சரணடைந்தேன் – 27
காற்றினிலே கலந்துவரும் கார்குயிலின் கானம்போல்
காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி..
தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூயநிலா ஒளியைப்போல்
பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ணவிழி…
சிதறி வரும் சிரிப்பில் முத்துத்தெறிக்கும்..
சிரிக்கும் அந்த வெள்ளிமீன் உள்ளம் பறிக்கும்
ஏங்குதம்மா நெஞ்சம்.. ஏந்திக் கொண்டு பாட
இசை ஏங்குதம்மா நெஞ்சம்..
ஏந்திக் கொண்டு பாட
கையில் என்றுவரும் பிள்ளைநிலா நீ கூறடி..
அம்மா சொன்ன ஆரிராரோ
சொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடி
ஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்
மாஞ்செடி.. பூந்தேனடி
*********************
“பாலா அங்க எந்தப் பிரச்சினையும் வந்துடாதே.. சின்னப் பிள்ளைங்கள நம்பி விட்டுருக்கோமேன்னு கொஞ்சம் யோசனையா இருக்கு.. ஊருக்கு வந்ததும் குலதெய்வ கோவிலுக்கு பூஜைக்கு கொடுக்கனும்.” என்றார் நாச்சியார் வீட்டின் பெரியவராக,
“அத்தை அதெல்லாம் பசங்க சரியாதான் செய்வாங்க. நீங்க கண்டதையும் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காதீங்க. எல்லம் எடுத்து வச்சிட்டேன். மணியை வர சொல்றேன். அவ சொல்ல சொல்ல எல்லாம் சரியான்னு மட்டும் பார்த்துடுங்க. நான் மாமா கூட போய் நகையை மட்டும் லாக்கர்ல இருந்து எடுத்துட்டு வந்துடுறேன். எல்லாருக்கும் ஒரு செட் போதும் தானே அத்தை. இல்ல வேற எதுவும் எடுக்கனுமா..? என்ற மருமகளிடம்
“இன்னும் எங்கிட்டத்தான் கேட்பியா, மூனு பேருக்கு என்ன வேனுமோ பார்த்து எடுத்துட்டு வா.. இங்க நான் பார்த்துக்குறேன். நீ போயிட்டு வா. அபிக்கு சொன்ன நகையெல்லாம் ஆசாரி எப்போ கொண்டு வருவார். அவர் வர நேரம் நீ இல்லாம போகனுமா.? அவருக்கிட்ட ஒரு வார்த்தை எப்போ வரார்ன்னு கேட்டுட்டு போயிட்டு வந்துடு. புடவை பேக்லாம் இப்பவே கார்ல எடுத்து வைக்க சொல்லிடு ட்ரைவர்கிட்ட.” என மருமகளிடம் பேசியவர்,
மகனிடம் “பாலா, வெற்றி வாங்க சொன்ன நிலம் பத்தி விசாரிச்சியா.? முதன்முதலா இந்த வீட்டுக்கு வர மருமகளுக்கு வாங்குறோம் கூட குறை ஆனாலும் பரவாயில்லை வாங்கிடலாம். பணம் எப்படி கொடுக்கனும்னு மட்டும் ஆடிட்டர்கிட்ட பேசிட்டு கொடு..” என்றார்.
“நீங்க சொல்லனுமா ம்மா.. புகழ் ஏற்கனவே நல்லா விசாரிச்சிட்டான். சுத்திப் பார்த்தா நமக்கு சொந்தம் தான் அவங்க. அப்பாவையெல்லாம் அவங்களுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. பேசி முடிச்சிடலாம். நாங்க போயிட்டு வந்துடுறோம்.” என்றவர், மனைவியை அழைக்க
“இதோ பார் மம்மி, அங்க வந்து புடவைக் கட்டு, நகையைப் போடு சொன்னா நான் செய்ய மாட்டேன். எனக்கு சோழிதான் பெஸ்ட். அதையேப் போட்டுக்குறேன்..” என தாயிடம் கத்திக் கொண்டே மொழி வர,
“ரெண்டு மருமகளுங்கள கூட மேச்சிடுவா உன் பொண்டாட்டி. ஆனா உன் மகள மேய்க்குறது தான் கஷ்டமே. பாரு எப்படி கத்திட்டு வர்ரான்னு. இவளாலயே வனிதா பாதி இழைச்சிட்டா..” என பாலனிடம் சொல்லிச் சிரிக்க,
“ஆமாம்மா.. நாம எல்லாரும் வனிதா சொல்றதைக் கேட்டுப் பழகிட்டோம். இவ மட்டும் தான் எதிர்த்துப் பேசியிருக்கா. விடுங்க இப்படி ஒரு ஆளூ இல்லன்னா உங்க மருமகளை கையிலப் பிடிக்க முடியாது..” என அவரும் சிரிக்க
“பாவம் பாலா.. எப்படியெல்லாம் பேசுறா தெரியுமா.? அவ கேட்குற ஒரு கேள்விக்கு கூட இவளால பதில் சொல்ல முடியல, ப்பேன்னு விழிக்குறா.. நீயே பாரு.. எவ்ளோ பேசுறான்னு. ஒத்த பொம்பள புள்ளன்னு நாம எல்லாம் செல்லம் கொடுக்குறோம். அவ அதை தனக்கு சாதகமா வச்சிக்கிட்டு வனிதாவைப் போட்டுத் தாழிக்குறா.. வெற்றி பார்த்தா இவளை சும்மா விடமாட்டான். அவன் இல்லாத தைரியம் அதான் புள்ள இந்த போடு போடுறா..” என பேசிக்கொண்டிருக்கும் போதே
“ஆச்சி இந்தம்மா பாருங்க என்னை சாரி கட்ட சொல்றாங்க. நான் சின்ன பிள்ள தானே. வேண்டாம்னு சொல்லுங்க ஆச்சி..” என தாஜா செய்ய ஆரம்பித்தாள்.
“அத்தை நீங்களாச்சு அவளாச்சு.. என்னமோ பண்ணுங்க, நாங்க போயிட்டு வந்துடுறோம்..” என கணவன் மனைவி இருவரும் கிளம்பிவிட
“மணி என்ன வர வர உன் சேட்டை அதிகமாகிட்டேப் போகுதே. வெற்றிக்கிட்ட சொல்லட்டா..” என மிரட்ட
“அய்யோ.. ஆச்சி சொல்லாதீங்க ஆச்சி. எனக்கு பயந்து பயந்து வருதே..” என பாவமாகச் சொல்லிவிட்டு கலீரென்று சிரிக்க,
“போக்கிரி எல்லாரும் கொடுக்குற செல்லம். அதான் இந்த போடு போடுற.. சரி வா இதை மட்டும் சரி பார்த்துடுவோம்.. அம்மா வந்தா டென்சன் ஆவா” என வேலைகளை ஆரம்பித்தார்.
“ஏங்க நீங்க கவனிச்சீங்களா..? மங்கை சரியே இல்லை. எதோ மறைக்கிற மாதிரி இருக்கு. ரெண்டு பேரும் பேசுறதே சரியில்ல. அதுவும் மங்கை எங்கிட்ட ரொம்ப நேரம் பேசுறதே இல்ல. பேசினா கண்டுபிடிச்சிடுவேன்னு பயப்படுறாளோ.. அங்க ஒன்னும் தப்பா இருக்காதேங்க. என்னமோ மனசே சரியில்ல. அத்தை முன்னாடி சொன்னா அவங்களூம் பயந்துடுவாங்கன்னு சொல்லல. நீங்க புகழ்கிட்ட கேட்டு பாருங்களேன்.” காரில் போய்கொண்டேத் தன் பயத்தை வனிதா சொல்ல
“அப்படியெல்லாம் இருக்காது வதா. நீயே கண்டதையும் யோசிக்காத. சொல்லாம மறைக்கிறாங்கன்னா கெட்டதா தான் இருக்கனுமா.? நல்லதா கூட இருக்கலாம். எப்படி இருந்தாலும் ரெண்டு நாள்ள போய் பார்த்துட போறோம். அப்புறம் என்ன.? இத்தனை பேர் இருக்கோம் தப்பா நடக்க விட்டுருவோமா..? பார்த்துக்கலாம் விடு.” என தைரியம் சொல்ல, அதில் வனிதாவும் சற்றுத் தெளிவுப் பெற்றார்.
“என்னங்க அப்பா புகழ் கூட வந்துடுவார் தானே. இந்த திரு தனியா இருந்துக்குவானா.? அண்ணி கேட்டாங்க. நான் உங்களைப் பேச சொல்றேன்னு சொல்லிட்டேன். பேசுனீங்களா..?”
“அதெல்லாம் அவன் இருந்துக்குவான். சுபி பேசினா, நான் சொல்லிட்டேன். அவங்க நைட் வந்துடுவாங்க. ரெண்டு பேரும் வந்து உன்னைத்தான் கேள்வி கேட்பாங்க. எப்படி ஒத்துக்கிட்டீங்கன்னு, நீ அம்மாவைக் கை காட்டிரு. நீ பேச, அவங்க பேச, வீணா பிரச்சினை தான் வரும் சரியா..?
“அத்தையும் அதுதான் சொன்னாங்க. என்னை என்ன சொல்லப் போறாங்க. சொன்னாலும் சொல்லிட்டுப் போறாங்க. இத்தனை வருஷத்துல அவங்க என்னை ஒன்னுமே சொன்னது இல்ல. இப்போ நம்ம வீட்டுல நடக்குறது அப்படி. அதனால் பேசுறாங்க. பேசட்டும், நானும் கேட்டுக்குறேன்.”
“இந்த வதாவைத் தான் நான் மிஸ் பண்ணேன். என் பொண்டாட்டி எப்படிபட்ட தங்கம்ன்னு என்னைத் தவிர வேற யாருக்கும் தெரியாது.”
“ஆஹான் ஐஸ்… ஐஸ் எல்லாம் இப்போ நான் சாப்பிடுறது இல்ல மாமா..” என இருவரும் நெடு நாட்களுக்குப் பிறகு சிரித்துப் பேசியபடியே வேலைகளைத் தொடர்ந்தனர்.
இங்கு வெற்றியோ “என்னடா இது சாப்பிட்ட எல்லாத்தையும் மொத்தமா வாமிட் பண்ணிட்ட, வயித்துல ஒன்னுமே தங்கலையே..” என வாஷ்பேஷனில் குடலே வெளிவருமளவுக்கு வாந்தி எடுத்த மனைவியின் தலையை இரண்டு பக்கமும் பிடித்துக் கொண்டே கேட்க,
“இந்த நேரம் எல்லாருக்கும் இப்படித்தான் இருக்கும் மாமா.. சரியாகிடும். நீங்க ஏன் சாப்பிடாம எழுந்துட்டீங்க. போங்க போய் சாப்பிடுங்க. நான் இப்போ வர்ரேன்..” என முகத்தைக் கழுவப்போக,
“இப்ப நான் சாப்பிடாதது தான் பெரிய பிரச்சினையா..? கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு பேரும் சாப்பிடலாம்..” என்றவன் அவளைத் திருப்பி, முகத்தைத் துடைத்துவிட்டு, தோளில் சாய்த்தப்படியே படுக்கையறைக்கு அழைத்துச் சென்றான்.
“ஏன் மாமா உங்களுக்கு வருத்தமா இருக்கா.? வீட்ல சொல்லாதது.” என்ற மனைவியை சேரில் உட்கார வைத்தவன், “அப்படியெல்லாம் இல்லடா.. சொல்லாம இருக்குறது எனக்கு மட்டும் தானா கஷ்டம், உனக்கும் தானே. நீ அம்மாவை எவ்வளவு தேடுறன்னு எனக்குத் தெரியாதா..? இல்லை என்னால புரிஞ்சிக்க முடியாதா..? டூ டேஸ் தானே. அப்புறம் உங்க அத்தை வந்ததும் உன்னைப் பிடிக்க முடியாது. என்னை சுத்தமா கண்டுக்க மாட்ட.. மணி கூட வளர்ந்துட்டா. நீ இன்னும் வளரவே இல்லையே பேபி..” என மனைவியை வம்பிழுத்தபடியே தன் நிலையை சொல்ல,
“ம்ம்…. நாம எக்ஷ்பெக்ட் பண்ணவே இல்லயில்ல. பேபின்னு கன்ஃபார்ம் ஆச்சுன்னா உங்ககிட்ட எப்படியெல்லாமோ சொல்லலாம்ன்னு நெறைய யோசிச்சு வச்சிருந்தேன். ஒரு மயக்கம் வந்து என் டோட்டல் ப்ளானையும் சொதப்பிடுச்சு.. ம்ம்ச்ச்” என சலிக்க
“ஹா..ஹா..” என் சிரித்தவன், “அதனால என்ன வனிக்குட்டி, நாம என்ன இந்த ஒரு பேபியோடவா நிறுத்தப் போறோம். அடுத்த பேபிக்கு உன் ப்ளானை எக்ஸ்கியூட் பண்ணு. ஆனா எனக்குத்தான் ஒரு சின்ன வருத்தம் வனிம்மா. உங்க அத்தை சொன்னது போல, அவங்க கொடுத்த டைம்ல தீயா வேலை செஞ்சிருக்கோமே. பேபி பிறந்ததும் உன்னை காலேஜுக்கு அனுப்பிடுவாங்களா. உங்க அத்தை வேண்டாம்ன்னு சொன்னாலும். இந்த புகழ் பையன் விடமாட்டேனே. உன்னை கொண்டு போய் க்ளாஸ் ரூம்ல விட்டுட்டு வந்து தான் மறு வேலையே பார்ப்பான். அவன் தான் எனக்கு எதிரியே..”என சோக கீதம் வாசிக்க, மங்கை வாய்விட்டுச் சிரித்தாள்.
மனைவியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவன், “சிரிக்காதாடி.. என் கவலை உனக்கு சிரிப்பா இருக்கா.. உனக்கு நல்லா பழகிட்டேனா..? நீ இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கும்..” என மீண்டும் அதிலேயே நிற்க,
“மாமா.. என்ன மாமா நீங்க.. சின்னப்பிள்ள மாதிரி. ரெண்டு வருஷம் முழுசா இருக்கு மாமா. நான் போக. என்னம்மோ நாளைக்கே குழந்தைப் பிறந்து அடுத்த பனாளே என்னைக் கொண்டு போய் காலேஜ்ல விடுற மாதிரி பேசுறீங்க.. அது நடக்கும் போது நடக்கட்டும். இப்போ இருக்குற இந்த இதமான சூழ்னிலையை ஏன் கெடுக்கனும், ஆமா அன்னைக்கு ரொம்ப பயந்துட்டீங்களா..” என அன்றைய நாள் நினைவில் சிரிக்க,
“ம்ம் சிரிடி, நல்லா சிரிடி அன்னைக்கு விழுந்து கிடந்த உன்னைப் பார்த்ததும் எனக்கு உயிரே இல்லைத் தெரியுமா.?” என்றவனின் நினைவுகள் அந்த நாளை நோக்கிப் பயணித்தது.
அன்று புகழிடம் பேசிக் கொண்டிருந்தவனின் காதில் ‘மாமா’ என்ற மங்கையின் அலறல் கேட்க, இவனும் அரண்டடித்துக் கொண்டு ஓட, அவளோ மெத்தையில் ஒரு காலும், கீழே ஒருக்காலும் என குப்புற விழுந்திருந்தாள்.
“வனி.. வனி..” என எழுப்பியவன் அவளிடம் அரவம் இல்லை என்றதும், “வனிமா.. என்னடி இது..?” என்று அவளைத் திருப்பியவன், தண்ணீர் தெளிக்க, அதில் விழித்தவளின் பார்வையில் விழுந்தது பரிதவிப்புடன் அமர்ந்திருந்த கணவனின் முகமே.
ஒன்றும் புரியாமல் “என்ன மாமா.. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க. எனக்கு என்ன..? நான் நல்லாத்தானே இருக்கேன்..” எனவும்
“லூசாடி நீ.. எதுக்கு கத்தின, எதுக்கு இப்படி மயங்கி விழுந்த..? ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா.? என்னடி செய்து.? எங்கிட்ட எதுவும் மறைக்கிறியா..?” எனக் கேள்விகளால் அடுக்கியவனை, ஆச்சர்யமாகப் பார்த்தாள் மங்கை.
“மாமா எனக்கு ஒன்னும் இல்ல.. ஒன்னுமே இல்ல.. வெளிய இருந்து ஓடிவந்தேனா.. காலுக்கடியில எதுவோ ஓடிச்சு. பூனைன்னு நினைக்கிறேன். அப்படியா ஷாக்காகி கத்திட்டேன். அந்த ஷாக்ல அப்படியே மயங்கிட்டேன். ஆனா மயக்கம் அதனால இல்லன்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு கெஸ் இருக்கு. மார்னிங்க் வரைக்கு அதுக்கு வெயிட் செஞ்சி பார்க்கனும்..” என் நீண்ட விளக்கம் கொடுக்க,
“இதுக்குத்தான் படிச்சி படிச்சி சொன்னேன். இந்த பூனை நாயெல்லாம் வளர்க்க வேண்டாம்ன்னு ரெண்டு பேரும் கேட்டீங்களா.. இப்போ பாரு..” என அவளைத் திட்டியவன், “ஆமா அதென்ன மயங்கி விழுந்ததுக்கு ஒரு காரணம் சொல்ற. உனக்குத் தெரியுமா..? என்ன பெருசா தெரியப் போகுது.. சரியா சாப்பிடாம மயக்கம் வந்துருக்கும்..” எனக் கடுப்படிக்க
“ஓய்,, மாம்ஸ்.. நான் டாக்டர் தெரியுமில்ல, இந்த மயக்கம் நமக்கு ப்ரோம்ஷன் கொடுக்குறதா கூட இருக்கலாம். என்னோட கெஸ் தான். அது இல்லாமலும் இருக்கலாம். சும்மா பயத்துல வந்த மயக்கமா கூட இருக்கலாம்..” என சிரிப்புடன் பேச
மனைவி பேசியதில் சட்டென அவனுக்கு அனைத்தும் புரிய, “வனிம்மா..” என அவளை அப்படியே கட்டிக்கொள்ள, “மாமா இது கெஸ் தான். நாளைக்கு ஒன்னுமில்லாம கூட போகலாம்..” என அவன் மார்பில் உதடுரச சொல்ல
“அப்படி சொல்லாத, அதேதான் எனக்கு நிச்சயமா தெரியும். இந்த மந்த் உன்னோட பீரியட்ஸ் வரவே இல்ல. இப்போதான் எனக்கு எல்லாமே புரியுது,,” என் அவளை மேலும் இறுக்கிக் கொள்ள
“எப்படித் தெரியும் உங்களுக்கு..? நோட் பண்ணீங்களா..?” என அவன் சட்டையைத் திருக,
“ம்ம்ம்.. டேட் ஃபிக்ஸ் பண்ண நானும் போனேன். அப்போதான் ஒரு டேட் சொல்லி இதுவே ஓகேன்னு ஆச்சி சொன்னாங்க. ஐயரும் பொண்ணுக்கு சௌரியமான்னு கேட்டீங்களான்னு கேட்டார். கேட்டு உறுதி செஞ்சிதான் சொல்றோம்ன்னு சொன்னாங்க. எத்தனை நாள்ன்னு கேட்டதுக்கு, உங்க அத்தை ஆறு நாள் அப்படி சொன்னாங்க. அப்போ மேரேஜ் டேட்ல இருந்து ஆறு நாளுக்கு முன்னாடி உனக்கு பீரியட்ஸ்ன்னு நானா கெஸ் செஞ்சேன்.”
“அப்போ என்னை நினைச்சு எனக்கே அசிங்கமா தோனுச்சு. தம்பிக்கு பார்த்த பொண்ணை போய் அப்படி நினைச்சோமேன்னு.. ஒரு மாதிரி கில்டியா ஃபீல் செஞ்சேன். அதனாலதான் உன்னைப் பார்க்கவே இல்லை. எங்க என்னையும் மீறி உன்கிட்ட வந்து என்னோட லவ்வை சொல்லிடுவேனோன்னு பயமா இருந்துச்சு..” என அன்றைய தன் நிலையை சொன்னான் வெற்றி.
“விடுங்க மாமா ரெண்டு பேரும் விரும்பினதை மறைச்சிருக்கோம். எனக்கு அத்தை மேல பயம். ஆனா தாத்தாக்கிட்டயாச்சும் சொல்லிருக்கலாம். நான் செய்யல, எப்படியோ புகழ் மாமாக்குத் தெரிஞ்சதால நம்ம கல்யாணம் நடந்தது.” என மங்கையும் தன்னைப் பற்றி சொல்லி, “ஏன் மாமா எனக்கு ஒரு டவுட்.. இந்த அபியை எப்படி புகழ் மாமா மேனேஜ் பண்ணுவார். ஏன் கேட்குறேன்னா நம்மளையே அப்படி கதற விட்டா..? அவரை சும்மா விடுவாளா.?” எனக் கேட்க
“அவனுக்கு அந்த திறமை இருக்கு. அதை அவன் பார்த்துக்கட்டும். இப்போ உனக்கு என்ன வேணும் காஃபி கொண்டு வரவா.. நாளைக்கு முதல் வேலையா அதை செக் பண்ணு.. ரிசல்ட் பார்த்த பிறகுதான் அடுத்த வேலையே எனக்கு ஓடும்..” என்று மனைவியிடம் சொன்னதைப் போலவே அடுத்த நாள் அவளை எழுப்பி, ப்ரெக்னன்சி கிட்டை அவள் கையில் கொடுத்து குளியலறைக்குள் தள்ளிவிட்டான்.
அவள் வெளியே வரும்வரை பிரசவ அறைக்கு வெளியேக் காத்திருக்கும் கண்வனின் நிலையில் இருந்தான். முகம் முழுக்க வெட்கமும் மகிழ்வும் பூக்க வெளியே வந்தவளைப் பார்த்ததும் ரிசல்ட் என்னவென்பதை உணர்ந்தவன், அப்படியெ அவளைக் கையில் அள்ளித் தூக்கிச் சுற்ற ஆரம்பித்தான்.
“மாமா.. ப்ளீஸ் தலை சுத்துது.. இறக்கி விடுங்க..” என அவன் கழுத்தில் கரங்களை மாலையாக்கிக் கொண்டாள். ஆர்ப்பாட்டங்கள் முடிந்து வீட்டில் சொல்லலாம் என வெற்றி ஆரம்பிக்க வேண்டாம் என மங்கை கூறி அதற்கான காரணங்களையும் கூற, வெற்றிக்கும் மறுக்க முடியவில்லை.
இன்றைய நிகழ்வுக்கு வந்தவள் “ஏன் மாமா நானே மனசு மாறிப் படிக்கிறேன்னு சொன்னா கூட, நீங்க விடமாட்டீங்க போல, அப்போ உங்களுக்கும் புகழ் மாமாவுக்கும் ஒரு ஃபைட் சீன் இருக்கு அப்படித்தானே.” என வாய்விட்டுச் சிரிக்க
“போடி.. என்னை உனக்கு நல்லா பழக்கிட்டு இப்படி சிரிக்குற.. ம்ம் இனி என் பக்கத்துல வராத..” என அவனின் பேச்சுக்கு எதிர்பதமாக சிரித்த இதழ்களைச் சிறை செய்து, மெல்ல மெல்ல தனக்குள் மொத்தமாக எடுத்துக் கொண்டிருந்தான் மங்கையின் மணாளன்.