முந்தைய இரவு மதுசூதனன் வீடு திரும்பிய பொழுது, தங்கையின் பேச்சுக் குரல் மாடியிலிருந்து ஒலித்தது.
“தூங்காம கொள்ளாம இந்நேரத்துல என்ன பண்ணிட்டுருக்கா?” வாய்க்குள் முணுமுணுத்தபடி அவன் படியேறினான்.
“கல்யாணத்தைப் பத்தி வீட்டுல பேசணும்ல. ஒரு வார்த்தை கூட கேக்காம நீயா முடிவெடுப்பியா? நீ சொல்ற மாதிரி, வீட்டுல இந்தப் பேச்சை எடுக்கவும் பயமா தான் இருக்கு. உன் மேல எனக்கு ஏகப்பட்ட நம்பிக்கை இருக்குறது நிஜம். ஆனா, நீ ஒரு வேலைக்கும் போக மாட்டேங்குறியே. கேட்டா, ஆயிரம் காரணம் சொல்ற. அப்பறம் எப்படி நீ என்னை வச்சுக் காப்பாத்துவ? இப்படிலாம் பேசாத. காலேஜ் முடிக்கிற வரைக்கும் வெய்ட் பண்ணு. அப்போ தான் நானாவது ஒரு வேலைக்குப் போக முடியும். சமாளிச்சுக்கலாம் விடு. வேற ஒருத்தனோட என் கல்யாணம் நடக்கவே நடக்காது; கருமாதி வேணா நடக்கும். நீயில்லாம நான் செத்துருவேன்டா!” உரையாடலின் முடிவில் இவள் விசும்பினாள்.
அதை மிதமிஞ்சிய வேதனையோடு கேட்டுக் கொண்டிருந்த மதுவிற்கு, மறுமுனையில் அந்த வஞ்சகன் என்னென்ன வார்த்தை விளையாட்டுகளைக் கட்டவிழ்த்திருப்பான் என உள்ளங்கை நெல்லிக்கனியாக விளங்கியது. அத்துடன் வந்த தடயமே தெரியாமல் வீட்டிற்குள் புகுந்து கொண்டான்.
இன்று அதே கயவனின் முகம் பக்கவாட்டுக் கண்ணாடியில் பிரதிபலிக்க, மதுவின் நெஞ்சம் அக்னியாய்த் தகித்தது. அவனைக் கவனியாத வினோத் தெருவில் வருகிற, போகிற பெண் பிள்ளைகளிடம் வம்பு வளர்த்திக் கொண்டிருந்தான். இவனின் செய்கைகள் எதுவும் சாதாரண சீண்டலுக்குள் அடங்கா. விசிலடிப்பதும் துப்பட்டாவைப் பிடித்திழுப்பதும் காற்றில் முத்தங்களைப் பறக்க விடுவதுமாய் ஒழுக்க வரம்பை மீறினான். இவனது வேடிக்கைக்கு ஆட்பட்டவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள். அவர்கள் கடமையே கண்ணாக இருந்ததால், இவனை ஒரு தெருநாயாய்ப் பாவித்து கண்டும் காணாமல் விலகியோடினர். இதுவொரு தினசரி வழக்கம் என்பதால், அவ்வீதியில் தட்டிக் கேட்பார் யாருமில்லை. வினோத்திற்குக் கல்லூரிக் காலத்தில் ஒரேயோர் உண்மைக் காதலி இருந்தாள். அவளை அவளின் பெற்றோர் இவனிடமிருந்து பிரித்து, உறவின வாலிபர்களில் ஒருவனிற்கு மணமுடித்து வைத்துவிட்டனர். அதன் பிற்பாடு இவனுடைய வாழ்க்கையில் பல காதலிகள். ஆங்காங்கே சந்திக்கும் பெண்களைத் தன் மோசடி வளையத்திற்குள் வீழ்த்தி, ஆசை, பணம், பொருள், பொழுதுபோக்கு என அனைத்திற்கும் உபயோகித்துக் கொள்வான். இவனுக்குக் கல்வியும் ஏறவில்லை; உழைக்கும் ஆவலுமில்லை. இவன் விரித்த வலையில் தற்போது சுலோச்சனா சிக்கிக் கொண்டிருக்கிறாள். இவள் மட்டும் தலையசைத்துவிட்டால் இப்போதே மனையாளாக்கி, மச்சானுடைய செல்வத்தை மொத்தமாய்ச் சுரண்டிக் கொள்ளும் எமகாதகத் திட்டத்தைக் கைவசம் வைத்திருக்கிறான் இந்தக் கபடதாரி. இத்தகைய அபாயமிகு மாய பிம்பத்திலிருந்து, தங்கையை மீட்கும் வழி யாதெனத் தமையனிற்கு இன்றுவரை பிடிபடவில்லை.
முன்னொரு காலத்தில் முல்லை அங்ஙனம் தான், பதினைந்தாம் அகவையிலேயே, ஒருவன் மீது காதல் வயப்பட்டு தமையனிடம் அகப்பட்டும் கொண்டாள். அவன் இவளை நடுவீட்டில் இழுத்து வைத்து, அனைவர் முன்னிலையிலும் பளீரென்று ஓர் அறைவிட்டான். அதற்கான காரணம் பெற்ற தாய், தந்தையருக்கே தெரிந்திருக்கவில்லை. இவளாலும் தான் செய்த காரியம் இன்னதெனப் பகிரங்கமாக வெளிப்படுத்த இயலவில்லை. அதைத் தொடர்ந்த ஒரு கருப்பு தினத்தில் தந்தையார் மடிந்துவிட, காதலாவது கத்தரிக்காயாவது என்று தலையைச் சுற்றித் தூக்கியெறிந்துவிட்டாள். சுதாவும் அதே பள்ளி என்பதால், முல்லையின் காதல் குறித்து அறிந்து வைத்திருந்தாள். அன்று தமையன் தமக்கையிடம் நடந்து கொண்ட முறையைக் கண்டு நடுநடுங்கியவள் தான்; பின்வந்த நாட்களில் காதல் என்றாலே பயம் கொள்ளத் துவங்கினாள். அண்ணன்காரன் கண்டிப்புடன் ஒரு பார்வை வீசினாலே இன்றளவும் அவளிற்குக் கை, கால்கள் உதறும். அவனது முன்னிலையில் சொந்தக் கணவனை விடுத்தே ஓரடி தள்ளி நிற்கக் கூடியவள். அதே போல் வினோத்தையோ, சுலோவையோ வன்முறையால் கையாண்டு, அவர்களின் மனதிலும் அச்சத்தை விதைக்க மதுவால் முடியும். ஆனால், அவன் முன்னர் போல் முரடனும் அல்லன். சுலோ பதின்வயது சிறுமியும் அல்லள். வினோத்தின் மீது கை வைத்தால் இந்தப் பாவிமகன் அந்நடத்தையைத் தனக்குச் சாதகமாக்கி, அப்பாவி போல நடித்து அசத்துவான். அதனால் பட்சாதாபம் ஊற்றெடுத்து, மனம் இளகி, தங்கை எதையும் செய்யத் துணிவாள். இவனுக்கு உத்தம பிம்பம் கிட்டும். உற்றவர்களெல்லாம் வேண்டாதவர்களாகிப் போவர். ஒருக்காலும் அவ்விதம் நடந்துவிடக் கூடாதென்பதற்காகவே ஈராண்டு காலமாக மது பொறுமையைக் கடைபிடிக்கிறான். அதே நேரம், இளைய தங்கை தன் தலையில் தானே மண்ணை வாரியிட்டுக் கொள்வதையும் தடுத்தாக வேண்டுமே!
“மாது, உன் கழுத்துல இருக்குற செயினு எத்தனை பவுனு?” அவன் தன் மனைவியிடம் கேட்டான்.
அந்தத் திடீர் வினாவினால் அவள் திருதிருவென விழித்தாள் “கம்மி தான். ஏன் கேக்குறீங்க?”
ஒரு வளைவில் தன்னையும் வாகனத்தையும் மறைத்து நின்றவன் “அதைக் கழட்டி கீழ போடு” என்றான்.
“ஆன்?” அவள் அதிர்ந்து விழித்தாள்.
“போடு. நான் சொல்றேன்”
இவ்வளவு நாழியாக வேறு சிந்தையில் இருந்தவளுக்கு, அவனின் எண்ணவோட்டம் துளியும் புரியவில்லை. அவன் சொன்னதைப் பின்பற்றி, கழுத்தில் இருந்த தங்கச் செயினைக் கட்டவிழ்த்தாள்.
“நான் சொல்லிருக்கேன்ல; வினோத். அவன் நீ போட்றதைக் கவனிக்குறானா பாரு”
அவள் அந்தப் பொன்னை நடுத்தெருவில் எறிந்துவிட்டு, மறைவிலிருந்து எட்டி நோக்கி உறுதி செய்தாள் “ஆமா, பாக்குறான். நம்மள பாக்கல. அவன் கண்ணு முழுக்க செயின்ல பதிஞ்சிருக்கு”
“சரி. வண்டில ஏறு. போவோம்” அவன் எளிதாகக் கூறி, வாகனத்தை முறுக்கினான்.
அவள் ஏனென்று கேட்க இயலாமல், பல மாத உழைப்பு கேட்பாரின்றி மண்ணில் கிடப்பதைப் பரிதாபத்துடன் பார்த்தவாறே பயணமானாள். அன்று மாலை அதே தெரு வழியாக நடந்து வந்தவள், மிகக் கூர்மையாகச் சாலையை ஆராய்ந்தாள். காலையில் விட்டுச் சென்ற செயின் தொலைந்த இடமே தெரியாத வகையில் மாயமாகியிருந்தது. மதுவின் இத்தகைய ஏவலுக்கான மூலாதாரம் என்னவாக இருக்கும் எனச் சிந்தித்தபடி, அமைதியாக வீட்டினை அடைந்தாள் அவள். இரவு பணி முடித்துத் திரும்பியவன், பேசியினூடு யாரிடமோ தொழில் ரீதியாக தர்க்கம் புரிந்து கொண்டிருந்தான். அந்நிலையில் செயினைப் பற்றிய பேச்சினை அவளால் தொடங்க இயலாமல் போனது.
“மது, நாளைக்கு மேனேஜ்மென்ட் மூலமா ஸ்டூடன்ட்ஸ ஔட்டிங் கூட்டிட்டுப் போறோம். டௌன் ஸ்டேஷன்கிட்ட ஒரு சயன்ஸ் எக்ஸ்போ நடக்குது. அதை அட்டென்ட் பண்ணிட்டு, பக்கத்துல எதும் டூரிஸ்ட் ஸ்பாட் இருந்தா சுத்திப் பாத்துட்டு வருவோம். உங்ககிட்ட சொல்லணும்னு தோனுச்சு. காலையில சீக்கிரம் போற மாதிரி இருக்கும். என்னை டிராப் பண்ண முடியுமா?”
“ம்ம். யார், யாரு போறீங்க?” அவன் சட்டையைக் கலைந்தபடி வினவினான்.
அப்போது கண்ணில்பட்ட அவனுடைய தினவெடுத்த தோள்கள், அவளின் அடி நெஞ்சை முழு வீச்சில் தாக்கின. வர வர தன் புத்தி போகும் போக்கே சரியில்லை என உள்ளுக்குள் நொந்தவள், அவனது கேள்விக்குத் தாமதமாகவே பதிலளித்தாள் “செகன்ட் இயர் பி. எஸ்சி. பசங்க ஒரு நாப்பது அம்பது பேரு வராங்க. சத்யானு ஒரு ஸ்டாஃப். அவரும் நானும் பிள்ளைங்களோட பாதுகாப்புக்காகப் போறோம்” சொல்லும்போதே அவளின் விழிகள் அவனது தேகத்தைப் பலத்த சிமிட்டலுடன் வலம் வந்தன.
“ஆள் எப்படி? நம்பிக்கையானவரா?”
என ஈ“அவரு இந்த டிரிப்புக்கு வரணும்னு கேர்ள்ஸ் அத்தனை பேரும் சேந்து முடிவு பண்ணிருக்காங்க. அந்தளவு நம்பிக்கை! சத்யா ஸார்னா பாதி பேரு உசுரையே விட்ருவாளுங்க. ஆளாளுக்கு அவரு மேல கிரஷ் வச்சுருக்கறதா புலம்புறத, நானே என் காதால கேட்டுருக்கேன். அவரு எங்க காலேஜ்ல இங்க்லீஷ் லெக்சரெரா வேலை பாக்குறாரு. இப்போ பக்கத்து ஊர்ல கவர்மென்ட் வேலை கிடைச்சுருக்கு. நாளைக்கு அவருக்கு ஃபேர்வெல் வைக்கலாம்னு பசங்கலாம் சேந்து அரேஞ்ஜ் பண்ணிருக்காங்க. ரெஸ்டாரன்ட்ல அதுக்கான டின்னரை முடிச்சுட்டு, நைட்டு வர லேட்டானாலும் ஆகலாம். நான் டைம் சொல்றேன். முடிஞ்சா, வந்து பிக்அப் பண்ணிக்கோங்க”
“சரி. நேரத்தோட போகணும்னு சொல்லிட்டு இன்னமும் முழிச்சிட்டுருக்க? தூங்கு” என்றவன் படுக்கையில் சரிந்து, அடுத்த நிமிடமே உறங்கியும் போனான்.
அவளுக்குத் தான் உறக்கம் வராமல், நீண்ட நேரத்திற்கு அவனைத் திரும்பிப் பார்ப்பதும் வேறுபுறம் திரும்பிக் கொள்வதுமாய்த் திண்டாடினாள்.
***
அடுத்த நாள்…
மாதுளையைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்ற மது, வாகனத்தின் முன்பகுதியில் வைத்து, பத்திரமாகக் கொண்டு வந்திருந்த ரோஜாவை அவளிடம் மறக்காமல் நீட்டினான். அவள் மென்னகையுடன் அதைக் கைப்பற்றி மகுடம் சூட்டிக் கொள்ள, அவ்விடம் சத்யா வந்து சேர்ந்தான். மாணவ, மாணவிகள் அவ்விரு ஆசிரியர்களுக்கும் வணக்கம் வைத்தபடி கல்லூரிப் பேருந்தில் ஏறலாயினர்.
“குட் மார்னிங், சத்யா ஸார்! இவரு மது; மதுசூதனன். நீங்க எங்களோட கல்யாணத்துக்கு வந்திருந்தீங்கள்ல. அதுக்குள்ள மறந்துருக்காதுன்னு நினைக்கிறேன். மது, நான் சொன்னேன்ல; இவரு…”
“சத்யாவா? வணக்கம்!” அவன் முகமலர்ந்த புன்னகையுடன் கரங்கூப்பினான்.
சத்யா தன் இயல்பின்படி அவனுடன் கைக்குலுக்கலானான் “ஹாய், ஸார்! ஹௌ ஆர் யூ? ஃபேமிலில எல்லாரும் சௌக்கியமா?”
“நல்லா இருக்கோம். நீங்க… பஸ் ஸ்டான்டுக்குப் பின்னாடி இருக்குற, பேச்சுலர்ஸ் ரூம்ல தான தங்கி இருக்கீங்க. உங்க பில்டிங் ஓனர் பேரு கூட கோவிந்தன். ரைட்டா?”
“எப்படி, ஸார்? இவ்ளோ கச்சிதமா சொல்றீங்க? அன்பிலீவபிள்!” இவன் ஏகத்திற்கும் வியந்தான்.
“அந்தப் பக்கம் தான நம்ம கடை இருக்கு. உங்களைப் பாத்துருக்கேன்” என்றான் அவன் தன்மையாக.
இவன் அவனை வாய்விட்டுப் பாராட்டினான் “இருந்தாலும் அவ்ளோ பெரிய கூட்டத்துல, என்னைத் தனிச்சு ஞாபகம் வச்சிருக்கீங்களே. உங்க மெமரி பவரே பவரு!”
“ஒரு நாள் வீட்டுக்கு வாங்க, சத்யா ஸார்”
“கண்டிப்பா வரேன்”
“பாத்துக்கங்க” என்று தன் மனையாளைச் சுட்டினான் அவன்.
“அதைத் தனியா சொல்லணுமா? கவலையே படாதீங்க, மது. ஐ வில் டேக் கேர் ஆஃப் எவ்ரிதிங்” அவனிற்கு ஈடு கொடுத்து இவனும் இனிமையாக உரையாடினான்.
அப்போது சன்னல் வழியே ஒரு மாணவி கீச்சிட்டாள் “ஹே, இங்கப் பாருங்கடி”
“ஐ! நம்ம மாது மேமோட ஹஸ்டி” மற்றொருவள் தன் கூட்டத்திற்கு அவனை அடையாளம் காண்பிக்க
அனைத்து மாணவியரின் பார்வையும் அத்திசையில் வளைய வந்தன “ஓ, வாவ்! இவரு தான் அந்த பார் ஓனரா?”
“ஒரு பக்கம் சத்யா ஸார். இன்னொரு பக்கம் மாது மேமோட ஸார். ரெண்டு பேருல யாரைக் கிரஷ்ஷா நினைக்கிறதுனே டிஸைட் பண்ண முடியலடி. ஐ’ம் கன்ஃப்யூஸுடு!” என்றாள் ஒருத்தி நெற்றியைத் தேய்த்து.
“ஏன்டி இவ்ளோ கஞ்சமா இருக்க? ரெண்டு பேரையுமே கிரஷ்ஷா வச்சுக்கோடி” என அடுத்திருந்தவள் புகன்றிட, அந்தப் பேருந்தே சிரிப்பொலியால் கலகலத்தது.
“இதுங்களோட சேட்டை ஆரம்பமாயிடுச்சு. இனிமே கட்டுப்படுத்துறது கஷ்டம்” மாது புன்சிரிப்புடன் மொழிந்தாள்.
“பேசாம மதுவையும் கூட கூப்பிட்டுப் போயிரலாம். எங்க ரெண்டு பேரோட அப்பியரன்ஸ் அன்ட் டிரய்ட்ஸைக் கம்பேர் பண்ணவே, கேர்ள்ஸுக்கு நேரம் சரியா இருக்கும். மத்த சேட்டைகள் குறையும்” என்றான் சத்யா.
“அட! நீங்க கலாய்க்க நான் தான் கிடைச்சனா?” என்று சிரித்த நம் நாயகன், இருசக்கர வாகனத்தில் ஏறிப் பறந்துவிட்டான்.
சற்று முன் அவன் சிந்தவிட்ட சிரிப்பினில் மாது மட்டுமல்ல; சத்யாவுமே சில கணங்களுக்கு மெய்மறந்து போனான்.
“கேஸுவல்ஸ்லயே ஆளு செம்ம ஹேன்ட்சம்மா இருக்காரே. உண்மையச் சொல்லு, மாது; லவ் மேரேஜ் தான?” என்று வினவி அவளை மேலும் சிவக்க வைத்தான்.
அத்துடன் அவர்களின் குறுஞ்சுற்றுலா உல்லாசமாகத் தொடங்கிற்று. அந்நாள் முழுமையும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் நகர்ந்தது. இரவு உணவிற்கு ஓர் உயர்தர உணவகத்தினைப் பேருந்து சென்றடைய, சத்யா மட்டும் அலைபேசியும் காதுமாக உணவகத்தின் வெளிப்புறம் பின்தங்கினான். அதைக் கவனியாத கிருஷ், கைவசம் சில கருவிகளுடன் பேருந்திற்கு அடியே புகுந்தான். ஏதோ சத்தம் வருகிறதென்று, தன் கவனத்தைப் பின்னால் திருப்பிய சத்யா திகைத்துவிட்டான். இந்த வீம்பு பிடித்தவன் ஏதோ ஓர் இணைப்பைத் துண்டிக்க முயற்சித்துக் கொண்டிருக்க, அதைக் கண்டு யாருக்குத் தான் உள்ளம் பதறாது!
“டேய், கிருஷ்! இங்க என்னடா பண்ற?” சத்யா படபடப்பு அடங்காமலே கேட்டான்.
வாயில் வைத்திருந்த கருவியைக் கால்சட்டைப் பையில் திணித்தபடி, இவன் பவ்யமாக வெளியே வந்தான்.
“முதல்ல சாப்டியா நீ? உள்ள போய்ச் சாப்பிடு. போடா!” என்று இவனை விரட்டியடித்தவன், சிறிது நாழி அங்கேயே தங்கிக் காவல் காத்தான்.
முதலாவதாக ஓட்டுநர் உண்டு முடித்துத் திரும்பி வர, “அண்ணா, பஸ்ஸுல பிரேக் புடிக்குதான்னு ஒருதரம் செக் பண்ணிக்கோங்க. எனக்குச் சந்தேகமா இருக்கு. அப்பறம், பஸ்ஸை விட்டு எங்கயும் போக வேணாம். சில பேரு வில்லத்தனம் புடிச்சுச் சுத்திட்டுருக்கானுங்க. கேர்ஃபுல்!” என்று அறிவுறுத்திய பின்பே, அவன் உணவகத்தினுள் காலெடுத்து வைத்தான்.
மாதுளையின் அருகே சென்றமர்ந்தவன் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் பேசினான் “மாது, கிருஷ் மேல ஒரு கண்ணு வைங்க. அவன் நடவடிக்கையே சரியில்லை. கொஞ்சம் கவனிக்காம விட்டுருந்தா, பஸ்ஸையே கவுத்து விட்ருப்பான்”
“என்ன ஸார் சொல்றீங்க?” அவளிற்கு உண்ட உணவு தொண்டையில் அடைத்தது.
சத்யா மீதி கதையைத் தொடர, அவளுடைய தலை கிறுகிறுத்தது. மீண்டும் கல்லூரிக்கு வரும் வழியில், கிருஷ்ஷின் அசைவுகள் ஒன்று விடாமல் அவள் கண்காணித்தவாறு இருந்தாள்; மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிய பின்னர் மதுவிற்கு அழைத்தாள். அதன் பிறகே சத்யா தான் தங்கியிருக்கும் விடுதிக்குப் புறப்பட்டுப் போனான்.
மதுவும் மாதுவும் வீடு வந்தபோது முல்லையும் அவளுடைய பிள்ளைகளும் வரவேற்பறையில் தென்பட்டனர். மதிவாணன் உத்தியோகப் பயிற்சியொன்றை மேற்கொள்வதற்காக வெளியூர் சென்றிருப்பதால், இவர்கள் அடுத்த சில நாட்களுக்கு இங்குத் தான் இரவில் தஞ்சம். முல்லையைக் கண்டதும், கடந்ததை மூளையில் ஏற்றாமல், நான்கு வார்த்தைகள் பரிவுடன் நலம் விசாரித்தாள் மாது. அத்தையார் ஏற்கனவே உறங்கியிருக்க, சுலோச்சனாவின் அறையில் மட்டும் மின்விளக்கு ஒளிர்ந்து கொண்டிருந்தது.
“சுலோ, அண்ணிக்குத் தலை வலிக்குதாம். ஒரு டீ போடு” என்றான் மது திடுதிப்பென்று. இதற்கே மாது தனக்குத் தலைவலி என்று அவனிடம் உரைக்கவும் கிடையாது. இதுவே அன்னையாக இருந்தால், இளையவள் பட்டென எதிர்த்து வாயாடியிருப்பாள்; கட்டளை இடுவது தமையனாக இருக்கவே, சிறு முனகலுமின்றி மேற்சொன்ன காரியத்தை நிறைவேற்றினாள்.
இவள் வந்து அண்ணியாரிடம் தேநீரைத் தந்தருள, “செயின்லாம் புதுசா இருக்கு” என்றான் மது கூர்மையாக.
உடனே மாதுளை மற்றும் முல்லையின் கவனம் தன்னிச்சையாக இவளின் கழுத்தைச் சுற்றி வளைத்தன.
அந்த அதிரடி கவன ஈர்ப்பில் இளையவளிற்குத் தொண்டை கவ்விற்று “இது கவரிங், ணா. இருநூறு ரூபாய்க்குக் கடையில வாங்குனேன். கோல்டு வெளியப் போட்டுப் போறது சேஃப்டி இல்லல்ல. அதுக்கு மாத்தா தான் இது…”
அருகே வந்த தமக்கை, அதை விரல்களால் உரசி “தங்கத்தைப் போய் கவரிங்குனு சொல்லுற. இந்தச் செயினை எங்கயோ பாத்த மாதிரி இருக்கே. இது… இது மாதுவோட செயின் இல்ல?” என்றாள் முந்திக் கொண்டு.
“என்னோடதா?” கண்முன்னே அரங்கேறும் நாடகத்தைக் கண்டறியத் தெரியா நாயகி விழி பிதுங்கினாள்.
“நல்லா பாருங்க. உங்களோடது மாதிரி தான் இருக்கு” மூத்தவள் தன் கணிப்பில் தெளிவாக இருந்தாள்.
பொருளுக்கு உரியவளோ திணறினாள் “என்னோடது மாதிரி தான் தெரியுது. ஆனா, இது எப்படி…”
“எங்கயாச்சும் கழட்டி வச்சிருப்பீங்க. இவ கோல்டுக்கும் கவரிங்குக்கும் வித்தியாசம் தெரியாம மாத்திப் போட்டுட்டுப் போயிருப்பா. பைத்தியமே, கழட்டிக் கொடுடி” தங்கையிடம் இவள் அதிகாரம் புரிந்தாள்.
“அம்மா, இந்தத் தலைகாணி வச்சுப் படுத்தா கழுத்தை வலிக்குது. எனக்கு வேற தலைகாணி வேணும்” என்று இளைய மகன் கூவ
இவள் இவன்புறம் அகன்றாள் “இவன் ஒருத்தன் எந்நேரமும் நொய் நொய்யுன்னுட்டு”
“நானா கழட்டி வைக்கல. காலேஜுக்குப் போற வழியில கழன்டு விழுந்துருக்கும். அப்படித் தான, மது?” மாது கம்மிய குரலில் விளம்பினாள்.
அவளுக்குச் செவிமடுத்தபடி செயினை அவிழ்த்த சுலோவின் விழிகள், கண்ணீர் மழையில் நனையத் தயாராக இருந்தன. “ஸாரி, அண்ணி!” என்றவள், ஏதோ நினைவு வந்தவளாய் “இதை உங்க கையில நாளைக்கு ஒப்படைக்கிறேன்” என்றியம்பி தனதறைக்குள் அடைக்கலம் புகுந்தாள்.
இத்தருணம் மாது தன்னவனைக் குழப்பத்துடன் ஏறிட, அவன் தன் இமைகளை அழுத்தமாக மூடித் திறந்தான். அடுத்த பத்து நிமிடங்களில் அவ்வீடு இருளில் மூழ்கிவிட, சுலோவின் அறையிலிருந்து விசும்பல் சத்தம் மேலோங்கியது.
“ஏங்க, என்னங்க! சுலோ அழறாங்க” மாது மனம் கேளாமல் கணவனை உசுப்பினாள்.
உறக்கத்தில் அமிழ்ந்து கொண்டிருந்தவனோ “ம்ச்ச், காலைல பாத்துக்கலாம். பேசாம தூங்கு” என்றபடி எதிர்ப்புறம் ஒருக்களித்தான்.
தத்தளிப்புடனே நித்திரையை நாடியவளால் அதிக நேரம் உறங்க இயலவில்லை. அதிகாலையிலேயே எழுந்து அவள் வாசல் தெளிக்க முற்பட, பிரதான வாயிற்கதவுகள் இரண்டும் திறந்து கிடந்தன. அவள் அவசரமாக வெளியே நோக்க, கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைத்தெறிந்த வண்ணம் சுலோ விறுவிறுவென முன்னேறுவது தொலைவில் தெரிந்தது. அவள் மற்ற வேலைகளைக் கிடப்பில் இட்டு நாத்தியைப் பின்தொடர, இவளோ வேகத்தோடு போய் ஒரு வீட்டின் முன்கதவைத் தட்டினாள். அது திறக்கப்படாவிடில், அதை தட்டித் தட்டியே உடைத்தெறியக் கூடிய அளவு இவளிடத்தில் சீற்றம் பெருக்கெடுத்தது. பணம் இல்லை என்றால் சம்பாதித்துக் கொள்ளலாம். கல்வியோ, அனுபவமோ இல்லையென்றாலும் நான்கு பேரிடம் பயின்று கொள்ளலாம். ஒரு குணவானுக்கு அடிப்படையான நேர்மை இல்லையென்றால், சத்தியம் இல்லையென்றால் இவளால் எங்ஙனம் ஏற்க முடியும்? அவ்வித ஈனப் பிறவியாக இவள் வளர்க்கப்படவில்லையே. இவளின் ஆவேசத்தினால் அக்கதவு சிதறி தூள் தூளாக்குவதற்கு முன்னதாக, வினோத்தே வந்து கதவைத் திறந்தான். இவள் ஏன் இந்நேரத்தில் இங்கு வருகை தந்துள்ளாள் என அவனிற்கு விளங்கவில்லை.
“இந்தச் செயின் எங்கருந்து கிடைச்சது?” இவளுடைய முகம் செந்நிலத்தைப் பிரதிபலிக்க, வேல்விழிகள் அவனோடு யுத்தத்திற்குப் பாய்ந்தன.
“சொந்தக் காசைப் போட்டு வாங்குனதுடி” தூக்கத்தில் இருந்து எழுப்பிக் கேட்ட போதிலும் அவன் உதடுகள் பொய்யிலே முக்குளித்தன.
“செருப்பால அடிப்பேன். இது என் அண்ணியோடது, முண்டம். இதைச் சம்பாதிக்க ஒரு வாரம் வேலைக்குப் போயிருந்ததா வேற கதை விட்டியே?”
அவன் புதிதாக என்ன புனையலாம் என்று சிந்திக்கலானான்.
“இந்த ஃபோட்டோஸ்லாம் பாரு. ஒரு வாரம் எவளோடயோ மூணார்ல கூத்தடிச்சுட்டு இருந்துருக்க. என் ஃப்ரென்டு எதேச்சையா இன்ஸ்டா ஸ்க்ரோல் பண்ணும்போது, இந்தக் கன்றாவியப் பாத்துருக்கா. அவ சொன்னப்போ நான் நம்பல. ஆனா, இப்போ… என் கண்ணுலயே பட்ராத. இதோட எல்லாம் முடிஞ்சு போச்சு” என்றவள் இருகரங்களைத் தலைக்கு மேல் குவித்து, அவனை அவ்விநாடியே கைக்கழுவினாள்.
“ரெண்டு வருஷமா லவ் பண்ணிட்டு, இப்போ ஏமாத்தப் பாக்குறியா? என்ன, உங்க அண்ணன் பெரிய வீட்டு மாப்பிள்ளையா பாத்துட்டானா? உன் பொம்பளைப் புத்தியைக் காட்டிட்டல்ல. வேற எவன் கூடவாவது உனக்குக் கல்யாணம் நடக்க விட்ருவேனா? என்னை விட்டுப் போயிடலாம்னு கனவு காணாத. உன்னைச் சிதைச்சிடுவேன்டி!” அவன் உச்சஸ்தாபியில் கத்தினான்.
இவ்வளவு களேபரத்திலும் அவனுடைய வீட்டினர் ஒருவரும் வெளியில் தலைகாட்டவில்லை. நல்ல வேளையாக, இவ்வகையான குடும்பத்தில் இருந்து முன்கூட்டியே விலகிக் கொண்டோம் என்று சுலோ நிம்மதியடைந்தாள்; அங்கு நடப்பவற்றைப் பதைபதைப்போடு பார்த்து நின்ற மாதுவை நெருங்கினாள்.
அவளின் கரத்தில் செயினைத் திருப்பியவள் “வாங்க, அண்ணி. போகலாம்” என்று சொல்லி அங்கிருந்து நடையைக் கட்டினாள்.
பின்னணியில் வினோத்தின் வசைபாடல் தொடர்ந்தபடி இருந்தது.
மாதுவைப் பின்பற்றி அங்கு வந்த முல்லை “யாருடி அவன்? என்னடி நடக்குது? அந்தப் பையனை லவ் பண்றியா? அப்பா இல்லாம அண்ணன் தான நமக்கு எல்லாத்தையும் எடுத்துச் செய்யுது. அந்த நன்றியுணர்வு கூடவா உனக்கில்ல? மண்டையில அறிவுன்னு ஒன்னு இருக்காடி?” என்று வாய்க்கு வந்தபடி ஏசினாள்.
“வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம், முல்லை” என்றாள் மாது சூழ்நிலை கருதி.
“இரு, அம்மாட்டயே சொல்றேன்” அவள் முறுக்க
மாது அச்சூழலின் சூட்டைத் தணிக்க முயன்றாள் “நிதானமா சொல்லிக்கலாம். இப்போ அது முக்கியமில்ல. எடுத்தோம், கவுத்தோம்னு இதை ஹேன்டில் பண்ண வேணாமே”
“வாடி!” என்ற அதட்டலோடு தங்கையை இழுத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்தாள் முல்லை.
அவள் எரிச்சல் வயப்பட்டிருந்த போதிலும் யாரிடமும் எதையும் பகிரவில்லை. பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்று சாக்கு கூறி, நேரத்தோடே கிளம்பிவிட்டாள்.
அன்றிரவு…
இளைய நாத்தியை வீட்டினுள் காணாமல் மாதுளை மாடியேறினாள் “சுலோ, எங்க இருக்க?”
இவளோ அங்கொரு மூலையில் அமர்ந்து, தாரை தாரையாகக் கண்ணீர் வடித்தாள்.
“சுலோ…” அவள் நெருங்கிப் போய்த் தோளைத் தொட
“அண்ணி… அவன் என்னை ஏமாத்திட்டான், அண்ணி” என அவளைத் தாவியணைத்துக் கொண்டு, குலுங்கிக் குலுங்கி அழுதாள் இவள்.
“இட்’ஸ் ஓகே. இட்’ஸ் ஓகே” அவள் மென்மையாக இவளின் முதுகுப்புறத்தை வருடிக் கொடுத்தாள். “இந்த வயசுல இது மாதிரி தப்பு நடக்குறதுலாம் சகஜம். நீ காதலிச்சது தப்பு கிடையாது; காதலிச்ச ஆள் தான் தப்பு. உன்னோட போதாத காலம் நேத்தோட முடிஞ்சுருச்சு. இனிமே நீ செய்ய வேண்டியது என்ன தெரியுமா? உன் முடிவுல உறுதியா இருக்கணும். சில கேரக்டர்ஸை எப்பவும் திருத்தவே முடியாது. அதை நீ உணரணும். அவன் திரும்ப வந்து ஆயிரம் சத்தியம் பண்ணாலும் நம்பாத. பாதரசத்துல நகை செஞ்சு போட்டுக்க முடியுமா? அதே மாதிரி தான். அவன் ஒன்னுத்துக்கும் பிரயோஜனமில்லாதவன். அவனோட நினைப்புலருந்து கொஞ்ச கொஞ்சமா நீ வெளிய வந்துடுவ. நம்பிக்கையோட இரு. இப்ப வா. வீட்டுக்குள்ள போவோம். உனக்கு நாங்கலாம் இருக்கோம். அப்படியே விட்ர மாட்டோம்”
தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்ட சுலோ, மாதுவுடன் கீழிறங்கினாள் “அண்ணி, நாளைக்கு அண்ணாவோட பர்த்டே. உங்களுக்கு எப்படியும் தெரிஞ்சிருக்காதுன்னு சொன்னேன்”
“சொன்னதுக்குத் தேங்க்ஸ், சுலோ. நல்லா தூங்கி நீ ரெஸ்ட் எடு” என்றவள் யோசனையுடன் வரவேற்பறையை அடைந்தாள்.
“என்ன சொல்றா அவ? அவனை மறக்க முடியலையாமா?” மெல்லிய குரலில் முணுமுணுத்தார் சிந்தாமணி.
உடனே அவளின் பார்வை முல்லை மீது பாய “நான் எதுவும் சொல்லல. அவங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கு” எனச் சடுதியில் நிரபராதி ஆனாள் மூத்தவள்.
“சரியாகிடுவா, அத்தை. காலம் எல்லா காயத்தையும் ஆத்தும்” என்று மாது தீர்க்கதரிசனம் பறைந்தாள். அக்கணம் அவளின் கூற்றில் பழைய வலி மின்னி மறைந்ததோ!
***