Home Love - Family - Romanceஉனக்கென பிறந்தவள் நானே – 16.

உனக்கென பிறந்தவள் நானே – 16.

by infaalocious

பகுதி – 16.

கார்முகில் நிச்சயம் தன்னைக் காண நேரில் வந்து நிற்பான் என அவளுக்குத் தெரியும். அப்பொழுது எப்படியாவது அவனைத் தவிர்த்துவிட வேண்டும் என சுமித்ரா எண்ணி இருக்க, அதற்கு மாறாக அவன் தன் அறைக்கே வந்து நிற்க அவளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

நடந்து முடிந்த அந்த அனர்த்தத்துக்கு முழு முதல் காரணம் அவளாக இருக்கையில், அவளால் எப்படி அவனை கண்ணோடு கண் நோக்க முடியும்?

‘என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்?’ என்ற எண்ணமே அவளுக்குள் ஓடிக் கொண்டிருக்க, அதை மீறி அவளால் எதுவும் யோசிக்கவே முடியவில்லை. செய்து வைத்த செயலின் தாக்கம் அத்தனையாக இருக்க, ஒரு சிந்திக்க, செயல்பட முடியாத நிலையில் இருந்தாள்.

அவனுக்கோ அவளுக்கு மாறான ஒரு எண்ணம். தான் மிகவும் அவசரப்பட்டுவிட்டோம் என அவனுக்குத் தெரியும். அதற்காக அவள் தன்னை வெறுத்துவிட்டாளோ? இந்த திருமணம் வேண்டாம் என முடிவெடுத்து விட்டாளோ? என பயந்து போனான்.

தன் அழைப்பை அவள் எடுக்கவில்லை, தன் குறுந்தகவல்களுக்கு கூட பதில் அளிக்கவில்லை என்பது அவனை அத்தனையாக பயம் கொள்ளச் செய்து இருந்தது. அவளிடம் வெளிக்காட்டவில்லை என்றாலும் அவன் மனதுக்குள் அவள் முழுதாக இருந்தாள்.

பெண் பார்த்து, பூமுடித்து, நிச்சயம் முடிந்து என அனைத்தும் நல்லபடியாக நடந்து முடிய, அவளைத் தன் மனைவி எனவே நினைத்து வாழத் துவங்கி விட்டான். சின்னதாக உணர்ந்த அவள் தேகத்தின் ஸ்பரிசங்கள், அவன் கற்பனையில் வானம் மட்டும் வளர்ந்து அவளோடு வாழவே துவங்கி விட்டான்.

அதன் வெளிப்பாடுதான் அவள் அப்படி பேசிய பொழுது தன்னை முழுதாக அவளிடம் வெளிப்படுத்த தூண்டியது. அவளை தனக்கு எந்த அளவுக்குப் பிடித்திருக்கிறது எனக் காட்ட வேண்டி மட்டுமே அவன் செய்த செய்கை அது.

அப்படி இருக்கையில்… அவள் தன்னை முழுதாக அனைத்து விதங்களிலும் தவிர்த்தால் அவன் பயப்பட மாட்டானா என்ன? கடந்த இரண்டு நாட்களாக அவனால் உண்ண, உறங்க என எதுவும் முடியவில்லை.

அவன் அறைக்குள் வர, அவனைக் காண முடியாமல் அவள் முகம் திருப்பிக் கொள்ள, பெரும் கலவரத்தை உள்வாங்கினான்.

‘என்ன முகம் திருப்பிக்கறா? ஏன் என்னைப் பார்க்க கூட மாட்டேங்கறா?’ அவனுக்கு பயம் நெஞ்சைக் கவ்வியது. கண்கள் கூட கலங்கும்போல் இருந்தது. இதற்கு முன்னர் பல பெண்கள் அவனைப் பார்த்து முகம் திருப்பி இருக்கிறார்கள்.

அதையெல்லாம் வெகு சுலபமாகவே அவனால் கடந்துவிட முடிந்தது. ஆனால் சுமித்ராவின் முகத் திருப்பல் அவனை ஆதியோடு அந்தமாக அசைத்துப் போட்டது.

“என்…என்…என்மேலே கோபமா? ஏன் என் ஃபோனை எடுக்கலை. ஒரு மெஸ்சேஜ் கூட அனுப்பலையே ஏன்?” அவன் அத்தனை தவிப்பாய் கேட்டு நிற்க, அவளோ முகம் நிமிர்த்தவே இல்லை.

“என்னைப் பாரு… ஏன் என்னைப் பார்க்க கூட இப்போ புடிக்கலையா?” என்றவன் தன் உள்ளக் குமுறலை அடக்க, அவனது கண்கள் இரண்டும் சிவந்து தடித்தது. அவன் குரல் வேறு நடுக்கமாக வெளியேற, அதைக் கண்டுகொள்ளும் நிலையில் அவள் இருக்கவில்லை.

அவள் சரியாக இருந்து, சரியான விதத்தில் சிந்தித்து இருந்தால், அவனது முதல் கேள்வியிலேயே அவன் மனநிலையை கணித்து இருப்பாள். ஆனால் அவள்தான் தன் நினைப்பிலேயே மூழ்கி இருந்தாளே.

“நான் செய்தது தப்புன்னா என்னை மன்னிச்சுடு… மன்னிப்புக் கேட்டா சரியாப் போகாதுதான்… ஆனாலும்… நான்… நான்… வேற என்ன செய்யட்டும்?” அவன் குரல் இடற, அந்த நொடி அவள் கலைந்தாள்.

‘என்ன? ஏன் அவர் குரல் ஒரு மாதிரி இருக்கு?’ என எண்ணியவள் அவனை நிமிர்ந்து பார்க்க, அப்படி ஒரு தோற்றத்தில், நிலையில் அவனை சத்தியமாக அவள் எதிர்பார்க்கவே இல்லை.

அவன் கண்கள் இரண்டும் சிவந்து தடித்து, நீரால் நிறைந்திருக்க, மொத்தமாக அதிர்ந்து போனாள்.

“முகில்…” காற்றுக்கு கூட கேட்காத குரலில் அவள் அழைக்க, புயல் வேகத்தில் அவளை நெருங்கி, அவளுக்கு முன்னால் மண்டியிட்டு அமர்ந்து, அவளது கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.

அவனது கரம் அத்தனையாக நடுங்கிக் கொண்டிருக்க, அவள் மனம் பரிதவித்தது.

“ஏன் என்னை அவாய்ட் பண்ற? ரெண்டு நாளா சாப்பிட முடியலை, தூங்க முடியலை… என்…என்…னை வெறுத்துட்டியா?” அவன் கண்களில் தொங்கி நின்ற கண்ணீர் வழிந்துவிடவா என மிரட்டிக் கொண்டிருக்க, தன் ஷாலை எடுத்து வேகமாக துடைத்து விட்டாள்.

“முகி… நான் எதுக்கு உங்களை வெறுக்கப் போறேன்? முதல்ல இப்படி வந்து உட்காருங்க” அவனை கைபிடித்து எழுப்பி தன் அருகே அமர வைக்க முயன்றாள். அவளால் முயல மட்டுமே முடிந்தது. அதற்கு அவன் ஒத்துழைக்க வேண்டுமே?

“இல்ல… நீ சொல்லு? என்னை நீ வெறுத்துட்டியா? நான்… நான்… எனக்குள்ளே அப்படி ஒரு மூர்க்கத்தனம்… அதாவது… நான் அப்படி கிடையவே கிடையாது” அவன் சொல்ல, அவளுக்கு இதயம் முரசு கொட்டியது. அவன் தன்னைப்பற்றி எதையாவது சொல்லிவிட்டால் தன்னால் தாங்கவே முடியாது என்னும் படியான ஒரு எண்ணம்.

“ஆண்டவா… நான் ஏன் அப்படி நடந்துகிட்டேன்?” புலம்பித் தவித்து தன் தலையிலேயே அடித்துக் கொண்டான். அவனது இந்த பேச்சில் இறுக மூடி இருந்த அவளது இமைகள் இரண்டும் பட்டென திறந்து கொண்டன.

அவன் சொல்லிக் காட்டவில்லை என்றாலும், அவளுக்குத் தெரியுமே. நடந்து முடிந்ததில் தன் தவறுதான் பிரதானம் என அவளது மனசாட்சி ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருந்ததே.

“என்னை கல்யாணம் பண்ணிப்ப தானே? நம்ம கல்யாணம் நடக்கும் தானே?” அவன் ஒரு மாதிரி யாசிக்கும் குரலில் கேட்க, மொத்தமாக நடுங்கிப் போனாள்.

“முகி… என்ன பேசறீங்க?” என்றவள் அவனை இழுத்து இறுக்கமாக, மிகவும் இறுக்கமாக கட்டிக் கொண்டாள். அவளது அந்த செய்கையில் அவன் தேகம் நடுங்கி, குழைந்து போவது அவளுக்குத் தெரிந்தது.

“இன்னொரு முறை இப்படிக் கேட்டீங்க? உங்களை என்ன செய்வேன்னே தெரியாது” அவள் குரல் உயர்த்த, இப்பொழுது அவளை தன்னோடு சேர்த்து இறுக்கினான். கூடவே அவள் கழுத்தில் முகம் புதைக்க, தன் கழுத்தில் ஈரத்தை உணர்ந்தாள்.

அதுவே அவன் அழுகிறான் எனச் சொல்ல, அந்த நொடி அவனது மனநிலை அவளுக்கு முழுதாக தெரிந்து போனது. தான் அவனிடம் பேசவில்லை, தவிர்க்கிறேன் எனவும்.. இந்த கல்யாணம் நடக்காதோ என பயந்துவிட்டான் எனப் புரிந்தது.

‘அடக்கடவுளே… இவ்வளவு தூரம் ஆன பிறகு, நான் கல்யாணத்தை நிறுத்துவேனா? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டாரா?’ அவன்மேல் செல்ல கோபம் எழுந்தது.

அவன் சிகைக்குள் கை கோர்த்து அழுத்தமாக பற்றி தன்னை விட்டு விலக்கி தன் முகம் காண வைத்தாள். “என்ன? என்கிட்டே இருந்து தப்பிக்கலாம்னு பார்க்கறீங்களா? உங்களை அவ்வளவு சீக்கிரம் நான் விட்டுடுவேனா?” அவள் கேட்க, அப்பொழுதுதான் அவன் முகமே தெளிந்தது.

“அன்னைக்கு நான் என் கன்ட்ரோல்ல இல்லை. அப்படி இருந்து இருந்தேன் என்றால், கண்டிப்பா அந்த தப்பு நடந்து இருக்காது. ஏலியன் நிஜமா? நீ என்னை அவாய்ட் பண்ணலையா? நம்ம கல்யாணம் நடக்குமா?” அவன் குரலில் அப்பொழுதும் ஒரு நம்பிக்கையின்மை ஒட்டிக் கொண்டிருந்தது.

“உங்களை அவாய்ட் பண்ண நினைக்கறவதான் உங்களை அப்படியெல்லாம் கேள்வி கேட்டு வைச்சேனா? கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டீங்களா? அதுவும் ஐயா பாஞ்சீங்களே… ஒரு சின்ன முத்தம் கூட கிடையாது. உங்க டார்கெட் மொத்தமும் எங்கே இருந்ததுன்னு எனக்குத் தெரிஞ்சது” அவள் சொல்ல, அவனால் இப்பொழுது அவள் முகம் காண முடியவில்லை.

அவன் அவளைவிட்டு விலக முயல, அவன் சட்டைக் காலரை கொத்தாக பற்றி, அவன் தேகம் உரச அவனை அப்படியே நிறுத்திக் கொண்டாள். “என்னைப் பாருங்க… முகி…” அவள் அழுத்தமாக அழைக்க, அப்பொழுதுதான் அவள் முகம் பார்த்தான்.

“எனக்குத் தெரிஞ்சாகணும்… உங்களுக்கு என்னைப் புடிக்குமா? எவ்வளவு புடிக்கும்?” என்றவள் அவன் மூக்கோடு மூக்கை உரச, அவன் இந்த உலகிலேயே இல்லை.

அவள் கண்ணோடு கண் உரச, மூக்கோடு மூக்கு உரச, அவள் வாசனையும், அவள் இதழ்களின் அசைவும், அவள் மென்தேகம் அவன் தேகத்தோடு உரசியும் உரசாமல் இருக்கும் நிலை, அவனுக்கு பித்தம் தலைக்கேறியது. இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றோடு ஒன்று கலக்க, அவன் மீசை ரோமங்கள் அவள் இதழில் பட்டு உரசி அவள் இம்சையை, அவன்மீதான இச்சையை அதிகரித்தது.

அவன் இதழ்கள் தன் இதழ்களைத் தொட்டு கலந்து, உரசி, கவ்வி சுவைக்காதா என அவள் மனம் அந்த நொடி ஏங்கிப் போனது. அவளுக்கே அப்படி என்றால் அவன் நிலை… அதைச் சொல்லவும் வேண்டுமா?

அவன் இதழ்கள் கொஞ்சமாக திறத்து, அவள் செவ்விதழ்களை கொய்துகொள்ள தவிக்க, அவள் இமைகளோ கிறக்கத்திலும் மயக்கத்திலும் மூடிக் கொண்டது. அவன் இதழ்கள் தன்னைத் தொட்டுவிட்டால் கூட போதும், அவன் இதழ்களை நான் வாரிச் சுருட்டிக் கொள்வேன் என அவள் மனம் தவித்தது.

அவனுக்கோ அவள் இதழ்களைத் தொட்டுவிட்டால் அது அத்தோடு முடியாது என்ற பயம். அந்த நேரம் மாடிப் படிகளில் யாரோ வரும் ஓசை கேட்கவே, அவளை விட்டு நொடியில் விலகி எழுந்தவன் அங்கே இருந்த சேரில் அமர்ந்து கொண்டான்.

அவன் என்னவோ நொடியில் தெளிந்துவிட்டான், அவளுக்குத்தான் அவனது மயக்கம் தெளிய மறுத்தது. அவனது வாசனையும், வசீகரமும், அவன் மூச்சுக்காற்றின் வெம்மையும் இன்னுமே அவளுக்குள் ஓடும் உணர்வு. அங்கே அவர்கள் வீட்டு பணிப்பெண் அன்னம்மா கையில் டீ, ஸ்நேக்ஸ் ட்ரேயோடு அங்கே வந்து நின்றாள்.

“வாங்கக்கா…” அவன்தான் அழைத்தான்.

“அம்மா கொடுத்து அனுப்பினாங்க தம்பி…” என்றவாறே உள்ளே வந்து, அவன் அமர்ந்திருந்த சேருக்கு அருகே இருந்த மேஜைமேல் அந்த ட்ரேயை வைத்துவிட்டு வெளியேறிவிட்டாள். அவள் செல்லவே அந்த ட்ரேயில் இருந்த ஒரு கப்பை எடுத்து சுமித்ராவுக்கு கொண்டு வந்து கொடுத்தான்.

உள்ளுக்குள் ஓடும் நினைப்புக்களின் தாக்கத்துக்கு, அந்த நேரம் நிச்சயம் ஒரு மாறுதல் தேவையாக இருக்க, வேகமாக அதை வாங்கிக் கொண்டாள். அவள் பார்வை அவன் முகத்தில் தடுமாறி பதிய, அவன் கண்கள் இரண்டும் அவளைக் கொள்ளையிட்டுக் கொண்டிருந்தது.

“நீ…நீங்களும் டீ எடுத்துக்கோங்க” அவள் சொல்ல, “எனக்கு டீயை விட காபி தான் ரொம்ப புடிக்கும்” என்றவாறு அவன் பார்வை அவள் இதழ்களிலேயே நிலைக்க, பார்வையை திருப்பிக் கொண்டாள்.

“காபி எடுத்துட்டு வரச் சொல்லவா?” அவள் கேட்க,

“எனக்கு டீ பிடிக்காதுன்னு நான் சொல்லவே இல்லையே. டீயை விட காபி பிடிக்கும்ன்னு தான் சொன்னேன்” என்றவாறு டீயை எடுத்து அருந்த துவங்கினான்.

“நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லவே இல்லை” குறைபோல் சொன்னாள். ஆனால் அவளுக்கு, அவனுக்குத் தன்னை எவ்வளவு பிடிக்கும் என அவன் வாயால் தெரிந்துகொள்ள வேண்டி இருந்தது.

“ஒரு பொண்ணோட கழுத்தில் தாலி கட்டும் வரைக்கும் அவளை மனசுக்குள்ளே ஏத்திக்க கூடாதுன்னு முடிவே பண்ணி இருந்தேன். ஆனா எப்போ, எந்த நிமிஷத்தில் இருந்து நீ என் மனசுக்குள்ளே வந்து உட்கார்ந்தன்னு தெரியலை” என்றவன் ஆழமாக மூச்செடுத்தான்.

“ஏன் அதில் ஐயாவுக்கு ரொம்ப வருத்தமோ?” செல்ல கோபம் காட்டினாள்.

“எல்லா ஆம்பளைக்கும்…” அவன் துவங்க, “மத்தவங்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை, நீங்க உங்களைப்பற்றி சொல்லுங்க” வேகமாக இடையிட்டாள்.

“நீ சொன்னியே உன்னோட ஃபர்ஸ்ட் எல்லாம் என்னோடதான்னு… என் முதல் கற்பனை பொண்ணு கூட நீதான். உன்னை என் மனைவியா நான் பார்க்க ஆரம்பிச்சு ரொம்ப நாள் ஆச்சு. அதுவும் நம்ம நிச்சயத்துக்குப் பிறகு எல்லாம்… ஒவ்வொரு நாள் இரவும் நான் உன்கூட கற்பனையில் வாழ்ந்துட்டு இருக்கேன். அதுவும் தாறுமாறா…” அவன் சொல்ல, அவன் சொன்ன பாவனையில், விதத்தில் அவளுக்குள் என்னென்னவோ ஆனது.

“என்ன?” அவள் அதிர்வாக கேட்டு வைக்க,

“என் கற்பனைக்கு எல்லாம் உருவம் கொடுக்கற ஆசையில், வேகத்தில் நடந்ததுதான் ‘அது’ எல்லாம்” அவன் சொல்லி வைக்க, அவளுக்கு மூச்சு விடுவதற்கு கூட சிரமமாக இருந்தது.

ஒரு மாதிரி படபடவென சொல்லிவிட்டு அவன் அவள் முகம் பார்க்க, அவள் முகம் மொத்தமும் வெட்கப் புன்னகை. அவளது அந்த புன்னகையைப் பார்த்தவனுக்கு, அவளை நெருங்கி அவளை கொள்ளையிடும் தவிப்பு.

“ம்… சொல்லுங்க…” அவள் ஒரு மாதிரி ரசனையாக கேட்டு வைக்க, அவனிடம் அதற்கு மேலே எந்த தடைகளும் இருக்கவில்லை. அவளுக்குத் தன்மேல் கோபமில்லை என்னும் நினைப்பே அவன் தடைகளை தகர்க்கச் செய்தது.

“இப்போ இந்த நிமிஷம்… இப்படி தள்ளி நிக்கறது கூட அவ்வளவு அவஸ்த்தையா இருக்கு” என்றவன் பின்னந்தலையை வருடி, எச்சில் விழுங்கிக் கொள்ள, அவன் அவஸ்தையை ரசித்தாள்.

“இன்னும் ஒரு ரெண்டே வாரம்தான்… நீங்க வெயிட் பண்ணித்தான் ஆகணும்” அவள் சின்ன சிரிப்பில் சொல்ல,

“எனக்கு உன்கிட்டே ஒரே ஒரு விஷயம்தான் கேட்கணும்” இப்பொழுது அவன் கண்களில் வந்து அமர்ந்தது ஒரு குறும்பு புன்னகை.

“என்ன கேட்கணும்? கேளுங்க” அவள் சொல்ல,

“அதென்ன ஆப்பிரிக்க க*தை? எனக்குத் தெரிஞ்சாகணும்?” அவன் சொல்ல, அவ்வளவுதான் அவள் முகம் குப்பென சிவந்து போக, வேகமாக பார்வையை திருப்பிக் கொண்டாள்.

‘என்னவோ ஒண்ணுமே தெரியாத மாதிரி கேள்வி கேட்கறதைப் பார்’ மனதுக்குள் எண்ணியவளுக்கு, இன்னுமே அவன் முரட்டுத்தனம் நினைவுக்கு வந்து இம்சித்தது.

“ஏலியன்… சொல்லு…” அவளைச் சீண்டினானோ?

“கண்டிப்பா சொல்லணுமா?” என்றவள் கட்டிலில் இருந்து எழுந்து நிற்க, அவன் பதட்டமானான். அவள் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு ஒளிந்திருக்க, அவள் இதழ் ஓரத்தை கடித்துக்கொண்டு அவனைப் பார்த்த பார்வையில் அவன் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டான்.

“இல்ல… வேண்டாம்… நான் கிளம்பறேன்…” அவன் உணர்வுகள் தாறுமாறாக கிளர்ந்திருக்க, அவள் பார்வை தன்மேல் பதிந்த விதத்தில் பெரும் கலவரமானான். அவள் தன்னை நெருங்கி வந்தால் ஆபத்து என மனம் சொன்னது.

“எங்கே ஓடப் பார்க்கறீங்க? தெரிஞ்சுகிட்டு போங்க” அவனைத் தடுக்க முயன்றாள்.

“இல்ல… இல்ல… நம்ம கல்யாணத்துக்குப் பிறகே தெரிஞ்சுக்கறேன். இப்போ உனக்கு காய்ச்சல் விட்டுடுச்சா? கீழே அத்தையும் மாமாவும் தேடப் போறாங்க” அவன் படபடக்க, அவளுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.

அவள் அதை மறைக்காமல் வாய்விட்டே சிரித்து வைக்க, “ராட்சசி… ஏலியன்… இன்னும் ரெண்டு வாரம்தான்… பிறகு உனக்கு இருக்கு” அவன் சொல்ல, அவன் அவஸ்தையை ரசித்தாள்.

“எனக்கு எந்த பயமும் இல்லை…” அவள் கண்ணடித்து சொல்ல, அவன்தான் கலவரமானான். அவள் இப்படியெல்லாம் பேசுவாள் என அவன் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. இந்த பேச்சு, அவள் பார்வை… அவனுக்கு அவ்வளவு பிடித்தது. கூடவே உள்ளுக்குள் ஒரு பெரும் பயத்தையும் கொடுத்தது மட்டும் உண்மை.

“உனக்கு பயம் இருக்கா இல்லையான்னு ரெண்டு வாரத்தில் நான் தெரிஞ்சுக்கறேன்” என்றவன் அவளை ஒரு மாதிரியாக அழுத்தமாக ஆர்வமாக பார்த்தவாறு சொல்ல, இப்பொழுது அவள் படபடத்துப் போனாள்.

“சரி நான் கிளம்பறேன், உடம்பை பார்த்துக்கோ…” என்றவன், “என் வாழ்க்கைக்குள் வர சம்மதிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” அவன் சொல்ல, அவனை கோபப் பார்வை பார்த்தாள்.

“இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா என்கிட்டே அடிதான் வாங்குவீங்க. போய் உங்க கனவை கன்டினியூ பண்ணாமல், நல்ல புள்ளையா வேலைகளைப் பாருங்க…” அவள் சொல்ல, புன்னகை முகமாகவே அங்கிருந்து கிளம்பினான்.

அவன் கீழே இறங்கி செல்ல, அவளும் அவன் பின்னாலேயே வந்தாள். “சாப்ட்டு போங்க மாப்ள” அனிதா அவனை அழைக்க,

“இல்ல அத்த… கல்யாணம் முடியட்டும் வந்து விருந்தே சாப்பிடறேன். இப்போ இவளை பார்த்துட்டு போகத்தான் வந்தேன்… கிளம்பறேன்” என்றவன் விடைபெற, அவன் பின்னாலேயே வந்தாள்.

சட்டென அவனுக்கு நினைவுக்கு வர, “அத்த… என் அக்கா ஒருத்தங்க இருக்காங்க. அவங்களுக்கு இன்விட்டேஷன் வைக்கணும், நான் சுமியை அழைச்சுட்டு போகவா?” இரண்டு வாரங்கள்தான் திருமணத்திற்கு இருக்கவே அவளை வெளியே தன்னுடன் அனுப்புவார்களோ, மாட்டார்களோ என்ற எண்ணத்திலேயே கேட்டான்.

“அதுக்கென்ன மாப்ள, தாராளமா அழைச்சுட்டு போங்க. இவதான் கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி வரைக்கும் வேலைக்குப் போவேன்னு நிக்கறாளே” அனிதா குறை பட்டுக் கொண்டார். அவருக்கு இந்த இரண்டு வாரமும் மகளை வீட்டில் அமர்த்தி சீராட்ட வேண்டுமே என்ற எண்ணம்.

“இப்போவே லீவ் எல்லாம் எடுத்துட்டா, கல்யாணத்துக்குப் பிறகு லீவ் போட முடியாதும்மா. சொன்னா புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க?” தாயை கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்.

“இப்படியே என்னை மயக்கிடு… இன்னும் ரெண்டே வாரம்தான் நீ இங்கே இருப்ப, பிறகு நீ மாப்பிள்ளை வீட்டுக்குப் போய்டுவ. அப்போ உனக்கு நான் எப்போதான் ஆசையா சமைச்சுப் போட்டு பார்த்துக்கறது?” மகளைப் பிரிய முடியாத ஏக்கம் அவரிடம்.

அதைக் கேட்டவன், “கல்யாணத்துக்குப் பிறகு ஒரு வாரம் இங்கே வந்து இருக்கறோம் அத்த. எனக்கும் சேர்த்து சாப்பாடு போடுவீங்க தானே? இல்லன்னா உங்க பொண்ணுக்கு மட்டும்தான் சமைப்பீங்களா?” அவன் கேட்க, அனிதாவின் முகம் மலர்ந்து போனது.

“என்ன மாப்ள இப்படி கேட்டீங்க? நீங்க இங்கே வந்து இருந்தால் நாங்க வேண்டாம்ன்னா சொல்லப் போறோம். கண்டிப்பா வந்து தங்கணும், பிறகு பேச்சு மாறக் கூடாது” அனிதா சொல்ல, மென்மையாக அவரைப் பார்த்து புன்னகைத்தான்.

“நான் சொன்னா சொன்னதுதான்… கண்டிப்பா வந்து தங்கறோம். ஐ ப்ராமிஸ்…” அவன் வாக்கு கொடுக்க, சுமித்ராவுக்கு அவனை இன்னும் இன்னும் பிடித்தது.

“இது போதும் முகிலா… மனசுக்கு நிம்மதியா, சந்தோஷமா இருக்கு. பொண்ணுக்கு கல்யாணம் ஆன உடனேயே அவளை மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பிட்டு மனசு படற பாடு சொல்லி முடியாது. மக மாப்பிள்ளை கூட வாழறதை கண் குளிர பார்க்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கும்தானே” அவர் கேட்க, அவனுக்கு அது புரியவே செய்தது.

“நீங்க பார்ப்பீங்க அத்த… இப்போ நான் கிளம்பறேன், நாளைக்கு வந்து இவளை அழைச்சுட்டு போறேன்” இதைச் சொன்னவனுக்கு அப்பொழுது அவர்கள் வீட்டில் இருப்பதே நெருப்பின் நடுவில் இருக்கும் அவஸ்தையைக் கொடுக்கும் என கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டான்.

“மாப்பிள்ளையை அனுப்பிட்டு வாம்மா…” அனிதா சொல்ல, அவன் பின்னாலேயே சென்றாள்.

“நாளைக்கு சாயங்காலம் ஃப்ரீ பண்ணிக்க முடியும் தானே சுமி?” அவன் கேட்க, மையமாக தலை அசைத்தாள்.

“உங்க ‘சுமி’யை விட ‘ஏலியன்’ நல்லா இருக்கு” அவள் சொல்ல, வாய்விட்டு சிரித்தான். அவன் அப்படி சிரிக்கையில் அத்தனை வசீகரமாகத் தெரிந்தான். அதைப் பார்க்கவே அவளுக்கு ஆசையாக இருந்தது.

ஒரு வேளை அவனது இந்த அழைப்பையும், புன்னகையையும் இனி அவள் திருப்பிக் கொண்டுவர நாள் ஆகும் என அவள் எண்ணியிருக்கவே மாட்டாள்.

You may also like

1 comment

kothai suresh March 20, 2026 - 5:08 pm

என்ன அப்பப்ப ஒரு குண்ட தூக்கி போடுறீங்க இன்பா

Reply

Leave a Reply to kothai suresh Cancel Reply

About Me

Featured