தளிர் 31
தனக்கு தகவல் கிடைத்த அடுத்த நொடி கிளம்பிய விக்ரம், எத்தனை வேகத்தில் வந்தானோ, அவன் அங்கு வரும் பொழுது அந்த இடமே மயான அமைதியைக் கொண்டிருந்தது.
தன் பாதுகாப்பிற்காக வைத்திருந்த பிஸ்டலை எடுத்தவன், சுற்றுப்புறத்தை பார்வையில் அலசியவாறே உள்ளே வந்தவனின் விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய, உடல் இறுகிப் போனது.
‘முடிந்தது! எல்லாம் முடிந்தது! எல்லாமே முடிந்தது!’ என்ற எண்ணத்துடன், அரைகுறை ஆடையுடன் அந்த அறையின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்த நிசப்தியின் உடல், அதிர்ச்சியிலும் பயத்திலும் நடுங்கிக் கொண்டிருக்க, அவளுக்கு முன்னே ரத்தவெள்ளத்தில் கிடந்தான் விக்னேஷ்.
நிச்சயம் இப்படி ஒரு நிகழ்வை அவன் கனவிலும் கூட யோசித்துப் பார்த்தது இல்லை. ஏதோ தன்னைப் போல அவளைக் கடத்தி, மிரட்டிப் பின் விட்டுவிடுவான் என்று நினைக்க, நடந்ததோ முற்றிலும் வேறு.
அதிலும் முழங்காலிட்டுத் தன் மேலாடை இல்லாத உடலை மொத்தமாகக் குறுக்கி, விழிகளை இறுக்க மூடி, அமர்ந்திருந்தவளின் உடல் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்திருந்தது.
சட்டென்று தன் அதிர்ச்சியில் இருந்து வெளியில் வந்தவனின் மூளை வேகமாக வேலை செய்தது. விக்னேஷின் அருகில் சென்று அவனுக்கு சுவாசம் இருக்கிறதா எனப் பார்க்க, சுத்தம்! பதட்டத்தில் அவனால் அதை உணர்ந்துகொள்ள முடியாமல் போனது.
பின் ஓரிரு நொடிகள், தன்னை நிதானப்படுத்திவிட்டுப் பார்க்க, அவனது மூச்சு நின்று சில நிமிடங்கள் ஆனது போல் தோன்ற, அடுத்து எதையும் யோசிக்காமல், தன் சட்டையைக் கழட்டி ஓரமாய் ஒடுங்கியிருந்தவளை அந்தச் சட்டையிலேயே சுற்றித் தூக்கிக் கொண்டு, வேகமாக அந்த இடத்தில் இருந்து வெளியில் வந்தான்.
பார்வை மீண்டும் சுற்றிலும் அலச, ஆட்கள் யாரும் இல்லாமல் போனதும் இப்போது வசதியாகிப் போக, அவளைத் தன் காரில் அமர வைத்து காரை பூட்டியவன், மீண்டும் அந்த வீட்டுக்குள் ஓடினான்.
நிசப்தி அங்கிருந்ததற்கான அடையாளங்களையும், தான் வந்து சென்ற அடையாளத்தையும் உடனே அழித்தவன், கீழே கிடந்த விக்னேஷைப் பார்த்து பெருமூச்சு விட்டுவிட்டு வெளியில் ஓடினான்.
காரில் ஏறியவனுக்கு வெகுவாக நடுங்கியவளைப் பார்த்துப் பரிதாபமும், இந்த நிலைக்கு கொண்டு வந்தவனின் மீது கோபமும்தான் வந்தது. அதோடு முதலில் இருவரும் இங்கிருந்து கிளம்பியே ஆகவேண்டும் என்று புரிய அசுர வேகத்தில் வாகனத்தை இயக்கினான்.
அந்தக் காட்டில் இருந்து வெளியில் வந்ததும் காரை நிறுத்தியவன் தன் ஆட்களுக்கு அழைத்து, “பாய்ஸ், நான் சொல்ற இடத்துக்கு உடனே போங்க. அங்க ஒரு பாடி இருக்கும், அதை ஆக்சிடென்ட் பேஸ்ல டிஸ்போஸ் பண்ணிடுங்க. அந்த இடத்தை டோட்டலா சேன்ஞ்ச் பண்ணிடுங்க. யாருக்கும் எந்த எவிடென்சோ, இன்ஃபர்மேஷனோ கிடைக்கக்கூடாது. முடிச்சிட்டு எனக்கு சொல்லுங்க.” என்றவாறே நிசப்தியைப் பார்த்தான்.
அவளோ இன்னும் தன்னிலைக்கு வராமல் இருக்க போனை அணைத்தவன், நடுங்கியதில் அவள் ஆடை மீண்டும் நழுவ, அதைக்கூட உணராமல் இருந்தாள் பெண்.
நிசப்தியின் அருகில் நகர்ந்தவன் ஆபத்திற்கு பாவமில்லை என்று நினைத்து, அவளைச் சுற்றியிருந்த தன்னுடைய சர்ட்டை பிரித்து அவளுக்கு சரியாக மாட்டியவன் பட்டனை போட்டுவிட்டு, “நிசா… நிசா…” எனக் கன்னத்தைத் தட்ட, அவளிடமோ நேரெதிர் வெறித்த பார்வையைத் தவிர்த்து, மேலும் மேலும் குறுகியதைத் தவிர்த்து வேறு எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, விக்ரமிற்கு இப்போது பயம் தொற்றிக்கொண்டது.
அவளது நடுங்கிய உடலை மொத்தமாகத் தனக்குள் அடக்கியவன், தன் உடல் சூட்டை அவள் உணரும்படி செய்து கொண்டே பார்க்கவிக்கு வேகமாக அழைத்தான்.
“என்னாச்சு விக்ரம்?” என அவள் கேட்டு முடிக்கும் முன்னே,
“கவி நான் சொல்றதைக் கவனமா கேளு, ஏன் எதுக்குனு கேட்காம உடனே ஒரு லேடி டாக்டரை அழைச்சிட்டு என்னோட கெஸ்ட் அவுஸ் வந்துடு.” என வேகமாகச் சொல்ல,
“என்ன என்ன விக்ரம்? ஆக்சிடென்ட்டா இல்ல வேற என்ன?” எனத் தடுமாறியத் தோழியிடம், “ப்ளீஸ் கவி, வெரி அர்ஜென்ட், கொஞ்சம் சீக்கிரம் டாக்டரை அழைச்சிட்டு வா.” என்று வைத்து விட்டவனுக்கும், நடந்தது என்ன என்று தெரியாமல் பதில் சொல்ல முடியவில்லை.
தன் அணைப்பில் இருந்தவளுக்கு இன்னுமே நடுக்கம் குறைந்தபாடில்லை. வெகுவாக பயந்திருக்கிறாள், போராடியிருக்கிறாள் என்று அவளது ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்து புரிந்துகொண்டான்.
ஒரு பெண்ணை இந்தளவிற்கு கட்டாயப்படுத்த வேண்டுமா? என்றுதான் அவனுக்குத் தோன்றியது. அதோடு விக்னேஷ் பற்றி வெளியில் தெரிந்தால், அது நிசப்தியின் வாழ்க்கையையே முடித்துவிடும். இதில் இருந்து இவளை எப்படி வெளியில் கொண்டு வருவது என்றுதான் இப்போது அவனது யோசனை ஓடியது.
நிசப்தியின் நடுக்கம் கொஞ்சம் குறையவும், தன் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி வேகமாகக் காரை பறக்கவிட்டான். அவன் கெஸ்ட் ஹவுசை அடையும் முன்னே பார்க்கவி வந்து பதட்டமாகக் காத்திருக்க, வண்டியை நிறுத்திவிட்டு நிசப்தியைத் தன் கைகளில் அள்ளியபடி உள்ளே வந்தவனைப் பார்த்து அதிர்ந்து, “என்ன? என்ன விக்ரம்? ஏன் இப்படி? என்னாச்சு இவளுக்கு?” என பதட்டமாகக் கேட்க,
“ஷ்ஷ்… கவி, எனக்குமே என்ன நடந்ததுனு ஒன்னும் தெரியாது. அந்த பொண்ணு எழுந்தாதான் விசாரிச்சுத் தெரிஞ்சிக்க முடியும். அதுக்குத்தான் டாக்டரை அழைச்சிட்டு வரச் சொல்லியிருக்கேன்.” எனக் கடுப்பில் கத்தியவன், அறைக்குள் சென்று கட்டிலில் படுக்க வைத்தவன் டாக்டரிடம், “பாருங்க டாக்டர்.” என்றுவிட்டு வெளியில் வந்து சோபாவில் விழுந்தான்.
அவன் பின்னோடு வந்தவள், “என்ன விக்ரம் இதெல்லாம்? என்ன நடந்தது? எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” எனத் தான் ஒரு வக்கீல் என்பதையும் மறந்து பேச,
“ம்ச் கவி, இதுக்கே நீ இப்படி பயந்தா அடுத்து நடந்ததை நான் எப்படி சொல்ல?” என்றவன், ஒருமுறை மூச்சை இழுத்து ஆழ்ந்து சுவாசித்து விட்டவன், “விக்னேஷ் இஸ் நோ மோர்.” என்றான் அமைதியாக.
“என்ன சொல்ற? சரியா சொல்லு.” என மேலும் பதட்டத்துடன் கேட்க, “உனக்கு கேட்டது சரியாதான் கேட்டுருக்கு. அவன் இப்போ உயிரோட இல்ல. என்ன நடந்ததுனும் தெரியல.” என்றவன் தான் பார்த்ததைச் சொல்ல, முற்றிலும் உடைந்து போனாள் பார்கவி.
“கடவுளே, ஆம்பளன்ற திமிர். எவ்வளவு திமிர் இருந்தா இப்படியெல்லாம் நடந்திருப்பான்? அவனும் அவன் குடும்பமும்தானே முதல்ல அவளை வேண்டாம்னு சொன்னாங்க. அவ கொஞ்சம் டைம்தானே கேட்டா, ஏன் பொண்ணுங்க கொஞ்சம் யோசிக்கக்கூடாதா? நீங்க என்ன முடிவெடுத்தாலும் அதை அப்படியே ஏத்துக்கணுமா?
எங்களுக்கு எல்லாம் எங்க வாழ்க்கையைத் தீர்மானிக்கிற உரிமை இல்லையா? அவ இந்தளவுக்கு இறங்கியிருக்கான்னா, அந்த பொறுக்கி எவ்வளவு தரமிறங்கி போயிருக்கணும் ச்ச்சே… இவனையெல்லாம் உயிரோட கொளுத்தியிருக்கணும்.” எனப் பொருமிக் கொண்டிருந்தவள் கடைசியாக, “இதுக்கு பிள்ளையார் சுழிப் போட்டதே நீதான்டா. முதல்ல உன்னைக் கொன்னுருக்கணும்.” என இருந்த ஆத்திரத்தில் அவனை ஓங்கி அறைந்துவிட்டாள்.
அவனுக்குமே தன்னுடைய செயல்தான் இதெற்கெல்லாம் மூலக்காரணம் என்று தெரிய, அதோடு ரேணுகா சொன்ன, ‘பெண் பாவம் பொல்லாதது விக்ரம், அதுக்கான கர்மா நம்மளை மொத்தமா எழவிடாம செஞ்சிடும்.’ என்ற வார்த்தைகள் வேறு ஒலிக்க அமைதியாகவேப் பார்த்திருந்தான்.
வெளியே அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் வேறு யோசனைகள் ஓடிக் கொண்டிருந்தது விக்ரமிற்கு. அவனுடையத் திட்டப்படி விக்னேஷை ஆக்சிடென்ட் போல செட் செய்திருந்தால், ஓரளவுக்கு இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். அப்படி இல்லையென்றால் நிச்சயம் நிசப்தி இதில் சிக்கிக் கொள்ளும் அபாயம் இருக்கிறது. அதோடு அவளைக் காப்பாற்றிய அவனும்.
அப்போதுதான் மற்றொன்றும் ஞாபகம் வந்தது. அங்கு விக்னேஷின் கார் வேறு நின்றிருந்தது. அதையும் அங்கிருந்து மாற்ற வேண்டும் என்பதைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல் விட்டது ஞாபகம் வர, உடனே தன் ஆட்களுக்கு அழைக்க, “பாஸ் நாங்க ஸ்பாட்டுக்கு வந்துட்டோம், நீங்க சொன்ன மாதிரி பக்காவா ப்ளான் பண்ணிட்டோம். இனி வெளியே கொண்டு போகணும் அவ்வளவுதான்.” என எதிரில் இருந்தவன் அவசரமாகப் பதில் சொல்ல,
“இல்ல, ம்ச்… அது இல்லடா. அங்க ஒரு கார் நிக்குதா? அந்த கார் வச்சுதான் இந்த ஆக்சிடென்ட் ப்ளான் பண்ணணும். அவனோட கார்தான் அங்க நிக்கிறது. அதை வச்சே ஏற்பாடு பண்ணுங்க.” எனச் சொல்ல அந்தப் பக்கம் இருந்தவனோ, “ஓகே பாஸ், ஓகே பாஸ்.” என்றவன் அவன் வேலையைப் பார்க்க, இங்கு பார்க்கவியோ விக்ரமைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“விக்கியோட கார் அங்க இருந்தது. ஏற்கனவே இதை ஒரு ஆக்சிடென்ட் கேஸ் போலத்தான் க்ரியேட் செய்ய சொல்லியிருந்தேன்.” எனப் பெருமூச்சு விட்டவன், “அவளோட அப்பாவுக்கு இந்தப் பிரச்சனைப் பத்தி எதுவும் சொல்லாம, லேட் நைட்ல வந்ததால் பொறுக்கிப் பசங்க பிரச்சனை பண்ணிட்டாங்க, அதுல பயந்து வண்டியோட விழுந்துட்டா இப்படி எதாச்சும் சொல்லி மேனேஜ் பண்ணு. உண்மையை சொல்ல வேண்டாம்.” என்றவன்,
“இந்தப் பொண்ணுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் முடிக்கணும்.” எனும்போது, நிசப்தி இருந்த அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தார் மருத்துவர்.
அவரைப் பார்த்ததும் இருவரும் எழுந்து நிற்க, “விக்ரம் நீங்க நினைக்கிற மாதிரி, பயப்படுற மாதிரி எதுவும் நடக்கல. ஆனா…” என இழுக்க,
‘ஷப்பா!’ என பெருமூச்சு விட்டு, ஆசுவாசம் ஆவதற்குள் அந்த ஆனாவைக் கேட்டு பதற்றம் வந்துவிட்டது இருவருக்கும். “ஆனா, ஆனா என்ன டாக்டர்?” என பார்க்கவி பதற, “ம்ச்… கவி காம் டவுன்.” எனத் தோழியை அதட்டியவன் மருத்துவரிடம், “என்னாச்சு டாக்டர்?” என்றான் இறுகியக் குரலில்.
“விக்ரம், அந்த பொண்ணை ஓவர் டார்ச்சர் செஞ்சிருக்காங்க. மனசளவுலயும் உடலளவுலயும். இவங்கள எல்லாம் சும்மா விடக்கூடாது. என்ன ஜென்மங்களோ! ச்சே! மேல் காயத்துக்கு நான் மருந்து போட்டுருக்கேன், இன்னைக்கு நைட் கண்டிப்பா ஃபீவர் வரும். பெட்டர் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணிடுறது நல்லது. எதுக்கு சொல்றேன்னா இன்னுமே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிய வரல. இனி ஃபீவர் வந்தா கண்டிப்பா ஃபிட்ஸ் வரவும் வாய்ப்பிருக்கு. சோ பெட்டர் ஷீ வில் அண்டர் ஹாஸ்பிடலைஸ்ட்.” எனவும் யோசனையானான் விக்ரம்.
பின் பார்க்கவியிடம் திரும்பி, “நீ எதுவும் சொல்லாம அவளோட அப்பாவை இங்க வரச் சொல்லு கவி.” என்றவன் டாக்டரிடம், “டாக்டர் ப்ளீஸ், எனக்கு இந்த ஹெல்ப் நீங்க கண்டிப்பா செய்யணும். உங்க ஹாஸ்பிடல்ல இருந்து ஒரு நர்ஸ் ஆர் டாக்டர் இங்க இருந்து பார்த்துக்க முடியுமா?” என மறுக்க முடியாதபடி கேட்க, அந்த மருத்துவரும் நிசப்தியின் நிலையைப் பார்த்ததால் சரியென்றபடி அதற்கான ஏற்பாட்டை செய்தார்.
பார்க்கவியும் வேணுகோபாலிற்கு சொல்லியிருக்க, அவரும் உடனே வந்திருந்தார். குழப்பமாக வந்தவர், அங்கு விக்ரமைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.
மகளுக்கு ஏதோ ஆபத்து என்பது மட்டும் புரிய, வேகமாக வந்து அவன் சட்டையைப் பிடித்து, “நாங்க என்னடா பாவம் பண்ணோம்? இன்னும் ஏன்டா எங்களைப் பழிவாங்குற? என் பொண்ணு என்ன பாவம் செஞ்சா? சொல்லு, உனக்கு அப்படி என்ன பாவம் செஞ்சா? நாங்க உண்டு எங்க பொழப்பு உண்டுனு இருந்தோம். எங்க இருந்தோ வந்து எங்க வாழ்க்கையைக் கெடுத்துட்டியே பாவி, பாவி. நீயும் ஒரு பொண்ணு வயித்துலதானே பிறந்த? உங்கூடவும் ஒரு பொண்ணு பொறந்திருக்காதானே? அந்த கஷ்டம் என்னனு தெரியாதா? அப்போ உன்னோட வளர்ப்பு அப்படியா?” என தன் ஆவேசத்தை எல்லாம் கூட்டி விக்ரமை உலுக்க, அவனால் என்ன பதில் சொல்லிட முடியும்?
அவர் கேட்கும் கேள்விகள் அனைத்தும் நூறு சதவீதம் உண்மை எனும் போது, அவனால் என்ன பதில் சொல்லிட முடியும்? அமைதியாகவே நிற்க, பார்க்கவிதான் அவருக்கு விசயத்தைச் சொல்லி புரிய வைத்திருந்தாள்.
அதைக் கேட்டவர் பதிலேதும் சொல்லாமல் மகளின் அறைக்குச் சென்றார். அங்கோ துவண்ட கொடியாய் கிடந்தவளைப் பார்க்க உயிர் மொத்தமும் வடிந்திருந்தது அந்த மனிதருக்கு. இன்னும் என்ன என்ன கஷ்டங்களை எல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ என்று, மனதளவில் இறந்துவிட்ட நிலையில் நிசப்தியின் அருகில் அமர்ந்தார்.
கிட்டத்தட்ட எல்லாம் முடிந்த நிலை என்பார்களே, அப்படித்தான் வேணுகோபாலின் நிலை இருந்தது. ஆசை ஆசையாகப் பெற்ற ஒற்றை மகள். அவளை இப்படி பார்க்க, தான் இல்லாமலே போயிருக்கலாமே என்றுதான் அவர் எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.
வெளியில் விக்ரமின் போன் அடிக்க, அவனது காட்ஸில் ஒருத்தன்தான் அழைத்திருந்தான். எடுத்து, ‘ஹலோ’ எனும் முன்பே “பாஸ், நீங்க சொன்னபடியே பாடியை டிஸ்போஸ் பண்ணியாச்சு. காரோட பின் பக்கம் ஃபுல்லா தீப்பிடிக்க வச்சாச்சு. அந்த பாடிலயும் அங்கங்க பெட்ரோல் விட்டு எரிய வச்சாச்சு. ஓகேவா இல்ல மொத்தமாவே கொளுத்திடவா?” எனக் கேட்க,
“ம்ம் போதும், நீங்க கிளம்புங்க. பட் யாராவது ஒருத்தர் அந்த வீட்டை வாட்ச் பண்ணிட்டே இருங்க. அண்ட் அந்த ஆக்சிடென்ட் பார்ட்டையும்.” என்றவன் போனை வைத்துவிட்டு பார்க்கவியிடம், “நீ கிளம்பு கவி, அதான் டாக்டரும் நர்சும் வந்துடுவாங்களே, நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். மார்னிங்க் வா, நான் இங்க பார்த்துக்குறேன்.” என அவளை அனுப்பிவிட்டு சோபாவில் சாய்ந்தவனுக்கு, எப்படி இதை சரி செய்ய போகிறோம் என்ற எண்ணம் மட்டுமே மூளையை வியாபிக்க, மற்ற யோசனைகள் அனைத்தும் அவன் வசம் இல்லை.
இங்கு, “டாக்டர் எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல. என்னோட விக்கி எனக்கு முழுசா வேணும். அது எவ்வளவு நாள் ஆனாலும் பரவாயில்லை. ப்ளீஸ், அவனைக் காப்பாத்துங்க டாக்டர் ப்ளீஸ்.” எனப் பைத்தியம் போல் அந்த மருத்துவரிடம் கத்திக் கொண்டிருந்தாள் ஸ்வாதி.
***
3 comments
அடப்பாவி விக்கி ! இந்த ஸ்வாதி பேச்சைக் கேட்டு கேட்டு மிருகமாவே மாறிட்டான் போல.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Ivanukku love vanthathunu sonna nambave mudila.. idhula oru paithiyaththukku support vera
Idhu ellaaththukkum aramba pulliye Vikram than