Home Love - Family - Romanceஉனக்கெனப் பிறந்தவள் நானே – 14.

உனக்கெனப் பிறந்தவள் நானே – 14.

by infaalocious

பகுதி – 14.

சுமித்ரா அன்று தன் தோழியரைப் பார்க்க வந்திருந்தாள். அவளுடனே அன்புச் செல்வியும் வந்திருக்க, இருவரும் மற்றவர்களுக்காக காத்திருக்கத் துவங்கினார்கள்.

“அன்பு… நீ நிஜமாத்தான் சொல்றியா?” சுமித்ரா கேட்க, அவளை ஆனமட்டும் முறைத்தாள்.

“இதென்ன கேள்வி சுமி? இதோட லட்சம் முறை சொல்லிட்டேன்” அன்புச் செல்வி கோபமாகவே கத்தினாள்.

“இல்ல… கல்யாணத்துக்கு உங்களை எல்லாம் அழைச்சுட்டு, பாண்டீஸ்வரியை மட்டும் அழைக்காமல் விட்டால், அது நல்லாவா இருக்கும்?” என்றவளுக்கு, பாண்டீஸ்வரியை அழைக்காமல் இருப்பதில் உடன்பாடே இருக்கவில்லை.

“நான் எதுக்காக சொல்றேன்னு உனக்குப் புரியலையா?” அன்புச் செல்விக்கு தோழியின் மனம் புரியவே செய்தது.

“அது…” என்றவளுக்கு, அதற்கு மேலே என்ன சொல்வதெனத் தெரியவில்லை.

“கல்யாண நாளில் ஏற்கனவே ஆயிரம் விமர்சனம் வரும். நீ அதையெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் இந்த ஈசு கொஞ்சம் ஓவராப் பண்ணுவாடி. ஏற்கனவே அவளுக்கு உன்னைக் கண்டால் ஆகாது… இதில்…” என்றவள் ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.

“அவளைப்பற்றிதான் நமக்கு ஏற்கனவே தெரியுமே…” பட்டென இடை புகுந்து சொன்னாள்.

இப்படிச் சொன்ன தோழியை ஆதூரமாக ஒரு பார்வை பார்த்து வைத்தாள் சாருமதி. இப்படி ஒரு மனது… யாரையுமே காயப்படுத்திவிடக் கூடாது என நினைக்கும் மனம் யாருக்கு இருக்கும்? அதுவும் கொஞ்சம் பணம் இருந்தாலே சில பெண்கள் யாரையும் மதிப்பதில்லை.

ஆனால், அழகும், பணமும் ஒருங்கே இருந்தும், கொஞ்சம் கூட ஈகோ இல்லாத அவள் மனதைக் கண்டு வியந்தாள்.

“சில விஷயங்களை நாசூக்கா கையாளணும்னு அவளுக்குத் தெரியாது சுமி. அது உனக்கான நாள்… அந்த நாளில் அவ வேணும்னே பேசினால் நல்லா இருக்காது” நிலைமையை அவளுக்கு விளக்க முயன்றாள்.

“உன்னை மாதிரி அவ கிடையாதுன்னு சொல்ற” சுமி தோழியை நேருக்கு நேராகப் பார்த்தாள்.

அன்புச் செல்வியுமே முதல் முதலில் கார்முகிலின் புகைப்படத்தைப் பார்த்தது நினைவுக்கு வந்து போனது. இவர்கள் ஐந்துபேர் தோழியர் என்றாலும், சுமித்ராவும், அன்புச் செல்வியும் நிறையவே நெருக்கமானவர்கள்.

மற்றவர்கள் யாரிடமும் சொல்லாத, சொல்ல முடியாத அனைத்து விஷயங்களையும் இவர்கள் இருவரும் பகிர்ந்து கொள்வார்கள். எனவேதான் தனக்குப் பார்த்திருக்கும் கார்முகிலின் புகைப்படத்தை சுமித்ரா தோழியிடம் காட்டினாள்.

அதைப் பார்த்த அன்புச் செல்வி, ஒரு நொடி முழுதாக அதிர்ந்து போனாள். ஏனென்றால் தோழி எப்படியான பேரழகி என அவளுக்குத் தெரியும். அவளது முகம் மட்டும் அழகு கிடையாது. அவளது மனமும் அத்தனை அழகானது.

அப்படி இருக்கையில்… கார்முகில் போன்ற ஒருவன் அவளுக்கு கணவன் என்றால் அவளால் ஏற்கவே முடியவில்லை. ஆனால் தோழியைப் பற்றி முழுதாக தெரிந்தவள் என்பதால் தன் அதிர்வை நொடிகளுக்குள் மறைத்துக் கொண்டாள்.

“உன்னவரைப் பற்றிச் சொல்லு சுமி…” அவனைப் பற்றிய தன் முதல் நினைப்பை சொல்லாமல், தோழியிடமே கேட்டாள்.

தோழியின் அதிர்ச்சி, அதை அவள் மறைத்துக்கொண்ட விதம் என அனைத்தையும் சுமித்ராவும் கவனிக்கவே செய்தாள். ‘என்னடி இது?’ எனவாவது தோழி அங்கலாய்ப்பாள் என சுமித்ரா எதிர்பார்த்தாள்.

அப்படி எதையும் கேட்காமல், ‘நீயே சொல்…’ என அவள் கேட்டது அவளை ஆச்சரியப்படுத்தியது.

“எப்படி அன்பு இப்படி இருக்க?” சுமி கேட்டு வைக்க,

“யாரு நானா?” அவளிடம் திருப்பிக் கேட்டாள்.

“அவரோட ஃபோட்டோவை யார்கிட்டே காட்டினாலும், எல்லோருமே என்னை பைத்தியம் மாதிரி பார்க்கறாங்க. உனக்கு ஏன் இந்த தலையெழுத்துன்னு கேட்கறாங்க. முதல் முறையா, எதிர்மறையான எந்த கேள்வியோ, விமர்சனமோ செய்யாத ஒரே ஆள் நீதான்” என்றவள் தோழியை கட்டிக் கொண்டாள்.

“அவங்களுக்கு எல்லாம் என் ஃப்ரண்டு சுமியைத் தெரியாதே” என்றவள், அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டாள்.

“தேங்க்ஸ் அன்பு…” சுமித்ரா உணர்ந்து சொன்னாள்.

“இப்போ என்கிட்டே நீ அடிதான் வாங்கப் போற… நீ சொல்லு…” அவளிடம் கேட்டாள்.

அவனைப் பற்றி சுருக்கமாகச் சொன்னவள், தான் நேரில் அறிந்துகொண்ட விஷயங்கள், அவளைப் பெற்றவர்கள் சொன்னது என அனைத்தையும் அவளிடம் சொன்னாள்.

“என்னை வேல்யூ பண்ற ஒருத்தர் கிட்டே இருக்கணும்னு மட்டும்தான் நான் ஆசைப்பட்டேன் அன்பு. என்னை உடைமையா பார்க்காமல், அவரோட வாழ்க்கையா என்னைப் பார்ப்பார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு” அவள் அழுத்திச் சொன்னாள்.

“உனக்கு அந்த நம்பிக்கை இருந்தால், நான் அதை மதிக்கறேன் சுமி. உன்மேலே எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” அன்புச் செல்வி சொல்ல, தோழியர் இருவரும் அமைதியாக சில நொடிகள் அமர்ந்து இருந்தார்கள்.

அன்புச் செல்விக்கும் உள்ளுக்குள் சிறு மனத் தாங்கல் இருந்தாலும், அழகை விட வாழ்க்கையில் பல விஷயங்கள் முதன்மையாக இருக்கிறது என அவளுக்கும் தெரியுமே. எனவே தோழிக்கு தன் வாழ்த்தை மட்டும் சொன்னாள்.

“நானும் உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன் சுமி…” என்றவள் கொஞ்சம் தயங்கினாள்.

“என்னன்னு சொல்லு அன்பு… ஏன் தயங்கற?”.

“அது… உன் கல்யாணத்துக்கு என்னால் இருக்க முடியாது சுமி” கண்களால் தோழியிடம் இறைஞ்சினாள்.

“என்ன அன்பு சொல்ற? நீ இல்லாமல் எப்படி?” என்றவளுக்கு மனம் சுணங்கியது.

“எனக்கு ஆன்சைட் ஆஃபர் வந்திருக்கு சுமி. எல்லாமே ரெடியா இருக்கு, நான் எப்போ வேணா கிளம்பிப் போக வேண்டி இருக்கும். ஆனா என்னோட வாழ்த்து எப்பொழுதுமே உனக்கு உண்டு சுமி… சாரி…” என்றவளுக்கு இப்படியாகிவிட்டதே என மனதுக்குள் பெரும் வருத்தம் இருக்கவே செய்தது.

சுமித்ராவுக்கும் உள்ளுக்குள் பெரும் வருத்தம் எழுந்தாலும் அதை மறைத்துக் கொண்டாள். “இதுக்கெதுக்கு மன்னிப்பெல்லாம் கேட்கற? இது எவ்வளவு பெரிய நல்ல விஷயம் தெரியுமா? நான்தான் உனக்கு என்னோட வாழ்த்துக்களை சொல்லணும்” உளமார வாழ்த்தினாள்.

“இப்போ நீ வெளிநாடு கிளம்பிப் போனால் எப்படி உன் ஃபேவரிட் ரைட்டரோட கதை புக் எல்லாம் தூக்கிட்டுப் போவ? உனக்கு வேற கதை புக் படிக்கலைன்னா தலை வலிக்கும்னு சொல்வியே…” பேச்சை மாற்ற முயன்றாள்.

“நான் இப்போ படிக்கற இன்பா அலோசியஸ் அவங்க புக் எல்லாம் இப்போ யூடியூப்லையே ஆடியோ நாவலா கிடைக்குது. Infaa ALocious Novelsன்னு போட்டால், அவங்க கதையை சிரமமே இல்லாமல் கேட்கலாம்.

“என்னோட ட்ராவல், ஃப்ரீ டைம்… குக்கிங் டைம்… இப்படி எதுவா இருந்தாலும் ஹெட் ஃபோனை போட்டுட்டு கேட்க வேண்டியதுதான். அதெல்லாம் இல்லாமல் நம்மளால் முடியாதும்மா” அவள் போலியாக அலறினாள்.

“அடிப்பாவி… யார் யாரோ என்னென்னவோ கண்டு பிடிக்கிறாங்க. நீ புத்தக லக்கேஜை தூக்கிட்டு போகாமல் இருக்க, ஆடியோ நாவல் கண்டு பிடிச்ச பார்த்தியா… அங்கே இருக்கற. அதில்தான் நிறைய விளம்பரம் வருமே…” அவளிடம் கேட்டாள்.

“அதுக்குத்தான் ப்ரீமியம் சப்ஸ்க்ரைப் பண்ணி வச்சிருக்கேன். தொல்லையே இல்லாமல் கேட்கலாம்…” கதைகள் மீதான அவளது ஆர்வம் அதில் தெரிய, சுமித்ராவுக்கு ஆச்சரியம் தான்.

“எனக்கெல்லாம் கதை புக் எடுத்தால்… அடுத்த பத்தே நிமிஷத்தில் தூக்கம் வந்துடும். நீ விடிய விடிய புக் படிக்கற… ஹப்பா… பெரிய சாதனை தான்…” என்றவள் தோழியின் போக்குக்கு சென்றாள்.

அன்றைக்கே அன்புச் செல்வி அவளிடம் சொன்ன விஷயம் ஒன்றுதான். “என்ன ஆனாலும் சரி… நம்ம ஈசு கிட்டே மட்டும் நீ சொல்லவே கூடாது” பிடிவாதமாகச் சொன்னாள்.

“நான் சொன்னால் நீ கேட்பன்னா இதைக் கேட்கற அவ்வளவுதான்” அன்புச் செல்வி முடித்துவிட, சுமித்ரா கேட்டுக் கொண்டாள்.

அவள் சொல்லிவிட்டாள் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இப்பொழுது கூட பாண்டீஸ்வரியை அவள் அழைக்கவில்லை. தோழியின் பேச்சை அவள் கேட்டுக் கொண்டாள். ஆனாலும் சுமித்ராவுக்குள் ஒரு தடுமாற்றம்.

சட்டென யாரையும் ‘இப்படித்தான் அவர்கள்’ என அவளுக்கு முத்திரை குத்தப் பிடிக்காது. முதல் முதலாக சந்திக்கும் நபர்களிடமே அவள் அப்படித்தான் என்கையில், அவளோடு பழகிய தோழியிடம் அவள் எப்படி இருப்பாள் எனச் சொல்லவும் வேண்டுமா?

எனவேதான் இப்பொழுது மற்ற தோழிகளை திருமணத்திற்கு அழைக்க வந்தவள், பாண்டீஸ்வரியைப் பற்றி அவளிடம் கேட்டாள். தோழியின் முடிவு அப்பொழுதாவது மாறி இருக்குமா என அறிய முயன்றாள்.

ஆனால் அன்புச் செல்வி அப்பொழுதும் அதே நிலையில் நிற்க, சுமித்ராவுக்கு கொஞ்சம் கவலையே. “அவ நாசூக்கு பார்க்க மாட்டா சுமி. நம்ம நாலுபேருக்குள் பேசறது வேற, மத்தவங்க காதில் விழற மாதிரி பேசறதுங்கறது வேற.

“அவ வாய்க்கு வந்தபடி எதையாவது சொல்லிட்டா, அவளோட பழகின பாவத்துக்கு நீ பொறுத்துக்கலாம். உன்னோட அவரைப் பற்றி நீ யோசிச்சியா? உன்னோட தோழியே அவரைப்பற்றி கீழா பேசினால் அவர் என்னன்னு நினைப்பார்?

“உன்கிட்டே காட்டிக்கலைன்னாலும், அவருக்குள்ளே அது ஒரு காயமா தங்கிட்டா என்ன செய்வ? அவளோட தாக்கம் உனக்குள்ளே வந்துட்டா அவரோட நிலை என்னவாகும்னு அவர் கவலைப்பட்டால், அதை நீ தாங்கிப்பியா?” அன்புச் செல்வி கேட்க, சுமித்ரா வாயடைத்துப் போனாள்.

“அன்பு…” அவள் அதிர்வாக அழைக்க, அன்புச் செல்விக்கு ஒரு பக்கம் ஆறுதலாக இருந்தது. தோழியிடம் இப்படிப் பேச வேண்டும் என அவளும் எதிர்பார்க்கவில்லை தான். ஆனால் இபப்டிப் பேசவில்லை என்றால், சுமித்ரா தனக்குள்ளாகவே நிறைய குழப்பிக் கொள்வாள் என்பதால் சொன்னாள்.

“நான் சொன்னது ஒரு பக்க பார்வைதான்… இதே விஷயம் வேற மாதிரி கூட ஆக வாய்ப்பு இருக்கு” என்றவள், தோழியை இன்னும் கொஞ்சம் பயம் காட்டினாள். அதில் கொஞ்சம் தெளிந்துவிட்டாள். தோழியரைப் பார்த்து நாட்கள் பல கடந்துவிட அவர்களை வரச் சொன்னாள்.

வெறுமே பார்ப்பதோடு மட்டும் அல்லாமல், தன் திருமண விஷயத்தையும் சொல்லி அவர்களை அழைக்க வேண்டியே வந்தாள். சாருமதி, அன்புச் செல்வி… அவளோடு சேர்ந்து புவனாவும் அங்கே இருந்தாள்.

“என்ன சுமி… இன்னைக்கு கண்டிப்பா வந்தே ஆகணும்னு கால் பண்ண?” என்றவாறு தோழியருக்கு அருகே வந்து அமர்ந்தாள் சாருமதி. அதற்கு முன்பே மற்றவர்கள் அனைவரும் வந்திருக்க, அவர்கள் முன்னால் ஜூஸ் இருந்தது.

“அதுவா… நம்ம சுமிக்கு கல்யாணமாம்…” புவனா பட்டெனச் சொன்னாள்.

“என்ன? அப்படியா? சுமி… சொல்லவே இல்ல…” சாருமதி குறை பட்டாள்.

“அடடா… இவ கல்யாணத்துக்கு அழைக்க தானே வந்திருக்கா. பிறகென்ன? உனக்கு குடிக்க என்ன வேண்டும்னு சொல்லு… மற்றதை எல்லாம் பிறகு பேசலாம்…” அன்புச் செல்வி சொல்ல, சாருமதி அதற்கு மேலே எதையும் கேட்டுக் கொள்ளவில்லை.

“எனக்கு வாட்டர்மெலோன் ஜூஸ் போதும்…” அவள் சொல்ல, அவள் கேட்டதை ஆர்டர் செய்தார்கள். ஜூசைக் குடித்தவாறே தங்களுக்குள் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

பேச்சின் இடையே… அன்புச் செல்வி தான் ஆன்சைட் போகும் விஷயத்தைச் சொல்ல, மற்றவர்கள் திகைத்தார்கள்.

“என்ன அன்பு சொல்ற? நீ அப்போ சுமித்ரா கல்யாணத்துக்கு இருக்க மாட்டியா?” சாருமதி அதிர்வாகவே கேட்டாள்.

அவளும் சுமித்ராவும் எவ்வளவு நெருக்கம் என்று அவளுக்குத் தெரியுமே. அப்படி இருக்கையில் நெருங்கிய தோழியின் திருமணத்துக்கு அவள் இருக்க மாட்டேன் எனச் சொன்னால் அதிராமல் என்ன செய்வாள்?

“ஆமா சாரு…” என்றவளுக்கு அதற்கு மேலே என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“என்ன அன்பு சாதாரணமா சொல்ற?” என்றவள், “சுமி… இதுக்கு நீ எதுவும் சொல்லலையா?” அவளிடம் கேட்டாள்.

“வாழ்க்கையில் சில விஷயங்களை நாம அக்ஸப்ட் பண்ணித்தானே ஆகணும். அவ எங்கே இருந்தாலும், அவளோட மனசு இங்கேதான் இருக்கும்னு எனக்குத் தெரியும்” என்றவளுக்கு தோழியின் பிரிவு மனதை அழுத்தியது.

“நம்ம நட்பு எல்லாம் அவ்வளவுதான் இல்ல. எல்லாம் நம்மளோட கல்யாணம் வரைக்கும்தான். அதுக்கு மேலே… ஹம்…” புவனா பெருமூச்சு விட்டாள்.

“நாம என்ன சங்க காலத்திலேயா இருக்கோம். ஆளுக்கு ஒரு செல்ஃபோன் எதுக்கு வச்சிருக்கோம்? அதோட வாழ்க்கையில் அடுத்த கட்டங்களுக்கு நாம நகர்ந்துட்டேதான் இருக்கணும். அதுதான் வாழ்க்கையோட தாத்பரியம்” அன்புச் செல்வி சொல்ல, அங்கே சில நொடிகள் மௌனம் நிலவியது.

அதை கடக்க வேண்டி, சுமித்ரா தன் திருமண அழைப்பிதழை அவர்களிடம் கொடுத்தாள். அவர்களும் வாங்கிப் பார்த்தவர்கள், தங்கள் வாழ்த்தைச் சொன்னார்கள். அதை அவளும் மனதார ஏற்றுக் கொண்டாள்.

“இங்கேயே வாழ்த்து சொல்லி முடிச்சுடக் கூடாது. நீங்க கண்டிப்பா நேர்ல வந்து வாழ்த்தணும்” கோரிக்கை வைத்தாள்.

“நாங்க இல்லாமல் உன் கல்யாணம் நடந்துடுமா? கண்டிப்பா வந்துடுவோம்… சரி நம்ம ஈசுவை எங்கே? அவளை நீ கூப்பிடலையா?” சாருமதி சட்டென நினைவுக்கு வந்தவளாகக் கேட்டாள்.

“அது…” சுமித்ரா சட்டென என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் தடுமாறிப் போனாள்.

அதைப் பார்த்த அன்புச் செல்வி, “அவ கொஞ்சம் பிஸியா இருக்காளாம். சுமி பிறகு அவளைத் தனியா போய் கூப்ட்டுப்பா” அவள் வேகமாகச் சொல்ல, இருவரும் அதைப் பெரிதாக ஆராயவில்லை.

அந்த நாள் முழுவதுமே நால்வரும் ஒன்றாகவே அந்த ஷாப்பிங் ‘மால்’லைச் சுற்றி வந்தார்கள். அன்புச் செல்விக்கு வேண்டிய சிலவற்றை பார்த்துப் பார்த்து சுமித்ரா வாங்கிக் கொடுத்தாள். கூடவே மற்றவர்களுக்கும் வாங்கிக் கொடுத்து அழகு பார்த்தாள்.

“உனக்கு இப்படி ஒரு வியாதி இருக்கறது உன் அவருக்குத் தெரியுமா?” புவனா சட்டெனக் கேட்டாள்.

“நீ எதைச் சொல்ற?” சுமித்ரா புரியாமல் குழம்ப, மற்றவர்களோ சிரித்தார்கள்.

“அதுதான்… நீ சர்ப்ரைஸ் பண்றேன்னு எங்களை எல்லாம் அலற விடுவியே… அதைக் கேட்டேன்” புவனா சொல்ல, மற்றவர்கள் சிரிக்க, இவளோ முறைத்தாள்.

“அது உனக்கு வியாதியா?” இடுப்பில் கைவைத்து அவளைக் கோபமாக பார்த்தவாறே கேட்டாள்.

“இல்லையா பின்ன? நீ அந்த சர்ப்ரைசை ரிவில் பண்றதுக்குள்ள நாங்க எல்லாம் ஒரு வழி ஆயிடுவோம். நீ எங்களை நம்பலைன்னா நம்ம அன்பு கிட்டே கேட்டுப் பார்…” புவனா சொல்ல, அவளைத் திரும்பிப் பார்த்தாள்.

“அப்படியா? அது உங்களுக்கு ஒரு திரில்லை கொடுக்காதா?” சற்று கவலையாகக் கேட்டாள்.

அவள் அப்படி வருத்தப்படுவது பிடிக்காத அன்புச் செல்வி, “அவங்க சும்மா சொல்றாங்க சுமி. நீ அப்படி செய்யும்போது அந்த சந்தோஷம் ரெட்டிப்புதான் ஆகும். அவங்க உன்னைக் கலாட்டா பண்றதுக்கு வேண்டி சொல்றாங்க” வேகமாகச் சொன்னாள்.

நிஜத்தில் அன்புச் செல்வி தோழியிடம் உண்மையைச் சொல்லி இருந்தாள் அவள் கொஞ்சம் யோசித்து இருப்பாள். தன் வாழ்க்கையில் தான் செய்து வைக்கப் போகும் மிகப்பெரிய அனர்த்தத்தை தடுத்து இருப்பாள்.

அதனால் தான் மிகப்பெரிய பழி சொல்லுக்கே ஆளாக வேண்டி இருப்பதை தவிர்த்து இருப்பாள். ஆனால் அனைத்தையும் ஆட்டுவிப்பவன் ஒருவன் விண்ணில் இருக்கையில், யார் என்ன செய்ய முடியும்?

அன்று முழு நாளையும் கொண்டாடித் தீர்த்தவர்கள், இறுதியில் அனைவரும் விடை பெற்றார்கள். சுமித்ரா முதலில் அங்கே இருந்து கிளம்பிச் செல்ல, அன்புச் செல்வி தன் தோழிகளிடம் பேசினாள்.

அவர்களிடம் அவள் நாசூக்காக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் பெரிதாக அதிர்ந்து விடவில்லை.

“நமக்குதான் நம்ம சுமியைப் பற்றித் தெரியுமே. அவ எல்லாத்திலும் கொஞ்சம் வித்தியாசமானவ தான்” சாருமதி சொன்னாள்.

“அது சரிதான்… ஆனாலும்… அவ அப்படி ஒரு முடிவை எடுத்திருக்க வேண்டாம்” சுமித்ராவின் அழகைக் கண்டு எப்பொழுதுமே பிரமிக்கும் புவனா சொன்னாள்.

“எதையுமே நடக்க முன்னாடி யோசிக்கலாம். இப்போ பேசறது தேவையில்லாதது” சுமித்ரா ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதில் இருந்து அவள் பின்வாங்க மாட்டாள் என அன்புச் செல்விக்குத் தெரியுமே. அதோடு அவள் அப்படியெல்லாம் அவசரப்பட்டு முடிவை எடுக்கவும் மாட்டாள்.

அவளைப் பெற்றவர்கள் அப்படியெல்லாம் அவளை விட்டுவிடவும் மாட்டார்கள் என அவளுக்குத் தெரியாதா என்ன?

“அதான் இன்னும் அவங்க கல்யாணம் நடக்கலையே. இப்போ கூட சுமி கொஞ்சம் யோசிக்கலாம்” புவனா அப்பொழுதும் விடாமல் சொன்னாள்.

“புவி… போதும்… இதே மன நிலையில் நீ இருக்கறதா இருந்தால், அவ கல்யாணத்துக்கே போகாதே” அன்புச் செல்வி பட்டெனச் சொன்னாள்.

அவளது கோபத்தைப் பார்த்த புவனா, “இப்போ அவசரப்பட்டு முடிவெடுத்துட்டு, பிறகு வருத்தப்படக் கூடாதேன்னு தான் சொல்ல வந்தேன் அன்பு…” சமாதானமாகச் சொன்னாள்.

“கல்யாண விஷயத்தை யாராவது விளையாட்டா முடிவு பண்ணுவாங்களா? உனக்கு சுமித்ராவைப் பற்றித் தெரியாதா என்ன?” அன்புச் செல்வி கேட்க,

“நீ சொல்றது சரிதான்… அவ ஒரு அதிசயப் பிறவிதான். நீ சொல்றதைப் பார்த்தால், நம்ம ஈசுவை நீதான் கழட்டி விட்டியா?” சாருமதி சரியாக கணித்தாள்.

“வேற என்னதான் செய்யச் சொல்ற? அவ சும்மாவே இவளைப் போட்டு வெறும் வாயில் மெல்லுவா. இப்போ இவ அவளோட வாய்க்கு அவல் கொடுத்தால், ஈசு சும்மா விடுவாளா என்ன? அவளுக்கு விஷயம் தெரிய வந்தால், என்ன ஆட்டம் ஆடுவாளோ? எனக்கு அதை நினைச்சால்தான் திகீர்ன்னு இருக்கு.

“நான் வேற இங்கே இருக்க மாட்டேன்… அவ வந்து, சுமியை ஏதாவது பேசிட்டா இவ என்னன்னு சமாளிப்பான்னு தெரியலை. அவளை இக்னோர் பண்ணிடுவா தான்… ஆனா இவ அவளோட ‘அவரைப்’ பற்றி சொல்றதைக் கேட்டா… அவர் மேலே ரொம்ப பாசம் வச்சுட்டான்னு தெரியுது. அதுதான் என் கவலைக்கு காரணமே…” என்ற அன்புச் செல்வியின் குரல் கரகரத்தது.

“கவலையே படாதே அன்பு… நீ இவ்வளவு சொல்லும்போது நாங்க பார்த்துக்க மாட்டோமா? நீ கவலையே படாமல் போயிட்டு வா… இங்கே நாங்க பார்த்துக்கறோம்” அவர்கள் சொல்ல, அன்புச் செல்வி அவர்களை நம்பினாள்.

அந்த நம்பிக்கையை அவர்கள் காப்பாற்றவே செய்தாள். ஆனால் சுமித்ரா வேறு விதத்தில் கவலையைச் சுமக்க வேண்டும் என்கையில் அனைத்தும் வரத்தானே செய்யும்?

You may also like

2 comments

kothai suresh March 16, 2026 - 2:54 pm

ஈசுவர ஏதாவது பிரச்சனை வருமா?

Reply
Thani March 16, 2026 - 3:27 pm

அன்பு சுமிக்கு கிடைத்த நல்ல ப்ரண்ட் ,
என்னதான் பாத்து பாத்து நடந்து கிட்டாலும் சில பொறாமை உடையவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஈசுவைப்போல.

Reply

Leave a Reply to kothai suresh Cancel Reply

About Me

Featured