தளிர் 57
“சீனியர் நீங்க என்ன ரீசன் சொன்னாலும் அதை என்னால ஏத்துக்க முடியாது. எப்படி நீங்க நிஷாவைத் தனியா விட்டீங்க? உங்கமேல இருக்குற நம்பிக்கைல தான், நான் அவங்களைப் பத்தி எதுவும் தெரிஞ்சிக்காம, நீங்க பார்த்துப்பீங்கன்னு விட்டேன். ஆனா அந்த நம்பிக்கை இப்போ குறைஞ்சிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு சீனியர். ப்ளீஸ்… உங்களுக்கு கஷ்டம்னா சொல்லுங்க, இனி அவளை லைஃப் லாங் நானே பார்த்துக்குறேன்.” என, வந்ததில் இருந்து சொல்ல வருவதைக் கேட்காமல், தனக்கு முன்னால் நின்று கோபமாகப் பேசிய நரேனை சலிப்பாகப் பார்த்தான் விக்ரம்.
“பேசி முடிச்சிட்டியா? இல்ல, இன்னும் இருக்கா? என்னடா எல்லாருக்கும் என்னைப் பார்த்தா முட்டாள் மாதிரி இருக்கா? ஆமா, நான் சுயநலவாதிதான், இப்போ என்ன அதுக்கு? என் பொண்ணோட சேஃப் எனக்கு ரொம்ப முக்கியம், அதுக்காகத்தான் இதெல்லாம். யார் என்ன நினைக்கிறாங்க, சொல்றாங்க எல்லாம் எனக்கு கவலை இல்லை. நான் இப்படித்தான்…” எனத் திமிராகப் பேச, இவனிடம் பேசிப் பிரயோஜனமில்லை என்றுப் புரிய, ஆற்றாமையாகப் பார்த்தான் நரேன்.
அப்போது விக்ரமிற்கு ஒரு போன் கால் வர, அட்டெண்ட் செய்தவன், “ம்ம் ஓகே… நான் வந்துட்டு இருக்கேன். ஏரியா நான் சொன்ன இடம் தானே, ஓகே அது ப்ராப்ளம் இல்லாத இடம் தான். தெரிஞ்ச ஒரு பெரிய கையோடதுதான். பார்த்துக்கலாம், நீ கவனமா இரு.” என்றவன், “கம் லெட்ஸ் கோ.” என்று, நரேனையும் அழைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து கிளம்பியிருந்தான்.
“பாஸ் எதுக்கு இவ்ளோ ஸ்பீடு, நாம இப்போ எங்கே போறோம்?” என்ற நரேனிடம், ‘மூடிட்டு வா’ என செய்கையில் சொன்னவன், முன்னுக்கும் இப்போது வேகமாக காரை செலுத்தினான்.
அவன் கோபம், ஸ்டியரிங்கை பிடித்த அழுத்தத்திலேயே புரிய வாயை மூடிக்கொண்டு அமைதியாகிவிட்டான் நரேன்.
சில நிமிட பயணத்தில் கார் பாதி வேலை முடிந்து உயர்ந்து நின்ற, அந்த அப்பார்ட்மென்ட் கட்டிடத்தின் முன் நிற்க, கேள்வியாகப் பார்த்த நரேனைக் கண்டுகொள்ளாமல் காரை நிறுத்திவிட்டு வேகமாக படிக்கட்டை நோக்கி நடக்க, “சீனியர்… சீனியர்…” என்று விக்ரம் பின்னே நரேனும் கத்திக்கொண்டே கிட்டத்தட்ட ஓடினான்.
ஆனால் அதை எதையும் காதில் வாங்காமல் தன் நடையில் வேகம் கூட்டியவன், தனக்கு எதிரே வந்தவனைப் பார்த்து, “எப்படி இருக்கான்?” எனக் கேட்க,
“பாஸ், ஆள் வாயைத் திறக்கவே மாட்டேங்கிறான். ஆனா அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கு. நீங்க மட்டும் சரின்னு சொல்லுங்க, என் வழில உண்மையை வாங்கிக் காட்டுறேன்.” எனவும்,
“ம்ம்…” என்றானேத் தவிர, ஒன்றும் சொல்லாமல் நடக்க, ‘என்னடா நடக்குது இங்க?’ என குழம்பியபடியே பின்தொடர்ந்தான் நரேன்.
அந்த கட்டிடத்தில் ஏழாம் மாடியில் ஒரு அறையில் கைகால்கள் கட்டப்பட்டு, வாயில் ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டு மூலையில் கிடந்தான் கமல். அவனைப் பார்த்ததுமே நரேனுக்கு அனைத்தும் புரிந்துவிட, விக்ரமை முந்திக்கொண்டு போய் கமலை ஓங்கி ஒரு உதை உதைத்தான்.
“நாயே! நீதான் எல்லாத்துக்கும் காரணமா? உன்னைத் தான்டா தேடிட்டு இருந்தேன்.” என மாறி மாறி உதைக்க, விக்ரமின் பார்வையில் இரண்டு ஆட்கள் நரேனைப் பிடித்துக் கொள்ள, ஒருவன் கமலின் வாயில் ஒட்டியிருந்த ப்ளாஸ்டரை எடுத்துவிட்டான்.
பின் கமலுக்கு முன்னே குத்துக்காலிட்டு அமர்ந்த விக்ரம், “வெல்! கமல் உங்க அப்பா இந்த *** ஸ்கூல் ஹெட் மாஸ்டர் தானே? அவர் நாளைக்கு போக்சோல அரெஸ்ட் ஆகப் போறாராமே, அப்படியா? உனக்குத் தெரியுமா?” என ஆச்சரியமாகக் கேட்க, கேட்ட செய்தியில் கமலின் விழிகளில் பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“ஏய்… என்ன சொல்ற? நோ… நோ விக்ரம்… அப்பா அப்படி எல்லாம்… நோ விக்ரம்… அப்படி பண்ணிடாத, அவர் தன்னோட டீச்சிங்கை உயிரா நினைக்கிறவர். இப்படி நடந்தா சூசைட் பண்ணிப்பார் விக்ரம்.” என பயத்தில் கத்த,
“என்னடா இவன் ஒரே மிரட்டல்ல மண்ணைக் கவ்வுறான். மிரட்டிப் பார்க்குறியா, அப்படியா இப்படியான்னு டைலாக் பேசுவான்னு பார்த்தா…” என நக்கலாகச் சிரித்தபடி,
கமலின் சட்டை காலரை பிடித்து, “சரி சொல்லு, என்ன நடந்தது? நீயும் ஸ்வாதியும் என்ன செஞ்சீங்க? விக்னேஷ், ஸ்வாதி இப்போ எங்க இருக்காங்க? ஸ்வாதி செத்துட்டானு எதுக்கு எல்லாரையும் நம்ப வச்சீங்க? அடுத்து உங்க ப்ளான் என்ன?” எனக் குரலில் கடுமையை ஏற்றி கேட்க,
“ஹான்! என்னைக் கேட்டா? அவன்தான் செத்துட்டானே! நீயும் அந்த நிசப்தியும் தானே கொன்னீங்க. அப்புறம் உன் பொண்டாட்டி… ஹா… ஹா… அவ எங்கனு எங்கிட்ட கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும்? உன் டார்ச்சர் தாங்க முடியாமத் தான அவளும் செத்துட்டா.” என கமல் நக்கலாகப் பேசுவதாக நினைத்து பயத்தில் உளற,
“ஆஹான்… ஓ அப்படி! சரி ரெண்டு பேரும் செத்துட்டாங்க அப்படித்தானே? ஓகே…” என்றவன், அங்கிருந்த ஆளைப் பார்த்து, “உன் போனை ஆன் பண்ணி அந்த வீடியோவைக் காட்டு.” எனவும் கமலுக்கு பயத்தில் நாக்கு உளர்ந்து போனது.
“என்ன… என்ன வீடியோ?” என உளற,
“ம்ம்… பார்த்தா தெரிஞ்சிடப் போகுது.” என்றவன் வீடியோவை ஓட்டிக்காட்ட, அதில் கமலும் ஸ்வாதியும் ஆம்புலன்சில் ஒரு டெட் பாடியை ஏற்றுவது, அதற்கு ஸ்வாதியின் உடைகளையும் நகையையும் மாட்டுவது, அடுத்து உடனிருந்த ஆளுக்கு கட்டாக பணத்தைக் கொடுப்பது என வரிசையாக இருக்க, கமலுக்கு விழி பிதுங்கிப் போனது.
இனி இவனிடம் பொய் சொல்லி தப்பிக்க முடியாது என கமல் யோசித்த நேரம், “ஏன் கமல், உங்க அப்பா இப்படி அரெஸ்ட் ஆனா உங்க அம்மா, அப்புறம் உன் ஒரே தங்கை எல்லாம் என்ன பண்ணுவாங்க? அவங்களும் சூசைட் பண்ணிப்பாங்க இல்ல…” என கிண்டலாகக் கேட்க,
“நோ… நோ… என்ன சொல்ற விக்ரம்…?” என பயத்தில் குரலே வராமல் கேட்க,
“ம்ம்… நீ இப்போ உண்மையை சொல்லலைன்னா அடுத்து நான் சொன்ன எல்லாமே நடக்கும்னு சொல்றேன், புரியுதா?” என அதுவரை இருந்த அமைதியான குரல் போய் இறுகியக் குரலில் கேட்க, அந்த இறுக்கத்தில் கமலின் உடல் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது.
“சொல்லு, நீங்க என்ன என்ன செஞ்சீங்க? இதுல நிசப்தியை ஏன் டார்கெட் பண்றீங்க? அவ நைனிடால்ல இருக்குறது உங்களுக்கு எப்படித் தெரியும், பேபியை ஏன் கிட்னாப் பண்ணணும்?” என அவன் பிடித்திருந்த காலருடன் சேர்த்து அவனையும் உலுக்க, நிலைகுலைந்து நிற்க முடியாமல் கீழே விழப் போக, அவனை அப்படியேக் கீழே போட்டவன் நரேனைப் பார்த்து, “மயக்கம் தெளிஞ்சதும் அவன்கிட்ட எல்லா டீடையில்சையும் வாங்கிட்டு, நடந்தே வந்து சேரு.” எனக் கூறிவிட்டு சென்றுவிட,
விக்ரம், கமலிடம் கேட்க ஆரம்பித்த போதே அதிர்ச்சியான நரேன், கடைசியில் சொல்லிச் சென்றதில் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டான்.
விக்ரம் மீது காட்ட முடியாத கோபத்தை கீழேக் கிடந்த கமலிடம் காட்ட, “அய்ய… விடு சார், ஏற்கனவே கொடுத்த அடிக்கே அவனுக்கு இன்னும் மருந்து போடல. இதுல நீயும் அடிச்சு அவன் செத்துப் போயிட்டா, அப்புறம் எங்குட்டு கூடி நீ உண்மையை வாங்குவ? ஒரு அரை மணி நேரம் வெய்ட்டு சாரு. அவன் மயக்கம் தெளிஞ்சதும் கேட்டு வாங்கிடலாம்.” என அடியாள் ஒருத்தன் பேச, ‘என்ன பாஷைடா இது?’ நொந்து போன நரேன், விக்ரமிற்கு போனில் அழைக்க ஆரம்பித்தான்.
***
நைனிடாலில், “நிஷ் என்னாச்சு, பாப்பா கூப்பிட்டுட்டே இருக்கா, நீ கவனிக்காம இருக்க.” என்ற சாருவின் அழைப்பிற்குப் பிறகே, தசிரா தன்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு இருப்பது புரிய,
“அச்சோ குட்டிம்மா! ரொம்ப நேரமா அம்மாவைக் கூப்பிட்டீங்களா? அம்மா உங்களைக் கவனிக்கலயா? சாரிடா குட்டிம்மா! வெரி சாரி… என்ன வேணும் பாப்புக்கு…?” எனக் குழந்தையை தூக்கி மடியில் அமர்த்தி, கொஞ்சியபடியே கன்னத்தில் தொடர்ந்து முத்தம் வைக்க அதுவும், “ம்ம்… ம்ம்…” எனச் சிணுங்கியபடியே அவளிடம் தன் கன்னத்தைக் காட்ட, பெண்கள் இருவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.
“பாரேன் இவளை…” என்ற சாருவும், தன் மகனை மடியில் வைத்து நிஷாவுக்கு எதிரில் அமர்ந்தாள்.
“என்ன யோசனை நிஷ், என்ன ஓடுது உன் மண்டைல?” என சாருவே ஆரம்பிக்க,
“ம்ச்… என்ன ஓடுது… என்னென்னமோ ஓடுது…” என்ற சலிப்புடன் கூறியவள், “ஜாப் கேட்டேனே சாரு, என்னாச்சு?” எனவும்,
“அதெல்லாம் ரெடி தான், நீ எப்போ வேணும்னாலும் ஜாயின் பண்ணிக்கலாம். டீன்கிட்ட பேசி எல்லாம் அரேன்ஞ்மென்ட்சும் பண்ணியாச்சு. நீ நெக்ஸ்ட் வீக்ல இருந்து ஜாயின் பண்ணு. அதுக்குள்ள பாப்பாவுக்கு நம்ம ருக்மாவை பழக்கப்படுத்து. இனி அவதானே ரெண்டு குட்டீசையும் பார்த்துக்கணும்.” என்றதும்,
“ம்ம் ஓகே…” என்று இழுத்தவள், “உனக்கு எங்கிட்ட கேட்க ஒன்னுமே இல்லையா?” என்றாள் மெதுவாக.
“இருக்கு… நெறைய கேட்கணும். ஆனா கேட்கமாட்டேன், நீயே எனக்கு சொல்லுவனு எதிர்பார்த்திட்டு இருந்தேன். நான் கேட்டு நீ இன்னும் வேதனைப் படக்கூடாது இல்லையா?” என்ற சாருவை இறுகக் கட்டிக் கொண்டாள் நிஷா.
“ஹேய் என்ன பண்ற? குட்டீஸ் ரெண்டு பேரும் இருக்காங்க, அவங்களை நசுக்கிடாத.” எனப் பதற,
“ம்ம்…” என்று எழுந்தவள், “நான் இதெல்லாம் உனக்கு மறைக்கணும்னு நினைக்கல சாரு. நானே மறக்கணும்னு நினைக்கிறேன் சாரு. அதனாலத்தான்…” என்று நிறுத்தி, பின் ஒரு பெருமூச்சோடு தன் வாழ்க்கையில் நடந்த ஆதி முதல் அந்தம் வரை, அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டு சூனியத்தை வெறிக்க, கேட்ட சாருவிற்குத்தான் கோபம் தலைக்கேறியது.
இப்போது இந்த நிமிடம் விக்ரம் தன் முன் இருந்தால் குத்திக் கொல்லவும் அவள் தயங்கிருக்கமாட்டாள். ‘என்ன மனுஷன் இவனெல்லாம்? என்ன நடக்குதுன்னே புரிஞ்சிக்காம ஒரு பொண்ணோட வாழ்க்கையில் விளையாண்டு, ச்சே… இவ என்ன ப்ளே க்ரவுண்டா? இவன் மட்டும் இல்லாம இவன் குடும்பமே விளையாண்டுருக்கு. அதுவும் அந்த ஸ்வாதி அரக்கியேதான். ச்சே… முட்டாள்! இவனெல்லாம் எப்படி லாயர் ஆனான்?’ என மனதுக்குள் விக்ரமையும் ஸ்வாதியையும் திட்டித் தீர்த்தவள் நிசாவைப் பார்க்க, அவள் பார்வை எங்கேயோ நிலைத்திருந்தது.
“நிஷ், இப்போ உனக்கு எவ்வளவு வலி இருக்கும்னு என்னால புரிஞ்சிக்க முடியும். அதனால யாருக்காகவும் எதுக்காகவும் உன்னை நீ காம்ப்ரமைஸ் பண்ணிக்கத் தேவையில்லை. உனக்கு என்ன தோனுதோ அதை மட்டும் செய். உனக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ உன் வாழ்க்கைல பாப்பா வந்துட்டா. இனி அவளுக்காகவாச்சும் நீ எல்லாரையும் தைரியமா ஃபேஸ் செஞ்சாகணும். அதுக்கு முதல்ல நீ உன்னோட இந்த கூட்டுக்குள்ள இருந்து வெளிய வரணும். உன்னை நீயே மோட்டிவேட் பண்ணிக்கணும். அதுதான் உனக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் தரும்.” என்றவளுக்கு, தலையை மட்டும் ஆட்டி பதில் கொடுத்தாள் நிஷா.
“எனக்குத் தெரிஞ்சி இனி இங்க எந்தப் பிரச்சனையும் இருக்காது நிஷ். நான் ஹாஸ்பிடல்ல ஜித்கிட்ட பேசி செக்கியூரிடி அரேன்ஞ் பண்ணிருக்கேன். பயமெல்லாம் இல்லாம உனக்கான வேலைக்கு அடுத்து என்ன செய்யலாம்னு யோசி.” என, பலதையும் பேசி தோழிக்குத் தைரியத்தைக் கொடுத்து, அடுத்தக் கட்டத்தை யோசிக்க வைத்திருந்தாள் சாரு.
அடுத்து வந்த நாட்கள் நிஷாவை ஓட வைத்தது என்றுதான் சொல்ல வேண்டும். தசிரா, ருக்மாவிடம் நன்றாக ஒட்டிக் கொண்டாள். அதோடு சஷ்டியும் இருக்க, குழந்தைக்கு தாயைத் தேட வேண்டிய வேலையே இல்லை.
சாருவின் மூலம் அனைத்தும் தெரிந்த டாக்டர் ஜித்தும், வேலையில் நிஷாவிற்குத் தேவையான உதவிகளைச் செய்தார். அந்த மருத்துவமனையின் முழு மேற்பார்வையும் அவளின் கீழ் கொண்டு வந்தார். பொறுப்புகளை அதிகப்படுத்தினால் மட்டுமே, அவள் தன் பிரச்சனையில் இருந்து தூரமாக வருவாள் என்று, மற்ற இருவருக்கும் புரிந்தது. அதனால் தான் அவள் படிப்பிற்கு சற்றும் சம்மந்தம் இல்லாத வேலையைக் கொடுத்தார்கள்.
நிஷாவிற்கும் இப்படியான வேலைகள் தான் தேவைப்பட்டதோ? தன் ஒட்டுமொத்த பிரச்சனைகளை எல்லாம் மறந்து, இதிலேயே மூழ்க ஆரம்பித்திருந்தாள்.
இடைப்பட்ட நாளில், விக்ரம் இரண்டு முறை சாருவுக்கு அழைத்திருக்க, அவள் எடுக்காமல் விட்டதிலேயே அவளுக்கு உண்மை தெரிந்துவிட்டது என்று புரிந்து கொண்டவன், நிஷாவிற்குத் தெரியாமல் ஒருமுறை நைனிடாலுக்கு அவளைப் பார்க்க வந்திருந்தான்.
“மேடம்க்கு என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சிடுச்சு போல…” என்றவனை முறைத்துப் பார்த்தாள் சாரு.
அவள் கோபத்தைப் பார்த்து, “சரிதானே?” என்றவன், “உங்க கோபம் தப்பு இல்ல, எல்லாத் தப்பும் என்னோடது தானே. அதை நான் இல்லைனு சொல்லவும் இல்லயே. நான்தான் ஆரம்பிச்சு வச்சேன், அதை நான்தான் முடிச்சும் வைக்கணும். அதனால நீங்க எனக்கு கண்டிப்பா ஹெல்ப் பண்ணணும். உங்களால முடியாதுனு மட்டும் சொல்லக் கூடாது ப்ளீஸ்…” எனக் கிட்டத்தட்ட கெஞ்சினான் விக்ரம்.
அவனின் இந்தப் பேச்சைக் கேட்டவள், “உங்களுக்கு ஹெல்ப் பண்ற ஐடியா எனக்கு சுத்தமாவே இல்ல. ஆனா, என் ஃப்ரண்ட் நல்லா இருக்கணும். அவளுக்காகத் தான் இப்போ கூட உங்களைப் பார்க்க வந்துருக்கேன். அடிக்கடி இதை செய், அதை செய்னு எல்லாம் எனக்கு ஆர்டர் போடக்கூடாது. நான் கண்டிப்பா செய்யமாட்டேன். அவங்க ரெண்டு பேரையும் நான் பார்த்துக்குறேன், என்னால முடியும். இனி இப்படி வந்து டார்ச்சர் பண்ணக்கூடாது.” என முறைத்துக் கொண்டே பேசியவளைப் பார்த்து, விக்ரமிற்கு மேலும் சிரிப்பு வந்தது.
அதில் கடுப்பானவள், “இவ்வளவு கேவலமான செயலை செய்துட்டு எப்படி சிரிக்கிறீங்க? உங்களால என் நிசாவுக்கு எவ்வளவு கஷ்டம்? இப்போ மட்டும் அந்த ஸ்வாதி உயிரோட இருந்திருந்தா நானே கொன்னுருப்பேன். என்ன ஜென்மம் அவளெல்லாம்? நல்லவேளை செத்து தொலைஞ்சா, இருந்திருந்தா இன்னும் எவ்வளவு அநியாயம் செய்திருப்பாளோ…” என சாரு தன் பாட்டிற்குப் பேச, விக்ரமின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்து, தானாக ஒரு கடினம் வந்து ஒட்டிக் கொண்டது.
அதே கடினத்துடன், “நீங்க பார்த்துக்கிட்ட லட்சணம் தான் எனக்குத் தெரியுமே, என் பொண்ணைத் தொலைச்சிட்டு கண்டுபிடிக்க முடியாம அலைஞ்சீங்களே…” என விக்ரமும் கத்திச் சொல்ல,
“எனாஃப் விக்ரம்…” என பதிலுக்கு கத்திய சாருவை முறைத்தவன், “இனி இந்த மாதிரி நடந்துடக் கூடாதுனுதான் உங்ககிட்ட என் பொறுமையை இழுத்துப் பிடிச்சு பேசிக்கிட்டு இருக்கேன் சாரு. உங்களுக்கு உங்க ஃப்ரண்ட் முக்கியம்னா, எனக்கு என் பொண்ணு முக்கியம். அவளைப் பத்தின கவலை ஆயிரம் இருக்கு. ஸோ, ரெண்டு பேரும் சண்டைப் போட்டுக்காம அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.” என பதில் பேசவிடாமல் பேசி முடித்தவன், அடுத்து சாரு செய்ய வேண்டியவற்றையும் சொல்ல, இப்போது நேரடியாகவே முறைத்தாள் சாரு.
‘இப்போது என்ன?’ என சலிப்பாகப் பார்த்தவனிடம், “இந்த மாதிரி தான் ஆர்டர் போடக்கூடாதுனு சொன்னேன்.” என எரிச்சலாகச் சொன்னவளைப் பார்த்து, ‘பாவம் டாக்டர்’ என மனசுக்குள்ளே புலம்பிவிட்டு, “சாரி… சாரி… வெரி சாரி. இது ஆர்டர் கிடையாது, ரெக்வெஸ்ட் ஓகே. எனக்காக இல்லைனாலும், உன் ஃப்ரண்டுக்காக இதைப் பண்ணு ப்ளீஸ்…” என்றுப் பேசி சமாதானம் செய்துவிட்டு, குழந்தையையும் பார்த்துவிட்டு சென்றிருந்தான்.
***
இங்கு உஷா அவள் தந்தையின் வீட்டுக்கு வந்ததில் இருந்து, பெரும் பிரச்சனை வெடித்தது. மீனாட்சி சுந்தரம் பொறியில் மாட்டிய எலியாகத் தவித்து உஷாவிடம், “தயவுசெய்து இங்கிருந்து போய்விடு.” என காலில் விழாத குறையாகக் கெஞ்ச, அதை சற்றும் காதில் ஏற்றவில்லை உஷா.
முன்னமே அவளுக்குத் தந்தையைப் பிடிக்காது, இப்போது சுயநலமாகத் தன்னை கிளம்பச் சொல்லவும், அவருக்காக எதையும் செய்யக்கூடாது என்று முடிவெடுத்து, இது இவர்கள் வீடு மட்டுமல்ல, என்னுடைய வீடும் தான் என மனதில் நிறுத்தி, மற்றவர்களைக் கண்டு கொள்வதில்லை.
அந்த வீட்டில் இருப்பாள், யாரிடமும் பேசுவதில்லை. அவளைக் கீழாகப் பார்த்து, பேசும் யாரையும் மதிப்பதுமில்லை. இப்போது அவள் வேலை செய்யும் நியூஸ் சேனலில் மனோகர் என்று ஒரு ஃப்ரண்டும் கிடைக்க, அவள் பொழுதுகள் முன்னைப் போல கடினமாக இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு நகரத் தொடங்கியது.
***
விக்ரம் வீட்டில் இப்போதெல்லாம் ரேணுகா, விக்ரமிடம் மொத்தமாக பேசுவதை நிறுத்தியிருந்தார். கையில் கிடைத்த சொர்க்கத்தை தொலைத்து விட்டானே என்று, மகன் மீது அளவு கடந்த கோபம்.
நிசா எங்கு இருக்கிறாள் என்று இரண்டு, மூன்று முறை கேட்டும் கூட சொல்லவில்லை என்பதும் சேர்ந்து கொள்ள, கொதிநிலைக்கே சென்றுவிட்டார்.
விக்ரமும் அவர் கோபத்தை மதித்ததாகத் தெரியவில்லை. தன் கடமை பணி செய்வதே என்பது போல், அவன் பாட்டிற்கு அவன் வேலையை செய்து கொண்டிருந்தான். இப்போது தொழிலில் மேலும் முன்னேறி இருந்தான். நரேனையும் தன்னுடன் முழுதாக இணைத்துக் கொண்டான். பல கம்பெனிகளுக்கு லீடிங் அட்வைசராகவும் மாறி இருந்தான்.
விக்ரமின் குடும்பத் தொழிலை வழக்கம் போல் ரவியுடன் சேர்ந்து ரித்தி பார்த்துக் கொள்ள, குழந்தைகளை ரேணுகாவிடம் விட ஆரம்பித்தாள். அவளுக்கு மதியழகியிடம் குழந்தைகளை விட பயம்.
எங்கு ஸ்வாதியின் மறுபிம்பமாக வளர்ந்து விடுவார்களோ என்று, உள்ளுக்குள் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். அதை உணர்ந்த ரவி, “ம்மா, விக்ரம் பாதி நாள் ஊர்ல இருக்குறதே இல்ல. அத்தையும் தனியா இருக்காங்க, அதனால் குழந்தைங்க அங்க இருக்கட்டும். வீக்கென்ட் போய் கூட்டிட்டு வந்துடுறேன். உங்களுக்கும் ஹெல்த் இஸ்ஸு இருக்கே, ஒரு ஆளா அவங்களை மேனேஜ் பண்ண முடியாது.” என எடுத்து சொல்ல,
“ஏன், உன் மேல நம்பிக்கை இல்லையா உன் பொண்டாட்டிக்கு? அவ எதுக்கு உன்கூட ஆஃபிஸ் வரா? அவ வந்து பார்த்தாதான் உங்க கம்பெனி நேரா நிக்குமா? அவங்க அண்ணனை ஆஃபிஸ்க்கு வரச் சொல்லிட்டு, இவளை வீட்டுல இருந்து பிள்ளைங்களைப் பார்க்கச் சொல்லு.” என குதர்க்கமாக பேச,
“ம்மா என்ன பேசுறீங்க? இதெல்லாம் ஏற்கனவே பேசினது தானே? இப்போ என்ன புதுசா ஆரம்பிக்கிறீங்க? அவ ஆஃபிஸ் வர்றது பிரச்சனையா, இல்ல பிள்ளைங்களைப் பார்க்காதது பிரச்சனையா? விக்ரம் பிசினஸ் பார்க்க மாட்டான். ரித்தி இந்த பிசினஸ்ல இல்லைன்னா விக்ரம் அவனோட ஷேர் எல்லாத்தையும் விக்க சொல்லிட்டான். அப்படி வித்தா கம்பெனி மொத்தமா லாஸ் ஆகும். அதுதான் உங்களுக்கு வேணுமா? இப்போ என்னமோ குழந்தைங்களை நீங்க பாருங்கனு, உங்ககிட்ட சொன்ன மாதிரி எதுக்கு இவ்ளோ பேசுறீங்க? நீங்க எப்பவும் போல உங்க வேலையை மட்டும் பாருங்க, அது மட்டும் போதும்.” என, அந்தப் பேச்சை அப்படியே அப்போதே முடித்துவிட, குழந்தைகள் இருவரையும் ரேணுகாவிடம் விட்டுவிட்டனர்.
கேள்வியாகப் பார்த்தவரிடம், “ம்மா எனக்கு குட்டீசை அவங்ககிட்ட விட பயமா இருக்கு. உங்களுக்கும் கஷ்டமா இருந்தா சொல்லுங்க, டேகேர்லயும் ஹாஸ்டல்லயும் விட்டுடுறேன்.” என ரித்தி முடித்துவிட, அதன்பிறகு ரேணுகா மகளிடம் எதுவும் கேட்கவில்லை.
இந்த குழந்தைகள் வந்த பிறகுதான் அவருக்கும் மனம் சற்று லேசாக ஆரம்பித்தது. ஆனாலும் விக்ரமை விடுத்து முகுந்தன், ரவி, நரேனிடம் நிசப்தியைப் பற்றி விசாரிக்காமல் இல்லை. சிறுபெண் குழந்தையுடன் தனியாக எங்கு இருக்கிறாளோ என்ற கவலையே, விக்ரமிடம் அவரின் கோபத்தைக் குறைக்க விடவில்லை.
இதில் அடுத்து அவன் செய்யப்போகும் காரியம் தெரிந்தால் என்ன செய்வார் ரேணுகா?
***
1 comment
அட ராமா..! திரும்பவும் இந்த விக்ரம் அப்படி என்ன பண்ணி தொலைக்கப் போறான்னு தெரியலையே…?
😀😀😀
CRVS (or) CRVS 2797