Home Antiheroதளிர் – 48

தளிர் 48

‘விக்னேஷ் இறந்த பிறகுதான் ஸ்வாதி மூர்க்கமா மாறி இருக்கா, அவனுக்காக… அவன் இறந்துட்டான்னதும் அவளும் உயிரை விட்டுருக்கா.’ என்ற ரவியின் வார்த்தைகளே, இந்த இரண்டு நாட்களாக விக்ரமின் மூளையை சூடாக்கிக் கொண்டே இருந்தது.

அன்று ரவி வந்து பேசிச் சென்றதில் இருந்து, அவன் கூறிய செய்தியில் இருந்து வெளிவரவே சில நிமிடங்கள் ஆனது விக்ரமிற்கு. ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் சிரமமாக இருந்தது. தன் மனைவி தன்னிடம் நடித்திருக்கிறாள் என்ற உண்மையை, ஏற்கவே அவனுக்கு முடியவில்லை. எல்லோரும் சேர்ந்து அவளை மறக்கவும், நிசாவை ஏற்றுக் கொள்ளவும் தன்னிடம் நடிக்கிறார்களோ என்றுகூட யோசித்தான். ஆனால் அவர்கள் யாரும் நிசாவைப் பற்றியோ, அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையைப் பற்றியோ பேச்சே எடுக்கவில்லை.

அப்போது நான் யார்? அவள் என்னை யாராக பார்த்திருந்தாள்? பழகியிருந்தாள்? புரியமால் அலைமோத ஆரம்பித்தான். அவள் எப்படியோ, ஆனால் விக்ரம் உண்மையாகத்தானே அவளை விரும்பினான். அவள் இல்லை என்பதை உணரவே சில நாட்கள் ஆனது. அடுத்து அவளது துரோகம்! இதை எப்படி தாங்க?

‘துரோகம்!’ இந்த வார்த்தையின் வீரியம் அதன் வலியை உணர்ந்தால் மட்டுமே, புரியும் என்று சொல்வதைப் போல, உணர்ந்த இந்த வலியைத்தான் அவனால் தாங்க முடியவில்லை. எல்லோரிலும் கோபத்தைக் காட்டினான்; மூர்க்கமானான்; அழுத்தமானான்; இறுக்கமானான்.

தோல்வி… வாழ்க்கையில் தோல்வி, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்ததில் பெருந்தோல்வி. தான் ஒரு ஆண்மகன் என்று சொல்லவே வெட்கினான்.

தன்னிடம் வரும் வழக்குகளை அனாயசாமாக வென்று வாகை சூடியவனுக்கு, இந்த தோல்வி உச்சத்தில் இருந்தவனை மொத்தமாகத் தரையில் விழத் தட்டியிருந்தது போல் ஆக்கியிருந்தது. தனிமையை நாடினான்; யோசித்தான்; தெளிந்தான்; மீண்டு வந்தான் புது விக்ரமாக.

மது போதையில் இருந்தும், மனைவியின் போதையில் இருந்தும் முற்றாக வெளியில் வந்தான்.

ஸ்வாதி இல்லையென்று எல்லோருக்கும் தெரிந்திருந்தது, ஆனால் அவள் செய்துவிட்டு போனது அவர்கள் குடும்பத்தைத் தாண்டி வெளியில் போகவில்லை. போக ரவி விடவில்லை.

திருமணமான தன் தங்கை வேறு ஒருவனுக்காக தற்கொலை செய்திருக்கிறாள், உயிரை விட்டிருக்கிறாள் என்று எப்படி வெளியில் சொல்லிவிட முடியும்?!

ஸ்வாதி இல்லாததால்தான் விக்ரம் மூர்க்கனாக தனக்குள் இறுகிக் கொண்டவனாக, அழுத்தமானவனாக, கோபக்காரனாக மாறிவிட்டான் என்று எல்லோரும் புரிந்துகொண்டனர்.

மகனின் வலியையும் வேதனையையும் உணர்ந்த ரேணுகா, நரேனிடம் இனி விக்ரமோடு இருக்குமாறு கேட்டுக்கொள்ள, உஷா இல்லாத வெறுமையான வாழ்க்கையில் அவனுக்கும் ஒரு பிடிப்பு வேண்டுமே… அதனால் அவருக்காகவும் நிசாவுக்காகவும் விக்ரமோடு இருப்பதற்கு சம்மதித்தான்.

சீறி வரும் காட்டாற்று வெள்ளமாய் மீண்டும் தன் ஓட்டத்தை ஆரம்பித்தான் விக்ரம். இதில் நியாய தர்மங்கள் என்றெல்லாம் ஒன்றையும் அவன் பார்க்கவில்லை.

அதோடு திருந்திவிட்டான், நிசாவையும் குழந்தையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறானா என்றால், இல்லை. நிசாவைப் பற்றிய அக்கறை கொஞ்சமும் இருக்கவில்லை. அவளைப்பற்றியோ குழந்தையைப் பற்றியோ பேச ஆரம்பித்தால், விக்ரம் மூன்று நாட்களாவது யாருக்கும் சொல்லாமல் எங்கேனும் சென்றுவிடுவான். அதனால் அதைப்பற்றி பேசுவதையே குறைத்துவிட்டனர்.

ரேணுகா, நிசப்தியை விட்டு எங்கேயும் நகரவில்லை. விக்ரமிடம் வந்த பிறகு நரேனுக்கும் ஓய்வு என்பதே இல்லை.

நிசப்திக்கு அப்போது ஒன்பதாம் மாதம் தொடக்கம். முடிந்தால் விக்ரமை அழைத்து வருமாறு நரேனிடம் கூறியிருந்தார் ரேணுகா. வரமாட்டான் என்று தெரிந்தும் கூற, நரேனுக்குதான் பெரும் சங்கடம்.

ஏதோ போனால் போகட்டும் என்றுதான் தன்னை சேர்த்துக் கொண்டதே, இதில் அவனிடம் எப்படி ரேணுகா அழைத்ததை சொல்ல? இப்போதெல்லாம் வேலையைத் தவிர்த்து வேறொன்றையும் அவன் பேசுவதே இல்லை. அப்படியே பேசினாலும், ‘உன்னோட வேலையை மட்டும் பார்’ என்று முகத்துக்கு நேராக சொல்லி விடுவான்.

அவனாக இறங்கி வந்து கேட்கும் வரை எதுவும் சொல்லக்கூடாது என்ற முடிவுக்கு வந்தவன், விக்ரமிடம் சொல்லிவிட்டு மாலத்தீவு சென்றுவிட்டான்.

இங்கு, “ரித்திமா, டைமாச்சு டிபன் ரெடியா?” என்றபடியே வந்த ரவி, அங்கு மதியழகி சாப்பாட்டை எடுத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்து, “கிருத்திகா…” என கோபமாகக் கத்தினான்.

கோபத்தில் மட்டுமே தன் முழுப்பெயரைக் கணவன் உச்சரிப்பான் என்பதை உணர்ந்த ரித்தி, “என்ன… என்ன…” என பதறியபடி குழந்தையோடு வெளியே வர, அவளைப் பார்த்து பல்லைக் கடித்தவன்,

“உங்கிட்ட எத்தனை முறை சொல்லிருக்கேன், வேற யாரும் எனக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லன்னு? நான் கிளம்புற நேரம் உன்னால முடிஞ்சா வந்து செய், இல்லையா சொல்லிரு. அதை விட்டுட்டு எதுக்கு கண்டவங்களையும் என் முன்னாடி நிக்க வைக்கிற?” என மனைவியிடம் கத்திவிட்டு,

தாயின் புறம் பார்வையைத் திருப்பக்கூட செய்யாமல், அவர் கை வைத்த உணவைத் தொட்டுக்கூடப் பார்க்காமல், வேகமாக வெளியற, ‘ஷப்பா இவனோட…’ என பெருமூச்சு வாங்கினாள் ரித்தி.

அதைப் பார்த்த மதி, “என் பொண்ணு மொத்தமா என்னை விட்டுட்டு போனா, இப்போ என் பையனையும் எங்கிட்ட இருந்து பிரிச்சிட்ட. இப்போ உனக்கு நிம்மதியா? என்னைக்கு இந்த வீட்டுக்கு நீ வந்தியோ அப்போ இருந்துதான் இவ்வளவு பிரச்சனையும். என் பொண்ணுதான் நீ இந்த வாழ்க்கை வாழக் காரணம். அதை நீ எப்பவும் மறந்துடாத?” எனத் திடீரென்று ஆங்காரமாக கத்த,

“ஆமாம் நீங்க சொல்றதும் சரிதான், உங்க பொண்ணு போட்ட பிச்சதான் என் வாழ்க்கை, நான் ஒத்துக்குறேன். எங்கிட்ட சொன்ன இதே வார்த்தையை உங்க பையன்கிட்டயும் உங்களால சொல்ல முடியுமா? சொல்லுங்க, சொல்ல முடியுமா? எங்க வீட்டுல பிரச்சனை வேண்டாம்னு பார்க்குறோம். உங்க பொண்ணு பண்ணிட்டு போன கூத்துக்கு வேற யாரும் இவ்வளவு அமைதியா போகமாட்டாங்க. எந்த தைரியத்துல நீங்க எங்கிட்ட பேசுறீங்க?

தெரியாமத்தான் கேட்குறேன், எந்த தைரியத்துல பேசுறீங்க? நான் இங்க இருக்குற வரைக்கும்தான் உங்களுக்கும், உங்க புள்ளைக்கும் மரியாதை. நான் இங்க இருக்கமாட்டேன்னு ஒரு வார்த்தை சொன்னா போதும், என் அண்ணனும் அம்மாவும் சும்மா இருக்க மாட்டாங்க.” என்ற ரித்தியின் ஆவேசமான பேச்சில், மதி அடங்கிவிடுவார் என்றால் அது தப்பு.

ரித்தியின் இந்த பேச்சு அவரை மேலும் உசுப்பேத்த, “என்ன விட்டா பேசிட்டே போற? உன்னால என்ன பண்ண முடியும்? இல்ல, என் பையனாலத்தான் என்ன செய்ய முடியும்? யாரும் எதுவும் செய்ய முடியாது புரியுதா? ஆமா நான்தான் கொடுத்தேன், என் சொத்தெல்லாம் எழுதிக் கொடுத்தேன். என் பொண்ணுக்குதானே கொடுத்தேன். ஏன் அதை நீயும், உன் அண்ணனும் சுருட்டிட்டுப் போயிடலாம்னு பார்த்தீங்களா?” என எள்ளலாகக் கேட்க,

“போதும் நிறுத்துங்க, இதுக்கு மேல நீங்க ஒரு வார்த்தைப் பேசக்கூடாது. சொத்தா? அது எங்க இருக்கு உங்ககிட்ட? என் அண்ணங்கிட்ட இருக்குறதை விட அதிகமா இருக்கா? இப்போ கேட்டாலும் மொத்தமா தூக்கிக் கொடுப்பான் விக்ரம். அவன் சொத்துக்கு அலையிறானா? என்ன, உங்க தப்பை மறைக்க எங்களைக் காரணம் காட்டுறீங்களா? சொத்து மேல ஆசையில்லாதவதான் என் அண்ணனுக்குத் தெரியாம ஏமாத்தி சொத்தை வித்து, அழிச்சிட்டு செத்துப் போனாளா?” என அவரை விட கோபமாகவும் எள்ளலாகவும் ரித்தி பேச,

“போதும் ரித்தி…” என்ற குரல் வந்த திசையில் பார்த்த பெண்கள் இருவரும், அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

“நீ கிளம்பு, கொஞ்ச நாள் நம்ம வீட்டுல வந்து இருப்பியாம்.” என்ற விக்ரம் குரலில் நினைவுக்கு வந்தவள், அவனுக்கு அருகே இறுகிய முகத்துடன் நின்றிருந்த ரவியைக் கண்டதும், ‘இவன் அப்போ போகலையா?’ என்ற பதட்டத்தில் தலையைக் குனிந்துகொண்டாள்.

“கேட்டியாடா உன் பொண்டாட்டி பேசின பேச்சை? பெத்த பொண்ணை மொத்தமா தூக்கிக் கொடுத்துட்டு இருக்கவகிட்ட, என்ன பேச்செல்லாம் பேசுறா? இவளை நம்பி நான் இங்க இருந்தா, விசத்தை வச்சு கொல்லக்கூட தயங்கமாட்டா.” என மகனிடம் ஒப்பாரி வைக்க,

அதில் தங்கையின் கையைப் பிடித்த விக்ரம், ரேணுகாவிற்கு அழைத்தபடியே வெளியில் செல்ல,

“விக்ரம் நான் இன்னும் உயிரோடதான் இருக்கேன். எங்கிட்ட கேட்காம, சொல்லாம நீ என் மனைவியை அழைச்சிட்டுப் போறது சரியில்ல.” என ரவி காட்டமாகக் கூற,

“நீ ஒன்னுமே பேசல, கேட்கலன்னுதான் நான் கூட்டிட்டுப் போறேன்.” என அவனுக்கும் மேலேக் காட்டாமாகக் கூறியவன், அந்தப் பக்கம் ரேணுகா போனை எடுத்ததும்,

“உங்களுக்கு உங்க பிள்ளைங்க வாழ்க்கையை விட, எவளோ ஒருத்தி முக்கியமா போயிட்டாளா? இங்க ரித்தி என்ன பண்றா, ஏதுனு எதாச்சும் கேட்குறீங்களா? இல்லை பார்க்குறீங்களா? ஏன் இப்படி இருக்கீங்க?” எனத் தாயிடமும் கத்த,

இதுவரை போன் செய்யாத மகன் போன் செய்யவும், என்னவோ என எடுத்த ரேணுகா அவனின் பேச்சில் யோசனையாகி, “ரித்திக்கு என்ன? கொடு நான் பேசுறேன்.” என்றார்.

அதில் கடுப்பானவன், “நீங்க முதல்ல கிளம்பி இங்க வாங்க, இங்க வந்த பிறகு பேசுங்க. நான் அவளை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்.” என போனை வைத்துவிட்டு தங்கையைப் பார்க்க, அவளோ ரவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை உணர்ந்த மதியழகி, “போகட்டும் விடு ரவி, என்ன பேச்சு பேசுறா பார்த்தியா? கொஞ்சநாள் போய் அங்க இருந்தாதான் உன் அருமை புரியும்.” என ஏற்றிவிட, அதைக் கசப்புடன் பார்த்தவள் மீண்டும் கணவனைப் பார்க்க, அவனோ யாரையும் பார்க்காமல் விடுவிடுவென தன் அறைக்குள் சென்றுவிட்டான்.

இது மேலும் விக்ரமிற்கு கோபத்தைக் கொடுக்க, “நீ வா, இப்படி அசிங்கப்பட்டு ஒன்னும் இங்க இருக்க வேண்டாம். அவங்க வரட்டும்.” என முன்னே நடக்க,

“விக்கி ப்ளீஸ், போதும் நான் எங்கேயும் வரல. நான் இப்போ இங்கதான் இருக்கணும்.” என்றவள், மதியழகியைத் துச்சமாகப் பார்த்து,

“இவங்களுக்குப் பயந்து என்னை வரச் சொல்றியா? ஏன், இவங்க என்னை என்ன பண்ணிடுவாங்க? ஹ்ம்ம்… தப்பு செய்ற அவங்களே பயப்படல, நான் ஏன் பயந்துட்டு வரணும்?” எனத் தன் கையை உருவிக்கொள்ள,

“ஹேய் இந்த ஜாடை எல்லாம் எங்கிட்ட வேண்டாம்.” என விக்ரம் இருப்பதையும் மறந்து எகிற,

“உங்க வயசுக்கு மரியாதை கொடுக்கணும்னு நினைக்கிறேன், அதோட நீங்க என் ஸ்வாதியோட அம்மா, அந்த மரியாதையும் இருக்கு. அதை நீங்களே கெடுத்துக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.” என கண்டிப்பாகப் பேச, கப்பென்று வாயை மூடியவர் வேகமாகத் தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

“விக்கி அவங்களை எதுவும் பேசாத, ரவிக்கு அது கஷ்டமா இருக்கும், நான் பார்த்துக்கிறேன் நீ கிளம்பு.” என ஒருவழியாக அவனை சமாதானம் செய்தவள், “ரவி ஆஃபீஸ்தான கிளம்பினார்.” என யோசனையாகக் கேட்டாள் அண்ணனிடம்.

“ம்ம்… ஒரு டாகுமென்ட் வெரிஃபை பண்ணணும் சொன்னான், நரேன் இல்ல, அதான் நானே வந்தேன்.” என்றவனிடம்,

“காபி தரட்டுமா?” எனத் தயங்கியபடி கேட்டத் தங்கையை முறைத்துப் பார்த்தான் விக்ரம்.

இது நண்பனின் வீடு, மனைவியின் வீடு, ஏன் தங்கையின் புகுந்த வீடு என்றாலும், முன்னமே இங்கு நீர் அருந்தகூட அவ்வளவு யோசிப்பான். இப்போது சொல்லவா வேண்டும்?

ரித்தியை முறைத்துவிட்டு கிளம்ப போனவனின் கை பிடித்து, “சாரி… சாரி விக்கி, ப்ளீஸ் நான் கேட்டதை மறந்துடு.” என சமாதானம் செய்து அனுப்பி வைத்தவள், மூடியிருந்த தங்கள் அறையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு கிச்சனுக்குள் நுழைந்துவிட்டாள்.

அவளுக்கு இப்போது கணவனை நேருக்கு நேராக பார்க்க தைரியம் இல்லை. என்னதான் உண்மையைப் பேசியிருந்தாலும், அவனை இறக்கிப் பேசியது போல் பேசியது தவறுதானே. அதை அவன் கேட்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கேட்டபிறகு எப்படி சமாதானம் செய்வது என்றுத் தெரியாமல், தத்தளித்தபடி கிச்சனுக்குள் பாத்திரங்களை உருட்டிக் கொண்டிருந்தாள்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 13, 2026 - 3:38 pm

அது சரி, இந்த மதியழகிக்காவது
தன் மகள் ஸ்வாதி இன்னும் உயிரோட இருக்கிறாள் என்பது
தெரியுமா, தெரியாதா ???

Reply

Leave a Comment

About Me

Featured