காதல் பெருகிப் பொழியும்...
- அதியா
இனிய திருமண நாள்.
காலையில் எழுந்து குளித்து முடித்து, ஈரத்துண்டை தலையில் சுற்றியபடி, கணவன் சத்யதேவ்க்கு பிடித்த பில்டர் காப்பியை போடுவதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள் அகமதி.
நெற்றி குங்குமத்துடன், முகத்தில் பொங்கும் சிரிப்புடன் உள்ளே நுழைந்தவளை, "ச்சீ..." என்று சீற்றத்துடன் முறைத்து விட்டு முகத்தை திருப்பிக் கொண்டார் அவளின் மாமியார் லட்சுமி.
மதியின் முகத்திலிருந்து புன்முறுவல் மறைந்து, கம்பீரப் புன்னகை தோன்றி, அவளின் தேகம் நிமிர்ந்தது.
"இதையெல்லாம் என்னன்னு கேக்க மாட்டீங்களா? " லட்சுமியின் கோபம் வரவேற்பறையில் அமர்ந்திருந்த அவளுடைய கணவன் ராகவனின் பக்கம் திரும்பியது.
இறுகிய முகத்துடன் செய்தித்தாளுக்குள் தன் தலையை புதைத்துக் கொண்டார் ராகவன்.
நுரை ததும்பும் பில்டர் காபியுடன் தன்னறைக்குள் நுழைந்தாள் மதி. தன்னைப் பார்த்து கண்ணடிக்கும் கணவனிடம் காபியை கொடுத்துவிட்டு, படுக்கையில் துயில் கொண்டிருக்கும் தனது மகள் தேவநிலாவின் கேசத்தை ஆதுரமாய் தடவினாள்.
"எனக்கில்லையா...?" என்று பார்வையால் கேள்வி கேட்ட கணவனின் புறம் திரும்பி, தன் சுட்டு விரலை தேனிதழில் தடவி, உதட்டின் நடுவில் நிறுத்தி, விரல் நுனியை பற்கள் கொண்டு செல்லமாய் கடித்து, இச்சென்ற சத்தத்துடன், கண்ணிமைகளை மூடித் திறந்து, சுட்டுவிரலை கீழ் நோக்கி நகர்த்தி, இடதுபுறம் மார்பின் சேலையை சிறிது விலக்கி, பச்சை நிறத்தில் அவள் தேகத்தோடு கலந்திருந்த, 'சத்யதேவ்' என்ற பெயரை பதமாய் விரலோடு சேர்த்து அணைத்தாள்.
" காபி ஆறிடப் போகுது குடிங்க தேவ்" என்றாள் வெட்கத்துடன்.
"அதனால் என்ன நான் சூடாக இருக்கிறேனே"
"தேவ்..."
"ம்ஹூம்.... இன்று எனக்கு உன்னுடைய பிரத்தியோக அழைப்பு வேண்டும்"
முகம் சிவக்க, "தேவா..." என்றாள் மதி.
"இன்றாவது எனதருகில் வரலாமே? என்னை பல நாள் பட்டினி போட்டு விட்டாய் மதி"
"தேவா... நிலா பாப்பா இப்பொழுது எழுந்து விடுவாள். நோ..."
"ஹே... மதி. எத்தனை கட்டுப்பாடுகள். இன்று நம் ஐந்தாவது திருமண நாள். நான் தூங்கி எழுவதற்குள் குளித்து முடித்து விடுகிறாய். இம்... உன்னை மீண்டும் அழுக்காக்க, அந்த அழகான அனுமதி எப்பொழுது கிடைக்கும்? காதலிக்க அட்டவணை போடாதே மதி" முகம் சுருங்கியது சத்யதேவிற்கு.
"பார்வையிலேயே என்னை அள்ளிப் பருகும் திருடா! உன் கைகளுக்குள் நான் அகப்பட்டால்... தாங்காது சாமி" என்றவனுக்கு பழிப்பு காட்டி விட்டு அவசரமாக மகளை எழுப்பினாள்.
கண்களை தேய்த்தபடியே தூக்கம் கலைந்த தேவநிலா, தாயின் கழுத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு, "குட் மார்னிங் டாடி..." என்றாள் மெதுவாக.
முறைத்த தன் தாயின் முகத்தைக் கண்டதும், படுக்கையிலிருந்து எழுந்து, தன் தந்தையின் அருகில் இருந்த நாற்காலியில் ஏறி, அவன் கன்னத்தோடு முத்தம் பதித்தாள்.
தந்தையோடு இணைந்திருந்த மகளை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டு, நெற்றியில் செல்லமாய் முட்டி, "குளித்துவிட்டு அப்பாவை கொஞ்சலாம்" என்று மகளுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.
வாளியில் தண்ணீரை நிரப்பி விட்டு, புடவையை தூக்கி இடுப்பில் சொருகிக் கொண்டதும். அவளது பளிங்குக் காலிருந்த நீண்ட சூட்டுத்தழும்பு நிலாவின் கண்களில் பட்டது.
"அம்மா.... ஆ... வலிக்குதா?" என்ற நிலா மெதுவாக தழும்பை தொட்டு விட்டு கையை படக்கென்று எடுத்து விட்டாள்.
"இல்லையே..." என்று தழும்பை வருடியவளின் கண்களில் காதல் எல்லையில்லாமல் வழிந்து நினைவுகள் பின்னோக்கிச் சென்றது.
******
கண்களைச் சுருக்கி, இமைகள் திறக்க கஷ்டப்பட்டு சிறு முனங்கல்களுடன் கண் விழித்தாள் அகமதி. தன்னைப் போல் அரைகுறை விழிப்புடன் அருகில் இருந்த பெண்களை கண்டு துணுக்குற்றாள். தான் ஒரு அறையில் அடைபட்டு இருப்பதை நன்கு உணர்ந்தாள்.
"அன்னை கஸ்தூரிபா" ஆசிரமத்தில் இரவு உணவு உண்டு உறங்கியது மட்டுமே ஞாபகம் இருக்க, 'தான் எப்படி இந்த பெண்களுடன் இங்கு வந்தோம்?' என்று அவளால் நினைவு கூற முடியவில்லை.
பதினெட்டு வயது முடிந்து ஒரு வருடமான நிலையில், அந்த மாத இறுதியில் ஆசிரமத்தை விட்டு வெளியேற வேண்டிய இருந்த தனக்கு, சமையல்கார அம்மாள் பாசமாக, 'சிறப்பு உணவு' என்று தந்ததை உண்டதால் வந்த மயக்கம் என்றுணர்ந்து கொண்டாள்.
எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும் அவளது பெண்மை, 'ஆபத்து!' என்று அறிவுறுத்த, அதனை துச்சமெனத் தள்ளிய பாசம் செய்த மோசத்தை எண்ணி மறுகாமல், அங்கிருந்து தப்பித்துச் செல்லும் மார்க்கத்தை கணிக்கத் தொடங்கினாள்.
நேரம், காலம், இடம் எதுவும் புரியாமல் தள்ளாடும் உடலை நிலை நிறுத்தி, ஆழ்ந்த சுவாசத்தை உள்ளிழுத்தாள். சுற்றி இருக்கும் பெண்கள் பல மொழிகளில் புலம்ப, ஆதி மொழியாம் சைகையில் அமைதியாய் இருக்கும்படி உத்தரவிட்டாள்.
பதின்ம வயதில் இருக்கும் பெண்கள் புரியாது கத்திக்கூப்பாடு போட அறையின் கதவு திறந்தது. பருமனான உடல் கொண்ட ஒருவன் அதிகம் சத்தம் போட்ட பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டுச் செல்ல, அந்த அறையே நிசப்தமாகியது.
அவன் சரளமாக பேசிய பாஷை தெலுங்கு என்று கண்டு கொண்டதால் அது ஆந்திர மாநிலமாக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தாள் மதி.
அந்தக் கூட்டத்தின் முன் எழுந்து நின்றாள். அவளின் நிமிர்ந்த தோற்றமே அனைவருக்கும் தைரியத்தை தந்தது. கண்களில் பயத்தினை சுமந்தபடி நின்ற அனைவரையும் நிதானமாக அளவிட்டாள்.
முதுகில் சுமந்த புத்தகப் பையுடன் இருந்த ஒரு பெண் குழந்தையைக் கண்டு அவள் கண்களில் கனிவு சுரந்தது. அடுத்த நொடியே தீட்சண்யம் சுமந்த விழிகளுடன் அனைவருக்கும் சிறு சிறு கட்டளைகள் இட்டாள்.
உயரத்திலிருந்த சாளரத்தை அடைய சில பெண்களை மண்டியிடச் செய்து அவர்களின் மீது ஏறி வெளிப்புறத்தை நோட்டமிட்டாள். அவள் கண்ட காட்சியில் மூச்சே நின்றது.
கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் கம்பீரமான ஆனந்தகிரி மலை மீது மேகங்கள் ஊர்சுற்றிக் கொண்டிருந்தது. காப்பிச் செடிகளின் வாசனையோடு மிளிர்ந்த மலைப் பிளவுகளுக்கு நடுவே ஒரு மலையேற்ற பயிற்சி குழு மேலெறிக் கொண்டிருப்பதைக் கண்டாள். கைகளை மெல்ல வெளியே நீட்டி காற்று வீசும் திசையை அறிந்து கொண்டாள்.
சடசடவென கீழே இறங்கி, கதவின் அருகில் ஆட்கள் நடமாட்டம் தெரிந்தால் சைகை செய்யும்படி சொல்லிவிட்டு, அந்தக் குழந்தையின் புத்தகப் பையில் இருந்து சில பொருட்களை எடுத்து மடமடவென சில வேலைகள் செய்தாள்.
அணிந்திருந்த சில பெண்களின் துப்பட்டாக்களை வாங்கி தன் பற்களால் கிழித்து, முடிச்சிட்டாள். மீண்டும் அந்தப் பெண்களின் மீது ஏறி சாளரத்தின் வழியாக காற்று வீசும் வேகத்திற்கு ஏற்ப மெல்ல மெல்ல, காகிதத்தில் செய்த பட்டத்தை பறக்க விட்டாள். மெல்லிய துணிகளின் முடிச்சில், அவளின் விடா முயற்சியில், சிகப்பு மையில் "உதவி" என்ற வாசகத்தை தாங்கிய அந்த பட்டமும் பறந்தது. கடைசி முனையை சாளரத்தில் கட்டி விட்டு கீழிறங்கினாள்.
மீண்டும் கதவு திறக்கும் ஓசை கேட்டதும், அனைவரையும் தைரியமாக இருக்குமாறு சைகை செய்தாள்.
உள்ளே நுழைந்த அதீத ஒளியில் அனைவரும் கண்களைச் சுருக்கினர். கேமராவுடன் நுழைந்த அந்தக் குழு, அந்தப் பெண்களை ஒவ்வொருவராக முன்னே வந்து, தாங்களே தங்கள் ஆடையை அரைகுறையாக கழட்டிக் காட்டும்படி கட்டளையிட்டது. மறுத்த பெண்களுக்கு அடி உதை கிடைத்தது.
சிறு பெண்கள் அடி உதைக்கு பயந்து அவர்கள் சொன்னதைச் செய்ததும், அந்தக் குழு அவர்களை விட்டுவிட்டது. முரண்டு பிடித்த பெண்களை சூட்டுக்கோல் கொண்டு மிரட்டியதும் அந்தப் பெண்கள் கூட்டமும் அடிபணிந்தது.
கடைசியாக நிமிர்ந்து நின்ற அகமதியை வக்கிரச் சிரிப்புடன், நோக்கியது அந்தக் குழு. மிரட்டினார்கள் மிரளவில்லை. அதட்டினார்கள் அதிரவில்லை. சூட்டுக்கோலை காட்டியதும், முன்னே வந்த அகமதி அவர்கள் கையிலிருந்து அதனைப் பிடுங்கி தன் காலை தானே பொசுக்கிக் கொண்டாள் தைரியமாக.
அவளின் தைரியத்தை கண்டு அதிர்ந்தது அந்தக் குழு. பின்னிருந்து கைதட்டும் ஓசையில் அனைவரும் திரும்பிப் பார்க்க, சத்யதேவ் சூலம் தாங்கிய பெண் சக்தி போல் உருமாறி நிற்கும் அகமதியை கண்கள் சிமிட்டாமல் பார்த்தான்.
அவனை யோசனையுடன் பார்த்த அகமதியின் கண்களுக்கு அவன் பேண்ட் பாக்கெட்டில் பாதி தெரிந்த பட்டம் கூறியது அவன் வந்த கதையை.
மலையேற்ற குழுவை தலைமை தாங்கி நடத்தி வந்த சத்யதேவின் கண்களில் ஆளரவமற்ற காட்டில், ஒற்றை வீட்டில் பறந்த பட்டம் எதையோ உணர்த்த, உடனடியாக காவலர்களை தொடர்பு கொண்டு அழைத்து வந்து, அரக்கர்களிடம் அதிரடி வேட்டையை நடத்தி முடித்து இருந்தான்.
அனைத்து பெண்களும் அவர்களின் ஊருக்கு அவர்களின் பெற்றோர்களோடு, பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்பட, போகும் பாதை அறியாது அகமதியின் அகம் கலங்கி நின்றது.
அதுவரை அசராது நின்றவளின் கலக்கம் அவனைத் தாக்க, தான் சென்னை செல்லும்போது அவளை வேறு ஒரு பாதுகாப்பான இடத்தில் சேர்த்து விடுவதாக மீட்புக் குழுவிற்கு வாக்குறுதி தந்து அவளை தன்னோடு தக்கவைத்துக் கொண்டான்.
"என்னோடு வர உனக்கு சம்மதமா?" என்றான் சத்யதேவ்.
"பிச்சைக்காரர்களுக்கு தேர்ந்தெடுக்கும் உரிமை கிடையாது. உதவி செய்தவரிடம் இதை கேட்பது தவறுதான். எனக்கு ஒரு வேலை வாங்கித் தர முடியுமா?" என்றாள் விழிகளை எங்கோ பதித்து.
" என்னிடம் ஒரு வேலை காலியாக இருக்கிறது. உனக்கு சம்மதம் என்றால்.... "
சத்யதேவ் தங்களுக்காக நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்று தங்களின் நிலைமை என்னவென்று புரிந்து கொண்டவள், அவன் மீது கொண்ட அலாதி நம்பிக்கையின் காரணமாக, "எந்த வேலையாக இருந்தாலும் செய்வேன்" என்றாள் உறுதியான குரலில்.
" பேச்சு மாறக்கூடாது... " என்று தன் வலது உள்ளங்கையை அவள் புறம் நீட்டினான்.
பெண்மை காத்த ஆண்மையின் கரத்தோடு தன் கரத்தை இணைத்து, அக மகிழ்வுடன் தன் உறுதியை தெரிவித்தாள்.
பற்றிய அவளின் கரத்தை, சுண்டி இழுத்து தன் மார்போடு அவளை சாய்த்துக் கொண்டு, அவள் காதில், "எனக்கு காதலியாக இருக்கும் வேலை காலியாக இருக்கிறது? எப்போது வேலையில் சேரப் போகிறாய்? " என்றான் கிசுகிசுப்பாக.
கண்களை அகல விரித்த மதி, "பரிதாபத்தினால் வரும் காதல் நிலைக்காது" என்றாள் அழுத்தமாக.
அவளின் தோள்களை இருபுறமும் பற்றி தன்னை பார்க்கச் செய்தான் சத்யதேவ். "அனைத்து பெண்களும் பயந்து நடு நடுங்க, அந்தப் பருந்து கூட்டத்தோடு போராடிய இந்தச் சின்னஞ்சிறு சிட்டுக்குருவியின் தைரியமே முதலில் என்னை கவர்ந்தது. இந்த சிட்டுக்குருவியோடு காலம் முழுவதும் பறக்கவே ஆசை பொங்குகிறது.
ஆந்திராவின் வனத்தை பாதுகாக்கும், முதன்மை தலைமை பாதுகாவலர் பதவியில் இருக்கும், இந்த சத்யதேவின் பொண்டாட்டிக்கு இந்த தைரியம் கூட இல்லை என்றால் எப்படி?" என்று தன் மீசை நுனியை முறுக்கினான்.
"நான்... நன்றி... கா.. தல்.... எப்படி?" ஆளைத் துளைக்கும் அந்தப் பார்வையில் வார்த்தைகள் தடுமாறியது மதிக்கு.
" அடடா என் செல்ல குட்டிக்கு வாயில் காதல் என்ற வார்த்தை வரவே தடுமாறுகிறதே! வார்த்தையில் வரவில்லை என்றால் என்ன? வாழ்க்கையில் வர வைத்து விடலாம்..." என்றான் குறும்பாக.
அதிர்ச்சியில் செய்வதறியாது சிலை போல் நின்றவளின் கீழே ஒரு காலை மடித்து குத்திட்டு அமர்ந்தான். பின் நிதானமாக மதியின் இடது காலை தன் தொடையில் தாங்கினான்.
தடுமாறிய மதி, தன்னிரு கைகளையும் தேவின் தோள்களில் பதித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள். சூட்டு கோலினால் சுட்டுக் கொண்ட புண் கொப்பளித்து நிற்க, விரல்கள் கொண்டு ஓரங்களில் மெதுவாக நீவினான். சற்று ஆழமான ரணம்தான். அதனை தனக்குத்தானே பரிசளித்துக் கொண்டவளின் மனஉறுதியில் மீண்டும் காதல் துளிர்க்க, சிரம் தாழ்ந்து அவள் பாதத்தில் இதழ் பதித்தான்.
சூட்டுக்கோலால் சுட்டுக் கொண்ட போது எரியாத உடல், அவனின் ஒற்றை முத்தத்தில் பற்றி எரிந்தது. தன் பாதத்தில் சரணடைந்தவனிடம், காதல் சாசனம் எழுதிக் கொண்டது அவள் மனது.
உறவொன்றை அறியாதவளுக்கு, உயிராய் வந்து நின்றவனின் நேசம் அவளின் உயிர் வரை தித்தித்தது. விரிந்திருந்த அவள் இமைகள், மெல்ல மூடி அந்த ஏகாந்தத்தை ரசிக்க ஆரம்பித்தது. அவளின் காயம், காதல் அடையாளமாய் மாறி மாயம் செய்தது.
மதியை அழைத்துக்கொண்டு, அவளது ஆசிரமத்திற்கு வந்தான். அந்த சமையல்காரம்மா வேலையை விட்டுவிட்டு சென்று விட்டதாக கூறினார்கள். பெரியவர்கள் இருக்கும் பகுதிக்கு சிசிடிவி கேமரா வைக்கவில்லை என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். மதிக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்காமலிருக்க கவனமாக இருப்போம் என்று உறுதி தந்தனர்.
ஆசிரமத்தில் வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால், அகமதியின் சான்றிதழ்கள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு வெளியேறினான் தேவ்.
தன் வீட்டிற்கு அகமதியை அழைத்து வந்ததும், பிரச்சனை எழும்பியது. லகரத்தில் சம்பளம் வாங்கும் மகனை பகைத்துக் கொள்ள முடியாமல் தவித்தார் லட்சுமி. தலைக்கு மீறி வளர்ந்த மகனை கண்டிக்க முடியாமல், அவனை முற்றிலுமாக தவிர்த்தார் ராகவன்.
இருவரின் கோபமும் மகனை மயக்கிய மதியின் மேல் திரும்பியது. உறவென்ற கூட்டுக்குள் இதுவரை வாழாதவளுக்கு அவர்களின் கோபம், வெறுப்பு கூட ஆனந்தமாய் இருந்தது.
மதியை தன்னோடு வைத்துக் கொள்ள தன்னவளாக்க முடிவு செய்தான். திருமணம் இருவரின் காதல் தொடக்கமாய் இருக்கட்டுமே என்று எண்ணினான்.
கோவிலில் எளிமையாக இருவரின் திருமணத்தை முடித்துக் கொண்டு சட்டபூர்வமாக திருமணத்தை பதிவு செய்தான். திருமணம் முடிந்த கையோடு மதியை மலையேற்ற பயிற்சி நடக்கும் ஆனந்தகிரி மலைக்கு அழைத்து வந்தான் தேவ்.
பயிற்சி குழுவினர் தங்குவதற்கென தற்காலிகமாக போடப்பட்ட கூடாரத்திற்குள் இருவரும் தங்கள் பொருட்களை அடுக்கி வைத்தனர். இருள் கவிழ்ந்த நேரம், நடுங்கும் குளிரை தாக்குப் பிடிக்க, கணப்பு ஏற்படுத்தி அதனைச் சுற்றி அனைவரும் அமர்ந்திருந்தனர்.
பெண்களோடு அமர்ந்திருந்த மதி இயல்பாய் அவர்களோடு பொருந்தினாள். கழுத்தில் மஞ்சள் சரடு மினுங்க, கணப்பின் பொன்னொளியில் சுடராய் அவள் முகம் பிரகாசிக்க, இதுவரை கட்டி வைத்த தன் கனவுகள் எல்லாம் கட்டவிழ்க்க, சத்யதேவின் விழிகளில் காதல் மயக்கம் சதிராடியது.
அனைவரும் சென்ற பிறகு தனியே அமர்ந்திருந்தவளின் அருகே வந்து,
" என்னை உனக்குப் பிடித்திருக்கிறதா? " என்றான் அவள் விழிகளை பார்த்துக் கொண்டே.
"ரொம்ப சீக்கிரமா கேட்டுட்டீங்க... " அவளின் செவ்விதழ்கள் மெல்ல முனங்கியது.
"வந்து... வந்து... " என்று தயங்கியவனிடம், " எனக்கு தூக்கம் வருகிறது என்று கூறிவிட்டு கூடாரத்திற்குள் சென்று படுத்துக் கொண்டாள்.
மறுநாள் அனைவரும் அரக்கு பள்ளத்தாக்கின் பழங்குடியினர் அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர். சிறிது நேரம் மதியை காணாமல் மதிகெட்டு அலைந்தான் சத்யதேவ். "மதி... மதி..." என்றவனின் அலறல் குரலுக்கு, உடையை சரி செய்து கொண்டே தளர்ந்த நடையுடன் அவன் முன் வந்தாள் மதி.
அவன் கண்களில் அவளுக்கான தவிப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. தனக்காக துடிக்கும் ஒரு உயிரைப் பெற்றதில் வானம் வசப்பட்ட உணர்வு அகமதிக்கு. அவன் மீது காதலா தெரியாது? இதற்குப் பெயர் நன்றியா? அப்படியும் கிடையாது. கணவன் என்கின்ற கட்டாயமா?
ம்ஹூம்... மதியின் தலையசைந்து தனக்குத்தானே மறுப்பு தெரிவித்துக் கொண்டது.
" மதி நீ என் கண்ணை விட்டு மறைந்தால், பிறகு நான் உன் கண்ணிலேயே பட மாட்டேன்..." சொன்னவனின் குரலில் இருந்த அழுத்தம் அவன் காதலைச் சொன்னது.
பின் அருகிலிருந்த போரா குகைக்குச் சென்றனர். இரண்டு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து, கடல் மட்டத்திலிருந்து சுமார் 1400 மீட்டர் உயரத்தில் இருந்த குகை மிரட்டியது. முதல் முறை என்பதால் மலையேற்றக் குழுவினர் சற்று தடுமாறிபடியே உள்ளே இறங்கினர். மதியின் கைகளைப் பிடித்துக் கொண்ட தேவ், தன் கை வளைவுக்குள்ளேயே அவளை நிறுத்தி குகையின் ஆழத்தை அடைந்தான்.
சத்யதேவின் நெருக்கமும், அவனின் ஆளுமையும், அன்பும், காதலும் மதியின் மன ஆழத்திற்குள் இறங்க ஆரம்பித்தது.
குகையின் அடியிலிருந்து, மேலிருந்து விழும் சூரிய ஒளியை பார்ப்பதற்கு அவ்வளவு ரம்யமாக இருந்தது. அனைவரும் பார்வையிட்டுக் கொண்டிருக்க, குழுவிலிருந்த ஒருவன், ஆர்வக்கோளாறில் குகையின் மறுபக்கத்தில் இருந்த விளிம்பை தொடுவதற்கு சடசடவென மேலே ஏறினான். பாதி தூரம் கடந்த பின், அடுத்த அடி மேலேயோ, கீழேயோ எடுத்து வைக்க முடியாமல், "உதவி!" என்று கத்தினான்.
சத்யதேவ் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி சடசடவென மேலே ஏறினான். மதியின் உயிர் உருண்டு வந்து அவள் தொண்டையை அடைத்தது. உருவம் இல்லாமல் அவள் கொடுத்த அந்த உணர்வுகளுக்கு பெயர் காதல் என்று தெரிந்தது.
ஆபத்திலிருந்தவனை பத்திரமாக இறக்கிவிட்டு, தன் மனைவியின் முன் வந்து நின்றான் சத்யதேவ். ஆடாமல் அசையாமல் நின்றவளின் முன் சொடுக்கிட்டான். தன் முன்னே சிரித்தபடி நின்றவனை கண்டபின், அசையாது நின்றவளின் உலகம் இயங்க ஆரம்பித்தது.
"என்ன?" என்று ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவனுக்கு, மனைவியின் கலக்கம் தெளிவாகப் புரிந்தது.
"ஹான்..." என்று தலையசைத்து ஒன்றும் இல்லை என்றாள்.
காபதம்புரா தோட்டம் பார்க்க அனைவரும் சென்றிருக்க, தேவ் மட்டும் மதியை அழைத்துக் கொண்டு கடிகா நீர்வீழ்ச்சிக்கு உல்லாச சிரிப்புடன் அழைத்து வந்தான்.
நீர்வீழ்ச்சியில் முழுவதும் நனையாமல், சாரல் தெறிக்கும் இடத்தில் தன்கைவளைவிற்குள் மனைவியை நிறுத்தினான்.
முகத்தில் தெறித்த நீரின் குளுமையில், மதியின் தலை தானாக பின்னோக்கிச் சரிந்து தேவின் நெஞ்சத்தில் சாய்ந்தது.
அவள் தோளில் படிந்திருந்த தேவின் கரங்கள் மெல்ல கீழிறங்கி, தன்னவளின் இடையை இறுக்கி வளைத்துக் கொண்டது.
பெண்மையின் ரகசியத்தை அறியத் துடித்த கைகளை இறுக்கிப்பிடித்துக் கொண்டாள். "ப்ளீஸ்.." என்றாள் பரிதவிப்பாக.
புன்னகையுடன் மலர்ந்த சத்யதேவின் இதழ்கள், அவளின் உச்சந்தலையில் அச்சாரத்தை பதித்தது. அறியாத உணர்வில், புரியாது விழித்தவள், அவனை உதறிக் கொண்டு நீருக்குள் ஓடிச் சென்று தன்னை மறைத்துக் கொண்டாள்.
பால் மழையில் நனைந்த பால் நிலவாய் தன் மதியைக் கண்டவன், நீரின் வேகத்தை மிஞ்சும் வேகத்தோடு நீர்வீழ்ச்சிக்குள் புகுந்தான். கொட்டும் நீர்வீழ்ச்சி இருவரையும் மறைத்திருக்க, கண்மூடி நின்றவளின் முகத்தில் வழிந்த நீர் உதட்டில் பட்டுத் தெறிக்க, அந்த இருவரிக் கவிதையை, தன் இதழ் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.
நனைந்த கூந்தல் இருபுறமும் படர்ந்து இருக்க, பதமான உடையுடன் இதமான காபியை அருந்தும் தன் மனையாளை விழியால் பருகினான் சத்தியதேவ்.
சிவந்த முகத்துடன் சுற்றிலும் தன் பார்வையை அலைய விட்டாள் மதி.
"ஹே... மதி... என்னை உனக்கு பிடிச்சிருக்கா?" தன் பின்னந்தலையை கோதிக்கொண்டே கேட்டான் சத்யதேவ் ஆர்வமாக.
அவள் பதில் கூறும் முன், காபதம்புரா தோட்டத்தை பார்வையிட்ட அனைவரும் திரும்பி இருந்தனர். அதன்பின் இருவருக்கும் தனிமை வாய்க்கவில்லை.
அன்றோடு மலையேற்ற பயிற்சி முடிந்து அனைவரும் ஊர் திரும்பி இருந்தனர். சத்யதேவ் மதியுடன் அனறிரவு அங்கேயே தங்க முடிவு செய்தான்.
காட்டு மலர்களின் வாசமும், வானில் இருந்த முழுமதியும், அடர்ந்த காடும் இருவருக்குமான தனிமையை ரம்யமாக்கியது.
வானிலிருந்த முழுமதியை தன் கைகளை கட்டிக் கொண்டே, முகம் நிமிர்ந்து பார்த்தபடி நின்றிருந்தான் சத்யதேவ்.
பூங்கரம் ஒன்று பின்னால் இருந்து தன்னை நடுங்கியபடி அணைக்க, மதியை தன் முன்னே நிற்கச் செய்தான்.
"எனக்கு உன்னுடைய கட்டாய காதல் வேண்டாம் மதி. உன் கரை கடந்த காதல் வேண்டும். என்னை நீ சகித்துக் கொள்ளக்கூடாது. சரிபாதியாக உணர வேண்டும்" என்றான் உயிர் கசியும் குரலில்.
மதி சிரித்துக்கொண்டே தன் துப்பட்டாவை கழட்டி, தேவின் கண்களை கட்டினாள்.
"ஏன்? மதி!"
" நான் சில கேள்விகளை கேட்க நினைக்கும் போது உங்கள் கண்கள் என்னை பேச்சிழக்கச் செய்து ஊமையாய் மாற்றி விடுகிறது " என்றாள் மென்மையாக.
"கண்களுக்குத் தானே கட்டுப்பாடு கைகளுக்கு இல்லையே!" என்று காற்றில் கைகளை தடவி, அவளை சிலிர்க்க வைத்து, தன்னோடு இறுக்கி அணைத்துக் கொண்டான்.
"நான்... என்னை.. திருமணம்... இந்தப் பிடித்தம் எதனால்?" அவனின் அணைப்பிற்குள் வார்த்தைகள் தட்டுத் தடுமாறி வந்தது.
"அனைவரும் நீ சூட்டுக்கோலால் சுட்டுக் கொண்டதை பார்த்திருந்தனரே தவிர, அதனையே ஆயுதமாய் மாற்றி அவர்களை நீ தாக்க இருந்த கோணத்தை யாரும் கவனிக்கவில்லை என்னைத் தவிர.
அந்த நொடி நான் வெகு நாட்களாக தேடிக் கொண்டிருந்த சாகசகாரிக்கு என் காதல், சாமரம் வீசத் தொடங்கியது. ஹே... நான் கேட்ட கேள்விக்கு நீ இதுவரை பதில் சொல்லவே இல்லையே!"
"என்ன?" என்று கேட்டவளின் வார்த்தை வெளிவரும் முன் அவளின் கீழுதட்டை இறுக்கிப் பிடித்தான்.
" என் பிடித்தம் தெரிந்து கொண்டாய் அல்லவா? என்னை உனக்கு பிடிக்குமா? " என்று கேட்டவனின் கையை, இடது புறம் தோள்வளைவில் சுடிதாரினை நெகிழச் செய்து, தன் நெஞ்சோடு பதித்தாள்.
"என் தேவா..." என்றவளின் மாயக்குரலில் கண் கட்டை அவிழ்த்து விட்டு திறந்து பார்க்க, "சத்யதேவ்" அவள் மார்பில் வீற்றிருந்தான் எழுத்தாக.
உள்ளம் புறமும் உனையன்றி யாரும் இல்லை என்று நிரூபித்தவளை கண் கலங்க கட்டிக் கொண்டான்.
" நீங்கள் என்னை காணாமல் தேடிய போது என் உயிரில் உங்களை சேர்த்துக் கொண்டிருந்தேன் தேவா" என்றாள் ஆசையும், நாணமுமாக.
இயற்கையின் சாட்சியாக அவளின் மெய்யோடு மெய் கலந்தான் மோகமும், காதலுமாக.
திடீரென்று முகத்தில் பட்டுத் தெறித்த நீரில் தன் நினைவுகள் கலைந்து, தன் காதலின் பரிசாய் நின்றிருந்த செல்ல மகளை முத்தாடி நீராட்டினாள்.
"தேவ்... இன்றைக்கு கொஞ்சம் லேட்டாகிவிட்டது. ப்ளீஸ்... நீங்களே சாப்பிட்டுக் கொள்ளுங்கள்" என்று உணவை அவன் முன் வைத்துவிட்டு மகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு கிளம்பினாள் ஆசிரியை அகமதி.

Last edited: