Home Love - Family - Romanceஓடங்கள் – 13

13

ஆண்டுகள் எல்லாம் கடந்து விட்டது

அன்பெல்லாம் கறைந்து விட்டது

ஆனாலும் அடிக்கடி அந்த

நாள்கள் எல்லாம் அழகாய் தந்து

போகிறது உன் நினைவுகள்!

செல்வம் போட்ட சத்தத்தில் மூவரும் அதிர்ந்து அவர் அறைப் பக்கம் பார்க்க, அவர் முகம் முழுவதும் கோபம், ஆத்திரம், இயலாமை என ஒவ்வொரு உணர்வுகளும் பிரதிபலிக்க, கதவோரத்தைப் பிடித்தபடி நின்றிருந்தார்.

இப்போது ரெஜியின் அழுகை மேலும் அதிகமானது. அவர் அழுதுகொண்டே இருக்க, சாரு எழுந்து போய் செல்வத்தை அழைத்து வந்து விஸ்வத்தின் அருகே அமர வைத்தாள். “மாமா இப்போ எதுக்கு கோபப்படுறீங்க? டாக்டர் சொன்னது ஞாபகம் இல்லையா? டென்ஷன் ஆகக்கூடாது சொல்லிருக்காங்க தானே… மறுபடியும் பிபி அதிகமாகி ஹாஸ்பிடல் போகணுமா? உங்களைப் பத்தி எனக்கு எதுவும் தெரியக் கூடாதுனு நீங்க நினைச்சா, நான் வேணும்னா உள்ளே போயிடுறேன். பட், நீங்க ரெண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எந்த முடிவு எடுத்தாலும், அது நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்குற முடிவாதான் இருக்கணும்.” என அவள் உறுதியாகச் சொல்ல,

தான் பார்த்து வளர்த்த சிறுபெண் அல்ல தன் மருமகள். அவளும் வளர்ந்துவிட்டாள் என்று செல்வம் முழுமையாக உணர்ந்த தருணம் அதுதான். அதோடு இந்த ஒரு வாரத்தில் ஜெனியைப் பக்கத்தில் இருந்து பார்க்கிறார் தானே? அவர் முகத்தில் இருந்த ஏக்கம், வேதனை, உரிமையாய் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாத கோபம், அதை வெளிக்காட்ட முடியாத இயலாமை என, அவர் தத்தளித்ததை கண் கொண்டு பார்த்தார் தானே… அதனால் ஏற்கனவே செல்வமும் ஒரு முடிவோடு தான் இருந்தார்.

விஸ்வத்திடம் சொன்னால் உடனே சரியென்பார். அதோடு ஊரையே ஒரு வழி செய்து திருமணத்தை முடித்து விடுவார். ஆனால் இந்த ஊர், இங்கிருக்கும் மக்கள் என்ன சொல்வார்கள்? வயசு போன காலத்தில் இதென்ன கூத்து என்று, வாய்க்கு வந்ததைப் பேசுவார்கள். வீட்டில் வயதுப் பெண்ணை வைத்துக் கொண்டு இப்படியொரு செயலை எப்படி செய்வது? மனம் பல யோசனைகளை ஓட்டிக் கொண்டிருந்தது.

அவரின் அமைதி ஒரு பக்கம், ரெஜியின் அழுகை ஒரு பக்கம், சாருவின் கோபம் ஒரு பக்கம் என, அமர்ந்திருந்த மூவரையும் பார்த்த பெரியவர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார். அவருக்கு செல்வத்தின் தயக்கம் புரிந்திருந்தது.

அதனால் அவரிடம், “செல்வம் உன்னோட தயக்கம் எனக்கு புரியுது. நீ சாருவை நினைச்சு கவலைப்படாத. அவ இப்போ இருக்குறது சென்னையில. இன்னும் ஒரு வருஷம் இருக்கு படிப்பு முடிய, அடுத்து அவ வேலைக்கு போகணும். தனியா ஒரு க்ளினிக் போடணும். மேல படிக்கணும்னு நினைச்சா படிக்கட்டும், அதை நாம தடுக்க வேண்டாம். அவளுக்கு எப்போ கல்யாணம் செஞ்சிக்கலாம்னு தோனுதோ அப்போ வந்து சொல்லட்டும், நாம செஞ்சு வைக்கலாம்.

ஆனா அதுக்கும் உன்னோட வாழ்க்கைக்கும் முடிச்சு போட்டுக்காத. நல்லா யோசிச்சு பாரு, இப்பவே எனக்கு வயசாகிடுச்சு. எனக்கு அப்புறம் அவளைப் பார்த்துக்க யாரு இருக்கா, உன்னைத் தவிர? உனக்கும் ஏதோ ஆகிட்டா அவ என்ன செய்வா? யோசிச்சு பாரு, ஒரு கல்யாணம் செய்துகிட்டா நீங்க ரெண்டு பேரும் அவளை நல்லா பார்த்துக்கலாம். அவளுக்கும் சரி, ரெஜிக்கும் சரி இந்த முடிவு தான் சரியா இருக்கும். சாருவுக்கு கல்யாணம் பேசும் போது நீங்க ரெண்டு பேரும் நின்னு பேசினா, எப்படி இருக்கும்னு யோசிச்சு பாரு. இதுக்கு மேல நீங்கதான் முடிவு செய்யணும். பேசி ஒரு முடிவுக்கு வாங்க.” என்றவர் சாருவைப் பார்த்து,

“சாரும்மா, வர்றியா, அப்படியே சிவன் கோவில் வரைக்கும் போயிட்டு வரலாம்?” என பெரியவர் எழ, சின்னவளும் மறுத்துப் பேசாமல் கிளம்பி விட்டாள். வீட்டில் இருந்த இருவரிடமும் அமைதிதான். யார் முதலில் பேசுவது என்ற தயக்கம் வேறு.

தயக்கத்தை உடைத்து முதலில் பேசியது ரெஜினா தான், “அத்தான் நான்தான் இங்க வரலனு சொன்னேன்ல, எங்கையோ கண் காணாத இடத்துல, யாருக்கும் தெரியாம இருந்துருப்பேன்ல?” என தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியவரின், அழுகை மட்டும் குறையவே இல்லை.

“ம்ச்… ரெஜி முடிஞ்சதைப் பத்தி பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. இனி நடக்கப் போறதை பத்தி மட்டும் பேசலாம். நானும் உன்னை மாதிரி ஒரு கஸ்டத்துல இருந்து, நீ என்னைப் பார்த்திருந்தா அப்படியே விட்டுட்டு வந்துருப்பியா, முடியுமா உன்னால?” என்று கேட்டவருக்கு, ‘முடியாது, இல்லை’யெனும் விதமாக வேகமாகத் தன் தலையை ஆட்டினார் ரெஜினா.

“அப்போ நான் மட்டும் அப்படி இருக்கணும்னு எதிர்பார்க்காத. நான் ஒரு முடிவு எடுத்துட்டேன், நம்ம வாழ்க்கை இப்படி ஆனதுக்கு நாம ரெண்டு பேரும் தான் காரணம். உன்னை குறை சொல்லி நானோ, என்னை குறை சொல்லி நீயோ இருக்குறதுல, ஒரு பிரயோஜனமும் இல்லை. மாமா சொன்னது தான் சரி.

ரெஜி நாம வெட்டிங் செய்துக்கலாம், இதுதான் என்னோட முடிவு. நம்ம கடைசி காலத்துல உனக்கு நானும், எனக்கு நீயும் துணையா கண்டிப்பா வேணும் ரெஜி. இந்த ஒரு வாரமா உரிமையா எனக்கு நீ எதுவும் செய்ய முடியாம தவிச்சதைப் பார்த்து, உன்னைவிட நான் அதிகமா தவிச்சேன். இந்த தவிப்பு இல்லாம போறது உன் கைலதான் இருக்கு.” என முடிவெடுக்கும் பொறுப்பை அவளிடம் தள்ளிவிட,

“அத்தான்!” என்ற கேவலோடு அவர் கையைப் பிடிக்க, “நடந்த எதையும் மாத்த நம்மாள முடியாது. இனி தப்பா எதுவும் நடக்காம பார்த்துக்கலாம். உங்க வீட்ல என்ன சொல்வாங்க என்ற கவலையே வேண்டாம். யார் என்ன சொன்னாலும் இது நடக்கும். நீயே மறுத்தாலும்…” என்றவர், அவர் கையை எடுத்து தன் நெஞ்சோடு வைத்துக் கொள்ள, ரெஜியும் அவர் தோளில் வாகாக பொருந்தி கொள்ள, எண்ணங்கள் அவர்கள் வாழ்க்கையைப் புரட்டி போட்ட நாட்களை நோக்கி நகர்ந்தது.

கோவிலுக்கு வந்த தாத்தாவும் பேத்தியும் தரிசனம் முடிந்து வெளியே வந்து பிரகாரத்தின் ஒரு ஓரத்தில் அமர்ந்தனர். பெரியவரின் முகத்தில் இருந்த சிந்தனையில், “என்ன தாத்தா?” என்ற கேள்வியைக் கேட்டாள் சாரு.

“ஒன்னுமில்லடா, ரெஜி வீட்டுல என்ன சொல்லுவாங்கனு யோசிச்சிட்டு இருக்கேன்.” என்றதும், “ஏன் தாத்தா, ஆன்ட்டி தனியா இருக்கேன்னு தானே சொன்னாங்க.” என்றாள் யோசனையோடு.

“ம்ம்… இல்லடா, எல்லோரும் இருக்காங்க. ஆல்மோஸ்ட் அவங்க ஃபேமிலில எல்லாருமே செட்டில்ட் தான் இவளைத் தவிர. அவங்களோட ஏதோ மனஸ்தாபம், அதுதான் தனியா இருக்கா.” என்றார் பெரியவர்.

“என்ன தாத்தா சொல்றீங்க, எல்லாரும் செட்டில்ட்னா? எனக்குப் புரியல.” என்றாள் அவளும் யோசனையோடு.

“ம்ம்… உனக்கு முழுசா சொன்னா தான் எல்லாமே புரியும்.” என்றவர், “ரெஜி ரொம்ப நாளா உங்க மாமாவை விரும்பிருக்கா. உன் அம்மாவுக்கு கூட தெரியல, உன் மாமா தெரிய விடல. ரெஜியும் இவன்கிட்ட நிறைய முறை கேட்டுப் பார்த்துருக்கா. இவன் முடியவே முடியாதுனு சொல்லிருக்கான். உடனே அந்த பொண்ணு விஷத்தை குடிச்சிட்டா. வீட்டுல தெரிஞ்சு நிறைய பிரச்சனை அதனால. அவளைப் போட்டு அடிச்சிருக்காங்க. படிப்பும் பாதியிலேயே நின்னுடுச்சு. கொஞ்ச நாள் உங்க மாமா கண்ணுலயே ரெஜி படலன்னதும் தான் இவனுக்கு விசயமே தெரிஞ்சிருக்கு. என்ன, ஏதுனு விசாரிச்சப்ப தான், அவ மருந்தை குடிச்சது, செல்வத்தை விரும்பினது எல்லாமே தெரிஞ்சிருக்கு.

அதுக்குப் பிறகு அந்தப் புள்ளைக்கு நரக வாழ்க்கை தான். அவளை அடிச்சி வீட்டுக்குள்ளயே வச்சிருக்காங்கனு தெரிய வந்துருக்கு. இனியும் சும்மா இருக்கக் கூடாதுனு உன் மாமா, ரெஜியோட அப்பாக்கிட்ட போய் பேச, அவரோ வேற இடத்துல பேசி முடிச்சிட்டோம். கல்யாணம் முடிஞ்சதும் உடனே துபாய் அனுப்பிடுறோம். இதைப்பத்தி இனி பேசிட்டு வரவேண்டாம். உங்களுக்கு அவ மேல விருப்பம் இல்லனு எங்களுக்குத் தெரியும். தப்பு எங்க புள்ள மேல தான், அதுக்கு எங்களை மன்னிச்சிடுங்க. இனி அவ எந்த தொந்தரவும் தராம நாங்க பார்த்துக்குறோம்னு, வேற பேச விடாம அனுப்பியிருக்காங்க.

செல்வத்துக்கு மனசுல ஆசை இருந்தும், உன் அம்மாவுக்காக வெளியே சொல்லாம இருந்துருக்கான். ரெஜிக்கும் காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சி அனுப்பிட்டாங்க ரெண்டாம் தாரமா… அதுவும் ஒரு வயசானவருக்கு… ப்ச்!

அவரும் ரொம்ப நாள் எல்லாம் அவ கூட வாழல. இங்க இருந்து போன மூணு வருஷத்துலயே அவர் இறந்துட்டார் போல. ஆனா இங்க ஊர்ல யாருக்கும் சொல்லல. ரெஜியும் ஊர்பக்கமே வரல. இவனும் அந்தப் பொண்ணை மனசுல வச்சிட்டு, கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டான். நாங்க எவ்வளவோ கேட்டும் காரணமே சொல்லல. கொஞ்ச நாள் முன்னாடி இவன் ஒரு வேலையா துபாய் போயிருக்கான். அப்போதான் ரெஜியைப் பார்த்திருக்கான், எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டான்.

அவர் இறந்ததும், ரெஜியை அவங்க வீட்டை விட்டு அனுப்பிட்டாங்களாம் அவரோட பசங்க. இங்க உள்ளவங்களும் இங்க வரவேண்டாம், எங்க கௌரவம் போயிடும்னு துபாய்லயே ஒரு வேலையை பார்த்துட்டு இருக்கச் சொல்லிருக்காங்க. புள்ளைக்கு மனசே விட்டுடுச்சு. இங்க வர்றேன்னு வாயைத் திறந்து கேட்கவே இல்லையாம். இறந்து போன அந்த மனுஷன் செஞ்ச ஒரே நல்ல விஷயம், அவளை மேல படிக்க வச்சது தான். அவருக்கும் சின்ன பொண்ணை கல்யாணம் பண்ணிட்டோமேனு குற்ற உணர்ச்சி. அதனால அவளைப் படிக்க வச்சிருக்கார்.

அந்த படிப்புதான் அவளை இப்போ வாழ வைக்குது. செல்வம் பார்த்ததும் ஒரு ஹாஸ்பிடல்ல தான். எல்லாமே விசாரிச்சு அவ கூட சண்டை போட்டு, இங்க அவ வீட்லயும் சத்தம் போட்டு, அவங்க வேணாம், வேணாம் சொல்லியும் கேட்காம ஊருக்கு வர வச்சுட்டான். ஆனா அவ அப்பன், வீட்டுல சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டான். அதனால திருநெல்வேலில இருக்குற நம்ம ப்ளாட் ஒன்னுல தங்க வச்சிட்டு, இங்க ஹாஸ்பிடல்ல சேர்த்து விட்ருக்கான்.

அவளுக்கு ஒரு மாற்றமா இருக்குமில்ல. எனக்கும் ரெண்டு வாரத்துக்கு முன்னாடிதான் சொன்னான். இது சரியில்ல, ஏதாவது செய்யலாம்னு நான் யோசிச்சிட்டு இருக்கும் போது தான் இப்படி ஆகிடுச்சு. இனி யோசிக்க எல்லாம் வேண்டாம். முடிவே பண்ணிட்டேன், நாம சென்னைக்கு போகும் போது இவங்க கல்யாணம் முடிச்சு, அவங்களையும் அழைச்சிட்டு தான் போறோம்.” என பெரியவர் தன் நீண்ட பேச்சை முடிக்க,

“கண்டிப்பா தாத்தா! அவங்க மேரேஜ் முடிஞ்சு, நம்ம கூட கொஞ்ச நாள் இருக்கட்டும். இங்க என்ன பண்றதுனு யோசிங்க.” என குஷியாகிவிட்டாள் சாரு.

அடுத்து அவர்கள் நினைத்தது போலவே தான் அனைத்தும் நடந்தது. எதிர்பார்த்ததைப் போல எதிர்ப்புகள் பெரிதாக இல்லை. ஆனால் ரெஜியின் அம்மாவைத் தவிர, யாரும் திருமணத்திற்கு வரவில்லை. அதைப்பற்றி யாரும் வருத்தப்படவில்லை.

ரெஜியின் அம்மாதான் அவரைக் கட்டிபிடித்து, “உனக்கு நாங்க செஞ்சது எவ்ளோ பெரிய பாவம்னு, இன்னும் உன் அப்பாவுக்கு தெரியல. இன்னும் எத்தனை வருசத்துக்கு இருக்கப் போறோம். போகும் போது இந்த கௌரவத்தையும் பணத்தையும், கொண்டு போகப் போறது இல்லனு அவருக்கு தெரியல.

அதையெல்லாம் நினைச்சு இனியும் உன் வாழ்க்கையை பாழாக்கிடக் கூடாது. உன் காயம் பெருசுதான். அதை இல்லன்னு சொல்ல முடியாது. உன் காயத்தை ஆத்தக் கூடிய மருந்து தம்பி தான். தம்பி மனசுலயும் குணத்துலயும் தங்கம். அவருக்காகவாது பழசையெல்லாம் மறந்து, உன் மனசை மாத்தி, அவர் கூட வாழ முயற்சி செய்.” என்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். ரெஜியும் இந்த நான்கு நாட்களாக இதைப் பற்றி யோசித்துக் கொண்டுதான் இருந்தார்.

செல்வத்திற்கு வயதும் ஐம்பதைத் தொட இருந்தது. அவருக்கு வந்திருந்ததும் மைல்ட் அட்டாக் தான். அதனால் அவரை குணப்படுத்தி விட முடியும் என்று மருத்துவர்கள் உறுதியாக சொல்லி விட்டனர். ஆனால் குழந்தை, அதற்கு வாய்ப்பே இல்லை.

சாரு மட்டுமே குழந்தை. தங்களுக்கென ஒரு குழந்தை, அதற்கு தான் வாய்ப்பே இல்லையே… துபாயில் இருக்கும் பொழுது, தாள முடியாத வயிற்றுவலி என மருத்துவமனை செல்ல, கருப்பைக்குள் கட்டி வளர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில், எப்போது வேண்டுமானலும் வெடித்து விடலாம் என்று மருத்துவர்கள் கூறி, உடனடியாக கருப்பையை நீக்க வேண்டும் என்றுவிட, உடன் பணிபுரிந்த ஒரு தோழியின் துணையோடு தன் கன்னித் தன்மையை இழக்காமல், ஒரு குழந்தையையும் சுமக்காமல் தன் கருப்பையை எடுத்துவிட்டு, பத்து நாட்கள் மருத்துவ வாசத்தை முடித்திருந்தாள்.

திருமணம் என்ற பேச்சு வந்த பிறகே, இதையெல்லாம் செல்வத்திடம் இரண்டு நாட்கள் முன்புதான் சொல்லியிருந்தாள். அதைக் கேட்டு அவள் வலியை, தனதென எண்ணி துடித்திருந்தான் அந்தக் காதலன். ஒரு வழியாக அனைத்தும் முடிந்து வீடு வந்திருந்தனர் மணமக்கள்.

யாரும் தப்பாக பேசி விடுவார்களோ என்று எண்ணி ரெஜி பயந்ததைப் போல் எதுவுமே நடக்கவில்லை. அன்றே அந்த வீட்டின் அனைத்துப் பொறுப்புகளையும் தனதாக்கிக் கொண்டாள் ரெஜினா. பெண் என்பவள் பெரும் சக்தி. அவளால் ஒரு பொருளை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். இங்கு ரெஜியும் வேரறுந்து கிடந்த குடும்பத்தில், நீர் ஊற்றி வளர்த்து செழிக்க வைக்க ஆரம்பித்தாள். சாரு ஆன்ட்டி, ஆன்ட்டி என அவர் பின்னயே சுற்ற, அதைப் பார்க்கவே கவிதையாக இருந்தது.

அனைத்தும் அழகாகத்தான் போனது, பெங்களூரில் இருந்து புகழ் போன் செய்யும் வரை. அவனது போனிற்கு பிறகு, அவனிடம் பேசிய பிறகு, சாருவின் மனதில் குழப்பங்களும் சஞ்சலங்களும், மெல்ல மெல்ல குடியேறத் தொடங்கியிருந்தது.

***

You may also like

1 comment

M. Sarathi Rio May 26, 2026 - 3:29 pm

இந்த புகழ் வேற காதல்ன்னு சொல்லி குட்டைய குழப்பிட்டானோ…?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured