அந்த இக்கட்டான நிலையில் மதுசூதனின் வருகை மாதுளைக்குப் பக்கபலமாக அமைந்தது. சற்றே தெம்பு பெற்றவள் மும்முரமாகத் தீயை அணைக்கத் திட்டமிட்டாள்; மாணவர்களை ஏவி வெவ்வேறு தளங்களில் இருந்த தீயணைப்பான்களைக் கொண்டு வரச் செய்தாள். அதை ஆளுக்கொன்றாக உபயோகித்து, ஒரே நேரத்தில் தீயை மட்டுப்படுத்த முயன்றனர். அது மீண்டும் தலை தூக்குவதற்குள் ஆய்வகத்திலிருந்த கிருஷ்ஷை மது குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு வெளியேறினான். அவர்கள் படியிறங்கி தரைத்தளத்தை அடைந்த அடுத்த கணம் தீயணைப்புத் துறை களத்தில் குதித்திருந்தது.

அன்றும் அடுத்த இரு நாட்களுக்கும் கல்லூரி இயங்கவில்லை. மூன்றாவது நாள் மாதுவிற்கு முதல்வரின் வாயால் கடும் வசை விழுந்தது. அத்தனையையும் அவள் எதிர்வினையேதுமின்றி வாங்கிக் கொண்டாள். தான் ஏதாவது பேசப் போய் கிருஷ்ஷின் நிலைமை மேலும் கவலைக்கிடமாவதை அவள் விரும்பவில்லை; பின் அவனை மட்டும் தனியே கல்லூரி உணவகத்திற்கு அழைத்துச் சென்று, அரை மணி நேரத்திற்கும் மேலாக உபதேச உரையாற்றினாள்; அவளால் இயன்ற உதவிகள் செய்து, அவனைப் பட்டம் வாங்க வைப்பதாக வாக்களித்தாள். இந்தக் களேபரங்கள் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் குடும்பப் பொறுப்புகள் வரிசை கட்டி நின்றன. சுதாவிற்கு வளைகாப்பு நடத்துவதற்கான நாள் நெருங்கி வந்திருந்தது.

நிகழ்ச்சிக்கு முந்தைய இரவு…

“என்னங்க! என்னங்க!” அப்போது தான் வீட்டிற்குள் நுழைந்த மதுவை அன்புடன் அழைத்தாள் மனைவி.

“என்ன, மரியாதைலாம் ஜாஸ்தியா இருக்கு” என்று கேட்டு விரலில் சாவியைச் சுழற்றியபடியே சமையற்கட்டை எட்டிப் பார்த்தான் அவன்; “பொண்டாட்டி, எங்க ஒருத்தரையும் காணோம். எல்லாரையும் பகலோட பகலா வீட்டை விட்டு துரத்திட்டியா?” என நையாண்டி வேறு செய்தான்.

“உங்க வாயில வசம்பு வைச்சுத் தேய்க்க. சுதாவோட பையனுக்கு வயித்துப் பூச்சி நெண்டுதாம். அதுக்கு மாத்திரை வாங்கப் போயிருக்காங்க. உங்க வாயைக் கொஞ்சம் அடக்கிட்டு, இதுல உப்பு இருக்கானு பாத்துச் சொல்லுங்களேன்” என்றாள் அவள் ஒரு கையில் மாவும் மறு கையில் கரண்டியுமாக.

அவன் அவளின் விரல்களைப் பிடித்துச் சுவைத்துவிட்டு “உப்பு கம்மியா தான் இருக்கு” என்றான் வெட்கமேயில்லாமல்.

அவனின் செயலில் ஆவென்று வாய் பிளந்து நின்றிருந்தாள் பெண்.

“என்ன, சிலையாயிட்டியா?” வெறுமனே வினாவோடு நிறுத்தாமல் தேனூறிய இடையையும் கிள்ளி வைத்தான் கள்வன்.

அதில் திடுக்கிட்டு அவள் கரண்டியை நழுவவிட, அதிலிருந்த மாவு தெறித்து அவளின் கழுத்திலும் ஒரு துளி ஒட்டியது.

அவள் சுதாரிப்பதற்குள் தலை குனிந்து அதை ருசி கண்டவன் “ம்ம்ம். இப்போ உப்பு சரியா இருக்கு” என்கவும் அவனது கண்கட்டு வித்தையில் மொத்தமாய்க் கவிழ்ந்து போனாள் தாரகை.

அந்நேரம் அன்னையாரும் சுதாவும் உள்ளே வர, “கொஞ்சம் கூட கவனமே இல்லை. இப்படித் தான் எல்லாத்தையும் தடபுடான்னு போட்டு உடைப்பியா?” என்று குரலுயர்த்தினான் அவன்.

‘யப்பா, என்னா நடிப்பு! உங்களைப் போய் டேஸ்ட் பாருங்கன்னு கேட்டேன் பாத்தீங்களா? என்னைச் சொல்லணும்’ என உள்ளுக்குள்ளே நொந்தவள் “ஸாரிங்க. ஸாரி” என்றாள் இதழ்களைச் சுளித்து.

“என்னமா, உன் மருமக கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இருக்கா. இவளை வச்சுட்டு நான் எப்படி இந்தக் குடும்பத்தைக் கட்டிக் காப்பாத்துறது? ஐயகோ!” எனப் போகிற போக்கில் தாயிடமும் நடிப்புத் திறமையைக் காண்பித்தான்.

“டேய், டேய்! அநியாயத்துக்கு நாடகமாடாத. உன் வரலாறு என்னனு கொஞ்சம் யோசிச்சுப் பாத்துட்டுப் பேசு” என்று சிந்தாமணி திருப்பியடிக்கவும் அவன் மென்னகையோடு அறைக்கு நடந்தான்.

மறுதினம் இட்லி, சாம்பார், சட்னி, கேசரி, அப்பளம், வடை, பாயாசம், மற்றும் ஐவகை கட்டுச் சோற்றுடன் விருந்து தயாராகி இருந்தது. பந்தி பரிமாறுவதற்கு முன்னதாக கணவன், மனைவி இருவரும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, வளைகாப்பு விழாவினை வேடிக்கை பார்த்தனர்.

“மச்சான், அந்தப் பொண்ணைப் பாருங்க‌ளேன்” அவள் ஆர்வத்தோடு கூட்டத்திலிருந்த ஒரு மங்கையைச் சுட்டிக் காட்டினாள்.

“சொந்தப் புருஷனையே வேற ஒரு புள்ளைய ஸைட் அடிக்கச் சொல்றியே, பாவி!” என்று அவன் அங்கலாய்த்தான்.

“ஐயோ, மச்சான்! அந்தப் பொண்ணோட காதைப் பாருங்க. எனக்கு அது மாதிரி ஒரு மாட்டல் வேணும்”

“மாட்டல் தான? வாங்கலாம். வாங்கலாம்”

“அப்பறம் மச்சான் கழுத்து, காதுலலாம் நகை இருக்கு. கை மட்டும் வெத்தா கிடக்கு. ஒரு ஜோடி தங்க வளையல் வாங்கித் தரீங்களா?”

“ஓ, வாங்கலாமே! ஆனா, நம்ம முறைப்படி வளைகாப்புல தான் பொண்ணுக்குத் தங்க வளையல் போடுவாங்க. உனக்கும் நேரம் வரப்போ வளைகாப்பு வைப்போம்ல. அப்போ ஒவ்வொரு கைக்கும் மூனு வளையலா போட்ரலாம். சரி தான, பொண்டாட்டி?”

“ம்க்கும்” என்று அவள் சிலுப்பிக் கொண்டு நகர, அவன் முகம் குறும்புப் புன்னகையால் மலர்ந்தது‌.

அடுத்த நாள் அவள் எண்ணிலடங்காத் துணிகளை மாங்கு மாங்கென்று துவைத்துக் கொண்டிருக்க, அப்போது தான் அலுப்பு போக தூங்கி எழுந்திருந்தான் மது‌. மனையாளைத் தேடிக் கொண்டு மாடிக்கு வந்தவன், தேநீர்க் கோப்பையோடு தடுப்பில் அமர்ந்த வண்ணம் அவளைப் பார்வையால் ஊடுருவலானான். என்ன தான் ஈருடல் ஓருயிராக இருந்தாலும் துணைவியைத் தள்ளியிருந்து இரசிப்பதும் ஒருவித சுகமல்லவா!

பார்த்திருந்து, கணவன் கோப்பையைக் கீழிறக்கியதும் அழைப்பு விடுத்தாள் அவள் “மது, இங்க வாங்களேன்”

“நானா?”

“நீங்களே தான்”

“சொல்லு”

“இந்தத் துவைச்ச துணிங்களை  அலுசுங்களேன். நாலு நாளா வேலை, வேலை, ஓயாத வேலை. முடியல” அவள் அசதியுடன் பெருமூச்சுவிட்டாள்.

கைலியை மடித்துக் கட்டி அவளருகில் வந்தவன் “எங்க அம்மா மட்டும் இதைப் பாத்தாங்க…” என்றபடியே ஓராடையைக் கையிலெடுத்தான்.

“அதெல்லாம் நாங்க பாத்துக்கிறோம். நீங்க அலசுற வேலையை மட்டும் பாருங்க” என்றாள் அவள் ஏற்றத்துடன்.

அவன்பாட்டிற்குக் கடமையே கண்ணாகப் பணியில் இறங்க, அவளோ ஓரக் கண்ணால் அவனைத் தீண்டிக் கொண்டேயிருந்தாள் “என்ன பார்வை?”

“ஒன்னுமில்லையே” என்று கூறிக் கொண்டே அவனை மேலிருந்து கீழாக அளந்தாள்.

“மறுபடியும் மறுபடியும் பார்றா”

ஒரு வேகத்தில் “பாத்துட்டுத் தான்டா இருக்கேன்” என்று அவள் வார்த்தையை விட்டாள்.

அவன் திகைப்புற்று துணியைத் தொப்பென்று கீழே விட்டதோடு, அவளையே கூர்ந்து நோக்கினான்.

“அச்சச்சோ!” அவள் சவர்க்கார நுரையுடன் கப்பென்று வாய் பொத்தினாள்.

“அடியே! உனக்குக் கொழுப்பு ரொம்ப கூடிப் போச்சு” அவன் முறைப்புடன் இடையில் கை தாங்கினான்.

“வாய் தவறி வந்திருச்சுங்க. ஸாரி” அவள் தயை கோரும் விதமாகக் கண்களைச் சுருக்கினாள்.

“உன்னை…” என்றவாறு அவன் அவளைப் பிடிக்கப் பாய

அவள் தப்பியோட முயற்சித்து தரையில் வழுக்கி விழுந்தாள் “ஐயோ! அம்மா!”

அவளைக் காபந்து செய்கிறேன் பேர்வழி என அவனும் விழுந்து வைத்தான் “யம்மா!”

“நான் தான் விழுந்தேன்னா, நீங்களாவது தாங்கிப் பிடிக்கறதில்லையா? என்ன புருஷனோ!” என அவள் இடையைப் பிடித்துக் கொண்டே முனகினாள்.

“ஏன் பேச மாட்ட?” என்றபடி அவனும் வலியில் நெளிந்தான்.

“நீங்க தான் வலுவான ஆளாச்சே. எங்க, இப்போ எழுந்திருங்க பாப்போம்” என்றபடி அவள் அவனின் மேலேறி உட்கார்ந்து கொண்டாள்.

அத்தருணம் படியேறி வந்த சுலோச்சனா அக்காட்சியைக் கண்ணுற்ற கணத்திலே “அண்ணி! ஆஹ்…” என்று இறைஞ்சி, அடங்கி, சிரமப்பட்டு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டாள்.

“சுலோ!” மதுவும் மாதுவும் ஓரலையில் ஒத்தாற்போல அதிர்ந்தனர்.

“ஸாரி. தெரியாம வந்துட்டேன்” என்ற இளையவள் நொடி தாமதியாமல் கீழே ஓடிவிட்டாள்.

“என்னடி ஆச்சு? ஏன் பேயைக் கண்ட மாதிரி அலறிட்டு வர?” என்றார் அங்கிருந்த சிந்தாமணி.

“அம்மா, இவங்க ரொமான்ஸ் தொல்லை தாங்கலை. தயவுசெஞ்சு என்னைக் கல்யாணம் பண்ணி வேற வீட்டுக்கு அனுப்பிடுங்க” என்று சொல்லி இவள் அறைக்குள் புகுந்து கொண்டாள்.

சிந்தாமணியால் அதை எளிதாகக் கடந்து போக இயலவில்லை. கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டு, மூன்று தடவை நேரடியாக இவள் வாயிலிருந்தே இத்தகைய சொற்கள் வெளிப்பட்டுவிட்டன. இதற்கு மேலும் ஒரு பெண்ணால் வெளிப்படையாகக் கூற இயலும் என அவருக்குத் தோன்றவில்லை. இவளுக்கு வரன் தேடப் போவதாக அவர் அறிவித்தபோது இவள் தடுக்கவுமில்லை. அங்குச் சுற்றி, இங்குச் சுற்றி இறுதியாக அமைந்த மாப்பிள்ளை என்னவோ நம் சத்யா தான். மதுவும் மாதுவும் வழக்கமாகச் சென்று வரும் கோவிலில், இரு குடும்பத்தாரின் சந்திப்பு நிகழ்வு ஏற்பாடானது. பெரியவர்கள் பேசி முடிவெடுத்த பின்னர், இள வயதினர் இருவரும் கண்ணுக்கெட்டும் தொலைவில் தனித்துவிடப்பட்டனர்.

“ஹாய்!” சுலோவே முதலில் ஆரம்பித்தாள்.

“ஹலோ! ஐ’ம் சத்யா” அவன் வழக்கம் போல அவளிடமும் கரம் நீட்டிவிட்டான்.

அவளோ விழித்து, சுற்றி முற்றி ஒருமுறை பார்த்த பிறகே கைக்குலுக்க, அவன் சங்கடத்தோடு பின்னந்தலையை வருடிக் கொண்டான். நடுநிலையான ஒரு வர்ணத்தில் அவன் முறையாக உடுத்தி வந்திருக்க, அவள் பளீர் வண்ணத்தில் சுடிதார் அணிந்து ஒரு தோள்பையுடன் காட்சியளித்தாள்.

“காலேஜுக்குப் போயிட்டு வரீங்களா? சர்டிஃபிகேட்ஸ்லாம் வாங்கியாச்சா?”

“இப்போதைக்கு ப்ரொவிஷனலும் மார்க் ஷீட்டும் வாங்கிருக்கேன்”

“நான் அதைப் பாக்கலாமா?”

அவனிடம் இதை எதிர்பார்த்திராதவள் தயக்கத்துடனே பையைத் திறந்தாள் “ஜஸ்ட் பாஸ் தான். பெருசா எக்ஸ்பெக்ட் பண்ணாதீங்க”

“என்ன இருந்தாலும் பாஸ் பாஸ் தான. அரியர் வைக்காம கிளியர் பண்ண வரைக்கும் சந்தோஷம். அடுத்து என்ன செய்யப் போறீங்க?”

“இன்னும் எதுவும் முடிவெடுக்கல” அவள் சற்றே தடுமாறினாள்.

“ஓகே. ஓகே”

“உங்களைப் பத்தி ஏதாச்சும் சொல்லுங்க”

“என்னைப் பத்தி…” இம்முறை அவன் தயங்கினான்.

“அண்ணி மேலோட்டமா சொன்னாங்க. இருந்தாலும் உங்களுக்கும் எனக்கும் செட் ஆகுமான்னு தெரியணும்”

அதற்கு விடை பகராமல் அவன் பளிச்சென்று சிரித்தான்.

“ஏன் சிரிக்குறீங்க?”

“நீங்க என்ன பொருத்தம் பாத்தாலும் கல்யாணம் ஆனவங்களுக்கு இடையில ஊடல் வரத் தான் செய்யும்” அவன் கச்சிதமாக மொழிந்தான்.

எனவே, அவள் பொதுப்படையாகக் கேள்வி கேட்பதைத் தவிர்க்கலானாள் “சரி. உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம்னா எது?”

“பொய் சொல்றது. உள்ள ஒன்னு வச்சுட்டு வெளிய ஒன்னு பேசுறது. உனக்கு?”

“எங்க குடும்பத்துக்கும் அப்படித் தான். நாங்க நிறைய குத்தம் குறை உள்ளவங்க தான்‌. ஆனா, எங்கள்ல யாருமே யாரையும் ஏமாத்த நினைக்க மாட்டோம்”

“ம்ம். உங்க வீட்டுல என்னை மட்டமா எடை போடுறாங்க; கரெக்டா?”

“ச்ச ச்ச்ச. நீங்களா அப்படி ஒரு தப்பான முடிவுக்கு வராதீங்க”

“உண்மைய சொல்லணும்னா, நமக்குனு ஒரு சொந்த வீடு கூட இல்ல. என் பேருல இடம் இருக்கு. கூடிய சீக்கிரம் அஸ்திவாரம் போட்ருவேன். அதுவரைக்கும் நீ பொறுத்துக்கணும். நான் காசை எதிர்பாத்து உன்னைக் கல்யாணம் பண்ணல, சுலோ. தனிப்பட்ட முறையில எனக்கு வரதட்சணை வாங்குறதுல விருப்பம் இல்ல. உங்க வீட்டுல உனக்கு ஆசைப்பட்டு எது செய்யறதா இருந்தாலும் செய்யட்டும். நான் தடுக்க மாட்டேன். உன்னோட சேஃப்டிக்கு அதை நீ வச்சுக்கோ. அதே சமயம், உங்க வீட்டுல இருந்து வர எந்தப் பொருளாதார உதவியையும் நான் ஏத்துக்க மாட்டேன். கூழோ, கஞ்சியோ, பீட்ஸாவோ, பிரியாணியோ நாம சம்பாதிக்கிறத வச்சு தான் நாம வாழணும். இதைத் தான் உங்க வீட்டுலயும் நான் சொல்லியிருக்கேன். என்னோட பாய்ன்ட் புரிஞ்சுதில்ல‌? உனக்கு ஏதாவது சொல்லணுமா?” அவன் பேசியது அடைமழை பெய்து ஓய்ந்ததைப் போல இருந்தது. வாத்தி என்றால் சும்மாவா!

“புரிஞ்சுது. நான் புதுசா சொல்றதுக்கு எதுவும் இல்ல” அவள் தலைகுனிந்தபடியே கூறினாள்.

அவளைச் சில விநாடிகளுக்கு ஆராய்ச்சியாகப் பார்த்துவிட்டு அவன் எழுந்தான் “சரி, போலாம்”

அவனை முன்னே போகவிட்டு, அவளும் சில கணங்கள் இரசித்துக் கொண்டாள்.

வார இறுதியில் ஈரிணைத் தம்பதியரும் திரையரங்கிற்குச் சென்றிருந்தனர். மதுவும் மாதுவும் சேர்ந்து அமர்ந்து கொள்ள, சுலோவும் சத்யாவும் ஆளுக்கொரு முனையில் அமர நேர்ந்தது. திரைப்படம் நிறைவுறும் தருவாயில், மணமாகவிருக்கும் தம்பதியர் மெல்ல பேச்சைத் தொடங்கினர். படம் முடிந்த பிற்பாடு அவர்கள் உரையாடியபடியே வீதியைக் கடக்க, எங்கிருந்தோ வந்திறங்கினான் வினோத்.

அத்துமீறி அக்கயவன் இளையவளின் கரத்தை அழுந்தப் பற்றினான் “இவன் கூட என்னடி கூத்தடிச்சுட்டுருக்க? நேத்து வரை என்னைத் தான லவ் பண்ணிட்டு இருந்த?”

“கைய விடு” இவள் தன்னை விடுவித்துக் கொள்ள போராடினாள்.

மது மின்னல் வேகத்தில் வினோத்தின் கரத்தைப் பிடித்து இறுக்க, இவனுடைய பிடி தானாகத் தளர்ந்தது.

“இவளை ஏமாத்தி உன் தலையில கட்டப் பாக்குறாங்க. அவளும் நானும் எப்படிலாம் பழகிருக்கோம்னு உனக்குத் தெரியுமா?” இவன் சத்யாவிடம் துள்ளினான்.

“உன்கிட்ட யாரும் எதுவும் கேக்கல‌. வந்த வழியே கிளம்பு” சத்யா அமைதியாக, அதே நேரத்தில், கடுமையான பாவனையோடு இயம்பினான்.

“நான் கூப்பிட்ட அடுத்த செகன்டே என் கூட ஓடி வரத் துணிஞ்சவ இவ. என்னைக்கா இருந்தாலும் இவ உனக்கு செகன்ட் ஹேன்ட் தான்டா” இவன் நாகரிக எல்லையை மீறினான்.

“டேய், என்னடா பேசிட்டுருக்க?” மது இவனது சட்டையைப் பிடிக்கத் தான் முனைந்தான்.

அதற்குள் சத்யா ஓங்கி ஒரு குத்துவிட்டதில், வினோத்தின் வாய் செவ்வாயாகிப் பொளபொளவென இரத்தம் கொட்டிற்று. நிலைதடுமாறி இவன் ஓர் இருசக்கர வாகனத்தில் சென்று விழ, அதன் டோமினோ விளைவாக நான்கைந்து வாகனங்கள் முட்டி மோதிக் கொண்டன. அந்த இடமே அடுத்த அரைமணி நேரத்திற்குச் சம்பித்துப் போயிற்று. அவ்விடம் அரங்கேறிய கலவரத்தினால், அவர்கள் காவல் நிலையத்திற்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது‌. அங்கிருந்த துணை ஆய்வாளர் சத்யா, மது, மற்றும் வினோத் என மூன்று ஆண்களையும் காய்ச்சி எடுத்தார்.

சுலோவால் வெளியே வரும் வரை கூட பொறுக்க இயலவில்லை. “இவன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?” என்றாள் சத்யாவை ஏறிட்டு.

“நான் தான் வினோத்தைப் பத்தி சொன்னேன்” இடையே நுழைந்து நிரபராதி ஆனாள் மாது‌‌.

“நீங்க எதுக்கு அண்ணி சொன்னீங்க? முறைப்படி, நான் தான் இந்த விஷயத்தைச் சொல்லிருக்கணும்” இவள் அண்ணியுடன் மல்லுக்குப் போனாள்.

“மாது மேல எந்தத் தப்பும் இல்ல. ஒரு உண்மையை மறைச்சா அதுவும் பொய்ல தான் சேரும், சுலோ. நீ முன்னாடியே சொல்லிருக்கணும். ஏன் சொல்லல?” சத்யா சுற்றம் சூழல் மறந்து வெடித்தான்.

அவனுக்கான பதில் சுலோவிடம் இல்லை‌. அதற்கு மேல் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவும் இல்லை‌. ஒருவரின் முகத்தை ஒருவர் காணவே தயங்கினர். உதவி ஆய்வாளர் கடுமையாக எச்சரிக்கை செய்த கையோடு அவர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டார்.

அன்றாட அலுவல்களுக்கு உபயோகப்படும் நான்கு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு, இராவேளை மாதுவுடன் மது வெளியே புறப்பட்டான். தங்களின் இருப்பிடத்தை விட்டு இருபது கிலோ மீட்டர் தள்ளி, ஒரு வீடுகளற்ற தெருவில் அவ்வாகனம் மித வேகத்தில் பயணித்தது.

“பாட்டை நிறுத்துங்க‌. எனக்குத் தலை வலிக்குது” அவள் சிடுசிடுத்தாள்.

“ம்ச்” எரிச்சல்பட்டுக் கொண்டே அவன் வானொலியை அமர்த்திப் போட்டான்.

“என்னத்துக்கு இப்ப ம்ச்ங்குறீங்க?”

“சும்மா தான்”

“இல்ல. ஏதோ இருக்கு. என்ன பிரச்சனை உங்களுக்கு?”

“ஒன்னுமில்லனு சொல்றேன்லடி”

“நான் என் வாயை வச்சுட்டு சும்மா இருந்துருக்கணும். சத்யா பேரை இதுக்குள்ள நான் இழுத்திருக்கவே கூடாது. ஆளாளுக்கு அவரு மேல குத்தம் கண்டுபிடிக்குறீங்க”

“மாது, லூஸு மாதிரி பேசிட்டுருக்காத”

“நான் லூஸா? நான் லூஸா?” அவள் கொந்தளித்தாள்.

அவனின் பொறுமை காற்றில் பறக்க, “ஏய்!” என்று அவன் சீறினான்.

“வீட்டுக்கு வண்டியைத் திருப்புங்க” அவளிடமும் நிதானம் இருப்பிலில்லை.

“நீ நினைச்ச நேரத்துக்கு ஒவ்வொன்னும் செஞ்சுட்டு இருக்க முடியாது. நீ போகலாம்னு சம்மதம் சொன்னதால தான வண்டிய எடுத்தேன்”

“நான் நடந்தே போய்க்குறேன்” பொறிந்தபடியே அவள் வாகனத்தின் கதவைத் திறக்கப் பார்க்க,

அவன் அவளை வலுவாகப் பிடித்துக் கொண்டான் “மாது, கடுப்பைக் கிளப்பாம உக்காரு”

“கைய விடுங்க முதல்ல” அவள் உதறித் தள்ள எண்ணினாள்.

அவனின் பிடி மேலும் கடினமானது. “மா…து” பற்களுக்கிடையை ஈரெழுத்துக்களும் அரைபட்டு நைந்தன.

“கைய விடுங்கன்னு சொன்னேன்” அவள் பத்ரகாளி ரூபமெடுத்தாள்.

“மாது!” அவனோ ஆங்காரம் கொண்ட ருத்ர மூர்த்தியாய் மாறி, அடித் தொண்டையிலிருந்து கர்ஜித்தான்.

அதில் அவளின் விழிகள் சட்டெனக் கலக்கமுற்றன “நான் உங்களைக் கல்யாணம் பண்ணிருக்கவே கூடாது”

“போதும். கண்டதையும் உளர்றத நிறுத்து” என்று கண்டித்தவன் அத்துடன் வாகனத்தை வளைத்துத் திரும்பினான்.

வீடு வந்த மாது விறுவிறுவென உள்ளே சென்று கதவடைக்க, முன்னறைக் கட்டிலில் படுத்திருந்த சுலோவிற்கு ஏதோ வில்லங்கம் என்று புரிந்தது. மெது நடையாக தமையன் அங்கே வரவும் அவள் பட்டென எழுந்தமர்ந்தாள்‌.

அவன் மௌனமாகக் கட்டிலில் வந்தமர, அவளே கேட்டாள் “உனக்கும் அண்ணிக்கும் என்னால எதுவும் பிரச்சனையா, ணா?”

“அதெல்லாம் இல்லடா. எங்க கதைய விடு. உனக்கு மனசு எப்படி இருக்கு?”

அவளுக்கு என்ன கூறுவதென்று தெரியவில்லை.

“எங்களோட கருத்துலாம் மூனாம்பட்சம் தான். சேந்து வாழப் போறவங்க நீங்க. இந்தக் கல்யாணத்தைப் பத்தி நீ என்ன நினைக்கிற? உனக்கு வேணாம்னு சொன்னா இந்தக் கல்யாணம் வேணாம். நான் ஏன்னு கூட கேக்க மாட்டேன்”

“இல்ல, அண்ணா. நான் சத்யாவை மனசால நினைச்சிட்டேன். என்னால அடிக்கடி மனசை மாத்திக்க முடியாது‌. எனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதம் தான். கல்யாணத்துக்கு அப்பறம் வர வேண்டிய பூகம்பம், இப்பயே வந்து ஓய்ஞ்சுருச்சுனு நிம்மதி பட்டுக்க வேண்டியது தான். நான் அவர்ட்ட சொல்லாதது தான் அவருக்குப் பிரச்சனையே தவிர, வினோத்தைக் கால் தூசுக்குக் கூட அவரு மதிக்கல‌. எனக்கு அதுவே போதும். அவருக்கு ஏதாவது மனக்குறை இருக்கானு கேட்டுட்டு முடிவெடுங்க”

“சரி, நான் பேசுறேன்” என்றவன் வாஞ்சையுடன் தங்கையின் தலையை வருடிக் கொடுத்தான்.

அன்றிலிருந்து ஒரு மாத காலம் கண் மூடித் திறப்பதற்குள் உருண்டோடியிருந்தது. சுலோச்சனாவிற்கும் சத்யாவிற்கும் இனிதே திருமண பந்தம் கைக்கூடியது. அது நாள் வரை மதுவிற்கும் மாதுவிற்குமோ, சுலோவிற்கும் சத்யாவிற்குமோ, சுலோவிற்கும் மாதுவிற்குமோ பெரிதாகப் பேச்சு வார்த்தை இருக்கவில்லை.

“அண்ணி…” கழுத்தில் தாலியேறிய மறுநொடி சுலோ ஏதோ சொல்ல முற்பட்டாள்.

அதற்கு மாது இடம் தரவில்லை. திருமண மேடையில் எந்தச் சலசலப்பும் வேண்டாமென அவள் நினைத்தாள்; “நான் பண்ணது தப்பா, சரியான்னு என்னால ஒரு முடிவுக்கு வர முடியல, சுலோ. நமக்குள்ள பொறுமையா பேசித் தீத்துக்கலாம். இப்போ நீ போற இடத்துல சந்தோஷமா வாழ்றது தான் முக்கியம். அவசரப்பட்டு எப்பவும் வார்த்தைய விடாத. கோவத்துல எந்த முடிவையும் எடுக்காத. மத்தபடி, உன் குணத்துக்கு நீ நிறைவா வாழ்வ” என்று படபடவென வாழ்த்தி முடித்தாள். சூழ்ந்திருந்த உறவினர்க் கூட்டத்தில் அவர்களால் அந்தளவு தான் சமரசம் ஆக இயன்றது.

அன்றிரவு சுலோவின் அறையில் அலங்காரம் செய்வித்திருந்தனர். புதிதாக அவளின் அறைக்குக் கட்டிலொன்றும் கதவொன்றும் பொருத்தப்பட்டிருந்தது. தம்பதியரை அறைக்குள் அனுப்பிய பிறகு மது மாதுவைத் தனியே அழைத்தான்.

“ஏதாவது வேலை இருக்கும். நாம போய்ட்டா தேடுவாங்க” என்றாள் அவள் எங்கோ பார்த்துக் கொண்டு.

“இனிமே ஒரு வேலையும் இல்ல. அப்படியே இருந்தாலும் மாமன் மச்சானுங்க நாலு பேரு இருக்காங்க. தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க பாத்துப்பாங்க‌. நீ வா” அவன் குறிப்பிட்ட மாமன்களில் வாசுவும் அடக்கம். மாதுவின் அறிவுறுத்தலின் பேரில், இத்திருமணத்திற்கு அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர் அதற்கிணங்கி வருகை தந்ததில் சிந்தாமணிக்கு மட்டற்ற மகிழ்ச்சியே.

மாது எவ்வளவு மறுத்தும் மது அவளை விடாப்பிடியாக அழைத்துச் சென்றான். வாகனம் மறுபடியும் அந்த வீடுகளற்ற வீதியைக் கடந்தது.

“நான் கடைசியா எப்போ கோவப்பட்டேன்; தெரியுமா?” அவன் சமாதானமாய் வினா வீசினான்.

“இதே வேன். இதே இடம். என்கிட்ட தான் கோவத்தைக் கொட்டுனீங்க” அவள் சோகமே உருவாகப் பதிலளித்தாள்.

“கரெக்ட் தான். அதுக்கு முன்னாடி ஒரு முறை அளவுக்கதிகமா கோவப்பட்டுருக்கேன்”

“ம்ஹூம்ம். எனக்குத் தெரியாது” அவள் அவனை நேருக்கு நேர் பார்த்தாள்.

“எங்க அப்பாட்ட ஒரு நாள் ரொம்ப கடுமையா நடந்துகிட்டேன்‌. நீங்க எங்களுக்கு எதுவுமே சேத்து வைக்க மாட்றீங்க; எல்லாத்தையும் கட்சிக்கே செலவு பண்றீங்க; எங்களுக்காக நேரம் ஒதுக்க மாட்றீங்க; எனக்கு ஒரு பைக் வாங்கித் தர கூட வக்கில்லனு சொல்லித் திட்டிட்டேன். காலையில இந்தச் சண்டை நடந்துச்சு. அன்னைக்குச் சாயந்தரம் அவரு உயிரோட இல்லை” அவன் சாலையை வெறித்தபடி கூறிட,

அவள் சற்றும் யோசியாமல் அவனது கரத்தை அழுந்தப் பற்றிக் கொண்டாள்.

“அதுக்கப்பறம் என் கோவத்தை நானே குறைச்சிக்கிட்டேன். அன்னைக்கு நீ பேசுனது சரியில்ல, மாது. என்னோடது பெரிய குடும்பம்.‌ சில நேரத்துல உன்னை நீயே தொலைச்ச மாதிரி உணர்றது சகஜம் தான். இங்க நீ ஒரு முடிவெடுத்தீனா, அது பல பேரோட ஒப்புதலுக்குப் பிறகு தான் நிறைவேறும். இது நம்ம குடும்பத்துல இருக்குற எல்லாருக்குமே பொருந்தும். உன்னையே வசதி பத்தலன்னு பேசுனாங்க தான். அதனால நானொன்னும் உன்னை விட்டுக் கொடுத்துடலயே. அதே போல, சத்யா மேலயும் சில குறைகளை முன்வச்சாங்க. அதைக் காரணமா வச்சு நீ என்ன வேணாலும் பேசுவியா?”

“எனக்குக் கஷ்டமா இருந்துச்சு. அதை எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியாம அப்படிலாம் வார்த்தையை விட்டுட்டேன்”

“அதுக்காக நீ என்னைக் குறி வைச்சுக் கஷ்டப்படுத்தாத. நான் என்னைக்காச்சும் உன்னைத் தப்பா நடத்திருக்கேனா? சொல்லு, மாது. எங்க வீட்டாளுங்க உன்னை வேணும்னே வம்பிழுக்கிறாங்களா; நீ தாராளமா போய்ச் சண்டை போட்டுக்க. நான் தடுக்க மாட்டேன். உன்னோட வார்த்தை சில நேரம் ரொம்ப காயப்படுத்துது. அதை மட்டும் மாத்திக்கப் பாரு”

அவள் ஒன்றும் சொல்லாமல் அவனுடைய நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவளுடைய கண்ணீர் சரசரவென இறங்கி அவனின் சட்டையை நனைத்தது.

“உன்னை அழக் கூடாதுனு சொல்லிட்டு நானே அழ வச்சிட்டேனா?” அவன் அவளின் முகவாயை உயர்த்தி கனிவோடு வினவினான்.

மறுப்பாகத் தலையசைத்தவள் அவனது முன்கையில் முத்தமிட்டு, தன் முக வாட்டத்தைத் துடைத்தெறிந்தாள்.

அத்தருணம் உள்ளுக்குள் ஏதோ துளிர்விட, “வீட்டுக்குப் போகுற நேரம் வந்துருச்சுனு நினைக்கிறேன்” என அவளிடமிருந்து விலக வேண்டிய கட்டாயத்தில் உரைத்தான்.

இதமாய் “மது” என்றழைத்தவள் இமைகளை மூடி, முகவாயை உயர்த்தி, தன்னை அவன் வசம் ஒப்புவித்தாள்.

வாகனத்தை மறைவான பகுதியில் ஓரங்கட்டியவன் விளக்குகளை அணைத்துவிட்டு, முழுவீச்சுடன் முத்தத் தாக்குதலில் குதித்தான். ஒரு திங்கற்பிரிவு தந்த வேதனையை, அவ்விருள் மென்மையும் வன்மையுமாய் ஆற்றத் தொடங்கியது.

***

You may also like

2 comments

Subhashini A March 12, 2026 - 12:52 pm

Pravayila ppa

Reply
Ezhilmathi GS March 12, 2026 - 2:41 pm

😄😄

Reply

Leave a Reply to Subhashini A Cancel Reply

About Me

Featured