• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

8. புவனேஸ்வரி கலைசெல்வி - அது அவர்கள் பாடு

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,274
499
113
Tirupur
புவனேஸ்வரி கலைசெல்வி - அது அவர்கள் பாடு!
சாளரங்கள் வழி மேகத்தின் ஊர்வளத்தை ரசித்துக் கொண்டிருந்தான் வசந்த். அவன் ரசனையை இயற்கை களவாடி திரிந்தது. இரவின் ஏகாந்தம் தான் எத்தனை அழகு . தாய்நாட்டை விட்டு பிரிந்து வந்து மூன்று வருடங்கள் ஓடியே விட்டன . அங்கும் சரி இங்கும் சரி , உணவு , பழக்க வழக்கம் , இப்படி எது அவனுக்கு புதிதாய் தெரிந்தாலும் , இயற்கை அழகு மட்டும் யாதும் ஊரே என்று சொல்லிச் சிரித்தது. (அப்படியெல்லாம் நீங்க இயற்கையில் மட்டும் காதல் கொள்ள நாங்க விட்டிருவோமா ?)

ஏதேதோ காரணங்களுக்காக அலைப்பேசியின் திரை அவ்வப்போது மிளிர்ந்து அவனது கவனத்தை ஈர்க்க முயற்சித்தது . அவனுமே, ஒவ்வொரு முறையும் அவள் அழைக்க மாட்டாளா என்ற எதிர்ப்பார்ப்புடன் திரையை வருடினான். "பூமிகா" அவளது பெயரை வருடிக் கொடுத்தான் . "ஏன்டீ பேசவே மாட்டுற ? எப்படி என் குரல் கேட்காமல் உன்னால இருக்க முடியுது? என் குரல் கேட்ட சந்தோஷத்தில் நீ தூங்குறதும் , உன் மூச்சு காற்றின் சத்ததோடு என் வேலையை நான் பாக்குறதும் இதையெல்லாம் , நான் மிஸ் பண்ணுறேன் . உனக்கு எப்படி தூக்கம் வருது ? நியாயமே இல்லடீ" என்று அவளை சபித்துக் கொண்டிருந்தான் . அவனுக்கு பதில் அளிப்பதுபோல , spotify என்ற செயலியில் பூமிகா புதிய தொகுப்பை பதிவேற்றி இருந்தாள். மற்றவர்களுக்கு பூமிகாவின் பேச்செல்லாம் அவளின் திறமையின் வெளிப்பாடு; சிந்தனையின் பகிர்வு . ஆனால் வசந்துக்கு தெரியும் , கடல் தாண்டி மலைகள் தாண்டி வசிக்கும் தனக்காக அவள் அனுப்பும் தூது அதுவென . பரபரப்புடன் அவளது பதிவை கேட்க தொடங்கினான் .

"வணக்கம் ஹாய் நண்பர்களே. எப்பவுமே காதல் என்பது காவியம் ஓவியம்ன்னு நான் பேசி உங்களையும் ரசிக்க வெச்சு இருக்கேன் . மனசுக்கு குரல் இருந்தால் அது காதலை எப்படி எல்லாம் கொஞ்சும் கெஞ்சும்னு என் அனுபவத்தின் மூலமாக பகிர்ந்து இருக்கேன், ஆனால் மூளையும் நமக்காகதானே சிந்திக்கிறது அப்படின்னு எனக்கொரு நெருடல் ?

எப்படி இந்த கார்ப்பரேட் கம்பெனிகள் , சாக்லேட் , கோக் தான் செம்மனு நம்ம நம்ப வெச்சாங்களோ, அதே மாதிரி காதலும் அத்தியாவசியமானது; அது எல்லாருக்கும் நடக்கும்னு நம்மை சுற்றி இருக்குற எல்லாரும் வீணாக நம்ப வைக்கிறார்களோ ? பாரதியார் இந்த ஞாலமும் பொய்தானோன்னு கேட்குற மாதிரி, இந்த காதலும் பொய்தானோ ?

அல்லது காதல் சிலருக்கு மட்டுமே வாய்க்கின்ற வரம், அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மனசில்லாமல் எல்லாரும் யாரோ ஒருவருடைய காதலுக்காக , ஏங்கி , அழுது , சுயத்தையும் இழந்து வாழுறோமோ ?

நான் உன்னை காதலிக்கிறேன் , நீயும் என்னை காதலித்தே ஆக வேண்டும்னு சொல்லுறதக்கு , காதல் அதிகாரமும் கிடையாது. தயவு செஞ்சு காதலி என்னை என்று கேட்க அது யாசகமும் கிடையாது.வீழ்வது காதலாகினும் ,வாழ்வது நாமாகட்டும் என்று புதிய தத்துவத்துடன் விடைப்பெறுவது பூமிகா" உற்சாகமே இல்லாமல் பேசிய அந்த பதிவு வசந்தத்தை வெகுவாக குழப்பியது .

"என்னவாம் இவளுக்கு இப்போ ? இந்த நேரத்துல இப்படி பேசி என்ன சொல்ல முயற்சி பண்ணுறா ? காதலிக்க மாட்டாளோ இனி ? அப்போ நான் வேணாமா அவளுக்கு ? என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டாளா ? " என்று வாய்விட்டே சொன்னவனை மனசாட்சி விலாசி எடுத்தது .

"நீ மட்டும் என்ன அவளை காதலிக்கிறியா ? அவளை கல்யாணம் பண்ணிக்கலாம்னு இப்போ தோணுதோ ? " என்று மனமானது ஏளனமாய் கேட்க , தன் மனதில் இருக்கும் காதல் மொட்டவிழும் தருணம் அதுதான் என்பதை உணர்ந்தான் வசந்த். வசந்த் தன் உணர்வுகளை ஆராயும் அதே வேளையில், பூமிகாவின் நிலையை கண்டுவிட்டு வருவோம் .

கட்டிலில் படுத்திருந்தபடி வசந்தின் முகத்தையே புகைப்படத்தில் பார்த்துக் கொண்டிருந்தாள் பூமிகா. அந்த புகைப்படத்தில் இருந்து அவன் வெளிவந்துவிட மாட்டானா என்ற இறைஞ்சல் அவள் பார்வையில் , விசும்பல் அவள் பெருமூச்சில் . தலையணையை என்னவோ , அவன் மார்பை கட்டிக்கொண்டது போல , கட்டிக்கொண்டு தாபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் .

"போயிடு வசந்த் . என் மனசுல இருந்து போயிடு . என்னால நீ இல்லாமல் இருக்க முடியல . அதே நேரம் உன்கிட்ட என்னை ஏத்துக்கோன்னு வற்புறுத்தவோ, கெஞ்சவோ மனசில்லை . ஆறு வருஷமா நாம பேசிட்டு இருக்கோம் . எனக்கு நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே வரும் காதல், உனக்குள்ள லேசா கூட வரலையா ? சின்ன சலனமாக கூட என் நினைவு வரலையா ? என் ஒருதலைக் காதல் எனக்கு போதும்னு நான் நினைச்சேன் . உன்னை நினைச்சுக்கிட்டு , உன் குரலை கேட்டுகிட்டு சந்தோஷமா வாழ்ந்திட முடியும்னு நம்பினேன் . ஆனால் நீ எப்போ வேலைக்காக அயல்நாடு போனியோ அப்போ இருந்து நான் உன்னை இன்னும் அதிகமா தேட ஆரம்பிச்சுட்டேன் .

இனியும் என்னால இப்படி இருக்க முடியும்னு தோணல. நீ மாறமாட்ட.. நானே மாறி போயிடுறேன் . உன்னை நினைக்காம , இறுகி போயிடுறேன். அதைத்தவிர எனக்கு வேற என்ன பண்ணனும் தெரியலையே" என்று முணுமுணுத்தவள் அவனை மறக்க முயற்சிப்பதாக நினைத்துக்கொண்டு அவர்களின் பயணத்தை முதல் நாளில் இருந்து அசைபோட தொடங்கினாள்.

தமிழும் இசையும் அரங்கேறிய ஒரு மேடையில்தான் வசந்த்தும் பூமிகாவும் சந்தித்துக் கொண்டார்கள். அவனது குரலும் , இவளது தமிழ் உச்சரிப்பும் ஒருவரை ஒருவர் ஈர்க்கவே, பரஸ்பரமாக உரையாட தொடங்கினார்கள். இருவருக்குமே , வாழ்க்கையை ரசித்து வாழ்வதும் , சுற்றி நடக்கும் அனைத்தையுமே இலகுவான முறையில் கையாள்வதும் பிடித்து இருந்தது. அவர்களது உறவும் கூட அப்படித்தான் .

" அப்போ இனிமே நாம பெஸ்டிஸ் ஆ ? " என்று வசந்த் ஒரு மாதிரியான குரலில் கேட்க ,
"அந்த வார்த்தையே இப்போ கெட்ட வார்த்தை மாதிரி ஆகிடுச்சுல்ல .. கவலைப்படாதே .. உன்னோட சேர்ந்து நான் முஸ்தபா முஸ்தபா பாட மாட்டேன் " என்று சொன்ன பூமிகா கொஞ்சம் இடைவெளி விட்டு ,
"அதுக்காக டூயட்டும் கிடையாது டா " என்று அழகாய் சிரித்தாள் .
"அதேதான் நானும் சொல்லுறேன். எனக்குன்னு ஒரு உலகம் இருக்கு . அதுல நான் ஒவ்வொருத்தர்கிட்டயும் ஒவ்வொரு மாதிரி இருக்கேன் . அப்பாகிட்டே தணிஞ்சு , அம்மாகிட்ட அடாவடித்தனம் பண்ணி , வேலை இடத்துல சில பேர்கிட்ட ஸ்ட்ரிக்ட்டா , சில பேரை தட்டி கொடுக்கும் தோழனா , சூழ்நிலைக்கு ஏற்ற முகமூடி தேவைப்படுது . யாராவது ஒருத்தரிடமாச்சும் இந்த முகமூடி எதுவும் இல்லாமல் நினைச்சதை பேசணும் . அந்த ஒருத்தர் என் கருப்பு வெள்ளை பக்கங்களை பார்த்து என்னை ஜட்ஜ் பண்ண கூடாது நினைச்சேன். அந்த ஒருத்தர் தான் நீ ." என்று நெகிழ்வுடன் வசந்த் கூறினான் .
"சுருக்கமா சொல்லனும்னா நான் உனக்கும் நீ எனக்கும் ஒரு நடமாடும் டைரி, அப்படித்தானே ? " என்று சொன்னவளுக்கு தெரியவில்லை உள்ளம் உண்மையான அன்பிற்கு எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விடும் என்று .
கொஞ்சம் கொஞ்சமாக வசந்த் , பூமிகாவின் வாழ்வில் ஒரு அங்கமாகி போனான். பல நேரங்களில் அவளுக்கு அவனிடம் வாய்விட்டு எதையும் பகிர வேண்டிய நிலைகூட இல்லாமல் அவனே அதை கணித்து விடுவான். இவ்வளவு ஏன், அவள் தூக்க கலக்கத்தில் இருந்து , ஆழ்ந்த உறக்கத்திற்கு நழுவிச் செல்லும் நிரல் கூட அவனுக்கு அத்துப்படி .

சில நள்ளிரவுகளில் , வசந்த் சொல்லும் கதையை "ம்ம்ம்" கொட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டே இருக்கும் பூமிகா , சற்றே விழியை மூடினாலே , "ஏய் தூங்குமூஞ்சி , தூங்காத டீ " என்பான் . தூக்கிவாரி போடும் அவளுக்கு . எப்படித்தான் கண்டுபிடிக்கிறானோ என்று சலித்துக் கொண்டாலுமே சிலாகித்தும் கொள்வாள்.

இப்போதெல்லாம் வசந்த் மற்ற பெண்களை பற்றி பேசினாலோ , காதல் திருமணம் என்று சொன்னாலோ , பூமிகாவிற்கு நெருடலான உணர்வு ஏற்பட்டது . அவனது எதிர்கால கற்பனையில் கூட தான் ஒரு துணையாக இருப்பதுபோல அவன் நினைக்கவே இல்லையே என்ற ஏக்கம் அவளை வாட்ட ஆரம்பித்தது . காதலுடன் கண்ணாமூச்சி ஆடாமல் , தனக்குள் நிகழ்ந்துள்ள மாற்றத்தை இலகுவாக உணர்ந்துகொண்டாள் . அதை வெளிப்படுத்தவும் தயாரானாள் .

" சொல்லிடனும் ..காதல்தான்னு தோணிருச்சு . கண்டிப்பா வசந்த் கிட்ட சொல்லிரனும் . அவனே புரிஞ்சுப்பான், ஒரு நாள் காதல் சொல்லுவான்னு வாழ்க்கையை வேஸ்ட் பண்ண கூடாது .. ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன ? தன் காதலுக்காக தாந்தான் பேசணும் . வசந்த் கண்டிப்பா என்னை தப்ப நினைக்க மாட்டான் . அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுப்போம் . அவனுக்கும் பிடித்திருந்தால் நல்லது . பிடிக்கலைன்னா , கண்ணியமா அந்த உணர்வை ஒதுக்கி வெச்சுடனும் . என் காதல் என்னோடு இருக்கட்டும் . அவன் மேல எனக்கு இருக்குற நேசம் உண்மையது . அதை பாதுக்காக்க அவனுடைய அனுமதியோ இருப்போ கூட எனக்கு தேவையில்லை" என்று தானே சொன்னவள் , அன்று தெளிவாகத்தான் இருந்தாள் , அவனே நேரில் சந்திக்க வேண்டும் என்று அழைத்து பேச தொடங்கும்வரை !

" என்ன வசந்த் ட்ரீட் எல்லாம் தரணும்னு இங்க கூப்பிட்டுட்டு வந்திருக்க?" உணவகத்தில் அமர்ந்தபடி வினவினாள் பூமிகா .
"ஒரு விஷயம் சொல்லணும் பூமி"
"நானும் "
"நானும் ஒரு விஷயம் சொல்லணும்னு நீ சொல்லுவ, ரெண்டு பேரில் முதல்ல ஒருத்தர் சொல்லுவாங்க அதை கேட்டதும் இன்னொருத்தர் சொல்ல மாட்டாங்க ..அந்த சீன் தானே இது ? "என்று அவன் முந்திக்கொண்டு கேட்க , கேலியும் உற்சாகமுமாய் அவன் இருக்கிறான் என்பதை நன்கே உணர்ந்தாள் பூமிகா . அவளையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. அதே ஆவலுடன் ,
"ம்ம்ஹ்ம் இடியே விழுந்தாலும் பூமி சொல்ல வந்ததை சொல்லிடுவா .. நீ சொல்லு முதல்ல " என்றாள் .
"நான் வேலை விஷயமா சிங்கப்பூர் போறேன். இன்னும் ரெண்டே வாரத்துல"
"ஹே சூப்பர்டா ..கையைக்கொடு .. ச்ச வெளிநாட்டுக்கு எல்லாம் போக போற இந்த ஹோட்டல் தான் கிடைச்சதா ? 5 ஸ்டார் போயிருக்கலாம்ல ? "என்று அவள் உற்சாகமாய் கேட்க ,
"5 ஸ்டார் சாக்லேட் வேணும்னா வாங்கி தரேன் . உனக்கு அதுவே ஜாஸ்தி " என்று வாரிவிட்டு வேலைவாய்ப்பை பற்றி விளக்கி கூறினான் .

"ஓ .. அப்போ எப்போடா இனிமே வருவ ? "
"யாருக்கு தெரியும் ? வரலாம் வராமலும் போகலாம் "
"ஏய் !"
" பாப்போம் .. முதல்ல நல்லா வேலை பாக்கணும் , காசு சேர்க்கணும் . அப்பறம் அங்கேயே ஒரு பொண்ணு பார்த்து செட்டில் ஆயிடுவோம் . என்ன சொல்ற ? "என்று கண் சிமிட்டினான் . பழைய பூமிகாவாக இருந்திருந்தால் ,
"உனக்கெல்லாம் இங்கயே பொண்ணு செட் ஆவது ..இதுல பாரின் பொண்ணா ?" என்றிருப்பாள் . இப்போதோ , எரிச்சலாய் இருந்தது அவளுக்கு .
"விளையாடாம சொல்லு வசந்த் . பணம் சம்பாதிக்கிறது மட்டும் லைஃப் ஆயிடுமா ?"
"இல்லன்னுதான் நானும் நினைச்சேன் நேத்துவரைக்கும்"
"ஏன் அதுக்கப்பறம் எந்த போதி மரம் உன்னை மாத்துன்னுச்சு ? "
"போதி மரம் இல்லை .. "என்றவனின் குரல் கொஞ்சம் கடுமையாகி , பிறகு ஆழ்ந்த குரலில் நடந்ததை சொன்னான் .
"நேத்து என் பிரண்ட் அசோக் , தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டான் "
"அய்யயோ அசோக் அண்ணாவா ? என்னாச்சு அவருக்கு ? "
"அந்த நாய்க்கு என்ன ? இன்னும் உசுரோடத்தான் இருக்கான் . நேத்து எங்களை ஒரு பாடு படுத்திட்டான். "
"என்ன நடந்துச்சு ?"
"அவனும் அபர்ணாவும் நாலு வருஷமா லவ் பண்றாங்க தெரியும்ல ? அந்த பொண்ணு வீட்டுல விஷயம் தெரிஞ்சு , சொந்த வீடு கூட இல்ல , செட்டில் ஆகல உனக்கெப்படி பொண்ணு தர முடியும்னு பஞ்சாயத்து ஆயிடுச்சு . அந்த பொண்ணு இவனை உண்மையா காதலிச்சும்கூட , பெத்தவங்க எதிர்க்க விரும்பாம அமைதியா இருக்கா .ஆறு மாசத்துக்குள்ள , சொந்த வீடு வாங்கி செட்டில் ஆகி வந்து பொண்ணு கேட்கணுமாம் . இந்த மாதிரி முன்னேற்பாடு பத்தி பேசாம இத்தனை வருஷம் அப்படி என்னதான் காதலிச்சாங்க ? அவனுடைய பொருளாதார நிலைமை தெரியாதா அவளுக்கு ? ஆறு மாசம்னு காதலுக்கு கெடு வைக்கிறாங்க ." என்று பற்களை கடித்தான் .
"சரி இதுக்காக பணம்தான் எல்லாமேனு நீ நினைக்கிறது சரி வருமா ?
"கண்டிப்பா வரும் பூமி. பணம் தான் இங்க அல்ட்டிமேட் . அந்த பணம் இருந்திருந்தா இவன் காதல் கைகூடி இருக்கும்ல ? "
"இப்பவும் அந்த காதல் மொத்தமா உடையலயே வசந்த் ?
"ஆறு மாசத்துல பணம் இல்லன்னா உடைஞ்சிரும்" என்றான் கசப்பாய் . அவர்கள் காரசாரமாய் பேசிய வெகு சில உரையாடலைகளில் அதுவும் ஒன்றாய் மாறி போனது.
"சோ உனக்கு கல்யாணம் காதல் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். அப்படித்தானே ? " தீர்க்கமாக பூமிகா கேட்க ,
"மே பி " என்று தோள்களை உலுக்கினான் வசந்த் .
"சரி.."என்று தொண்டையை செறுமியவள் ,
" நான் சொல்ல வந்த விஷயம் என்னன்னா , நான் உன்னை ரொம்ப காதலிக்கிறேன் . நீ எனக்கு புடிச்ச மாதிரி இருக்கும்போதும் சரி , இதோ இப்போ என் கண்ணு முன்னாடி பைத்தியக்காரன் மாதிரி உளறும்போதும் சரி , நான் ரெண்டையும் ஒன்னாத்தான் பாக்குறேன் ; ரசிக்கிறேன்;நேசிக்கிறேன் . நீ சொல்ற மாதிரி உன் கருப்பு வெள்ளை பக்கங்கள் ஓரளவுக்கு எனக்கு தெரிஞ்சும் , அதில் நானும் ஒரு அங்கமா இருக்கணும்னு நினைக்கிறேன் . உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு எண்ணம் வந்துருச்சு ..

இரு நான் பேசி முடிச்சிடுறேன் . இது முழுக்க முழுக்க என் உணர்வு . நீ அந்த கதவை திறந்து உள்ள நடந்து வரும்போது என் மனசுக்குள்ள ஒரு மாதிரி உற்சாகம் , எனக்குள்ள புது ரத்தம் பாய்ஞ்ச மாதிரி சிலிர்ப்பா இருந்துச்சு, இதுதான் காதல் போல . இது இன்னைக்கு இல்ல , பல முறை உன்னால நான் இப்படி உணர்ந்து இருக்கேன் . ஒருவேளை இந்த உணர்வுதான் காதல்னா , நிச்சயமா அதே உணர்வு உனக்கும் வரணும் .

அது என் மூலமாக வந்தால் நான் சந்தோஷப்படுவேன் . ஒருவேளை வரலைன்னா ,அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ? என் காதல் , அது என் உணர்வு. என் உணர்வை ஒரு கேள்வியாக்கி அதுக்கான பதில் நீ கொடுன்னு நான் எப்பவும் உன் முன்னாடி நிக்க மாட்டேன் . அதே நேரம் எனக்குள்ள ஆழமான ஒரு காதல் இருக்குனு உனக்கு தெரியப்படுத்தாமல் இருக்க மாட்டேன் .அதான் சொல்லிட்டேன் . நீ சிங்கப்பூர் கிளம்பு . நானே ஷாப்பிங்கு எல்லாம் வரேன் . இதை ஒரு காரணம் காட்டி என்னை நீ ஒதுக்க வேண்டாம் . நான் சொன்னது உனக்கு ஒவ்வாமல் இருந்தா , இப்பவே அத மறந்திடு .

ஆனாலும் இப்போ உனக்கு ஷாக்கா இருக்கலாம் . சோ நான் இப்போ கிளம்புறேன் . இதப்பத்தி இனி பேச மாட்டேன் . மறுபடியும் , வாழ்த்துக்கள்டா " என்று மடமடவென பேசியவள், திரும்பியும் பார்க்காமல் சென்று விட்டாள் . இரண்டு நாள் அவனிடம் பேசவும் இல்லை . அந்த மௌனம் தேவைதான் என்று இருவருக்குமே தோன்றியது .மூன்றாவது நாளில் இருந்து , அவன் புறப்படுவதற்காக வேலைகளில் இருவருமாகவே மூழ்கி போனார்கள் .
விமான நிலையம்.
வசந்த்தை வழியனுப்பும் நாளுக்கு முன்னதாகவே நன்றாக அழுது தீர்த்துக் கொண்டாள் பூமிகா .ஏனோ , அவன்முன் கண் கலங்க அவளுக்கு விருப்பம் இல்லை . அவன் தன்னை கடைசியாக நேரில் பார்க்கும் தருணம் அதுவாக கூட இருக்கலாம் என்ற பட்சத்தில் சிரித்த முகத்துடன் வழியனுப்ப எண்ணினாள் . ஆனாலும் , வீங்கி போயிருந்த அவளது முகமே அவனுக்கு அனைத்தையும் சொன்னது .

"என்ன இன்னைக்கு மேக் அப் ஜாஸ்தியா இருக்கு ? " என்றான் வசந்த் .
"ம்ம்ம்.. நீ என் முகத்தை மறந்துட கூடாதுல? சிங்கப்பூர்ல எல்லாரும் அழகா இருப்பார்களாம் " என்றாள் .
"உன்ன எப்படி டீ மறப்பேன் " என்று வசந்த் கேட்கவும் , பூமிகவும் காதல் மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது .
"லவ் பண்ணிடாத ..ஆனா நல்லா டைலாக் பேசு " என்று மௌனமாய் சாடியது.
"கிளம்புறேன் பூமி " என்றவன் அவளை மெல்ல அணைக்க , அவன் மார்பில் தாராளமாக சாய்ந்து கொண்டாள் பூமிகா . இனியும் இந்த வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ . அவன் இடையை இரு கரங்களால் பூட்டிக் கொண்டு நன்றாக சாய்ந்து கொண்டாள் . அவனும் அவளை தடுக்கவில்லை . எப்படி தன்னை தேடுவாள் என்று அவனுக்கு தெரியும் .சொல்லப்போனால் அவன்தான் அவளுக்கு யாதுமாகி போயிருக்கிறான் என்பதை அவனும் அறியாமல் இல்லை . ஆனால் அந்த பந்தத்திற்கு அவன் பெயர் சொல்ல வில்லை.
"நீ ஒரு நாளில் எத்தனை தடவை அம்மான்னு சொல்லுவியோ , அதைவிட அதிகமா வசந்த்ன்னு சொல்லுவ" என்று சிலமுறை கூறி இருக்கிறான் . இனியும் எப்படி பெண்ணே ? என் பெயரை ஜபித்துக் கொண்டே காத்திருப்பாயா ? ஏக்கமாக எழுந்ததோ அந்த கேள்வி ? அதை வசந்த் ஆராயும் முன்னரே வானூர்தியில் ஏறி பல மைல்கள் கடந்திருந்தான்.
மூன்று வருடங்கள் கடந்திருந்த நிலையில் , பூமியின் காதலின் வெளிப்பாடு அவளையும் மீறி அவனை வந்தடையத்தான் செய்தது . அவளது புலனம் (வாட்ஸாப்) பதிவுகள் , Spotify பேச்சுக்கள் , கவிதைகள் என அவன் கடந்து வரும் ஒவ்வொரு தொகுப்பிலும் அவளது காதலை உணர்ந்தான் . அதை ரசித்தான் , அவ்வப்போது காதலிக்கப்படுவதின் சுவையையும் ருசித்தான் . "எங்கே போய் விடுவாள் , மெல்ல முடிவெடுப்போம் " என்று வசந்த் நினைத்த நேரம் தான் பூமிகாவின் மாற்றம் தொடங்கியது . அவனுடன் பேசும் நேரத்தை குறைத்துக் கொண்டவள் ஒரு வாரமாக நிறுத்தியே இருந்தாள். சோகப்பதிவுகளாய் பகிர்ந்து கொண்டிருந்தாள் , இறுதியாய் இதோ இப்படி பேசி வைத்திருக்கிறாள் .

"வெறுத்துவிடுவாளா என்னை ? " என்று பதறிய வசந்த் அப்போதுதான் தன்னிலை உணர்ந்தான். பூமிகா தன் அருகில் இருக்கும்போது நிச்சயம் காதல் எழவில்லை . அவளே காதல் சொன்னபோது, அவளது தெளிவும் தீர்க்கமும் , அவனை பாதித்தது. பிரியாவிடைக்கு அவள் அணைத்த விதம் ? அதை ஏன் தான் தடுக்கவும் இல்லை , நிறுத்தவும் இல்லை ? அப்போதே இதயத்தை மாற்றிக்கொண்டு விட்டோமா என்ன ? இந்த மூன்று வருடத்தில் எத்தனையோ புது அறிமுகங்கள் கிடைத்தும் , அவர்கள் யாரும் பூமிகாவிற்கு நிகராகவில்லையே ? சொல்லப்போனால் ,தொலைவிலும் அவனோடு அவள் மட்டுமே பயணித்தாள் . அவளை மீண்டும் அணைத்துக்கொள்ள ஆவல் பீறிட்டது .

இரண்டு நாட்கள் கடந்த நிலையில், முருகனின் சன்னதியின் மருகி கொண்டிருந்தாள் பூமிகா. "எனக்கு தைரியம் கொடு . நான் துவண்டு போக கூடாது . ஒன்னு என் காதலை சேர்த்து வை , இல்லன்னா பிரிவை தாங்குற சக்தி கொடு "என்று அவள் மனமுருகி வேண்டிட , பூமிகாவின் நெற்றியில் குங்கும கீற்றை வரைந்தது வசந்தின் விரல்கள் தான் .

"முருகனே வந்தாதான் கண்ணை திறப்பியா ? இந்த வசந்த் மாமா வேணாமா உனக்கு ? " என்று குறும்புடன் ஒலித்த குரலில் அதிர்ந்து அவள் கண் திறக்க, அவளை இழுத்து அணைத்துக் கொண்டான் வசந்த் . பூமிகாவின் கண்ணீர் நெஞ்சை நனைக்க, அவளது தாபம் அவனையும் அடைந்து இருவருக்கும் தொண்டை கனத்தது .

"ஒன்னுல..ஒன்னுலம்மா ..நான் வந்திட்டேன் பாரு . இனிமே உன்னை விட்டு போக மாட்டேன்"என்று அவளை மேலும் இறுக்கி கொண்டான் . பூமிகா , இன்னும் ஆச்சர்யம் குறையாமல் அவனை எட்டி பார்க்க "உனக்காச்சும் நான் கதவு திறந்து வரும்போது சிலிர்ப்பா இருந்துச்சு .. எனக்கு நீ முருகனை பார்த்துகிட்டு முதுகு காட்டி நிக்கும்போதே பட்டர்ப்ளை எல்லாம் பறக்க ஆரம்பிச்சுடுச்சு.. உண்மைதான் காதல் உணர்வு சொல்ல முடியாத அளவுக்கு சிலிர்ப்பா இருக்கு " என்று தன் மனதை வெளிப்படுத்தினான். இனி எதை கேட்டு எதை சொல்லி இடைவெளிக்கு ஈடு காட்டுவார்களோ , அது அவர்கள் பாடு! . இணைந்த இதயங்கள் நெடுங்காலம் வாழ்கவே என்ற வாழ்த்தோடு -சுபம் -
 

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
93
43
Tanjur
வாழ்த்துக்கள் புவி. ரொம்ப நாளாச்சு உங்க கதை வாசிச்சி. முன்னைக்கு இப்போ இன்னும் மெருகேரி இருக்கு வாழ்த்துக்கள்.
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
267
105
43
Theni
மிகவும் அருமை மா
வாழ்த்துக்கள் டா
 

Thani

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 2, 2023
88
27
18
Deutschland
"ம்"🤔காதலை சொல்லி மூணு வருஷம் ஆகிடுச்சு சாருக்கு இப்போ தான் காதல் பூ பூத்ததோ...😀
என்ன தைரியமா ..!அவள் காதலை உன்கிட்ட சொன்னாள் வசந்த் ......ஆனால் நீ இத்தனை வருடம் காத்திருக்க வைத்து விட்டாயே ....ஆனால் இந்த பூமி பொண்ணு டக்குனு ஏத்துகிட்டாளே......கொஞ்சம் சுத்தலில் விட்டிருக்கணும்🤣
"என்ன எழுத்தாளர் முறைக்கிறாங்க...😜செரி ...செரி..அது அவர்களின் பாடு ..😍
சூப்பர் ❤️
வெற்றிபெற வாழ்த்துக்கள் 💐
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
467
187
63
Coimbatore
அது அவர்களின் பாடு.....

காதலிப்பதும்
காதலிக்க படுவதும்.....
தேடுவதும்
தேடவைப்பதும்
சொல்வதும்
சொல்லாமல் செல்வதும்....
உறுகுவதும்
உருக வைப்பதும்
கரைவதும்
கரையவைப்பதும்
அழுவதும்
அழ வைப்பதும்
அணைப்பதும்
அரவணைப்பதும்.....
அது அவர்கள் பாடு...... 🤩🤩🤩🤩
வாழ்த்துக்கள் சகி
👏👏👏👏💐💐💐
 

வித்யா வெங்கடேஷ்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Apr 8, 2022
239
209
63
USA
Very very beautiful story ma!
பூமிகா கேரக்டர் simply superb. எதுவாக இருந்தாலும் ஏற்கும் அவளுடைய மனப் பக்குவம் கிரேட்🤩🤩🤩🤩

காதல் வந்தபோதும் அவரவர் இயல்பு நிலை மாறாமல், “நான் இப்படித்தான்” என்று இருந்தது மிகவும் பிடித்திருந்தது.

உங்க எழுத்துநடையும் ரொம்ப அழகா இருந்துது. பூமிகா பேசும் தத்துவங்கள் எல்லாம் ஒரு RJ பேசுவது போலவே சூப்பராக இருந்தது.

One kind suggestion... paragraph structure கொஞ்சம் improve பண்ணா படிக்க better ra இருக்கும் மா.....

Keep rocking💕💕💕💕💕
 

Viswadevi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
324
29
63
Kumbakonam
சூப்பர் சிஸ் கதை அருமை. பூமிகாவோட சிந்தனை சூப்பர் 💕 அவளது காதலை வசந்திற்கு உணர்த்திய விதம் சூப்பர்