Home Love - Family - Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 11.

உனக்கென பிறந்தவள் நானே – 11.

by infaalocious

பகுதி – 11.

கார்முகிலிடம் விடைபெற்று வீட்டுக்கு வந்த சுமித்ரா, அந்த விஷயத்தை வீட்டில் சொல்ல, அனைவரும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அனிதா அவளிடம் சொன்னது ஒரே விஷயம் தான்… “நீ அவரை சர்ப்ரைஸ் பண்றேன்னு எதையும் உடனே செய்து வைக்கக் கூடாது” தாய் சொல்ல, அதை சுமித்ரா கேட்டுக் கொண்டாள்.

‘இது நன்றாக, சரியாக நடக்க வேண்டுமே’ என்ற கவலை பெரியவர்களிடம் இருந்தது. அவர்களுக்கு நன்றாகவே தெரியும், சுமித்ரா ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அதில் இருந்து எல்லாம் பின்வாங்கவே மாட்டாள்.

அந்த நேரம் அவர்களது எண்ணமெல்லாம் கார்முகிலைப் பற்றியே இருந்தது. ‘அவன் இவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டுமே, புரிந்துகொண்டு நடக்க வேண்டுமே’ என எண்ணிக் கொண்டார்கள்.

“அப்படி என்ன என் பொண்ணை கட்டிக்க அவனுக்கு கசக்குது?” அனிதா திடுமென ஒரு ஆதங்கத்தில் கேட்டு வைக்க, தகப்பனும் மகளும் அனிதாவைப் பார்த்தார்கள்.

“என்னம்மா திடீர்ன்னு இப்படியெல்லாம் பேசறீங்க?” தாய் இப்படி கிடையாதே என்ற எண்ணம் அவளுக்கு.

“இல்ல கண்ணம்மா… உன் அருமை தெரியாமல் இழுத்து அடிக்கறானேன்னு உன் அம்மாவுக்கு ஆதங்கம், வேற எதுவும் இல்லை” செல்வம் வேகமாக இடையிட்டார்.

“அப்படியாம்மா?” அவள் கேட்க, அனிதாவின் அமைதியே அது அப்படித்தான் என அவளுக்குச் சொன்னது.

“முகில்க்கு என்னைப் பிடிச்சு இருக்கும்மா… ஆனா அதை ஒத்துக்கத்தான் பயம், வேற எதுவும் இல்லை. நீங்க வேணா பாருங்க, சுமி, சுமின்னு அவர் என் முந்தானையையே பிடிச்சுட்டு சுத்தத்தான் போறார். அதை நீங்க பார்க்கத்தான் போறீங்க” அவள் சொல்ல, அனிதாவின் முகத்தில் மெல்லிய புன்னகை.

“அப்படி நடந்து, அதை இந்த அம்மா பார்த்துட்டா போதும்மா” அனிதா சொல்ல, தாயை இறுக கட்டிக் கொண்டாள்.

“கண்டிப்பா நடக்கும்மா…” அவள் உறுதியாகச் சொல்ல, அனிதாவின் முகம் கொஞ்சம் தெளிந்தது.

மறுநாள் காலையிலேயே, “எங்கே வரட்டும்?” எனக் கேட்டு சுமித்ரா செய்தி அனுப்ப, அவன் அன்று, அவளை அவன் முதல் முதலில் சந்தித்த மாலுக்கு வரச் சொன்னான். அவளும் வருவதாகச் சொல்ல, அன்று காலையிலேயே சந்தித்துக் கொண்டார்கள்.

மறுநாள் ஹோட்டல், அதற்கு அடுத்த நாள் தியேட்டர், அடுத்ததாக ஷாப்பிங் என ஒவ்வொரு இடமாகச் சென்றார்கள். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு விதமான விமர்சனங்கள் எழுந்தது. அதுவும் அவனைப் பார்க்கும் பெண்களில் பலர், ஒரு கேலி சிரிப்பையும், குறுகுறு பார்வையையும் செலுத்த மறக்கவில்லை.

ஆனால் கார்முகில் அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை. ‘எனக்கு இதெல்லாம் பழக்கம்தான்’ என்ற பாவனை கூட இல்லை. முதல்நாள் அவளைப் பார்த்த பொழுது அவன் கண்களில் தெரிந்த தடுமாற்றம் இப்பொழுது சிறிதும் இருக்கவில்லை.

அப்படியே அவன் சுமித்ராவைப் பார்க்கையில் கூட ஒரு மாதிரி ஆராய்ச்சி பார்வையை மட்டுமே செலுத்துவது அவளுக்குப் புரிந்தது.

அன்று அந்த மல்ட்டிப்ளக்ஸ் தியேட்டருக்கு அவர்கள் வந்திருக்க, “எனக்கு ஒரு சீஸ் பாப்க்கார்ன், ஒரு கோக்…” அவள் கேட்கவே,

“நீங்க உட்காருங்க, நான் போய் வாங்கிட்டு வர்றேன்” அவன் சொல்ல, அங்கே போடப்பட்டிருந்த குஷனில் சென்று அமர்ந்து கொண்டாள். பார்வை மொத்தமும் அவன்மீதே இருந்தது. அவள் பழகிய வரையில் மிகவும் இயல்பாக இருந்தான்.

அவளிடம் பெரிதாக வழிவதும் கிடையாது, அவளைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும் கிடையாது. ‘உன்மேல் எனக்கு அக்கறை இருக்கிறது’ என ஒவ்வொரு விதத்திலும் செய்கையால் வெளிப்படுத்துவான்.

அவன் அவள் கேட்டதையும், தனக்கு வேண்டியதையும் ஒரு ட்ரேயில் வைத்து வாங்கி வர, ‘உட்காருங்க…’ என தன் அருகே இருந்த குஷனைக் காட்ட, அவனும் அமர்ந்து கொண்டான்.

அந்த நேரம் அவர்களது முதுகுக்குப் பின்னால் இரு பெண்கள் பேசுவது கேட்டது. “இது எப்படிடி அனு சாத்தியம்?” ஒருத்தி கேட்க, அவர்கள் பேசத் துவங்கிய விதமே, தங்களைப் பற்றித்தான் பேசப் போகிறார்கள் என்பதை அவளுக்குச் சொன்னது.

“பர்ஸ் வீக்கம் ஜாஸ்த்தியா இருக்கலாம், வேற என்னவா இருக்கப் போகுது?”.

“பணம் பத்தும் செய்யும்ங்கறது சரிதான் போல”.

“எங்க… எல்லாம் கொஞ்சம் சுருட்டிக்கற வரைக்கும்தான். வேற என்ன?” என்றவர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டார்கள். அவர்கள் பேசுவது அட்சர சுத்தமாக யாரைப்பற்றி பேசுகிறார்கள் என இருவருக்குமே தெளிவாகப் புரிந்தது. அதைக் கேட்டு கார்முகிலுக்கு ஒரு மாதிரியாகப் போயிற்று.

அந்த நேரம் தாய் அவனுக்குச் சொன்ன கதை எல்லாம் அவன் நினைவுக்கு வரவே இல்லை. ‘இவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்னு இப்படிப் பேசறாங்க?’ அவனுக்கு உள்ளுக்குள் கனன்றது.

‘இவங்க அதைக் கேட்டால் என்ன நினைப்பாங்க? அவங்க வசதிக்கும், அழகுக்கும் இப்படியான பேச்சுக்களை எல்லாம் கேட்கணுமா?’ என்னவோ மனதுக்குள் சுருக்கென இருந்தது. ‘எனக்கே இப்படி இருக்குன்னா இவங்களுக்கு?’ அவன் நினைப்பு முழுக்க அதுதான்.

படம் துவங்க நேரமாகவே, “நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வர்றேன்” என்றவள் எழுந்து செல்ல, அந்த இரு பெண்களையும் மெதுவாக திரும்பிப் பார்த்தான். அவர்கள் இருவரும் அவனைத்தான் பார்த்திருக்க, பார்வையை திருப்பிக் கொண்டான்.

‘என்ன வாஸ்ரூம் போய்ட்டாங்க? அங்கே போய் அழுவாங்களோ?’ அவனுக்குள் என்னென்னவோ நினைவுகள். அதே நேரம் சுமித்ரா வரவே, இருவரும் ஒன்றாக படம் பார்க்கப் போனார்கள். அவள் வந்தது முதல் அவள் முகத்தையே அவ்வப்பொழுது பார்த்தவாறு இருந்தான்.

இருவரும் அவர்களது இருக்கையைத் தேடி அமர்ந்து கொண்டார்கள். லேசாக தொட்டுக் கொண்டாலும், கரங்கள் மெல்லியதாக உரசிக் கொண்டாலும் அதையெல்லாம் இருவரும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இருவரும் நன்றாகப் படித்து நல்ல வேலை, தொழில் என நடத்துபவர்கள்.

இருவருக்கும் ஆண், பெண் நண்பர்கள் உண்டு. அப்படி இருக்கையில் லேசாக தொட்டுக் கொண்டாலோ, கைகள் உரசினாலோ பற்றிக்கொள்ளும் நிலையில் எல்லாம் அவர்கள் இல்லை.

“எதுக்கு இப்போ என்னை இப்படி பார்க்கறீங்க?” ஒரு கட்டத்தில் அந்த தியேட்டரில் அருகருகே அமர்ந்த பொழுது அவனிடம் அவள் கேட்டுவிட்டாள்.

“இல்ல… சும்மாதான்…” அவன் சொல்ல, அவனை நம்பாத பார்வை பார்த்தாள். ‘ஒரு வேளை இவங்க எதையும் கேட்கலையா? இல்லையே அதற்கு வாய்ப்பே இல்லை’ என அவன் மனம் அடித்துச் சொன்னது.

அந்த தியேட்டர் அரங்குக்குள் அவர்கள் வந்த பொழுது, தோழியர் இருவர் பேசிக் கொண்டது அவள் காதிலும் விழுந்தது தான். அதை அவள் கண்டுகொள்ளாமல் இருக்க, அவனுக்குத்தான் உள்ளுக்குள் என்னவோ செய்தது.

“என்னன்னு சொல்லுங்க…?” அவள் கேட்க,

“நம்ம பின்னாடி அவங்க பேசினதை கேட்டீங்க தானே?” தாள முடியாமல் கேட்டுவிட்டான்.

“பாஸ்… நம்ம முதுகுக்குப் பின்னாடி பேசறதுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிச்சால் நம்மளால் நிம்மதியாவே இருக்க முடியாது… விடுங்க… படம் ஆரம்பிக்கப் போகுது, படத்தைப் பாருங்க” அவள் சொல்ல, அவனும் அவள் சொன்னதைச் செய்தான்.

அன்று அப்படிப் போனால், ஷாப்பிங் சென்றிருந்த பொழுது அவளுக்கென உடை வாங்கியவள், அவனுக்கு என ஒரு முழுக்கை டிஷர்ட் ஒன்றை வாங்கிக் கொடுத்தாள்.

அப்படி ஒரு முழுக்கை டிஷர்ட் ஒன்றை அவன் ஏற்கனவே வாங்க வேண்டும் என அவன் எண்ணியிருக்க, அவளாகவே அதை வாங்கிக் கொடுத்ததில் அவனுக்கு அப்படி ஒரு சந்தோசம்.

“நான் இதை இப்போவே போட்டுக்கறேன்” என்றவன் கடைப்பையனிடம் சொல்லி ‘டேக்’கை ரிமூவ் செய்து கொடுத்துவிட்டு அதை அப்பொழுதே அணிந்துகொண்டான். அவனது நிறத்துக்கு தக்கன இளம் நீல நிறத்தில் குறுக்காக அடர் நீல வர்ண கோடுகள் ஓடி இருக்க, அவனுக்கு அது பொருத்தமாக இருந்தது.

அவனுக்கு எப்பொழுதுமே தன் உடைத் தெரிவில் அதீத கவனம் செலுத்துவான். கொஞ்சம் அடர் வர்ணம் ஆகி விட்டாலும், அது அவனுக்கு மிகுந்த பாதிப்பை கொடுத்துவிடும் என்பதாலேயே அவ்வாறு செய்வான். இப்பொழுது சுமித்ராவும் அப்படியே செய்திருக்க, அவனுக்கு அது மனதைத் தீண்டியது.

வேண்டா வெறுப்பாகவோ, எடுக்க வேண்டுமே என்ற எண்ணத்திலோ, எனக்கு எடுக்கிறேன், ஏதோ ஒன்றை தனக்கு எடுத்துத் தர வேண்டும் என்றோ அவள் அதைச் செய்யவில்லை. தனக்கு எதை அணிந்தால் நன்றாக இருக்கும் என அவள் யோசித்து, தேடித் தெரிந்து எடுத்திருக்கிறாள் என அவனுக்குப் புரிந்தது.

‘என்னை கவனிக்கறா, எனக்காக பார்க்கறா’ அந்த நினைப்பு அடிமனதில் பெரும் தித்திப்பைக் கொடுத்தது.

அவள் என்னவோ தான் உடை எடுத்துக் கொடுத்தால் அவன் அணிவானா? இல்லையா? என்ற சந்தேகத்திலேயே தான் அவள் அதை எடுத்துக் கொடுத்தாள். ஆனால் அதை அவன் உடனே அணிந்துகொள்ள, அவளுக்கு கொள்ளை ஆனந்தம்.

“உங்களுக்கு இந்த டிஷர்ட் பிடிச்சிருக்கா?” அவள் கேட்க, கண்கள் மின்ன அவளைப் பார்த்தான்.

“ரொம்ப பிடிச்சிருக்கு… தேங்க்ஸ்” என்றவன், ‘எனக்காகவே தயாரித்த மாதிரி கச்சிதமா இருக்கு’ அவன் உணர்ந்து சொல்ல, அவள் இதழ்களில் மெல்லிய புன்னகை.

இவர்கள் இருவரும் அருகருகே நின்று பேசிக் கொண்டிருக்க, “என்னடி இது? நம்ம ஊரு கரிச்சட்டி கணக்கா இருக்கான், அவனுக்கு கொவ்வை பழமாட்டம் ஒரு பொண்ணா?” ஒருத்தி முகவாயில் கை வைக்க,

“என்ன வசியம் செஞ்சானோ தெரியலையே… இந்த புள்ளைய கூட்டிகிட்டு சுத்துறான். இவளைப் பெத்தவங்களுக்குத் தெரிஞ்சா எம்புட்டு வெசனப்படுவாக?” மற்றவள் சொல்ல, இருவருமே கிராமத்துப் பெண்மணிகள் என்பது அவர்களது பேச்சில் இருந்தே தெரிந்தது.

“கலருதான் குறை, மத்தபடி பய லட்சணமாத்தான் இருக்கான். என்னத்துக்கு இம்புட்டு குறை பேசுதிய?” அவர்கள் அருகில் இருந்த மற்றவள் ஏற்றுக்கொண்டு வர, மற்றவர்கள் இருவரோடு, சுமித்ராவும் அந்த புதியவளை ஏறிட்டாள்.

சுமித்ரா மெல்லியதாக சிரித்து வைக்க, கார்முகிலுக்கு எப்படி அதை எடுத்துக் கொள்வது என எதுவும் தெரியவில்லை. இதேபோல் லட்சம் விமர்சனங்களைக் கடந்தவன் தான். ஆனால் தனக்கானவள் முன்பு வைக்கப்படும் விமர்சனங்கள் மனதை என்னவோ செய்தது.

ஆயிரம்தான் இருந்தாலும் அவனும் ஊனும், உயிரும், உணர்வும் கொண்ட மனிதன் ஆயிற்றே, அவனுக்கும் வலித்தது. அதுவும் சுமித்ராவின் முன்னால் இன்னுமே வலித்தது. அதை அவன் முகத்துக்குக் காட்டாமல் மறைக்க முயன்றாலும் அதை அவள் கண்டுகொண்டாள்.

“அம்மா, அத்த… இங்க என்ன பண்றீங்க?” என்றவாறு அங்கே வந்தாள் ஒரு இளம் பெண்.

“அவகளப் பார்த்துட்டு பகடி பேசுதாக இந்து… அதான் சத்தம் போட்டுக்கிட்டு இருந்தேன்” அவளது தாய் சொல்ல, தன் அத்தைகளை முறைத்தாள்.

“வந்த இடத்திலே உங்க வாயை வச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா?” அவர்களைக் கடிந்துகொண்ட அந்த இந்து,

“சாரிங்க… இவங்க என்ன பேசி இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். சாரி சார்…” கார்முகிலும், சுமித்ராவும் அப்படியே நின்று இவர்களைப் பார்த்திருக்கவே சொன்னாள்.

“என்ன இருந்தாலும் மத்தவங்க பசிக்கு நாம சாப்பிட முடியாதுங்க” என்ற சுமித்ரா, கார்முகிலின் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டு கிளம்பினாள்.

“அடியாத்தே… சரிதான்…” பேசியவர்கள் மோவாயில் கை வைக்க, அதை சுமித்ரா கண்டுகொள்ளவே இல்லை. இந்து அவர்களை மானாவாரியாக முறைத்தவள், தாயை தனியாக இழுத்துச் சென்றாள்.

மகளின் இழுப்புக்கிச் சென்றவர், “அம்மா, இதுக்குத்தான் சொன்னேன்… இவங்களை எல்லாம் அழைச்சுட்டு பர்ச்சேசுக்கு வர வேண்டாம்னு. இப்போ பாருங்க… என்ன பண்ணி வச்சிருக்காங்க. அவங்க சொன்னதை கேட்டீங்க தானே… மத்தவங்க வாழ்க்கையை நாம என்னம்மா விமர்சனம் பண்றது?” தாயிடம் சாடினாள். சுமித்ரா சொல்லிச் சென்றது மனதை ஏதோ செய்தது.

“நான் என்னடி செய்ய? புரணி பேசலைன்னா இவளுகளுக்கு வயிறு வீங்கிப் போய்டுமே. இங்கே கூட்டி வரலைன்னா, மக வீட்டுக்கு அழைச்சுட்டு போயிட்டு, எதுவுமே வாங்கிக் கொடுக்காமல் கூட்டி வந்துட்டான்னு அதுக்கும் பேசுவாளுக” தாய் சொல்ல, இந்து செல்லும் இவர்களது முதுகையே வெறித்தாள்.

அத்தோடு அது முடிந்தது எனப் பார்த்தால், கார்முகிலின் கல்லூரி நண்பன் ஒருவன் அவனைப் பார்த்துவிட்டான். அதுவும் அவனது கரத்தை கோர்த்துக்கொண்டு சுமித்ரா நிற்க, அவன் அவர்கள் இருவரையும் அளவிட்டான்.

“முகிலா… என்னடா இந்தப் பக்கம்? யார் இவங்க?” சுமித்ரா யாராக இருக்கும் என அவனுக்கு அறிந்தே ஆக வேண்டும் என்ற வேகம்.

கார்முகில் பதில் சொல்லும் முன்பு, “நான் இவரோட வுட்பி, என் பேர் சுமித்ரா. நீங்க?” அவள் சொல்ல, வந்தவனது முகத்தில் பெரும் அதிர்ச்சி.

“என்னங்க சொல்றீங்க? டேய் முகிலா… உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா. எங்கேயோ என்ன? உனக்கு உடம்பே மச்சத்தில் தானடா இருக்கு. அதான் இப்படி ஒரு அழகியே உனக்கு மனைவியா வரப் போறாங்க. வாழ்த்துக்கள் டா…” அவன் சொல்ல, சுமித்ராவுக்கு கோபம்தான் வந்தது.

அவள் கோபமாக அவனிடம் எதையோ சொல்லப் போக, அவளது கரத்தைப் பிடித்து அழுத்தமாக தடுத்தான். வந்தவனோ, “ஒரே நிமிஷம்ங்க…” என்றவன், கார்முகிலை சற்று நகர்த்திவிட்டு அவன் காதுக்குள் என்னவோ சொன்னான்.

அதைக் கேட்ட கார்முகிலின் முகம் சற்று மாறிப் போனது. “வர்றேன் டா…” என்றவன் சென்றுவிட, அவன் முகம் சரி இல்லாததைப் பார்த்தாள். அங்கே வைத்து பேசும் சூழல் இல்லாமல் போகவே, வேகமாக பில் பே செய்தவள் அவனோடு வெளியே நடந்துவிட்டாள்.

அந்த கடைக்கு எதிரிலேயே ஒரு ஃப்ரஷ் ஜூஸ் கடை இருக்க, அவனோடு அங்கே சென்று அமர்ந்தாள். அவனுக்கு தர்பூசணியும், தனக்கு மாதுளையும் சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தாள்.

அவனோ… “இந்த கல்யாணம் வேண்டாம்ங்க…” அத்தனை தீவிர தொனியில் சொல்ல, அவளுக்கு ஒரு மாதிரியாகப் போயிற்று.

மேஜைமேல் இருந்த அவன் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டவள், அவனையே பார்த்திருந்தாள். அவனுக்கோ அவள் முகம் காணவே முடியவில்லை. இறுதியாக தன் கல்லூரி நண்பன் சொல்லிச் சென்றது உள்ளுக்குள் கிடந்தது அழுத்தியது.

“முகி… என்னைப் பாருங்க… பாருங்கன்னு சொன்னேன்” அவள் அழுத்திச் சொல்ல, அப்பொழுதுதான் அவளைப் பார்த்தான்.

“உங்களுக்கு கஷ்டமா இல்லையாங்க? எனக்கு… எனக்கு…” அவன் ஒரு மாதிரி தடுமாற அவன் அருகே கிடந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள். அவனுக்கு கண்கள் கலங்கும்போல் இருந்தது.

“இங்கே இருந்து போகலாம்ங்க…” அவன் சொல்ல, அவள் எழுந்துவிட்டாள். அந்த நேரம் அவர்கள் கேட்ட ஜூஸ் வர, அதை பார்சல் வாங்கிக் கொண்டு, அவனோடு அவன் காருக்கு நடந்துவிட்டாள். இருவரும் அவரவர் வண்டியில் வந்திருந்தாலும், அவனோடு சென்று அமர்ந்தாள்.

“என்னால நீங்க இப்படி முகம் தெரியாத ஆட்கள் கிட்டே இருந்து எல்லாம் விமர்சனத்தை சந்திப்பதை தாங்கிக்க முடியலைங்க. என்னை நம்பி வர்ற பொண்ணை நான் நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கறேன், இப்படி இல்லை…” என்றவன் அவளுக்கு முகம் காட்டாமல் ஜன்னல் பக்கமாக முகம் திருப்பிக் கொண்டான்.

அவன் தாடையைப் பற்றி திருப்பி தன் முகம் காண வைத்தவள், “இப்போ இங்கே பேசினவங்க மட்டும் இல்லை, இதற்கு முன்னாடி பேசினவங்க யாராவது எனக்கு ஒரு வாய் சாப்பாடாவது போடப் போறாங்களா? இல்ல எனக்கு ஏதாவது ஒன்று என்றால் பார்க்கப் போறாங்களா?

“கல்யாணம் நம்ம ரெண்டுபேரோட ஆரம்பிக்கும், நாம ரெண்டு பேரா தான் வாழ்க்கை முழுக்க ட்ராவல் பண்ணப் போறோம். வாழ்க்கை முடியும் போதும் நாம ரெண்டு பேர் மட்டும்தான். நீங்க என்னை கஷ்டப்படுத்தினால் மட்டும்தான் எனக்கு வலிக்கும்.

“உங்க வார்த்தைகள் மட்டும்தான் என்னை பாதிக்கும். நீங்க என்னை ஹேர்ட் பண்ணா மட்டும்தான் நான் உடைஞ்சு போய்டுவேன். மற்றபடி அவங்க பேசறது எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை” அவன் கன்னம் தாங்கி, அவன் கண்களோடு கண்கள் கலக்க அவள் பேச இமைக்க மறந்தான்.

அது சில பல நொடிகள் தான்… “வந்தவன் என்ன சொன்னான் தெரியுமா? உன் கலரை மறைக்க, முழுக்கை டிஷர்ட் மட்டும் போட்டா போதாது, ஒரு மங்கி குல்லா கலரா வாங்கி மாட்டிக்க, அப்போதான் பொருத்தமா இருக்கும்னு சொன்னான்” அவன் சொல்ல, அவளுக்கு அந்த குரலும் பாவனையும் மனதைப் போட்டு பிசைந்தது.

“நான் உங்களுக்கு எந்த டிஷர்ட் பொருத்தமா இருக்கும்னு மட்டும்தான் பார்த்தேன். மற்றபடி உங்க ஃப்ரண்டு சொன்ன மாதிரி யோசிச்சு நான் அதை எடுக்கலை” அவள் சொல்ல, அவள் கரத்தை மெதுவாக விலக்கினான்.

“அது எனக்குத் தெரியும்… ஆனாலும் இது வேணுமான்னு யோசிச்சுக்கோங்க.  பிறகு பின்வாங்கவே முடியாது. அப்படி ஏதாவது ஆனால்…” சிறு இடைவெளி விட்டவன், “அது நம்மளை எந்த அளவுக்கு பாதிக்குமோ, அதைவிட அதிகமா நம்மளைப் பெற்றவர்களைப் பாதிக்கும்” அவன் சொல்லி நிறுத்த, அது அவளுக்கும் தெரியுமே.

“எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு, உங்களுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதமா? என்னைப் பிடிச்சிருக்கா? அதை மட்டும் சொல்லுங்க” அவள் கேட்க, அவனுக்கு உள்ளுக்குள் ஒரு பயம் பிறந்தது.

‘இது நிஜமாகவே நடக்குதா? அப்படியா? இவளால் எப்படி முடியும்? என்னை எப்படி இவளால் நேசிக்க முடியும்?’ இந்த வினா அவனுக்குள் பூதாகரமாக எழுந்து மிரட்டியது.

‘இவங்க அப்பா ஏதாவது ஃபோர்ஸ் பண்றாரா இருக்குமோ? ஏதாவது கட்டாயத்தால் இதற்கு ஒத்துக்கறாளா?’ எண்ணியவாறே அவளைப் பார்த்தான். ஆனால் அவளது அந்த கண்களில் எந்தவிதமான தயக்கமோ, குழப்பமோ தெரியவில்லை.

அவன் அந்த ஆராய்ச்சியைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் பெரும் சுணக்கம். அவன் கண்களில் ஒரு ஆசை இல்லை, தன்மீதான காதல் இல்லை… அந்த ஆராய்ச்சி… அது அவளை என்னவோ செய்தது.

“உங்களுக்கு என்னைப் பிடிக்கலை தானே?” அவள் கேட்டுவிட, திடுக்கிட்டான்.

“என்ன? அதுக்கு வாய்ப்பே இல்லை… இதை எனக்கு நம்பவே நாள் ஆகும். உங்க கழுத்தில் தாலி கட்டும் வரைக்கும் இது உண்மையாகவே நடக்குதுன்னு என்னால் ஏத்துக்க முடியாது” அவன் சொல்ல, அவன் குரலில் ஒரு நம்பிக்கையின்மை, அதாவது அந்த திருமணம் நடக்கப் போவதில்லை என்பது போன்ற பாவனை, அது அவளுக்கு பிடிக்கவில்லை.

“எனக்கு நேரடி பதில் வேணும்” அவனையே இமைக்காமல் பார்த்தாள். அந்த முகமும், அவளது பார்வையும் அவனை என்னவோ செய்ய, ‘இவளை எனக்குப் பிடிக்கலையா?’ தன்னையே கேட்டுக் கொண்டவனுக்கு பதிலை நினைக்க கூட அச்சமாக இருந்தது.

“என்னால ஏமாற்றங்களை ஒரு அளவுக்குத்தான் தாங்கிக்க முடியும்” அவன் குரலும் பதிலும் அவளை உருகச் செய்தது. அவன் மனநிலையை முழுதாக உள்வாங்க வைத்தது.

You may also like

2 comments

kothai suresh March 9, 2026 - 10:56 pm

அடுத்தவங்க வாழ்க்கைய பத்தி தான் ரொம்ப கவலை

Reply
Thani March 10, 2026 - 2:43 am

அவளை ரொம்ப பிடித்ததால் தான் வேண்டாம் என்கிறான்,தானாகவே விலகினால் கொஞ்சம் மனசு ஆறுதலா இருக்கும் என்று நினைக்கிறான்.
சுமி ரொம்ப ரொம்ப நல்லவள்.

Reply

Leave a Reply to kothai suresh Cancel Reply

About Me

Featured