Home Love - Family - Romanceகலவை Final epi

இரு வருடங்கள் கழித்து…

“வீட்டுல எட்டுப் பொம்பளைங்கள வச்சுட்டு, கோவிலுக்குப் போறதே பெரும்பாடா இருக்கு” விடிந்தும் விடியாத வேளையில், மதுசூதனன் தலைவாரியபடியே புலம்பிக் கொண்டிருந்தான்.

“வீட்டுப் பெரியவங்களலாம் கணக்குல சேக்காதீங்க‌. அவங்களுக்கு வயசாகிடுச்சு‌. இப்போதைக்கு உங்க தங்கச்சிங்க நாலு பேரும் நானும் தான் கணக்கு‌. அடுத்த வருஷம்லாம் ரம்யா பொண்ணு சடங்காயிடுவா. அப்பறம் தலையைப் பிச்சுட்டு ஓடப் போறீங்க. இதுக்குத் தான் சொல்றது இந்த நாள் கிழமையலாம் பாக்காதீங்க; முழு மனசா, பக்தியா, போனோமா வந்தோமான்னு இருந்துடணும்” என்று ஆலோசனை நல்கினாள் மாதுளை.

“எல்லாரும் உன்னை மாதிரியே இருந்துட்டா பிரச்சனையே இல்ல” அவனது பேச்சு பாராட்டும் தொனியில் இல்லை.

“ஆமா. பொம்பளை சாமி கும்புட்றீங்க.‌ அதுவே உங்க வீட்டுப் பொம்பளைங்களைத் தீட்டுங்குறீங்க. என்ன நியாயமோ!” அவள் பட்டுப்புடவையையும் ஆரத்தையும் சரிசெய்தவாறு அங்கலாய்த்தாள்.

“நீயும் உங்கம்மா மாதிரி பேசக் கத்துக்கோடா. எங்களை மாதிரி கட்டுப்பெட்டியாவே இருந்துடாத” என்று தன் மகனுக்கு அறிவுறுத்தியவன், அம்மழலையைத் தூக்கிக் கொண்டு வெளியே நடந்தான்.

சில பல கட்டைப் பைகளுடன் மாது அவனைப் பின்தொடர, வாயிலில் அவர்களுக்காகவே ஒரு சிற்றூர்தி காத்துக் கொண்டிருந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்க, மது அனைவரையும் திரட்டிக் கொண்டு வாகனத்தைக் கிளப்பப் பணித்தான். பொழுது புலர்ந்த காலை வேளையில் அந்தக் குடும்பம் குல தெய்வக் கோவிலில் கூடாரமிட்டிருந்தனர். அரசமரம், ஆலமரம், மூங்கில் மற்றும் பல்வகை தாவரங்களால் சூழப்பட்டு, அச்சிறிய கோவில் குளுமையும் பசுமையுமாகத் திகழ்ந்தது. குரங்குகளும் குட்டிகளும் கிளை விட்டு கிளை தவ்விக் கொண்டிருந்தன. குடும்பத்தின் இளங்குருத்துகள் கைக்குக் கிடைத்த நொறுக்குத் தீனியை வாயிலிட்டு அரைத்தபடி, ஓடிப் பிடித்து விளையாடினர்.

சுலோச்சனா கோவிலின் பின் சுவற்றில் கரிக் கட்டையால் எதையோ தீட்டிக் கொண்டிருந்தாள். “கவி மகிழினி… மகிழினியன்… எப்படிப் பேர் பொருத்தம்? சூப்பரா?” என்றாள் அவள் சிரித்த முகமாய்.

“ம்ம். சூப்பர்!” என்றான் கவி மகிழினியைத் தோளில் சாய்த்துத் தட்டிக் கொடுத்தபடி நின்ற சத்யா.

“அவங்க வளந்து என்ன நினைக்குறாங்களோ? யாரைக் கல்யாணம் பண்றாங்களோ? நீ என்னமா இப்பவே கனவுக் கோட்டை கட்ட ஆரம்பிச்சுட்ட? சத்யா, நீங்களாவது எடுத்துச் சொல்றது” என்று எரிச்சல்பட்டாள் மாது.

“அவளோட குறி எப்பவும் தப்பவே தப்பாது, மாது. நீயே பாப்ப” என்றான் இவன் புன்னகையுடன்.

“பாக்கத் தானே போறேன்” என்று நொடித்தவள் நான்கு விறகுக் குச்சிகளை மடமடவென்று முறித்து, குழி அடுப்பில் வைத்து எரித்தாள்.

“அண்ணி, என் கனவு இதோட நிக்கப் போறதில்ல. அடுத்து ஒரு சிங்கக்குட்டி வரப் போறான். அவனுக்குச் சீக்கிரம் ஒரு பொம்பளைப் புள்ளையைப் பெத்துப் போடுங்க. எங்களால வெளியலாம் பொண்ணு தேடி அலைய முடியாது” என்றாள் இளையவள் தன் நான்கு மாத வயிற்றை வருடிக் கொடுத்து.

“ம்க்கும். அது வெறும் கண்ணா? இல்ல, ஸ்கேனரா? மொத தடவை நீ ஆசைப்பட்ட மாதிரியே பொண்ணு பொறந்ததுலாம் சரி தான். ரெண்டாவதும் நீ எதிர்பாக்குற மாதிரியே அமைஞ்சுடுமா? இதுலாம் எங்கப் போய் முடியப் போகுதோ! பிள்ளைங்கள அவங்கவங்க விருப்பத்துக்கு விடணும். உன் கனவும் நீயும். இதுல புருஷன் சப்போர்ட்டு வேற” மாது கடுப்புடன் முனகினாள்.

“பொண்டாட்டிக்குக் கொடி பிடிக்குறதுல என் புள்ளைக்கு இணை அவனே!” என்று புகழாரம் சூட்டினார் சத்யாவின் அன்னையார்.

“அம்மா, நீயே உன் புள்ளையைக் கலாய்க்குற பாத்தியா!” இவனிடமிருந்து ஆனந்த அதிர்வலைகள் வெளிப்பட்டன.

“உன்னைப் பத்தி நல்ல விதமா தான்பா சொன்னேன்” அவர் அடக்கப்பட்ட சிரிப்புடன் இயம்பினார்.

இந்தப் பக்கம் “ஒரு அத்தைக்குக் கனவு காணுற உரிமை கூட இல்லையா?” என்று அண்ணியிடம் வம்பு வளர்த்தினாள் சுலோ.

“ஏங்க! உங்க வீட்டுக் கடைக்குட்டி பண்ற அராஜகம் தாங்கல” மாது தன் கணவனிடம் புகார் வாசிக்க, அதற்குச் செவி சாய்க்குமுன்னே ஓர் அழைப்பு வந்து அவனை வாரிக் கொண்டது. “ஃபோனை எடுத்துக் காதுல வச்சா சர்வமும் மறந்து போயிடுது. ஏரியா கவுன்சிலர் ஆனாலும் ஆனாரு. குடும்பம்னு ஒன்னு இருக்குறதையே மறந்துட்டாரு” என்று தனியே தன் புலம்பலைத் தொடர்ந்தாள் அவள்.

“ஒரு நாளைக்கு இருவத்தி நாலு மணி‌ நேரமும் உங்களுக்குத் தான ஒதுக்குறாரு. ஒரு பத்தே பத்து நிமிஷம் வேலைக்கும் ஒதுக்கட்டும், அண்ணி” என்று நக்கலடித்தாள் பச்சரிசியைக் கலைந்து கொண்டிருந்த ரம்யா.

“அதை நீங்க சொல்றீங்க! உங்களுக்காக மாங்கு மாங்குனு ஏலக்காயைப் பொடி பண்ணிட்டுருக்காரே, எங்க ரிஷிக்குத் தான் இந்த அறிவுரை முழுக்க முழுக்கப் பொருந்தும்” என அவளும் மென்னகையோடு திருப்பியடித்தாள்.

“உனக்காச்சும் என் கஷ்டம் புரியுதே, அக்கா” என்று ரிஷி வாயைவிட்டான்.

“என்னது?” என்று ரம்யா கண்களாலேயே உருட்டி மிரட்ட

இவன் வேறு வழியின்றி அடி பணிந்தான் “சும்மாமா. சும்மா”

அந்நேரம் “மாதும்மா!” என்ற மதிவாணனின் குரல் கேட்டு, மாது வேகமாக எழுந்தாள்.

“இதோ வந்துட்டேன், மதி அண்ணா” அடுத்த நிமிடமே கொண்டை ஊசியைச் சரிசெய்தபடி அவரின் முன்பாகப் போய் நின்றாள்.

“குரூப் ஃபோட்டோ எடுக்க இந்த இடம் சரியா இருக்குமா பாரு” என்று ஆலோசனை கேட்டார் இவர்.

“ம்ஹூம்ம். எனக்கு அதோ அந்த இடந்தான் கரெக்டா இருக்கும்னு தோனுது, ணா. நீ என்ன சொல்ற, முல்லை?” அவள் மூத்த நாத்தியையும் கலந்தாலோசித்தாள்.

“நானும் அதையே தான் சொன்னேன். உங்க அண்ணன் கேட்டா தான. மாதுவே சொல்லிட்டா. இப்போவாச்சும் ஒத்துக்குறீங்களா?” என்ற இவள் இவரை அப்பட்டமாக முறைத்தாள்.

குழந்தை பேற்றுக்கு முன்பு வரை நாத்திகளுடனான மாதுவின் உறவு அந்தளவு தழைக்கவில்லை. சுதாவிற்கு மகள் பிறந்து சில மாத காலம் தாயகத்தில் இருந்தபோது, இவளுக்கு மாதுவுடன் ஓர் ஒட்டுதல் ஏற்பட்டது‌. இங்ஙனம் ஒவ்வொரு நாத்தியிடமும் உறவாட பிள்ளைகளே முழுமுதற்காரணமாயினர். மாதுவிற்குக் குழந்தை பிறந்த பின்னர் நாத்திகளின் துணை இன்றியமையாததாகிப் போனது.

“பொங்கல் வச்சு பூசைய முடிச்சதும் ஃபோட்டோ எடுத்துட்டு தான்ணா சாப்பாட்டுல கை வைக்கணும். இல்லைனா, நேச்சுரல் லைட்டிங் போயிடும்” என்றாள் மாது கூடுதலாக‌.

“அதுவும் சரி தான்” என்று ஆமோதித்த மதி “பூஜைப் பொருளைலாம் எடுத்து தட்டுல அடுக்கு‌, முல்லை. பிள்ளைங்களா… ஆளுக்கொரு உதுந்த கிளை எடுத்துட்டு வந்து இந்த இடத்தைப் பெருக்கி விடுங்க” என அடுத்தடுத்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

“அவங்கள ஒரு வேலை சொல்றதுக்கு நாமளே செஞ்சுட்டுப் போயிரலாம். இந்தக் காலத்துப் பசங்களுக்கு முதுகே வளைய மாட்டேங்குது” என்று குற்றம் சாட்டியபடியே மாது திருப்பி நடந்தாள்.

அவ்விடம் கோவிலின் ஓரத்தில் சாய்ந்து நின்ற சுதா, புகைப்படக் கருவியை நோக்கி “ஹலோ, கைய்ஸ்! இப்போ நாம எங்க இருக்கோம்னு பாத்தீங்கன்னா, பொன்னூர்ல இருக்குற எங்க குல தெய்வக் கோவிலுக்குக் குடும்பத்தோட வந்திருக்கோம்” என உற்சாகத்துடன் பேசிக் கொண்டிருந்தாள்.

அவளைக் காணொளிப் பதிவு செய்து கொண்டிருந்த சுரேஷிடம் நெருங்கிய மாது “ஒரு நிமிஷம். பாப்பாவ என்கிட்ட தாங்க‌. இப்போ நீங்க ஃப்ரீயா ரெக்கார்ட் பண்ணுங்க, சுரேஷ்” என்று சொல்லி, இவன் பிடியிலிருந்த இவர்களின் இரண்டாவது பெண் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள்.

“இதுக்குப் பதிலா நீங்க காமராவப் பிடிச்சீங்கன்னா சந்தோஷப்படுவேன்” என்று இவன் கோரிக்கை விடுக்க

“நோ தேங்க்ஸ், பிரதர். நமக்கு அதுலாம் செட்டாகுது” என்றவள் அங்கிருந்து பிள்ளையுடன் நழுவினாள்.

“பத்து நிமிஷம் உங்களால கோஆபரேட் பண்ண முடியாதா? கேமராவ ஒழுங்கா பிடிங்க” என்று சிடுசிடுத்த சுதா, கணவன் அப்பதிவுக் கருவியை உயிர்ப்பிக்கவும் தன்னிச்சையாகவே புன்னகை அரசியாக மாறினாள்.

வழியில் ஆலமர விழுதிற்குப் பேன் பார்த்தபடி நின்ற தம்பியின் முதுகைச் சுரண்டினாள் மாது “உங்க மாமா உனக்கு ஃபோன் வாங்கித் தந்தாலும் தந்தாரு. அப்படி யார்ட்ட தம்பு அல்லும் பகலும் கடலை வறுக்குற?”

“கடலைலாம் இல்லக்கா. எப்பவும் போல நம்ம மேகலா தான்”

“எது, நம்ம மேகலாவா? உங்க ரிலேஷன்ஷிப்புக்கு ஒரு என்டே இல்லையா, கண்ணா?”

“ஃப்ரென்ட்ஷிப்புக்கு ஏதுக்கா என்டு?” அவன் சிரித்து மழுப்பினான்.

“ஃப்ரென்ட்ஸு? நம்பிட்டேன், இராசா. நம்பிட்டேன்”

“அவளையும் கோவிலுக்குக் கூப்பிடலைனு வருத்தப்பட்றா. பாவம்!”

“ஆன், வரச் சொல்லு. அவங்க அப்பா, அம்மாட்ட பெர்மிஷன் வாங்கிட்டு நீயே போய்க் கூட்டிட்டு வரதா இருந்தாலும் வா. அப்பா நாயா பேயா அலைஞ்சு, லோன் போட்டு, பைக்கை வாங்கி நிறுத்திட்டாரு. நீ ஜமாய், கண்ணா!” என்று அவள் புகைந்து தள்ளினாள்.

அப்போது வீதியில் ஒரு மகிழுந்து வந்து நிற்க, “அப்பா, வாசு அண்ணா வராரு” என்றாள் அவள் தன் குரலை மட்டுப்படுத்தி.

“நான் போய் அழைச்சுட்டு வரேன்மா” வாசுவையும் அவரது மனைவியையும் வரவேற்று கோவிலுக்கு அழைத்து வரும் நோக்கோடு இராமசாமி வீதிக்கு நடந்தார்.

“அப்புனு, நீங்க ஏன் சோகமா உக்காந்துருக்கீங்க? நீங்க குட்டிப் புள்ளையா இருக்கீங்கன்னு, உங்களை யாரும் விளையாட்டுக்குச் சேத்துக்கலையா? சாமி கும்பிட்டுப் போகும்போது, அத்தை உங்களுக்கு ரெண்டு டிரக் வாங்கித் தரேன். இப்போ அர்ச்சனா பாட்டிட்ட போங்க. அர்ச்சனா பாட்டி உங்களுக்குப் பீப்பி செஞ்சு தருவாங்க. வாங்க” என்றவாறு சுதாவின் மூத்த மகனை, மாது கரம்பிடித்து அழைத்துச் சென்றாள்.

“பீப்பில சத்தம்லாம் வருமா?” இவன் ஆர்வம் பொங்க வினவினான்.

“ஓ, சூப்பரா வருமே” என்றவள் இவனையும் இவன் தங்கையையும் அர்ச்சனாவிடம் ஒப்படைத்தாள்.

சிந்தாமணி தன் கணவரின் கடந்த கால நினைவுகளில் மூழ்கியிருக்க, சரியான தருணத்தில் எங்கிருந்தோ ஒரு வண்ணமயமான மலரைப் பறித்து வந்து நீட்டினான் மகிழினியன்.

“பாட்டி! பாட்டி!” என மழலை மொழியில் ஆர்ப்பாட்டம் செய்தவாறு ஓடி வந்தவனை, அள்ளி மடியில் இருத்திக் கொண்டு ஆயிரம் முத்தங்கள் தந்தார் பாட்டியார்.

“என் தங்கம்! என் இராசா! என் சாமி!” என்று கொஞ்சியவர் எவ்வித உறுத்தலோ தயக்கமோ இன்றி, பேரன் கொடுத்த மலரைத் தன் தலையில் சூடிக் கொண்டார்.

“அத்தை, தோட்டத்துல பூத்த ரோஜாப்பூ நிறைய இருக்கு; எடுத்துட்டு வரேன்னு சொன்னீங்களே. எங்கத் தேடியும் அந்தக் கவரையே காணோம்” என்று மாதுவிடம் உதட்டைப் பிதுக்கினாள் ரம்யாவின் இளைய மகள்.

“ஒத்த ரோஜாவுக்கா இப்படிக் கிடந்து அல்லாடுற? ஒரு ரோஜா தோட்டமே இங்க நிக்குது. கண்ணு தெரியலயா உனக்கு?” என்று கச்சிதமாகக் கேட்டு, கண் சிமிட்டினான் நம் மது.

“மது…” அவனின் வர்ணனையில் மனைவியானவள் வெட்கிச் சிவக்க

“மாது…” என்ற கண்டிப்பான ஒலியும் எழுந்தது அர்ச்சனாவிடமிருந்து.

“இதுக்குத் தான் எப்பவுமே வீட்டுக்காரரை மரியாதையா கூப்பிடணும்குறது. வெளிய ஒரு மாதிரி கூப்பிட்டுட்டு, வீட்டுக்குள்ள ஒன்னு கூப்பிட்டா இப்படித் தான் மாட்டிட்டு முழிக்கணும்” என்று நகைத்தார் அங்கு வந்த வாசு‌.

“வாசு அண்ணா, இதை உங்க அத்தைப் பொண்ணுக்கும் சொல்லிக் கொடுத்து வளத்துருந்தா நல்லாருக்கும். காலேஜ் கிரௌன்ட்ல வந்து நின்னுட்டு சத்யா, சத்யானு கூவுறா” என்று தன் தனிப்பட்ட வழக்கை அரங்கில் முன்வைத்தான் சத்யா.

“அவளை வெளிக் காலேஜ்ல சேத்தா தான் சரிப்பட்டு வரும். உங்க காலேஜ்லயே வச்சுட்டு செல்லம் கொஞ்சுங்க. அவ இதுவும் செய்வா. இதுக்கு மேலயும் செய்வா” என்று இடித்துரைத்தார் சிந்தாமணி. வெளியே கடிந்தாலும் தன் செல்ல மகளை மருமகன் கையில் வைத்துத் தாங்குவதை எண்ணி, உள்ளுக்குள் பூரித்தது தாயுள்ளம்.

“நான் பிஹெச்டியும் அங்கயே முடிச்சுட்டு, எம்புருஷன் மாதிரி அங்கயே ஏபி ஆயிடுவேன். ரெண்டு லவ் பேர்ட்ஸ பிரிக்கப் பாக்காதம்மா” என்று சிணுங்கினாள் சுலோ.

“அடியே! அண்ணன் முன்னாடி என்ன பேச்சு பேசுற?” என்று பற்களைக் கடித்தாள் சுதா.

“நீங்க தான் அண்ணன் பேரை எடுத்தாலே ரொம்ப பயந்துக்குறீங்க. நீங்க நினைக்கிற மாதிரிலாம் அண்ணன் டெர்ரர் கிடையாது” என்று தட்டிக் கழித்தாள் இளையவள்.

“உனக்கு அந்த டெர்ரர் ஃபேஸ் தெரியாத வரைக்கும் லக்கி தான்” என்றாள் மாது இடைப்புகுந்து‌.

“உங்ககிட்டயும் அண்ணா இன்னொரு முகத்தைக் காட்டிட்டாரா?” என்று வினவி முல்லை கலகலத்தாள்.

“நானும் கேள்விப்பட்டேன். எவனோ ஒருத்தன் காலேஜ் படிக்குற பொண்ணுட்ட வம்பிழுத்தானாம். நடுரோட்டுல வச்சு அவனைப் பொளபொளன்னு பொளந்துட்டீங்களாம். தீபக்கும் கூட இருந்தானாமே. அவன் தடுக்க முயற்சி பண்ணானாமா. ஆனா, நீங்க…” என்று சத்யா உண்மையை விளம்ப, மனைவியின் பின்னிருந்து ‘சொல்லாதே!’ என்பதாகச் சைகை செய்யலானான் மது.

அத்தனை முயற்சியும் வீண். சத்யாவின் ஒவ்வொரு வார்த்தையும் தப்பாமல் மாதுவின் செவியை அடைந்தாகிவிட்டன. “மது மச்சான்!” அழுத்தமான உச்சரிப்போடு அவள் திரும்பி நோக்க, அவளின் விழிகளைச் சந்திக்க இயலாமல் மன்னவன் தடுமாறினான்.

“நான் இல்லம்மா. அது வேற யாரோ. நான் தான் நேத்து பஸ் ஸ்டான்ட் பக்கமே போகலயே”

“அந்தச் சம்பவம் பஸ் ஸ்டான்ட்ல தான் நடந்துச்சுனு உங்களுக்கு எப்படித் தெரியும்?” அவள் கவனமாகக் கொக்கியிட, அவனின் திருதிரு விழிப்பே அவனுடைய சண்டியர்த்தனத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது.

“ஊருல யார் வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி போட்டுருந்தாலும் சத்யாக்கு என்னை மாதிரியே தெரியுது போல. கண்ணாடியை மாத்துனு சொன்னா கேக்குறியா, மச்சான். ஏன்? ஏன் இப்படி?” என்ற வினாவோடு, நொந்து போய் சத்யாவின் தோளை அழுந்தப் பற்றினான் அவன்.

“அதான் முழுசா நனைஞ்சாச்சே.‌ இதுக்கு மேல முக்காட்டைப் போட்டு? ஊர் வம்பலாம் இழுத்துட்டு வந்து எங்க தலைல கட்டிடாதீங்க” அவள் கண்டிப்புடன் சொன்னாள்.

“பொது வாழ்க்கைனு வந்துட்டா இதெல்லாம் சகஜம், மாது” என்று எடுத்துரைத்தார் மதி.

“இதுக்கெல்லாம் பயந்துட்டு இருக்கறதா? எங்களை மீறி யாராச்சும் கைய வச்சுருவானுங்களா? அப்படி நடக்குறதுக்குத் தான் நாங்க விட்ருவோமா? எல்லாரும் ஒதுங்கி ஒதுங்கிப் போனா, யார் தான் தப்பைத் தட்டிக் கேக்குறது? ஈஸியா விடுங்கக்கா” என்று ஆறுதல் வழங்கினான் ரிஷி.

“மாமா எது செஞ்சாலும் அதுக்குப் பின்னாடி தகுந்த காரணம் இருக்கும். நீயும் டென்ஷனாகி மாமாவையும் டென்ஷனாக்காத, அக்கா. சாமி கும்பிட தான வந்தோம். வந்த இடத்துல எதுக்கு இந்தப் பஞ்சாயத்துலாம்?” என்று விவரமாய் மாமனுக்கு வக்காலத்து வாங்கினான் முத்துமாரி.

“எது தெரியுதோ இல்லையோ, நல்லா பேசக் கத்துருக்கடா” என்று மாது பொருமினாள்.

அவ்வேளை “பொங்கல் பொங்கிருச்சு. வாங்க! வாங்க!” என்று கூப்பாடிட்டாள் ரம்யா.

“பூசாரிக்கு ஃபோனைப் போட்ற வேண்டியது தான்” என்றவாறு அலைபேசியைக் கையிலெடுத்தான் சுரேஷ்.

ரம்யாவின் மகளிடமிருந்து ஒரு ரோஜாவைப் பெற்றுக் கொண்ட மது, அதை மாதுவின் சிகையில் சூடி அழகு பார்த்தான் “கவலைப்படாத, தங்கம். நம்ம குடும்பத்துக்கு எதுவும் ஆகாது. நான் எப்பவும் கவனமா தான் இருக்கேன். இனிமேலும் இருப்பேன். நம்ம வீட்டுல இருக்குறவங்களுக்கு ஒன்னுனா நான் சும்மா விடுவேனா. அதுபோல தான்… ஒரு பொண்ணுக்குப் பட்டப்பகல்ல, வெட்ட வெளியில அநியாயம் நடந்துருக்கு. அந்தக் கம்னாட்டிட்ட சொல்லிப் பாத்தேன்; திருந்தல‌. அதான் ரெண்டு போடு போட்டேன். உனக்கே தெரியும்ல. என் கோவத்துலயும் ஒரு நியாயம் இருக்கும்”

“எங்களை விடுங்க, மச்சான். நீங்க முதல்ல கவனமா இருங்க. நீங்க தான் இந்தக் குடும்பத்தோட ஆணி வேர். அதை எப்பவும் மனசுல வச்சுக்கங்க. நீங்க நல்லவர்னு எனக்குத் தெரியும். ஆனா, ஊருக்குள்ள நிறைய கெட்டவங்க இருக்காங்களே. முடிஞ்சவரை பகையைச் சம்பாதிக்காதீங்க. உங்களைத் தினமும் வெளிய அனுப்பிட்டு, நீங்க திரும்பி வீடு வந்து சேருற வரைக்கும் பக்கு பக்குனு இருக்கு”

“சரி. நானும் கவனமா இருந்துக்குறேன். உனக்குத் துணையா எப்பவுமே நான் இருப்பேன். சாவுல கூட” என்ற அவனின் வாக்கில் தன்னையறியாமல் அவளுக்குக் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

யாருமறியா வண்ணம் அதைத் துடைத்தெறிந்தவன், ஒரு வண்ண மலரை நீட்டி “ஐ லவ் யூ, பொண்டாட்டி!” என்றான் இரகசியமாய்.

அவனது வலிமையான கரத்தை எடுத்துத் தோளோடு வளைத்துக் கொண்டவள், கண்கள் மூடி அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள். அவர்கள் இறைவனை மனமாற வணங்கி முடிக்க, குங்குமம், சந்தனம், மஞ்சள், விபூதி என அனைவரின் நெற்றியும் பளிச்சிட்டது. அடுத்ததாக, அவர்கள் குழுப் புகைப்படத்திற்காக வரிசை கட்டினர். இராமசாமி, அர்ச்சனா தேவி, சிந்தாமணி மற்றும் சத்யாவின் அன்னையார் முன்வரிசையில் நாற்காலியிட்டு அமர்ந்தனர். வாசு, வாசுவின் துணைவியார், மதிவாணன், முல்லை, அவர்களின் இரு மகன்கள், ரம்யா, ரிஷிவர்த்தன், அவர்களின் இரு மகள்கள், சுதா, சுரேஷ், அவர்களின் மகன் மற்றும் மகள், சத்யா, சுலோச்சனா, கவி மகிழினி, முத்துமாரி, மதுசூதனன், மாதுளை, மற்றும் மகிழினியன் ஆகியோர் பின்வரிசையில் நெருக்கமாகவும், அதே நேரம், முகம் தெரியும்படியும் நின்றனர். ஒன்றிரண்டு புகைப்படங்களிலேயே குரங்குக் கூட்டம் ஒன்று வந்திறங்க, பிரசாதத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஆளாளுக்குத் தெறித்து ஓடினர். அப்படியும் ஒரு குலை வாழைத்தாரை ஆஞ்சநேயரின் படை தூக்கிக் கொண்டு போயிற்று. மந்திகள் கூட்டம் ஒதுங்கிப் போன பிற்பாடு, நடந்த களேபரத்தை நினைத்து குடும்பத்தினர் யாவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். அவர்களின் சிரிப்பொலி ஓய நீண்ட நேரம் எடுத்தது.

“யாரும் வருத்தப்படாதீங்க. நாங்களும் வாழைப்பழம் வாங்கிட்டு வந்திருக்கோம். கார்ல இருக்கு” என்றார் வாசுவின் துணைவி.

“நல்ல வேளை, அண்ணி. முன்யோசனையோட வாங்கிட்டு வந்தீங்க. வாழைப்பழம் மட்டும் இல்லைனா கோவிலுக்குப் போய்ட்டு வந்த நிறைவே கிடைச்சுருக்காது. இந்தக் குக்கிராமத்துல வாழைப்பழத்தைத் தேடி எங்க அலையுறது?” என்று அவருடன் பேசி மகிழ்ந்தபடி, மாது மகிழுந்தை நெருங்கினாள்.

அப்போது மகிழினியன் அவரின் கைகளுக்குத் தாவிட, சேயில்லாத் தாயவள் உச்சி குளிர்ந்து போனாள்.

வாழைப்பழங்கள் அடங்கிய பையைக் கையிலெடுத்த மாது அவரின் முகக் குறிப்பை நன்குணர்ந்தாள். “வீட்டுக்குப் போற வரைக்கும் நீங்களே மகிழை வச்சிருங்க. என்ன, கொஞ்சம் சேட்டை பண்ணுவான். பொறுத்துக்கோங்க, அண்ணி” என்று கூறி கருணை வடிவுடையவளாக அவள் சிரிக்க, வயிற்றுக்குள் இருந்த குட்டி மாதுளையும் சிரித்தாள்.

~முற்றும்~

You may also like

2 comments

Subhashini A March 16, 2026 - 12:21 pm

Semma story ppa..
Happy ending

Reply
Ezhilmathi GS March 16, 2026 - 1:30 pm

மிக்க நன்றி சிஸ் 🥰 உங்களோட தொடர் விமர்சனத்தில் மனம் நிறைந்தது 🫶🏻

Reply

Leave a Reply to Subhashini A Cancel Reply

About Me

Featured