முத்தமழை – 43
“மாமா என்ன அங்கேயே நிந்னுட்டீங்க?” என இவர்களை பார்த்ததுமே ஓடி வந்த வந்தனாவை, முடிந்த மட்டும் முறைத்து தள்ளினான் கர்ணன்.
அவன் கோபத்தை பார்த்து “ஒய் இந்த பேஸ்ல இவ்ளோ மிளகாய் பழம் பழுத்து தொங்குது..?” என மீண்டும் கேட்க
“அவர் உனக்கு சர்ப்ரைஸ் பண்ணலாம்னு ஏதோ பிளான் பண்ணி இருப்பார் போல, நீ அவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்துட்ட.” என வல்லி சிரிக்க
இது சர்ப்ரைஸ் இல்லடி, ஷாக்! இந்த பேற்ஐ மாத்தவே இல்லையா டி நீ..” என கர்ணன் வந்தனாவிடம் சண்டைக்கு போக
“எத.! மாத்தணுமா நீங்க தானே அன்னைக்கு ஆஹா ஓஹோன்னு புகழ்ந்து தள்ளுனீங்க மாமா.. அதை நம்பித்தானே நானே அந்த பெயரை கன்பார்ம் பண்ணேன். பரவால்ல நமக்கும் மண்டையில மூளைன்னு ஒரு பார்ட் வேலை செய்யுதுன்னு தோணுச்சு. என்னை நானே அப்ரிசியேட்டும் பண்ணிக்கிட்டேன். இப்ப என்ன புதுசா.?” என்ற வந்தனாவின் முகத்தில் இப்போது கார நெடி.
“ஏய்.. அறிவு இருக்கா உனக்கு.. அது ஏதோ நீ அப்செட் ஆக கூடாதுன்னு சொன்னேன்..” என இருவரும் வம்பு வளர்த்துக் கொண்டிருந்த நேரம் வல்லபி, இவர்களிடம் “எப்படியோ வந்து சேருங்க..” என்று சொல்லிவிட்டு சீதாவிடம் சென்று விட்டாள்.
சீதா சொல்ல சொல்ல அங்கிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் யாழினி.
முதல் நாளிலிருந்து வல்லபியிடம் பேச முயற்சிக்கிறாள் யாழினி, ஆனால் வல்லபி அதற்கு இடம் கொடுக்கவில்லை.
வல்லபியை பார்த்ததுமே முகம் கசந்து நிற்க. வல்லபியோ அதை கண்டு கொள்ளவே இல்லை.
“வல்லி யாழினியை தெரியாதா உனக்கு? நம்ம வெற்றி மேல இருந்த பாசத்துல பண்ணிட்டா, அப்புறம் இது எல்லாத்துக்கும் வந்தனா தான் காரணம். அவளை விட்டுட்டு ஏன் நீ யாழினியை கோச்சிக்கிற..” என்றதும் வல்லபிக்கு மனம் கனத்தது.
“அது அப்படி இல்ல சீதாம்மா, அன்னைக்கு பாவா கால் பண்ணி யாழினிக்கு ஒன்னும் இல்லைன்னு சொல்ற வரைக்கும் எங்களுக்கு எவ்வளவு பயம் தெரியுமா? பெரிய மாமாவை நினைச்சு பாருங்க, அவருக்கு இந்த நேரத்துல எவ்வளவு பயம் பதட்டம் தேவையா? அவருக்கு இதெல்லாம் தாங்க முடியுமா?”
“ஏற்கனவே மனசு நொந்து போயிருக்காரு. ஏதோ பாவாவும் இவளும் தான் அவரை கொஞ்சம் நிம்மதியா வச்சுருக்காங்க.. அதையும் கெடுத்தா என்ன செய்ய? வந்தனாவுக்கு தான் அறிவில்ல, இவளுக்கு என்ன ஆச்சு? அப்படி என்ன நடந்திடும்? அதுதான் பாவா நான் பாத்துக்குறேன்னு சொன்னார் இல்ல.. அப்பவும் ஏன் இந்த மாதிரி பயம் காட்டணும்.”
“இவளோட செய்கை என்ன காட்டுது சீதா ம்மா, பாவா மேல நம்பிக்கை இல்லைன்னு தானே.. அவர் வேணும்னா இதையெல்லாம் சகிச்சுக்கலாம், பொறுத்துக்கலாம். ஆனா என்னால முடியாது சீதா ம்மா.. அவர் இந்தியா வந்ததுல இருந்து ஒரு நாள் கூட நிம்மதியா இல்ல..”
“யாரும் அவரை நிம்மதியா இருக்க விடல.. அது அவருக்கு எவ்வளவு டென்ஷன் தெரியுமா? இத்தனை நாள் தான் எல்லாரும் அவரை பார்க்காம விட்டாங்க, இனியும் அப்படி இருக்கணுமா? எனக்கு என்னோட வாழ்க்கை ரொம்ப முக்கியம் சீதா ம்மா.”
“அவர் என் கூட கடைசி வரைக்கும் வரணும்னு தானே இந்த கல்யாணத்தை நடத்தி வச்சீங்க. அது இல்லைன்னு சொல்றீங்களா..?” சற்று அழுகையும், கோபமுமாக பேச, அதற்குள் சிவகுரு, ராமசாமி ,கர்ணன் என அனைவரும் வந்துவிட, யாழினிக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.
“சாரி வல்லி..” என்ற யாழினியின் மன்னிப்பு கூட வல்லியை மனம் இளக்கவில்லை.
“வல்லி என்ன இது?” என ராமசாமி அதட்ட
“சிவா ப்பா என்னோட பயமே உங்க யாருக்கும் புரியல. அவரை எதுக்கு எல்லாரும் இவ்வளவு கஷ்டப்படுத்துறாங்கன்னு எனக்கு புரியவே இல்ல.. அவர் இங்க வராமல் இருந்திருந்தா கூட, இவங்களோட உண்மையான முகம் தெரியாம நிம்மதியா, அந்த ஆளீஸ் கூட இருந்திருப்பார், அவரை இங்க வர வச்சு இப்படியான இக்கட்டுல மாட்ட வச்சு..” என இன்னும் என்ன சொல்லி இருப்பாளோ, “போதும் வள்லி..” என்ற கர்ணனின் இறுகிய குரலில், தன் பேச்சை நிறுத்தி இருந்தாள் வல்லபி.
“இனியும் நீ இப்படித்தான் பேசுவேனா? நான் கிளம்புறேன்..” என கர்ணனும் அதே குரலில் அதட்ட
“என்ன மிரட்டுறீங்களா? எனக்கு எதுவுமே தெரியாதுணு நினைக்கிறீங்களா? எதுக்காக நீங்க டாக்டரை அடிக்கடி போய் பார்க்குறீங்க? மாமாவுக்காகனு மட்டும் சொல்லாதீங்க.. எனக்கு எல்லாம் தெரியும், பாண்டியன் என்கிட்ட எல்லாம் சொல்லிட்டார்.. இன்னும் என்னை ஏமாத்த முடியாது..” என கணவனை திருப்பி அதட்டினாள் வல்லபி.
“வல்லி நாம இங்க வச்சு பேசுற பிரச்சனை இல்லடா இது.. கொஞ்சம் பொறு, பங்க்ஷன் முடியட்டும். பொறுமையா வீட்ல போய் பேசலாம்.. ஆளுங்க வர ஆரம்பிச்சிட்டாங்க..” என ராமசாமி மகளை சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.
“எனக்கு ரொம்ப எல்லாம் ஆசை இல்லப்பா.. உங்கள மாதிரி நானும் தனியாவிட கூடாது பயப்படுறேன்.. அப்படி ஆகிட்டா அம்மாவை விட்டு எனக்காகவாவது நீங்க இருந்தீங்க.. ஆனா நான் இருக்க மாட்டேன் ப்பா.. இந்த குழந்தைக்காக கூட என்னால அவரை விட்டுட்டு இருக்க முடியாது ப்பா..” என கத்தவில்லை, கதறவில்லை இறுக்கமாக, அங்கிருந்தவர்களின் மனதில் அழுத்தமாக, பதியும்படி கூறிவிட்டு விடுவிடுவென உள்ளே சென்றுவிட, அங்கிருந்த அத்தனை பேரும், அதிர்ச்சிக்கும் மேலான ஒரு உணர்வில் திகைத்து நின்றிருந்தனர்.
“என்ன சிவா இது? என ராமசாமி பிரம்மை பிடித்தது போல் நின்றிருந்த கர்ணனை பார்த்த படியே கூற,
“மாப்பிள்ளை..” என்ற சிவகுருவின் அழைப்பில் நிகழ்வுக்கு வந்த கர்ணன், “மாமா அவ பயப்படுற அளவுக்கு பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை.. யாழினி பிரச்சனை அன்னைக்கு சடனா பிபி ரைஸ் ஆயிடுச்சு. அதனால டாக்டர்கிட்ட போனேன். அவர் புல் செக்அப் பண்ணிக்கலாமுன்னு சொன்னார். நானும் ரெண்டு நாள் கழிச்சு டெஸ்ட் எடுத்தேன். ரிப்போர்ட் நார்மல் தான். வல்லிக்கு இது எதுவும் தெரியாது. பாண்டியன் வல்லிகிட்ட சொல்லிட்டாரு போல. அதை நினைச்சு பயந்துட்டு எதையோ பேசுறா, விடுங்க நான் பாத்துக்குறேன். நான் அவ கிட்ட பேசிக்கிறேன்.. நீங்க ஃபங்ஷனை பாருங்க..” என்று பெரியவர்கள் சமாதானம் ஆகும்படி ஒரு விளக்கம் கொடுத்து, அனைவரையும் சமாளித்து மனைவியை தேடி சென்றான்.
“யாழினி ஏன் இப்படி இருக்க.?” என அதிர்ந்து நின்றிருந்த யாழினியைப் பார்த்து கேட்ட வந்தனாவிடம்,
“நான் இப்படி எல்லாம் ஆகும்னு எதிர்பார்க்கவே இல்ல தனா.. அண்ணா இவ்வளவு டென்ஷன் ஏத்திப்பார்னு நான் யோசிக்கவே இல்ல.. ஏற்கனவே அம்மாவும் வனியும் அண்ணா வந்ததிலிருந்து அவரை கஷ்டப்படுத்துறாங்க.. இப்போ நானும் என் பங்குக்கு அவரை டென்ஷன் பண்ணிட்டேன்..” என அழுகையோடு கூற
“சரி விடு யாழி, எல்லாம் என்னால தான். இனி நானும் கொஞ்சம் யோசிச்சு செய்யறேன்..” என்றபடியே அவளை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள் வந்தனா.
விழா இனிதே தொடங்க, ஆட்கள் மெல்ல மெல்ல வர ஆரம்பித்தனர். ஆரம்பித்த முதல் நாளே இத்தனை கூட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதோடு கர்ணனும் மூன்று இன்ஃப்ளுயன்சர்ஸ் மூலம் மிகவும் பெரிய அளவில் விளம்பரம் செய்திருந்தான். மேலும் தங்களுடைய சேனலில் விழாவை லைவ் போடும்படியும் பார்த்துக் கொண்டான்.
அதோடு வந்தனா இந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் இந்த தொழிலில் இறங்குவாள் என யாரும் எதிர்பார்க்கவே இல்லை.. ஒவ்வொன்றையும் தெளிவாக செய்திருந்தாள். அவளுக்கு உற்றத் துணையாக இருந்தான் ஜோன்ஸ். அவன் இல்லையென்றால் இந்த பத்து நாளில் இது சாத்தியமே இல்லை.
முதல் நாள் இரவு தூங்கவே இல்லை அவன். விடியலில் தான் கிளம்பி வருவதாக சொல்லிச் சென்றிருந்தான். இன்னுமே வந்திருக்கவே இல்லை.
‘வல்லிதான் குத்துவிளக்கு ஏற்ற வேண்டும்’ என்று வந்தனா கூறிவிட, மகளைத் தேடி சென்றார் ராமசாமி.
அதே நேரம் அங்கிருந்த ஒரு அறையில் கசங்கிய முகத்துடன் அமர்ந்திருந்த மனைவியிடம், எப்படி கோபப்படுவது என தெரியாமல் அவளின் கையை பிடித்தபடி அவளின் காலுக்கடியில் அமர்ந்து விட்டான் கர்ணன்.
மனைவியின் பயத்தை ‘ஒன்றும் இல்லை’ என்று ஒதுக்கி விட முடியாதே! அவன் இங்கு வராமல் போயிருந்தால் அவனுக்கு எப்படியோ? தன் மனைவிக்கு ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைத்திருக்கும். அதையும் அவனின் பேராசையால் கெடுத்து விட்டானே! இப்போது அவளுக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் தவித்து போய் அமர்ந்திருந்தான்.
திடீரென “சாரி பாவா..” என்ற வல்லபியின் குரல் அவனை நிமிர வைத்தது.
“என்னோட பயத்தை எல்லாம் உங்களுக்கு டென்ஷனா மாத்துறேனா..?” என்றாள் கலங்கிய குரலில்.
“என்ன பாப்பு நீ..? சொல்லப்போனால் எனக்கு உன் மேல கோபமா வருத்தமோ எதுவுமே இல்லை.. இத்தனை வருஷம் உரிமையான கோபத்துக்கும், சண்டைக்கும், இந்த அழுகையையும் தான் நான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்.. இன்னைக்கு அதெல்லாம் நடக்குது, அதுவும் எனக்கு பிடிச்ச, என் பொண்டாட்டியால.. இதெல்லாம் எனக்கு வரம் பாப்பு..” என கர்ணனும் கரகரத்தக் குரலில் கூற, கணவனின் தலையை மென்மையாக வருட ஆரம்பித்தாள் வல்லபி.
பின் “பாவா மூணு வருஷமா உங்க மண்டைக்குள்ள நான் ஓடிட்டு இருக்கேன்னு சொன்னீங்க.. ஆனா நீங்க இந்த மூணு மாசமா தான் நீங்க என் மண்டைக்குள்ள ஓடுட்டு இருக்குறீங்க. இந்த மூணு மாசத்துலையே என்னால உங்களை விட்டு இருக்க முடியல, உங்களால எப்படி இருக்க முடியும். உங்க ஃபீலிங்ஸ் புரியுது. என்னோட வாழ்க்கை முடியுற வரை நீங்க வேணும்னு மனசு கெடந்து தவிக்குது. பாண்டியன் நீங்க செக்கப் போயிட்டு வந்தீங்கன்னு சொன்னதுல இருந்து, அந்த பயம் அதிகமாயிடுச்சு. நான் என்ன செய்யட்டும், சொல்லுங்க பாவா..” என்றாள் வேதனையாக.
“பாப்பு உன்னை நான் தப்பே சொல்லல, இனி உனக்கு தெரியாம என் லைஃப்ல எந்த ரகசியமும் கிடையாது. நீயும் இன்னைக்கு பேசின மாதிரி எப்பவும் பேசக்கூடாது. நீ பேசும் போது மாமாவோட முகமே மாறி போயிடுச்சு, அவர் எவ்வளவு வருத்தப்படுவார்னு யோசிச்சு பாரு.”
“புரியுது பாவா.! ஆனா நான் உண்மையாதான் சொன்னேன். என் மனசுல தோனினதை தான் பேசினேன்.”
“சரி ம்மா, இனிமேல் மாமா இருக்கும்போது இந்த மாதிரியான வார்த்தைகளை பேசாதே..”
“ம்ம் சரி பாவா..” என்றவள் கணவனின் தலை மேல் தன் தலையை வைத்து அழுத்த,
“பாப்பா..” என்ற தந்தையின் குரலில் பட்டென நிமிர்ந்தவள் “வாங்கப்பா..” என்றாள் அவசரமாக.
கீழே அமர்ந்திருந்த கர்ணன் மெதுவாக எழுந்து நிற்க, “அங்க வந்தனா உன்னை கூப்பிடுறா டா. இது அவளோட ஃபங்ஷன்.. நாம நல்லபடியா முடிச்சு கொடுக்கணும்..” என கண்டிப்புடன் கூற
“ஹான் இதோ போலாம் ப்பா.” என்றவள் கணவனை பார்க்க, அவனோ மனைவியின் கைப்பிடித்து மெதுவாக எழ உதவி செய்து, கலைந்திருந்த தலையை ஒதுக்கி விட்டான்.
“போலாமா?” எனக் கேட்டு மனைவியோடு முன்னே நடக்க, மகளின் வார்த்தைகள் ராமசாமியின் மனதில் ஆழமாக இறங்கி இருந்தது.
விழா நல்லபடியாக நடந்து கொண்டிருந்தது. வல்லபி விளக்கேற்ற, சீதா மற்ற பூஜைகளை பார்த்து செய்தார். அடுத்தடுத்து மற்ற வேலைகள் நடக்க, யாழினி யாருக்கும் சந்தேக வராத அளவிற்கு, பின்னில் ஒதுங்கிக் கொண்டாள்.
‘அனைவரும் ஒன்று தான் மட்டும் தனி’ என்ற எண்ணம் சட்டென அவள் மனதில் உதித்ததை அவளால் அழிக்க முடியவில்லை.
இந்த நேரம் அவள் வெற்றியை மிகவும் தேடினாள். இன்று எப்படியாவது அவன் வருவான் என்று பெரிதும் எதிர்பார்த்தாள் அவன் வரவில்லை அது மிகப்பெரிய ஏமாற்றம் யாழினிக்கு.
வெற்றி வராதது, வல்லபி பேசாதது, கர்ணன் தன்னை நினைத்து கவலைப்பட்டது, மேலும் வீட்டில் அனைவரும் அவளை ஒதுக்கியது என அனைத்தும் அவளை பெரிதளவில் பாதித்திருந்தது.
என்ன முயன்றும் மகிழ்வாக அவளை காட்டிக் கொள்ளவே முடியவில்லை.. முயற்சிக்கிறாள் ஆனால் முடியவில்லை. இனி இங்கிருந்தால் தன்னை பார்த்து மேலும் வருந்துவார்கள் என்று நினைத்து, தந்தையிடம் சென்றவள் “ப்பா நான் ஆபிஸ் கிளம்புறேன்.. 2 ஹவர்ஸ் தான் பர்மிஷன் போட்டேன்.. இப்போ கிளம்பினால் தான் சரியா இருக்கும்..” என்றாள் மெல்லிய குரலில்.
“கண்ணம்மா… நீ வல்லியை தப்பா நினைச்சிடக் கூடாது..” என்றார் மகளின் முகத்தைப் பார்த்து.
“அப்பா நான் எப்படி வல்லியை தப்பா நினைக்க போறேன். எனக்கு இப்போ கொஞ்சம் தனியா இருக்கணும் போல இருக்கு, ப்ளீஸ் ப்பா..” என்றதும், மகளின் முகத்தில் தெரிந்த சோர்வில் “சரி ம்மா, சாப்பிட்டு கிளம்பு..” என முடித்து விட்டார்.
பசி என்ற உணர்வே இல்லை, சாப்பிடவும் தோன்றவில்லை.. ஆனால் தந்தைக்காக கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு பாண்டியனோடு ஆஃபிஸ் கிளம்பி விட்டாள்.
யாழினி கிளம்பிய சில மணி நேரங்களிலேயே, வெற்றி அங்கு வந்து சேர்ந்து விட்டான்.. அவனைப் பார்த்ததுமே வந்தனாவிற்கு அத்தனை கோபம்.
வல்லபி கோபப்பட்டது யாழினி அழுதது என எல்லாம் சேர்ந்து ஒரு கோபத்தைக் கொடுக்க, “நீ எதுக்கு இங்க வந்த?” என வெற்றியைப் பார்த்து ஆத்திரமாக கேட்டாள் வந்தனா.