வதற்காக பூசாரி ஒவ்வொருவரிடமிருந்தும் தட்டினை வாங்கிக் கொண்டிருக்க, ஓடோடிச் சென்றவளிடம் திரும்பி,


"எங்க லேட்டாகுமோன்னு நினைச்சிட்டேன். பொறுத்த நேரம் தான் வந்திருக்கோம். சீக்கிரம் தட்டை சாமிட்ட குடு!" என்றவனை பூசாரியும் நெருங்கியிருந்தார்.


"அதை குடுத்துட்டு பெயர் நட்சத்திரம் சொல்லும்மா..." என்றவர் கையில் கூடையினை நீட்டியவள்,


"எனக்கில்ல சாமி.. இவர் பெயர்ல தான் செய்யணும்." என்றாள் திடுதிடுப்பென அவர் கேட்டதில், தன் நச்சத்திரம் நினைவுக்கு வராததனால்.
உண்மை தான். இந்த இரண்டு வருடங்களாக கோவில் பக்கமே அவள் வரவில்லை. அதற்காக கடவுள் மேல் எல்லாம் கோபமில்லை. ஆனால் ஏதோ ஒரு சில காரங்களுக்காக கோவில் பக்கமே வரத் தோன்றவில்லை.


"அப்பிடியா..? சரி அவர் பேரு நட்சத்திரம் சொல்லும்மா.." என்றார்.
நட்சத்திரமா..? அதுக்கு அவள் எங்கு போவாள்? அவள் நட்சத்திரமே தகிட திமி எனும் போது, அவனையே முழுமையாக அறியாதவளுக்கு அது எப்படி தெரியும்?

'அதை நீயே சொல்லு' என்பதாக அவன் புறம் திரும்பியவளின் பார்வையின் பொருள் புரிந்த பூசாரி.


"என்னம்மா அவர பார்க்குறே... ஆத்துக்காரர் பேரு நட்சத்திரம் கூட தெரியாதா...? என்ன புள்ளைங்களோ..! ஏன்டா அம்பி... நோக்காவது நட்சத்திரம் தெரியுமா என்னோ..?" என்றவர் பேச்சில், இயந்திர கதியில் அவரிடமிருந்து அவனிடம் பார்வையை நகர்த்தியவளுக்கு, அடுத்து அங்கு என்னாகுமோ என்ற பீதியே எழுந்தது.


உண்மை அறியாத அவர் பேச்சானது அவளுக்கும் சங்கமாகத்தான் இருந்தது. ஆனால் கோபக்காரன் ஆயிற்றே அவன். எப்படி நீ அவளை தன் மனைவி என்று கேட்கலாம் என்று சண்டைக்குச் சென்று விட்டால், மொத்தக் கூட்டத்தின் மத்தியில் காட்சிப் பொருளாக மாறி விடுவோமோ என்ற பயம் அவளுக்கு.
இம்முறையும் கவனிக்கவில்லை போல.


"சத்தியசீலன் ஆயிலியம்." என்றவன், கருவறை நோக்கி, கண்களை இறுக மூடி நின்று கொண்டான்.
இம்முறையும் அவனுக்கு புரியவில்லை போல... போன உயிர் மீண்டவளாய், பெரிதாய் ஓர் மூச்சினை உள்ளிழுத்து சாதாரணம் ஆனவள், தானும் கைகளை குவித்து கண்களை மூடிக்கொள்ள, அவள் கண்களை மூடிய நேரம், ஒற்றை கண்ணினை மெல்லத் திறந்து அருகே நின்றவளை திருட்டுப் பார்வை பார்த்தவன் உதடுகள் மர்மமாய் புன்னகைத்து.
தரிசன நேரம் மட்டும் தான் அவனுடன் நின்றாள். அதன் பின் அவன் நின்ற திசை பக்கம் போகவில்லை அவள். பின்னே பார்ப்பவர் எல்லோரும் கணவன் மனைவி என்றால், அதை கருத்தில் எடுப்பவளுக்கு அல்லவா சங்கடமாக இருந்தது.
கூடவே சென்றாள் தானே அப்படி பேசுவார்கள். ஐந்து அடி வித்தியாசத்தில் அவனை பின் தொடர்ந்தவளை, அவனும் கவனித்துக் கொண்டு தான் வந்தான்.


ஒரு மாதிரியாக சுவாமி தரிசனம் முடித்து விட்டு, வீட்டிற்கு வந்தாயிற்று.
ஆனால் பிரியாவின் நினைவுகள் தான் அன்றைய தினத்தை பற்றியே அசை போட்டவாறு இருந்தது.


'சும்மா சொல்லக் கூடாது.. என்கிட்ட மட்டும் தான் மல்லுக்கு நிக்கிறான். யாராச்சும் மனசளவில கஷ்டப்பட்டுட்டா உதவின்னு முன்னாடி போய் செய்யிறான். அதுவும் சாதாரண உதவியில்ல... வர்ணிஷாவை தத்து எடுக்கிறேன்னு அன்னைக்கு சொன்னான்.

இன்னைக்கு அந்த அம்மாவோட வாழ்க்கையையே முழுசா மாற்றுற அளவிற்கு ஒரு வழி செய்திருக்கிறான். எனக்குக் கூட இப்பிடி ஒரு ஐடியா தோணல..
சொல்லப் போனால் இவன் எல்லோரிலும் இருந்து மாறு பட்டவன் தான், ஆனால் ஏன் என்கூட மட்டும் எரிஞ்சு விழுகிறான்.? என்னையும் மத்தவங்க போல நடத்தலாம்ல. முதல் கோணல் முற்றும் கோணல் எங்கிற மாதிரி தான் இருக்கு இவன் நடத்தை.

தெரியாதுன்னு உண்மைய சொல்லுறது தப்பா.' மனம் ஏனோ காரணம் இன்றி ஏங்கிய மறுநொடி, அதை உணருவதற்குள்,

'ஏன் எல்லாரும் ஒரே கேள்விய கேட்டாங்க...? எங்கள பார்த்தா புருஷன் பொண்டாட்டி மாதிரியா தெரியுது...? ஏன் தெரியாது...? ஒன்னா உரசிட்டே கோவிலுக்க போனா, அப்பிடித்தான் கேட்ப்பாங்க.' கேள்வியும் தானே பதிலும் தானே என்பது போல், தனக்குள் எழுந்த வினாவுக்கு தானே பதிலளித்தவள்,


'என்னதான் சேர்ந்து போனாலும், உண்மை நிலை தெரியாம சட்டுன்னு இப்பிடி கேட்கக் கூடாதுல்ல. ஏன் கணவன் மனைவி தான் ஒன்னா போவங்களா? அவங்க தான் அப்பிடி சொல்லுறாங்கன்னா, இவனும் எதுவும் சொல்லாம தன் பாட்டிலயே போறன்.
அப்பிடி அமைதியா போற பேர் வழி இல்லையே இவன். எப்பிடி இவளை என் பொண்டாட்டி சொல்லுவேன்னு மல்லுக்கு நிப்பானே! ஒரு வேளை உண்மையாலுமே அவங்க பேசினத சரியா இவன் கேட்கலையோ! அதெப்பிடி கேட்காம போகும்.? எல்லாம் கேட்குது. இது மட்டும் கேட்கலன்னா நம்ப கூடியது போலவா இருக்கு!' மண்டையை போட்டு உடைக்காத குறையாக நடந்தவற்றை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்த்தாள்.


'அவன் அவங்க பேசினத கிரகிச்சது போலவே இல்ல. ஆனா அவங்க பேச்சும் புரியாத அளவுக்கு இவன் முட்டாலும் இல்லை. அப்புறம் எப்பிடி சாதாரணமா நந்துக்கிட்டான்? ஒரு வேளை யாருன்னு தெரியாத இவங்க பேச்சுக் எல்லாம் எதுக்கு ரிஜாக்ட் பண்ணணும்ன்னு என்னை போல அமைதியா இருந்தானோ!
அப்பிடியே இருந்தாலும் அவங்க சொன்ன அடுத்த நிமிஷம் சின்னதா என்னோட உடம்பில அசைவு தெரிஞ்சிச்சே... ஆனா இவன்ல எந்த மாற்றமும் இல்லை.. அது எப்பிடி...?


ம்ம்... ஐய்யா பெரிய பதவியில இருக்காருல்ல... இதுக்கெல்லாம் ஆடிப் போனா, அவரோட கெத்து என்னத்துக்கு ஆகுறது?' எப்போதும் போல் அவனுக்கு சாதகமாகவே எண்ணிக் கொண்டவள், அத்தோடு அந்த நினைவுகளுக்கு தடா போட்டு விட்டு, தன் வேலையினை பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
 

bama kumar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 3, 2024
Messages
2
After 15th episode it's not showing. For every episode we have to ask? will it not come automatically
 

Balatharsha

Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
684
After 15th episode it's not showing. For every episode we have to ask? will it not come automatically
எழுதிட்டிருக்கிற கதை சிஸ்... அதான் லேட் ஆகுது. சீக்கிரம் தர இனிமே முயற்சி செய்றேன்.
 
Top