வர வர காதல் கசக்குதைய்யா – 25
“ஆரு..”
“ம்ம்ம்..”
“ஆரு..”
“ம்ம்ம்”
“ஆரும்மா..”
“ம்ம் சொல்லுங்க மாமா”
“மாமா இந்த வார்த்தை இன்னைக்குத்தான் மகாராணி வாயில இருந்து வரிசையா வருது.. இல்லையா.?” என்றுக் கேட்டவனின் குரலில் இதுவரை இருந்த இரக்கம் மறைந்து, இறுக்கம் வந்திருந்தது.
அந்தக் குரலில் தெரிந்த சின்ன ஒதுக்கத்தைக் கூட உடனே கண்டு கொண்டவள் “அது அதுவந்து” என திணற
“என்ன வந்து போயின்னு.. சொல்லு என்ன வந்து போயின்னு கேட்கறேன்..” என அவள் தோளைப் பிடித்து அழுத்தியவன், “எத்தனைப் பிரச்சினை தெரியுமா.? எவ்வளவு பிரசர் தெரியுமா.? ஆதன் ஒருபக்கம் ஃபீல் பண்ணிட்டு இருக்கான், நிக்கி அவளும் எந்த ரெஸ்பான்ஸும் கொடுக்கல, இவங்களைப் பார்த்து அம்மா ஃபீல் பன்றாங்க. நீ பேசலன்னு அம்மத்தாவும், அப்புச்சியும் புலம்புறாங்க, உங்க அம்மா வேற என்னைப் பார்த்தாலே முகத்தைத் திருப்புறாங்க.. வொர்க் ப்ரசர் வேற, நான் என்ன பண்ணேன் சொல்லுடி.. எல்லார் பிரச்சினையும் எங்கிட்ட தான் வந்து விடியுது.”
“உங்கிட்ட சொல்லக்கூடாதுன்னு எல்லாம் இல்லடி, பிரச்சினை எல்லாம் ஓரளவுக்கு சரியானதும் சொல்லிடலாம்னு தான் நான் நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள இந்த தாத்தா மொத்தமா சொதப்பிட்டார், அப்படியே நிக்கியோட பேரன்ட்ஸ் வரவும் எல்லாம் மாறிடுச்சு.” எனக் கோபமாக ஆரம்பித்து பாவமாக முடிக்க,
அவனது பாவமான முகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தாலும், வெளியேக் காட்டிக் கொள்ளாமல் முகத்தை இன்னும் கொஞ்சம் விரைப்பாக வைத்துக் கொண்டு “ஓ..” என்று மட்டும் சொல்ல, புஸ் என்றானது ஆதித்யனுக்கு.
அதில் கடுப்பானவன் “என்னடி.. இவ்வளவு நீளமா பேசியிருக்கேன், ஒரு ‘ஓ’போட்டு எல்லாத்தையும் முடிச்சிட்ட எனக் கேட்கவும்,
“வேற என்ன செய்யனும்.. நீங்க என்ன செஞ்சாலும் நான் சரின்னு சொல்லிட்டு இருக்கனுமா.? அது என்னால முடியாது. உண்மையா சொன்னீங்களோ, விளையாட்டுக்கு சொன்னீங்களோ ஆனால் நீங்க என்னை லவ் பண்ணலன்னு சொன்னீங்க, அது எனக்கு எவ்வளவு ஹர்ட்டாகிருக்கும். அதெல்லாம் உங்களுக்கு புரியலையா..” என மூக்கு விடைக்க கோபமாகக் கேட்கவும்,
“ஏய்.. லூசி. லூசு மாதிரி பேசாதடி. நீ தான் அதை நம்பவே இல்லையே குட்டி..” என அவள் பேசுவதற்கு எல்லாம் விழி பிதுங்கினான் மன்னவன்.
“நான் நம்பலன்னு உங்களுக்கு எப்படி தெரியும். நீங்க என்ன செஞ்சாலும், உங்க பின்னாடியே சுத்தவும்தான இப்படியெல்லாம் பேசுறீங்க..” என பெண்ணவள் மெல்ல விசும்ப ஆரம்பிக்க, முன்னே போனால் முட்டுகிறாள், பின்னே போனால் உதைக்கிறாள் அவனும் தான் என்ன செய்வான் பாவம். உண்மையிலேயே சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கத்தான் வைத்தாள் அந்த பெண்ணவள்.
இதற்கு மேல் இவளைப் பேசவிட்டால் என் வாயாலையே எல்லாத் தப்பும் நான் தான் செஞ்சேன்னு சொல்ல வச்சிருவா போலயே என யோசித்தவன், நொடியில் அந்த வேலையை செய்திருந்தான்.
தன் மடியில் இருந்தவளை பின்னோடு இறுக்கமாகக் கட்டிக் கொண்டவன், பின் கழுத்தில் அழுத்தமாக இதழைப் புதைக்க, அதில் மொத்தமாக சுயம் தொலைத்தவள், அப்படியே பின்வாக்கில் அவனின் மார்பில் சாய்ந்திருந்தாள் பெண்.
உதடுகள் லேசாக விரிய, “ம்ம்.. மாமா நான் கோவமா இருக்கேன்.” என மெல்ல முணுமுணுக்க
“ம்ம்.. இருந்துக்கோ குட்டி.. அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்.. அது வேற டிபார்ட்மென்ட், இது வேற டிபார்ட்மென்ட்” என்றவன் தன் வேலையை இப்போது காது மடலில் தொடர, சில நொடிகள் அதை உள்வாங்கி ரசித்தவள், இருக்கும் இந்த இடத்தின் தனிமை மேலும் இருவருக்குமான தாபத்தை அதிகரிக்கும் என உணர்ந்து அவன் சுதாரிக்கும் முன் தள்ளிவிட்டு, எதிரில் இருந்த நாற்காலியில் அம்ர்ந்தாள்.
இரசித்து ருசித்து ஒர் சாக்லேட் சாப்பிடும் குழந்தையின் கையில் இருந்து அதைப் பறித்தால், அதன் நிலை என்ன.? அந்தக் குழந்தை எப்படி ஏமாற்றமடையும். அதே போல்தான் இப்போது ஆதித்யனின் நிலையும்.
“ம்ச்.. ஏன்டீ..” என்ற ஏமாற்றமாகக் கேட்க, “என்ன ஏன்டீ.. நீங்க இன்னும் என்னை சமாதானம் செய்யவே இல்ல. அப்படி இருக்கும் போது ஓவர் டச்சிங்கு, ஓவர் கிஸ்ஸிங்கா போகுது. என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு.? கிஸ் கொடுத்து சமாதானம் செய்றீங்கன்னு நினைச்சா, அதுவும் இல்ல..” என அவள் கடுகடுக்க, மீண்டும் சொதப்பியது புரிய, பாவமாக அமர்ந்துவிட்டான் அந்த ஆறடி ஆண்மகன்.
‘இந்த அக்ரி பத்தி ஆயிரம் ஆர்ட்டிகிள் எழுதுறதுக்கு, பேசாம ‘காதலில் சொதப்புவது எப்படின்னு’ நானே ஒரு புக் எழுதலாம் போல, அவ்வளவு சொதப்புறேன் ஈஸ்வரா’ எனத் தன்னைத் தானே நொந்துக் கொண்டவன், அவளைப் பார்க்க காளிதேவியின் அவதாரமாகத்தான் தெரிந்தாள் அவன் கண்ணுக்கு.
ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், சற்று முன்னே வந்து அவள் கைகளைப் பற்றி “வெரி சாரி ஆரும்மா.. முழுசா எல்லாம் பேசிடுறேன், அதுக்குப் பிறகு நம்ம சண்டையை முடிச்சிக்கலாம். அப்புறம் பாரு மாமா உன்னை எப்படியெல்லாம் கன்வின்ஸ் பன்றேன்னு..” என விழி சிமிட்டிச் சிரிக்க,
“க்கும்.. இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல..” என அவளும் உதடு சுழித்துச் சொல்ல, இருவருக்கும் சற்று முன்னர் இருந்த நிலை மாறியிருந்தது.
அது கொடுத்த நிம்மதி “சரி சொல்லுங்க, அப்பா உங்களைப் பார்க்க வந்த பிறகுதானே மாமாவும் அத்தையும் இங்க வந்தாங்க. அப்பா வந்து உங்ககிட்ட என்ன சொன்னார்.?” என எடுத்துக் கொடுக்க,
“ம்ம்.. நாங்க ஃபர்ஸ்ட் டைம் வரும் போதே தாத்தா ஓவர் ரியாக்ட் பண்ணி எல்லாத்தையும் அன்னைக்கு சொதப்பிட்டாரு, மாமா போலிஸ் இல்லையா, இது தாத்தாவோட ப்ளான்னு ஈசியா கண்டுபிடிச்சிட்டார். எங்கிட்ட பேசும் போது அதைப்பத்தி சொல்லல, ஆனா அவர் பேசினதை வச்சு நானே தெரிஞ்சிக்கிட்டேன்.” என்றவன் பாண்டியன் வந்து போன நாளை கண்முன் கொண்டு வந்தான்.
அன்று கல்லூரியில் மதிய உணவின் நேரம் ஆசிரியர்கள் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, பியூன் வந்து ”சார் உங்களைப் பார்க்க ஒரு போலிஸ்காரர் வந்துருக்கார்.. பிரின்சிபல் ரூம்ல இருக்கார். உங்களை அழைச்சிட்டு வர சொன்னாங்க..” என ஆதித்யனைப் பார்த்துச் சொல்ல, புருவத்தைச் சுருக்கிய ஆதித்யனின் முகத்தில் பளிச்சென்ற புன்னகை ஒன்று உதயமானது. வந்திருப்பது யாரென்று நொடியில் யூகித்தவன் “எஸ்.. வர்ரேன்னு சொல்லுங்க..” எனப் பதிலளித்து, உணவை மூடிவிட்டு பிரின்சிபல் அறை நோக்கி நடந்து விட்டான்.
“மே ஐ கமின் சர்..” என்றவனை “எஸ்.. கமான் ஆதித்யன்..” என வரவேற்ற ப்ரின்சிபல் ராஜதுரை, எதிரில் இருந்த பாண்டியனிடம், “இவர் மிஸ்டர்.ஆதித்யன். ரெசிடென்ட் லெக்சர். அக்ரில பிஎச்டி முடிச்சிட்டு, சென்னை ப்ராஞ்ச் தமிழ்நாடு அக்ரி யுனிவர்சிடில வொர்க் பன்றார். இப்போ நம்ம காலேஜ் விசிட்டிங்க்ல வந்துருக்கார். திறமையான பையன்.” எனப் புகழ்ந்துவிட்டு, “இவரைத்தான் நீங்க பார்க்க வந்துருக்கீங்க..” எனவும் சேர்த்து சொல்ல,
சிறு புன்னகையுடன் “ஹாய் அங்கிள்” எனப் பாண்டியனிடம் கை குலுக்கினான் ஆதித்யன். “சார் சொல்ற மாதிரி எல்லாம் இல்ல அங்கிள். அப்பாவுக்கு விவசாயம் தான் ரொம்ப இஷ்டம். ஆனா அவரால அதை செய்ய முடியல, அவர் இந்த விவசாயம் பத்தி பேசிட்டே இருப்பார். அதைக் கேட்டு கேட்டே எனக்கு ஆர்வம் வந்துடுச்சு. நா ஆர்வமா செய்றதுனால இந்த வேலை எனக்கு ரொம்பவே விருப்பம்..” என விரிந்த புன்னகையுடன் பதில் கொடுக்கவும், அதுவரை ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்த பாண்டியன் முகத்திலும் ஒரு திருப்தி வந்தமர்ந்தது.
“ஓக்கே ஆதித்யன், பாண்டியன் சார் நம்ம காலேஜ் தான் ஓல்ட் ஸ்டூடன்ட். அவர் உங்களோட பெர்சனலா பேசனுமாம், போய் பேசிட்டு வாங்க…” என சொல்ல,
“ஓ..” என நெற்றி சுருக்கியவன், சில நொடிகளில் “எஸ் சார்..” என அவருக்குப் பதில் அளித்துவிட்டு, “வாங்க அங்கிள்” என பாண்டியனை அழைத்துக் கொண்டு கேண்டினின் பக்கம் நடந்தான்.
இருவருக்கும் காபியை வாங்கி வந்து அவருக்கும் கொடுத்தவன், “சொல்லுங்க அங்கிள், பாட்டிம்மா எப்படி இருக்காங்க..” என பேச்சை ஆரம்பிக்க, ஆதித்யன் வந்ததில் இருந்து அவனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார் பாண்டியன் ஆராய்ச்சியாக.