பகுதி – 26.
அன்று காலையில் அலுவலகம் கிளம்பிக்கொண்டு இருக்கையில், அவளது அலைபேசிக்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதைப் பார்த்தவள், எடுப்பதா? வேண்டாமா? என ஒரு நொடி யோசித்தாள்.
இப்பொழுதெல்லாம் அந்த டெலிகால் அழைப்புகள் நேரம்கெட்ட நேரத்தில் வந்து கழுத்தை அறுப்பதாலேயே அந்த யோசனை.
“ஏய் ஏலியன்… என்ன ஃபோனையே அப்படி வெறிச்சு பார்த்துட்டு இருக்க?” அவன் கேட்க, அலைபேசியை கையில் எடுத்துக் கொண்டாள். அவனது அந்த ஏலியன் என்ற அழைப்பு கொடுத்த தித்திப்பை உள்வாங்கிக்கொண்டு நின்றிருந்தாள்.
கடந்த இரண்டு மாதங்களாக இருவருக்குள்ளும் அனைத்தும் சரியாகிவிட்ட நிலை. காமம் இல்லாமல் காதல் கொள்வோம் தோழி என்பதுபோல்… கார்முகில் அவளுக்கு உயிராகிப் போயிருந்தான்.
இந்த மாற்றம், ஆராதனா தாய்மை அடைந்திருக்கிறாள் எனத் தெரிந்த அன்று நடந்தது. தங்களுக்குப் பிறகு திருமணம் ஆன அவர்களுக்கே குழந்தை வரப் போகையில், நிச்சயம் கார்முகில் வருத்தப்படுவான் என எண்ணினாள்.
குறைந்தபட்சம், தங்களுக்குள் தாம்பத்யம் கூட நடக்கவில்லையே என அவன் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவான் என அவள் நினைக்க, அப்படி ஒன்று நடக்கவே இல்லை. அவர்கள் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிடும் பொழுதெல்லாம் அவனையேதான் கவனித்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால் கார்முகிலின் முகத்தில் ஒரு சின்ன மாறுதல் கூட எந்த நேரத்திலும் இருக்கவில்லை. ஒரு வேளை அதியனுக்காகப் பார்க்கிறானோ என அவள் நினைக்க, தங்கள் அறைக்கு வந்தும் கூட அவனது உற்சாகம் குறையவே இல்லை.
அதைப் பார்த்தவளுக்குத்தான் மனம் தாளாமல் போனது. “உங்களுக்கு வருத்தமாகவே இல்லையா?” அவள் கேட்க, ஒரு நிமிடம் புரியாமல் குழம்பி, மறு நிமிடம் அவன் முகம் தெளிவானது.
அவளை படுக்கையில் அமர்த்தி, தானும் அமர்ந்தவன்… அவள் கரத்தை தன் கரங்களுக்குள் பொதிந்து கொண்டான். “மத்தவங்க வாழ்க்கையைப் பார்த்து, நம்ம வாழ்க்கையை நாம வாழ முடியாது சுமி.
“முதல்ல ஒரு விஷயத்தை நான் க்ளியரா சொல்லிக்கறேன். எனக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுன்னு நினைச்சவன் நான். ஆனா நானே எதிர்பாராத விதத்தில், நீ என் வாழ்க்கைக்குள் வந்திருக்க. ரொம்ப எதிர்பார்த்து, சட்டுன்னு ஒரு ஏமாற்றம், நமக்குள் பிரச்சனை… எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
“இதையெல்லாம் தாண்டியும் நீ என்கூட இருக்க. எனக்கு இது போதும். என்னைக்காவது ஒரு நாள் நம்ம வாழ்க்கையும் ரொம்ப சிறப்பா மாறத்தான் போகுது. இந்த அழகியை…” என்றவன், “கொஞ்சம் பெர்சனலா சொல்லிக்கறேன்…” என்றவன் அடுத்து பேசிய பேச்சுக்கள் எல்லாம் ‘அடல்ட்’ வகையே.
ஐயோ அம்மா… அவன் பேசப் பேச, அதைக் காதுகொடுத்து கேட்க முடியாமல் மொத்தமாக சிவந்து போனாள். காதோடு சேர்த்து தேகம் மொத்தமும் கூசி சிலிர்த்துப் போனது.
“முகி… முகி… போதும்… போதும்… ஐயோ என்ன இப்படியெல்லாம் பேசறீங்க? என்னால முடியலை… போதும் நிறுத்துங்க” என்றவள், அவன் வாயைத் தன் கரத்தால் மூடினாள். அவன் அவள் கரத்தை விலக்கி இன்னும் பேச, அவள் மறு கரத்தால் அவன் வாயை மூட, இவன் விலக்கிவிட்டு இன்னும் பேச, அம்மம்மா… அவ்வளவுதான்… இறுதியில் வேறு வழியின்றி தன் காதை மூடிக் கொண்டாள்.
அப்படியும் அவன் விடுவானா என்ன? அவள் கரத்தை அவள் காதில் இருந்து விலக்கிவிட்டு பேசித் தீர்த்தான். அவனுக்குள் கொட்டிக் கிடக்கும் மோகமும், அவள்மீதான தாபமும், அவன் வார்த்தைகளில் வெளியேறிக் கொண்டிருந்தது.
ஒரு கட்டத்தில் இதற்கு மேலே முடியாது எனத் தோன்ற, அவனைப் படுக்கையில் தள்ளி, அவன்மேல் ஏறிப் படுத்தவள், தன் இரு கரங்களால் அவன் வாயை இறுக்கமாக மூடினாள்.
“இதுக்கு மேலே ஒரு வார்த்தை பேசினீங்க?” அவள் கண்களை உருட்டி மிரட்ட, அவனோ கண்களில் விஷமம் சொட்ட அவளைப் பார்த்து சிரித்தான். அவன் பார்வையை சந்திக்க முடியாமல் தன் முகத்தை அவன் நெஞ்சுக்குள் அழுத்தமாக புதைத்துக் கொண்டாள்.
அவள் தேகம் மெல்லியதாக நடுங்க, அதை அவனால் மிகவும் தெளிவாக உணர முடிந்தது. தன் கரங்களால் அவளை வளைத்தவன், “ஏய் ஏலியன்… பேசினதுக்கே இப்படி நடுங்குவியா?” அவன் சின்ன சிரிப்பில் கேட்க, அவளோ அவனுக்குள் புதைத்தாள்.
“கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் இப்படி பேசறீங்க?” அம்மம்மா அவளுக்கு குரலே வெளிவர மறுத்தது.
“என் ஏலியன்கிட்டே எனக்கு என்ன வெட்கம்? இன்னும் ஒரே ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்” என்றவன், எதையோ சொல்லப் போக, அவ்வளவுதான் இதற்கு மேலே தாங்கவே மாட்டேன் என்னும் நிலை அவளுக்கு.
“எதையும் சொல்ல வேண்டாம்… சொல்லக் கூடாது…” நடுக்கமாகவே மிரட்டினாள்.
“அப்போ செய்யலாம்னு சொல்றியா ஏலியன்?” அப்பொழுதுதான் கவனித்தாள்… அவனது ஏலியன் என்ற அழைப்பை. அவன் கண்ணடித்து, அவளை இன்னுமே சிவக்கச் செய்யும் வித்தையில் இறங்க முயல, அவளோ இப்பொழுது தன் இதழ்களை அவன் இதழ் பக்கம் நகர்த்தினாள்.
அவனது பேச்சு கப்பென நின்றுபோக, இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டான். அவள் இதழ் தீண்டினால், அவன் தன் கட்டுப்பாட்டில் நிச்சயம் இருக்க மாட்டான். அது அவனால் முடியாது என அவளுக்கே தெரியுமே, எனவே வேண்டும் என்றே செய்தாள்.
“நீங்க மிச்சத்தை சொல்லுங்க…” இதழ்கள் தொட்டுக் கொள்ளவில்லை தான்… உரசிக் கொள்ளக் கூட செய்யவில்லை தான். ஆனால் அவள் இதழ்களின் அந்த நெருக்கமும், அவள் வாசனையும் அவனை தடுமாற வைக்க, இமைகளை பிரிக்க கூட பயந்தான்.
“ஏலியன்… விலகு…” காற்றுக்கு கூட கேட்காத குரல். இதழை அசைக்க கூட பயந்து உரைத்தான். இமைகளை அழுத்தமாக மூடிக் கொண்டு, மூச்சு கூட விட பயந்து, மூச்சடக்கி அவன் பேச, அவனை அத்தனை நெருக்கத்தில் பார்த்தது பார்த்தபடி இருந்தாள்.
“ஏலியனா நான்…” என்றவள் மூக்கோடு மூக்கை உரச, சாதாரண நெருக்கத்துக்கே அவன் உணர்வுகள் அவன் பேச்சைக் கேட்காது. அப்படி இருக்கையில் அவள் இப்படியெல்லாம் செய்தால்… ஒரு கட்டத்தில் அவன் உணர்வுகள் அவளைத் தாக்க, அத்தனை நேரமாக அவனிடம் விளையாடிப் பார்த்தவள், சற்று நடுக்கம் கொண்டாள்.
அவனைவிட்டு விலகிக்கொள்ள அவள் முயல, அவள் இடையோடு சேர்த்து அழுத்தமாக அவன் கட்டிக் கொண்டு அவளை விட மறுத்தான்.
“முகி… இது…” இப்பொழுது அவள் திணற, ‘நான் எதுவும் செய்யறதுக்கு இல்லை’ என்பதுபோல் தோளைக் குலுக்கினான்.
“இப்போ சொல்லவா?” அவன் குறும்பாக கேட்டு சிரிக்க, அவனைப் போட்டு நெஞ்சிலேயே குத்தினாள்.
“ம்ஹும்… முகி…” அவள் குரல் அவனிடம் கெஞ்சிற்று. அவளை அதிகம் சோதிக்காமல் அவன் கரத்தை விலக்கிக் கொள்ள, அவனோ வாய்விட்டு அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான்.
“ஆப்பிரிக்கா க*தை… சிரிக்காதடா…” அவனுக்கு முதுகுகாட்டி படுத்துக்கொண்டு அவள் முனக, அவனது சிரிப்போ இன்னும் அதிகரித்தது. அவன் வாய்விட்டு அப்படி ஒரு சிரிப்பு சிரித்தான். அன்றுமுதல் இருவருக்குள் ஒரு நெருக்கம், அது மனதால் இன்னும் நெருங்கிவிட்டதுபோல் இருந்தது.
மறுநாள் அவன் முகம் காண முடியாமல் தயங்கியவளை, தன் மடியில் அமர்த்தி, அவள் இடையை கட்டிக்கொண்டு அவன் கதை பேச, அவள் சற்று இயல்பானாள். அன்று துவங்கியது, அவர்களது இந்த நெருக்கம்.
“ஏலியன்… கேட்கறது காதில் விழுதா இல்லையா? ஃபோனை எடு. மறுபடியும் அடிக்குது பார்” என்றவன் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான். முகத்தை அவள் கழுத்தில் வைத்து அழுத்திக் கொள்ள, அவன் அருகாமை கொடுத்த கிறக்கத்தோடு அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ… யார் பேசறது?” மெதுவாக குரல் கொடுத்தாள்.
“அக்கா… நான்… நான்… புவி, புவனா. எனக்கு கேக், ட்ரஸ் எல்லாம் கூட வாங்கிக் கொடுத்தீங்களே…” அவள் நினைவூட்ட, ஒரு நொடி சிந்தித்தவளின் நினைவுக்கு வந்தாள் புவனா.
ஆதவன் பிறந்த நேரம் அவளுக்கு உதவி செய்திருந்தாள். அவனுக்கே இரண்டு வயது நிறைவடைந்து இருக்க, இவள் இப்பொழுது அழைக்கிறாளே என ஒரு பக்கம் யோசனை ஓடியது.
“சொல்லும்மா… ஏதாவது உதவி வேணுமா?” அவள் கேட்க, புவனாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
“அக்கா… அக்கா… தாத்தா செத்துப் போய்ட்டாருக்கா…” அவள் சொல்லிவிட்டு அழ, சுமித்ராவுக்கு இதயம் ஒரு நொடி நின்று துடித்தது.
“என்ன? இதோ நான் வர்றேன்…” என்றவள் பதற, அவளது கை பிடித்து நிறுத்தினான். அப்பொழுதுதான் அவன் நினைவே அவளுக்கு வர, அவனை ஒரு மாதிரி இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.
“முகி… முகி… காரை எடுங்க, நான் போகும்போது எல்லாத்தையும் சொல்றேன்” அவள் படபடக்க, அதற்கு மேலே அவன் அங்கே நிற்கவில்லை. அவன் காரைக் கிளப்ப, அவள் வழி சொல்ல, அவர்கள் புவனாவின் வீட்டில் நின்றார்கள்.
ராமேந்திரனின் பூத உடல் வெளியே கிடத்தப்பட்டிருக்க, சுற்றிலும் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவரது மேலே விழுந்து புரண்டு அழுதுகொண்டிருந்தாள் புவனா. காரில் வரும்பொழுதே அவள் விஷயத்தை கார்முகிலிடம் சொல்லி இருந்தாள்.
அவளும் இழப்பு எனத் தெரியாத வயதிலேயே பெற்றவர்களை பறிகொடுத்தவள் ஆயிற்றே. புவனாவின் வலி அவளுக்கும் மிகவும் தெளிவாகப் புரிய, சுமித்ரா கலங்கிப் போய் நின்றிருந்தாள். அவளது கண்களும் கலங்கிவிட, அவள் கரத்தை அழுத்தமாக பற்றிக் கொண்டான்.
அங்கே எடுத்து செய்வதற்கு என யாரும் இருப்பதுபோல் தெரியவில்லை. “நீ புவனா கிட்டே போ… நான் இங்கே விசாரிக்கறேன்” என்றவன் நிலைமையை கையில் எடுத்துக் கொண்டான்.
புவனா இவளைப் பார்த்தவுடன் கதறிக்கொண்டு வர, அந்த பத்து வயது சிறுமியை அணைத்துக் கொண்டாள். “அக்கா, தாத்தாக்கா… செத்துப் போயிட்டாருக்கா” என்றவள் கதற, அவள் பாட்டியைப் பார்த்தாள்.
அவர் முகத்தில் ஒளி மறைந்து, கணவன் முகத்தையே பார்த்தவாறு அப்படியே அமர்ந்து இருந்தார். அடுத்து நடக்க வேண்டிய காரியங்கள் அனைத்தையும் கார்முகில் அங்கே இருந்தவர்களின் உதவியோடு செய்து முடித்தான்.
அங்கே மனிதர்களுக்கு பஞ்சம் இருக்கவில்லை, பணத்துக்கு மட்டுமே பஞ்சம் இருந்தது. பணத்தை கார்முகில் கொடுக்க, அன்று மாலைக்குள் அவரது பூதவுடல் எடுகாட்டுக்கு எடுத்து செல்லப் பட்டது. இன்னும் இரண்டு நாளில் அவர்களை வந்து பார்ப்பதாகச் சொல்லிவிட்டு, கொஞ்சம் பணத்தையும் கொடுத்துவிட்டு வந்தார்கள்.
சுமித்ரா அப்படியே ஒரு மாதிரி அமைதியாகவே இருக்க, வீட்டுக்கு வந்து குளித்து முடிக்கும் வரைக்கும் அவர்கள் பேசிக் கொள்ளவே இல்லை. அவர்கள் இருவருக்கும் மாலை காபியை கொடுத்த சுதா அவர்கள் அருகே அமர்ந்தாள்.
“சுமி ஏன் ப்பா இப்படி இருக்கா? எல்லாம் நல்லபடியா முடிஞ்சது தானே?” மகனிடம் கேட்டவர் மருமகளை ஒரு பார்வை பார்த்தார்.
“இல்லம்மா… அந்த வீட்டுக்கு சம்பாதிச்சு கொடுத்துட்டு இருந்த ஒரே ஆள் அந்த தாத்தா தான். இனிமேல் அந்த குடும்பம் என்ன ஆகும்னு யோசிச்சு கவலைப் படறா போல” அவன் சொல்ல, தன்னவனை ஆச்சரியமாக நிமிர்ந்து பார்த்தாள்.
‘உன்னை எனக்குத் தெரியாதா?’ என்பதுபோல் அவன் ஒரு பார்வை பார்த்து வைத்தான். அதில் அவனை நெருங்கி அமர்ந்தவள், அவன் தோளில் சாய்ந்து கொள்ள, சுதாவுக்கு அவர்களை அப்படிப் பார்க்கவே மனம் நிறைந்து போனது.
“அந்த குழந்தை படிக்கறதுக்கு எல்லாம் கூட நாம உதவி செய்யலாம். ஆனா அன்றாடம் பிழைப்புக்கு என்னப்பா செய்யறது? அதுவும் அந்த பாட்டி வயசானவங்க வேற” தன் மகனைப் பார்த்தார்.
“நான் பார்த்துக்கறேன்ம்மா…” அவன் சொல்ல, பட்டென அவன் தோளில் இருந்து நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவன் எதையும் வாய் வார்த்தையாக சொல்பவன் இல்லை என அவளுக்குத் தெரியுமே.
‘நிஜமா?’ அவள் கண்கள் அவனிடம் கேள்வி கேட்க, அவள் நெற்றி முட்டி சிரித்தான்.
“ஏலியன்… இப்போ எதுக்கு இப்படி முழிச்சுப் பார்த்து என் மூடை மாத்துற?” அவளிடம் கிசுகிசுப்பாக கேட்டான்.
அவனது அந்த அழைப்பிலும், அவன் பாவனையிலும் சற்று கலவரப்பட்டு தங்களுக்கு எதிரில் சுதாவைப் பார்த்தாள். அவர் இருந்த இடம் வெறுமையாக இருக்கவே, “அம்மா அப்போவே எழுந்து போய்ட்டாங்க” அவன் சொல்ல, மீண்டுமாக அவன் தோள் சாய்ந்தாள்.
அவன் டிஷர்ட்டுக்குள் கரத்தை திணித்தவள், அவன் நெஞ்சின் ரோமங்களை மெதுவாக வருட, இப்பொழுது அவன் கலவரமானான்.
“ஷ்… என்ன இது? ஸ்…” அவள் கரத்தால் சுருட்டி இழுக்க, அது கொடுத்த வலியில் மெதுவாக அலறினான்.
“எனக்காக இவ்வளவு யோசிப்பீங்களா?” நிச்சயம் அவளைக் கொண்டு தானே அவன் அனைத்தையும் செய்தான். இல்லையென்றால் அவனுக்கு அவர்கள் யார் என்று கூட தெரிந்து இருக்காதே எனவே கேட்டாள்.
“ஆமா… உனக்காகத்தான்… நீ நல்ல மனநிலையில் இருந்தால்தானே எனக்கு நல்லது” அவன் கண்ணடிக்க, அவனைப் போலியாக முறைத்தாள். அவன் தன் மனநிலையை மாற்ற வேண்டியே இப்படி பேசுகிறான் என அவளுக்குத் தெரியாதா என்ன?
“ஆமா… அப்படியே எல்லாம் சாதிச்சுக்கற மாதிரிதான். எல்லாம் வாய் வார்த்தையோட சரி…” அவனைச் சீண்ட வேண்டியே சொன்னாள். அது அவனுக்கும் புரிய, அவள் மூக்கோடு மூக்கை உரசினான்.
“ம்ச் என்ன?” சற்று சலிப்பாகவே கேட்டாள். தன் மாற்றம் புரிந்தாலும், அவன் இப்பொழுது விலகி நிற்பது அவளுக்கு பெரும் இம்சையாக இருந்தது.
“இப்போ உன் கை செய்யறதையே நானும் செய்யவா?” அவன் திடுமென கேட்க, ‘நான் எதைக் கேட்டால், இவர் என்ன சொல்றார்?’ எனப் புரியாமல் அவனைப் பார்த்தாள். அவன் கண்கள் ஒரு மாதிரி கிறக்கத்தைக் காட்ட, அப்பொழுதுதான் தன் செய்கையை அவதானித்தாள்.
அவன் டிஷர்ட்டுக்குள் புகுந்திருந்த அவள் கரம், அவனது உரமேறிய நெஞ்சை மென்மையாக வருடிக் கொண்டிருக்க, வேகமாக தன் கரத்தை விலக்கிக் கொள்ளப் பார்த்தாள். அதற்கு அனுமதிக்காமல் அவன் அவள் கரத்தை அழுத்திப் பிடித்து தடுத்தான்.
‘எனக்கு பதில் வேண்டும்’ என அவன் பார்த்து வைக்க, அவள் எங்கே பதில் சொல்லும் நிலையில் இருந்தாளாம்?
“முகி… நாம ஹால்ல இருக்கோம்…” அவனைக் கலைக்க முயன்றாள். அவன் குரலும், பார்வையும் அவளை என்னவோ செய்தது. குரல் தடுமாறியது, மூச்சு விடுவதே சிரமம்போல் இருந்தது.
அவள் கரத்தால் அவனே இப்பொழுது அவள் செய்கையை தொடர, அவ்வளவுதான்… அவனைத் தள்ளிவிட்டு தன் கரத்தை உருவிக் கொண்டு வேகமாக தங்கள் அறைக்குச் சென்று மறைந்தாள்.
கட்டிலில் முகம் குப்புற படுத்துக் கொண்டவளுக்கு இதயம் தாறுமாறாக துடித்தது. அதைவிட, அவன் கொடுத்த இனிய கற்பனையின் உபயத்தில் அவன் கரங்கள் தன் மேனியில் படரும் உணர்வு. என்ன முயன்றும் அவளால் அதை அடக்கவே முடியவில்லை.
ஆனால் சில பல நிமிடங்களுக்கு முன்னர் இருந்த அவளது மனநிலை முழுதாக மாறி இருந்தது. அவன் மாற்றி இருந்தான், அதை அப்படித்தான் சொல்ல வேண்டுமோ? சுமித்ரா தன் இனிய கனவுகளில் மூழ்கிப் போக, புவனா குடும்பத்தைப் பற்றி அவன் யோசித்தான்.
அவ்வப்பொழுது அண்டை வீட்டாரின் உதவியோடு, அவர்கள் வீட்டை பார்த்துக் கொள்ளச் சொன்னான். தாத்தாவின் பதினாறாம் நாள் காரியங்கள் அனைத்தும் முடிந்த மறுநாள், சுமித்ராவை அழைத்துக்கொண்டு அங்கே சென்றான்.
பாட்டியும் புவனாவும் கொஞ்சம் தேறி இருக்கவே, “அடுத்து என்ன செய்யறதா இருக்கீங்க?” சுமித்ராதான் கேட்டாள். அதை அவள் கேட்ட உடனேயே பாட்டியின் கண்களில் கண்ணீர் என்றால், புவனாவின் கண்களிலோ கலவரம், எதிர்காலத்தைப் பற்றிய பயம் என அனைத்தும் தெரிந்தது.
“நான் உழைப்புக்கு அஞ்சாதவ தாயி… சும்மாட்டு காய்கறி வித்தே என் பேத்தியை நான் எப்படியாவது கரை ஏத்திடுவேன்” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் வழித்தது.
“பாட்டி, உங்க பேத்தியோட படிப்பைப் பத்தி இனிமேல் நீங்க கவலையே படாதீங்க. அவ என்ன படிக்கணும்னு ஆசைப்படறாளோ அந்த படிப்பை நாங்க படிக்க வைக்கறோம்” அவள் சொல்ல, சுமித்ராவின் கரத்தைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டார்.
“பாட்டி, நான் கேட்கறேனேன்னு என்னை தப்பா நினைக்காதீங்க” என்றவள் தன்னவனை ஒரு பார்வை பார்த்தாள். ‘கேள்…’ என்பதுபோல் அவன் தலையசைக்க, அவரிடம் திரும்பினாள்.
“நீ என் குல சாமி தாயி… என்ன கேட்கணுமோ கேளு…” பாட்டியும் சொல்ல,
“அது நீங்க… இவங்க ஃப்ரண்டு ஒருத்தங்க வீட்டில் சமையலுக்கு தங்கி இருந்தே வேலை செய்ய ஆள் வேணுமாம்? உங்களுக்கு விருப்பம்ன்னா நீங்க அங்கே போறீங்களா? உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் வேண்டாம்…” அவள் சொல்ல, அவர் கண்களில் கண்ணீர்.
“ஒரு ஊருக்கே கூட நிமிஷத்தில் சமைச்சுப் போடுவேன் தாயி. எனக்கும் அலைச்சல் இல்லாத வேலைன்னா கசக்குதா? நான் செய்யறேன்… கடவுள் மாதிரி வந்து எனக்கு உதவி செய்யறம்மா” என்றவர், “புவனா… அக்காதான் நமக்கு சாமி… கும்பிட்டுக்க” அவர் உணர்ச்சிவசப்பட, புவனா சுமித்ராவின் காலில் விழவே போய்விட்டாள்.
அவளை வேகமாக தடுத்தவள், “புவி… என்ன இது? நீ நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும். உன் படிப்புதான் உன்னைக் காப்பாற்றும், அதை மட்டும் புரிஞ்சுக்கோ” அதை அவள் வேத வாக்காகக் கொண்டாள்.
புவனாவுக்கு வேண்டிய அனைத்தையும், உடைகள், பள்ளிக்கூட பேக் முதல், செருப்பு வரைக்கும் அனைத்தையும் அன்றைக்கே வாங்கிக் கொடுத்தாள். பாட்டிக்கு வேண்டியதையும் அவள் செய்து கொடுக்க, அவள் அவர்களுக்கென ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்ய, அவளை அத்தனையாக ரசித்தான்.
அவர்கள் அங்கிருந்து விடைபெற்று காரில் ஏற, மின்னல் வேகத்தில் அவளை அருகே இழுத்தவன், அவள் இதழ்களில் அதே வேகத்தில் இதழ் ஒற்றிப் பிரிந்தான். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் அது நடந்து முடிய, ‘இப்பொழுது இங்கே என்ன நடந்து?’ என ஒரு மாதிரி உறைந்து போய் அமர்ந்துவிட்டாள்.
அவள் நிலையைப் பார்த்தவன் சின்ன சிரிப்போடு காரை கிளப்பிச் செல்ல, இருவரின் மனதிலும் உற்சாகம் நிரம்பி வழிந்தது.