அத்தியாயம் – 27
“நிக்கி கதவைத் திற, கதவைத் திற நிக்கி, இப்போ கதவைத் திறக்கப் போறியா இல்லையா, திறடி…” என அந்த அறைக்கு வெளியில் நின்று தாரணி கத்திக் கொண்டிருக்க,
“முடியாது, முடியவே முடியாது உன்னால என்ன செய்ய முடியுமோ செய். நான் உயிரோட இருந்தா தான உனக்கு பிரச்சனை நான் போயிடுறேன். பிறகு நீ.. நீ மட்டும் நிம்மதியா இரு…” எனப் பதிலுக்கு கத்திக் கொண்டிருந்த நிக்கியின் கையில் பழங்களை வெட்டும் கத்தி இருந்தது.
அதை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்த தாரணிக்கு மேலும் பயத்தை கொடுக்க, “கத்தியை கீழே போடுடி, சொன்னாக் கேளு நிக்கி, உன் நல்லதுக்கு தான் அம்மா சொல்றேன் புரிஞ்சிக்கோ. ப்ளீஸ் நிக்கி. சொல்றதைக் கேளு..” என அழுது கொண்டே கெஞ்ச,
“ஹான் அழு, நல்லா அழு.. என்னை மொத்தமா அழ வச்ச இல்ல, இப்போ நீ அழு, நான் இல்லாம மொத்தமா அழு, என் நல்லதுன்னு சொன்னியே.? உனக்குத் தெரியுமா? என் நல்லது எதுன்னு உனக்குத் தெரியுமா.? தெரியாது தெரியவே தெரியாது. உனக்கு உன்னோட ஜாதி, அந்தஸ்து, குப்பைக்கு சமமான கவுரவம், இந்த கேவலாமன சமுதாயம், அது என்ன சொல்லிடுமோன்னு பயம் இதுதான் பெருசு. என் வாழ்க்கை பெருசு இல்லயில்ல உனக்கு.”
“எனக்கு நல்லதுன்னா அது நான் ஆதன் கூட இருக்கனும். அவன் கூட மட்டும் தான் இருக்கனும், அது தான் எனக்கு நல்லது.” என ஆவேசமாகத் தாயிடம் சீறியவள் கையிலிருந்தக் கத்தியை ஒருமுறை மேலேத் தூக்கிப் பார்த்துக் கண்களை மூடி, ஆழ்ந்து ஒரு மூச்செடுத்தவள், பின் தன் பலம் கொண்ட மட்டும் முழு வேகத்துடன் மணிக்கட்டை ஒரு கிழி கிழிக்க, கத்தி இழுத்த அந்த வேகத்தில் உள்ளிருந்த நரம்பில் காயம் ஆழமாக இறங்க, அதிலிருந்து செங்குருதி சீறிப் பாய்ந்தது.
தன் ரத்தத்தைப் பாலாக்கி, அவள் பசியைப் போக்கி ஊனும் உயிருமாய் வளர்த்த மகளின் கையிலிருந்து அருவி போல் பீச்சிய செங்குருதியைக் கண்டு “ஐய்யோ ரத்தம்… ரத்தம் போகுதே, யாராவது வாங்களேன், ஐய்யோ நிக்கிம்மா கதவைத் திறடி. நிக்கிம்மா அம்மா சொல்றதைக் கேளுடீ” என நெஞ்சில் அடித்தபடியேத் தாரணி கதறினார்.
அவரின் முதல் சத்ததுக்கே அக்கம் பக்கம் குவார்டர்சில் இருந்தவர்கள் எல்லாம் வந்து விட, இந்தச் சத்தில் இன்னும் அந்த இடத்தில் கூட்டம் அதிகமானது. அதில் ஒருவர் முன்னமே சங்கருக்கு அழைத்துச் சொல்லிவிட்டுக் கதவை உடைக்க ஆரம்பிக்க, அவரும் சரியாக அப்போது வந்து சேர்ந்து விட்டார்..
மனைவியின் கதறலைப் பார்த்து அவரிடம் வந்தவர் ஜன்னலின் வழியாக எட்டிப் பார்க்க, அங்கே வாயில் நுரை தள்ளியும், கையில் ரத்தம் கொட்டியபடியும் மகள் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து நின்றார். அவர் அதிர்ந்தது எல்லாம் சில நொடிகள் தான். அங்கு கதவை உடைத்துக் கொண்டிருப்பவர்களுடன், இவரும் சேர்ந்து உடைத்துத் தள்ள, கதவும் தூரம் போய் விழுந்தது.
வேகமாக மகளிடம் வந்தவர், அவளின் துப்பட்டாவை எடுத்து கையில் குருதி கொட்டும் இடத்தில் கட்டிவிட்டு, அவளைத் தூக்கிக் கொண்டு வெளியில் ஓடினார்.
அதற்குள் ஒருவர் ஜீப்பை எடுத்திருக்க, பின்பக்கம் தாரணி ஏறிக் கொள்ள, அவர் மடியில் நிக்கியை படுக்க வைத்தவர், தானும் ஏறிக் கொண்டார். மகளை அணைத்துக் கொண்டு அழும் மனைவியை வெறுப்பாக பார்த்த சங்கர் காயம் பட்ட கையை எடுத்து சற்றுத் தூக்கிப் பிடித்துக் கொண்டார்.
என்ன நடந்தது என மனைவியிடம் கேட்க கூடப்பிடிக்கவில்லை சங்கருக்கு. காரணமும் அவருக்குத் தெரியும் தானே. சற்று முன்னர் பாண்டியன் அழைத்து ஊரில் நடந்த அனைத்தையும் சொல்லியிருந்தார். அவர் தனக்கு சொன்னது போல, ஆரு நிக்கிக்கு அழைத்துச் சொல்லியிருப்பாள் என்று புரிந்தது.
நிக்கியின் கண்கள் மேலே சொருக, அதில் பயந்து போனவர், தன் சிந்தனையை உதறிவிட்டு, “நிக்கிம்மா, கண்னைத் திறடா, கண்னை மூடக்கூடாது. முழிச்சிட்டே இருடா.. இங்கப் பாரு, அப்பா உன் கூட இருக்கேன். உனக்கு பிடிக்காத மாதிரி அப்பா எப்பவும் செய்ய மாட்டேன். கண்னைத் திறடா கண்ணம்மா.” என மகளின் கன்னங்களில் தட்டிக் கொண்டே பதட்டமாகப் பேச,
“நோ டாட், எனக்கு ஆதன்கிட்ட போகனும் அவன் இல்லாம என்னால இருக்க முடியாது. டாட் நான் இல்லாம அவனும் இருக்க மாட்டான், எனக்கு அவன் கிட்ட போகனும் டாட், அங்கேப் பாருங்க, அவன் என்னைக் கூப்பிடுறான்….” என ஏதேதோ புலம்ப, “ஐய்யோ கடவுளே” எனப் பெற்றவர்கள் கதறிவிட்டனர்.
“நிக்கிம்மா நீ நினைக்கிற மாதிரி இல்லடா. மாப்பிள்ளைக்கு ஒரு ஆக்சிடென்ட் ஹாஸ்பிடல்ல இருக்கார் அவ்ளோதான். அங்க எல்லாரும் அவர் கூட இருக்காங்க. நீ நல்லானதும் உன்னை அங்க கொண்டுபோய் விட்டுடுறேன். முதல்ல இப்படிப் பேசாதடா… முழிச்சிப்பாரு கண்ணா..” எனத் தன் கதறலை ஒதுக்கிப் பலவாறு சமாதான வார்த்தைகள் பேசி மகளை சமாதானம் செய்ய முயன்றார் சங்கர்.
ஆனால் அவர் மகளோ சமாதானம் ஆகும் வழியையேக் காணோம். தாரணியோ மகளின் நிலையைப் பார்த்து அழுது கொண்டே இருக்க, நிமிடங்கள் எல்லாம் யுகங்களாகக் கடந்து, ஒரு வழியாக மருத்துவமனையும் வந்துவிட, அவசரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டாள் நிகிதா.
மருத்துவர் சங்கரை அழைத்து என்ன நடந்தது எனக் கேட்க, அவரோ தாரணியைப் பார்த்தார். அந்தப் பார்வை நீதான் பதில் சொல்ல வேண்டும் என்று சொல்ல, வேறுவழி இல்லாமல் அவரும் முந்தானையில் முகத்தைத் துடைத்து விட்டு, “வீட்டுல ஒரு பிரச்சனை டாக்டர் அதுக்குப் போய் பூச்சி மருந்தைக் குடிச்சிட்டா டாக்டர். அது மட்டும் இல்லாம கையையும் அறுத்துக்கிட்டா” என விம்மல்களுக்குக்கிடையே சொல்லி முடிக்க,
“பூச்சி மருந்தா எந்த மருந்து..” என யோசனையாகக் கேட்கவும்,
சங்கர் அவ்வளவு அவசரத்திலும் கட்டிலில் கிடந்த அந்த மருந்து பாட்டிலை மறக்காமல் கையில் கொண்டு வந்திருந்தார். அதை எடுத்து மருத்துவரிடம் கொடுக்க,
அவரோ “ஓ மை காட்” என்றபடி நிக்கி அனுமதித்திருந்த அறைக்குள் பதறியபடி சென்றிருந்தார். மருத்துவரின் பதட்டம் தாரணிக்குள் பெரும் பயத்தை உண்டு செய்ய, “என்னாச்சுங்க என்னாச்சு…” என திக்கி திணறி ஒருவாராகக் கணவரிடம் கேட்க,
அவரோ மனைவியை வெறுப்பாகப் பார்த்து, “ம்ம் அவ சாப்பிட்ட விஷம் தான் காரணம். இந்த விசத்தை சாப்பிட்டா அரை மணி நேரத்துக்கு எல்லாம் உடம்பெல்லாம் நீலம் பூத்து கண்னோட கருமணிகள் எல்லாம் வெள்ளையாகிடும், பார்வைத் தான் முதல்ல போகும். அப்புறம் மூளையைப் பாதிக்கும்…” என வரிசையாக ஒவ்வொன்றாக அதன் பாதிப்புகளைச் சொல்ல கணவர் சொன்னதைக் கேட்டத் தாரணியோ, அது கொடுத்த பயத்தில் “நிக்கிம்மா” என்ற அலறலோடு மயங்கி கீழே சரிந்திருந்தார்.
தாரணிக் கீழே விழ, அவரைத் தாங்கிய சங்கர் மனைவியை எமர்ஜென்சியில் சேர்த்து உடனடியாக கிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய, அரைமணி நேரத்தில் தாரணி கண் விழித்திருந்தார்.
தாரணிக்கு ‘நிக்கி ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்தாள்’ என்று இன்னமும் தெரியவில்லை. ‘ஏன் இப்படி ஒரு முடிவெடுத்தா, எப்பவும் நடக்குறதுதானே. இன்னைக்கு காலையில் இருந்து அவகிட்ட பேசக்கூட இல்லையே, ஏன் இப்படி’ என மனதில் கேள்விகள் ஆரம்பிக்க, அதைக் கணவரிடம் கேட்டு தீர்த்துக் கொள்ளலாம் என்று அவரைப் பார்க்க, அவரோ “வீட்டுல என்ன நடந்தது” என்றார் பதில் கேள்வியாக.
சொல்லித்தான் ஆகவேண்டும் என்றக் கணவனின் கட்டாயக் குரலில் “ஆரணி ஊரிலருந்து கால் பண்ணியிருந்தா, நான் எடுக்கல எப்பவும் ஒரு டைம் கால் செஞ்சு நான் எடுக்கலன்னா விட்டுடுவா, இன்னைக்கு தொடர்ந்து மூனு நாலு டைம் பண்ணினா, நான் எடுத்ததும், நிக்கி கிட்ட கொடுக்க சொன்னா. நான் எதுக்கு அதெல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கும் போதே ரூம்ல இருந்த வந்த நிக்கி பிடுங்கிட்டா. ஆரு என்ன சொன்னான்னு தெரியல, பேசி முடிச்சதும் போனைத் தூக்கி எறிஞ்சிட்டு ரூமுக்குள்ள போய் கதவை, அடைச்சிட்டா” என கணவரின் கைகளைப் பிடித்துக் கொண்டு அழ,
அவரோ “உன்னோட பயத்தை தப்புன்னு சொல்லல, ஆனா நீ செய்றது முரட்டுப் பிடிவாதம். அங்க என்ன நடந்ததுனே தெரியாம நீ செஞ்சது மூர்க்கத்தனம்” என்று விரக்தியாகச் சொன்னவர், சற்றுமுன் பாண்டியன் அழைத்து தன்னிடம் பேசியதைக் கூறினார்.
வீட்டிலிருந்து கோபமாகக் கிளம்பிய ஆதன், தேனி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நூற்றி இருபத்திற்கும் மேலாக வேகத்தைக் கூட்டி வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்தான். எதிரில் வருபவர்களும், போவோரும் அவனைத் திட்டியதையெல்லாம் காதில் வாங்கவுமில்லை, கண்டு கொள்ளவுமில்லை. மனம் முழுக்க தோற்றுவிட்ட காதலின் வலிகளும் வேதனைகளும் நிராசைகளாக மாறி அவனைத் துவம்சம் செய்ய, அந்த வலியில் இருந்து மீண்டே ஆக வேண்டும், அதற்கு இந்த உயிர் போனாலும் பரவாயில்லை என நொடியில் யோசித்து, சற்றும் பின் விளைவுகளை பற்றி நினைக்காமல் எதிரில் வந்த லாரியில் மோதிவிட்டான்…
அவன் தனக்கு நேராக வருவதை நிமிடத்தில் உணர்ந்தார் அந்த லாரி டிரைவர். அவர் சுதாரிக்கும் முன்னே அனைத்தும் நடந்து முடிந்திருந்தது. ஆதனின் வாகனம், அந்த லாரியின் அடியில் அப்பளமாக நசுங்கியிருந்தது. மற்றவர்கள் என்றால் இந்தக் கோரமான விபத்தைப் பார்த்ததும் லாரியை விட்டுவிட்டு ஓடியிருப்பார்கள்.
அந்த டிரைவரும் நல்லவர் தானோ, அவர் மனதிலும் இரக்கம் சுரக்க, நூற்றியெட்டுக்கு அழைத்து, விபரத்தைச் சொல்லி, நூறுக்கும் அழைத்து காவல் நிலையத்திற்கும் விபத்தைப்பற்றி சொல்லியிருந்தார்.
அடுத்த அரைமணி நேரத்தில் அந்த இடமே சைரன் ஒலியின் ஆதிக்கத்தில் இருக்க, நூற்றி எட்டில் வந்தவர்கள் முகமெல்லாம் ரத்தமாக, சுயநினைவின்றிக் கிடந்த ஆதனைப் பார்த்து “ஸ்பாட் அவுட்” என்றபடியே அவனை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர்.
ஆதனின் காரையும், அதிலிருந்த சில அடையாளங்களையும் வைத்து ஒரு மணி நேரத்தில், அவன் அட்ரசைக் கண்டுபிடித்துத்தான் காவல்துறையினர் ஆதிக்கு அழைத்திருந்தனர். அழைத்த காவலதிகாரியும் “ஸ்பாட் அவுட்” என்றே அவனிடம் சொல்லியிருக்க, அந்த நிகழ்வை ஆதியால் நம்பக் கூட முடியவில்லை.
“இருக்காது… அப்படி எதுவும் இருக்காது” என தனக்குள் சொல்லித் தன் மூளைக்குள்ளும் பதிய வைத்துக் கொண்டவன், உடனே ஆருவுக்கு அழைத்து விபரத்தைக் கூறி பெரியவர்களிடம் பொறுமையாக எடுத்து சொல்லி அழைத்து வருமாறு கூறிவிட்டு மருத்துவமனையை நோக்கிப் பறந்திருந்தான்…
வீட்டில் ஆரு பேச பேசவே பாண்டியன் போனை மகளிடமிருந்து வாங்கியிருந்தார். அவர் பேசுவதைக்கூட ஆதி கேட்கவில்லை. சொல்ல வந்ததை சொல்லிவிட்டு வைத்து விட, இப்போது பாண்டியன் எல்லோரையும் பார்த்தார். சுற்றி இருந்த அனைவரும் அவரைத் தான் யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்…
அதிலும் பவித்ராவின் பார்வை அவரை உருக்குலைக்க வைத்தது. தன் அனுபவத்தில் எத்தனையோ விபத்துக்களைத் தாண்டி வந்தவர் தான். ஆனால் தன் வீட்டில், அதிலும் தன் உயிரான தங்கையின் மகன் எனும் போது, தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே, அது போல அவர் கேட்ட செய்தியில் உடலும் மனமும் நடுங்கியிருந்தது பாண்டியனுக்கு.
ஆருவைப் பார்த்தவர், அவளின் திக்பிரம்மையிலேயே இன்னும் அந்த செய்தியில் இருந்து மகள் வெளியில் வரவில்லை என்று உணர்த்த, அவளை உலுக்கியவர் “முகுந்தா ஆதன் காரைக் கொண்டு போய் மரத்துல இடிச்சிட்டானாம், அவனுக்கு அடி ஒன்னும் இல்ல. கார் ஃபுல் டேமேஜ், அதோட ஹைஸ்பீடுல ஓட்டிருக்கான். அதை ஆக்சிடென்ட்ன்னு கேஸ் பைல் பண்ணி ஸ்டேசனுக்கு கூப்பிட்டு போயிருக்காங்க. நம்ம ரெண்டு பேரும் போய் பார்த்து பேசிட்டு, அழைச்சிட்டு வந்துடலாம்..” என தன் வருத்தத்தைக் காட்டாமல் போலிஸ் அதிகாரியின் தோரனையில் அழுத்தமாகப் பேச, அதற்குள் ஆருவும் சமநிலைக்கு வந்திருந்தாள்.
வீட்டுப் பெரியவர்களிடமும், தந்தை சொன்னதையேச் சொல்லி ஆண்கள் இருவரையும் அனுப்பிவிட்டவளுக்கு, பொங்கி வரும் அழுகையை அடக்கிப் பெரியவர்களுக்கு ‘பயப்பட ஒன்றுமில்ல’ எனச் சொல்லி தேற்றவே பெரும்பாடானது.
‘ஆதன் ஏன் இப்படி ஒரு முட்டால்தனம் செய்தான்’ என்ற கோபம் ஆரணிக்கு. அது எதனால் என்பதும் புரிய, யாருடைய கவனத்தையும் கவராமல் தன் அறைக்குள் நுழைந்தவள் நிக்கிக்கு அழைத்துவிட்டாள்.
முதல்முறை அழைத்து அவள் எடுக்கவில்லை என்றதும், எர்கின்ற கொல்லியில் எண்ணெயை விட்டாற்போல, அவள் மேலிருந்தக் கோபம் பன்மடங்காகியது.
அந்தக் கோபத்திலேயேத் தொடர்ந்து அழைக்க, தாரணி எடுக்கவும் பல்லைக் கடித்தபடியே நிக்கியிடம் கொடுக்க சொல்ல, அவரும் முடியாது என வாக்குவாதம் செய்து ஒருவழியாக போன் நிக்கியின் கைக்கு மாறியது.
நிக்கியின் ‘ஆரு’ என்ற வார்த்தையைக் கூட கேட்கவில்லை. தன்னுள் இருந்தக் கோபத்தை எல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டாள். “என்ன ஜென்மம்டீ நீயெல்லாம், உன்னை மாதிரி பொண்ணுங்க இருக்கப்போய் தான், எல்லாப் பசங்களும் பொண்ணுங்கன்னாலே கேவலமா பேசுறாங்க, நினைக்கிறாங்க. உன்னையெல்லாம் லவ் பண்ணச் சொல்லி யார் அழுதா.? லவ் பன்றேன் லவ் பன்றேன்னு சொல்லி, ஒருத்தனை அநியாயமா கொன்னுட்டியேடி, உன்னைக் காதலிச்சதைத் தவிர அவன் வேற என்னத் தப்பு பண்ணான், இன்னைக்கு உன்னை நினைச்சி நினைச்சி உயிர விட்டுட்டானேடி, போதுமா.. திருப்தியா இதைத்தானே எதிர்பார்த்த.. இனி நீ நிம்மதியா இரு, உங்கம்மா சொல்ற அந்தப் பையனைக் கட்டிக்கிட்டு நிம்மதியா இரு..” என ஆவேசமாகப் பேசிய ஆரணி போனை வைத்துவிட,
இங்கு நிக்கியோ ஆரு சொன்ன எதையும் காதில் ஏற்றிக் கொள்ளவில்லை. ஆதன் இறந்துவிட்டான் என்று மட்டும் அவளின் மூளையில் விடாமல் ஒலிக்க, போனை விட்டெறிந்தவள் தாரணி பின்னாடியே வந்து ஏதோ சொல்ல, எதுவும் காதில் வாங்காமல், கதவை அறைந்துச் சாத்தியிருந்தாள்.
ஆதன் இல்லை என்பது மட்டுமே அவள் மூளையில் பதிவாகியிருக்க, அவன் இல்லாத உலகில் தானும் இருக்கக்கூடாது என நொடியில் யோசித்து, இரண்டு நாட்களாகப் பாதுகாத்து வைத்திருந்த பூச்சிமருந்தைக் குடித்தவள், ஒருவேலைக் காப்பாற்றி விடுவார்களோ என நினைத்து, கத்தியால் கையையும் கிழித்துக் கொண்டாள்.
நிக்கியிடம் கோபமாகப் பேசிய ஆருவுக்கு, சற்று நேரத்தில் தோழியின் மேல் கோபம் மறைந்து பரிதாபம் எழ, இதை எப்படி தாங்கிக் கொள்வாளோ என்ற பயத்தில் மீண்டும் அழைக்க, போன் ஸ்விட்ச் ஆப் என்று வரவும் பெரும்பயம் தொற்றிக் கொண்டது ஆரணிக்கு.
உடனே சங்கருக்கு அழைத்து தான் பேசியதை எல்லாம் சொல்லி, வீட்டுக்குப் போகும் படி கேட்டுக்கொள்ள, அவரும் அடித்துப் பிடித்து ஓடிவந்திருந்தார். ஆனால் அவர் வருவதற்கு முன்னே மகள் ஒரு பெரிய முடிவை எடுத்திருந்தாள். தனக்குத் தெரிந்த அனைத்தையும் சொல்லிவிட்டு ஓய்ந்து போனார் சங்கர். மனம் மட்டும் மகள் பிழைத்துக் கொள்ள வேண்டும் என்று கடவுளிடம் விடாது பிரார்த்திக் கொண்டிருந்தது.
“ஆரு இதைத்தான் பேசினாளா, அவப் பேசி முடிக்கவும்தான் போனைத் தூக்கி உடைச்சிட்டு ரூம்க்குள்ளப் போய் கதவை அடைச்சிக்கிட்டா.. அப்ப அந்த பையன், அவன் உயிரோட இல்லையா?” எனக் கதறிய மனைவிக்கு என்ன பதில் சொல்வார் அந்த மனிதர். உன் பிடிவாதத்தால் பெற்ற மகளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்றா.? பதிலேதும் சொல்லவில்லை. வார்த்தைகள் எதுவுமில்லாமல், மௌனக் கண்ணீருடன் அந்த ஐசியூ வாசலையேப் பார்த்துக் கொண்டிருந்தனர் பெற்றவர்கள்.