Home Anti Heroineஅகானா – 72

அகானா – 72

by Vathani S

அகானா – 72

மருத்துவமனையில்,

மகிழினியின் கையைப் பிடித்தபடியே வெகுநேரம் அமர்ந்திருந்தான் ஆரியன். 

அவனால் மகிழினியை இப்படி பார்க்கவே முடியவில்லை. ‘ஏன் இப்படி நடந்தது.?’ என்ற கேள்வியும், ‘என்னைப் பார்க்காமல், அவளை நான் இதில் இழுக்காமல் இருந்திருந்தால் எந்த பிரச்சினையும் இருந்திருக்காதே’ என பதிலுமாய் பார்வையால் அவளை வருடியபடியே அமர்ந்திருந்தான்.

சில நிமிடங்களில் அறைக் கதவு திறக்கப்பட, யாரென்று பார்க்க சங்கர்தான் சோர்ந்த தோற்றத்துடன் உள்ளே வந்தார்.

“வாங்க அங்கிள்..” என்றவனைப் பார்த்து மெதுவாக தலையசைத்தபடி அவனுக்கு எதிர்புறமாக போய் நின்று மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் சங்கர்.

“சாரி அங்கிள்..” என்றான் ஆரியன் கரகரப்பாக..

பதில் சொல்லவில்லை சங்கர். மனம் மகளின் வலிகளை உணர்ந்தது போல, அவரின் முகம் கசங்கி விழியில் நீர் தேங்கிவிட்டது.

“நான் அவளைப் பார்க்காமலே இருந்திருக்கலாம்..” என்றான் குரலில் வேதனையோடு.

“இதுதான் நடக்கனும்னு இருந்திருந்தா அதை யாராலயும் தடுத்திருக்க முடியாது மாப்பிள்ளை. என் பொண்டாட்டி செஞ்ச பாவத்துக்கு எங்களுக்கு தண்டனை வேண்டாமா?” என்றவருக்கு தேங்கியிருந்த விழிநீர் சடுதியில் கண்களைத் தாண்டி வலிந்தே விட்டது.

‘அப்படியெல்லாம் சொல்லாதீங்க அங்கிள்..’ என ஆரியன் பேச்சுக்கு கூட அந்த வார்த்தையை சொல்லவில்லை. மனைவியின் முகத்தை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான். 

‘யாரோ செய்த பாவத்திற்கான தண்டனை தன் மனைவிக்கா?’ என்ற கேள்வி மட்டும் பெருமரமாய் வளர்ந்து நின்றது அவன் மனதில்.

“மாப்பிள்ளை நீங்க போய் மஞ்சுவை பாருங்க. பாப்பாவை நான் பார்த்துக்கிறேன். கண்ணாவும் விழிக்க நேரமாகும்னு சொன்னீங்களே..” என அவனின் முகத்தில் தெரிந்த வேதனையில் பேச்சை மாற்றினார் சங்கர்.

“அகி வர வரைக்கும் சீனியர் விழிக்காம இருந்தா பரவாயில்லை. அவர் முழிச்சிட்டா அகியைத்தான் முதல்ல தேடுவார். அதுக்குள்ள அகி வந்துடனும்..” என பெருமூச்சு விட்டான்.

“ம்ம்ம்.. ரவியை கூப்பிட்டு வந்துட்டு இருக்கிறதா நவீன் போன் பண்ணான்..”

“ம்ம் எனக்கும் கால் பண்ணார். எல்லாம் ரெடியாதான் இருக்கு. சார் வந்துட்டா சர்ஜரி ஸ்டார்ட் பண்ணிடலாம்.” என்றவன், “அகி இங்க வந்துருக்கவே கூடாதுனு இப்போ எல்லாம் எனக்கு அடிக்கடி தோனுது. சீனியரோட லவ் பியூர்னு தெரியும். அந்த லவ் அவளைத் தேடி வர வைக்கும்னு நான் நினைச்சேன். ஆனா அகி இங்க வந்திருக்கான்னா அதுக்கு காரணம் சீனியர் தான்.” என்றான் சற்றே கோபமாக.


‘என்ன?’ என அவர் வேகமாக மருமகனைப் பார்க்க,

“ஹ்ம்ம்.. என்ன தான் இவங்க எல்லாரையும் பழி வாங்கனும், பார் என் அம்மா என்னை எப்படி வளர்த்திருக்காங்கன்னு காட்டிக்கனு இங்க வந்திருந்தாலும், சீனியர்கிட்ட ‘நீ இல்லைன்னா நான் ஒன்னும் ஒடைஞ்சி போய்ட மாட்டேன்னு காட்டிக்கத்தான் வந்திருக்கான்னு நினைக்கிறேன். ஆனா..” என நிறுத்த,

“ஆரம்பத்துல கண்ணா மேலத்தான் எல்லா தப்புமே. அவன் அம்முக்கிட்ட அப்படி நடந்திருக்கக்கூடாது. எல்லாம் அவங்க அம்மாவும், பாட்டியும் மஞ்சுவைப் பத்தி தப்பாவே சொல்லி வளர்த்தது தான் காரணம். அதோட தாக்கமும் கோபமும் தான் அம்முக்கிட்ட அவன் பேசினது. ஆனா அதுக்கு அம்முவோட பதில் நிச்சயம் இவ தப்பு செய்றவங்க இல்லன்னு அவனுக்கு புரிஞ்சிருக்கும். என்கிட்ட வந்து சொல்லவும், நானும் அவனை சத்தம் போட்டு இனி அம்மு வாழ்க்கையில நீ எங்கேயும் இருக்கக்கூடாதும் சொல்லிருந்தேன். எல்லாம் நல்லாத்தான் போய்ட்டுதான் இருந்தது. அம்மு இங்க வர வரைக்கும்..” என அவரும் நிறுத்த,

“எவ்ளோதான் கோபம் இருந்தாலும், ரெண்டு பேரும் அவங்க காதலை மறைக்கல, மறக்கல இல்ல.” என்றவன் “சீனியர் மட்டும் அகி கழுத்துல அப்படியொரு சிச்சுவேஷன்ல தாலியைக் கட்டலன்னா, எப்பவும் அவங்க கல்யாணம் நடந்திருக்காது. மஞ்சும்மாவும் அப்படித்தான் சொன்னாங்க.” என பெருமூச்சு விட்டவன்,

“இதுவரைக்கும் அகி எதுலயும் நேரடியா இறங்கல. ஆனா இனி அப்படி இருப்பான்னு எனக்குத் தோணல. அவளோட காயம் அதிகம். அதுக்கான மருந்தை தேடி போட்டுக்கிறதுக்கு முன்னாடி, அந்த காயத்தை இன்னுமே பெருசு பண்ணிப்பா. அந்த காயத்தோட வலி அதிகமாகும் போதெல்லாம், அவங்க மேல கோபம் அதிகமாகும். தன்னோட கோபமும், வெறியும் அடங்கின பிறகுதான் மருந்தே போட்டுப்பா..” என்று முடித்தான்.

சங்கருக்கும் அப்படித்தான் தோன்றியது. தன் பதவிக்காகத்தான் அகானா அமைதியாக இருக்கிறாளோ என்று நினைத்திருந்தான்.

சங்கரின் யோசனையான முகத்தைப் பார்த்தபடியே ஆரியன் வெளியேறி, மஞ்சுவின் அறைக்குச் சென்றான்.

அதுவரை அவரின் விழிகள் கதவையேப் பார்த்துக் கொண்டிருந்திருக்கும் போல, இவனைப் பார்த்ததுமே விழியோரம் நீர் வடிய ஆரம்பித்தது.

“மஞ்சு ம்மா..” என வேகமாக சென்று அவரின் கையைப் பிடித்துக் கொண்டவன் “மகியும், கண்ணாவும் எப்படி இருக்காங்க..” என்றார் மிகவும் சிரமப்பட்டு.

“ரெண்டு பேருமே நல்லா இருக்காங்க. அவங்களுக்கும் கால்ல பிராக்ஷர் ஆகிடுச்சு. இல்லைன்னா இப்போ உங்களை வந்து பார்க்க சொல்லிருப்பேன். அப்போவும் சீனியர் வந்து பார்க்குறேன்னு தான் சொன்னார், அகி தான் தடுத்து வச்சிருக்கா. நீங்க சர்ஜரி முடிஞ்சு வாங்க. அவங்க ரெண்டு பேரையும் வீல் சேர்லயே அழைச்சிட்டு வரேன்..” என தன் துக்கத்தை வெளியில் காட்டாமல் மிகவும் சாதாரணமாக பேசினான் ஆரியன்.

அதற்கு அவன் மிகவும் கஷ்டப்பட வேண்டியதாக இருந்தது.

அப்போதும் மஞ்சரி அவனை நம்பாத பார்வை பார்க்க, “நிஜமாவே மஞ்சு ம்மா.. இன்னும் கொஞ்ச நேரத்துல அகி வருவா.. வந்ததும் நீங்களே கேளுங்க..” என்று உறுதியாக கூற, மீண்டும் கண்களை மூடிக் கொண்டார் மஞ்சரி.

‘ஊப்ஸ்’ என அவருக்குத் தெரியாமல், அதுவரை அடக்கிவைத்த மூச்சை விட்டான்.

இங்கு ரஞ்சனிக்கு அழைத்த நித்யா “இப்போ உங்களுக்கு நிம்மதியா?” என ஆரம்பிக்க,

“ஏய்.. என்ன பேசுற? உன்னால முடியாததை அந்த ஓடுகாழிய வச்சு சாதிச்சிட்டன்னு மிதப்புல பேசுறியா? எங்க குடும்பத்தைய சிதைச்சிட்ட இல்ல, நீயெல்லாம் நல்லாவே இருக்கமாட்ட..” என பதிலுக்கு ரஞ்சனியும் பேச, 

“ச்சீ.. நீயெல்லாம் என்ன பொம்பள.. அங்க அடிப்பட்டு கிடக்கிறது உன்னோட புள்ளைங்க. அதுங்க மேல கூட உனக்கு பாசம் இல்லைல்ல.. அப்படி என்ன அந்த மைதிலி மேலயும், அவ பணத்து மேலையும் உனக்கு ஆசை.. இன்னைக்கு உன் புள்ளைங்க ரெண்டு இப்படி படுத்திருக்க காரணமே அவதான். அப்போ கூட நீ அவளுக்கு தான் காவடி எடுப்ப என்ன? நீ திருந்தமாட்ட, திருந்தவேமாட்ட. உனக்கெல்லாம் இன்னும் எவ்ளோ பட்டாலும் புத்தி வராது. யாருமே இல்லாம தெருவுல நிக்கும் போது தான் அவளைப்பத்தி தெரியும்..” என நித்யாவும் ஆக்ரோஷமாக கத்த,

“ஏய் போதும் நிறுத்து. என்னை விட என் புள்ளைங்க மேல அண்ணிக்குத்தான் பாசம் அதிகம், அவங்க ஏன் அப்படி பண்ணிருக்கப் போறாங்க. நீங்க எல்லாம் சேர்ந்து இன்னும் என்ன என்னவெல்லாம் பழி போட போறீங்க.. எதார்த்தமா நடந்த ஒரு ஆக்சிடென்ட உங்க வசதிக்கு எப்படியெல்லாம் திரிச்சு சொல்ல முடியுமோ சொல்லுங்க..” என ரஞ்சனியும் பதிலுக்கு கத்த, 

“அவளே வந்து இதெல்லாம் நான்தான் செஞ்சேன்னு சொன்னாக்கூட நீ நம்பமாட்ட, ச்சீ ப்போ.. அவ கையாலதான் உனக்கு சாவு வரப்போகுது.” என்று எரிச்சலும், கோபமுமாய் கத்தி, நித்யா போனை வைத்த நேரம், அகானாவிடமிருந்து போன் வந்தது.

ஒரே ரிங்கில் போனை எடுத்தவள் “அம்மு..?” என்றதும்,

“அங்க.. உங்க வீட்டுல யார் இருக்கா? அண்ணியை யார் அவருக்கு துணை இருக்கச் சொன்னது.. உங்களூக்கு தெரிஞ்சவங்க யாரும் பக்கத்துல இருந்தா உடனே உங்க வீட்டுக்கு போக சொல்லுங்க. அண்ணியை சீக்கிரம் வெளியே கூப்பிட்டு வாங்க..” என வேக வேகமாக பேச, பக்கத்தில் நாராசமாக ஒலிக்கும் மைதிலியின் சிரிப்பு சத்தம், சூழ்நிலையின் தீவிரத்தை நித்யாவிற்கு விளக்க, நொடியும் தாமதிக்காமல் ஊரில், தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் உறவினர்களுக்கு அழைத்து வேகமாக அங்கு போக சொல்லிவிட்டு தானும் உடனே கிளம்பினாள்..

மைதிலியின் குரூர வெற்றியை வெறித்துப் பார்த்த அகானா யோசித்தது எல்லாம் ஒரு நொடி தான். 

அடுத்த நொடியே மிக கேவலமாக மைதிலியைப் பார்த்து சிரித்துவிட்டு எழுந்துகொள்ள, அதே நேரம் அந்த அறைக்குள் தன் படையுடன் நுழைந்தார் துரைப்பாண்டி.

ஆட்களுடன் உள்ளே வந்த துரைப்பாண்டியைப் பார்த்து திக்கென்றிருந்தாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

“பாப்பா நீ கிளம்பு.. இனி நான் பார்த்துக்கிறேன்..” என்றவரிடம் பதில் கூறாமல் மைதிலியைப் பார்த்தவாறே, ‘ஒரு லக்ஷரி சூட்ல இவங்களை விட்டுடுங்க. எதுக்கும் இவங்களுக்கு குறை இருக்கக்கூடாது, நான் வர வரைக்கும் இவங்க அங்கதான் இருக்கனும். என்னோட அனுமதி இல்லாம இவங்க மேல யாரோட சுண்டு விரலும் படக்கூடாது.” என அழுத்தமாக கூற, துரைப்பாண்டிக்கு அகானாவின் மனநிலை புரியவில்லை.

ஆனால் மைதிலியின் தண்டனையை அவள் மட்டும் தான் தீர்மாணிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள் என்று புரிந்து போனது. அதனால் ‘சரி’ எனும் விதமாக தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார்.

இவர்களின் பேச்சைக் கேட்ட மைதிலிக்கு புருவம் உயர்ந்ததே தவிர, அந்த திமிர் பார்வை மட்டும் மாறவில்லை. 

அதை கவனித்தவாறே “உன்னை நான் ரொம்ப சாதாரணமா எடை போட்டுட்டேன்.. இல்ல இல்ல ‘நீ ரொம்ப பாவம்னு’ என் அம்மா சொன்னதால ‘உண்மையா’ இருக்குமோன்னு நினைச்சு அதுபாட்டுக்கு கத்திட்டு போகட்டும்னு விட்டுட்டேன். ஆனா இப்போவும் அப்படியே விடுவேன்னு நினைச்சிடாத.. ஹ்ம்ம் மீட் யூ சூன், பை..” என மைதிலியைப் பார்த்து நிதானமாக, அதே நேரம் அழுத்தமாக கூறி அகானா கிளம்ப, இப்போதுதான் மைதிலிக்கு பயம் பிடித்துக் கொண்டது.

“அண்ணா என்ன பண்றீங்க.?” என தன் கையை பலம் கொண்டமட்டும் உருவிக்கொள்ள போராடிக் கொண்டிருந்தாள் ராகினி.

“இப்படி வயித்த தள்ளிட்டு இருக்குற உன்னை நான் என்ன செய்ய முடியும்.?” என நக்கலாக கேட்டவன், மைதிலியால் விலைக்கு வாங்கப்பட்ட, ஆண் செவிலியர்.

அவன்தான் அழகரைப் பார்த்துக்கொள்ள ஆகனால் நியமிக்கப்பட்டவன், பின் மைதிலியின் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த வேலைக்கு ஒப்புக்கொண்டவன்.

“டேய் என்ன பேசிட்டு இருக்க? இது மட்டும் எங்க வீட்டாளுங்களுக்கு தெரிஞ்சா உன்னை உயிரோட கொழுத்திருவாங்க..?” என ராகினி பதட்டத்திலும் பயத்திலும் கத்த,

“ஹாஹா.. என்னம்மா இன்னும் சின்னபிள்ளத்தனமாவே யோசிச்சு பேசிட்டு இருக்க? உங்க வீட்டாளுங்களுக்கு எப்படி தெரியும்? அதுக்கு நீ போய் சொல்லனும்ல.. அப்படி நீ போய் சொல்ல முதல்ல நீ உயிரோட இருக்கனும்ல..” என நக்கலாக பேசியபடியே அவளை அங்கிருந்த சோபாவில் உட்கார வைத்து கட்டினான்.

“என்ன.. என்ன சொல்ற.?” என்ற ராகினிக்கு உடலெல்லாம் பயத்தில் நடுங்கத் தொடங்கியது.

“ஆமா உங்க வீட்டாளுங்களுக்கு தெரிஞ்சு, அவங்க வந்து என்னை கொழுத்தி போடுறதுக்கு முன்னாடி நான் உன்னை கொழுத்த போறேன்.. புரியுதா? உன்னை கொல்றதுக்கு தான் எனக்கு பணமே கொடுத்துருக்காங்க..” என்றவனின் முக பாவனையே உண்மை என்பதை சொல்லாமல் சொல்ல, ராகினியின் உடல் வெடவெடக்கத் தொடங்கியது.

அதைக் கண்டுகொள்ளாமல் கிச்சன் சென்று ஜன்னல்களை எல்லாம் மூடிவிட்டு, கேஸை திறந்து விட்டபடியே அவளைப் பார்த்து நக்கலாக சிரித்தான்.

“தாத்தா இருக்கார்..” என்றாள் மூச்சு வாங்க,

“வாழவே ஆரம்பிக்காத உனக்காகவே நான் வருத்தப்படல, வாழ்ந்து முடிச்ச அந்த கிழவனுக்காகவா நான் வருத்தப்பட போறேன். ரெண்டு பேரும் ஒன்னா போய் சேருங்க..” என்றபடியே, அவள் இருந்த கதவை மூடிவிட்டு வெளியில் வந்தான்.

You may also like

2 comments

M. Sarathi Rio March 13, 2026 - 7:22 pm

இன்னுமா அந்த மைதிலி உசிரோட சுத்திக்கிட்டிருக்கு…?

😀😀😀
CRVS (or( CRVS 2797

Reply
Subhashini A March 13, 2026 - 9:02 pm

idhu aedho pali aadukku pullu katta potta madhiri irukke

Reply

Leave a Reply to Subhashini A Cancel Reply

About Me

Featured