Home Love - Family - Romanceஎன் சரி – 04

Episode 04

கல்யாணம் முடிந்த சில நிமிடங்களிலேயே மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது வேந்தனுக்கு.

“வேந்தன்… நீங்க எப்போ வரீங்க? அம்மாவுக்கு பிபி ரைஸ் ஆகுது. சீக்கிரம் சர்ஜரி ஸ்டார்ட் பண்றது பெட்டர்.” என்றார் மருத்துவர்.

அந்த ஒரு ஆழைப்பு, சட்டென அந்த இடத்தின் கனத்தையே  மாற்றிவிட்டது.

மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி அமைதியாக எழுந்தார். 

அவர்களிடம் வந்து “போலாம்.” என்றார்.

வேந்தன் ஒரு வார்த்தையும் பேசாமல் காரை எடுத்தான். பக்கத்தில் நின்றிருந்த பெண்னைக் கணக்கிலே எடுக்கவில்லை. பாட்டியும், தாத்தாவும் சுற்றம் உணராமல் அவர்களோடு கிளம்பினர்.

ஆதினி என்ற பெண் அப்படியே அங்கேயே நின்றாள் சிலையாக! ஆதரவற்றவளாக! முதல்நாளே அநாதையாக!

இனி இப்படித்தானா? இப்படியேத்தானா தன் வாழ்க்கை!

நினைத்த மாத்திரத்தில் அவள் விழிகளில் இருந்து கோடாக இறங்கியது நீர்!

மருத்துவமனையில்,

அதே வெண்மை சுவர். அதே மருந்தின் வாசனை. அதே அமைதியான நடைபாதை.

ஆபரேஷன் தியேட்டர் முன் நின்று கொண்டிருந்தான் வேந்தன்.

அவனது கைகள் இறுக்கமாக ஒன்றோடொன்று பினைக்கப்பட்டிருந்தது.

மூர்த்தி அங்கும் இங்கும் நடந்தார். அவர் முகத்திலும் பயம் அப்பிக் கிடந்தது

பாட்டி கையில் ருத்ராட்ச மாலை. அதை உருட்டியபடியே “அப்பனே ஈஸ்வரா, நீதான் என் மருமகளைக் காப்பாத்தணும்…” என்று மெதுவாக முணுமுணுத்தார்.

அந்த இடமே உறைந்து போனது போல இருந்தது அனைவருக்கும்.

அப்போது மருத்துவமனை வாயிலில் மற்றொரு கார் வந்து நின்றது.

அதில் இருந்து ஆதினி இறங்கினாள். அவளோடு அவளது பெற்றோர்.

ஆதினி யாரையும் பார்க்காமல் உள்ளே நடந்தாள். அவர்களைப் பார்த்ததும் தான் பெரியவர்களுக்கு அவர்களின் தவறு புரிந்தது.

அவர்களை அழைக்காமல் வந்துவிட்டோம் என்று. அதிலும் அப்போதுதான் தன் பேரனால் தாலி வாங்கி தங்கள் குடும்பத்தில் நுழைந்தவளை, அப்படியே விட்டுவிட்டு வந்துவிட்டோம் என்ற தவறு புரிந்தது.

மூர்த்தியின் முகத்தில் அது அப்பட்டமான குற்றவுணர்வாக தெரிந்தது.

அவள் விழிகள் நேராக வேந்தனை தேடியது. அவளை ஏமாற்றாமல் அவனும் அங்கேயே தான் நின்றிருந்தான்.

ஆனால் அவன் பார்வை அவளைத் தொடவில்லை. அவன் மனதில் இருந்தது ஒரே ஒரு விஷயம் தான்.

‘அம்மா.. அம்மா இந்த கண்டத்தில் இருந்து நல்லமுறையில் வெளியில் வந்துவிட வேண்டும் என்பது மட்டும்.

பாட்டி ஆதினியை பார்த்ததும் அருகே அழைத்தார். 

“வா ம்மா…” என்றார் மெதுவாக. 

ஆதினி தன் தாயைத் திரும்பி பார்த்தாள், அவர் முகம் கோபத்திலும், இயலாமையிலும் சிவந்து கிடந்தது. பின் அமைதியாக வந்து பாட்டியிடம் நின்றாள்.

“நாங்க ஏதோ அவசரத்துல..” என தட்டுத் தடுமாறியவர் “தப்பா நினைச்சிடாதேம்மா..” என்றார் சிறு குரலில்.

“புரியுது பாட்டி..” என்று மட்டும் சொல்லிவிட்டு, அவரை விட்டு சற்று தள்ளி அமர்ந்துகொண்டாள்.

அந்த ஒதுக்கம் அவருக்கு வலித்தது.

மகளின் முகத்தில் தெரிந்த வேதனையில், கலா சுப்புவை அந்த இடத்திலிருந்து தள்ளி அழைத்துச் சென்றார்.

கலா மெதுவாகத்தான் பேச நினைத்தார். ஆனால் மகளின் வேதனையின் முன் அது நடக்கவில்லை. அந்த அமைதியான நடைபாதையில் அவர்கள் குரல் தெளிவாகவே கேட்டது.

“என்னங்க இதெல்லாம்…? எனக்கு ரொம்ப பயமா இருக்கு…” கலாவின் குரல் நடுங்கியது.

“கலா நீ அழுது அவளையும் அழ வைக்காதே, இங்க சூழ்நிலையும் சரியில்ல.. எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..” என்று சுப்பு மனைவியை சமாதானம் செய்தார்.

கலா ஒரு நொடி பேசாமல் நின்றார். கணவரின் சமாதானத்தை அவரால் ஏற்க முடியவில்லை.

பின் மெதுவாக “உங்க தங்கச்சிக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு தான் நான் கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன்…” என்றார் வேதனை ததும்பிய குரலில்.

சுப்பு அவரை நிதானமாக பார்த்தார்.

“அப்படியே… எதாவது ஆகிடுச்சுன்னா…” அவர் வார்த்தையை முடிக்காமல் “இந்த ஊர் என்ன பேசும்னு உங்களுக்கு தெரியும்ல…” என்றார்.

சுப்பு புருவம் சுருக்கி “என்ன பேசும்?” என்றதும்,

தன் துக்கத்தை அடைத்தக் குரலில் கலா “நம்ம பொண்ணு இந்த வீட்டுக்கு வந்த உடனேதான் இப்படியெல்லாம் நடந்துச்சுன்னு சொல்லுவாங்க… அவளோட ராசி சரியில்லன்னு பேசுவாங்க… என் பிள்ளை வாழ்க்கையையே சாபம்னு சொல்லிடுவாங்க…” என்றார்.

“கலா என்ன பேசுற நீ..?” என மனைவியை அதட்டினாலும், ஆமாம் அப்படித்தானே பேசுவார்கள் என்று நிதர்சனம் புரிந்தது, அந்த கிராமத்தானுக்கு.

‘ஊர் அப்படித்தானே பேசும், அதிலும் பெண் என்றால் நாக்கில் நரம்பில்லாமல் தானே பேசுவார்கள்.

அந்த வார்த்தைகள் காற்றில் கனமாகின. 

அதை கேட்டு கொண்டிருந்த ஆதினியின் இதயம் நின்றது போல, அவள் அங்கேயே நின்று விட்டாள்.

‘இப்படியும் நினைப்பாங்களா…? பேசுவாங்களா?’ என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது, அவளது கண்களில் கண்ணீர் வழிந்தது.

அவள் மெதுவாக தலையைத் தாழ்த்தினாள். வாழ்க்கையைப் பற்றின பயம் ஆலமரத்தினை போல வலுவாகிக் கொண்டே சென்றது.

அந்த உரையாடலை அங்கு ஆதினியைத் தாண்டி மற்றொருவரும் கேட்டுக் கொண்டிருந்தார்.

அவர் மூர்த்தி.

அவர் சில அடிகள் தூரத்தில் தான் நின்றிருந்தார். கலா பேசிய ஒவ்வொரு வார்த்தையும் அவர் காதில் விழுந்தது.

“என் பிள்ளை ராசி சரியில்லன்னு பேசுவாங்க…” அந்த ஒரு வாக்கியம் மட்டும் அவரை குத்தியது. அவருக்கு ஆதினியின் மேல் ஒரு பரிதாபம் உண்டானது. தன்னுடைய மனைவியின் ஆசைக்காக இந்த பெண் காலம் முழுக்க சிலுவை சுமக்க போகிறாளே என்ற வருத்தம் உண்டானது.

இப்போது இந்த நொடி அவர் மனதில் கோபம் இல்லை. ஆதினி மேல் ஒரு விதமான அன்பு உண்டானது நிஜம்.

அவர் அப்போது தான் ஆதினியை நன்றாக பார்த்தார். அவள் அமைதியாக அழுவது அவருக்கு தெரிந்தது.

முடிந்த வரை சீக்கிரமே, மருமகளுடனான தன் உறவை சரி செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

நேரம் மெதுவாக நகர்ந்தது.  அந்த அமைதி அங்கிருந்த ஒவ்வொருவரின் பொறுமையையும் மெதுவாக உடைத்துக் கொண்டிருந்தது.

இறுதியில்… அந்த ஆப்ரேஷன் தியேட்டரின் கதவு திறந்தது.

சோர்வுடனும், சோகத்துடனும் வெளிய வந்த மருத்துவரைப் பார்த்ததுமே வேந்தனின் இதயம் தடுக்கி நின்றது.

“டாக்டர்…” அவன் குரல் காற்றாகிப் போனது.

மெதுவாக மூச்சை இழுத்துவிட்ட மருத்துவர் “சாரி வேந்தன் நாங்கள் ரொம்ப முயற்சி பண்ணோம்…” அந்த வார்த்தை கேட்டவுடன் பாட்டியின் கைகள் நடுங்கின.

“அவங்க உயிரை எங்களால காப்பாத்த முடியல. சாரி.” என்றதும், அந்த இடம் முழுவதும் அமைதி.

அடுத்த நொடி… பாட்டியின் குரல் உடைந்து எழுந்தது.

“சுமதி…!”

வேந்தன் அங்கேயே நின்றான்.

அவன் நகரவில்லை. அவன் அழவில்லை. முகம் இறுகிப் போனது. கண்களை இறுக மூடி அந்த செய்தியை கிரகிக்க முயன்றான்.

ஆனால் முடியவில்லை… அவனுடைய மொத்த உலகமும் இடிந்து தரைமட்டமாகியிருந்தது மருத்துவர் கூறிய செய்தியில்.

அடுத்து அனைத்தும் வேகமாக நடந்தது. சொந்தங்களுக்கு சொல்லப்பட்டது.

சுமதியின் உடலை மாலை நேரத்தில் ஊருக்கு கொண்டு வந்தார்கள்.

இன்று காலை வரை கல்யாண வீடாக இருந்த அந்த வீடு… இப்போது ஒரு துக்கத்தை அனுஷ்டிக்கும் துக்க வீடாக மாறியிருந்தது.

ஊர் பெண்களின் ஒப்பாரி. உறவினர்களின் கூட்டம். மூர்த்தியின் அரசியல் கூட்டம்.. என வந்திருந்த அனைவரையும் சுமதியின் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் ஆதினி.

சுமதிக்கு பிறந்த வீட்டு கோடி சுப்பு போட, சம்பிரதாயங்கள் தொடங்க ஆரம்பித்தது. 

மூர்த்தியின் எடுபிடிகள், பங்காளிகள் அத்தனை பேர் இருந்தாலும், சுப்பு அந்த இடத்தைவிட்டு நகரவில்லை, அவர தன் கடமையை சரியாக செய்தார்.

மூர்த்திக்கும், வேந்தனுக்கும் செய்கின்ற முறையை செய்தார். சுப்பு செய்வதில் மூர்த்திக்கு விருப்பமில்லை தான். ஆனால் அதுதான் முறை எனும் போது ஒதுங்கவும் இல்லை.

மனைவி இருந்த வரை அவளது விருப்பத்தில் எந்த குறையும் அவர் வைத்ததில்லை. 

ஒன்றைத் தவிர..

ஆம்.. அவளின் பிறந்த வீட்டிற்கு மட்டும் அனுப்பியதில்லை. இப்போது அதையும் தடுக்காமல் விட்டிருக்கலாமோ என்று நினைத்தார்.

இந்த கூட்டத்தில் திணறிப் போய் என்ன செய்வது எனத் தெரியாமல், தவித்தபடி ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்த மருமகளின் மேல் பார்வையை பதித்தார் மூர்த்தி.

‘அடுத்த சுமதியாக இவள் இருந்திடக்கூடாது, எங்களின் கோபமும், பகையும் எங்களோடே போகட்டும், அது தங்களின் வாரிசுகளை சேர வேண்டாம்’ என்று நினைத்துக் கொண்டார்.

அப்படியே தன் மகனை பார்த்தார். உடல் இறுகிப் போய் நின்றிருந்தாலும், வந்திருந்தவர்களுக்கு சரியான மரியாதை கொடுத்து பேசிக் கொண்டிருந்தான்.

‘தாயில்லாமல் இனி மகன் எப்படி சமாளிப்பானோ.?’ என்று ஒரு தந்தையாக மனம் யோசித்தாலும், தனக்கு மாற்றாகத்தான் மகனுக்கு அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்திருக்கிறாள் என்று புரிந்தது.

ஆனால் ஆதினிக்கு இதெல்லாம் புரிந்து கொள்ளும் வயதில்லையே, அவளே சின்னப்பெண் தானே!

வேந்தன் கொள்ளிப்பானையோடு நடக்க, அவனோடு மூர்த்தி நடக்க, அவர்களுக்கு பின்னே சுப்பு நடக்க, சுமதியின் உடல் அடக்கத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

ஆண்கள் அந்தப்பக்கம் நகரவும், கலா பயந்தது போலவே பெண்களின் கூட்டத்திற்கு அவலாகிப் போனாள் ஆதினி.

இத்தனை நாள் உடம்பு சரியில்லன்னாலும், உசுரோடவாவது இருந்தா, இந்த மகராசி வந்த நேரம் ஊசலாடிட்டு இருந்த உசுரும் போயிடுச்சு’ என பங்காளி பெண்களில் ஒருவர் ஆரம்பிக்க,

‘ஆத்தா முந்தானையே பிடிச்சு சுத்திட்டு இருப்பான் வேந்தன், அவனுக்குதான் சுமதியில்லாம கஷ்டமா இருக்கும்..’ என இன்னொருவர் கூற,

‘அதான் விவரமா அவங்க அண்ணன் பொண்னையே இந்த வீட்டுக்கு கொண்டு வந்துட்டாளே எங்க அண்ணி, என் பொண்ணெல்லாம் பார்த்தா, வேந்தனுக்கு பொருத்தமா, இந்த வீட்டுக்கு மருமகளா வர அதிர்ஷமில்லையா என்ன?’ என மூர்த்தியின் தங்கை உறவில் ஒருவர் பேச,

‘இத்தனை வருசமும் ஒட்டவே ஒட்டாதுனு இருந்த உறவு, ஒரு வாரத்துல எப்படி ஒட்டிச்சோ தெரில, எல்லாம் பணத்தை பார்த்து மயங்கிடுறது, மச்சான்கிட்டயும் சொத்துபத்துனு அவ்ளோ இருக்கு, இப்போ வேந்தனும் கோடில சம்பாதிக்கிறான், இதெல்லாம் பார்த்தா மானம் மரியாதை முக்கியம்னு யாருக்காச்சும் தோனுமா?’ என இன்னொருவர் பேச, என ஆளாளுக்கு ஒன்று பேச, ஆதினியின் முகம் அவமானத்திலும், கோபத்திலும் சிவந்து போனது.

அதே நேரம் கலா அந்த கூட்டத்தின் மத்தியில் அமர்ந்திருந்த பாட்டியைப் பார்த்தார். இத்தனை பேச்சிலும் அவர் எதுவும் கடிந்தோ, மறுத்தோ பேசவே இல்லை. அது கலாவின் மனதை வெகுவாக வருத்தியது. மகளின் மனம் எந்தளவுக்கு வேதனைப்படும் என ஒரு தாய்க்கு தெரியாதா? அவளை சமாதானம் செய்யும் போக்கில், அந்த இடத்தில் கோபத்தைக் காட்டாமல், மகளை அங்கிருந்து அழைத்துச் சென்று குளிக்க வைத்தார்.

“ம்மா..” என வேதனையில் தவித்தவளை, “காடு போன எல்லாரும் இப்போ வந்துடுவாங்க. அதுக்குள்ள போய் விளக்கேத்து, இது உன் வீடு.. நீதான் இங்க எல்லாம் பார்க்கணும். இப்போ இவங்க கூட சண்டை போட்டு நம்ம தராதரத்தை இறக்கிக்க வேண்டாம்..” என கடுமையாக கூற, விக்கித்து நின்றுவிட்டாள் ஆதினி.

You may also like

1 comment

M. Sarathi Rio March 9, 2026 - 3:08 pm

கலா சொல்வது உண்மைத்தான், இனி அந்த வீட்டின் மருமகள் ஆதினி என்னும்போது அவள் தானே அனைத்து பொறுப்புகளையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured