காதல் கசக்குதைய்யா – 21
ஆதனைச் சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது நிக்கிக்கு. இந்த இரண்டு நாட்களும் யோசனையிலேயே சென்றது அவளுக்கு. இப்படியெல்லாம் அவள் சீரியசாக ஒரு பிரச்சினையைப் பற்றி யோசித்ததில்லை.
வீட்டில் இருந்தவர்கள் ‘ஏன் இப்படி இருக்கிறாய்’ என்று கேட்டால் சிரித்து சமாளித்தாள். ஒரு வேளை பெற்றவர்கள் நினைப்பு வந்துவிட்டதோ என அவளின் அம்மா அப்பாவை பேசச் சொல்ல, அவர்களிடமும் சாமளிஃபிகேஷன் தான் மேடத்திற்கு.
பொறுத்து பொறுத்துப் பார்த்த ஆகாஷ் அவளை அழைத்துக் கொண்டு வெளியே வந்து “என்ன தாண்டி உன் பிரச்சினை” என எரிந்து விழ,
“ம்ச்.. உனக்குத் தெரியாதா..? பேசாம போடா நானே கடுப்புல இருக்கேன்..” என அவனுக்கு மேலே எரிந்து விழுந்தாள்.
“ம்ச்ச்.. ஹேய் இதெல்லாம் ட்டூ மச் டி குட்டிச்சாத்தான், உனக்குப் பிடிச்சா ஓக்கே சொல்லு, இல்லைன்னா விட்டுத்தள்ளூ, அதை விட்டுட்டு ஓவரா சீன் போட்டு எல்லாரையும் டென்சன் பன்ற..” என அவளைக் கலாய்த்தாலும், அன்றைய நாளை நினைத்து சிரிப்பு பீறிட்டது ஆகாஷிற்கு.
அன்று ஆதன் கிளம்பியதும் வந்த ஆகாஷ் அவளிடம் என்னவென்று விசாரிக்க, அவளோ “அவன் என்னை லவ் பன்றானாம் டா..” என்றதும், விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
முதலில் அமைதியாக இருந்தவள் அவன் சிரிப்பதை நிறுத்தாமல், தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருக்க கடுப்பானவள் “ஆகாஷ் “எதுக்கு இப்படி ஜனகராஜ் மாதிரி சிரிக்குற, உன் சிரிப்ப பார்த்து தெரு நாயெல்லாம் வீட்டுக்கு வந்துட போகுது..” எனப் பல்லைக் கடித்துச் சொல்ல
“இல்லடீ.. உன்னைப் பத்தி தெரிஞ்சும் அவனுக்கு இந்த சோத்துமூட்டையே தான் வேனும்னு சொல்றானே அவனை நினைச்சு சிரிச்சேன்..” என மேலும் சிரிக்க
அவளும் “டேய்…” எனக் கத்த, “ம்ச் ஆனாலும் ஒன்னு சொல்லனும்டீ பையன் ரொம்ப சின்சியராதான் இருக்கான் போல, எங்கிட்ட பேசும் போது கூட அதை என்னால புரிஞ்சிக்க முடிஞ்சது. உனக்குப் பிடிச்சா ஓக்கே சொல்லு..” என சீரியசாகச் சொல்ல,
“இல்ல.. அப்படி ஒரு தாட் எனக்கு இப்போ வரைக்கும் இல்ல ஆகாஷ். ஆனா அவரைப் பார்த்தா பிடிக்கும் போலத்தான் தோனுது..” என யோசனையாகச் சொல்ல,
“அவசரப்படாம யோசிடீ.. உன்னோட லைஃப். நீதான் முடிவு செய்யனும். அவர் தான் யோசிச்சு சொல்ல சொல்லிருக்காரே.. பொறுமையா யோசிச்சு நிதானமா சொல்லு” என்றவன், சிறு சிரிப்போடு “நீ ஓக்கே சொன்னா நான் தப்பிச்சிடுவேன், இல்லாட்டி இந்த சோத்துமூட்டைக்கு காலம் பூரா நான் தான் சமைச்சுக் கொட்டுற சாபத்தை மொத்தக் குடும்பமும் சேர்த்து எனக்கு கொடுத்துடும்..” எனக் கிண்டல் செய்து அவளிடம் நான்கு அடிகளையும் வாங்கி அவளை சமாதானம் செய்திருந்தான்.
ஆனாலும் அவள் சரியான மாதிரி இல்லை. நிக்கிக்கும் ஆதன் மேல் விருப்பம் வந்துவிட்டதை ஆகாஷ் உணர்ந்தே இருந்தான். ஆனால் அதை அவள் உணர வேண்டும் என்பதால் அமைதியாக இருந்தான். அதோடு பெரிதாக இதில் தலையிட விருப்பமும் இல்லை. ஆனால் ஆதனைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொண்டே தான் இருந்தான்.
இப்படியே இருக்க, லேசான தலைவலியோடு உடலும் மெல்ல சூடேற ஆரம்பித்து அன்று மாலையே நிக்கிக்கு காச்சல் வந்துவிட, வீட்டினர் எல்லாம் பயந்துவிட்டனர். விசயம் தெரிந்த ஆகாஷோ “ஓவர் சீன் முனியம்மா” எனப் பல்லைக் கடித்தான்.
சேலத்தில் இருந்து அவள் பெற்றோரை வரவைத்து நிக்கியை ஊருக்கு அனுப்பிவிடும் முடிவை எடுக்க, நிக்கியை விட ஆகாஷே டென்ஷனில் அழைந்தான். அன்று மருத்துவமனை அழைத்துச் சென்று டாக்டரிடம் காட்டி, சாதாரண ஃபீவர் தான் என்று மருத்துவர் சொன்னதும் தான் சற்று சமதானம் ஆனார் ஆகாஷின் அம்மா.
மருந்து மாத்திரைகளோடு வீட்டுக்கு வந்தவர்களை எதிர் கொண்டவனைப் பார்த்து மீண்டும் காய்ச்சல் வரும் போலிருந்தது நிக்கிக்கு.
ஏனென்றால் அந்த வீட்டின் ஹாலில் ஆகாஷுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் ஆதன். அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வைப் பார்த்தவன், “என்னாச்சு உங்க கசினுக்கு” என ஆகாஷிடம் கேட்க,
“அவளுக்கு ஃபீவர் ப்ரோ.. அது தான் ஹாஸ்பிடல் போயிட்டு வர்ராங்க..” எனவும்,
“ஃபீவராச்சும் உண்மையா இல்ல நடிப்பா..” எனக் கிண்டல் குரலில் கேட்க, பல்லைக் கடித்தாள் நிக்கி. ஆனாலும் அவன் வந்தது மனதிற்கு சற்று இதமாக இருக்க, அதைக் காட்டிக் கொள்ளாமல் தன் அறைக்குள் நுழைந்துவிட்டாள்.
ஹாலில் ஏதேதோ சத்தங்கள் கேட்க, எதிலும் அவள் மனம் செல்லவில்லை. எப்படி அவன் வந்தான். இந்த வீடு எப்படி தெரிந்தது என யோசனையிலே இருக்க, கதவு திறந்து மூடும் சத்தத்தைக் கூட உணரவில்லை பெண்.
ஆகாஷின் அம்மா கடைக்கு செல்வதாக வெளியில் சென்றுவிட, ஆகாஷிடம் பேசி சம்மதம் வாங்கி அவனது காதல் ராணியைப் பார்க்க வந்துவிட்டான் ஆதன். உள்ளே நுழைந்ததில் இருந்து அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் வந்ததையே கவனிக்காமல் இருந்தவளைப் பார்த்து சிரிப்பு வந்தாலும், அதைக் காட்டாமல் “அப்போ நிஜமாவே உனக்கு ஃபீவர்தானா.. நீ கூட நடிச்சேன்னு நினைச்சேன்” என ஆதனின் குரலில் துள்ளிக் குதித்தவள், பயத்தில் நெஞ்சில் கைவைத்தபடி அப்படியே நின்றாள்.
அவளது பதட்டத்தைக் கவனித்து “என்னாச்சு பயந்துட்டியா.. பேய்ன்னு நினைச்சு ஒரு பேயே பயப்படுறத இப்போதான் ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறேன்.” என அவளிடம் வம்பு வளர்க்க
“எப்படி உள்ள வந்தீங்க, வெளிய அத்தை இருக்காங்க, எப்படி உள்ள விட்டாங்க முதல்ல கிளம்புங்க…” என கதவில் ஒரு கண்ணும், அவனில் ஒரு கண்ணும் வைத்து பதட்டம் சற்றும் குறையாமல் பேச,
“வந்தா வரட்டுமே எனக்கு என்ன பயமா..? நான் உன்னைப்பத்தி உண்மையை சொல்றேன். அவங்களே ஒரு நல்ல முடிவு எடுக்கட்டும்..” என சாவகாசமாக கட்டிலில் அமர, அவளோ ஆதனின் செயலில் மயக்கம் போடாத குறைதான்.
சட்டென்று அவனைத் தள்ளிக் கொண்டு கதவின் பக்கம் வந்து நின்று, “உனக்கு அறிவு இருக்கா இல்லையா.? இப்படித்தான் ஒரு பொண்ணு தனியா இருக்கும் போது பெர்மிஷன் கூட உள்ள வருவியா.?” எனக் கோபமாகக் கேட்கவும், அந்த அறையை சுற்று முற்றும் பார்த்தவன் உதட்டைப் பிதுக்க,
அவன் செய்கையில் குழம்பியவள் “என்ன” எனக் கடுப்பின் உச்சத்தில் கேட்க, “பொண்ணுன்னு சொன்னியே அதான் யாரு..? எங்க இருக்காங்கன்னு தேடினேன்..” என நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, ‘மவனே நீ இன்னைக்கு மாங்கா சட்னிடா’ என்ற டைலாக்கோடு அவன் மீது பாய்ந்திருந்தாள் நிக்கி.
சில நிமிடங்கள் இருவரும் சண்டை என்ற பெயரில் உருள, அவன் மேலே இருந்தவளின் கரங்கள் கொத்தாக அவன் முடியைப் பிடித்திருக்க, சற்றே இசகு பிசகான போஸ். ஆதன் அவளை வித்தியாசமாகப் பார்க்க, இவ்வளவு நேரம் பதிலுக்கு பதில் கத்திட்டு இருந்தவன் இப்போ என்ன அமைதியாகிட்டான்னு மேடம் யோசிச்சிட்டே அவனைப் பார்க்க, அவன் பார்வையோ பாவையின் மேனியில் வஞ்சனை இல்லாமல் பயணிக்க ஆரம்பித்திருந்தது.
அப்போதுதான் இருக்கும் நிலை அவளும் உணர, வேகமாக அவனிடமிருந்து பிரிய நினைக்க அந்தோ பரிதாபம் அவன் கரங்கள் அவள் இடையைச் சுற்றி இறுக்கியிருந்தது.
“ஏய் என்ன பன்ற விடு.. விடு.. நான் இன்னும் உன்னை லவ் பன்றேன்னு சொல்லவே இல்ல.. விடுடா..” என திமிறியவளை விடாமல் பிடித்தவன், “அப்போ சொல்லு.. நான் உங்களை லவ் பன்றேன் அத்தான்னு சொல்லு, விட்டுடுறேன்..” என மேலும் இறுக்கத்தைக் கூட்ட,
“அத்தான், சொத்தான்னு பைத்தியம் மாதிரி சொல்லிட்டு இருக்காத, அதெல்லாம் என்னால சொல்ல முடியாது, இப்போ விடறியா இல்லையா, இல்லாட்டி சத்தம் போடுவேன், அப்புறம் அத்தை வந்தாங்க உன் மானமே போயிடும்..” என அவனை மிரட்ட
அப்போ சரி நீ சத்தம் போடு. உன் அத்தை வரட்டும். என் மானமும் போகட்டும். ஆனா நீ லவ் யூ சொல்லாம நான் உன்னை விடமாட்டேன்.” என அவனும் மிரட்ட, அதிர்ச்சியில் விழி விரித்தாள்.
அதிர்ந்த விழிகளைப் பார்த்து சிரிப்புத்தான் வந்தது. அவளை மேலும் வம்பிழுப்பாதாக நினைத்து, அந்த அதிர்ந்த விழிகளில் இதழ்களைப் புதைக்க, அதோடு நிற்கவில்லை அவனது இதழ் பயணம். விழி தொடர்ந்து, கன்னம், காதுமடல், நாசி என பயணித்து, இதழ்களைத் தஞ்சமடைந்திருந்தது.
ஆதனின் செயலில் மங்கையின் விழிகள் விரிந்து கொண்டே செல்ல, ஒருக் கட்டத்தில் அவனது இதழ்கள் செய்த மாயத்தில், நித்திலத்தைக் காக்கும் சிப்பியைப் போல அவளது இமைக் கதவுகள் தானாகப் பூட்டிக் கொள்ள, முகம் முழுவதும் செந்தாமரையாக மாறிப்போனது பெண்ணவளுக்கு.
முதல் முத்தம்.! காதலின் முதலீடு.! உதடுகளின் மௌனமொழி.! உயிர்களின் உணர்வு மொழி.! முப்பால் உலகப் பொதுமறை.! முத்தம் உயிர்களின் பொதுமறை.!
காதலில் சத்தம் சாதிக்காததை முத்தம் சாதிக்கிறது.!
இருவருமே அந்த நேர இனிமையை அனுபவிக்க, முதலில் சுயம் உணர்ந்தது ஆதன் தான். “நித்து..” என அவள் காதில் முணுமுணுக்க,
“ம்ம்” என்று அவளும் முனக,
“லவ் யூ சொல்லுடி..” என கிறக்கமாகக் கேட்க,
“ம்ஹ்ம்ம்” என ‘மாட்டேன்’ என்பது போல் தலையை ஆட்ட,
“அப்போ நான் கிஸ் பண்ணிட்டே இருப்பேன், உனக்கு ஓகேன்னா எனக்கும் ஓகேதான்..” என, அவள் மனதை அறிந்துவிட்ட விசமக் குரலில் சொல்ல,
“ம்ம்.. ம்ம்ம் சொல்ல மாட்டேன்.. ஆனா அதுதான்..” என்றவள் ஆதன் அசந்த நேரம் பார்த்து, அவனைத் தள்ளிவிட்டு வெளியில் ஓடியிருந்தாள்.
அப்போது ஹாலில் இருந்த ஆகாஷ் “என்ன மேடம் எல்லாம் ஓக்கே வா.. என் லைன் கிளியர் தான.”
“அடேய் உன் லைன் கிளியர் ஆகனும்னு இப்படி செஞ்சியா..” என கோபமாகக் கேட்க,
“அடிங்க்.. பல்லைத் தட்டி கையில கொடுத்துடுவேன். என்ன பேச்சு பேசுற, கொழுப்பு கூடிப் போச்சு.. பாவமே நாம பார்த்து வளர்ந்த புள்ள, லவ் வந்தது கூடத் தெரியாம கஷ்டப்படுதேன்னு நினைச்சு உனக்கு ஹெல்ப் பண்ணா எவ்வளவு கொழுப்பு உனக்கு..” என வார்த்தைகளைக் கடித்துத் துப்ப,
“ஹீ ஹீ.. சாரி சாரி அத்தான்.. ப்ளீஸ் ப்ளீஸ்… ஏதொ ஒரு ஃப்லோவல வந்துடுச்சு. இனி இப்படி பேசமாட்டேன். மம்மி ப்ராமிஸ் அத்தான்..” என ஆகாஷிடம் கெஞ்ச, இருவரையும் வேடிக்கைப் பார்த்த மாதிரி வந்து அமர்ந்தான் ஆதன்.
“நீங்க சொல்லுங்க ப்ளீஸ்.. நான் சும்மா, விளையாட்டுக்கு..” என ஆதனை துணைக்கு அழைக்க,
“நானா இருந்திருந்தா சொல்லிட்டு மட்டும் இருந்திருக்க மாட்டேன், இந்நேரம் வாய் உடைஞ்சிருக்கும்..” என ஆதன் பட்டென்று சொல்ல,
“போங்கடா.. நீங்களும் உங்க கன்றாவி காதலும். எனக்கு இந்த லவ்வே வேண்டாம் போய்யா..” என ஆதனைப் பார்த்து பழிப்புக் காட்டியவள் கிச்சனுக்குள் நுழைந்து விட்டாள்.
அவள் சென்றதும் இரு ஆண்களும் விழுந்து விழுந்து சிரித்தனர். பின்பு ஆகாஷின் கையைப் பிடித்த ஆதன் “தேங்க்ஸ் ஆகாஷ்.. ரொம்ப தேங்க்ஸ்..” எனவும்,
“எனக்கு எதுக்கு தேங்க்ஸ்.. நீங்க தேங்க்ஸ் சொன்னா அவ சொல்லிட்டுப் போனது உண்மையாகிடும் இல்லையா. சோ அதெல்லாம் வேண்டாம். அவளை நல்லா பார்த்துக்கோங்க அது போதும். எங்க மாமா அதான் நிக்கியோட அப்பா அவருக்கு இந்த லவ் எல்லாம் பிடிக்காது. அதோட நானும் ஹெல்ப் பண்ணுவேனான்னு கேட்டா கண்டிப்பா செய்ய மாட்டேன். உங்க லவ் நீங்க தான் காப்பத்திக்கனும்..” என ஆகாஷ் சொல்லும் போதே மூவருக்கும் காஃபியோடு வந்தாள் நிக்கி, அவளைப் ஆதன் பார்த்து புருவத்தை உயர்த்தினாலும், அதற்கு மேல் எதுவும் சீண்டாமல் காஃபியைக் குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டான்.
நிக்கி சென்னையில் இருந்தவரை மூன்று நாட்களூக்கு ஒருமுறை என அவர்களது மீட்டிங்க் நடந்து கொண்டிருந்தது. நிக்கியை அழைத்து வருவது மட்டும் ஆகாஷின் வேலை. இப்படியே இருக்க, அவள் சேலம் கிளம்பும் நாளும் வர, இனி அவனை நினைத்த நேரம் பார்க்க முடியாதே என உண்மை உரைக்க அப்போதுதான் காதலின் வீரியமும் புரிந்தது பெண்ணுக்கு.
பிழிய பிழிய அழுதுக் கொண்டே விடை கொடுத்தாள் ஆதனுக்கு. அதன் பிறகு போனில் மட்டுமே அவர்களது காதல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் இங்கு வருவான், இப்படி ஒரு குடும்ப ஒய்ன்னனி இருக்கும் என்றெல்லாம் நிகிதா யோசிக்கவே இல்லை.
ஆனால் இப்போது வீட்டில் அவளுக்கும் ஆகாஷிற்கும் திருமணம் செய்யலாம் என முடிவு செய்துவிட, என்ன செய்வது என புரியாமல் குழம்பி அவனிடம் சண்டைப் போட்டு வைத்திருக்கிறாள்.
தனக்கும் ஆதனுக்கும் இடையில் நடந்ததை ஆரணியிடம் சொல்லி முடித்துவிட்டு பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள் நிகிதா.
ஆனால் ஆரணியோ தன் கையில் இருந்த பிரியாணியை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருந்தாள். சரி சாப்பிட்டு முடித்து பேசுவாள் என அந்த பாவமான முகத்தை மாற்றாமல் அப்படியே இருக்க,
“அடச்சே.. இதெல்லாம் ஒரு லவ் ஸ்டோரின்னு இவ்வளவு நேரம் உக்காந்து நானும் கேட்டுருக்கேன், இப்படி ஒரு மட்டமான லவ் ஸ்டோரியை நான் கேட்டதே இல்ல. என் டைமை வேஸ்ட் பண்ணத கூட நான் தாங்கிக்குவேன். ஆனா இந்த மொக்க லவ் ஸ்டோரிக்கு இந்த ரைட்டரக்கா மூனு எபிசோட் இழுத்துச்சுப் பாரு அதைத்தான் என்னால தாங்க முடியல” என்ன தோழியை வம்பிழுக்க,
“பக்கி, பரதேசி அடுத்து என்ன நடக்குமோன்னு நானே பயந்து போயிருக்கேன், உனக்கு நக்கலு. இன்னைக்கு உன்னைக் கொல்லாம விடமாட்டேன்டி.” என்று ஆரணியைத் துரத்த ஆரம்பித்திருந்தாள்.