Home Love - Family - Romanceசரி – 07

எபிசோட் – 07

வாசல் வழியாக வேகமாக உள்ளே வந்த கலாவின் முகம் முழுவதும் பதற்றம் நிறைந்திருந்தது. அவளது பின்னால் வந்த சுப்புவின் முகத்திலும் அதே கவலை அப்பட்டமாக தெரிந்தது. இருவரும் ஒரே நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்தாலும், அவர்களது பார்வை முதலில் தேடியது ஒரே மனிதரைத் தான்.

“அண்ணா…”

என்று கலா மெதுவாக அழைத்தாள்.

அந்தக் குரலைக் கேட்டதும் மூர்த்தி திரும்பிப் பார்த்தார். கடந்த சில நாட்களில் பல உறவினர்களின் முகங்களைப் பார்த்திருந்தாலும், தன் மச்சானும் தங்கையும் வீட்டிற்குள் நுழையும் அந்த நொடி மட்டும் அவருடைய மனம் சற்றே தளர்ந்தது. சுமதி இல்லாத பிறகு, அவர்களை நேராகப் பார்த்து பேசுவது இதுவே முதல் முறை.

“வாங்க…” என்று மட்டும் சொன்னார்.

அந்த ஒரு வார்த்தையில் வரவேற்பு இருந்தது. ஆனால் வழக்கம்போல் புன்னகை இல்லை. முகத்தில் தெரிந்த சோர்வை மறைக்க கூட அவர் முயற்சிக்கவில்லை.

கலா அவருக்கு அருகில் வந்து நின்றார். சில நொடிகள் எதுவும் பேச முடியவில்லை. எதிரே நின்றிருந்த மூர்த்தியைப் பார்த்தபோது, தன் அண்ணி உயிரோடு இருந்த காலத்தில் எப்போதும் கம்பீரமாகவும், உறுதியுடனும் நின்ற மனிதர் இன்று சில நாட்களிலேயே வயது கூடிவிட்டது போலத் தோன்றினார். தலைமுடியில் இருந்த நரை அதிகமாகிவிட்டதோ… அல்லது மனதின் சுமை கண்களில் தெரிகிறதோ… என்று அவருக்கே புரியவில்லை.

“எப்படி இருக்கீங்க அண்ணா…?”

என்று கேட்டவளின் குரல் தானாகவே உடைந்து போனது.

அந்தக் கேள்விக்கு உடனே பதில் சொல்லவில்லை மூர்த்தி.

ஒரு மனிதன் உண்மையாகவே நன்றாக இல்லாதபோது, “நல்லா இருக்கேன்” என்று சொல்லுவது எவ்வளவு கடினம் என்பதை அவர் இன்று உணர்ந்திருந்தார்.

சில நொடிகள் அமைதியாக நின்றவர், “இருக்கேன் ம்மா…” என்று மட்டும் சொன்னார்.

அந்த இரண்டு எழுத்து பதிலுக்குள் எத்தனை ஆயிரம் வலிகள் புதைந்திருந்தன என்பதை அங்கே இருந்த மூவருக்கும் நன்றாகவே புரிந்தது.

சுப்பு மெதுவாக அருகே வந்து மூர்த்தியின் தோளில் கை வைத்தார்.

“மாமா… நடந்ததை யாராலும் மாத்த முடியாது. ஆனா… நீங்க இப்படியே உடைஞ்சு போயிட்டீங்கன்னா, வீட்டுல இருக்குற எல்லாரும் இன்னும் பலவீனமாயிடுவாங்க.”

மூர்த்தி தலையை மட்டும் ஆட்டினார்.

“உடைஞ்சு போகக் கூடாதுன்னு எனக்கும் தெரியும் சுப்பு… ஆனா…” என்று சொல்லிவிட்டு நிறுத்தினார்.

அந்த “ஆனா”வுக்குப் பிறகு வார்த்தைகள் வரவில்லை.

ஏனென்றால் அந்த இடத்தை நிரப்ப வேண்டியவள் இனி இந்த வீட்டில் இல்லை.

அந்த நேரத்தில், சமையலறையிலிருந்து இரண்டு டம்ளர்களில் காபியுடன் வெளியே வந்த ஆதினி, வாசலில் நின்றிருந்த கலாவையும் சுப்புவையும் பார்த்ததும் ஒரு நொடி தயங்கி நின்றாள்.

“வாங்க ம்மா…”

என்றவள் மெதுவாக அவர்களருகே வந்தாள்.

கலாவின் பார்வை உடனே ஆதினியின் மேல் விழுந்தது.

திருமண நாளன்று பார்த்த அந்த பெண்ணுக்கும், இன்று தன் முன்னால் நின்றிருந்த ஆதினிக்கும் இடையில் ஏதோ ஒரு மாறுதல் இருந்தது. சில நாட்களிலேயே அவளது முகத்தில் ஒரு முதிர்ச்சி வந்து சேர்ந்திருந்தது. கண்களில் இருந்த குழந்தைத்தனம் சற்று குறைந்து, அதற்குப் பதிலாக ஒரு அமைதியான பொறுப்பு குடியேறியிருந்தது.

“எப்படிடா இருக்க…?”

என்று கேட்டபடியே அவளது கன்னத்தை மெதுவாக வருடினாள் கலா.

அந்தத் தீண்டலில் தாய்மையின் வெப்பம் இருந்தது.

அதுவரை தன்னை மிகவும் உறுதியாக வைத்திருந்த ஆதினியின் மனம், அந்த ஒரு அன்பான தொடுதலில் லேசாக தளர்ந்தது.

“நல்லா இருக்கேன் ம்மா…” என்று சொல்ல முயன்றாள். ஆனால் குரல் முழுமையாக வெளிவரவில்லை.

கலா எதுவும் பேசவில்லை. அவளது கைகளை மட்டும் பிடித்துக் கொண்டார்.

அந்தக் கைகள் குளிர்ந்திருந்தன. 

“சாப்பிடுறியா…?” என்ற கேள்வி மிகவும் சாதாரணமானது.

ஆனால் அந்தக் கேள்விக்குப் பின்னால், “உன்னை யாராவது கவனிக்கிறாங்களா?” என்ற அக்கறை மறைந்திருந்தது.

ஆதினி மெதுவாக தலையசைத்தாள்.

“ம்ம்ம்…”

அதற்கு மேல் பேசினால் கண்கள் கலங்கிவிடும் என்று அவளுக்கே தெரிந்தது.

கலாவும் அதை புரிந்து கொண்டார்.

சில உறவுகளுக்கு அதிகமான வார்த்தைகள் தேவையில்லை.

ஒரு பார்வை…

ஒரு தொடுதல்…

ஒரு நிமிட அமைதி…

அதுவே ஆயிரம் ஆறுதல்களைச் சொல்லிவிடும்.

அந்த அமைதியை உடைத்தது சுப்புதான்.

“ஆதி… உன் அம்மா காலையிலிருந்தே உன்னைப் பத்திதான் பேசிக்கிட்டு இருந்தா. ‘போயி பாப்போம்’ன்னு ஒரே பிடிவாதம். அதான் எல்லா வேலையையும் ஒதுக்கி வச்சிட்டு கிளம்பிட்டோம்.”

என்று புன்னகைக்க முயன்றார்.

ஆதினியின் இதழ்களிலும் மிகவும் மெல்லிய ஒரு புன்னகை தோன்றியது.

அது முழுமையான சந்தோஷம் இல்லை.

ஆனால்…

பல நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தில் மலர்ந்த முதல் அமைதியான புன்னகை அது.

அதை கவனித்த மூர்த்தியின் மனமும் சற்றே இலகுவானது.

“இந்த வீட்டுக்குள் மீண்டும் சிரிப்பு திரும்பணும்…”

என்ற ஆசை, பல நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக அவரது மனதில் முளைத்தது.

கலாவின் கைகளைப் பிடித்தபடியே நின்றிருந்த ஆதினியின் மனம், பல நாட்களாக அடக்கி வைத்திருந்த உணர்வுகளின் சுமையை மெதுவாக இறக்கி வைக்கத் தொடங்கியது. இந்த வீட்டிற்குள் வந்த நாள் முதல் அவள் கேட்ட வார்த்தைகள் பெரும்பாலும் ஆறுதல் சொல்வதற்கானவையோ, கடமை உணர்வில் பேசப்பட்டவையோ தான். ஆனால் கலாவின் தொடுதலில் இருந்த உரிமை வேறு. அது, நீ தனியா இல்ல…” என்று சொல்லாமலேயே சொல்லிய உறவின் மொழி. அந்த அன்பை உணர்ந்தவள், தன் கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் உள்ளுக்குள் தள்ளி வைத்துக் கொண்டாள். இந்த வீட்டில் அழுவதற்கு உரிமை இருந்தாலும், உடைந்து போவதற்கு உரிமை இல்லை என்பதை கடந்த சில நாட்களிலேயே வாழ்க்கை அவளுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது.

மூர்த்தி அந்த இருவரையும் அமைதியாகவே பார்த்துக் கொண்டிருந்தார். இரு குடும்பங்களும் ஒன்றாக இருந்த காலத்தில், கலா இந்த வீட்டுக்கு வந்தாலே சிரிப்புச் சத்தம் குறையாது. இரு பெண்களும் சமையலறைக்குள் நின்று பேசிக் கொண்டிருப்பார்கள். சுப்பு, தன் தந்தையுடன் அரசியல் பேசுவாஎ. வேந்தன் சிறு வயதிலேயே எப்போதும் கலாவை வம்பிழுத்துக் கொண்டிருப்பான். அந்த நாட்கள் அனைத்தும் நேற்று நடந்தது போல நினைவுக்கு வந்தது. ஆனால் இன்று… அதே மனிதர்கள் அதே வீட்டில் நின்றிருந்தாலும், அந்த வீட்டின் உயிர் எங்கோ தொலைந்து போயிருந்தது. மனிதர்கள் இல்லாததால் வீடு வெறுமையடைவதில்லை; அவர்களுடைய சிரிப்பு இல்லாதபோதுதான் வீடு உண்மையாக வெறுமையாகிவிடுகிறது என்பதை அவர் இன்னொரு முறை உணர்ந்தார்.

சில நிமிடங்கள் யாரும் எதுவும் பேசவில்லை. அந்த அமைதியை உடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஆதினி, “ம்மா… காபி குடிக்கிறீங்களா?” என்று கேட்டாள். கலா அவளைப் பார்த்து மெதுவாகப் புன்னகைத்தாள். “நீ போட்டதுன்னா குடிக்காம இருக்க முடியுமா?” என்ற அந்த ஒரு வாக்கியத்தில் கூட, அந்தப் பெண்ணின் மனதை சாதாரண நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்ற அக்கறை இருந்தது. உடனே ஆதினி சமையலறைக்குள் சென்று இரண்டு டம்ளர்களில் காபி எடுத்துக் கொண்டு வந்தாள். காபியை வாங்கிய கலா, டம்ளரைக் கையில் வைத்தபடியே ஒரு நொடி அவளைப் பார்த்தாள். “சுமதி இருந்திருந்தா… இப்போ இதெல்லாம் அவளே பார்த்திருப்பா…” என்ற எண்ணம் வந்ததும், அவளது பார்வை தன்னையும் அறியாமல் சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்தை நோக்கிச் சென்றது.

மாலை சூட்டப்பட்ட அந்தப் புகைப்படத்தில், சுமதி எப்போதும்போல அதே புன்னகையோடு இருந்தாள். அந்தப் புன்னகையைப் பார்த்த நொடியே கலாவின் மனம் உடைந்து போனது. 

இப்போது ஒரு புகைப்படமாக மட்டுமே அந்தச் சுவரில் நின்றிருந்தாள். “நீங்க இல்லாம இந்த வீட்டுல எல்லாரும் எப்படி வாழப் போறாங்க அண்ணி…” என்ற கேள்வி அவளுக்குள் எழுந்தது. பதில் சொல்ல யாரும் இல்லை.

அந்தக் கனமான அமைதியை சுப்பு மெதுவாக மாற்ற முயன்றார். தாத்தாவின் அருகில் அமர்ந்தவருக்கு, வயதான அந்த இருவரின் முகத்தில் தெரிந்த சோர்வு மனதை நெருடியது. 

சில நாட்களிலேயே இருவரும் மிகவும் தளர்ந்து போயிருந்தனர். “மாமா… நீங்க கொஞ்சம் வெளியே நடந்து போய் வரணும். வீட்டுக்குள்ளேயே இருந்தா மனசு இன்னும் சோர்ந்துடும்…” என்று மெதுவாகச் சொன்னார். 

தாத்தா ஒரு மெல்லிய சிரிப்பை மட்டும் சிரித்தார். “மனசு நடக்கணும்னு நினைச்சா தான் காலும் நடக்கும் பா…” என்ற அவரது பதிலில் வயதின் அனுபவமும், மகளை இழந்த தந்தையின் இயலாமையும் ஒன்றாக கலந்து இருந்தது.

அந்த வார்த்தைகள் அங்கே இருந்த அனைவரின் மனதையும் அமைதியாக்கின. ஒவ்வொருவரும் தங்களுக்குள் ஏதோ ஒன்றை இழந்திருந்தார்கள். ஆனால் அந்த இழப்பை வெளியில் சொல்லிக் கதறாமல், மற்றவர்களுக்காகத் தாங்கிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டில் கண்ணீர் வற்றவில்லை. ஆனால் கண்ணீரை விட பெரிய பொறுப்பு ஒவ்வொருவரின் தோளிலும் மெதுவாக ஏறிக் கொண்டிருந்தது.

மதிய நேரத்தை நெருங்கியபோது, அந்த வீட்டின் இயல்பு மெதுவாக மீண்டும் தன் பாதையைத் தேட ஆரம்பித்தது. கடந்த சில நாட்களாக சடங்குகள், உறவினர்களின் வருகை, ஆறுதல் சொல்ல வந்தவர்களின் பேச்சு என்று இடைவிடாமல் பரபரப்பாக இருந்த அந்த வீடு, இன்று முதன்முறையாக சற்று மூச்சு விட்டது போல தோன்றியது. ஆனால் அந்த அமைதி நிம்மதியைக் கொடுக்கவில்லை. மாறாக, சுமதி இல்லாத வெற்றிடத்தை இன்னும் தெளிவாக எல்லோருக்கும் உணர்த்திக் கொண்டே இருந்தது.

சமையலறையில் நின்றிருந்த ஆதினி, மதிய உணவுக்கான வேலைகளை மெதுவாக கவனித்துக் கொண்டிருந்தாள். வசந்தி உதவிக்கு வந்திருந்தாலும், “நீங்க உட்காருங்கம்மா… இதை நான் பார்த்துக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பல வேலைகளை தானே செய்து கொண்டிருந்தாள். 

அந்த வீட்டின் ஒவ்வொரு பொருளும் இன்னும் அவளுக்கு புதிதுதான். எந்த பாத்திரம் எங்கே இருக்கிறது என்பதைத் தேடித் தேடி எடுத்துக் கொண்டிருந்தாள். இருந்தாலும், ஒவ்வொரு நாளும் அந்தத் தேடல் கொஞ்சம் குறைந்து கொண்டே இருந்தது. ஒரு வீட்டைச் சொந்தமாக உணர்வது ஒரே நாளில் நடக்காது. அந்த வீட்டின் பொருட்களோடும், வாசனையோடும், மனிதர்களோடும் பழகும் ஒவ்வொரு நாளும், அந்த உணர்வு மெதுவாக உருவாகும். ஆதினிக்கும் அப்படித்தான் நடந்து கொண்டிருந்தது.

சமையலறை வாசலில் சாய்ந்து நின்ற கலா, எதுவும் பேசாமல் தன் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் பெருமையும் வலியும் ஒன்றாக கலந்து இருந்தது. 

திருமணமாகி ஒரு வாரம்கூட ஆகவில்லை. அந்த வயதில் இருக்க வேண்டிய வெட்கமும், புதுமண வாழ்க்கையின் மகிழ்ச்சியும், சிரிப்பும் எதுவும் இந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவில்லை. 

அதற்கு பதிலாக, ஒரு துக்கம் நிறைந்த வீட்டின் பொறுப்பு அவள் தோள்களில் வந்து விழுந்திருந்தது. இருந்தும், “எனக்கு இது முடியாது…” என்று ஒரு முறைகூட சொல்லாமல், அமைதியாக எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தபோது, சுமதி ஏன் இந்தப் பெண்ணை தன் வீட்டின் மருமகளாக நினைத்தார் என்பதற்கான பதில் கலாவுக்கு மெதுவாக புரிய ஆரம்பித்தது.

“ஆதி…” என்று மெதுவாக அழைத்தாள் அவள்.

திரும்பிப் பார்த்த ஆதினியின் முகத்தில் சோர்வு இருந்தது. ஆனால் அந்த சோர்வுக்குள் கூட ஒரு அமைதி குடியேறியிருந்தது.

“கொஞ்சம் உட்காரு மா… காலையில இருந்து நின்னுக்கிட்டே இருக்க.”

ஆதினி சிரிக்க முயன்றாள்.

“பரவாயில்ல ம்மா… வேலை முடிஞ்சிடட்டும். அப்புறம் உட்கார்றேன்.”

அந்தச் சிரிப்பு உதட்டில் மட்டும் இருந்தது. கண்களில் இல்லை. அதை கலா கவனிக்காமல் இல்லை. ஆனால் ஆறுதல் சொல்ல வேண்டிய நேரம் இன்னும் வரவில்லை என்பதை அவளும் உணர்ந்திருந்தாள். சில காயங்கள் பேசிப் போகாது; காலம்தான் அவற்றை மெதுவாக ஆற்ற வேண்டும்.

அதே நேரத்தில், வெளித்திண்ணையில் மூர்த்தியின் அலைபேசி ஒலித்தது. திரையில் தெரிந்த பெயரைப் பார்த்ததும், ஒரு கணம் அவர் கண்களை மூடிக் கொண்டார். அந்த அழைப்பை எடுக்க மனம் விரும்பவில்லை. ஆனால் அது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை இல்லை. அவர் ஏற்றிருந்த பொறுப்பின் அழைப்பு.

அழைப்பை ஏற்றவர் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.

“இல்ல… நான் நாளைக்கு ஒன்றிய அலுவலகம் வர்றேன். இப்போ வீட்டை விட்டு வெளியே வர்ற நிலைமையில இல்லை… ஆனா அந்த மனுவை நிறுத்தாதீங்க. விவசாயிகள் காத்துட்டு இருக்காங்க. நான் வர்றதுக்குள்ள எல்லா விவரத்தையும் தயார் பண்ணி வைங்க…”

என்று சொல்லிவிட்டு அழைப்பை முடித்தார்.

அந்த உரையாடலை முழுவதுமாக யாரும் கேட்கவில்லை. ஆனால் திண்ணையில் இருந்த சுப்புவின் முகத்தில் மட்டும் ஒரு புரிதல் தோன்றியது. குடும்பத் துயரம் அவரை வீட்டுக்குள் கட்டி வைத்திருந்தாலும், ஊரின் பிரச்சினைகள் அவரை மீண்டும் வெளியே அழைக்க ஆரம்பித்துவிட்டன. அரசியல் அவருக்கு அதிகாரம் மட்டுமல்ல; பலரின் எதிர்பார்ப்பும் கூட. அதிலிருந்து அவர் முழுமையாக விலக முடியாது என்பதை சுப்புவும் நன்றாக அறிந்திருந்தான்.

அந்த நேரத்தில், வீட்டின் வாசலுக்கு வெளியே ஒரு காரின் சத்தம் கேட்டது. அனைவரும் இயல்பாகவே அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தனர். ஆனால் அது வேந்தனின் கார் இல்லை. கட்டுமான நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இளம் பொறியாளர் ராஜா தான். அவசரமாக உள்ளே வந்தவன், “அண்ணா வீட்டுல இருக்காங்களா?” என்று கேட்டான்.

“இல்லப்பா… கொஞ்சம் வெளியே போயிருக்கான். என்ன விஷயம்?” என்று சுப்பு கேட்டான்.

ராஜா கையில் இருந்த கோப்புகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டான்.

“கோயம்புத்தூர் site-ல ஒரு சின்ன பிரச்சினை. அண்ணா பார்த்து முடிவு பண்ண வேண்டிய drawing இருக்கு. Phone-ல சொல்ல முடியல. அதான் நேர்ல வந்தேன்…”

அவன் சொல்லிக் கொண்டிருந்ததை கேட்ட மூர்த்தி அமைதியாக அவனைப் பார்த்தார். மகனின் வாழ்க்கை எவ்வளவு பெரிய பொறுப்புகளால் சூழப்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தாலும், அந்தப் பொறுப்புகளின் முகத்தை இப்படி நேரில் பார்ப்பது இதுவே முதல் முறை.

இந்த வயசுல இவ்வளவு பேரோட வாழ்க்கையைச் சுமக்கிறானா…”

என்ற எண்ணம் அவரது மனதில் எழுந்தது.

அந்த எண்ணத்தோடு சேர்ந்தே…

பல வருடங்களாக மகனைப் புரிந்து கொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்ற மெல்லிய குற்ற உணர்வும், அவருக்குள் அமைதியாக தலைதூக்க ஆரம்பித்தது.

மதிய உணவை முடித்த பிறகும், அந்த வீட்டில் யாருக்கும் முழுமையான இயல்பு திரும்பவில்லை. சடங்குகள் முடிந்துவிட்டதால் உறவினர்களின் கூட்டம் குறைந்திருந்தாலும், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் இன்னும் சுமதியின் இருப்பு உணரப்பட்டது. சாப்பாட்டு மேசையில் இருந்த காலி நாற்காலி… சமையலறையின் மூலையில் அவள் எப்போதும் அணிந்திருந்த சிறிய முன்னாடி… பூஜை அறையில் ஒழுங்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த தீபத்தட்டு… இவை அனைத்தும், அவள் இனி திரும்பி வரமாட்டாள் என்ற உண்மையை ஒவ்வொரு கணமும் நினைவூட்டிக் கொண்டே இருந்தன.

கலா பாத்திரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்த ஆதினியை அமைதியாகவே கவனித்தாள். அந்தப் பெண் எந்த வேலையையும் யாராவது சொல்லிக் கொடுத்ததால் செய்யவில்லை. வீட்டில் எது செய்யப்படாமல் இருக்கிறதோ, அதைத் தேடிக் கண்டுபிடித்து அமைதியாகச் செய்து கொண்டிருந்தாள். ஒரு வீட்டின் மருமகளாக வாழ்வதற்கும், அந்த வீட்டின் பொறுப்பை தானாக ஏற்றுக் கொள்வதற்கும் இடையே ஒரு மெல்லிய வித்தியாசம் இருக்கிறது. 

அந்த வித்தியாசத்தை யாரும் சொல்லிக் கொடுக்காமல் புரிந்து கொள்ளும் முதிர்ச்சி ஆதினியிடம் இருப்பதைப் பார்த்தபோது, கலாவின் மனதில் பெருமை எழுந்தது. ஆனால் அதே நேரத்தில், என் பொண்ணு இந்த வயசுல இவ்வளவு சுமையை சுமக்க வேண்டியதா?” என்ற தாயின் வலியும் சேர்ந்து வந்தது.

மறுபக்கம், வெளித்திண்ணையில் அமர்ந்திருந்த சுப்பு, மூர்த்தியுடன் மெதுவாகப் பேசிக் கொண்டிருந்தார். அது ஆறுதல் சொல்லும் உரையாடல் இல்லை. வாழ்க்கை மீண்டும் பழைய ஓட்டத்திற்குத் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை ஒருவருக்கொருவர் நினைவூட்டும் உரையாடல். “மாமா… வீட்டை நினைச்சுக்கிட்டே இருந்தா மனசு இன்னும் கனமாகிடும். கொஞ்சம் கொஞ்சமா வெளியில இருக்குற பொறுப்பையும் கவனிக்க ஆரம்பிங்க. உங்களை நம்பி நிறைய பேர் இருக்காங்க…” என்று மெதுவாகச் சொன்னார் சுப்பு. மூர்த்தி உடனே பதில் சொல்லவில்லை.

திண்ணைக்கு வெளியே தெரிந்த சாலையை வெறித்தபடி சில நொடிகள் அமைதியாக இருந்தார். பின்னர், “தெரியும் சுப்பு… ஆனா இந்த வீட்டை விட்டுப் போக மனசு வரல. இங்க எல்லா இடத்துலயும் அவ இருக்கிற மாதிரி தோணுது…” என்றார். அந்த வார்த்தைகளைச் சொல்லும்போது கூட அவரது பார்வை தன்னையும் அறியாமல் சுமதியின் புகைப்படத்தைத் தேடிச் சென்றது.

அவரது மனநிலையை புரிந்த சுப்பு, அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. சில இழப்புகளுக்கு அறிவுரை தேவையில்லை. அருகில் அமைதியாக அமர்ந்திருக்கும் ஒரு மனிதர் போதும். அந்த அமைதியே சில நேரங்களில் பெரிய ஆறுதலாக மாறிவிடும்.

அதே நேரத்தில், வீட்டின் வாசலுக்கு வெளியே ஒரு கார் வந்து நின்ற சத்தம் கேட்டது. தானாகவே அனைவரின் பார்வையும் அந்தப் பக்கம் திரும்பியது. சில நொடிகளில், வேந்தன் காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தான். அவன் முகத்தில் சோர்வு இருந்தாலும், காலை இருந்ததைவிட மனம் சற்றே தெளிந்திருந்தது. கட்டுமான நிறுவனத்திலிருந்து வந்திருந்த அவசர அழைப்பை முடித்துவிட்டு நேராக வீட்டிற்குத் திரும்பியிருந்தான். 

வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் தந்தையைப் பார்த்தான். அதன் பிறகு சமையலறை வாசலில் நின்றிருந்த ஆதினியின் மேல் அவன் பார்வை ஒரு நொடி நிலைத்தது. அந்தப் பார்வை இப்போது அந்நியமாக இல்லை. இன்னும் நெருக்கமும் இல்லை. ஆனால், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிய இரண்டு மனங்களின் அமைதியான ஒப்புதல் அதில் இருந்தது.

அதை யாரும் கவனிக்கவில்லை என்று இருவரும் நினைத்திருக்கலாம். ஆனால் கலாவின் பார்வை மட்டும் அதைத் தவறவிடவில்லை. ஒரு தாயின் கண்களுக்கு, மகளின் மனதில் நிகழும் மிகச் சிறிய மாற்றம்கூட மறைந்து போகாது. அதேபோல், மூர்த்தியும் மகனின் முகத்தில் இருந்த இறுக்கம் மெல்ல தளரத் தொடங்கியதை கவனித்தார். வாழ்க்கை அவர்களை விரும்பாமல் இணைத்திருக்கலாம். ஆனால், காலம் அவர்களைப் புரிந்து கொள்ளும் பாதையில் மெதுவாக நடத்தத் தொடங்கியிருந்தது.

அந்த மாலை சூரியன் மேற்கே சாய ஆரம்பித்திருந்தான். முற்றத்தில் இருந்த வேப்பமரத்தின் நிழல் மெதுவாக நீண்டு வீட்டின் வாசலைத் தொட்டது. அந்த நிழலைப் போலவே, கடந்த சில நாட்களின் துயரமும் இன்னும் இந்த வீட்டை விட்டு விலகவில்லை. ஆனால் அந்த இருளுக்குள் கூட, யாருக்கும் தெரியாமல் ஒரு சிறிய ஒளிக்கீற்று பிறந்திருந்தது. அது காதலின் தொடக்கம் இல்லை… நம்பிக்கையின் தொடக்கம்.

சில உறவுகள் ஒரு நாள் பார்த்தவுடன் மலர்ந்து விடாது.

சில உறவுகள்…

வலியைப் பகிர்ந்து கொள்ளும் அமைதிக்குள் தான் முதல் விதையைப் போடும்.

அந்த விதை…

வேந்தனுக்கும் ஆதினிக்கும் இடையே, யாருக்கும் தெரியாமல் மண்ணை உடைக்கத் தொடங்கியிருந்தது.

You may also like

1 comment

M. Sarathi Rio July 18, 2026 - 10:16 pm

இனிமேல் தான் புரிதல் கொஞ்சம் கொஞ்சமாக வரும் போல.

😌😌😌
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment