Home Antiheroதளிர் – 76

தளிர் 76

மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே நிசப்தியும் மயங்கியிருக்க, வேகமாக செயல்பட்டான் முகுந்தன். ரஞ்சனியிடம் முன்னரே சொல்லியிருக்க, குழந்தைகள் மருத்துவரோடு காத்திருந்தாள்.

முகுந்தனிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு ஐசியுக்கு செல்ல, ஸ்ட்ரெச்சரில் நிசப்தியை எடுத்துக்கொண்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சென்றனர்.

ரஞ்சனி ரேணுகாவிற்கு சொல்லியிருக்க, ரித்தியை வீட்டில் விட்டுவிட்டு அவர் மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.

அவருக்கு நடந்த அனைத்தையும் கேட்டு மயக்கமே வந்து விட்டது. ஓரளவுக்கு நினைவுக்கு வந்து, இருவருக்காகவும் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

அடுத்த இரண்டு மணி நேரம் மிகுந்த போராட்டம், இருவருமே கண் விழிக்கவில்லை. குழந்தையின் முகத்தில் அடிக்கப்பட்டது ஸ்லீப்பிங் ஸ்ப்ரே என்று கண்டுபிடித்து, அதற்கான ட்ரீட்மென்ட் நடக்க ஆரம்பித்தது.

நிசாவிற்கு தலையில் அடிபட்டு ரத்தம் அதிகம் போனதில், மயக்கம் தெளிய நேரமெடுத்தது.

“என்ன ரஞ்சிம்மா இப்படி…” என அழுத ரேணுகாவைத் தேற்றவே ரஞ்சனியால் முடியவில்லை.

“இதோட எல்லாம் சரியாகிடும் அத்தை. இனி எந்த பிரச்சனையும் இருக்காது. நிசாவுக்கு ப்ளட் ஏறுது, பாப்பா சீக்கிரம் கண் விழிச்சிடுவா. அவ முழிக்கும் போது நிசாவை கேட்பா. அப்போ நீங்களோ விக்ரமோ கண்டிப்பா இருக்கணும். விக்ரம் இப்போ வரமுடியாது, நீங்க தைரியமா இருங்க அத்தை.”

“இப்படி எங்க குடும்பத்தையே நாசம் பண்ணுவானு, நான் நினைச்சு கூட பார்க்கல ரஞ்சிம்மா… அப்படியே தொலைஞ்சி போயிட்டா, என் பையனுக்கும் ஒரு வாழ்க்கை அமைஞ்சிடும்னு நிம்மதியா இருந்தேன். இப்படி திரும்ப வந்து, எல்லாத்தையும் தரிசா மாத்திட்டு போவானு நினைக்கலயே… இப்போதான் நிசா கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி வந்தா, மறுபடியும் முதல்ல இருந்து கொண்டு வந்து விட்டுட்டாளே…” என்ற ரேணுகாவின் அழுகையையும் ஆத்திரத்தையும், மனம் பொறுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் ரஞ்சனி.

“டாக்டர்… டாக்டர்… பேபியோட பல்ஸ் குறையுது. எமர்ஜென்சி…” என்ற செவிலிப் பெண்ணின் பின்னால் பதறியபடியே ரஞ்சனி ஓட, ரேணுகாவோ அப்படியே மயங்கிச் சரிந்தார்.

“என்ன… என்ன முகுந்த்…” என உள்ளே வந்தவளிடம்,

“சடனா பல்ஸ் குறையுது, நிசா இல்லைன்னா விக்ரம் உடனே வேணும். பாப்பா ரொம்ப பயந்துருக்கா, இப்போ யாராச்சும் அவளை சேஃபா ஃபீல் பண்ண வைக்கணும். நாம செய்ய முடியாது, கமான் விக்கிக்கு கால் பண்ணு…” என முகுந்தனும் பதற,

“எஸ்… ஓகே… ஓகே…” என்றவள் உடனே விக்ரமிற்கு அழைக்க, அதுவோ ரிங் போய் கொண்டே இருக்க, அந்தப் பக்கம் யாரும் அழைப்பை எடுக்கவில்லை.

“கால் அட்டென்ட் பண்ணல முகுந்த், என்ன பண்றது…?” என பதட்டத்துடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “டாக்டர் உங்ககூட இருந்த அந்த மேடம் மயங்கி விழுந்துட்டாங்க.” என்று மற்றொரு சிஸ்டர் வந்து சொல்ல, “வாட்!” என அதிர்ந்தவள்

“முகுந்த் நீ இங்க பாரு, நான் அத்தையைப் பார்க்குறேன்.” என வெளியில் செல்ல,

மீண்டும் முகுந்தன், விக்ரமிற்கு அழைத்து அவன் எடுக்காமல் போகவும், இப்போது ரவிக்கு அழைத்தான்.

ரவியோ ஒரே அழைப்பில் எடுத்து, “முகுந்த்… முகுந்த்…” என கத்தியழ,

“என்ன ரவி…? என்னாச்சு…? அங்க எல்லாம் ஓகேவா…?” என்ற முகுந்தனுக்கு, ரவியின் அழுகை மேலும் பதட்டத்தைக் கூட்டியது.

“முகுந்த் இங்க… இங்க… அம்மா இறந்துட்டாங்க முகுந்த்… அந்த விக்னேஷ் அம்மாவை கொன்னுட்டான் முகுந்த்… அய்யோ விக்ரம்…! விக்ரம் வேற…” என கதற,

அதிர்ச்சியில் இப்போது என்ன செய்வதென்றே முகுந்தனுக்கு தெரியவில்லை. விக்ரம் பற்றி சொல்ல வந்ததையும் கவனிக்கவில்லை.

“நான் ஜிஹச் போறேன் முகுந்த், வீட்டுல எல்லாருக்கும் சொல்லிடு.” என்று உடனே வைத்துவிட, ‘அப்படியென்றால் விக்ரமால் இப்போது வரமுடியாது’ என்று புரிந்த முகுந்த், நிலைமையின் தீவிரம் உணர்ந்து, “சிஸ்டர், கேசுவாலிடில இருக்குற பேசன்ட் நிசப்திய இங்க கொண்டு வாங்க. குவிக்… ஸ்ட்ரெச்சர்ல சிஃப்ட் பண்ணி எடுத்துட்டு வாங்க.” என்றுவிட்டு, குழந்தையின் பல்ஸை மீண்டும் சரி பார்த்தான்.

வெளியில் ரேணுகாவை அறைக்கு மாற்றி, உடனே முதலுதவி செய்ய ஆரம்பித்தாள் ரஞ்சனி. அவளுக்குமே இப்போது பதட்டமும் பயமும் வந்துவிட்டது.

“சிஸ்டர், அப்பா ரவுண்ட்ஸ் போய்ட்டு இருப்பார், அவரையும் அம்மாவையும் எமர்ஜென்சினு சொல்லி உடனே இங்க வர சொல்லுங்க…” என்று முடிக்கும் முன்னே இருவரும் உள்ளே வந்துவிட,

“மாம், நீங்க பாருங்க. நான்… எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு. நான் நிசா கூட இருக்கேன். அப்பா, குட்டிக்கு பல்ஸ் குறையுது வாங்க…” என நாகேஷை இழுத்துக்கொண்டு ஐசியுக்கு செல்ல, அதற்குள் நிசாவை ஸ்ட்ரெச்சரில் உள்ளே கொண்டு வந்திருந்தார்கள்.

“குட் ஜாப் முகுந்த்!” என மருமகனைப் பாராட்டிவிட்டு, நிசாவின் கைகளை எடுத்து குழந்தையின் வயிற்றுப் பகுதியில் வைத்து தட்டிக் கொடுப்பது போல் செய்ய, சில நிமிடங்களிலேயே தசிராவின் பல்ஸ் ரேட் நார்மலாக, நிசப்தியின் கருமணிகளும் கூட அசைய ஆரம்பித்தது.

அரைமணி நேர போராட்டத்திற்குப் பிறகு இருவரும் நார்மலாகி, மயக்கமில்லாத தூக்கத்திற்கு செல்ல, அதற்குள் ரேணுகாவும் மயக்கம் தெளிந்திருந்தார்.

“ஆன்ட்டி ஓகேவா? நீங்க ரொம்ப ஸ்ட்ராங்குன்னு நம்பிட்டு இருந்தேன், பயமுறுத்திட்டீங்க…” என்ற முகுந்தைப் பார்த்து, சோகமாய் சிரித்தார்.

“நீங்க இப்போ ஓகேதான ஆன்ட்டி?” என மீண்டும் கேட்க, இப்போது மீண்டும் அவர் முகம் பதட்டத்திற்கு செல்ல ஆரம்பித்தது.

“என்ன முகுந்த்…” என்ற நாகேஷிடம், “அது… அங்கிள், ரவியோட அம்மா, மதி ஆன்ட்டி இறந்துட்டாங்களாம், சரியா விவரம் தெரியல. விக்ரம் போன் எடுக்கல, ரவி எடுத்துட்டு இதை சொல்லிட்டு உடனே வச்சுட்டான்.” என ரேணுகாவைப் பார்த்துக் கொண்டே சொல்ல, அவர் முகத்தில் அதிர்ச்சி தவிர வேறொன்றும் இல்லை. இன்னும் எத்தனையைத்தான் தாங்குவது? அப்படியே அமர்ந்திருந்தார்.

“விக்ரம்… விக்ரம் எங்க இருக்கான்? அவனுக்கு என்ன?” என ரேணுகா கேட்கும் போதுதான் ரவி, விக்ரம் பத்தி ஏதோ சொல்லிக் கொண்டே தானே போனை வைத்தான். அப்படியென்றால், விக்ரமிற்கும் எதுவும் பிரச்சினையோ…?’ என முகுந்தன் யோசிக்க ஆரம்பித்தான்.

ரேணுகாவின் முகம் தெளியாமல் இருக்க, “எனக்கும் சரியா தெரியல ஆன்ட்டி. நான் ஜிஹச் கிளம்புறேன், எப்படியும் பாடி இன்னைக்கு கொடுக்க மாட்டாங்க. இங்க ரஞ்சி ஹேன்டில் பண்ணிப்பா, ரித்திக்கு சொல்லணும். நீங்க அடுத்து என்ன செய்ய முடியும் பாருங்க. நான் அங்க போயிட்டு, உங்களுக்கு எல்லாம் சொல்றேன்.” என மனைவியிடம் கண்ணைக் காட்டி முன்னே நடக்க, ரஞ்சியும் அவன் பின்னே ஓடினாள்.

“என்னாச்சு முகுந்த், வேற எதுவும் பிரச்சனையா?” என்றவளிடம், “எனக்கும் சரியா தெரியல ரஞ்சி, ஆனா விக்ரமுக்கும் ஏதோ ஆகிருக்கு. ரவி எங்கிட்ட சொல்லல. அங்க அவனால சமாளிக்க முடியாது. நான் உனக்கு கால் பண்ணி, அங்க இருக்குற நிலவரம் சொல்ற வரை எதையும் யாருக்கும் சொல்லாத ரஞ்சி. முக்கியமா ரேணுகா ஆன்ட்டிக்கு…” என்றவன், மனைவியின் கலங்கிய முகத்தைப் பார்த்து,

“எப்படியும் இப்படி ஒரு சிச்சுவேஷனை எதிர்பார்த்து தானேடா இருந்தோம். ம்ம்ம்… நீ பயந்தா, உன முகத்தைப் பார்த்தே ஆன்ட்டியும், நிசப்தியும் ஏதோ இருக்குன்னு கண்டுபிடிச்சிடுவாங்கடா… கவனமா இரு, சரியா…?” என அவளை அணைத்து தைரியம் சொல்லி கிளம்ப,

ரஞ்சி, ‘விக்ரமிற்கு எந்த பிரச்சனையும் இருக்கக் கூடாது, அவனுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது.’ என வேகமாக, எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொண்டு ஐசியுக்குள் சென்றாள்.

உள்ளே வந்த மகளிடம் நாகேஷ் விசாரிக்க, அவரிடம் மட்டும் விசயத்தை சொல்ல, “அப்போ நானும் கிளம்புறேன் ரஞ்சிம்மா, அம்மா இருக்காங்க இல்ல, பார்த்துப்பாங்க. அங்க என் ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க. சீக்கிரம் ஃபார்மாலிடிஸ் முடிச்சிடலாம்.” என்றுவிட்டு அவரும் கிளம்பிவிட்டார்.

அப்போது ரேணுகாவிடம் வந்த மனோகர், “ஆன்ட்டி விக்ரம் சார் என்னை மாலத் தீவு போக சொன்னார். நான் போய் நரேன் சாரை டிஸ்சார்ஜ் பண்ணி கூப்பிட்டு வந்துடுறேன். உஷாவும் பயந்து போய் நைட் எனக்கு கூப்பிட்டா.” எனவும்,

அவர்களை மறந்து போனோமே என்ற குற்றவுணர்ச்சியுடன், ‘சரி’ என்பதாய் தலையாட்ட, மனோகரும் நிசாவை சென்று பார்த்துவிட்டு கிளம்பினான்.

இது அனைத்தும் ரேணுகாவிற்கு மேலும் மேலும் பயத்தையேக் கொடுத்தது. அதை கவனித்த சுமதி, “அண்ணி, இன்னும் நாம ரித்திக்கு சொல்லல, அவளை கூப்பிட்டு அவங்க வீட்டுக்கு போகணும். எப்படியும் பாடியை அங்கதான் கொண்டு வருவாங்க. ரிலேடிவ்ஸ்க்கு சொல்லணும்…” என அடுத்து செய்ய வேண்டியதை சொல்ல,

“போகணும் அண்ணி, ஆனா இங்க ரெண்டு பேரும் கண்ணு முழிக்காம இருக்கும்போது, எனக்கு அங்க ஒன்னும் ஓடாது. அதோட ரித்திக்கு தெரியாம இருக்குறதே நல்லது அண்ணி. அவளுக்குமே இன்னும் ஹெல்த் சரியாகல. எனக்கு ஒன்னுமே விளங்கல அண்ணி. என் பையனை முழுசா பார்த்தாதான் எனக்கு எல்லாம் சரியாகும்.” என்றதும், சுமதியும் அடுத்து என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாகிவிட, ரஞ்சனி தன் போனையே நிமிடத்திற்கு ஒருமுறை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அப்போது நிசாவிடம் மெல்லிய முனகல் வெளிப்பட, அடுத்து ரஞ்சியின் கவனம் அனைத்தும் நிசப்தியிடம் வந்துவிட்டது.

முனங்கியவளின் அருகில் வந்து, “நிசா… நிசா…” என மெல்ல அழைக்க, அவளுமே சிரமப்பட்டு கண்களைத் திறக்க,

எதிரே, ‘ஷப்பா!’ என்ற பெருமூச்சுடன் நின்றிருந்த ரஞ்சனியைப் பார்த்து, “ரஞ்சிக்கா பாப்பா… பாப்பாக்கா…” என பதற ஆரம்பிக்க,

“ஷ்ஷ்! நிசா, பாப்பாவுக்கு ஒன்னும் இல்ல, தூங்குறா. ரொம்ப பயந்துட்டா இல்ல, நீயும் மயக்கத்துல இருக்க. விக்கியும் இன்னும் வரல. அதனால அப்பாதான் பாப்பாவுக்கு தூங்கட்டும்னு இன்ஜெக்சன் பண்ணார். அவளை பார்க்கணும், அந்த சிச்சுவேசனைப் பார்த்து பயந்து போயிருப்பவளை சமாளிக்கணும். அதனால நீ முதல்ல சரியாகு, ஹெவி ப்ளட் லாஸ். ப்ளட் ஏறிட்டு இருக்கு, நீயும் இங்கேயே இருக்கலாம். ப்ளட் ஏறி முடிஞ்சதும், வென்ஃப்லான் ரிமூவ் பண்ணிட்டு, பாப்பா பெட்டுக்கு போயிடலாம். அதுவரை அட்ஜஸ் பண்ணு, முக்கியமா பாப்பாக்கிட்ட பேசிட்டே இரு. அதுதான் அவளுக்கு இப்போ தேவையான மெடிசின்.” என பயப்படுத்தாமல் பேசிப்பேசியே, நார்மலுக்கு கொண்டு வந்திருந்தாள்.

“நீ இரு, நான் போய் அத்தையை அனுப்பிவிடுறேன். ஜூஸ் குடிக்கணும், கொண்டுவர சொல்றேன்.” என்று ரேணுகாவை அழைக்க சென்றுவிட்டாள்.

ரஞ்சனி கிளம்பியதும், ரவி வீட்டில் நடந்ததே நினைவுக்கு வந்து கொண்டிருந்தது நிசப்திக்கு. மிருக ஜென்மங்களுக்கு அப்பாற்பட்டது அந்த ஜந்துக்கள். ச்சே! எப்படி கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லாமல் குழந்தைக்கு போய்…? அவளுக்கு மட்டும் எதுவும் ஆகியிருந்தால்…? கடவுளே! நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை அவளால்.

விக்ரம்! அவன் முகத்தை நினைத்துப் பார்த்தாள். அதில் தெரிந்த ஸ்வாதியின் மேலிருந்த கோபம், விக்னேஷின் மேலிருந்த வெறி, அவர்களைக் கொன்று விடுமளவிற்கு ரௌத்திரம். இதற்கு முன் இப்படி அவனைப் பார்த்ததே இல்லை. குழந்தையை வைத்து மிரட்டும் போது கூட, அவன் பார்வையில் திமிரைத் தான் பார்த்திருக்கிறாள். ஆனால் இன்று மொத்தமாக, அவர்களை வதம் செய்யத் துடிக்கும் வாமனன் போலவே காட்சியளித்தான்.

இப்போது அங்கு என்ன நடந்திருக்கும்? விக்னேஷை போலீஸ் அரெஸ்ட் செய்திருப்பார்களா? ஸ்வாதி என்னவாகிருப்பாள்? இப்படி பல யோசனைகளுடன் படுத்திருந்தவளைப் பார்க்க வந்தார் ரேணுகா.

அவரைப் பார்த்ததும் சிரிக்க முயன்றவளிடம், “நிசாம்மா… நான் ரொம்ப பயந்துட்டேன் தெரியுமா? இப்ப உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே? பாப்பா நல்லா இருக்காளாம், தூங்க வச்சிருக்காங்க. நீ பயப்படாத, பதட்டப்படாத…” என்றவரிடம், சரியென தலையசைத்து “அங்க என்னாச்சு…?” என்றவளிடம்,

“மதி இறந்துட்டாங்க நிசாம்மா, எல்லாரும் ஜிஹச் போயிட்டாங்க. நீ முழிச்சதும் தான் நானும் ரித்தியை கூப்பிட்டு அங்க போகணும்.” என்று வருத்தமாக கூற,

“நீங்க கிளம்புங்க ரேணும்மா, இங்கதான் ரஞ்சிக்கா இருக்காங்களே, நானும் சரியாகிடுவேன்.” என சமாதானம் செய்ய, “ம்ம்…” என்று சிரித்தவரிடம் வேகமாக வந்தார் நாகேஷ்.

“அண்ணா வந்துட்டீங்களா, என்னாச்சு?” என்றதும்,

“ரேணுமா நாம உடனே ஜிஹச் போகணும், சீக்கிரம் வா. அங்க போய் எல்லாம் சொல்றேன்.” என அவசரப்பட,

“என்ன அண்ணா, நாங்க வீட்டுக்கு போனா போதுமில்ல… அங்க வந்து என்ன செய்ய? ரித்தியும் வீட்டுல குழந்தைகளோட தனியா இருக்கா, இங்க நிசாவும் தனியா இருக்கா.” என்றதும்,

“எல்லாத்துக்கும் பார்த்துக்க ஆள் இருக்கு, முதல்ல நீ எங்கூட வா ரேணுமா.” என்றவரின் குரலே சரியில்லாமல் போக, அதை ரேணுகா கவனித்தாரோ இல்லையோ நிசா கவனித்தாள்.

“விக்ரமுக்கு என்ன அங்கிள்?” என பயந்த குரலில் கேட்க, அதுவரை பேசிக்கொண்டே இருந்த ரேணுகா அதிர்ச்சியில் நிசாவையும், தன் அண்ணனையும் மாறி மாறி பார்த்தார்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio May 1, 2026 - 3:43 pm

அட ராமா.! ஒட்டுமொத்த குடும்பத்தையும் இப்படி ஆட்டம் காண வைச்சுட்டாங்களே இந்த வீணாப்போ ஸ்வாதியும் விக்கியும்.

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured