Home Antiheroதளிர் – 79

தளிர் 79

மதியழகி இறந்து ஒருவாரம் முடிந்திருந்தது. நரேனும் உஷாவும் மனோகரின் துணையோடு வீடு வந்துவிட, நரேன் வந்த பிறகே ரவிக்கு வேலை சற்று இலகுவானது. நிசாவும் குழந்தையும் இன்றுதான் வீட்டுக்கு வருகிறார்கள். அதனால் மருத்துவமனையில் அவர்களுக்கு துணைக்கு உஷாவை நிறுத்திவிட்டார் ரேணுகா.

அடுத்தடுத்த காரியங்கள் தன்னைப்போல நடக்க, யார் சொல்லியும் கேட்காமல், விக்ரம் சரண்டராக வேண்டுமென நிலையாக நிற்க, முகுந்தனும் வசந்த்தும் விடவே இல்லை.

வசந்த், ரேணுகாவிடம் வர, மகனின் முடிவில் ரேணுகாவிற்கு வருத்தம்தான். ஆனால், அவன் வாழ்க்கையை சரி செய்ய நினைக்கும் போது, தடுக்க வேண்டாம் என்று நினைத்து அமைதியாகிவிட்டார்.

இப்போது எல்லோரும் விக்ரம் வீட்டில் இருக்க, நிசா எங்கே போவது எனத் தெரியாமல் தடுமாறினாள். அவளுக்கு எங்கு செல்லவும் விருப்பமே இல்லை. அதோடு இந்த ஒரு வாரத்தில் விக்ரம் வந்து பார்க்கவுமில்லை. அவன் எங்கே இருக்கிறான், என்ன ஆனான், நிஜத்திலே சரண்டர் ஆகிவிட்டானா? என பல கேள்விகளுடன் மூளையை குழப்பிக் கொண்டிருந்தாள்.

“நிசாம்மா எல்லாம் ரெடி, கிளம்பலாமா?” என்று வந்த நரேனிடம் என்ன கேட்க, எப்படி கேட்க என தடுமாறினாள்.

“என்ன நிசாம்மா…?” என்றபடியே குழந்தையைத் தூக்கிக் கொள்ள,

“ம்ச் இல்ல… அது விக்ரம்… இல்ல, சீனியர் எங்க? ஏன் எங்களைப் பார்க்க வரல?” என ஒருவாறு தயக்கத்தை விடுத்து கேட்க,

“அது யார் சொல்லியும் கேட்காம, அவர் பிடியிலேயே நிற்கிறார் நிசாம்மா. எல்லாரும் சொல்லி பார்த்துட்டாங்க, வசந்த் வேற ரொம்ப கோபமா இருக்கார்.”

“ஓ…” என்றவள், “ஏன்… இப்போ எங்க? சரண்டராகிட்டானா?” என்றாள் கடுப்பாக.

“அது நல்ல விசயம்தானே நிசாம்மா. மர்டர்னா சும்மா விடுவாங்களா? அரெஸ்டாகுறதுக்கு சரண்டர் ஆகுறது பெட்டர். அதோட அவர் செஞ்ச தப்புக்கு தண்டனை கிடைக்கிறது நியாயம் தானே?” என்றவனை எரிச்சலாகப் பார்த்து,

“இப்போ எங்க இருக்கான் அந்த முட்டாள்? ஜெயில்ல இருக்கானா, இல்ல எங்கையாச்சும் அவனை ஒளிச்சு வச்சுருக்கீங்களா?” என மரியாதையை எல்லாம் பறக்கவிட்டு கடுப்பாகக் கேட்க, நிசாவின் இந்த பேச்சில் அதிர்ந்து நின்ற உஷா சட்டென்று சிரிக்க, நரேன்தான் முழித்து நின்றான்.

“நிசாம்மா…” என அதிர்ச்சியில் கேட்க,

“நரேன் அவ கேட்குற கேள்விக்கு பதில் சொல்லுங்க.” என்ற மனைவியை முறைத்துவிட்டு,

“நிசா, இப்போ பாஸ் பாண்டிச்சேரில இருக்கார். நாங்கதான் அங்க அனுப்பி வச்சிருக்கோம். இங்க கொஞ்சம் ஒர்க் போயிட்டு இருக்கு. அவர் இருந்தா அதெல்லாம் செய்ய விடமாட்டார். அதனாலத் தான் ரவியும் வசந்த்தும் அங்க அனுப்பிருக்காங்க.” என்றதும்,

“ஓ…” என்று யோசனையாக, அப்போது இவர்களை அனுப்ப ரஞ்சனி உள்ளே வர, “ரஞ்சிக்கா, நானும் பாப்பாவும் ட்ராவல் பண்ணலாமா?” என்றாள் பட்டென்று.

“என்ன… என்ன நிசா, மறுபடியும் எங்கேயும் சொல்லாம போகப்போறியா? உன்னை அந்த விக்ரம் எதுவும் சொன்னானா?” என எண்ணெயில் இட்ட கடுகு போல பொறிய,

“ம்ச்! இவங்க வேற…” என சலித்த நரேன், “நிசா, உன்னை எங்கேயும் அனுப்ப முடியாது. பாஸ்க்கு தெரிஞ்சா என்னை தொலைச்சிடுவார்.” என்ற நரேனை முறைத்தவள் ரஞ்சனியிடம் திரும்பி, “அக்கா நீங்க சொல்லுங்க, ட்ராவல் பண்ணலாமா?” என மீண்டும் கேட்க,

“பண்ணலாம் நிசா, பாப்பா மட்டும் கவனமா பார்த்துக்கிட்டா போதும்.” என்றதும்,

“சரிக்கா.” என்றவள் உஷாவிடம், “உஷ், நான் நரேன் கூட போயிட்டு வரேன். நீ ரேணும்மாவை சமாளிச்சிக்கோ. என்னை விட்டுட்டு நரேன் வந்துடுவான்.” எனவும்,

“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன், நீ கவனம்.” என்றவள், இருவரையும் புரியாமல் பார்த்த நரேனிடம் உஷா, “அவ விக்ரம் சாரை பார்க்க போறா, கூப்பிட்டு போய் விடுங்க. ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும்.” என்றுவிட,

அப்போதுதான் ரஞ்சனிக்கும் நரேனுக்கும் மூச்சே சீரானது. பின் சிரித்துக்கொண்டே, “போகலாம்… போகலாம்…” என குழந்தையோடு நரேன் முன்னே சென்றுவிட, அவனுக்கு பின்னால் செல்லவிருந்த நிசாவை, கைப்பிடித்து நிறுத்தினாள் ரஞ்சனி.

“நிசா, உனக்கு நான் சொல்ல ஒன்னுமே இல்ல. உன் கஷ்டம் யாருக்கும் வந்திருக்கக்கூடாது தான். ஆனால், இப்போ அது எல்லாம் இறந்தகாலம். உனக்கு முன்னாடி ஒரு அழகான எதிர்காலம் இருக்கு. அதை நீ மறந்துடாத. உதாசீனப்படுத்தாத, முக்கியமா அம்முவை நினைச்சுக்கோ. அவளுக்காகவாவது விக்ரமிற்கு ஒரு வாய்ப்பு கொடு. அவன் ரொம்ப நல்லவன் நிசா, அதுதான் அவன் பிரச்சனையும். தொழில் வாழ்க்கையில ஜெயிக்க தெரிஞ்சளவுக்கு, சொந்த வாழ்க்கையில ஜெயிக்க தெரியல. எல்லாருக்கும் எல்லாமும் தெரிஞ்சிடாது இல்லையா? அவனுக்கு இது வரல, அப்படி நினைச்சிக்கோ நிசா.

அத்தைக்கு நீதான் முக்கியம். நீ என்ன முடிவு எடுத்தாலும் அவங்க சம்மதம் சொல்லுவாங்க. உனக்காக தன் சொந்த மகனை விலக்கி வச்சாங்க. ஆனா அவங்க மனசு, தன்னோட மகனை நினைச்சு இரத்தக் கண்ணீர் வடிச்சிட்டுதான் இருக்கும். அவங்களையும் நீ யோசிச்சு முடிவெடு.” என்றுவிட்டு,

“ஸாரி, எல்லாரும் சொன்னாங்க உன்னை ஃபோர்ஸ் பண்ணக்கூடாதுனு. விக்ரம் எங்கிட்ட ப்ராமிஸ் கூட வாங்கினான். ஆனா என்னால உங்கிட்ட இதை பேசாமல் இருக்க முடியல, சாரி!” கண்ணில் வழிந்த நீரைத் துடைத்தபடியே புன்னகைக்க, அதில் ரஞ்சனியை இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் நிசா.

“ரஞ்சிக்கா, நான் என் லைஃப்ல நன்றிக்கடன் செலுத்தணும்னா அதுல முதல் ஆள் நீங்கதான். என்னை உங்க தங்கை போல பார்த்துக்கிட்டீங்க. உங்களுக்கு எங்கிட்ட சொல்ல எல்லா உரிமையும் இருக்கு. நான் தப்பா எந்த முடிவும் எடுக்கமாட்டேன் ரஞ்சிக்கா, என்னை நம்புங்க.” என்று மீண்டும் ஒருமுறை இறுக்கியணைத்துவிட்டு நரேனுடன் கிளம்பினாள் நிசா.

***

“ப்ளீஸ் சார், கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க. அவன் செத்து ரொம்ப நாளாச்சு. அவன் திரும்ப வரல, நாங்க பார்க்கல. என்ன பண்ணணுமோ செய்யுங்க சார். எங்க குடும்பத்து பேர் வெளிய வரக்கூடாது. நாங்க இத்தனை வருஷம் கட்டிக் காப்பாத்தின கௌரவம், மானம், மரியாதை எல்லாம் சந்தி சிரிச்சிடும். விட்டுடுங்க சார், நீங்க எப்படி இந்த கேசை க்ளோஸ் பண்ணணுமோ பண்ணிடுங்க.” எனக் கிட்டத்தட்ட கெஞ்சவே ஆரம்பித்து விட்டார் விக்னேஷின் தந்தை.

அவர் மனைவியோ அழுதபடியே அமர்ந்திருந்தார். வசந்த் அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மீண்டும் விக்னேஷின் தந்தையைப் பார்க்க, “பெத்தவ இல்லையா, அதான் அழறா. நீங்க அதையெல்லாம் விட்டுடுங்க. எங்க பக்கம் இருந்து எப்பவும் எந்த பிரச்சனையும் வராது, நம்புங்க.” என்றுவிட்டு,

மனைவியிடம், “என்ன சொல்லி உன்னை கூப்பிட்டு வந்தேன்? இன்னும் அவனுக்காக அழுதா, இப்படியே விட்டுட்டு போயிடுவேன்.” எனக் கத்த, அவரோ மேலும் அழ ஆரம்பித்தார்.

“சார் விடுங்க, தன் மகன் எப்படி இருந்தாலும் ஒரு தாயா அவங்களால விட்டுக்கொடுக்க முடியாது. அதுலயும் இறந்துட்டதா நினைச்ச மகன், இவ்வளவு நாள் உயிரோட இருந்துருக்கான். யாரையும் வந்து பார்க்கல, பேசலன்னா அது அதிர்ச்சியும் வலியும்தானே. அவங்களுக்கு கொஞ்சம் டைம் கொடுங்க, சீக்கிரம் எல்லாத்தையும் மறந்து சரியாவாங்க.” என்ற ரவியைப் பார்த்து, தலையசைத்தார் அந்த மனிதர்.

“எனக்கு உங்க வலி புரியுதுங்க. ஆனா என் பிள்ளைங்கள நினைச்சுப் பாருங்க. இன்னும் வாழவே இல்லங்க. ஆனா வாழ்க்கையில் அதுங்க பார்க்காத கஷ்டமே இல்லை. அவங்க வாழ்க்கையை வாழட்டும், அதுக்கு நீங்க ஒரு வாய்ப்பு கொடுங்க. நீங்க சபிச்சோ, மனசு வெறுத்தோ ஒரு வார்த்தை சொல்லிடாதீங்க, அது பலிச்சிடும். தயவுசெய்து என் பிள்ளைங்களை வாழவிடுங்கம்மா…” என அழுத ரேணுகாவின் கையைப் பிடித்துக் கொண்டார் அந்த பெண்மணி.

“என் பையன் வந்து எனக்கு நிசப்தியை பிடிச்சிருக்குனு சொன்னப்பவும் சரி, அவளை வேண்டாம்னு சொன்னப்பவும் சரி, நான் அவனை எதுவும் சொல்லல. இவர்தான் இப்படி அவன் என்ன சொன்னாலும் கேட்காத, கெட்டு சீரழிஞ்சி போய்டுவான்னு சொன்னார். அந்த பொண்ணோட பாவம், நம்ம குடும்பத்தை விடாதுன்னும் சொன்னார். உண்மைதான்! அந்த பொண்ணோட கண்ணீர்தான் இன்னைக்கு…” என்றவர் அதற்கு மேல் முடியாமல் கதற, பார்த்திருந்த அத்தனை பேருக்குமே மனம் கனத்துப் போயிருந்தது.

விக்னேஷின் தந்தைதான் மனைவியை கொஞ்சம் கொஞ்சமாய் சமாதானம் செய்தார். ரித்தி நீரை கொண்டுவந்து கொடுக்க, அதைக் குடித்து தன்னை சமன் செய்தவர், “அவர் சொல்ற மாதிரியே செய்யுங்க சார். எங்களுக்கு எந்த வருத்தமும் இல்ல, இவங்க சொல்ற மாதிரி இனியாச்சும் அவங்க வாழ்க்கையை அவங்க நிம்மதியா, சந்தோசமா வாழட்டும்.” என்றதும், ரேணுகா அவரை அணைத்து அழவே செய்துவிட்டார்.

“என் மகன் செஞ்ச தப்புக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன். அவனை அப்படியே விட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிமா…” என்றார் அழுகையினூடே.

அதன்பிறகு அனைத்தும் பேசி, அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுத்து கிளம்பும் நேரம், “அந்த பொண்ணு, உங்க தங்கை எங்க இருக்கா? எப்படி இருக்கா?” என்றார் விக்னேஷின் தாய்.

மகன் விரும்பிய பெண்ணாயிற்றே! அதோடு அவனுக்காக எந்த எல்லைக்கெல்லாம் சென்றாள் என்று, கணவரின் வழியாக தெரிந்தவராயிற்றே! அதோடு மகன் இல்லாத இந்த வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வாள் என்று பயமாகவும் இருக்க, ரவியிடம் கேட்டுவிட்டார்.

அவனோ, “இருக்காம்மா… விக்னேஷ் இறந்ததும் அதிர்ச்சியில அப்படியே அமைதியாகிட்டா. டாக்டர்ஸ் சரி செய்யலாம்னு சொல்லிருக்காங்க, பார்க்கலாம் ம்மா…” என வேதனையாக சொல்ல,

“சரியாகும் தம்பி, சீக்கிரம் சரியாகி இங்க வருவா. நாங்க போய் ஒரு டைம் பார்த்துட்டு வரட்டுமா?” என மெல்ல கேட்க,

“ம்ம்… போய் பாருங்கம்மா, அவளுக்கு விக்னேஷ் தவிர வேற யாரையும் அடையாளம் தெரியல.” என்றான் வேதனையாக.

அவனுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்றே தெரியவில்லை யாருக்கும். அமைதியாகவே விடைபெற்று கிளம்பினர் இருவரும்.

அவர்கள் கிளம்பியதும் தான் ரேணுகாவிற்கு நிம்மதியே வந்தது. “நாம பயந்த மாதிரி இல்ல ரவி இவங்க…” என்றார் ரேணுகா தன் பயத்தையெல்லாம் பெருமூச்சாய் வெளியிட்டு.

“அப்படியும் சொல்ல முடியாது அத்தை, அவரோட வீக்பாய்ன்ட் ஸ்டேட்டஸ், பேர், புகழ், மரியாதைதான். அதுக்கு பங்கம் வந்தா பார்த்துட்டு சும்மா இருக்கமாட்டார். அவரைப்பத்தி தெரிஞ்ச பிறகுதான், விக்ரம் இப்படி ஒரு ப்ளானே சொன்னான்.” என்றதும்,

“ம்ம்… ஆனா நிசா பாவமில்ல, அந்த எருமை உண்மையா சரண்டராகிட்டான்னு நினைச்சு பயந்து போயிருந்தாளே. எல்லாம் இவனோட நடிப்பு, நாடகம்னு மட்டும் தெரிஞ்சது, அவனை என்ன செய்வான்னே தெரியாது. இதுல நானும் இருக்கேன்னு தெரிஞ்சா, மொத்தமா என்னையும் விட்டுட்டு போயிடுவா.” என்ற ரேணுகாவைப் பார்த்து சிரித்தாள் ரித்தி.

அப்போது ரஞ்சனியிடமிருந்து ரேணுகாவிற்கு போன் வர, “பாப்பாவும் நிசாவும் கிளம்பிட்டாங்க போல, அதுதான் ரஞ்சி போன் பண்றா.” என்றபடியே ஆன் செய்தார்.

“அத்தை…” என ஆரம்பித்து ஹாஸ்பிடலில் நடந்ததை சொல்ல,

“என்ன சொல்ற ரஞ்சி, நிஜமாவா?” என்ற ரேணுகாவை மற்றவர்கள் யோசனையாக பார்க்க, “சரி… சரி போகட்டும், போய் அவனுக்கு நாலு போட்டு கூட்டிட்டு வரட்டும். அப்போக்கூட அவன் அடங்குவானா தெரியல…” என்று சலித்தவரின் முகத்தில், முன்பு இருந்த கலக்கம் இப்போது சுத்தமாக இல்லை.

“ரவி… நிசா, விக்ரமை பார்க்க போறாளாம், ரஞ்சி சொல்றா!” என ஆச்சரியமாக சொல்ல,

“ம்ம்… உன் மகன் உனக்கு முழுசா கிடைக்கணும்னு வேண்டிக்கோம்மா, அரையும் குறையுமா வந்து சேரப்போறான்.” என ரித்தியும் கிண்டலடிக்க,

“வாயை மூடு, எப்படி வந்தாலும் சரி, ரெண்டு பேரும் ஒன்னா வந்தா போதும்.” என்று மனம் நிறைந்து சொன்னவர், வசந்த்தின் கைகளைப் பிடித்து, “நீங்க இல்லைன்னா என் பிள்ளைங்க எனக்கு கிடைச்சிருக்க மாட்டாங்க வசந்த். என் பையன் எவ்வளவு அறிவாளியா இருந்தாலும், குடும்ப வாழ்க்கையில முட்டாள்தான். அது அவனுக்கே இப்போதான் புரிஞ்சிருக்கும். இனி அவன் நிசாவையும் குழந்தையையும் விடமாட்டான். நன்றி சொல்லி உங்களை தள்ளி வைக்க மாட்டேன். எப்பவும் நீங்க எங்க குடும்பத்துல ஒரு ஆள்தான் வசந்த்.” என நெக்குருக பேச,

“அத்தை எதுக்கும் நாம எல்லாரும் போகலாமா? நிசா கிளம்பி போற வேகத்தைப் பார்த்தா, உங்க மகனுக்கு சேதாரம் ஜாஸ்தியா இருக்கும் போல… அவனை காப்பாத்த வேண்டாமா?” என ரவி தன் பங்கிற்கு கிண்டலடிக்க,

“இருங்க, நான் விக்கிக்கு கூப்பிட்டு சொல்றேன்.” என ரித்தி போனை எடுக்கப்போக, அதை பிடுங்கிய ரவி, “விடு ரித்தி, நாம சொல்லி உன் அண்ணன் அலார்டாகிட்டா, நமக்கு என்ன என்டர்டெயின்மென்ட் இருக்கு சொல்லு…” என்றதும், அங்குள்ள அத்தனை பேரின் முகத்திலும் நிறைந்த புன்னகை நிரந்தரமாக உதயமானது.

ஆனால் இங்கு காரில் சென்று கொண்டிருந்த நிசாவின் முகத்திலோ, விக்ரமைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம், ஆத்திரம், அழுகை, இயலாமை என அத்தனை உணர்வுகளும் போட்டி போட்டுக் கொண்டு, அவளை பாடாய்படுத்தியது.

***  

You may also like

1 comment

M. Sarathi Rio May 1, 2026 - 5:11 pm

அடப்பாவி விக்ரம்..! அப்ப ரெஸ்ட், சரண்டர் இதெல்லாம் நாடகமா..? இருக்குடா, உனக்கு நிசா கிட்ட.

😀😀😀

CRVS (or) CRVS 2797

Reply

Leave a Reply to M. Sarathi Rio Cancel Reply

About Me

Featured