Home Antiheroதளிர் – 28

தளிர் 28

நரேன் இல்லாமல் உஷாவின் உலகம் மிகவும் பொலிவிழந்தது போல் இருந்தது. எப்போதும் மூலையில் ஒடுங்கியே இருக்க, இவளை எப்படி சரி செய்வது என்பதுதான் நிசப்தியின் பெரும் யோசனை.

நிசப்தி இப்போது ஒரு லீடிங் லேடி லாயரிடம் ஜூனியராக இருந்தாள். உஷாவையும் அழைக்க அவளோ, “நரேன் பார்க்காத வேலை எனக்கும் வேண்டாம்.” என்றுவிட, ‘என்ன இது முட்டாள்தனம்’ என்ற எண்ணம் நிசப்திக்குத் தோன்றினாலும், அவளைக் கட்டாயப்படுத்த நினைக்கவில்லை. போக போகச் சரியாகலாம், அல்லது அவளை வேறு எதிலாவது கவனத்தைச் செலுத்த வைக்கலாம் என்று நினைத்தாள்.

வேணுகோபாலும் அதையே சொல்லி, நரேனிடமும் பேசினார். அவனுக்கும் அதுவே சரியென்று பட, அன்றிரவு மனைவிக்கு அழைத்தான். எப்போதும் அழைப்பதுதான், எப்பொழுதும் வெறும் நலம் விசாரிப்புகளோடு முடிந்துவிடும் அவர்களது உரையாடல். ஆனால் இன்று அவன் போனை வைக்காமல் அப்படியே இருக்க, ஏதோ சொல்ல வருகிறான் என்று புரிந்தவள், “நீங்க என்கிட்ட எதாவது சொல்லணுமா?” என்றாள்.

“ஆமா… அதுவந்து… சொல்லணும். ஆனா நீ அதை சரியா புரிஞ்சிக்கணும். புரிஞ்சிப்பியானு யோசனையா இருக்கு…” என்றான்.

“சொல்லுங்க… புரிஞ்சிக்க முயற்சி செய்றேன்.” என்றாள் அவளும்.

“அது… நீ ஏன் நிசாகூட ப்ராக்டிஸுக்கு போகல? அதுக்கு சொன்ன ரீசன் சரியா?” என்றான். தனக்காக படித்த படிப்பை வீணாக்குவதில் அவனுக்கு விருப்பம் இருக்கவில்லை.

“நான் எல்லாம் யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். நாளைக்கு நாம ஒன்னா இருக்கும்போது நான் அந்த கருப்பு கோட்ட மாட்டிட்டு, கோர்ட்டுக்கு போகும்போது, நீங்க… உங்க மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு யோசிச்சேன். உங்களுக்கு கஷ்டம் தர எதையும், எப்பவும் செய்ய என்னால முடியாது. அதனாலதான் இந்த முடிவு.” என்றுவிட, கேட்டவனின் நிலையைச் சொல்லத்தான் வேண்டுமா?

மனம் முழுவதும் ஏதோ ஒருவகையில் நிம்மதிப் பூக்கள் சரம் சரமாய் பூத்துக் குலுங்கியது. அதே நேரம் இவளுக்காகவாவது தான் மாறவேண்டும், மாறிடுவேனா? என்ற பாரமும் சேர்ந்து அழுத்தியது.

சில நிமிடங்கள் அமைதியாகக் கழிய, “அவ்ளோதானா… வச்சிடவா…?” என்றவளிடம், “இல்ல இன்னும் ஒன்னு…” என ஆரம்பித்தவன்,

எனக்காக நீ ஒன்னு செய்யணும்.” என்றான் வார்த்தைகளில் கவனமாக. கட்டாயப்படுத்துகிறேன் என்று நினைத்துவிடக்கூடாதே அவள் என்ற கவனம் அது.

“சொல்லுங்க…” எனவும், “என் ஃப்ரண்ட் மூலமா உனக்கு MBA Journalism ஹைதராபாத்ல ஒரு காலேஜ்ல அட்மிசன் போட்டுருக்கேன். டூ இயர்ஸ் கோர்ஸ். கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ள போயிடும். நானும் என் பிரச்சனையில் இருந்து வெளியில் வந்துடுவேன். அதுக்குப்பிறகு நமக்கான வாழ்க்கையை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன். இதெல்லாம் என்னோட ஒபினியன்தான். உனக்கு ஓகேனா போ, இல்லன்னா வேண்டாம்.” என படபடவெனச் சொல்லிவிட,

“ஆனா ஏன்…” எனத் தவிப்பாய் கேட்டாள் பெண்.

“எனக்காக உன் எதிர்காலத்தை தொலைச்சிட்ட, அதை நான் சரியா உனக்கு அமைச்சிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். என் குற்ற உணர்ச்சி என்னை சும்மா இருக்க விடுமா சொல்லு. என் மனசாட்சியே என்னைக் கொன்னுடும். என்னைப்பத்தி யோசிக்காத, சீக்கிரம் நான் சரியாகிடுவேன்.” என்று பதட்டமாகவேப் பேசியவன், “போறியா…?” என்றான் சம்மதிப்பாளோ, மாட்டாளோ என்ற பதைபதைப்புடன்.

“ம்ம்ம்… போறேன்… ஆனா இதெல்லாம் நான் உங்களுக்காக செய்யல. எனக்காக என் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனையும் வந்துடக் கூடாதுனுதான் செய்றேன். இதுல உங்களுக்கு எந்தக் குற்ற உணர்ச்சியும் வேண்டாம். உங்களுக்காக, உங்களுக்காக மட்டுமே நான் வெயிட் பண்ணிட்டு இருப்பேன்.” என ஆத்மார்த்தமாகச் சொன்னவள், “எப்போ போகணும்? டீடைல்ஸ் எல்லாம் அனுப்புங்க. நான் ரெடி ஆகிக்கிறேன்.” எனவும்,

“தேங்க்ஸ்… தேங்க்ஸ் லட்சுமி. கண்டிப்பா… கண்டிப்பா உனக்காக மட்டுமே உங்கிட்ட உன்னைத் தேடி வருவேன். தேங்க்ஸ் அகைன் நீ என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு. அப்புறம் எல்லாத்துக்கும்…” என்றான் உணர்ச்சிவசப்பட்டக் குரலில்.

“பரவால்ல, ஆனா எனக்கு ஒன்னு கேட்கணும்…” என்றாள் தயங்கி, தயங்கி.

“என்னம்மா… எது என்றாலும் சொல்லு, கண்டிப்பா செய்றேன்.” என அவனும் வாக்கு கொடுக்க,

“அங்க… அங்க காலேஜ்ல சேர்த்துவிட நீங்க வரீங்களா? எப்பவும் நானேதான் போவேன். இப்போ நீங்க வந்தா நல்லாருக்கும்னு தோனுச்சு. வேலை இருந்தா ஒன்னும் பிரச்சனையில்லை, நான் மேனேஜ் பண்ணிப்பேன்.” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

அந்த உள்ளே சென்ற குரலில் இருந்த வருத்தமும் தயக்கமும் பயமும், அவனுக்குள் எதையோ அசைத்துப் பார்த்தது.

“நான் வரேன்மா, உன்னைத் தனியா அனுப்புவேன்னு நினைச்சியா? நான் உன்னோட கணவன், அதை எந்த இடத்துலயும் விட்டுத் தரமாட்டேன். நீயும் அதை மறந்துடாத… கண்டதையும் யோசிக்காம தூங்கு. மத்ததெல்லாம் தானா நடக்கும்.” என்றுவிட்டு போனை வைக்க, கணவன் போனை வைத்துவிட்டான் என்பதைக் கூட உணராமல், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள் உஷா.

கணவனின் வார்த்தைகள் பாலைவனத்தில் நீருக்காய் காத்திருந்தவனுக்கு தேன்மழையே பொழிந்தது போல, அவளுக்குள் பரவசமாக இறங்கியது. இத்தனை நாள் சொந்தம் என்று இருந்தும் தனியாக இருந்தவளுக்கு, தனக்கே தனக்கான ஒரு சொந்தம், அதிலும் அந்த சொந்தம் தன் கணவன் என்பதில் அவளுக்கு அத்தனை மகிழ்வு, நிறைவு. போதும் இது போதும் எனக்கு என கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் பெண்.

காலம் யாருக்கும் எதற்காகவும் நிற்கவில்லை. உஷாவிடம் சொல்லியிருந்தது போல அனைத்தையும் நரேனே ரெடி செய்திருந்தான். அவளிடம் பேசிய பிறகு நிசப்திக்கு அழைத்து சொன்னவன், நண்பனிடமும் பேசி ஏற்பாடுகளைச் செய்ய சொல்லியிருந்தான்.

ஒரு வாரத்தில் மனைவியை அழைத்துக் கொண்டு கல்லூரியிலும் சேர்த்துவிட்டு வந்தான். நாட்கள் நகர்ந்ததா பறந்ததா தெரியாது ரித்தியின் வளைகாப்பு முடிந்து அவளுக்கு பிரசவ நாளும் நெருங்கியிருந்தது. எந்த நேரமும் பதட்டமும் பயமுமாகவே இருந்தாள் ரித்தி. யார் என்னதான் தைரியம் சொன்னாலும், அவளால் தன் பயத்தை நீக்கிக்கொள்ள முடியவில்லை.

மகளின் பயத்தை உணர்ந்த ரேணுகா, கடவுளே கதியென கோவில் கோவிலாக அலைந்தார். விக்ரம், ரவியென மாறி மாறி அவளுடன் இருந்தாலும், ஸ்வாதி வந்து பார்க்கவே இல்லை. மகளை விட்டு வரமுடியாது என மதியும் வரவில்லை. இதெல்லாம் மற்றவர்களுக்குப் புரியவில்லை என்றாலும், ரேணுகாவிற்குப் புரிந்தது.

மகனிடம் இதைப்பற்றி மேலோட்டமாக பேசியும் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் போக, மொத்தமாக வெறுத்தே போனார். மகளின் வாழ்க்கையாவது நல்ல முறையில் அமைந்தால் போதும் என்றளவில் நினைக்க ஆரம்பித்தார். இதுவரை மகளிடம் காட்டிய ஒதுக்கத்தை விடுத்து, அவளிடம் நல்லமுறையில் பேசி, சிலவற்றைச் சொல்லிப் புரிய வைத்தார்.

“இப்போ இதைப்பத்தி பேசக் கூடாதுதான் ரித்திம்மா, ஆனால் நீ என்ன தப்பு செய்தனு உனக்குத் தெரியாமலே இருக்கக்கூடாது இல்லையா? நான் உன்னை சரியா வளர்க்கலனு அடிக்கடி எனக்கு ஒரு எண்ணம் வந்து என்னைக் கொல்லுது ரித்திம்மா.” என்ற ரேணுகாவின் குரல் கரகரப்பாக இருந்தது.

“இல்லம்மா, நீங்க நல்ல அம்மாதான், நான்தான் நல்ல பொண்ணா இல்லாம போயிட்டேன்.” என்றவளின் குரலில் அத்தனைக் குற்ற உணர்ச்சி.

“நானோ விக்ரமோ நரேனை வேண்டாம்னு எப்பவும் சொல்லல, நீயாதான் வேண்டாம்னு சொன்ன…” என பேச்சை எடுக்க,

“நான் தப்பு செஞ்சேன்னு விக்கி அடிச்சான்…” என்றாள் சிறுபிள்ளையாய்.

“ஆமா தப்பு செஞ்சா அடிக்கத்தான் செய்வாங்க. அப்பா இல்லாத பொண்ணு, வெளியுலகம் தெரியாத அம்மா அவங்களுக்கு தெரிஞ்சா எப்படி கஷ்டப்படுவாங்கனு யோசிச்சிருப்பான். அவன்கிட்ட மறைக்கணும்னு உனக்குத் தோனிருக்குனா, நீ தப்பு பண்ணிருக்கனுதானே அர்த்தம். ம்ம்… ஏன் உன்னால எங்கிட்டயோ, விக்ரம்கிட்டயோ தைரியமா சொல்ல முடியல?” என்றார் சற்று அதட்டலானக் குரலில்.

“நேரம் பார்த்து நானே வீட்டுல வந்து பேசுறேன்னு நரேன் சொன்னாங்க, ஆனா அதுக்குள்ள…” என்றவள் முழுதும் சொல்ல முடியாமல் நிறுத்த,

“அதுக்குள்ள நீயே எல்லாத்தையும் முடிச்சிட்ட அப்படித்தானே… அன்னைக்கு விக்ரம் அடிச்சது, நீ காதலிச்சதுக்காக இல்ல. எங்ககிட்ட மறைச்சதுக்காக. நீ ஏன் மறைக்கணும்? எங்ககிட்ட சொல்ல ஏன் தோனல? ஆனா அதுக்கு பழிவாங்குறேன்னு உன் அண்ணன் பண்ணது முட்டாள்தனத்தின் உச்சம். இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கீங்க. ஆனா உங்களால பாதிக்கப்பட்ட ரெண்டு பேரும் எப்படி இருக்காங்க? நரேன் வந்து உங்கிட்ட பொறுமையாதானே பேசினான். உனக்கு ஏன் அவ்வளவு கோபம் வந்தது? எந்த பேய் உன்னைப் பிடிச்சி ஆட்டுச்சு. ம்ம்… சொல்லு…” என மகளை வாங்கு வாங்கென வாங்கியவர்,

“நீ வேண்டாம்னு தூக்கியெறிஞ்சது ஒருத்திக்கு பொக்கிஷமா கிடைச்சிருக்கு. அவனோட மதிப்பு உனக்குத் தெரியல. மதிப்பு தெரிஞ்ச அவ அவனை மனசு கோணாம பார்த்துப்பா. இன்னைக்கு அவன் கஷ்டப்பட்டாலும் நாளைக்கு நிச்சயம் நல்லா இருப்பான். நீயே அசந்து போற அளவுக்கு நல்லா இருப்பான்.” என்றவர், “சொல்லிக் கொடுக்குறவங்க பேச்சைக் கேட்டா வாழ்க்கை எப்பவும் உருப்படாது ரித்திமா. சொல்றது சொல்லிட்டேன், இனி உன் விருப்பம்…” என்று விட்டார்.

சில நாட்களாகவே ரித்திக்கு இந்த எண்ணம்தான். நரேன் தற்கொலை வரை போவான் என்று நினைக்கவே இல்லை. அதுவே அவளுக்குப் பேரிடி. அப்படியிருக்க அடுத்தடுத்து நடந்தது எல்லாம் சேர்ந்து அவளை மிகவும் பலவீனமாக்கியிருந்தது. ஸ்வாதி அவளை வைத்து விளையாடியிருக்கிறாள் என்று தெரியவே, சில நாட்கள் ஆகியிருந்தது. இனி அவளிடம் கவனமாக இருக்க வேண்டும். அதோடு நரேனும் அவன் வாழ்க்கையை சீக்கிரமாகவே நல்ல முறையில் வாழ வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

அன்று ஸ்வாதிக்கு செக்கப் என அவளோடு மருத்துவமனைக்கு வந்திருந்தான் விக்ரம். முழுப் பரிசோதனை முடிந்ததுமே விக்ரமை ஓரவிழியில் பார்த்தபடி, குழந்தையைப் பற்றி பேசினாள் ஸ்வாதி. விக்ரமின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்ப் பட்டென்று எரிய, அதைப் பார்த்ததும் எரிச்சல் பொங்கி எழ, மருத்துவரை பேசு என்பது போல் புருவத்தை உயர்த்தினாள் ஸ்வாதி.

“என்னம்மா பேசுறீங்க? இப்போதான் உங்க ஹெல்த் கொஞ்சம் கொஞ்சமா சரியாகிட்டு வருது. அதுக்குள்ள ஏன் அவசரப்படுறீங்க ஸ்வாதி? நான்தான் சொன்னேனே, உங்க யூட்ரஸ் வெய்ட் தாங்குற அளவுக்கு இல்லன்னு. பெட்டர் நீங்க ஏன் ஐவிஎஃப் ட்ரை பண்ணக்கூடாது?” எனவும்,

“வாட்…!” என அதிர்ந்துவிட்டான் விக்ரம். என்ன உளர்றீங்க? ஷீ இஸ் நவ் ஹெல்தி… கொஞ்சம் நாள் போனதும் இன்னும் பெட்டராவா. அதுக்குப் பிறகு பெத்துக்கலாம், அதுக்காக டெஸ்ட் டியூப் பேபிக்கெல்லாம் நோ சான்ஸ்…” என்று பட்டென்று சொல்லிவிட்டு வெளியேற,

ஸ்வாதி மருத்துவரைப் பார்க்க, “இனி நீங்கதான் பேசணும்…” என்றுவிட,

“எஸ்… பேசணும்… பேசித்தானே ஆகணும்… பேசுறேன்…” என்றுவிட்டு கிளம்பினாள்.

காருக்கருகில் நின்றிருந்தவனின் முகம் ரௌத்திரத்தில் சிவந்து கிடந்தது. அருகில் வந்தவளை முறைத்தவன், “இனி இந்த டாக்டர்கிட்ட நாம பார்க்க வேண்டாம். ரித்திக்குப் பார்க்குற டாக்டர்கிட்டயே காட்டிடலாம்.” எனக் கட்டளைப் போல சொன்னவன் காரில் ஏறி அமர்ந்து விட, அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தாள் ஸ்வாதி.

அவன் கோபமாகவும், ஸ்வாதி அதிர்ந்து நிற்பதும் அந்தப் பக்கம் வேலையாக வந்த விக்னேஷின் கண்ணில் பட, ஸ்வாதியின் மேல் பரிதாபமும் விக்ரமின் மேல் கொலை வெறியையும் ஏற்படுத்தியது.

விக்ரமைப் பொருட்படுத்தாது ஸ்வாதியின் அருகில் சென்றவன் “என்ன ஸ்வே இந்தப் பக்கம், செக்கப்புக்கு வந்தியா?” என சாதாரணமாகப் பேச, அவனைப் பார்த்தவள் பயத்துடன் விக்ரமை வேகமாகப் பார்த்துவிட்டு, “ஆமா” என்றுவிட்டு காரில் ஏறிவிட்டாள்.

இருவரையும் யோசனையாகப் பார்த்த விக்ரம் ஒன்றும் சொல்லாமல் காரை எடுத்துவிட்டான். ஆனால் ஸ்வாதியைப் பார்த்த விக்னேஷின் கண்ணில் என்ன இருந்தது என்று மட்டும் யோசித்துக் கொண்டிருந்தான்.

ஸ்வாதி பயந்தவாறே பதில் சொல்லிவிட்டுச் சென்றது விக்னேஷை மிகவும் யோசிக்க வைத்தது. ஒருவேளை அவள் சொன்னது போலத் தன்னைப் பழிவாங்கத்தான் ஸ்வாதியைத் திருமணம் செய்திருக்கிறானோ என்று யோசிக்க ஆரம்பித்தான். அப்படி ஒருவேளை நடந்திருந்தால், அவளை அவனிடமிருந்து காப்பாற்றித் தன்னிடம் கொண்டு வந்துவிட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான். அதற்கு முதலில் அவள் சிக்கல் இல்லாமல் அந்த வாழ்க்கையில் இருந்து வெளியில் வரவேண்டும், அதற்கு என்ன செய்ய என மனதில் யோசிக்க ஆரம்பித்தான்.

இங்கு காரில், “எதுக்கு நீ அவ்வளவு பயந்த? நான் என்ன சொல்லிட போறேன்?” என விக்ரம் கடுப்பாகக் கேட்க,

“இல்ல, அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்பவே நீங்களும், ரவியும் என்னை முறைச்சீங்க, அதனாலதான்…” என இழுக்க,

“உனக்கே இது ஓவரா இல்ல? அன்னைக்கு நாங்க முறைச்சோம்தான், ஆனா அதுக்குத்தான் நீ பதில் கொடுத்தியே, அப்புறம் நாங்க ஏன் அதை செய்யப் போறோம்?” என்றவன் அவள் பதிலுக்காகக் கூடக் காத்திருக்கவில்லை.

காரைத் தனது ஆஃபிசில் நிறுத்தியவன், “ஒரு ஆஃப்னவர் வொர்க் இருக்கு முடிச்சிட்டு போகலாம்.” என்றவன், உள்ளே இவனுக்காகக் காத்திருந்த நிசப்தியிடம் சென்று பேச ஆரம்பித்துவிட்டான்.

உள்ளே அவளைப் பார்த்ததும் ஸ்வாதியின் கண்களில் நெருப்பு பறந்தது. இவள் எங்கே இங்கே? ஏன் இங்கு இருக்கிறாள்? ஒருவேளை விக்ரமிடம் வேலைக்கு வந்துவிட்டாளோ…’ என யோசித்தபடியே விக்னேஷுக்கு அழைத்து, “விக்கி அந்த நிசப்தி எனக்கு துரோகம் செஞ்சிடுவா போல, இங்க விக்ரம் ஆஃபிஸ்லதான் வொர்க் பண்றானு நினைக்கிறேன். விக்ரமாலத்தான் அவ லைஃப் ஸ்பாயில் ஆகிடுச்சுன்னு சாஃப்ட் கார்னர்ல அவளைக் கூடவே வச்சிருக்கார் போல… என்னால இதை எப்படித் தாங்கமுடியும்?” எனத் தேம்புவது போலச் சொல்ல, இங்கு விக்னேஷிற்கு ஏகத்திற்கும் பிபி எகிறியது.

***

You may also like

2 comments

M. Sarathi Rio March 10, 2026 - 4:05 pm

அடிப்பாவி..! திரும்பவும் ஆட்டத்தை ஆடப்போறாளோ ?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply
Subhashini A March 10, 2026 - 6:25 pm

Ippadiyum oru adi muttal iruppanaa?

Reply

Leave a Reply to Subhashini A Cancel Reply

About Me

Featured