Home Love - Family - Romanceஉனக்கெனப் பிறந்தவள் நானே – 24.

உனக்கெனப் பிறந்தவள் நானே – 24.

by infaalocious

பகுதி – 24.

சுமித்ராவுக்கு வலி வலி… மனம் முழுக்க அப்படி ஒரு வலி. என்னவெல்லாம் பேசிவிட்டான். அதுவும் அவன் பேசிய ஒவ்வொரு பேச்சுக்களும் அவள் இதயத்துக்குள் இடியென இறங்கிய உணர்வு. அவனை அவள் நேசிக்கிறாள், கண்மூடித்தனமாக நேசிக்கிறாள். அப்படி இருக்கையில் அவனது பேச்சை எப்படி அவளால் தாங்கிக் கொள்ள முடியும்?

மனதின் அயர்ச்சி அவள் உடலையும் தாக்க, அவளுக்கு நல்ல ஜுரம் அடிக்கத் துவங்கியது. உடலே தூக்கிப் போடும் அளவுக்கான ஜுரம். அதைப் பார்த்த கார்முகில் தவித்துதான் போனான்.

அவளுக்கு அவன் உதவ முயல, “என்கிட்டே வந்தீங்கன்னாலே எல்லாத்தையும் முழுசா முடிச்சுட்டு நான் என் வீட்டுக்கே போய்டுவேன்” அவள் சொல்ல, அவளை நெருங்கவும் பயந்தான்.

அப்படியும், “சாரி… ரியலி சாரி… நான் அப்படி பேசியிருக்கவே கூடாது. நான் பேசினேன், நீ என்னை அடிச்சுட்ட ரெண்டுக்கும் சரியாப் போச்சு. என்னை ஹெல்ப் பண்ண விடு, ப்ளீஸ்…” அவளிடம் கெஞ்சினான். அந்த கெஞ்சலுக்கு எல்லாம் அவள் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவே இல்லை.

அவளுக்கு வீட்டில் வைத்தே இரண்டு நாட்கள் மருந்து கொடுத்தான் சரியாகாமல் போகவே சற்று பயந்து போனான். அவளை அவன் மருத்துவமனைக்கு அழைத்தால், ‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில் தன் எதிர்ப்பைக் காட்டினாள்.

அவளது பிடிவாதத்தை அவனால் உடைக்கவே முடியவில்லை. இறுதியில் வேறு வழியின்றி தன் தாயிடம் சென்று நின்றான். “அம்மா, அவளை ஹாஸ்பிட்டலுக்கு அழைச்சுட்டு போங்கம்மா, ப்ளீஸ்…” அவன் தாயிடம் சொல்ல, அழுத்தமாக அவனைப் பார்த்தார்.

“நானும் கவனிச்சுட்டுதான் இருக்கேன் முகிலா, உங்களுக்குள் என்ன பிரச்சனைன்னு நான் கேட்கலை, எனக்குத் தெரிஞ்சுக்கவும் வேண்டாம். ஆனா எதுவா இருந்தாலும் அவளை நீ இப்படி விடக் கூடாது, அது தப்பு… நீதான் அவளை அழைச்சுட்டு போகணும்” இதுதான் என் முடிவு என கட்டளையாகவே சொன்னார்.

“நான் கூப்ட்டா வர மாட்டேன்னு சொல்றாம்மா… சோ ப்ளீஸ்… நான் அவளை அப்படியெல்லாம் விட மாட்டேன்ம்மா. என்னோட வாழ்க்கையே அவதான். சோ ப்ளீஸ்… இப்போ… எனக்கு சரி பண்ணிக்க கொஞ்சம் டைம் வேணும்… அதை அவ தர மாட்டேன்னு சொல்றா” தன்னை நெருங்க கூட விடாத அவளைக் கண்டு நிஜத்தில் பயந்தான்.

மகனது குரலில் இருந்த வருத்தமும், முகத்தில் தெரிந்த கவலையும் சுதாவை கலங்கச் செய்தது. “சரிப்பா அழைச்சுட்டு போறேன்” மகனிடம் சொன்னவர் அதை செயல்படுத்தினார்.

சுமித்ராவை சாதாரணமாக அழைத்தால் அவள் வர மாட்டேன் எனச் சொல்ல, பிடிவாதமாக அவளை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கே சென்றால் ஜுரம் 103க்கு மேலே இருக்க, உடனே அவளை மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்து விட்டார்கள்.

கூடவே அவளுக்கு நீர்ச்சத்து குறைவாக இருப்பதாகச் சொல்லி உடனடியாக ட்ரிப்ஸ் போட்டார்கள். சுமித்ராவுக்கு நிற்காமல் வாந்தி வேறு இருந்திருக்க, அதற்கும் நரம்பு ஊசி போட்ட பிறகே அவள் கொஞ்சம் தெளிந்தாள்.

அவளை உள்நோயாளியாக சேர்த்தவுடன் சுதா கொஞ்சம் பயந்து போனார். உடனடியாக மகனுக்கும், அனிதாவுக்கும் அழைத்து அவர் விஷயத்தைச் சொல்ல, அவர்கள் இருவருமே வந்துவிட்டார்கள். அதுவும் அனிதா, செல்வத்தையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.

அவர்கள் வந்த நேரம் சுமித்ரா நல்ல உறக்கத்தில் இருக்க, ஓடி வந்தவர்கள் மகளின் முகம் பார்த்து அப்படியே நின்றுவிட்டார்கள்.

“என்ன சுதா, பொண்ணு இப்படி வதங்கிப் போய் கிடக்கா. எப்போ இருந்து ஜுரம் அடிக்குது?” மகளை அப்படிக் காண முடியாமல் கேட்டார்.

“ரெண்டு நாளா இருக்கு அனிதா, நாங்களும் மருந்து கொடுத்துப் பார்த்தோம், அப்படியும் ஜுரம் குறையலை. அதனால்தான் உடனே இங்கே அழைச்சுட்டு வந்துட்டோம். நீ பயப்படாதே, இது சாதாரண வைரல் ஃபீவர் தான்னு டாக்டரே சொல்லிட்டார்” தோழியை சமாதானப்படுத்தினார்.

“ரெண்டு நாளா ஜுரம்னு சொல்ற…” என்ற அனிதா, அதற்கு மேலே வார்த்தைகள் எதையும் விட்டுவிடவில்லை. சுதாவுக்கு தன் மகள் என்றால் எவ்வளவு பிரியம் என கண்கூடாக பார்த்தவர் ஆயிற்றே. எனவே தன் மகளை கவனிக்காமல் விட்டிருப்பார் என்றெல்லாம் அவரால் நினைக்க முடியவில்லை.

“மாப்ள, அவளுக்கு இப்படின்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமே” இரண்டு நாட்களாக ஜுரம் என்கிறார்கள். தங்களிடம் சொல்லி இருந்தால் மகளைச் சென்று பார்த்து இருப்பார்களே. எனவே மனம் தாளாமல் செல்வம் அவனிடம் கேட்டுவிட்டார்.

அவனுக்கோ உள்ளுக்குள் அப்படி ஒரு குற்றக் குறுகுறுப்பு. தன்னால்தானே அவளுக்கு இப்படி இந்த ஜுரம் வந்தது. அப்படி இருக்கையில் அவன் அவரிடம் என்னவென விளக்கம் சொல்வான்?

“சாரி மாமா… இது இந்த அளவுக்கு சீரியஸ் ஆகும்னு நாங்க நினைக்கலை” அவனும் வேறு என்னதான் சொல்வதாம்? ‘அவள் கண்விழித்தால் எப்படி நடந்து கொள்வாள்?’ என நினைக்கையிலேயே உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

நிஜமாக, சத்தியமாக அவன் அப்படி வார்த்தைகளை விட்டுவிடுவான் என கனவிலும் அவன் நினைத்தது இல்லை. தனக்கு உயிரானவள், தன்னவள்… அவளை இப்படி காயப்படுத்தி விட்டோமே என அவன் உள்ளுக்குள் உருக்குலைந்து போனான்.

அவர்கள் அனைவருமே சுமித்ரா கண் விழிக்கக் காத்திருக்க, அவர்களை கொஞ்சம் அதிகம் சோதித்துவிட்டே கண் திறந்தாள். அதைப் பார்த்தவுடன், “கண்ணம்மா…” என செல்வம் அவள் அருகில் செல்ல, தகப்பனைப் பார்த்தவுடன் அழுதுவிட்டாள்.

“அப்பா…” என்றவளுக்கு தன்னை மீறி கண்ணீர் பொங்க, அவரை வயிற்றோடு கட்டிக்கொண்டு அவள் தேம்பி அழுதுவிட, அனிதா பயந்தே போனார்.

“அம்மாடி… என்னம்மா பண்ணுது? கஷ்டமா இருக்கா? எங்கேயாவது வலிக்குதா? டாக்ட்டரை வரச் சொல்லவா?” அனிதா கேட்க, மனதின் காயத்தாலா? இல்லையென்றால் பெற்றவர்களைப் பார்த்தவுடன் ஆறுதலுக்கு ஒரு தோள் கிடைத்துவிட்டது என எண்ணியதாலா? எதனாலோ அப்படி ஒரு அழுகை அழுதாள்.

அவளது அந்த செய்கையில் முழுதாக நொறுங்கிப் போனான் கார்முகில். ‘அவளை நான் என்னைவிட்டு விலகி ஓட வைத்துவிட்டேன்’ அந்த உண்மை முகத்தில் அறைய, அவனால் சுத்தமாக முடியவில்லை. அவனுக்கு மூச்சு விடுவது கூட அத்தனை சிரமமாக இருக்க, தோய்ந்துபோய் தரையில் அமர்ந்து விட்டான்.

அழுது ஓய்ந்தவள், “ம்ஹும்… வேண்டாம்…” ஒருவாறு தன்னை மீட்டுக்கொள்ள முயல,

“மாப்ள… டாக்ட்டரை வரச்…” ‘சொல்லுங்க’ என்ற வார்த்தைகளை அனிதாவால் முடிக்க கூட முடியவில்லை. கார்முகில் அமர்ந்திருந்த நிலையும், அவனது வெறித்த பார்வையும், கண்ணீரும் அனிதாவை அசைத்துப் பார்த்தது.

மகளும் கணவனும் தங்களுக்குள் மூழ்கிவிட, அனிதாதான் அவனை கவனித்தார். சுதா அந்த நேரம் தன் கணவனுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல வேண்டி அறைக்கு வெளியே சென்றிருக்க, இந்த அவனது ஓய்ந்த தோற்றத்தை சுதா கவனிக்கவில்லை.

‘இப்பொழுது மகள் தங்களது மகள் மட்டுமல்ல, கார்முகிலின் மனைவி’ என்ற உண்மை சட்டென உறைக்க, கணவனைப் பார்த்தார். மகள் அழுதுவிட்டாள் என்றதிலே அவர் உறைந்து போய்விட்டது புரிந்தது.

மகளைப் பார்க்க, அவளோ தகப்பனின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தாள். ‘இவ என்ன இப்படி பண்றா?’ அனிதாவுக்கு அவர்களது பாசப் போராட்டத்தை தடுக்கவும் முடியவில்லை, மகளை கண்டிக்கவும் முடியவில்லை.

அனிதா தன்னைக் கவனித்துவிட்டார் என்பது அவனுக்கும் புரிய, “இதோ… நான் போய் டாக்டரை அழைச்சுட்டு வர்றேன் அத்த” என்றவன் தகப்பனில் முகம் புதைத்திருந்த தன்னவளை வேதனையும், வலியும் போட்டிபோட ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினான்.

அவன் வெளியே செல்லவே, “என்னங்க… என்னங்க… அவளை விடுங்க” மனைவி குரல் கொடுக்க, மனைவியை முறைத்தார்.

“குழந்தை அழறா… நீ என்ன இப்படி சொல்ற?” மனைவியிடம் கிட்டத்தட்ட கத்தினார்.

“அவ இப்போ குழந்தை இல்லை, இன்னொருத்தரோட மனைவி. அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா? மாப்பிள்ளை கண்ணெல்லாம் கலங்கி…” அவர் சொல்லிக் கொண்டு இருக்கையிலேயே கார்முகில் மருத்துவரோடு உள்ளே வந்தான்.

அதில் அனிதாவின் பேச்சு தடைபட, தாய் சொன்னதில் சுமித்ரா சற்று துணுக்குற்றாள். ‘என்ன? கண்ணெல்லாம் கலங்கிட்டாரா?’ என பதறினாள். அவளுக்கு அவன்மேல் கோபம்தான், தீராத, ஆறாத ரணம்தான், வருத்தம்தான் ஆனால் அதையும் மீறி அவன்மேல் காதல் அதிகம் இருக்கிறதே.

அவனை இப்படி வருத்தப்படுத்தி பார்க்க வேண்டியா அவனைப்  பிடிவாதமாக திருமணம் செய்து கொண்டாள்? அவனுக்கென தான் இருக்க வேண்டும், அவன் ஆசைப்பட்ட அனைத்தையும் அவனுக்கு கொடுக்க வேண்டும், அவனை சந்தோஷப்படுத்தி பார்க்க வேண்டும் என்றுதானே அவனை அவள் திருமணம் செய்து கொண்டாள்.

அப்படி இருக்கையில் அவன் அழுகிறான் என்றால், அவன்மேல் கோபமே இருந்தாலும் அவளால் சந்தோஷப்பட முடியுமா என்ன? அவனுக்கு வலிப்பதை விட, அவளுக்கு அதிகம் வலிக்கிறதே இதை என்ன செய்யவாம்?

அவனிடம் அனைத்தும் தங்களுக்குள் முடிந்துவிட்டது என அவ்வளவு கோபமாக சொல்லிவிட்டாள்தான். ‘இது ஓவர்’ என சுலபமாக சொன்ன வார்த்தைகளை செயல்படுத்தும் துணிவு அவளுக்கு இல்லையே. அப்படி இருந்திருந்தால், அவன் வீட்டிலா இருந்திருப்பாள்?

அப்படி அவனிடம் சொல்லிவிட்ட பிறகும், அவனை விட்டுச் செல்லும் தைரியம் இன்றி தானே, தனக்குள் போராடி, சோர்ந்து இப்படி காய்ச்சலை இழுத்து வைத்துக் கொண்டாள். அப்படியும் அவன் தன்னை கவனிக்க வந்தது பிடித்தாலும், ‘முடியாது’ என அவனை விலக்கி வைத்து தன் கோபத்தை, எதிர்ப்பை காட்டினாள் அவ்வளவுதான்.

அதற்கு மேலே, அவனை விட்டுச் செல்வது எல்லாம் அவளுக்கு முடியாத காரியம்.

“நீங்க பாருங்க டாக்டர்…” என்றவன் விலகி நின்று அவளையே பார்த்திருந்தான். அவனது வலி அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிய, அதைப் பார்க்க முடியாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அவள் அப்படி முகம் திருப்பியது அவனுக்கு உயிர்வதையைக் கொடுக்க, அங்கே இருந்த மற்றொரு சிறிய படுக்கையில் சென்று அமர்ந்துவிட்டான்.

உள்ளுக்குள் மனம் வெகுவாக அலைபாய்ந்தது. இப்படியே உடனே அவள் காலில் கூட விழுந்து, ‘என்னை வெறுத்துவிடாதே’ என கெஞ்ச மனம் தவிக்க, இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டான்.

அவளை பரிசோதித்த மருத்துவர், “ஜுரம் குறைஞ்சிருக்கு… ஆனாலும் டெம்பரேச்சர் இன்னும் இருக்கு. ஜுரம் நல்லா விட்ட பிறகுதான் டிச்சார்ஜ் பத்தி பேச முடியும்” என்றவர் சென்றுவிட்டார்.

அதற்குப் பிறகு மகளைக் கவனிக்கும் பொறுப்பை அனிதா முழுதாக கையில் எடுத்துக் கொண்டார். எனவே கார்முகில் விலகி நின்றாக வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானான். தன்னவளை தன் கைகளுக்குள் பொதிந்துகொள்ள அவன் ஆவி தவித்தாலும், அவனால் முடியவில்லை.

‘அன்று இரவில் யார் அங்கே தங்குவது?’ என்ற கேள்வி வர, செல்வம் மகளை விட்டு எங்கேயும் அசையப் போவதில்லை எனச் சொல்லிவிட, அனிதாவுக்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போல் இருந்தது.

அனிதா மகளின் முகம் பார்க்க, அவளோ கணவனின் முகம் பார்த்திருந்தாள். அவன் கண்களும், முகமும் அவளிடம் கெஞ்சிற்று. ஆனாலும் அவளால் உடனே அவனோடு இணக்கமாக முடியும் எனத் தோன்றாமல் போக அமைதியாகிவிட்டாள்.

அவளது அந்த அமைதி அவனுக்கு முழு தோல்வியில் முடிய, அவன் எதுவும் சொல்லவில்லை, ஆனால்  மனசே விட்டுப் போனது.

‘என்னை வெறுத்துவிட்டாளா? எல்லாம் அவ்வளவுதானா? ஓவர் என்றால் ஓவர் தானா?’ மனம் ரணமாக வலித்தது. ஆனால் அவர்கள் முன்னால் எதையும் அவனால் காட்டிக் கொள்ள முடியவில்லை. அவள் தன்னை கைவிட்டுவிட்ட வலி, அவனைக் கொன்றது.

“என்னங்க…” அனிதா கணவனிடம் மறுத்து எதையோ சொல்லப் போக, கார்முகில் அவரைத் தடுத்தான்.

“அத்த விடுங்க… அவளும் அவங்க அப்பாவைத்தான் ரொம்ப தேடறா, மாமாவே இருக்கட்டும்” அவன் சொல்லிவிட, சுமித்ரா அவனைப் பார்த்தாள்.

‘அப்போ விட்டுட்டு போய்டுவ?’ அவள் பார்வை அவனிடம் கேட்க, அவன் அவளைப் பார்க்கவே இல்லை. அவளைப் பார்க்கும் தைரியம் இல்லை என்பதுதான் உண்மை.

செல்வம் அங்கே இருக்கையில், அனிதா மட்டும் எப்படி வீட்டுக்குச் செல்வதாம்? இரவு உணவு வரவே, மருமகளைப் பார்க்க வந்த மூர்த்தி, சுதா இருவரும் சுமித்ராவிடம் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். கார்முகில் அவளை ஒரு பார்வை பார்த்தான் அவ்வளவே.

அவள், தன் பார்வையை கோபமாக விலக்கிக் கொள்ள, “அத்த பார்த்துக்கோங்க” என்றவன் சென்றுவிட, அவளுக்குள் அப்படி ஒரு மனப் போராட்டம். பிடிவாதமாக அவள் மௌனம் சாதித்தாலும், அவன் தன்னுடனே இருக்க வேண்டும் என அடிமனம் விரும்புகிறதே, அப்படி இருக்கையில் அவளும் என்னதான் செய்ய?

ஒரு மாதிரி கண் கலங்க, போட்ட மருந்தின் வீரியத்தால் அப்படியே கண் அயர்ந்துவிட்டாள். கார்முகில் பெற்றவர்களை வீட்டில் விட்டுவிட்டு, அவர்கள் அறைக்கு வந்ததோ, அவளை நின்று சில நொடிகள் பார்த்ததோ, அவள் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டதோ எதுவும் அவளுக்குத் தெரியவே இல்லை.

அவளுடனே அந்த கட்டிலில் ஏறி படுத்துக்கொள்ள மனம் தவிக்க, மறு கட்டிலில் படுத்திருந்த செல்வத்தையும், கீழே போர்வையை விரித்து அதில் படுக்க ஆயத்தமான அனிதாவையும் பார்த்துவிட்டு அப்படியே நின்றுவிட்டான்.

“மாப்…” அனிதா எதையோ பேசப் போக, “ஷ்… வெளியே வாங்க” என அவன் இதழ் அசைவில் சொல்ல, அவன் பின்னாலேயே வெளியே வந்தார்.

“நான் இங்கேதான் பக்கத்தில் இருக்கும் வெயிட்டிங் ஏரியாவில் இருப்பேன். ஏதாவது வேணும், வாங்கணும்ன்னா எனக்கு ஒரு கால் பண்ணினால் போதும்” அவன் சொல்ல, அனிதாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“அவ மேலே அவருக்கு கொஞ்சம் பாசம் அதிகம் மாப்ள, அதான்…” கார்முகில் தன் மகளோடு இருக்க முடியவில்லையே என வருத்தப்படுவது அப்பட்டமாகத் தெரிய சிறு சங்கடமாகவே சொன்னார்.

“அதனால் என்ன அத்த, மகளை விட்டு பிரியும் வலி கொஞ்சம் அதிகம்தான்னு எனக்கும் தெரியும்” என்றவன் விலகிச் சென்றுவிட்டான். இப்பொழுது கூட குழலி தாய்மை அடைந்து இருக்கிறாள், அவளைக் கொஞ்சநாள் தங்கள் வீட்டில் வைத்து சீராட்ட வேண்டும் என பெற்றவர்கள் அவ்வளவு தவிக்கிறார்கள்.

ஆனால் அவனது திருமணத்தோடு ஒரு வாரம் அவள் அங்கே இருந்தாள், அதோடு சரி. அதற்கு மேலே குமார் அவளை அங்கே அனுப்பவே மாட்டேன் எனச் சொல்லிவிட்டான். அதில் அவனைப் பெற்றவர்களுக்கு அவ்வளவு வருத்தம்.

நிஜத்தில் குழலி கொஞ்சம் பிடிவாதம் பிடித்தால் குமார் விட்டுக் கொடுத்துவிடுவான் என்பதுதான் உண்மை. ஆனால் அவள் தாய் வீட்டில் இருக்கையில், தினமும் அவளைப் பார்க்க வருபவன் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டான் என்பதால் குழலியே அங்கே வர விருப்பப்படவில்லை என்பதுதான் உண்மை.

வெயிட்டிங் ஏரியாவில் இருந்த இருக்கையில் சென்று அவன் அமர்ந்துவிட, அனிதா உள்ளே சென்று படுத்துக் கொண்டார். நள்ளிரவில் அனிதாவுக்கு கொஞ்சம் உறக்கம் கலையவே, எழுந்து அமர்ந்தார்.

அங்கே இருந்த பிளாஸ்கைப் பார்த்தவர், எப்படியும் கார்முகில் உறங்க மாட்டான் எனப் புரிய, அவனுக்கு சூடாக டீயைப் கொடுப்போம் என எண்ணியவர் அதை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முயன்றார்.

“அம்மா, இந்த நேரம் எங்கே வெளிய போறீங்க?” நேரம் இரண்டு எனக் காட்டவே தாயிடம் கேட்டாள்.

“நீ எப்போ எழுந்த? ஜுரம் இல்லையே…?” என்றவர் மகளை வந்து பரிசோதித்தார்.

“நைட் சீக்கிரமே தூங்கிட்டேனா, இப்போ முழிப்பு வந்துடுச்சு. ஜுரம் விட்டிருக்கு” தாயிடம் சொன்னாள்.

“மாப்ள என்ன செய்யறார்ன்னு பார்த்துட்டு, சூடா டீ கொடுக்கலாம்னு போறேன்” தாய் சொல்ல, சற்று திடுக்கிட்டாள்.

“மாப்பிள்ளையா? அவர் இங்கேயா இருக்கார்? வீட்டுக்குப் போகல?” அவள் கேட்க மகளை முறைத்தார்.

மீண்டுமாக மகளின் அருகே சென்றவர், “உங்க அப்பாவுக்குத்தான் வயசாச்சு, புத்தி வேலை செய்யலைன்னா, உனக்குமா மூளை மழுங்கிப் போச்சு? கட்டுன பொண்டாட்டி ஹாஸ்பிட்டல்ல முடியாமல் கிடக்கும்போது, எந்த நல்ல புருஷனும் விட்டுட்டு போக மாட்டான்.

“அதுவும் முகில் உன்மேலே உயிரையே வச்சிருக்கான்னு எனக்கே தெரியும்போது, உனக்குத் தெரியாது? அப்பா பாசம் இருக்க வேண்டியதுதான், அதுக்காக உன் புருஷனை நீ தள்ளி வைப்பியா? அவர்மேலே என்ன கோபம் இருந்தாலும், இந்த நேரத்தில் நீ இப்படி செய்து இருக்கக் கூடாது சுமி” தாய் சொல்ல அதிர்ந்து போனாள்.

“அம்மா.. அது…” தான் எதுவும் சொல்லாமலேயே தன் மனதைப் புரிந்த தாயைக் கண்டு திகைத்தாள்.

“உன்னை நான் பார்த்துப் பார்த்து வளர்த்தேன் சுமி…” என்றவர் வெளியே செல்ல, ‘என்னிடம் நீ எதையும் மறைக்கவே முடியாது’ என்ற செய்தி அதில் இருக்க, சோர்வாக கண்களை மூடிக் கொண்டாள்.

மகளது முகம் மாறினாலே கண்டுகொள்ளும் தாய்க்கு, மகள் கணவனை தவிர்க்கிறாள் எனப் புரியாமல் போகுமா என்ன? சுமித்ராவுக்கு அப்பொழுதே அவனைக் காணவேண்டும்போல் ஒரு எண்ணம். கையில் ட்ரிப்ஸ் அப்பொழுதும் இறங்கிக் கொண்டிருக்க, அவளால் எழுந்து செல்ல முடியவில்லை.

அவள் ஒரு மாதிரி தவிக்கையிலே, “அவ தூங்கிட்டுதான் இருக்கா மாப்ள, ஜுரம் இல்லை… நீங்களே வேணாலும் பார்த்துக்கோங்க” என்றவாறு தாய் உள்ளே வர, அவர் பின்னால் கார்முகில் வருவது தெரிந்தது.

அனிதா நேராக பாத்ரூமுக்குச் செல்ல, சுமித்ரா தன் இமைகளை படக்கென மூடிக் கொண்டாள். அவளுக்கு அருகே வந்தவன், ட்ரிப்ஸ் அவள் ஏறிய கரத்தை மெதுவாக வருடி, அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.

ஜுரம் அப்பொழுது இல்லாமல் போகவே, சற்று நிம்மதியாக மூச்சு விட்டவன், “சாரி ஏலியன்… ரொம்ப சாரி…” அவன் சின்னக் குரலில் சொல்ல, இத்தனை மாதங்களாக அவன் தன்னை ‘ஏலியன்’ என அழைக்கவே இல்லை என்பதே அவளுக்கு அப்பொழுதுதான் புரிந்தது.

‘அந்த அளவுக்கு என்மேலே கோபம் இல்ல… இருக்கட்டும்’ மனதுக்குள் கோபமாகவே எண்ணிக் கொண்டாள்.

“உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல… சாரிடா… அதுக்காக என்னை வெறுத்துடாதே ப்ளீஸ்… நீன்னா எனக்கு உயிர்டா” என்றவன் பட்டும் படாமல் அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான். எங்கே அவள் விழித்துவிடக் கூடாதே என அவன் பார்ப்பது புரிந்தது.

அவளுக்கோ கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லை. அவளது கட்டுப்பாட்டையும் மீறி கண்களில் கண்ணீர் வழிந்துவிட, எங்கே அவன் அதைக் கண்டுகொள்வானோ என அவள் பயந்தாள். ஆனால் அந்த நேரம் அனிதா வெளியே வரும் ஓசை கேட்கவே, வேகமாக அவளை விட்டு விலகி நின்றான்.

அனிதா வரவே, “நான் வர்றேன் அத்த… அவளைப் பார்த்துக்கோங்க” என்றவன் வெளியேறிச் செல்ல, கதவை அவர் பூட்டிக் கொண்டார்.

“ஏதாவது சூடா குடிக்கறியா சுமி? தண்ணி ஏதும் வேணுமா?” அனிதா மகளிடம் கேட்க, அவளோ தன் கண்ணீரை வேகமாக துடைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மகள் அழுவதைக் கண்ட தாயின் மனமும் கலங்கியது.

You may also like

2 comments

kothai suresh April 8, 2026 - 7:52 pm

ஐயோ இந்த இரண்டு கூடவும் முடியல டா சாமி

Reply
infaalocious April 8, 2026 - 7:59 pm

அதெல்லாம் சும்மா…. சரி ஆயிடுவாங்க.

நன்றி மா.

Reply

Leave a Comment

About Me

Featured