Home Antiheroதளிர் – 61

தளிர் 61

 “உன் அண்ணனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? இப்போ எதுக்கு நிசாவை டென்சன் பண்ண ஆரம்பிச்சிருக்கான்? அன்னைக்கு எந்த நிலமையில இந்த வீட்டுக்கு வந்தா, அப்போ மட்டும் அது அவன் குழந்தை இல்லையா? இப்போ எந்த ஆசிரமத்துக்கு போனானாம், ஞானம் பிறக்க?” என விசயம் தெரிந்ததில் இருந்து ரித்தியிடம் கத்திக் கொண்டிருந்தான் ரவி.

“எனக்கும் ஒன்னும் புரியல ரவி, இவனுக்கு நிஜமாவே பைத்தியம்தான் பிடிச்சிருக்கும் போல. சும்மாவே அவ சாமியாடுவா, இனி இவன் சலங்கையும் கட்டி விட்டுட்டான், என்ன நடக்கப் போகுதோ…” என ரித்தியும் புலம்ப ஆரம்பித்தாள்.

மதியழகிக்கு விக்ரம் அந்த குழந்தையை உரிமை கொண்டாடுவது சுத்தமாக பிடிக்கவில்லைதான். ஆனால் மகனிடம் இதை சொல்ல முடியாதே! ஸ்வாதி பிரச்சனைக்கு பிறகு இப்போதுதான் பேசவே ஆரம்பித்திருக்கிறான். அவனிடம் இதுபற்றி பேசினால் மீண்டும் பேசாமல் போய்விட வாய்ப்பிருப்பது புரிய, எரிச்சல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அமைதியாக எல்லாவற்றையும் பார்த்திருந்தார்.

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ரேணுகா, மகளுக்கு மதியழகியைக் கண் காட்ட, அதை உணர்ந்த ரித்தியும், “ரவி, விக்ரம் எதுக்காக இப்படி செஞ்சானோ, ஆனா அது நல்லதுக்குத்தானே! யார் சொன்னாலும் சொல்லலன்னாலும் தசிக்குட்டி இந்த வீட்டோட வாரிசுதானே! அவ இங்க இருக்குறதுதானே நல்லது. அவன் எதுக்காக வேணும்னாலும் செஞ்சிட்டு போகட்டும். நமக்கு தசிக்குட்டி இங்க வந்தா போதும். நீங்க டென்சன் ஆகாம கிளம்புங்க, டைம் ஆகுது.” என பேச்சை வளர்க்க,

“அதென்ன உன் பொண்டாட்டி, அந்த புள்ளதான் இந்த வீட்டு வாரிசுன்னு சொல்றா. அப்போ என் பேரன், பேத்திக எல்லாம் யாராம்? எது பேசுறதுன்னாலும் பார்த்து பேசச் சொல்லு.” என அழகி மருமகளை விட்டுவிட்டு மகனிடம் ஆரம்பிக்க, இந்த அழகியை வெளியேக் கொண்டு வரத்தானே அவர்கள் நினைத்தது. மதியழகியின் பேச்சைக் கேட்ட மற்ற இருவர் முகத்திலும் கிண்டலான சிரிப்பு உண்டானது. அதை நாசூக்காக மறைத்து ரவியைப் பார்த்தனர்.

“ம்மா போதும்…” என பல்லைக் கடித்தவன், “என்ன பேசுறீங்க? பழசெல்லாம் மறந்துட்டீங்களா, என்ன? உங்க பொண்ணு செஞ்சி வச்சிட்டு போன கூத்தை கொஞ்சம் ஞாபகப்படுத்தி பாருங்க. இப்போ நிசா கேஸ் கொடுத்தாலும், நாம குடும்பமா போய் உள்ள உக்காரணும், மறந்துடாதீங்க. அப்படியே நீங்க உங்க பொண்ணுக்கு செஞ்ச உதவியையும் மறந்துடாதீங்க. அதுதான் பக்கா எவிடென்ஸ், உங்களை உள்ள வைக்க.” என எரிச்சலாய் எச்சரிக்க, இதற்காகத்தானே ரேணுகா மகளைப் பார்த்தார்.

“மதி, என் பையன் வாழ்க்கை பத்தியும் இந்த சொத்தைப் பத்தியும் கவலைப்பட, நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன். நீ தேவையில்லாம யோசிக்காத, அப்புறம் ரித்தி கல்யாணம் நடக்கும் போதே, சொத்தை பாதியா பிரிச்சு அவ பேர்ல எழுதிக் கொடுத்தாச்சு. இது என் மகனுக்கானது, அதுல யாருக்கும் எப்பவும் பங்கு கிடையாது. ரித்தி இது உனக்கும்தான் சொல்றேன், நாளைக்கு சொத்து தாங்கனு யார் பேச்சையும் கேட்டுட்டு வந்து நிக்கக்கூடாது.” என சம்மந்தியிடம் ஆரம்பித்து, மகளிடம் கறாராக முடிக்க, மதிக்கு அவமானம் பிடுங்கி தின்றது.

மகன் இதற்கு ஏதேனும் பதில் கொடுப்பான் என்று ரவியைப் பார்க்க அவனோ, ‘உங்களுக்கு இது தேவைதான், வாயை வச்சிட்டு சும்மா இருந்தா என்ன?’ என்ற ரீதியில் முறைத்துவிட்டு மனைவியிடம் திரும்பிவிட்டான்.

“ம்மா, இதெல்லாம் நீங்க சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல. எங்க வீட்டுல எல்லாருக்கும் தெரியும். அதனால அந்த பேச்சை விட்டுட்டு, அடுத்து என்ன செய்யலாம்னு யோசிங்க.” என பேச்சை மீண்டும் நிசாவிடம் கொண்டு வந்து நிறுத்த,

“என்ன செய்யலாம்னா, என்ன சொல்ற? எப்படியும் உன் அண்ணன் ஒரு ப்ளான் போட்டு வச்சிருப்பான், அவனே ஆரம்பிக்கட்டும் அப்புறம் பார்க்கலாம்.” என ரேணுகா சடவாய் சொல்லிவிட்டு நகர,

“வா ரித்தி, வாங்க அத்த, வாடா…” என மூவரையும் வரவேற்றபடியே படிகளில் இறங்கி வந்தான் விக்ரம்.

செய்தி கேட்டுத்தான் மூவரும் வந்திருக்கிறார்கள் என்று அவனுக்கு புரிந்தது.

“அம்மா காபி மட்டும் போதும், டிபனுக்கு எக்ஸ் மினிஸ்டர் வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கேன்.” என்றபடியே தங்கையின் அருகில் அமர்ந்தான்.

“என்னடி, காலையிலேயே இங்க விஜயம்?” என சிரித்தபடியே தங்கையிடம் விசாரிக்க,

“சிரிக்காத மாடு, நீ செய்ற வேலையை பார்க்கும்போது எனக்கு ஏகத்துக்கும் பிபி ஏறுது.” என அவன் தலையிலேயே கொட்ட, “ப்ச் விடுடி…” என கையைப் பிடிக்க,

அதில் எரிச்சலான ரவி, “ம்ச்… ரித்தி, இப்ப எதுக்கு இந்த வேண்டாத வேலை பார்த்துட்டு இருக்கான் உன் அண்ணன்?” என மனைவியிடம் கேட்டாலும் பார்வை விக்ரமிடம் இருந்தது.

“எங்கிட்டயே கேட்கலாம் ரவி, பதில் சொல்ல ரெடியா இருக்கேன்.” எனக் கிண்டலடித்து, ரவி பல்லைக் கடிப்பதை ரசித்துவிட்டு பின், “எனக்கும் என் பொண்ணு கூட வாழணும்னு ஆசை வந்துடுச்சு, அதுதான் காரணம்.” என கேசுவலாக முடிக்க,

“டேய் என்ன விளையாடுறியா? உன் பொண்ணு மட்டும் தனியா குதிச்சு வந்தாளா? அப்போ நிசா, அவளை என்ன செய்ய போற?” என எகிற,

“இப்போ நீ எதுக்கு ரவி விக்கியை கண்டிக்கிற? அந்த பொண்ணைக் கூப்பிட்டு வந்து என்ன செய்ய சொல்ற? விக்கியை கல்யாணம் பண்ண சொல்றியா? என் பொண்ணு இடத்துல வேற யாரையும் விக்கியால யோசிக்க முடியாது.” என மதியழகி கோபமாக பேச,

“ஏன் கல்யாணம் செஞ்சா என்ன? இல்ல தெரியாமத்தான் கேட்குறேன், இதே சூழ்நிலையிலே ரவி இருந்திருந்தா நீ என்ன செஞ்சிருப்ப மதி? எனக்கு உன்னை நல்லாவே தெரியும், இவ்வளவு நாள் எல்லாம் நீ பொறுமையா இருந்திருக்க மாட்ட. ரவிக்கு இன்னொரு கல்யாணம் முடிச்சிருப்ப. உன் பையன்னு வந்தா ஒரு நியாயம், அடுத்தவங்க பையன்னா ஒரு நியாயமா?” என ரேணுகா கோபமாக கேட்க,

“ரேணு நீ சொல்றது சரிதான், நான் சுயநலவாதிதான். இப்பவும் என் பொண்ணுக்காகத்தான் பேசுறேன். அந்த நிசாவை விக்கிக்கு கல்யாணம் செய்தா, என் பொண்ணோட ஆத்மா கூட அதை தாங்கிக்காது, நானும் ஒத்துக்கமாட்டேன்.” என மதியும் கோபமாக பேச,

“போதும் நிறுத்து மதி, உன் பொண்ணு உன் பொண்ணுன்னு மூச்சுக்கு மூச்சு சொல்றியே, அப்போ அவ உன் பொண்ணு கடைசி வரை உன் பொண்ணா இருந்துதான் போனா அப்படிங்கிறதும் உனக்குத் தெரியும், அப்படித்தான?” எனக் காட்டமாக கேட்க, மதியழகியால் பதில் சொல்ல முடியவில்லை.

“சொல்லு மதி, பதில் சொல்லு. என் பையன் கூட வாழாம, அவனைப் பத்தி யோசிக்காம, தன்னோட பழி வெறிக்கு ஒரு சின்ன பொண்ணு வாழ்க்கையை கெடுத்து, நடுத்தெருவில விட்டுட்டு, யாரைப்பத்தியும் கவலைப்படாம போய் சேர்ந்தவளுக்காக, என் பையன் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கணுமா சொல்லு…” மேலும் கோபமாக கேட்க,

“அத்தை அமைதியா இருங்க, நான் அம்மாக்கிட்ட பேசுறேன்.” என ரவி, ரேணுகாவை சமாதானம் செய்ய,

விக்ரமோ மதியழகியிடம் வந்து, “அத்தை, அம்மா பேசினதை எல்லாம் நீங்க தப்பா எடுத்துக்காதீங்க. அவங்களுக்கு அவங்க பையன் மேல இருக்குற பாசம் அப்படி பேச வைக்குது. அதை தப்புன்னு சொல்ல முடியாது. ஆனா நீங்க ஒன்னை மறந்துட்டீங்க, எந்த ஒரு உறவையும் வலுக்கட்டாயமா என் வாழ்க்கைக்குள்ள திணிக்க முடியாது. என்னால ஸ்வாதி இடத்துல யாரையும் நினைச்சுக்கூட பார்க்க முடியாது…” என சொல்லி முடிக்கும் முன்னே அவனை அறைந்திருந்தார் ரேணுகா.

பின் வேகமாக மதியிடம் திரும்பி, “இப்போ உனக்கு சந்தோசமா? இதைத்தான எதிர்பார்த்த? என் பையனை கடைசிவரை பட்ட மரமாகவே நிக்க வைக்கணும்னு நீயும் உன் பொண்ணும் முடிவு பண்ணிட்டீங்க இல்ல? நீங்க எல்லாம்…” என அடுத்து என்ன பேசியிருப்பாரோ, “அம்மா…!” எனக் கத்தி அவரை அடக்கியிருந்தான் விக்ரம்.

“அம்மா என்னம்மா நீ…?” என ரித்தியும் வந்து ரேணுகாவைப் பிடித்துக் கொள்ள, “என் வேதனை எல்லாம் உங்களுக்கு புரியாது ரித்திம்மா…” என்றவர், கையை உதறிவிட்டு தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டார்.

நடந்த அனைத்தையும் பார்த்த மதிக்கு, தான் வந்த வேலை சுலபமாக முடிந்ததில் பரம திருப்தி. ஆனாலும் அதை இந்த இடத்தில் வெளிக்காட்டினால் சரியாக இருக்காதே! எனவே விக்ரமிடம் வந்தவர், “விக்கி என்னை மன்னிச்சிருப்பா… நானும் ஒரு அம்மாதான், என் பொண்ணைப் பத்தி யோசிச்சேனே தவிர, உன்னைப்பத்தி யோசிக்கல. இப்போ ரேணு பேசவும் தான் எனக்கு எல்லாம் விளங்குது. என்னை மன்னிச்சிடுப்பா! உனக்கு விருப்பம் இருந்தா நீ அந்த பொண்ணையே கல்யாணம் செய்துக்கோ. ஏன், எதுக்குன்னு கேட்க என் பொண்ணும் உயிரோட இல்ல. எனக்காக பார்க்காத, எனக்கு உன் வாழ்க்கைதான் முக்கியம்.” என தன் நடிப்பை ஆரம்பிக்க,

“அம்மா கிளம்புங்க போகலாம், உங்களை வீட்டுல விட்டுட்டு நான் ஆஃபிஸ் போகணும்.” என அடுத்து எதுவும் பேசவிடாமல், தாயை இழுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் ரவி.

அவர்கள் கிளம்பவும் தான் எல்லோருக்குமே மூச்சு இயல்பாக வந்தது. ரவியின் கார் கிளம்பும் சத்தம் கேட்டு வெளியில் வந்த ரேணு, “ஆனாலும் உன் மாமியாருக்கு இவ்வளவு வில்லத்தனம் ஆகாதுடி…” என மகளிடம் சொல்லிக்கொண்டே அருகில் அமர, விக்ரமும் ரித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

“நான்தான் சொன்னேனே ம்மா, அவங்க ஆரம்பத்துல இருந்தே இப்படித்தான். ஸ்வாதி போன பிறகு கொஞ்சமாவது திருந்திருப்பாங்கனு நினைச்சீங்கள்ல, பார்த்தீங்களா எப்படி இருக்காங்கனு?” என விக்ரம் சொல்ல,

“இவங்க வளர்ப்புதானே ஸ்வாதி, இவங்களுக்கு இருக்குற ஒட்டு மொத்த கெட்ட குணமும், வில்லத்தனமும் அப்படியே அவளுக்கும் இருக்கு.” என எரிச்சலாக ரித்தியும் சொல்ல,

“சரி விடுங்க… தசிக்குட்டி மேலயாச்சும் பாசம் இருக்கும், அதை வச்சு எப்படியும் உங்க மாமியாரை சமாளிச்சிடலாம்னு யோசிச்சேன். அது நம்பியாருக்கே டஃப் கொடுக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்…?” என ரேணுகா சிரிக்க, மற்றவர்களும் சிரித்துக் கொண்டனர்.

“சரிம்மா நான் கிளம்புறேன், மினிஸ்டர் கூட மீட்டிங் இருக்கு.” என விக்ரம் கிளம்ப,

“விக்கி, அந்த மினிஸ்டர் கேஸ் வேண்டாமே… அந்தாளுக்கு எப்போ வேணும்னாலும் அரஸ்ட் வாரன்ட் இஸ்ஸூ பண்ணுவாங்கனு ரவி சொன்னார். இதனால உனக்கும் பிரச்சனை ஆகிட போகுது. நிசா வர்ற இந்த டைம்ல இதெல்லாம் தேவையா?” என ரித்தி வருத்தமாக சொல்ல,

“பிசினஸ்னு போயிட்டா பக்கா லோக்கல் பிசினஸ்மேன், மோசமான அரசியல்வாதியும் கூட. ஆனா பெர்சனலா ரொம்ப நல்ல மனுஷன். அந்தாளை வச்சுத்தான் நம்ம கேஸையும் மூவ் பண்ண வேண்டியிருக்கு. இதுல அந்த உஷாவும் உன் புருஷனும் மட்டும் எந்த கோமாளித்தனமும் பண்ணாம இருக்கணும். நிசாவுக்காகனு எதாச்சும் லூசுத்தனம் பண்ணா டோட்டல் ப்ளானும் சொதப்பிடும்.” என தங்கைக்கு பதில் சொன்னவன்,

“சரிம்மா, நீங்க நிசாவுக்கு கூப்பிட வேண்டாம். முடிவெடுத்த பிறகு அவளே கூப்பிடுவா, அப்போ பேசுங்க. இப்போ நீங்க பேசினா கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கு. வர வர அறிவு வாளியா மாறிக்கிட்டு இருக்கா…” என கிண்டலடிக்க, ரேணுகாவிற்கும் சிரிப்பு வந்துவிட்டது.

இருவருக்கும் சொல்லிக்கொண்டு கிளம்பியவனைப் பார்த்து பெருமூச்சு விட்டாள் ரித்தி.

“இந்த அத்தை, விக்கியை அப்படியே விடுவாங்கனு தோனலம்மா. என் கெஸ் சரின்னா, இன்னைக்கே வீட்டுக்கு கூப்பிட்டு பேசுவாங்க.” என ரேணுகாவின் மடியில் படுத்தபடி ரித்தி கூற,

“அதைவிடு, விக்ரம் அதெல்லாம் சமாளிச்சிடுவான். நீ கொஞ்ச நேரம் படுத்து எந்திரி. நான் லன்ச்க்கு மீன் குழம்பும் மட்டன் பிரட்டலும் செய்றேன். ரவியை லன்ச்க்கு இங்க வர சொல்லு, சாப்பிட்டு போகட்டும். ஈவ்னிங் தானே உனக்கு அப்பாய்ன்மென்ட். எனக்கு ஜிஆர்டி போகணும், அங்க போய்ட்டு ஹாஸ்பிடல் போக டைம் சரியா இருக்கும்.” என ரேணு சொல்ல,

“சரிம்மா…” என்ற மகளிடம், “ரித்திம்மா, ரவிக்கிட்ட சொல்லிட்ட தானே, இந்த பேபியோட ப்ளானிங் பண்ணிக்கலாம்னு…” என சிரித்தபடியே இழுக்க,

“ம்மா… நீங்க வேற மானத்த வாங்காதீங்க. இந்த டைம் யார் வேண்டாம் சொன்னாலும் நான் பண்ணிக்குவேன்.” எனச் சிணுங்கியவளைப் பார்த்து, ரேணுகாவிற்கு மேலும் மேலும் சிரிப்பு வந்தது.

இங்கு விக்ரம் ஒரு திட்டத்தை வகுத்து அதை நடத்தி முடிக்க வேண்டும் என்று உறுதியாக இருக்க, அதற்கு எதிர்பதமாக ஒரு முடிவை எடுத்திருந்தாள் நிசப்தி.

காரணம் ஒன்றும் பெரிதில்லை, அவள் நைனிடால் வந்ததில் இருந்து, விக்ரம் எப்படி அவன் பாதுகாப்பு வளையத்தில் வைத்திருந்தான் என்று சாரு கூறியிருக்க, அடுத்து அவளால் அங்கு இருக்கவே முடியவில்லை.

ஆனால் எங்கு போவது, எப்படி போவது, யாரிடம் போவது என கேள்விகள் மூளையைக் குடைய சோர்ந்து போனாள் பெண்.

திடீரென்று ஒரு எண்ணம் அவளுக்குள். இன்னும் எத்தனை நாள் இப்படி ஓடி ஒளிய முடியும்? முதலில், நான் ஏன் ஓட வேண்டும், எதற்கு ஒளிய வேண்டும்? இப்படி ஓட ஆரம்பித்தால், தன் வாழ்க்கையின் கடைசி நாள் வரை ஓடவிட்டு கொண்டே இருப்பான். அதற்கு ஒரு முடிவை எடுத்தே ஆகவேண்டும்.

தோல்வியையே பார்த்திராத அவனுக்கு தோல்வி எப்படி இருக்கும் என்று காட்டினால் என்ன? அவன் திமிரை அடக்காமல் நான் ஏன் ஓட வேண்டும்? அவனை ஓடவிட வேண்டும், அதற்கு முதலில் அவனுக்கு முன்னே போய் நிற்க வேண்டும். அவனுக்கு இந்த நிசப்தி யார் என்று காட்ட வேண்டும் என்று முடிவெடுத்தவள், ரவிக்கு அழைத்து சென்னைக்கு வருவதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வைத்தாள்.

ஆணவனோ அனைத்தையும் சரி செய்து விடலாம் என்று நினைத்து ஒரு அடி எடுத்துவைக்க, அவனை தன் வாழ்வில் இருந்து, மொத்தமாகவே தள்ளி வைக்க வேண்டும் என்று நினைத்த பெண்ணவளோ ஒரு அடி எடுத்து வைக்க, இருவரின் எண்ணத்தையும் தவிடு பொடியாக்கும் எண்ணத்துடன் ஒருவன், தன் திட்டத்தைத் தீட்டிக் கொண்டிருந்தான்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio April 17, 2026 - 4:15 pm

அதானே அங்கே ஒருத்தன் பக்காவா ப்ளான் பண்ணிட்டிருக்கானே, அவன் என்னத்தை கிழிக்கிறான்னு பார்ப்போம்.

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured