அகானா – 78
நவீனின் பதட்டத்தில், கவிதாவின் முகத்திலும் பதட்டம் வந்து அப்பிக்கொண்டது.
“ப்பா.. ஆகனோட அம்மாவை நீங்களா அம்முக்கிட்ட கொண்டுபோய் விட்டீங்க.?’ என்றான் வேகமாக.
“என்ன சொல்ற நவீ?” என கவிதா பயமாக கேட்க, தாமோதரன் எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அவர் முகத்தில் தெரிந்த பாவனையே அவர்தான் என்று சொல்லாமல் சொல்லியது.
“ப்பா.. என்ன செஞ்சிட்டு இருக்கீங்க? அவளுக்குத்தான் பைத்தியம் முத்திப் போச்சுன்னா, நீங்களும் அவ கூட சேர்ந்து ஏன் இந்த வேலையை செய்றீங்க..?” என்றான் கோபமாக.
“நவீ..” என தாமோதரன் மகனை அதட்ட,
“ப்பா.. என்னை அதட்டுறதை அப்புறம் வச்சிக்கலாம், இப்போ அவங்க எங்க இருக்காங்க.? எப்படி இருக்காங்க? நீங்க அம்முவோட வாழ்க்கையை யோசிக்கவே இல்லையா? ஆகன் எவ்ளோ வருத்தப்படுவான்னு உங்களுக்கு புரியுதா, இல்லையா.?” என்றான் அதே கோபத்தோடு.
“மாமா.. என்ன பண்ணிட்டு வந்துருக்கீங்க? அம்மு இப்போ எங்க இருக்கா?” என்றார் கவிதாவும் கோபமாக.
“அம்முவுக்கு என்ன வாழ்க்கை.? அவ அந்த ஆகன் கூட வாழமாட்டா? வாழவும் வேண்டாம். என் பொண்ணுக்கு அந்த குடும்பம் வேண்டவே வேண்டாம். அதேநேரம் அவங்களை ஒன்னும் செய்யவும் மாட்டா..?” என்றார் தாமோதரன் வெறுப்பாக.
“போதும் நிறுத்துங்கப்பா… நீங்க பேசுறது கொஞ்சமும் சரியில்ல. ஆகன் கூட வாழ்மாட்டான்னு நீங்களா சொல்லாதீங்க.? முதல்ல அம்மு எங்க இருக்கானு சொல்லுங்க..?” என்றவனுக்கு கோபம் அடங்கவே இல்லை.
தாமோதரன் பதில் கூறாமால் அமைதியாக இருக்கவே, ஆரியனும் அங்கு வந்துவிட்டான். வந்தவனுக்கு அவர்கள் முகத்தில் இருந்தே, அகானா பற்றி தெரிந்துவிட்டது என புரிய “என்ன நவீன் அண்ணா இதெல்லாம்..?” என்றான் வேதனையாக.
“எனக்குமே இப்போதான் தெரியும் ஆரி.. இரு என்னனு பார்க்கலாம்..” என்ற நவீனுக்குமே மிகவும் வருத்தம்.
“நாங்க பார்த்த அகி இல்ல இவ..” என்றான் ஆரியன்.
“தம்பி… நீங்க வேதனைப்படாதீங்க. ஏதோ ஒரு கோபத்துல அப்படி பண்ணிருப்பா.. சொன்னா கேட்டுப்பா..?” என்ற கவிதாவிடம் மறுத்து தலையசைத்தான் ஆரியன்.
“நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ஆன்டி அகி. இப்போ மொத்தமா பழிவெறி பிடிச்சு இருக்கா? இவ்ளோ நாள் அமைதியா இந்த ஆட்டத்தை ஆட காரணம், மஞ்சும்மாவை அவங்க டச் பண்ணாதது மட்டும்தான். எப்போ அவங்க மஞ்சு ம்மா மேல கை வச்சாங்களோ, அதுக்குப் பிறகு அவ சும்மா இருக்கவே மாட்டா. இறங்கிதான் அடிப்பா.. இப்போ அதைத்தான் செஞ்சிருக்கா..” என்றவன், “அகியை நான் பார்க்கணும், எங்க இருக்கான்னு சொல்லுங்க அங்கிள் ப்ளீஸ். அவளுக்கு இருக்குற கோபத்துல, பிரச்சினையை பெரிசாக்கிட போறா, அதனால அவளோட பதவிக்கும் பிரச்சினை வந்துடும்..” என்றான் ஆரியன்.
அனைத்தும் கேட்டு கூட தாமோதரனுக்கு அகானா இருக்கும் இடத்தை கூற விருப்பமில்லை. கல்லைப் போலவே அம்ர்ந்திருக்க,
“அகியை வளர்க்க மஞ்சும்மா எந்தளவுக்கு கஷ்டப்பட்டாங்கன்னு உங்களுக்குத் தெரியாது. அவங்க கூட இருந்து பார்த்த எங்களுக்குத் தான் தெரியும். அவ படிச்சு இன்னைக்கு ஒரு பொசிஷன்ல இருக்குறது, அவங்களோட கஷ்டத்துக்கு கிடைச்ச உண்மையான பலன். இப்போ அகி செய்றதையெல்லாம் மஞ்சும்மாவுக்கு தெரிஞ்சா, நிச்சயம் மனசளவுல நொருங்கிப் போயிடுவாங்க. அவங்களுக்காகவாது அகி எங்க இருக்கானு சொல்லுங்க அங்கிள் ப்ளீஸ்..?” என ஆரியன் கிட்டத்தட்ட கெஞ்சவே செய்துவிட்டான்.
“ஆரி.. நீ வா..” என தந்தையை முறைத்துகொண்டே ஆரியனை இழுத்துக்கொண்டு வெளியேறிய நவீன், உதய்க்கு அழைக்க, அவரும் உடனே எடுத்துவிட்டார்.
“சார் நான் நவீன்.. கலெக்டர் மேம் இப்போ எங்க இருக்காங்கன்னு தெரியுமா? சித்தி கண் முழிச்சிட்டாங்க. அவங்களை பார்க்கணும்னு சொல்றாங்க..” என பதட்டம் காட்டாத குரலில் கூற,
“சாரி நவீன்.. நாங்க மதுரை ஹைவேல ஒரு ஃபேக்டரி சீஸ் பண்ண வந்துருக்கோம் நவீன். இங்க இருந்து ஒன் அவர் ஆகிடும் நாங்க வரதுக்கு..” என மெல்லிய குரலில் முணுமுணுக்க,
“ஓகே சார். உங்க லொகேஷன் மட்டும் மேம்க்கு தெரியாம எனக்கு, ஷேர் பண்ணுங்க ப்ளீஸ்..” என்றான் அவனும் மெல்லிய குரலில்.
“எனிதிங்க் ராங்க் நவீன். எங்க கூட போர்ஸ் வரல. நாலு பேர் மட்டும் தான்.. மேம்க்கு பிரச்சினையா?” என பதட்டமாக கேட்டவன், பின் என்ன நினைத்தானோ எதுவும் யோசிக்காமல் லொகேஷனை ஷேர் செய்துவிட்டான்.
“ஆரி.. ஆகன் இப்போ ட்ராவல் பண்ணலாமா? அப்படின்னா அவனையும் அழைச்சிட்டு போகலாம்..” என்ற நவீனிடம், ‘பண்ணலாம்’ என்றதும், விஜயாவிடம் மேலோட்டமாக செய்தியைக் கூறி, அவரின் அதிர்ந்த, பயந்த பார்வையில் அவரை சமாதானம் செய்து, வேண்டவே வேண்டாம் என்ற ஆகனை ஒருவழியாக சமாதானம் செய்து அழைத்துக் கொண்டு கிளம்பினர் இருவரும்.
***
அழகரின் இறுதிக் காரியங்கள் முடிந்த சில மணி நேரத்திலேயே ரஞ்சனியை காணவில்லை.
வீட்டில் இல்லையென்றால், மகியைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனையில் இருப்பார் என்று நினைத்துதான் யாரும் தேடவில்லை.
‘ஆகன் வர சொன்னான்’ என டிரைவர் மூலம் கூற, ‘மகன் அழைத்துவிட்டான்’ என்ற சந்தோசத்தில் ரஞ்சனியும் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி, அகானாவிடம் மாட்டிக்கொண்டார்.
‘ஏய் என்னைப்பத்தி தெரியாம என்னை அடைச்சு வச்சிருக்க? நான் வெளிய வந்தா உன்னையும், உன் அம்மாவையும் இருக்குற இடம் தெரியாம அழிச்சிடுவேன்..’ என அந்த நான்கு சுவற்றையும் பார்த்து கத்திக் கொண்டிருந்தார் மைதிலி.
துரைப்பாண்டியிடம் லக்ஷரி சூட் என்று அகானா கூறியதும், மைதிலிக்கு சற்று மிதப்புதான். ஆனால் அந்த லக்ஷரி சூட்டோ பத்துக்கு பத்து கூட இல்லாத ஒரு நான்கு சுவர் கொண்ட ஒரு குட்டி அறை.. இரண்டு மணி நேரங்கள் கூட அவரால் அதில் இருக்க முடியவில்லை.
அந்த அறையைச் சுற்றி சுற்றியே கத்திக் கொண்டிருந்தார்.
“அண்ணே.. இது புதுசா இருக்கேண்ணே.. இந்த கலெக்டர் கிரிமினல் வேலையத்தான் நிறைய கத்துட்டு வந்துருக்கும் போலண்ணே..” என வெளியில் காவலுக்கு இருந்தவர்கள் பேசிக் கொண்டிருக்க, ரஞ்சனியோடு அந்த கார் அங்கு வந்து நின்றது.
“டேய்.. என்கிட்ட சம்பளம் வாங்கிட்டு எனக்கே துரோகம் பண்ணிட்டியேடா நாயே. உனக்கெல்லாம் நல்ல சாவே வராதுடா..” என அந்த டிரைவரைத் திட்டிக் கொண்டே, வண்டியை விட்டு இறங்காமல் அழிச்சாட்டியம் செய்த ரஞ்சனியை, அங்கிருந்த இருவரும் இழுத்துக்கொண்டு வந்து, மைதிலியின் அறையில் போட்டனர்.
“டேய்.. டேய்..” என அவரின் எந்தக் கத்தலுக்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை.
அதே அறைக்குள் மைதிலியைப் பார்த்ததும் ரஞ்சனிக்கு மேலும் பயம் வந்துவிட்டது.
‘மைதிலிக்கே இந்த நிலையென்றால், தனக்கு.?’ நினைக்கவே பயமாக இருந்தது.
இவர்கள் இருவருக்கும் பேசக்கூட நேரம் கொடுக்காமல் அங்கு வந்து சேர்ந்தாள் அகானா.
அவளின் திமிரான பார்வை, அலட்சியமான உடல் பாவனை இரண்டுமே அவர்களை பொறுமையிழக்க வைத்திருந்தது.
“ஓ.. இது எல்லாத்துக்கும் நீதான் காரணமா? ஏய்.. நீ மட்டும் என்னை கடத்தினது என் பையனுக்கு தெரிஞ்சா, உன்னை சும்மாவே விடமாட்டான்..” என் பையனுக்கு இது தெரிஞ்சா, உன்னை சும்மா விட்டுடுவானா? ஹாஹா இது அவனுக்கு தெரியனும், உன் அம்மாவை எப்படி என் அண்ணன் வாழ்க்கையில இருந்து ஓட விட்டேனோ, அதே மாதிரி உன்னையும் என் பையன் வாழ்க்கையில இருந்து ஓட விடுவேன்..” என ரஞ்சனி திமிராக பேச, தன் உயரத்துக்கு நிமிர்ந்து நின்றவள் தன்னிடமிருந்த போனைத் தூக்கி இருவருக்கும் முன்னே போட்டாள்.
அவர்களுக்கு எதிரே ஒரு காலை மடக்கி சுவற்றில் ஊன்றி, கைகளைக் கட்டிக்கொண்டு நன்றாக அந்த சுவற்றிலேயே சாய்ந்தபடியே “நான் ஓட ரெடியாத்தான் இருக்கேன், ஆனா என்ன? உன் பையன் என்னை விடுவானானு தெரியலையே மாமியாரே.. நான் ஓடினா என் பின்னாடி ஓடி வர ரெடியா இருக்கான்எந்ன . பொண்டாட்டியை, அதுவும் காதலிச்சு கல்யாணம் பண்ண பொண்டாட்டியை விட்டுட்டு ஓட என் புருசனை, உன் அண்ணன் மாதிரி நினைச்சியா? என எகத்தாளமாக கேட்க,
“ஏய்ய்..” என ரஞ்சனி, மைதிலி இருவரும் கத்த,
“ஷப்பா..” என தன் காதைக் குடைந்தவள் “இந்த சத்தமெல்லாம் இங்க ஆகவே ஆகாது, இப்போ உங்க ரெண்டு பேருக்கும், நான் ரெண்டு சான்ஸ் கொடுக்குறேன், கரெக்டா யூஸ் பண்ணிக்கோங்க, யாருக்கு வேணும்னாலும் போன் செஞ்சி ஹெல்ப் கேட்டுக்கோங்க. இங்க இருந்து தப்பிச்சு போய்க்கோங்க.. ஆனா ரெண்டே சான்ஸ்தான்..” என்றாள் திமிறாக.
“உன் திமிறை அடக்க என் மகன் வருவான்டி.. என் குடும்பத்தையே சிதைச்சிட்டியே, உன்னை விட்டு போகமாட்டான்னு தெரிஞ்சுதான எங்களை எல்லாம் பழிவாங்குற.. இது என் பையனுக்கு செய்ற துரோகம்டி பாவி..” என கத்திக் கொண்டே ரஞ்சனி அந்த போனை எடுக்க
“ஹான் பார்ரா.. துரோகத்தை பத்தி யார் பேசுறதுன்னு..? சீக்கிரம் உங்க வேலையை ஆரம்பிங்க மாமியாரே, நானும் என் வேலையை முடிச்சிட்டு கிளம்பனும்.. என் அம்மாவுக்கு வேற முழிப்பு வந்துடும். என் புருசன் வேற எனக்காக காத்துட்டு இருப்பான்..” என கிண்டலடிக்க,
“ஆடுடி.. ஆடு.. உன் ஆட்டத்துக்கெல்லாம் அழிவுக்காலம் நெருங்கிடுச்சு.. சொல்லி வச்ச மாதிரி என் குடும்பத்தை பழிவாங்கிட்டல்ல..” என ஆங்காரமாக கத்திக்கொண்டே போனை எடுத்து, ஆகனுக்கு அழைக்க, அவன் போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வர,
தன் கையிலிருந்த மற்றொரு போனை எடுத்து ரஞ்சனிக்கு எதிரே எறிந்த அகானா, “அச்சோ இந்த நம்பருக்கா மாமியாரே கால் பண்ணீங்க? இது ஆக்சிடென்ட் ஆனதுல இருந்து என்கிட்டதான் இருக்கு. சொல்லிருந்தா ஆன் பண்ணி, ஆகன்கிட்ட கொடுத்துட்டு வந்திருப்பேனே?” என பரிதாபப்பட, அதிர்ந்து போனார் ரஞ்சனி.
‘அய்யோ..’ என்ற பயத்துடன் இப்போது மைதிலியைப் பார்க்க, அவரோ மிகத் தீவிரமாக எதையோ யோசித்த பாவனையில் இருந்தார்.
“நீ இந்தளவுக்கு வெறிபிடிச்சு பழிவாங்குற அளவுக்கு நாங்க ஒன்னும் பெரிய தப்பு பண்ணிடல. நீ பழி வாங்கனும்னா உன் அப்பனைத்தான் பழிவாங்கனும், அவனை விட்டுட்டு எங்களை ஏன் இப்படி சித்திரவதை பண்ற?” என பயத்தில் ஏதேதோ பேசினார் ரஞ்சனி.
“அது எப்படி அவரை சும்மா விடுவேன், ஹான்..?” என வில்லத்தனமாக சிரித்தவள் “உங்க அண்ணனோட யுனிவர்சிடில ரெய்ட் போக வச்சது, கேஸ் கொடுத்தது, உள்ள தூக்கி வச்சது, உள்ளையே போட்டுத்தள்ள ஆள் செட் பண்ணது, அப்புறம் வேண்டாம்னு சிம்பதி கிரியேட் பண்ணது எல்லாம் ஒரு டைம் பாஸா பண்ணிட்டு இருந்தேன்னு சொன்னா நம்ப முடியுமா, ஹ்ம்ம்?” என்றதும், ரஞ்சனிக்கு மயக்கமே வந்துவிட்டது.
“அடிப்பாவி.. இது எல்லாம் நீதான் செஞ்சியா?, ஆனா இந்த முட்டாளுங்க எல்லாம் அண்ணிதான் செஞ்சாங்கன்னு சொல்லி, அவங்களை போய்..” என ஏதோ சொல்லி முடிக்கும் முன்னே, மைதிலியின் பேனா கத்தி, அகானாவை ஆழமாக தீண்டி சென்றிருந்தது.
1 comment
இப்பவாவது இந்த மைதிலி, ரஞ்சனி கொட்டம் அடங்குதாப் பாருங்களேன்.
😀😀😀
CRVS (or) CRVS 2797