Home Antiheroதளிர் – 29

தளிர் 29

பார்க்கவி லீடிங் லேடி லாயர். அவரிடம் தான் நிசப்தி ஜூனியராகச் சேர்ந்திருந்தாள். பார்க்கவியும் விக்ரமும் ஒரே கல்லூரி பேஜ் மேட் வேறு. பார்க்கவிக்குத் தேவையான தகவல்கள் ஏதேனும் விக்ரமிடம் இருந்தாலோ, அல்லது விக்ரமிற்குத் தேவையானது பார்க்கவியிடம் இருந்தாலோ, தங்கள் ஜூனியரை அனுப்பி வாங்கிக் கொள்வார்கள்.

அப்படித்தான் பார்க்கவி, நிசப்தியை விக்ரமின் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது. முதலில் நிசப்தி மறுத்தாலும், பின் இந்த காரணங்களைச் சொல்லி காட்சிப் பொருளாக விரும்பாமல்தான் வந்திருந்தாள். அவளுக்கு விக்ரமை நேரில் பார்க்கப் போகிறோம் என்பதே எரிச்சலைக் கொடுத்திருந்தது.

அந்த எரிச்சலை முகத்தில் காட்டமுடியாமல் பெரும் பிரயத்தனம் செய்து அமர்ந்திருந்தாள். தனக்கு எதிரில் அமர்ந்திருந்தவளைப் புருவம் சுருக்கிப் பார்த்தான் விக்ரம். “நீ அந்த பொண்ணுதானே? விக்னேஷ் மேரேஜ் பண்ண இருந்த பொண்ணு. பார்க்கவிகிட்டயா நீ ஜூனியரா ப்ராக்டிஸ் பண்ற?” எனக் கேள்விகளைக் கேட்க,

“ம்ம், ஆமா…” என்ற ஒற்றைச் சொல்லோடு நிறுத்திக் கொள்ள, “வெரிகுட்!” என்று சொன்னவன், ஒரு மாதிரி பார்த்தானேத் தவிர, வேறொன்றும் சொல்லாமல் அவளிடம் இருந்த கேஸ் கட்டை வாங்கிக்கொண்டு, அதிலிருந்த சிலவற்றைக் குறிப்பெடுத்துவிட்டு திருப்பிக் கொடுத்தான். அந்த பத்து நிமிடமும் நெருப்பின் மேல் அமர்ந்திருந்ததைப் போல் அமர்ந்திருந்தாள் நிசப்தி.

விக்ரம் திருப்பி கேஸ்கட்டை கொடுக்கவும், “தேங்க்ஸ்!” என்று முணுமுணுத்துவிட்டு, வேகமாக வெளியேறியவள், வெளியில் நின்றிருந்த ஸ்வாதியைக் கவனிக்காமல் இடித்துக் கொண்டு வெளியில் செல்ல, “இடியட்… அறிவில்ல.” என்ற ஸ்வாதியின் வார்த்தைகள் காற்றோடு போயிருந்தன.

இங்கு விக்னேஷிடம் ஸ்வாதி பற்ற வைத்த நெருப்பு ஜெகஜோதியாக வேலை செய்தது. நிசப்தி இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவாள் என்று அவன் நினைக்கவே இல்லை. திருமணம் நின்றுவிட்டது என்ற குற்ற உணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல், அந்த விக்ரம் பின்னே அலைபவளைக் கொன்று விடும் அளவிற்கான கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.

எந்தப் புள்ளியில் அவன் ஸ்வாதியை விரும்ப ஆரம்பித்தான் என்று தெரியாது. ஆனால் இப்போது அவன் மனம் முழுவதும் ஸ்வாதி மட்டுமே இருக்க, அவளை எப்படியேனும் தன்னிடம் கொண்டு வர வேண்டும் என்று, சில நாட்களாகவே நினைத்துக் கொண்டுதான் இருந்தான்.

ஆனால் அவளது திருமண வாழ்க்கையை நினைத்துதான் தயங்கிக் கொண்டிருந்தான். ஆனால் இன்றைய ஸ்வாதியின் பேச்சைக் கேட்ட பிறகு யோசிக்கவே இல்லை. விக்ரமிடம் இருந்து ஸ்வாதியைத் தூக்கிட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டான்.

அதற்கு முன் இதெற்கெல்லாம் காரணமான நிசப்தியை சும்மா விடக்கூடாது என்று முடிவு செய்து கொண்டான். சமயம் கிடைக்கும்போது அவளுக்கு ஒரு பாடத்தைக் கற்றுக் கொடுக்காமல் விடக்கூடாது என அந்த சமயத்திற்காகக் காத்திருந்தான்.

அன்றைய மருத்துவமனைக்குச் சென்று வந்த நாளுக்குப் பிறகு, விக்ரமின் முன்பு ஸ்வாதி மிகவும் அமைதியாகக் காணப்பட்டாள். ஏதோ இழந்ததைப் போலவே இருக்க, ஏன் இப்படி இருக்கிறாள் என யோசிக்க ஆரம்பித்தான். அடுத்து வந்த நாட்களும் அப்படியேதான் கழிந்தது. அவனிடம் பேசுவதையும் தவிர்த்தாள். தவிர்ப்பதைப் போல் நடித்தாள்.

ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் விக்ரம் இல்லை. அவனுக்கு இப்போது வேலைகள் அதிகம் இருந்தன. அரசியல்வாதிகளின் கருப்பு பணங்களை வெள்ளையாய் மாற்ற வேண்டும் என ஒரு ஆஃபர் வந்திருக்க, அதில் நுழைந்தால் நிச்சயம் பெரியளவில் வந்துவிடலாம், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும் என்று அதில் இறங்கிவிட்டான்.

அதற்காக நேரம் காலம் தெரியாமல் ஓட வேண்டியது இருந்தது. யாரை நம்பியும் பொறுப்பைக் கொடுக்க முடியாது என்பதும் இதில் முக்கியமாக இருக்க, வீட்டை மறந்து ஓடிக் கொண்டிருந்தான். அதோடு தேவைப்படும் போது ஸ்விஸ் வேறு செல்ல வேண்டிய கட்டாயம் இருக்க, அதற்கான ஏற்பாடுகளும் போய் கொண்டிருந்தது.

இப்படியான ஒருநாளில்தான் ரித்திக்கு பிரசவ வலி வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். சில மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒரு ஆண்குழந்தை பிறக்க, ரேணுகாவிற்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது.

தாயும் மகளும் குழந்தை பிறந்த பிறகு சம்பிரதாயமாக வந்து பார்த்ததோடு சரி. அதன்பிறகு மருத்துவமனையில் இருந்தவரை வரவே இல்லை. விக்ரமும் அப்போது ஊரில் இல்லாமல் இருக்க, ரவியும் ரேணுகாவும் மாறி மாறி இருந்தே சமாளித்தனர். இதில் ரேணுகாவை விட ரவிக்குத்தான் தன் தாய் மீது அதிகக் கோபம், வருத்தம் எல்லாம். ஸ்வாதியை பகலில் தனியாக விட்டு, மருத்துவமனையில் ரித்திக்குத் துணையாக இருந்தால், ரேணுகா இரவில் சமாளித்துக் கொள்வார். அந்த எண்ணம் கொஞ்சமும் இல்லாமல், மகளுக்குத் துணையாக வீட்டில் இருந்தாலும், அதைப் பற்றியே பேசவில்லை அவர். அதில் ரவிக்குத் தாய் மீது மிகுந்த வருத்தம்.

அன்று வேணுகோபால் மாலை நேர நடைப் பயிற்சிக்கு சென்றிருந்தார். அவருக்கு எதிரே விக்னேஷின் தந்தை வர, மரியாதைக்கு நின்று பேசலாம் என நினைக்க, அவரோ நிற்காமல் சென்றுவிட வேணுகோபாலிற்கு ஒரு மாதிரி ஆகிவிட, மன அழுத்தத்திற்கு ஆளானவர் அன்றிரவு மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

உஷாவும் நரேனும் இல்லாமல் தனியே சமாளிக்க வேண்டியக் கட்டாயம் அவளுக்கு. எல்லாவற்றிற்கும் ஓடி ஒடியே ஓய்ந்து போயிருந்தாள். அடுத்த நாள் காலை நரேன் வந்துவிட, அதன்பிறகே சற்று ஆசுவாசம் ஆனாள் பெண்.

நிசாவிடம் பேசியபடியே நடந்து வந்தவனின் எதிரில் விக்ரமும் ரேணுகாவும் வர, இவர்களை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை. அங்குதான் ரித்தியையும் சேர்த்திருந்தனர். அன்றைக்குப் பிறகு ரேணுகா, நரேனைப் பார்க்கவில்லை. விக்ரமும் அன்று மருத்துவமனையில் பார்த்தபிறகு இன்றுதான் பார்க்கிறான்.

என்ன பேச, என்ன சொல்ல எனத் தெரியாமல் நரேன் அமைதியாக நிற்க, “எப்படி இருக்க நரேன்? என்ற விக்ரமின் கேள்விக்கு தலையை மட்டுமே அசைத்தான் நரேன்.

ரேணுகாவோ நரேனுக்கு அருகில் குழப்பமாக நின்றிருந்த நிசப்தியைத்தான், ‘யார் இந்தப் பெண்?’ என யோசனையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“யாருக்கும் ஹெல்த் இஷ்யூவா?” எனக் கேட்டவனிடம்,

“அப்பாவுக்கு செகண்ட் அட்டாக், இங்க அட்மிட் செஞ்சிருக்கோம்.” எனப் பட்டும் படாமல் பதில் சொன்னவன், கிளம்புகிறோம் எனும் விதமாக இருவரிடமும் தலையை ஆட்டிவிட்டு, “போகலாம் நிசா.” என்று நிசப்தியின் கையைப் பிடித்துக்கொண்டே நகர்ந்துவிட்டான்.

‘நிசா’ என்ற பெயரைக் கேட்டதும் வேகமாக மகனைப் பார்த்தார் ரேணுகா. அவனோ கடந்து சென்றவர்களின் முதுகையே வெறித்துக் கொண்டிருந்தான். அவன் ஆரம்பித்து வைத்த விளையாட்டு. ஒரு பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது. மற்றொருவனின் வாழ்க்கயையே திசைமாற்றி விட்டது. ஏனோ தன் பிள்ளைகள் மேல் இருந்த நம்பிக்கை பொடிப் பொடியாக நொறுங்குவதைப் போல் உணர்ந்தார் ரேணுகா.

இனி எதையும் பேசி ஒரு வாக்குவாதத்தையோ, அவனின் நியாயப்படுத்தலையோ கேட்க அவர் விரும்பவில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற ரீதியில் முன்னே நடக்க ஆரம்பித்துவிட்டார்.

அடுத்த இரண்டு நாட்களில் ரித்தியை டிஸ்சார்ஜ் செய்து, ரேணுகா தன்னோடு அழைத்து வந்துவிட்டார். ஸ்வாதி ஏன் வரவில்லை, என்ன காரணம் என எதையும் கேட்கவில்லை. அவள் எதற்கும் தகுதியில்லாதவள் என்ற எண்ணம் அவருக்கு ஆழமாக பதிந்து போய்விட்டது.

அந்த இரண்டு நாளில் நிசப்தியையோ, நரேனையோ பார்க்க நேர்ந்தால், தன் பிள்ளைகளுக்காக தான் மன்னிப்புக் கேட்கலாம் என்று நினைத்திருந்தார் அந்தப் பெண்மணி. ஆனால் அவர்கள் ரேணுகாவின் கண்ணிலேயே படவில்லை. அவருக்குத் தெரியாதது ஒன்று, இவர்களைப் பார்த்த அன்றிரவே வேணுகோபாலை வேறு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தான் நரேன்.

அவர்களைப் போல் அவனால் இயல்பாகப் பேசவோ, நடந்துகொள்ளவோ முடியவில்லை. நிசாவிடம் பேசி சம்மதிக்க வைத்து உடனே மாற்றியிருந்தான். இதை அறியாதவர் கிடைக்கும் நேரமெல்லாம் தன் வயதையும் பொருட்படுத்தாது மருத்துவமனைக்குள் தேடி அலைந்தார்.

மீண்டும் நாட்கள் இயந்திரக் கதியில் ஓட ஆரம்பித்தது. விக்னேஷின் வீட்டில் பெண் பார்க்கலாம் எனும் போது, ஸ்வாதியைப் பற்றி சொல்ல முடியாமல், ‘கொஞ்சம் டைம் வேணும்’ என்றுவிட்டான்.

அவன் வீட்டிலோ நிசப்தியை மறக்க முடியாமல்தான், வேறு திருமணத்தைத் தவிர்க்கிறான் என்று நினைத்து, அந்த வீட்டின் பெண்கள் அனைவரும் நிசப்தியின் வீட்டிற்குச் சென்று அவளையும், அவள் நடத்தையையும் கேவலப்படுத்திவிட்டு வர, மொத்தமாக உடைந்து போனார் வேணுகோபால்.

நரேனுக்கு தெரிந்ததும் ஆத்திரத்தில் விக்னேஷை சென்று சந்தித்தவன், “நீங்களாதான் பொண்ணு கேட்டு வந்தீங்க. அப்புறம் நீங்களாதான் வேண்டாம்னும் சொன்னீங்க. அன்னைக்கு விக்ரம் சார் கடத்துனதும் உங்களுக்கு இடைல பிரச்சினையினாலதான். இதுல நிசப்தி எங்க வந்தா? அவளை ஏன் நீங்களும் உங்க வீட்டு ஆட்களும் இவ்வளவு டார்ச்சர் பண்றீங்க? வேண்டாம்னு சொன்னதும் ஒதுங்கி வந்தாச்சு இல்ல, இன்னும் இன்னும் ஏன் அந்தப் பொண்ணோட மனசை நோகடிச்சு சந்தோசப்படுறீங்க…” எனக் கத்தியவன்,

“உங்க மேல எனக்கு மதிப்பு இருந்தது. மரியாதையும் இருந்தது. ஆனா இந்த நிமிசம் அப்படி எந்த கண்றாவியும் உங்க மேல இல்ல. தயவு செய்து இனி நிசாவைத் தொல்லை பண்ணாம இருங்க போதும்.” என்று சொன்னவன் வெளியேற,

“அவ என்ன பெரிய ஒழுங்கா? இல்ல உத்தமியா? அந்த விக்ரம் நாய்க்கு கல்யாணம் ஆச்சுனு தெரிஞ்சும் அவன் பின்னாடி அலையிறாளே, இவளுக்கு எல்லாம் வெட்கம், மானம் எதுவும் இருக்காதா… ச்சே! என்ன ஜென்மம்? இப்படித்தான் இன்னொரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுப்பாங்களா? ஆமா எனக்கு அவளைப் பார்த்ததும் பிடிச்சது. கல்யாணம் செஞ்சி என்கூடவே வச்சிக்கணும் நினைச்சேன். எல்லாமே முறைப்படித்தான் செஞ்சேன். ஆனா அவளுக்கு நான் ஒருத்தன் பத்தாது போல, அந்த விக்ரமும் தேவை போல. இவளும் சரியில்ல, இவளோட வளர்ப்பும் சரியில்ல…” என விக்னேஷ் சொல்லி முடிக்கும் முன்னே அவன் மீது பாய்ந்திருந்தான்.

விக்னேஷின் ஆஃபிஸ் என்பதால் சட்டென்று ஆட்கள் கூடி இருவரையும் பிரிக்க, அடங்காத காளையாய் சிலிர்த்து நின்ற நரேனை, கொலை வெறியோடு முறைத்துக் கொண்டிருந்தான் விக்னேஷ். அப்போதே அவன் மனதில் நிசப்தியை ஒன்றுமில்லாமல் ஆக்கும் திட்டம் உருவாகியிருந்தது.

நரேன் சென்று வந்ததை யாரிடமும் சொல்லவில்லை. விக்னேஷை மிரட்டி விட்டதாக நினைத்து அவன் பொள்ளாச்சி கிளம்பிவிட, திமிரேறிய காளைக்கு கொம்பு சீவி விட்டுச் சென்றதை அப்போது அவன் மறந்திருந்தான்.

ஸ்வாதியின் மாற்றங்களை நண்பனிடம் பகிர்ந்திருந்தான் விக்ரம். “வர வர ஸ்வாதியோட கோபமும் பிடிவாதமும் அதிகமாகிட்டே போகுது ரவி. அம்மாவுக்கு என்னால பதில் சொல்ல முடியல. அவளுக்கு என்ன வயசா போயிடுச்சு? இப்பவே டெஸ்ட் டியூப் பேபி போலாம், வாடகைத்தாய் அரேன்ஞ்ச் பண்ணலாம்னு அவ்வளவு சண்டை. இதெல்லாம் அம்மாவுக்கு தெரிஞ்சா…” என புலம்ப,

ரவியும் தங்கையின் முட்டாள்தனத்தில் கோபம் கொண்டவன், “இதெல்லாம் ஏன்டா சொல்லல? என்னமோ இப்போ எல்லாம் முன்ன மாதிரி நாம க்ளோசா இல்லையோனு அடிக்கடி தோனும். இப்ப அது நிஜமாவே ஆகிடுச்சு. ஒரே குடும்பத்துல இருக்கோம், ஆனா எதுவுமே தெரியல. அத்தைக்கிட்ட இப்போ எதுவும் சொல்ல வேண்டாம். நான் ஸ்வாதிகிட்ட பேசுறேன். அவ கேட்பா… வீம்பு செய்யட்டும் அப்புறம் பேசிக்கிறேன்.” எனக் கோபத்தில் ரவி கத்த,

“விடு ரவி, சொன்னா புரிஞ்சிப்பாதான்… கொஞ்ச நாள் போகட்டும். இதுவே அவளுக்கு அதிர்ச்சி. இதுல நானும் இப்போ குழந்தை வேண்டாம், அது இதுன்னு சொல்லி அதுவும் அவளுக்கு கோபமா இருக்கும். பேசி புரிய வைக்கலாம், ஆனா அம்மாதான் பாவம். இதெல்லாம் நினைச்சு ரொம்பவே வருத்தப்படுறாங்க.” என்றவன் அதோடு கிளம்பிவிட, ரவிக்கு ஒரே யோசனை.

கிட்டத்தட்ட எட்டு மாதங்களாகத் தன் வீட்டில்தான் இருக்கிறாள். அங்கு போகிறேன் என வாய் வார்த்தையாகக்கூட கேட்கவில்லை. விக்ரமும் வா என்று அழைக்கவில்லை. சரி சிறியவர்கள்தான் இப்படியென்றால், இந்த அம்மாவிற்கு என்ன ஆனது? ஏன் அவர் ஸ்வாதியிடம் இதுபற்றி பேசவே இல்லை. நானும் ரித்தியின் நலனை நோக்கி இதை விட்டுவிட்டேனே. முதலில் அம்மாவிடம் இதுபற்றி பேச வேண்டும் என்ற முடிவோடு வீட்டுக்கு வர, இங்கு நரேன் வந்து பேசிச் சென்ற அடுத்த நாள் நிசப்தியைக் கடத்தியிருந்தான் விக்னேஷ்.

(மக்களே எல்லாரும் விக்கி, நிசப்தியைக் கடத்தி வச்சிருந்த சீனுக்கு ஒருதபா ஓடிட்டு ஓடி வந்துடுங்க.)

***

You may also like

3 comments

M. Sarathi Rio March 11, 2026 - 4:02 pm

அடப்பாவி விக்கி ! முதல்ல உன் முதுகில இருக்கிற அழுக்கைப் பாருடா, பெருசா நிசாவை குறை சொல்ல போயிட்ட.

😀😀😀
CRVD (or) CRVS2797

Reply
Vathani S March 11, 2026 - 4:27 pm

மிக்க நன்றி சிஸ்

Reply
Abirami March 11, 2026 - 10:27 pm

Really super story sis.. Interested.. Nisha Naren and usha pavam. swathi ena ipdi iruka? Unakaga ellaraum ipdii seiyalama? Vikkimela aasapatu rithu naren love ah pirichu vikrama marriage pani avankudaum vazhama chumma irukura nishava ipdi potukuduthu palivangra.. Rithi lovela nambikai rumba mukiyam. Narenuku usha than correct… Keep going sis. Waiting for muthamazhai ennil Kotti theerkathee.

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured