Home Antiheroதளிர் – 78

தளிர் 78

அடுத்தடுத்து காரியங்கள் வேகமாக நடந்தது. மதியை ரவியின் வீட்டில் வைக்க முடியாது, தடயங்கள் அழியலாம், பின்னர் பிரச்சனைகள் வரலாம் என்று வசந்த் கூறிட, அதற்குள் முகுந்தனும் ரஞ்சனியும் அங்கு தேவையான வேலைகளைப் பார்த்து வைக்க, பாடியை விக்ரமின் வீட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

இரண்டு மணி நேரம் கழித்து கண் விழித்த விக்ரம், நிசாவையும் குழந்தையும் பார்க்க வேண்டும் என்றிட,

“நோ விக்ரம், யாரையும் பார்க்க விடல. இப்போதான் நிசா தூங்குறா, பாப்பாவும் இன்னும் எழுந்துக்கல, அதனால வேண்டாம், முடியாது.” என இரக்கமே இல்லாமல் நாகேஷ் பட்டென்று சொல்ல,

“ப்ளீஸ் மாமா… ப்ளீஸ்…” என விக்ரமும் கெஞ்ச, அதற்கு மேல் அவனிடம் கோபத்தைக் காட்ட முடியாமல், “ஓகே ஃபைவ் மினிட்ஸ்தான்…” என அனுப்பி வைக்க,

படபடப்பான நெஞ்சோடு, நடுங்கும் கரங்களால் சிரமப்பட்டு அந்த ஐசியு கதவைத் திறந்து உள்ளே போனான்.

அந்த ஐந்தடி தூரத்தைக் கடப்பதே கனமாகிப் போனது அவனுக்கு. இருவரையும் அந்த கோலத்தில் பார்த்தவனுக்கு இதயம், ஸ்வரம் தப்ப, கால்கள் வலுவிழக்க, கட்டிலின் நுனியை இறுகப் பிடித்துக் கொண்டான்.

மகள் இன்னுமே மயக்கத்தில் இருக்க, நிசா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். உள்ளே வந்தவன், குழந்தையின் பக்கம் சென்றமர்ந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன நினைத்தானோ, சில நிமிடங்களில் மகளின் பாதத்தை எடுத்து தன் முகத்தில் வைத்துக் கொண்டு, “அம்மு…” என கதறித் துடித்தான்.

கண்ணாடி வழியாக உள்ளே பார்த்த ரேணுகாவிற்கு, மகனின் கலங்கிய முகம் வேதனையைக் கொடுக்க, அவர்களுக்குத் தனிமை கொடுக்கும் பொருட்டு, அழுத முகத்தைத் துடைத்துக் கொண்டே வீட்டிற்கு கிளம்பினார்.

அங்கு மகளுக்கு துணை இருக்க வேண்டும், மதியழகியின் இறுதி காரியங்கள் பார்க்க வேண்டும், சொந்தபந்தங்களுக்கு சொல்ல வேண்டும் என, வேலைகள் வரிசையாக இருக்க, நாகேஷிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டார்.

சில நிமிடங்களில் முகத்தை அழுந்த துடைத்தவன், மகளின் முகத்தை வருடியபடியே விழியகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சின்னஞ்சிறு மொட்டு, அவளை போய்… பொங்கிய கோபத்தை அடக்கி, அவளின் காதோரத்தில் இருந்த மச்சத்தை மெல்ல வருடினான்.

மகள் கையில் இருந்தால் அந்த மச்சத்தை வருடாமல் இருந்ததே இல்லை. இதே போல்தான் நிசாவிற்கும் மச்சம் உண்டு என்று நினைத்த நேரம், பார்வை தன்னையுமறியாமல் மகளின் தாயிடம் சென்றது.

நல்ல உறக்கத்தில் இருக்கிறாள் என்று, அவள் சீரான மூச்சிலேயே தெரிய, அவன் பார்வை இப்போது யோசனையாக, பின் ரசனையாக மாறியது.

ரசனையாக மாறியபின் தானாக புன்னகை ஒன்று உதயமானது அவன் முகத்தில். அதில் உதடு விரிய, கன்னத்தில் இருந்த அவன் காயம் வலியைக் கொடுத்தது. “ஷ்ஆ…” என்றபடி அதை தடவியன் கண்ணில், நிசாவின் நெற்றி காயம் பட்டது.

மகளைத் தாண்டி இப்போது அவன் பார்வை நிசாவின் மேல் முழுதாக திரும்பியது. அவளது ஒடுக்கமான தோற்றம், குழந்தையை அணைத்திருந்த விதம், யாருமற்ற சூழல் என அவள் எண்ணிக் கொண்டிருப்பது என, அனைத்தும் மனதை கனக்க செய்ய, அமர்ந்திருந்த இடத்திலிருந்தே கையை நீட்ட, தட்டுப்பட்டதோ அவளது பாதத்தின் பஞ்சு போன்ற விரல்கள் தான்.

அதை நீவியபடியே அவளைப் பார்த்திருந்தவன், “சபி…” என உயிரில் இருந்து அழைக்க, அது அவளுக்கு கேட்குமா என்று கூட யோசிக்கவில்லை அவன்.

“எங்கூட இருந்தா கஷ்டப்படுவனு தான், உன்னை ஒதுக்கி வச்சேன். ஆனா இப்படியெல்லாம்…” என்றவனுக்கு அதை சொல்லக்கூட முடியவில்லை, தொண்டைக்குழி ஏறி இறங்கியது.

“இந்த உலகத்தை புரிஞ்ச எனக்கு, உன்னை புரிஞ்சுக்க தெரியல. நீ நினைக்கிற மாதிரி, நான் முட்டாள்தான் இல்லை…” என்றான் தழுதழுத்த குரலில்.

“உனக்கு என்மேல கோபம் இருக்கும், தெரியும். நான் செய்ததை உன்னால மன்னிக்க முடியாது, தெரியும். நீ மறக்கவும் வேண்டாம், என்னை மன்னிக்கவும் வேண்டாம். உனக்கு என்னை என்ன செய்யணும் தோனுதோ, செஞ்சுக்கோ…” என்றவன், சில நொடி அமைதிக்குப் பின்,

“இப்போவும் உனக்கு நியாயம் செய்றேன்னு நான் அரெஸ்ட் ஆக நினைக்கல. அது உனக்கு அசிங்கம்னு எனக்குத் தெரியும். உன்னை இனி எப்பவும் கஷ்டப்படுத்தக் கூடாதுனு நினைக்கிறேன். இனி எனக்கு ஒரு லைஃப் இருக்கா, இல்லையா தெரியாது. ஆனா நான், நீ, நம்ம அம்மு மூணு பேரும் சேர்ந்து ஒரு குடும்பமா வாழணும்னு பேராசை இருக்கு.

இது நடக்காது தெரியும். உன்னால என்னை மன்னிக்க முடியாதுன்னும் தெரியும். ஆனா உன்கூட எப்படியாச்சும் வாழ்ந்துடணும்னு இந்த மனசு கதறுது. அதுக்கு என்னால பதில் சொல்லவே முடியல. உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுனு நான் ஒதுங்கி இருந்தாலும், இந்த பேராசை பிடிச்ச மனசு கேட்க மாட்டேங்குது, என்ன செய்ய நான்? சரி, உங்கிட்ட வந்து இதெல்லாம் பேசலாம்னு நினைக்கும் போது, உனக்கு என்ன தகுதி இருக்குன்னு நீ கேட்டுட்டா என்ன செய்வேன்? எனக்கு நிஜமாவே புரியல. அவளை காதலிச்சேன், கல்யாணம் பண்ணேன், ஆனா வாழல. ஏன்னு தெரியாது, அதுல விருப்பமே வந்தது இல்ல. ஆனா உன்கூட நான் வாழணும்னு அவ்வளவு ஆசை வருது. இதுக்கு பேர் என்னனு தெரியல.

காதல் எப்படி ரெண்டு தடவை வரும்? அப்போ அது காதல் இல்லையா? நான் அவளுக்கு உண்மையா இல்லையா? இல்ல, உனக்கு உண்மையா இல்லையா? நான் என்ன யோசிக்குறேன் புரியல…” என தன் மனதுக்குள் இருந்த குழப்பங்களை எல்லாம் அவளிடம் சொல்லி புலம்பினான்.

“ஹான்! நீ எப்படி என் மனசுக்குள்ள வந்தன்னு சொல்லலையே… நம்ம அம்மு பிறக்கும் போது, நீ அந்த லேபர் வார்டுல என் கையை பிடிச்சிட்டு, உயிரை கண்ணுல தேக்கி, ‘லவ் யூ சீனியர்னு’ சொன்னியே, அப்போ… அப்போதான், நீ எனக்குள்ள வந்துட்ட. இல்ல இது தப்பு, நீ வேண்டாம்னு நான் ஓடி ஓடி ஒளிஞ்சாலும், என்னோட மனசு அது கேட்கவே இல்லை. உன்னையே சுத்தி வந்தது.

எவ்வளவோ பிரச்சனையை நீ கடந்து வந்துருக்க, நான் உன்னை மதிக்கவே இல்லை. ஒரு மனுசனா நான் நடந்துக்கிட்டதும் இல்ல. பார்க்கும் போதெல்லாம் உன்னை அவமானப்படுத்திருக்கேன். ஏன், வயித்துல குழந்தையோட வந்து நின்னப்போ கூட, உன்னை துரத்தி விட்டுருக்கேன். அப்படி இருந்தும் நீ என்னை விரும்பியிருக்க. அது எப்படி அவ்வளவு லவ் என்மேல? எனக்கு அது புரியவே இல்லை. கஷ்டத்தையும் வலியையும் மட்டுமே கொடுத்த என்னை, எப்படி உன்னால விரும்ப முடிஞ்சது?” என ஆதங்கமாக என்றாலும் மெதுவாகத்தான் பேசினான்.

இன்று இதெல்லாம் அவளிடம் சொல்ல வேண்டும் என்றெல்லாம் அவன் நினைக்கவில்லை. இன்று மட்டுமல்ல, என்றுமே அதை சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கவில்லை.

ஆனால் இன்று தன் சட்டையைப் பிடித்து, ‘என்னை விட்ட மாதிரி, குழந்தையை விட்டுட மாட்டன்னு நம்பினேனே, விட்டுவிட்டாயே…’ என்று கேட்டதும் தான், அவனையுமறியாமல் இதெல்லாம் வெளிவந்து கொண்டிருந்தது.

ஆரம்பத்தில் இருந்து அவள் சரியாகத்தான் இருந்திருக்கிறாள், அவனை விரும்ப ஆரம்பித்ததிலிருந்து… ஆனால் அவன்தான் அனைத்தையும் சொதப்பி, பிரச்சனைகளுக்கு மேல் பிரச்சனைகளை இழுத்துவிட்டு, ஸ்வாதியின் பழிவெறியைத் தூண்டிவிட்டு ஷ்ஷ்…! நினைக்கும்போதே பெருமூச்சு வந்தது.

இதில் இதை கடந்து வந்தவளுக்கு எப்படியான வலி இருக்கும் என்று அவனுக்குப் புரிந்தது. புரிந்த நொடி, அவன் கண்களில் இருந்து நீர் வழிந்தது.

அது அவன் உதட்டில் பட்டு உப்புக்கரிக்க, வேகமாக அதைத் துடைத்தவன், ‘என்ன, நான் அழுகிறேனா? ஆம், அவளுக்காக அழுதான். அவள் வாழ்க்கையைத் தொலைக்க காரணமான, தன்னை வெறுத்தே அழுதான். அழகான வண்ணத்துப் பூச்சியாய் சுற்றியவளின் உலகை, சூனியமாக்கிய தன்னை வெறுத்தே அழுதான்.

எப்படி இந்த வாழ்க்கை சூனியமானது? ஏன் இவள் என் வாழ்க்கையில் முதலில் வரவில்லை? ஏன் இவ்வளவு போராட்டம், ஏன் எங்களுக்கு இவ்வளவு கஷ்டம்? ஏன் எங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல சூழலை கொடுக்க முடியவில்லை என ஏன், ஏன் என பல கேள்விகளோடு, அவள் பாதத்திலே தலையை சாய்த்து கதறினான்.

அவளுக்குள்ளும் சிறு போராட்டம், அவள் உணர்வுகள் அவன் அழுகிறான் என்று அவளை எழுப்புகிறது, அவளும் உணருகிறாள். ‘அழாதே’ என்று சொல்ல வேண்டும் போல் அவளுக்குள் ஒரு துடிப்பு, ஆனால் எதுவும் சொல்ல முடியவில்லை. கண்னைத் துடைத்துவிட்டு சிறிது நேரம் அவளைப் பார்த்தவாறே அமர்ந்திருந்தான்.

இப்போதும் கூட அவள் திமிராக பார்ப்பது போலொரு தோற்றம். மீண்டும் அவள் பாதங்களை வருடியவாறே அமர்ந்திருந்தவனுக்கு, அப்போது தான் ஒன்று புரிந்தது, அது பட்டை விட மென்மையாக இருக்கிறது என்று.

கைகளால் வருடியதை நிறுத்தி, மெல்ல தன் உதடுகளை அங்கே பதித்தான். முதல் முத்தம் அவனுக்கு! முத்தத்தால் மன்னிப்பை வேண்டினானா? இல்லை, என்னை மன்னித்து விடாதே என்று யாசித்தானா? தெரியாது.

மீளவேண்டும் என்று மூளை உரைத்த போதும், கேளாமல் இன்னும் பல முத்தங்களை அந்த பாதங்களில் பதித்த வண்ணம் இருந்தான்.

அவளின் உள்ளங்காலில் இவன் பதித்த முத்தத்தில், அவளது உணர்வுகள் விழித்துக் கொள்ள, கால் விரல்கள் மெல்ல அசைந்தன, அவனின் மீசை ரோமத்தினால் ஏற்பட்ட கூச்சத்தில்.

அதே நேரம் நாகேஷும் கதவைத் தள்ளிக்கொண்டு வர, அவசர அவசரமாக மேலும் பல முத்தங்களைப் பதித்தவன், முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு வெளியில் சென்றான்.

விக்ரம் நகர்வதையே விழியெடுக்காமல், விழியில் நீர் கோர்க்க பார்த்திருந்தாள் நிசா. அவள் முகத்தில் தெரிந்த பலவித உணர்வுகளைக் கண்ட நாகேஷ், அவள் தலையை மெல்ல வருடிவிட்டார்.

அவரை நிமிர்ந்து பார்த்தவளிடம், “எல்லாம் சரியாகும்டா, அவன் சரி செய்யணும்னு நினைக்கிறான். அப்படியே விடு, முடிஞ்சா… உன்னால முடிஞ்சா அவனை மன்னிச்சிடு.” என்றதும், ‘ம்ம்…’ என்பது போல் தலையசைத்தாள்.

‘உருகியதே எனதுள்ளம்

பெருகியதே விழி வெள்ளம்

விண்ணோடும் நீ தான்

மண்ணோடும் நீ தான்

கண்ணோடும் நீ தான்

வா ஆஆ…’

***

இங்கு ரித்தியையும் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்த ரேணுகா, அடுத்து நடக்க வேண்டியவைகளைப் பார்க்க ஆரம்பித்தார்.

நெருங்கிய சொந்தங்களுக்கு, தொழில்முறை நண்பர்களுக்கு என, ஏற்கனவே ரவி அழைத்து சொல்லிருக்க, நேரம் மாலையைத் தொட்டிருந்தது.

சரியாக அந்த நேரம்தான் மனோகரும் நரேனிடம் சென்றிருக்க, ரவி அழைத்து உடனே கிளம்பும்படி கூற, வசந்த் மூலம் ஃபார்மாலிடிஸ் முடித்து அவர்களும் அங்கிருந்து உடனே கிளம்பியிருந்தனர்.

விக்னேஷின் வீட்டில் வசந்த் மூலம் செய்தி சென்றிருக்க, இறந்துவிட்டான் என்று நினைத்திருந்த மகன், இத்தனை நாள் உயிரோடு இருந்தானா? அப்படி இருந்ததும் இல்லாமல், தங்களை வந்து பார்க்கக்கூட இல்லையே, ஏன்? என பெருங்கேள்விகளோடு மருத்துவமனைக்கு வர, வசந்த் அவர்களுக்கு கூறிய செய்தியில் மகனை நினைத்து அருவருத்துப் போயினர்.

“என்ன சார் சொல்றீங்க?” விக்னேஷின் அம்மா மனம் பொறுக்காமல் மீண்டும் மீண்டும் கேட்க,

அவரோ, “நீங்க நம்பலன்னாலும் அதுதான் உண்மை. நிசாவை கல்யாணம் செய்துக்க முடியலன்ற வெறியில, விக்ரம் வொய்ஃப் கூட இல்லீல் ரிலேசன்ஷிப் வச்சு, அந்த பொண்ணுக்காக செத்துட்டதா நடிச்சு, வெளிநாட்டுக்கு போயிட்டாங்க. அங்க போயும் சும்மா இல்லாம, நிசாவோட வாழ்க்கையை நாசம் பண்ணி, இப்போ அவளை கொல்ற அளவுக்கு போயிட்டாங்க.

இதையெல்லாம் பார்த்தா ஒரு கணவன் என்ன செய்வானோ, அதைத்தான் விக்ரம் செஞ்சிருக்கான். அப்போ கூட உங்க மகனை கொல்ல வரல. அவனோட மனைவியைத்தான் கொல்ல நினைச்சான். அவளுக்காக குறுக்க வந்து விழுந்து செத்தது உங்க மகன்தான்.” என்று அதிகாரமாக சொல்ல, அவர் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்கமுடியவில்லை அவர்களால்.

“உங்களுக்கு நம்ப முடியலை என்றால், எங்ககிட்ட இருக்குற எவிடென்ஸ் எல்லாம் பாருங்க, உங்க மகன் பாடியை மார்னிங் தான் தருவாங்க. மத்த டீடைல்ஸ் வேணும்னா ஸ்டேஷன்க்கு வாங்க. ஹான்! அப்புறம் விக்ரம் சரண்டர் ஆகிட்டான், உங்களுக்கு ஃபர்தரா கேஸ் மூவ் பண்ணணுமானு பார்த்து பண்ணுங்க.” என்றுவிட,

“என்னங்க இப்படியெல்லாம்…” என விக்னேஷின் அம்மா அழ,

“என்னை ஏன் கேட்குற? அந்த பொண்ணை கல்யாணத்துக்கு பேசும் போதே சொன்னேன், இவன் பேச்சைக் கேட்டு எந்த முடிவும் எடுக்காதன்னு… இப்போ எங்க கொண்டு வந்து நிறுத்திருக்கு பார்த்தியா? அந்த பொண்ணோட வாழ்க்கையையும் கெடுத்து, கல்யாணம் செஞ்சி குடும்பமா இருந்த, ஒரு பொண்ணோட வாழ்க்கையையும் கெடுத்து, என்ன புள்ள வளர்த்து வச்சிருக்க நீ…? நல்லவேளை செத்து போயிட்டான், உயிரோட இருந்திருந்தா நானே கொன்னுருப்பேன்.” என ஆங்காரமாகக் கத்தியவர்,

“செத்தவன் செத்தவனாவே இருக்கட்டும். இவனை வீட்டுக்கு கொண்டு போய் கேவலப்பட்டு, குடும்பமா அவமானப்பட போறீயா? ஹ்ம்ம்… சத்தம் இல்லாம என் பின்னாடி வந்து சேரு. இல்ல, அவனோட சேர்த்து உன்னையும் தலை முழுகிட்டு போயிடுவேன்.” என்றவர், வசந்த்திடம் அடுத்து செய்ய வேண்டியதை சொல்லிவிட்டுச் செல்ல, வசந்த்தின் முகம் நிம்மதியைக் காட்டியது.

You may also like

1 comment

M. Sarathi Rio May 1, 2026 - 4:46 pm

விக்கியோட அம்மா அப்பா செய்தது ஒருவிதத்துல சரின்னாலும் இன்னொரு விதத்துல சரியில்லையோன்னு தோணுது. பெத்தவங்க கடமையை செய்து முடிக்கணும் இல்லையா..?

😔😔😔
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured