12
ரயில் போன பின்னும்
இணைந்தே இருக்கின்ற
தண்டவாளங்கள் போலவே
இணைந்தே வருகின்றது
பயணத்தின் ஞாபகங்கள்
அந்த மருத்துவமனையின் ஐசியு பகுதியின் முன்னே பயமும் பதட்டமாக அமர்ந்திருந்தாள் சாரு. அவள் அருகே பெரியவர் விஸ்வம். ஆனால் அவளுக்கு குறையாத பதட்டம் அவருக்கும் இருந்தது. அவரது வயதிற்கு எத்தனையோ சம்பவங்களைப் பார்த்து, கடந்து வந்து விட்டார் தான். உடலில் சோர்வில்லை, மனதில் தான் சோர்வு. அதனால் சோர்ந்து தெரிந்தார்.
அறைக்கு உள்ளே மருத்துவ உபகரணங்களின் உதவியோடு உறங்கிக் கொண்டிருந்தார் செல்வம். இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென்று இதயத்தில் சிறு வலி ஏற்பட, வாயுக் கோளாறு என அவர் சாதாரணமாக விட்டுவிட, அன்றிரவே மூச்சுத் திணறலும் வலியும் அதிகமாகி, வீட்டில் வேலை செய்பவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, விஸ்வத்திற்கும் தகவல் கொடுத்திருந்தனர்.
பெரியவர் உடனே கிளம்பலாம் என்று நினைத்தாலும், சாரு அப்போது பெங்களூருக்கு சென்று இருந்தாள். அவளை இங்கு தனியாக விட்டுச் செல்ல முடியாது என்பதால், அவள் வரும்வரை காத்திருந்து சாருவையும் ஊருக்கு அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்தார். அதனால் அவர் அங்கிருந்தே தன் குடும்ப மருத்துவருக்கு அழைத்துப் பேசி விவரங்கள் தெரிந்து கொண்டு, அடுத்தடுத்து என்ன செய்யலாம் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.
சாரு பெங்களூரிலிருந்து வந்ததுமே அவளையும் அழைத்துக் கொண்டு நாங்குனேரி கிளம்பிவிட்டார். அவள் ஏன், எதற்கென்று எவ்வளவோக் கேட்டும் கூட விஸ்வம் பதில் சொல்லவில்லை. அடுத்து என்ன என்பதிலேயே அவரது கவனம் இருந்தது. அப்படி இருக்கையில் அவளுக்கு வந்த போன் கால், அதனால் அவள் அடைந்த தடுமாற்றம் எல்லாத்தையும் பெரியவர் கவனித்தாலும், அப்போதைய சூழ்நிலையில் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
செல்வம் ஓரளவுக்கு சரியானதும் அவரிடம் இதுபற்றி பேச வேண்டும் என்று நினைத்து, அதை மனதின் யோசனைகளில் இருந்து தற்போது ஓரமாக ஒதுக்கி வைத்தார். யோசனைகளில் இருந்தவரை, “தாத்தா!” என்றழைத்து தன்புறம் திருப்பினாள் சாரு.
“என்னடா?” என்றதும், “நீங்க கிளம்புங்க தாத்தா, நான் பார்த்துக்குறேன். எப்படியும் லேட் நைட் ஆகிடும் மாமா கண் முழிக்க, உங்களுக்கும் ட்ராவல் டையர்ட் இருக்கும்ல? மார்னிங் வாங்க, டாக்டர் ஆன்ட்டியோட ரூம் இருக்கே, நான் அதில ஸ்டே பண்ணிக்கிறேன்.”
“அதெல்லாம் வேண்டாம் சாரும்மா, நான் இருக்கேன் நீ கிளம்பு.” என்றவரை, “தாத்தா நான் சொல்றதைக் கேட்டா என்ன? உங்களுக்கு நான் எப்பவும் சின்ன பொண்ணு தான். ஆனா ஒன்னை மறந்துடுறீங்க, நான் டாக்டருக்குப் படிக்கிறேன். இந்த இயரோட என்னோட ஸ்டடிஸ் கம்ப்ளீட் ஆகுது. காலேஜ்ல நான் இதுமாதிரி நெறைய கேஸ் பாத்துருக்கேன். என்னால தனியா மேனேஜ் செய்ய முடியும். அப்படி முடியாத போது உங்களைக் கூப்பிடுறேன். அதோட ஊர்ல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கும் இந்த ரெண்டு நாளா. நீங்க அதைப் பாருங்க, நான் இங்க பார்க்குறேன்.” என விஸ்வம் மறுக்க முடியாமல் சாரு பேச, அவருக்கும் சரி என்று சொல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
அவளிடம் பல பத்திரங்களைக் கூறிவிட்டு, அவளுக்குத் துணையாக தன் வீட்டில் வேலை செய்யும் கந்தனை விட்டுவிட்டு ட்ரைவருடன் கிளம்பிவிட்டார். நேரம் ஆமையாக நகர்ந்து கொண்டிருக்க, ஐசியுவின் முன்னே மெதுவாக நடக்க ஆரம்பித்திருந்தாள். அப்போது அவளது போன் அடிக்க யார் என்று பார்த்தால் புது எண்தான். யார் இது என்பது போல் யோசித்தபடியே அழைப்பைத் தவறவிட, மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு.
மீண்டும் அழைத்தால் முக்கியமானவர்களாகத் தான் இருப்பார்கள் என்று, அட்டென் செய்து காதில் வைக்க, “சாரு, சாருகேஷி மேடம்! எப்படி இருக்கீங்க?” என்ற குரலைக் கேட்டதும் தான், அவளுக்கு புகழின் ஞாபகமே வந்தது.
‘அட! இந்த களேபரத்தில் இவனை சுத்தமாக மறந்து விட்டோமே! நேத்து ஏதோ அட்ரஸ் எல்லாம் கேட்டானே? பொண்ணு கேட்க வர்றேன்னு வேற லூசு போல உளறிட்டும் இருந்தானே, நிஜமா சொன்னானா? இல்லை, விளையாட்டுக்கு சொன்னானா?’ யோசனையில் உழன்றவளை மீண்டும், “சாரு…!” என்ற புகழின் குரல் தான் நினைவுக்கு கொண்டு வந்தது.
“ஹான்! யாஹ்… சாரி, நான் இங்க ஊர்ல இருக்கேன். மாமாவுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்யூஸ். சோ, இங்க எங்க நேடிவ் வந்துட்டோம். நான் மறுபடியும் சென்னை வந்ததும் பேசலாம், சாரி.” அமைதியாக இருந்ததால், தன்னைப் பற்றி தவறாக நினைத்து விடுவானோ என்ற பதட்டத்தில் உண்மையை சொல்லியிருந்தாள்.
அவள் அந்த பதட்டத்தில் சொல்ல, இவனோ அவள் மாமாவின் உடல்நிலைக்காக பதட்டப்படுகிறாள் என்று நினைத்து, “ஹேய்! இட்ஸ் கூல்மா, ஒன்னும் பிரச்சனையில்லை. நீ அங்க பார்த்துட்டு வா, நாம பொறுமையா மீட் பண்ணலாம். என் அப்பாவுக்கு உன்னை இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கலாம்னு தான் நேத்து அட்ரஸ் கேட்டேன். சாரி, நீ என்னை நம்பாம கொஸ்டினுக்கு மேல கொஸ்டின் கேட்டியா, அதான் கொஞ்சம் விளையாடலாமேனு உன்கிட்ட பொண்ணு பார்க்க வர்றேன்னு சொல்லிட்டேன். அகைன் சாரி! நீ வருத்தத்துல இருக்கும் போது, நானும் உன்னை கஷ்டப்படுத்திட்டேன். தப்பா எடுத்துக்க வேண்டாம், சரியா? நீ சென்னை வந்ததும் சொல்லு, நான் அப்பாவை வந்து உன்னைப் பார்க்க சொல்றேன், ரைட்!” என அவன் மூச்சு விடாமல் பேச,
“நோ… நோ… இட்ஸ் ஓகே, நேத்து நீங்க என்ன பேசுனீங்கனு கூட நான் கவனிக்கல. சாரி, மாமாவுக்கு இப்படினு எனக்கு சொல்லாம கூட்டிட்டு வந்துட்டாங்க. இங்க வந்து தான் தெரியும். சோ, எதுக்கு போறோம்னு தெரியாம கொஞ்சம் டென்சன்ல இருந்தேன். அதனால உங்களுக்கு சரியா ரெஸ்பான்ஸ் பண்ண முடியல. இப்போ ஸ்டடி ஹாலிடேஸ் தான். சோ, நான் வர ஒன் மன்த் ஆகும். முக்கியமான விஷயம்னா சொல்லுங்க, நான் போன்லயே பேசுறேன்.” என அவளும் பதில் பேச,
“ஒன் மன்த் ஆகுமா? ஓ… ஓகே! இட்ஸ் ஓகே, நான் அப்பாக்கிட்ட பேசிட்டு நம்பர் மெஸேஜ் பண்றேன், நீ பேசு. தைரியமா இரு, உன் மாமாவுக்கு ஒன்னும் ஆகாது. அன்ட் பாடுறதை மட்டும் எப்பவும் நிறுத்தாத. உன்னோட வாய்ஸ் கேட்குறவங்களை அப்படியே பனிக்கட்டியா உருகவும் வைக்கும், உறையவும் வைக்கும்.” என ஆழ்ந்த குரலில் பேச,
“ம்ம்… தேங்க்ஸ்! ட்ரை பண்றேன்.” என்றவள், “நீங்க வேணும்னா நம்பர் கொடுங்க, நான் பேசிடுறேன்.” என அவள் மீண்டும் கேட்க,
“அதெல்லாம் வேண்டாம், நானே டேடிக்கிட்ட பேச சொல்றேன். உன் நம்பர் அவருக்கிட்ட கொடுத்துடுறேன். நீ பாடின வீடியோஸ் அப்பாக்கிட்ட காட்டினதுல இருந்து, உன்னைப் பார்க்கணும்னு சொல்லிட்டே இருக்கார்.” என்றவனிடம் அவள், ‘சரி’ என்பதைத் தவிர வேறு என்ன சொல்வாள்?!
பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தவளிடம், “சாரிமா, உன்னைக் கேட்காம சொல்லியிருக்கக் கூடாது தான். பட் நீ மறுக்க மாட்டனு எனக்கு ஒரு நம்பிக்கை. அதனால தான் ஓகே சொல்லிட்டேன்.” அவளின் அமைதி அவனை என்னவோ செய்ய, அதனால் தான் இந்த விளக்கம்.
“இல்ல… இல்ல… அதெல்லாம் ப்ராப்ளம் இல்ல. எனக்கு இப்போ மாமா ரெகவர் ஆகிட்டா போதும்னு இருக்கு. அவரைப் பத்தின யோசனைதான். அதுதான் உங்ககிட்ட என்னால சரியா பேச முடியல, சாரி! நான் வைக்கட்டுமா? வேலை இருக்கு…” என அவள் பேச்சை முடிக்கும் மார்க்கமாகப் பேச,
அவனுக்கு என்ன புரிந்ததோ, “ஓகேமா, நீ பாரு. மனசைப் போட்டு குழப்பாதே. அவருக்கு எதுவும் ஆகாது, நீயும் ஒரு டாக்டர். ரியாலிட்டிய புரிஞ்சுக்கோ. உனக்கு எப்போ எந்த உதவி தேவைப்பட்டாலும் எங்கிட்ட தயங்காம கேளு. உனக்காக நான் செய்வேன். டேக் கேர், பை!” என்று வைத்துவிட, சாருவிற்குத்தான் என்னவோ போல் ஆகிவிட்டது. தன்னைத் தவறாக நினைத்திருப்பானோ என்ற எண்ணம் வேறு புதிதாக முளைக்க ஆரம்பித்தது.
யோசனைகள் புடை சூழ, நடை பயின்றவளின் அருகில் வந்து நின்றார் ஐசியு வார்டின் சீஃப் நர்ஸ். “கண்ணு, அவர் முழிச்சிட்டார். உன்னைப் பார்க்கணும்னு சொல்றார், வர்றியா? ரொம்ப பேச வைக்காம பார்த்துட்டு வா.” என்ற, அந்த சிஸ்டரின் பேச்சில் உரிமையும் கண்களில் பாசமும் இருப்பது போல் தோன்றினாலும், இப்போதைக்கு அதைக் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை. அவர் கூறியதுமே ஐசியுக்குள் நுழைந்திருந்தாள்.
“என்ன மாமா இப்படி…?” என்ற வார்த்தை அழுகையோடு தான் வந்தது சாருவிற்கு. “கண்ணு, எனக்கு ஒன்னும் இல்ல. அழுவாத கண்ணு! நீ அழுதா எனக்கு தாங்க முடியாது. அதுதான் எல்லாம் சரி பண்ணிடலாம்னு டாக்டர் சொல்லிருக்காங்களே, அப்புறம் என்ன கண்ணு? அழுவாத!” என அவரின் எந்த சமாதானமும் சாருவிடம் எடுபடவில்லை.
அப்போது உள்ளே வந்த சிஸ்டர், “என்ன பாப்பா, உங்கிட்ட என்ன சொல்லிவிட்டேன்? நீயும் டாக்டருக்குப் படிக்கிற தானே? உனக்கும் எல்லாம் தெரியும், புரிஞ்சிருக்கும் தானே. ஸ்டெய்ன் பண்ண விடாத அவரை.” என்று கண்டிப்பு காட்டியவரிடம், ஏனோ மறுத்துப் பேசத் தோன்றவில்லை. அதனால், ‘சரி’ என்பது போல் தலையசைத்து முகத்தைத் துடைத்துக் கொள்ள,
“ரெஜி, காஃபி வாங்கிட்டு வர சொல்லேன் புள்ளைக்கு. இன்னும் ஒன்னும் சாப்பிட்டுருக்காது. முகத்தைப் பாரு, எவ்வளவு சோர்வு தெரியுதுனு…” என அந்த சிஸ்டரிடம் சொல்ல,
“அது நான் வாங்கிட்டு வர சொல்றேன் அத்தான், நீங்க புள்ளைய சமாதானம் செய்யுங்க. ரொம்ப பயந்து போய் இருக்கு.” என்று இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டே வெளியேற,
யார் இவர், எனக்குத் தெரியாதே?’ என்ற கேள்வியோடு தன் மாமனைப் பார்க்க, “அவ நம்ம சொந்தக்கார புள்ளதான். மனோவுக்கு க்ளோஸ் ஃப்ரண்ட். வீட்டுல கஷ்டம்னு படிப்பை முடிச்சதுமே, துபாய்ல வேலைக்குப் போயிட்டா. இங்க வந்து மூணு வருஷம் தான் ஆகுது.” என்றதும், “ஓ…” என்றாளே ஒழிய, வேறெதுவும் பேசவில்லை.
“என்ன கண்ணு, ரொம்ப பயந்துட்டியா? தாத்தா என்ன சொல்றார்?” என்றார் வலியை மீறிய புன்னகையோடு.
“ம்ம்… ரொம்ப… ரொம்ப… ஏன் இப்படி இருக்கீங்க? எங்ககிட்ட சொல்லிருக்கலாம் தானே, எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா? இனி நான் சொல்றது தான் நீங்க கேட்கணும். நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் மாமா. இங்க வேலைக்கு ஆள் போட்டுட்டு, கொஞ்ச நாள் நீங்க என் கூட வந்து சென்னையில இருங்க. அங்கே ட்ரீட்மென்ட் முடிஞ்ச பிறகு நீங்க இங்க வந்தா போதும். என் கூட இருந்தா தான் எனக்கும் கொஞ்சம் தைரியமும் நிம்மதியும் இருக்கும். வேண்டாம்னு சொல்லக் கூடாது. டாக்டர்கிட்டயும் தாத்தாகிட்டயும் நான் பேசிக்கிறேன்.” என படபடவென பேசி முடிக்க,
“அத்தான் நீங்க சொன்னது சரிதான், மனோ மாதிரியே உங்களை விரட்டுறா உங்க மருமக.” என சிரித்தபடியே காஃபி ஃப்ளாஸ்கோடு ரெஜி உள்ளே வர,
“சாரி ஆன்ட்டி, நீங்க அம்மாவோட ஃப்ரண்டாமே… மாமா சொன்னாங்க, எப்படி இருக்கீங்க? இப்போ எங்க இருக்கீங்க? இங்க ஜாப்லயா இருக்கீங்க?” என வரிசையாக கேள்விகளைத் தொடுக்க, ரெஜியின் கண்கள் சட்டென்று செல்வத்திடம் சென்று திரும்பியது. இருவர் விழிகளிலும் ஆறாத காயங்களும் வேதனைகளும் அப்பிக் கிடக்க, அதை சிறு பெண்ணிடம் எப்படி சொல்வது என தெரியாமல் திணறி,
ஒரு வழியாக, “அடடே! அம்மாவோட ஃப்ரன்ட்னு சொன்னதும் பேச்சு ஜெட் ஸ்பீட்ல வருதே? நான் இப்போ இங்க தனியாதான் கண்ணு இருக்கேன். தனியா இருந்தா பைத்தியம் பிடிக்குதுனு சொன்னதால, அத்தான் தான் இங்க சேர்த்து விட்டார். சரி, இன்னொரு நாள் இதைப்பத்தி பேசுவோம். இப்போ காஃபி குடி.” என பேச்சை மாற்ற,
இருவருக்குள்ளும் ஏதோ ஒன்று இருக்கிறது, சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று முடிவுடனே காஃபியை குடிக்க ஆரம்பித்தாள். அன்றே தாத்தாவிடம் பேசியவள், மருத்துவரிடமும் பேசி அடுத்த ஒரு வாரத்தில், சென்னை கிளம்பலாம் என்று எல்லோரும் முடிவு செய்திருந்தனர்.
செல்வம் சென்னை செல்லலாம் என்று முடிவான பிறகு, ஜெனியின் முகம் மேலும் சோர்வடைந்திருந்தது. செல்வம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவரால் தன் மனதை சரி செய்ய முடியவில்லை. இப்படியே இருக்க, செல்வம் டிஸ்சார்ஜ் ஆன அன்று ரெஜியையும், கட்டாயப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தாள் சாரு.
செல்வம் உறங்கும் வரை பொறுமையாக இருந்தவள், அவர் மருந்தின் உதவியோடு ஆழ்ந்த நித்திரைக்குப் போனதும், ரெஜியை அழைத்துக் கொண்டு தாத்தாவின் முன் போய் நின்றாள்.
“தாத்தா, மாமா மேரேஜ் செய்யாம இருந்ததுக்கு இவங்க தான் காரணமா? உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சும் நீங்க ஒன்னுமே செய்யலையா? இதெல்லாம் எனக்காகவா? ஏன் இப்படி செஞ்சீங்க தாத்தா? இப்படி ரெண்டு பேரையும் பிரிச்சி வச்சுட்டீங்களே, ஏன் தாத்தா?” என்ற கேள்விகள் அவரிடம் பாய்ந்தாலும், பார்வை ரெஜியிடம் தான் இருந்தது.
சின்னவளின் எந்த கேள்விக்கும் பெரியவர் பதிலளிக்கவில்லை. அவரின் பார்வையும் இப்போது ரெஜியைத் தான் குற்றம் சாட்டியது. “யாரும் காரணம் இல்ல, நான் தான் காரணம். நான் மட்டும் தான் காரணம்…” என முகத்தை மூடி அழ,
“ஆன்ட்டி ப்ளீஸ்… அழுகையை நிறுத்துங்க, என்னனு சொல்லுங்க.” என்று தண்ணீரைக் கொடுத்து சமாதானம் செய்ய, மறுக்காமல் வாங்கிக் குடித்து சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.
பின், “சுயநலமான ஒரு குடும்பத்துல பிறந்தா, பணம் சம்பாதிச்சுக் கொடுக்க மெஷின் மாதிரி யாராச்சும் கிடைச்சா என்ன நடக்குமோ அதுதான் எனக்கும் நடந்தது.” என்று பெருமூச்சு விட,
“போனதெல்லாம் போகட்டும் ஆன்ட்டி, இனிமேலாச்சும் மாமா கூட நீங்க இருக்கலாமே ஆன்ட்டி?” என்றவளைப் பார்த்து விரக்தியாக சிரித்தார் ரெஜி.
“நானும் மனோவும் ஒன்னா படிச்சவங்க, வீடும் பக்கத்து பக்கத்து வீடு, என் உயிர் சினேகிதி அவ. ஆனா அவ கூட பழகுறது எங்க வீட்ல யாருக்கும் பிடிக்காது. காரணம் பெருசா ஒன்னுமில்ல, உங்க மாமா என் மனசைக் கலைச்சிடுவாராம். ஆனா, அது நடந்தது. என் கூட பேசாம, என்னை பார்க்காமலே அவர் உண்டு, அவர் வேலை உண்டுனு இருக்க, எனக்கு அவர்மேல பைத்தியம் பிடிச்சது. நான் எத்தனையோ தடவை அவர்கிட்ட நேரடியாகவும் மறைமுகமாகவும், என் விருப்பத்தைச் சொல்லிருக்கேன். ஆனா உங்க மாமா…” என்றவர் செல்வத்தின் அறையைப் பார்த்து ஒரு புன்னகை புரிந்துவிட்டு,
“மனோ வாழ்க்கை தான் என்னோட வாழ்க்கை. அவளை இந்த சமுதாயத்துல பெரியாளாக்காம, நான் என்னைப் பத்தி யோசிக்க மாட்டேன்னு ஒரேடியா சொல்லிட்டார். அதோட இந்தப் பேச்சு மனோவுக்குத் தெரியவேக் கூடாதுனு சொல்லிட்டார். என்னால எப்படி அவரை விட முடியும்? முடியாது அப்படி, இப்படினு சொல்லி அழுது, ஆர்ப்பாட்டம் செஞ்சேன். ஆனா அவர் மனசு இறங்கவே இல்லை.
நானும் விடவே இல்லை. தற்கொலை வரைக்கும் போய்…” என்றபோது, “ரெஜி!” என்ற செல்வத்தின் குரல் காட்டமாய் ஒலிக்க, அவரது பேச்சு அப்படியே நிற்க, விழிகள் அவரையே வெறித்துக் கொண்டிருந்தது.
***
1 comment
அச்சோ..! ஒரு அழகான காதல் இப்படி அரையும் குறையுமா பாதியிலயே முழுமையாகாம நின்னுடுச்சோ..?
😔😔😔
CRVS (or) CRVS 2797