Home Love - Family - Romanceஓடங்கள் – 16

16

செல்வமும் ரெஜினாவும் விஸ்வநாதன் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். நீண்ட நாட்களின் பின்னர் அவர்களைப் பார்த்த விஸ்வநாதன் முகத்தில் மகிழ்ச்சியின் சாயல். இருவரையும் புன்னகையுடன் வரவேற்றார்.

இருவரும் அவரிடம் ஆசிர்வாதம் வாங்க, அந்த பெரியவருக்கு மனது நிறைந்து போனது. பின் சிறிது நேரம் பேசிவிட்டு, “ரெஜிமா கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க, சாப்பிட்டு ஷாப்பிங் போகலாம்.” என்ற விஸ்வநாதனிடம்,

“ஆமாம் ப்பா, ட்ரைவர் போட்டுக்கலாம்னு சொன்னாலும் கேட்காம, அவரே ஓட்டிட்டு வந்தார். அவர் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும், நான் சமைக்கிறேன். மீன் கொண்டு வந்தேன், சாப்பிட்டு கிளம்பலாம். அப்போதான் சாரு காலேஜ் முடியவும், நமக்கு முடியவும் டைம் சரியா இருக்கும். அவளையும் காலேஜ்ல பிக்கப் பண்ணிக்கலாம்.” என்ற ரெஜினாவின் பேச்சுக்கு அங்கு யாரும் எதிர்பேச்சு பேசவில்லை.

அடுத்து சில மணி நேரங்களில் உணவருந்தி, சென்னையின் கடை வீதிகளை அலச ஆரம்பித்தனர். அப்போது விஸ்வநாதனால் அலைய முடியவில்லை என ஓரிடத்தில் அமர வைத்துவிட்டு, இருவர் மட்டுமே மீதி ஷாப்பிங்கை முடித்தனர்.

அப்போது இவர்களின் வருகையை தெரிவிக்கலாமென சிவகுருவிற்கு போன் செய்து கூறினார். பின் பேத்திக்கும் ஒரு மெசேஜை போட்டுவிட்டார்.

காலை உணவை நேரம் சென்று எடுத்ததால், மதிய உணவு நேரமும் லேட்டானது. ஒரு ஹோட்டலில் நிறுத்தி மூவரும் சாப்பிடலாம் என நினைத்து, காரை ஓரம் கட்டும் நேரம், திடீரென ஒரு சத்தம் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் தனது சுயநினைவை இழந்திருந்தார் சாருவின் பாசமிகு தாத்தா.

யாருமே எதிர்பார்த்திராத நேரத்தில் நடந்த விபத்தில், அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு சொல்ல, சில நிமிடங்களுக்குப் பின் அந்த பிரபலமான தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விரைந்து வந்து நின்றது. அதிலிருந்து ரத்த வெள்ளத்தில் இருந்த மூவரையும் ஐசியூவில் சேர்த்தனர்.

விபத்து நடந்த இடத்தில் இருந்த நல் உள்ளம் ஒன்று, விஸ்வநாதனின் போனை எடுத்து அவர் இறுதியாக பேசிய நபருக்கு அழைத்து செய்தியைக் கூறி, மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார்.

விசயத்தைக் கேட்ட சிவகுருவுக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் நின்றிருந்தவர், உடனே புகழுக்கு அழைத்து நடந்ததைக் கூறி, தான் மருத்துவமனைக்கு செல்வதாகவும், சாருவை அங்கே அழைத்துக் கொண்டு வருமாறும் கூறிவிட்டு போனை வைத்தார்.

சாருவிற்கு அவர்கள் மூவரும் எந்தளவிற்கு முக்கியமானவர்கள் என்று அவனுக்குத் தெரியுமே. இதை அவளிடம் எவ்வாறு கூற முடியும்?

நிச்சயமாக என் சாருவால் இதை தாங்கிக் கொள்ள முடியாது. என்ன ஆனாலும் சரி, அவளுக்கு துணையாக நான் இருக்கிறேன் என்று நினைத்தவன், உடனே சாருவின் காலேஜ்க்கு சென்றான்.

அப்போது சரியாக மாலை நேர இடைவேளை என்பதால், கேண்டீனில் தான் இருந்தாள் சாரு. காரணமே இன்றி அவளது உடல் நடுங்கியது. ஒரு மாதிரியாக இருக்க, மெல்ல அங்கிருந்த மேசையில் தனது தலையை சாய்த்துக் கொண்டாள் பெண். அப்போது ஒரு வலிய கரம் சாருவின் தலையை வருடிக் கொடுக்க, சட்டென்று திரும்பிப் பார்த்த சாரு அங்கே நின்றிருந்த புகழைப் பார்த்தவள், காரணம் என்னவென்று கூறாது, அவனை அணைத்துக் கொண்டு அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

திடீரென அவள் அணைப்பாள் என்று எதிர்பார்க்காத புகழ் தடுமாறி, பின் அவளை மெதுவாக அணைத்துக் கொண்டான்.

“என்னம்மு?” என அவளின் முதுகை வருட,

“தெரிலப்பா… கொஞ்சம் பயமா, பதட்டமா இருக்கு.” என்றவளிடம், ‘ஐயோ! இவளிடம் நான் எப்படி சொல்லி அழைத்து செல்வேன்? ஏற்கனவே பயந்து போய் இருப்பவளிடம், நான் எப்படி புரிய வைப்பேன்?’ என மனதுக்குள் கதறினாலும், வெளியில் அதைக் காட்டாமல், “பேபிமா எங்கூட வா.” என்று அழைக்க, பெண்ணவளும் எதுவும் பேசாது உடன் சென்றாள்.

காரில் செல்லும் போது, அவளிடம் எப்படி ஆரம்பிப்பது என யோசித்தபடியே மெல்ல, “பேபி, நான் ஒண்ணு சொன்னா நீ கேட்பல?” என்றான் யாசகன் போல.

“ம்… ஆனா ஏன்?” என்றாள் பெண் புரியாமல்.

“உனக்காக எப்பவும் உன்கூட நான் இருப்பேன் அம்மு. உனக்கு எந்த கஷ்டம் வந்தாலும் உன்கூட இந்த புகழ் இருப்பான், சரியா? இதை எப்பவுமே நீ மறக்க கூடாது, உனக்கு புரியுதா?” என்றான் தவிப்பாக.

“சரி, இப்போ எதுக்காக இதை சொல்றீங்க?” என்றாள் இன்னமும் குழப்பமாக. “காரணமாகத்தான் பேபி, நான் சொல்றேன்.” என்றவன் விரைவாக ஹாஸ்பிடலுக்கு வந்தான்.

அவன் காரை நிறுத்தியதும்தான் சாருவே பார்த்தாள். அவர்கள் வந்திருப்பது ஹாஸ்பிடலுக்கு என. ஏதோ ஒன்று நெஞ்சை இறுக்கிப் பிடிப்பது போல இருந்தது. பயத்தில் நா வறண்டது. மெல்ல திரும்பி தன்னருகில் இருக்கும் தன்னவனைப் பார்த்தாள் சாரு.

அவள் தவிப்பைப் பார்த்தவன் அவளை எதிலிருந்தோ காப்பாற்றுவதைப் போல, இழுத்து தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

அவனது அணைப்பில் இருந்தவாறே, “இ… ங்ங்… க… எது… க்கு…” என்றாள். அவளது நெற்றியில் முத்தமிட்டவன், “இங்க பாரு அம்மு, ஒண்ணுமில்லை… வா, உள்ள போகலாம். நான் கூட இருக்கேன்ல…” என்றவனிடம், வரமாட்டேன் என்பது போல தலையசைத்தாள்.

அவளைப் பார்த்தவன், “பேபி, தா… த்தாக்கு…” எனவும்,

“தா… த்… தாக்கு… தாத்தாவுக்கு என்ன?” என்றாள் கலங்கிப் போய்.

மெதுவாக தனது குரலை சரிபடுத்திக் கொண்டவன், “பேபி, தாத்தாவுக்கு மட்டுமில்ல, ஆன்ட்டி, அங்கிள் எல்லாருக்கும் சின்ன ஆக்சிடென்ட். ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்கு. உள்ள அப்பா இருக்காங்க அம்மு, வா போகலாம்.” என்றவன், அவளது புறம் வந்து கார் கதவைத் திறக்க, பொம்மை போல் எதுவும் பேசாது அவனின் பின்னால் சென்றாள்.

‘ஆக்சிடென்ட்’ அந்த வார்த்தையில் இருந்து அவள் இன்னும் வெளியில் வரவில்லை. தன்னைப் பெற்றவர்களும் இப்படியொரு விபத்தில் தானே, அனாதையாக விட்டுப் போனார்கள் என்ற எண்ணம் என்ன தடுத்தும் வந்தது அவளுக்குள்.

அங்கே புகழின் தந்தை சிவகுரு ஐசியூவிற்கு வெளியே பதட்டத்துடன் நின்றிருந்தார். அவரருகே வந்தனர் சாருவும் புகழும்.

“அப்பா, தாத்தாக்கு என்னாச்சுப்பா?” என்றான் சாருவைக் கண்ணால் காட்டி.

சிவகுருவும், “ஷாப்பிங் போயிட்டு ரிட்டன் வரும்போது, பிரேக் பிடிக்காத லாரி ஒண்ணு வந்து, அவங்க வந்திட்டு இருந்த காரை… காரை… இடிச்சுட்டு நிக்காம போயிருக்கு. அங்க இருந்தவங்க ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி, எல்லாரையும் கொண்டு வந்து ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறாங்க.” என்றார் பதட்டமாக.

“அங்… கிள்… மா… மா… அத்… அத்தை எங்க?” என்றவளுக்கு பயம் மேலும் கூடிப்போனது.

“சாருமா, பதட்டப்படாம இருடா.” என்றவருக்கும் பதட்டம் கூடியது.

“ஐயோ என்னாச்சுனு சொல்லுங்க, எனக்கு பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.” என்று கத்த ஆரம்பிக்க, சாருவுக்கு இப்படி கத்தக்கூட தெரியுமா என்று அதிர்ச்சியுடன் பார்த்தான் புகழ்.

“சாரு, அவங்க ரெண்டு பேரும்… ரெண்டு பேரும்…” என எப்படி சொல்வதென தெரியாமல் தடுமாறினார் புகழின் அப்பா.

“அப்பா சொல்லுங்க அப்பா.” என உந்தியவனுக்கு புரிந்திருந்தது செய்தி. புரிந்த செய்திதான் அவனை நிலை குலைய செய்தது.

“அவங்க ரெண்டு பேரும அங்கேயே இறந்திட்டாங்க புகழ். இதை எப்படி சாரு தாங்கிக்க போறானு தெரியலையே…” என்று கண்ணீர் விட்டார்.

தந்தையின் கையைப் பிடித்து அழுத்திவிட்டு சாருவின் பக்கம் திரும்பவும், செய்தியைக் கேட்டு சாரு மயங்கி விழவும் சரியாக இருக்க, அவளைத் தனது கரங்களில் தாங்கி, “டாக்டர் எமெர்ஜென்சி…” என தூக்கிக்கொண்டு ஓடினான்.

சில மணி நேரத்தில் அங்கிருந்த அடுத்த அறையில் அவளுக்கு ட்ரீட்மென்ட் நடந்தது. மருத்துவர் சாருவை செக் செய்த பின்னர், “அதிர்ச்சியில் மயங்கியிருக்கிறாங்க, கொஞ்ச நேரத்தில கண் விழிச்சிடுவாங்க.” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். சாருவின் அருகிலே அமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தான் அவளின் புகழ்.

இங்கே விஸ்வநாதனுக்கு தீவிரமான சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தது. டாக்டர்கள் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு டாக்டர் வெளியே வந்தார்.

“டாக்டர் அப்பாக்கு எப்பிடி இருக்கு? ஒண்ணும் பிரச்சனை இல்லையில்ல…?” தெரிந்தும் கேட்டார் சிவகுரு.

“நான் சொல்லப் போறது உங்களுக்கு அதிர்ச்சியா இருக்கலாம் சிவா. ஆனால் நீங்க அதை ஏத்துக்கிட்டு தானாகணும். அவருக்கு ஆக்ஸிடெண்ட்ல ரொம்ப அடிபட்டிருக்கு. அவரோட வயசும் அதிகம். அதனால அவரோட உடல் ட்ரீட்மெண்ட்டை ஏத்துக்க மாட்டேங்குது. நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணிட்டோம். அவரு அவரோட இறுதி நேரத்தில இருக்கார். சாருங்கிற பேரை மட்டும் சொல்லிட்டே இருக்கார். அவர் கடைசியா அவங்ககூட பேச ஆசைப்படலாம். அவங்களை அவர்கிட்ட அழைச்சிட்டு போங்க.” என்று கூறிவிட்டு டாக்டர் சென்றுவிட்டார்.

சாருவை அட்மிட் செய்த அறைக்குச் சென்று, அங்கே இன்னும் மயக்கம் தெளியாது படுத்திருந்த சாருவைப் பார்த்தார். மகன் தோள் மீது கையை வைத்து, “புகழ்!” என்றவர் டாக்டர் கூறிதை அவனிடம் கூறினார்.

புகழுக்கு தனது தந்தை கூறியதைக் கேட்டதும் அடுத்து என்ன செய்ய, இவளை எப்படி சமாளிக்க என்று புரியவில்லை. தன்னவள் இதனை எப்படி ஏற்றுக்கொள்ள போகிறாள்? அவளது எதிர்காலம் என்னவாகும்? இதிலிருந்து எப்படி மீளப்போகிறாள் என்று பல எண்ணங்கள், பயங்கள் அவன் மனதில் அணிவகுத்தன. அவனது எண்ணங்களுக்கு தடைபோடும் விதமாக, “தாத்தா!” என்று எழுந்தாள் சாரு மெதுவாக.

“புகழ், தாத்தா… தாத்தா…” என குழந்தையாக உதடு பிதுக்க,

“சாருமா ஒண்ணுமில்லைடா… வா, தாத்தாவைப் போய் பார்க்கலாம்.” என்றார் நிலைமையை கையில் எடுத்துக் கொண்ட சிவகுரு.

புகழது கையை இறுகப் பிடித்துக் கொண்டு, அவர்களுடன் ஐசியூக்குள் சென்றாள். அங்கே தனது உடலில் பல வயர்கள் பொருத்தப்பட்டு படுத்திருந்தார் விஸ்வநாதன்.

தான் டாக்டருக்கு படித்தாலும் தனது உறவுகளை இந்த நிலைமையில் பார்த்தால், யாராக இருந்தாலுமே கலங்கிப் போவார்கள். அதில் சாருவும் விதிவிலக்கல்ல. தளர்ந்த நடையுடன் தனது தாத்தாவின் அருகே சென்று, “தா… த்… தா…” என்றாள் உயிரைக் கையில் பிடித்தபடி.

அவளது குரல் அவரது செவிகளைத் தீண்டிச் செல்ல, மெது மெதுவாக கண்களைத் திறந்து தனது ஆருயிர் பேத்தியைப் பார்த்தார் விஸ்வநாதன். தனது கண்களால் அருகே அழைத்தார். அவள் உடல் பயத்தில் நடுங்கியது. எதையும் ஏற்க முடியாமல் மெல்ல அவர் புறம் குனிந்தாள் சாரு.

“சா… ரு… ம்… மா…” என்ற அவரது அழைப்பில் உடைந்தாள் பெண்.

“தாத்தா… தாத்தா… என்னை விட்டு போயிடாதீங்க. எனக்கு உங்களை விட்டா யாருமே இல்லை தாத்தா… தாத்தா… நீங்க எங்கூடவே இருக்கணும்… அத்தையும் மாமாவும் என்னை ஏமாத்திட்டாங்க. அவங்க எல்லாரையும் மாதிரி நீங்களும் ஏமாத்தக்கூடாது…” என்று அழுதவளை, தனது தோளோடு சாய்த்துக் கொண்டான் புகழ்.

அணையப்போகும் தீபம் பிரகாசமாக எரியுமாம். அதுபோல விஸ்வநாதனும் தான் பேச வேண்டியவற்றை விரைவாக கூற வேண்டும் என நினைத்தவர் பேச ஆரம்பித்தார்.

“சாரு… ம்மா… நான் சொல்றதை கவனமாக கேளுடா. எனக்கான நேரம் வந்திட்டு. என்னை அந்த கடவுள் கூப்பிடுறான்மா. சாருமா… இனிமேல் நீ கவனமாக இருக்கணும். இந்த உலகத்தில உன்னை தனியா விட்டுட்டு போற இந்த தாத்தாவை மன்னிச்சிடுமா.

உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டேன். என்னோட மனசில பெரிய குறை ஒண்ணுதான்மா. உனக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். இப்போ அந்த ஆசை நிறைவேறாமலே போறேன்னும் போது மனசு வலிக்குதுமா…”

“தாத்தா… அப்… அப்படி எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு பயமா இருக்கு… நானும் உங்ககூட வருவேன், எல்லோரும் என்னை விட்டு போறீங்க. நான் இருந்து என்ன செய்வேன்? நானும் வருவேன்…” என கதற ஆரம்பித்தவளைப் பிடித்துக்கொண்டான் புகழ்.

“அப்பா… நீங்க அதெல்லாம் யோசிக்கவே கூடாது. உங்க பேத்தி என் வீட்டு மருமக. நான் ஒண்ணு சொல்றேன், நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. என்னோட பையன் புகழ், சாருவை ரொம்ப விரும்புறான். அவன் நிச்சயமா சாருவை நல்லா பார்த்துப்பான். நாங்க எப்பவும் அவகூடவே இருப்போம், நீங்க பயந்துக்காதீங்கப்பா.” என்ற சிவகுருவுக்கு, அடுத்து என்ன சொல்வது என்றும் தெரியவில்லை.

“அப்படினா… இப்பவே புகழ், சாரு கல்யாணம் நடக்கட்டுமே… என் முன்னாடியே நடக்கட்டுமே… அதை பார்த்திட்டு நான் ரொம்ப சந்தோசமா போய் சேர்ந்திடுவன்…” என்று திணறியவரிடம்,

“ம்ஹூம் தாத்தா… நீ… நீங்க வாங்க, நல்லபடியா திரும்பி வாங்க. நீங்க முன்ன நின்னு எங்க கல்யாணத்தை நடத்தி வைங்க.” என்று கதறினாள் சாரு.

“சாரும்மா இல்லம்மா… என்னோட நிலைமை எனக்கு தெரியும். இதுக்கு மேல நான் இருக்க மாட்டேன்னு தோனுது. புகழ் எனக்காக என் சாருவோட கழுத்தில தாலியை மட்டும் இப்போ கட்டிடுப்பா.” எனப் பேத்தியை விட்டு, புகழிடம் கேட்டார் விஸ்வநாதன்.

“அது… தாத்தா…” என புகழும் திணற, அதைப் பார்த்த பெரியவரின் கண்களில் நிராசை வழிந்தது.

அதை கவனித்த சிவகுரு தன் கழுத்தில் இருந்த செயினை கழட்டி, “இது என் அம்மாவோட செயின், அவங்க தாலியைக் கோர்த்து இதுல போட்டுத்தான், அவங்க ஞாபகமா நான் இவ்வளவு நாளா போட்டுருந்தேன். இதை புகழ், சாரு கழுத்துல போடட்டும்.” என்ற சிவகுரு இருவரையும் அவருக்கு நேரே நிறுத்தி, செயினை மகனின் கையில் கொடுத்தார். புகழும் தன்னவளின் கழுத்தில் விஸ்வநாதன் முன்னிலையில், அந்த செயினை போட்டு தன் மனைவியாக்கிக் கொண்டான்.

தனது பேத்தியை ஒரு நல்லவன் கையில் ஒப்படைத்த மகிழ்வோடு, விஸ்வநாதனின் உயிர் அந்த நொடி அவர் உடலில் இருந்து பிரிந்தது. டாக்டர் வந்து அவர் இறந்ததை உறுதிபடுத்தி விட்டுச் செல்ல,

இங்கு சாருவின் நிலையோ மிகவும் மோசமாக இருந்தது. அவள் கண்ணில் இருந்து ஒரு துளி கண்ணீர் வந்தது, அவ்வளவு தான் எதுவும் பேசவில்லை. அவரது உடலையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அனைத்தையும் சிவகுருவும் புகழும் சேர்ந்து செய்தனர்.

இறுதியாக மூவரின் உடலும் ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்தவர்களின் உதவியோடு புகழ் அவர்களுக்கான இறுதிச் சடங்குகளைச் செய்து, எந்த விதமான குறையும் இன்றி வழியனுப்பி விட்டு வீட்டிற்கு வந்தான்.

அங்கே அவர்கள் செல்லும் போது எப்படி தூணில் சாய்ந்து இருந்தாளோ, அப்படியே இருந்தாள். கண்கள் அங்கு மாட்டப்பட்டிருந்த மூவரின் புகைப்படத்தையும் பார்த்த வண்ணம் இருந்தது.

குளித்துவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான் புகழ். அவளது கையைப் பிடித்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டு மெதுவாக பேச ஆரம்பித்தான்.

“அம்… அம்மு என்னை பாருடா…” என்றான் கைகளை வருடியபடி. ஆனால் அவளது பார்வை அவனைத் தீண்டவே இல்லை. அவனது அம்முவை இந்த நிலையில் பார்க்க முடியாது தவித்தான் புகழ்.

அவளது கன்னத்தைப் பிடித்து தன் முகத்தைப் பார்க்க வைத்தவன், “அம்மு, நீ அழவே இல்லைடா. எதையும் மனசுக்குள்ள வச்சிட்டு இருக்காமல் அழுதுடுடா. என் தங்கம்ல… இப்படியே இருந்தா…” என்றவனின் குரலும் கரகரப்பாக இருக்க,

அவனைப் பார்த்தவள் எதுவும் பேசாமல் அவனது மடியில் தலை வைத்து படுத்துக்கொண்டு, அவனது கையை எடுத்து தனது கழுத்தை சுற்றிக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள். புகழ் அவளது தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.

சாருவின் தலையை வருடியவாறு தூங்கியிருந்த மகனின் தோளைத் தொட்டார் சிவகுரு.

“அப்பா…” என்றவனிடம்,

“புகழ், முதல்ல சாருவை எழுப்பி சாப்பிட வை. நேத்து சாப்பிட்டது, சாப்பிட்டாதான் அவளுக்கு யோசிக்க முடியும். இப்போதைய சூழலும் புரியும். பாவம், ரொம்ப களைப்பாவும் இருக்கா.” என்ற தந்தையின் பேச்சு புரியாமல் இல்லை அவனுக்கு.

அவனாலேயே இன்னும் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளை மறந்து இரு என்று எப்படி சொல்ல? “சரிப்பா…” என்றவன் அவளை எழுப்பி குளிக்கச் சொல்ல, எதுவும் பேசாது குளித்துவிட்டு வந்து தனது தாத்தா, செல்வம் மற்றும் ரெஜினாவின் புகைப்படத்திற்கு விளக்கு ஏற்றி, அவர்கள் படத்தின் முன்பாக படுத்தாள்.

சாப்பாட்டு தட்டுடன் வந்த புகழ் கண்களில், ஆதரவின்றி இருக்கும் குழந்தை போல அவள் தெரிந்ததும், விரைந்து வந்தவன் அவளை அள்ளி தன் மடியில் போட்டுக் கொண்டான்.

“கண்ணம்மா, உன்கூட எப்பவும் நான் இருப்பேன், சரியா? நீ இப்படி இருக்கிறதை பார்க்கிற சக்தி எனக்கு இல்லடா. எனக்கு உன்னோட நிலைமை புரியுது கண்ணா. ஆனால், இதை எல்லாம் கடந்துதான் வரணும் பேபி, முதல்ல சாப்பிடு.” என்று ஒருபாடு சமாதானம் செய்து அவளுக்கு சாப்பாட்டை ஊட்ட, எதுவும் பேசாமல் வாங்கிக் கொண்டாள்.

சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் அவனது மடி அவளுக்கு மெத்தையாகியது. அவளைப் புரிந்துகொள்ள முடியாது தடுமாறினான் புகழ்.

“சாரு என்ன சொல்றா புகழ்?” என்ற தந்தைக்கு,

“எதுவுமே பேசாமல் இருக்கா அப்பா. அவ மனசு விட்டு அழுதாலாவது கவலை கொஞ்சமாவது குறையும். இவ அழவே மாட்டேன்னு இருக்கா. எதை போட்டு அழுத்திட்டு இருக்கானு தெரியல, எனக்கு பயமா இருக்குப்பா.” என தந்தையிடம் மனம் திறந்தவனிடம்,

“அவளை தாய்க்கு தாயாக, அப்பாக்கு அப்பாவாக வளர்த்த அவளோட தாத்தா இறந்ததை ஏத்துக்க முடியலை புகழ். பட்டாம்பூச்சி மாதிரி இருந்தவளை இப்பிடி பார்க்கும் போது, எனக்கும் ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.” என்றவருக்கும் வார்த்தைகள் இல்லை.

“அப்பா எங்களோட கல்யாண விஷயம் அம்மாக்கு… எப்படி சொல்லி புரிய வைக்கிறது? ரொம்ப கோபப்படுவாங்கப்பா, அவங்களால தாங்கவே முடியாது.” புகழ் தாயை நினைத்து கூற,

“ம்ம்… கண்டிப்பா புகழ்… பெரிய பிரச்சனை பண்ணுவா, உங்க அம்மாக்கு இந்த விஷயம் தெரியாது. இப்போதைக்கு தெரியவும் வேண்டாம். நேரம் வரும் போது சொல்லலாம். முதல்ல ரெண்டு பேரும் உங்களோட படிப்பை முடிங்க. சாருவை என்ன பண்ணலாம்?” என்றார் மகனிடம்.

“அப்பா, சாருவை எங்கூடவே பெங்களூர் கூட்டிட்டு போறேன்பா. அவகூட நான் இருக்கணும்ப்பா. இந்த நிலையில் அவளை தனியா விட என்னால முடியாதுப்பா. இன்னும் இன்னும் லோன்லியா ஃபீலாவாப்பா…” என்று சாருவை யோசித்து சொல்ல,

“நீ சொல்றதும் சரிதான் புகழ். சாரு உன்கூடவே வரட்டும். நாளைக்கு சாருக்கிட்ட இதைப்பற்றி பேசலாம், அவளை பார்த்துக்கோ. நீங்க தூங்குங்க, நான் வர்றேன்.” என்றவர் அங்கிருந்து சென்றதும், சாருவை அவளது அறைக்குள் தூக்கிச் சென்று படுக்க வைத்துவிட்டு, நகர்ந்தவனின் விரலை தூக்கத்திலே இறுக்கிப் பிடித்தாள் சாரு. அதை பார்த்தவனுக்கு அவ்வளவு நேரம் இருந்த இறுக்கம் குறைய, லேசாக சிரித்துவிட்டு அவளருகிலே படுத்து மெல்ல கண் மூடினான் புகழ்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio May 28, 2026 - 3:12 pm

பரவாயில்லை… நல்ல மனிதர்களின் நிழலில் தான் சாருவை விட்டுவிட்டு சென்றுள்ளார்கள் அவளின் உறவுகள்.

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured