Home Anti Heroineஅகானா – 84

அகானா – 84

by Vathani S

அகானா – 84 

ரவியின் வருத்தம், ஆதங்கம் எல்லாமே சில நொடிதான். நொடிக்குள் தன்னை சமன்செய்து கொண்டவர், இருவரையும் வலித்த புன்னகையுடன் பார்த்தார்.

ரவியின் நிலை அவர்களுக்கும் வருத்தமே.! ஆனால் இப்போது யாராலும், எதுவும் செய்யமுடியாதே! ரவி இதிலிருந்து முற்றிலும் விலகுவதே அனைவருக்கும் நல்லது என்று உணர்ந்துதானே இந்த பேச்சை ஆரம்பித்ததே!

“நான் என்ன செய்யனும் மாமா? இங்க இருந்து கிளம்பனுமா? இல்ல மொத்தமாவே போகனுமா?” என்றார் வருத்தமாக.

“இல்ல.. அதெல்லாம் இல்ல மச்சான்… நீங்க மஞ்சரிகிட்ட கொஞ்சம் கோபமாவோ, இல்ல வேறமாதிரியோ பேசினா..” என இழுக்க,

“வேற மாதிரின்னா எப்படி மாமா?” என்ற ரவியின் குரலில் இப்போது இறுக்கம் வந்திருந்தது.

“அது தப்பா எல்லாம் இல்ல மாப்பிள்ளை.. ஆனா நீங்க கொஞ்சம் கடுமையா பேசினா, மஞ்சரி உங்க மேல இருக்குற கோபத்துல..” என தான் சொல்ல வந்ததை சொல்லாமல் தயங்க,

சங்கர் என்ன சொல்ல வருகிறார் என ரவிக்கு உடனே புரிந்து விட்டது. அவர் கூறியதையும், கூறாமல் விட்டதையும் நினைத்ததும், ரவிக்கு அடக்கமாட்டாமல் சிரிப்புதான் வந்தது. 

இவர்கள் எல்லாம் மஞ்சரியைப் பற்றி என்னவாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற  எண்ணம் தான் அந்த சிரிப்பிற்கு காரணம். 

ரவியின் சிரிப்பைப் பார்த்ததுமே சங்கருக்கும், வினோத்திற்கும் ஒன்றுமே புரியவில்லை. 

இருவரும் ரவியை கேள்வியாகப் பார்க்க, “மாமா.. நீங்க எல்லாம் மஞ்சரியைப்பத்தி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நான் அசிங்கமா பேசினாலோ, இல்ல அவமானப்படுத்தினாலோ, என் மேல இருக்கிற கோபத்துல சுபாஷை கல்யாணம் செஞ்சிப்பான்னா? அப்படியெல்லாம் நீங்க யோசிச்சிருந்தா, அது இருக்கிறதுலயே மிக மோசமான முட்டாள்தனம்..” என்றார்.

அப்போதும் அவர்கள் யோசனையாகவேப் பார்க்க, “மாமா நீங்க எப்படி இதெல்லாத்தையும் மறந்தீங்க? அம்மா, ரஞ்சனி, ஏன் மைதிலி கூட மஞ்சரியை எல்லை மீறி அசிங்கப்படுத்தி இருக்காங்க. அவமானப்படுத்திருக்காங்க. நீங்க சொல்றதை வச்சு பார்க்கும் போது மஞ்சரி அப்பவே என் மேல கோபப்பட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிருக்கனும் இல்லையா.? ஆனா பண்ணல, ஏன்? அவங்களோட உறுதியை இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களால தகர்க்க முடியாது. அதனால இப்படி யோசிக்கிறதை இதோட நிறுத்துங்க. மஞ்சரிகிட்ட வேறமாதிரி தான் பேசனும். ஆனா பேசனும். நான் பேசுறேன்..” என்றதும் தான் சங்கருக்கு மூச்சே வந்தது.

“நீங்க சொல்றதும் சரிதான் மாப்பிள்ளை..” என்ற சங்கருக்கு, ரவி சொல்வதில் இருந்த உண்மையும் புரிந்தது. மஞ்சரி இந்த வாழ்க்கையில் எத்தனையோ அசிங்கங்களை, அவமானங்களை பார்த்துவிட்டார். அப்போதெல்லாம் உறுதியா இருந்துவிட்டு, இப்போது போய் எப்படி திருமணம் செய்வார், என யோசித்தபடியே அமைதியாகிவிட்டார்.

வந்ததில் இருந்தே தேவைக்கு மட்டுமே வினோத் பேசுவதை கவனித்த ரவி, “என்ன வினோ?” என கேட்க,

“ஒன்னும் இல்லண்ணா..” என்று மறுக்க,

“என்ன வினோ? உனக்கும் நித்யாவுக்கும் எதுவும் பிரச்சினையா?” என்று  மீண்டும் அழுத்திக் கேட்க,

“அவளுக்கென்ன? அவளுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு, எதையாவது உளறிட்டே இருப்பா.” என எரிச்சலாக சொல்ல, இப்போது சங்கரும் வினோத்தை பார்த்தார்.

இருவரின் பார்வையும் கேள்வியாக வினோத்தின் மேல் விழ,

“நீங்க மைதிலி அண்ணியை டிவோர்ஸ் பண்ணிட்டு, மஞ்சரி அண்ணியை கல்யாணம் செய்யனுமாம். அதுதான் மஞ்சரி அண்ணிக்கு செய்ற பரிகாரமாம்.. அந்த சுபாஷ் பேச்சை ஆரம்பிச்சதுல இருந்தே, இப்படித்தான் பைத்தியம் போல உளறிட்டு இருக்கா..” என்றார் கோபமாக.

“இதுக்கு ஏன் நீ டென்சன் ஆகற, அதெல்லாம் சொன்னா புரிஞ்சிக்கிற பொண்ணுதான் நித்யா. நான் பேசுறேன். நித்யா மேல இருந்த கேஸ், ஹாஸ்பிடல் கேஸ் எல்லாத்தையும் அம்மு க்ளோஸ் பண்ணிட்டா போல.. ட்ரான்ஸ்ஃபருக்கும் கேட்டுருக்காளாம்.” என்றார் ரவி.

மற்றவர்களுக்கும் அது தெரியும் என்பதால் அமைதியாக இருக்க, “நானும் மைதிலியும் கனடா போலாம்னு இருக்கோம் வினோ. இங்க இருந்தா தேவையில்லாத பிரச்சினைகள் அதிகமாகும். அம்முவால ஆகன் கூட நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ முடியாது. மைதிலியும் அம்முவை பார்க்கும் போதெல்லாம் எதாவது பேசி, காயப்படுத்துவா.. இதெல்லாம் நடக்க வேண்டாம்னு யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன்..” என்றதும் மற்ற இருவருக்குமே இந்த செய்தி அதிர்ச்சியைக் கொடுத்தாலும், ஒரு வகையில் நிம்மதியையும் கொடுத்தது.

“என்ன ண்ணா திடீர்ணு? அம்முவை பார்த்துக்கனும் சொன்னீங்க, இப்போ இங்க இருந்து போறேன் சொல்றீங்க..” என தன் அதிர்ச்சியை மறைத்து வினோத் கேட்க,

“இதை ரொம்ப முன்னாடியே பண்ணிருக்கனும் வினோ, மைதிலி முன்னாடியே சொல்லிட்டு இருந்தா, நான்தான் அம்மா அப்பாவை விட்டுட்டு எப்படி போகன்னு யோசிச்சிட்டு இருந்தேன். ஒருவேளை அப்படி போயிருந்தா இந்த பிரச்சினை எல்லாம் இவ்ளோ வீரியமா போயிருக்காதோனு தோனுது..” என்றார் ரவி ஒரு பெருமூச்சோடு.

“எனக்கு அப்படி தோணல மச்சான். நம்மள பழிவாங்கவே இவ்ளோ வெறியோட படிச்சிருக்கா அம்மு, நீங்க எங்க இருந்தாலும், இங்க வர வச்சிருப்பானு தான் நினைக்கத் தோனுது. சரி போனது போகட்டும். இதைப்பத்தி அம்முக்கிட்ட பேசப் போறீங்களா?” என்றார் சங்கர்.

“இல்ல மாமா. ஆகன்கிட்ட தான் முதல்ல பேசனும். அவனை சமாளிச்சா போதும். அவன் அம்முவை சரி பண்ணிடுவான். யார் என்ன சொன்னாலும் என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல..” என்றார் ரவி உறுதியாக.

“எங்களுக்கு இதுல சுத்தமா விருப்பம் இல்ல ண்ணா.. ஆனா நாம மைதிலி அண்ணியோட மனநிலையையும் யோசிக்கனும். அவங்க இப்போ மொத்தமா பாதிக்கப்பட்ட நிலையில இருக்காங்க. அவங்களுக்குனு நம்மளைத் தவிர வேற யாரும் சொந்தம்னு சொல்லிக்க இல்ல. அவங்களை அப்படியே விட்டுட்டா, பணத்துக்காக அண்ணியை நாம பயன்படுத்திக்கிட்டோம்னு எல்லாரும் சொல்வாங்க. அதனால உங்க முடிவை நான் ஏத்துக்கிறேன்..” என்றார் வினோத்.

“வினோத் சொல்றதுல எனக்கும் உடன்பாடு இருக்கு மச்சான். மஞ்சரி விசயத்தை தாண்டி மைதிலி மேல எந்த குறையும், தப்பும் சொல்லிட முடியாது. உங்களுக்காகத்தான் இந்த அளவுக்கும் இறங்கி வந்துருக்கு. அப்போ அந்த பொண்ணையும் நாம நல்லாப் பார்த்துக்கனும். கொஞ்ச நாள் அப்படி இருந்து பாருங்க. ஒருவேளை மைதிலி மனசு மாறினா, நீங்க இங்க திரும்பி வந்துடுங்க..” என சங்கர் கூற,

“இல்ல மாமா.. இங்க திரும்பி வர ஐடியா எனக்கு இல்ல. எல்லாம் காலம்தான் முடிவு செய்யும் பார்ப்போம். மஞ்சரி சுபாஷ் கூட இங்க இருந்து போனா மட்டும் தான், மைதிலியை அம்மு வெளிய விடுவான்னு எனக்குத் தோனுது. அதுக்கு முதல்ல நான் மஞ்சரிக்கிட்ட பேசி, சம்மதிக்க வைக்கனும்.. பார்ப்போம்..” என தளர்வாக பேச, வினோத்திற்கு ரவியின் இந்த முடிவு மிகவும் வேதனையைக் கொடுத்தது.

அவருக்கும் இப்போது மைதிலியைப்பற்றியக் கவலைதான் அதிகமாகி இருந்தது.

சீக்கிரம் அகானாவின் பிடியிலிருந்து மைதிலியை மீட்க வேண்டும், ஆனால் அவளிடம் எப்படி பேசுவது என்றுதான் தெரியாமல் தவித்துப் போய்விட்டார்.

மயக்கத்தில் இருந்து விழித்த மஞ்சரியின் பார்வையில் விழுந்தது, தவிப்புடன் அமர்ந்திருந்த சுபாஷ் தான்.

சுபாஷைப் பார்த்ததும், மஞ்சரி விழிகளை வேறுபக்கம் திருப்ப, “எதுக்கு உங்களுக்கு இவ்ளோ பயம் மஞ்சரி? நான் அப்படி என்ன பண்ணிட போறேன் உங்களை?” என சுபாஷ் வருத்தமாக கேட்க, மஞ்சரியால் பதிலே சொல்ல முடியவில்லை.

நான் என்ன சொல்ல வரேன்னு முழுசா கேட்காம எதுக்கு நீங்களும் பயந்து, எல்லாரையும் பயமுறுத்துறீங்க?” என்றார் மீண்டும்.

“எனக்கு உங்க உணர்வுகள் புரியாம இல்ல மஞ்சரி. ஆனா நீங்க புரிஞ்சிக்க மறுக்கிறது அகானாவோட உணர்வுகளை. அவ எந்தளவுக்கு மனதளவுல பாதிக்கப்ப்ட்டிருக்கானு இன்னும் நீங்க உணரவே இல்ல. நீங்க இப்படி இருக்க, இருக்க அவ தன்னோட வாழ்க்கையை கொஞ்சம் கொஞ்சமா அழிச்சிப்பா, இதுல ஆகனோட லைஃபும் சம்மந்தப்பட்டிருக்கு. அவன் வாழ்க்கை என்னாகும்.? அதைகூட விடுங்க, அகானா இப்படி இருக்கிறதைப் பார்த்து ஆரி எப்படி மகிழினி கூட நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழுவான், அப்போ அவனோட வாழ்க்கை என்னாகும்..” என கேட்க மஞ்சரிக்கு தலையில் யாரோ பெரும் பாராங்கல்லைத் தூக்கி வைத்தது போல் ஒரு வலி.

“இப்போ நான் என்ன செய்யனும்னு சொல்றீங்க சுபாஷ்? உங்களை கல்யாணம் செஞ்சிக்கனுமா?” என ஆத்திரமாக வெடிக்க,

“கண்டிப்பா இல்ல.. நான் அப்படி கேட்கவே இல்ல. அதைப்பத்தி பேசவும் இங்க வரல். இப்போதைக்கு அகானாவுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடுங்கன்னு சொல்ல வரேன். நீங்க அவளை விட்டு கொஞ்சம் தள்ளி இருங்கன்னு சொல்றேன். அவளை அவளோட வாழ்க்கையை யோசிக்க விடுங்கன்னு சொல்றேன். அப்போதான் அவ, ஆகனுக்கு சேர்த்து யோசிப்பா.. அந்த லைஃபை ஸ்மூத்தா லீட் பண்ணுவா..” என்றார் சுபாஷ் அழுத்தம் திருத்தமாக.

“ஆனா.. ஆனா அது எப்படி முடியும்?” என மஞ்சரி திணற,

“நாம ஒன்னும் டீனேஜ் பசங்க இல்ல மஞ்சரி.” என்றார் சுபாஷ் அழுத்தம் திருத்தமாக.

“ஆனா கல்யாணம்..” என மஞ்சரி தவிக்க

“முதல்ல இந்த கல்யாண கான்செப்ட மறந்துடுங்க.. அகானாவை சமாளிக்க வேண்டியது என் பொறுப்பு. நமக்கு இப்போ அம்முதான் முக்கியம். அதனால் இப்போ நீங்க என் கூட சிங்கப்பூர் கிளம்புங்க. ஒரு நண்பனா என் மேல நம்பிக்கை இருந்தா, உங்க முடிவு சரியா இருக்கும்னு நினைக்கிறேன். நமக்கு இன்னும் டைம் இருக்கு.. நீங்க யோசிச்சு அண்ணிக்கிட்ட சொல்லுங்க. நான் அகானாக்கிட்டயும், அவளோட வீட்டுக்காரர்கிட்டயும் பேசுறேன்… உங்க ஒருத்தரோட முடிவு எத்தனை பேரோட லைஃபை ஈசியாக்கும்னு உங்களுக்கு அப்போ புரியும்” என்று முடித்துவிட, மஞ்சரிக்கு ‘கல்யாணம் வேண்டாம்’ என்ற வார்த்தையே இப்போதைக்கு போதுமானதாக இருக்க, நிம்மதியாக மூச்சுவிட்டுக் கொண்டார்.

மஞ்சரியையேப் பார்த்துக் கொண்டிருந்த சுபாஷிற்கு, மஞ்சரியின் நிராகரிப்பு வலியைக் கொடுத்தாலும், காலப்போக்கில் சரி செய்துவிடலாம் என்று நினைத்து தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றார்.  

இங்கு “மேடம் உங்களுக்கு சாப்பாடு..” என ஒருவர் கொண்டு வந்து வைக்க, வைத்த வேகத்தில் அந்த தட்டு மூலைக்கு பறந்திருந்தது.

“உனக்கு ஒருதடவை சொன்னா புரியாது.. முதல்ல இது எந்த இடம், எங்க இருக்குன்னு சொல்லு. அப்போதான் நான் சாப்பிடுவேன். இல்ல ஒரு வாய் தண்ணி கூட குடிக்கமாட்டேன்..” என அந்தாளிடம் மைதிலி கத்திக் கொண்டிருக்க, அந்த அறைக்குள் வந்து கொண்டிருந்தான் ஆகன்.

அவனைப் பார்த்ததும் மைதிலி அதிர்ச்சியெல்லாம் இல்லை. ஒரு இகழ்ச்சியான புன்னகையுடன் ஆகனைப் பார்க்க, அவனோ “எப்படி இருக்கீங்க அததை..?” என சாவகாசமாக அவருக்கு எதிரில் அமர,

“ஓ.. உன் பொண்டாட்டி பொழச்சிட்டா போல..” என்று கூறி அந்த அறையே அதிரும் அளவிற்கு சிரிக்க, அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன்.

You may also like

1 comment

M. Sarathi Rio May 14, 2026 - 6:04 pm

இவ திருந்தவே மாட்டா போலயிருக்கே..?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured