அகானா – 91
மதுரையில் மிகப் பிரபலமான வழக்கறிஞறின் முன்பாக அமர்ந்திருந்தனர் ரவியும் மைதிலியும்.
“உங்க முடிவுல எந்த மாற்றமும் இல்லையே மேடம்? நான் அடுத்தக்கட்ட வேலையை ப்ரொசீட் பண்ணிடட்ட்டுமா?” என்றார் அந்த லாயர், தன் கண்ணாடியைத் தூக்கிவிட்டபடி.
“ம்ம் எனக்கு ஓக்கே சார்.. கொஞ்சம் சீக்கிரமா மூவ் பண்ணி முடிச்சு கொடுத்தா எனக்குச் சந்தோசம். அடுத்து என் வேலையைப் பார்க்க வசதியா இருக்கும்..” என்றார் மைதிலி, ரவியின் பக்கம் திரும்பாமலே.
“சார் உங்க ஒபினீயனும் அதேதானே. மியூச்சுவல் கன்செர்னா போயிட்டாதான், மேடம் கேட்ட மாதிரி குவிக்கா முடிய வாய்ப்பிருக்கு.” என அந்த லாயர் இப்போது ரவியிடம் கேட்க, அவரோ அருகில் இருந்த மனைவியைத்தான் பார்த்தார்.
பிரச்சினை என்று வந்த பிறகு இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசவே இல்லை. அதற்கு மைதிலி இடமும் கொடுக்கவில்லை.
‘ஏனோ இந்த உறவைத் தொடர வேண்டாம்’ என இப்போதெல்லாம் தொடர்ந்து மூளை அறிவுறுத்திக்கொண்டே இருக்க, அதை அசட்டை செய்ய தோன்றாமல், அந்த முடிவை இறுக பற்றியிருக்கிறார் மைதிலி.
‘அடுத்து என்ன?’ என்ற கேள்விக்கும் தேவையான பதில்களை தேடித்தேடி வைத்திருக்கிறார். ஆனால் இன்னும் அதை யாரிடமும் பகிரவில்லை.
முதலில் விவாகரத்து கிடைக்கட்டும் என்ற முடிவில் இருக்கிறார்.
“சார்..” என மீண்டும் அந்த லாயர் அழைக்க,
“மைத்தி..” என அவர் மனைவியைத்தான் அழைத்தார்.
“ப்ளீஸ் ரவி… நான் கேட்கிறதை எனக்கு கொடுத்துடுங்க..” என்றார் கெஞ்சுதலாக, அதில் ரவிக்கு நெஞ்சே வெடித்துவிட்டது.
ஒரு பெருமூச்சை விட்டு தன்னை சமாளித்துக் கொண்டவர் “சரிமா.. இந்தே கேஸ் நடக்கட்டும். நான் உனக்கு டிவோர்ஸ் கொடுக்குறேன். ஆனா அதுக்குப் பிறகு? அதுக்குப் பிறகு நீ என்ன செய்யப்போற? அதை எனக்கு தெளிவுப்படுத்து. அந்த காரணம் சரியா இருந்தா மட்டும் தான் என்னால இதை ப்ரொசீட் பண்ண முடியும்..” என பதில் கூற, மைதிலிக்கு முகம் இயலாமையில் தவித்தது.
“நீங்க பயப்படுற மாதிரி, இந்த சொத்தையெல்லாம் திருப்பி கேட்டுடமாட்டேன்..” என் பட்டென சொல்ல,
“நீ கேட்டாலும் தப்பில்ல.. ஆனா உன்னோட சொத்து அது உனக்குத்தான். என்னோட சம்பாத்தியத்துல வாங்கினதும் உனக்குத்தான். இதை பிரிச்சு பேச வேண்டாம். நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு..” என சற்றே குரலை உயர்த்த, மைதிலியின் விழிகள் அதிர்வில் விரிந்துகொண்டது.
“டாக்டர் பொறுமையா எடுத்து சொல்லுங்க..” என லாயர் கூற,
“ம்ச்.. அதுக்கு வாய்ப்பு கொடுத்தா தானே சார், நான் தப்பு செஞ்சேன் தான், இல்லைன்னு நான் எப்பவும் சொன்னதில்ல. என்னோட தப்புக்கு தகுந்த தண்டனையை தான் அனுபவிச்சிட்டு இருக்கேன். நான் அவங்களை விட்டு வந்த பிறகு, சட்ட ரீதியா பிரிஞ்ச பிறகு, இவங்களை மேரேஜ் பண்ண பிறகு இவங்க வருத்தப்படுற மாதிரி, நான் ஏதாவது தப்பு செஞ்சிருக்கேனானு கேளுங்க..” என்றார் அதே குரலில்.
மைதிலியிடம் அமைதி மட்டுமே வெளிப்பட்டது.
“நான் செஞ்சது துரோகம் சார். அது இவங்களுக்கே தெரியும். அதுல பாதிக்கப்பட்டது என் பொண்ணு, அவளுக்கு வந்த கோபம் நியாயமானது தானே. அந்த கோபத்துல ஏதோ பண்ணிட்டா, ஆனா அதுக்கு பதிலுக்கு பதில் இவங்க செஞ்சது சரியா? அப்போ ஒரு கணவனா நான் எந்த கேள்வியும் கேட்கக்கூடாதா? என்னைப்பத்தி இவங்க மனசுல என்ன நினைச்சிட்டு இருக்காங்க? இன்னும் நான் மஞ்சரியோட கணவன் என்றா?” என சராமாரியாக கேட்க, மைதிலியின் முகத்தில் கோபம் வர ஆரம்பித்தது.
“இத்தனை வருசமா இவங்களுக்கு நான் உண்மையாதான் இருந்திருக்கேன். இல்லைன்னு இவங்களால கூட சொல்லமுடியாது.. அப்படி இருந்த என்னை முட்டாளாக்கினது இவங்கதான், தேவையில்லாம அகானாவை சீண்டி, மஞ்சரியை பழிவாங்கிறேன்னு கிளம்பி எல்லாம் தேவையே இல்லாத வேலை.” என்றார் கோபமாக.
“அப்போ உங்க பொண்ணு செஞ்சதை சரின்னு சொல்றீங்களா?” என மைதிலியும் கேட்க,
“அம்மு செஞ்சதை நான் சரின்னு சொல்லல மைத்தி, அதே சமயம் அது தப்பும் கிடையாது. அவ இடத்துல நீ என்ன பண்ணிருப்ப? இதைவிட மோசமா பழிவாங்கிருப்ப..” என்றார் கோபம் குறையாமல்.
“இதோ இதுதான், இதுதான்.. இப்படி நீங்க பொண்ணு பொண்ணுனு ஓடுறதும், பேசுறதும் தான் நான் இந்த முடிவெடுக்க காரணம்..” என மைதிலி படபடவென பேச, ரவியின் முகத்தில் ஆத்திரமும், கோபமும் சரிபாதியாக வந்து வந்து போனது.
“நீங்க இந்த கேசை ப்ரொசீட் பண்ணுங்க சார்.. க்விக்கா மூவ் பண்ணிடுங்க” என அந்த லாயரிடம் கூறிவிட்டு, சட்டென அங்கிருந்து வெளியில் வந்துவிட்டார் ரவி.
ரவியின் பேச்சும், செய்கையும் மைதிலிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.
அதிர்ந்து போய் அமர்ந்திருந்த மைதிலியைப் பார்த்த அந்த லாயர் “மேடம்..” என அழைத்து மைதிலியை சுயவுணர்வுக்கு கொண்டு வந்தார்.
“மேடம்… அவரோட பக்கம் இருந்தும் நீங்க யோசிக்கனும். ஐம் சாரி இதை நான் இப்போ சொல்லக்கூடது, பட்..” என்று நிறுத்தியவர் “உங்களுக்குனு ஒரு குழந்தை இருந்திருந்தா, ரவிக்கு அகானா மேல இருக்கிற பாசம் குறைஞ்சிருக்கலாம், ஆனா அதுக்கும் வாய்ப்பு குறைவுதான். நீங்க இதையும் யோசிக்கலாம். ஒருத்தரோட நிறை குறைகளோட ஏத்திக்கிறது தானே நேசம். உங்களோட குறைகளையோ, உங்க ஃபாஸ்டையோ நீங்க வருத்தப்படுற மாதிரி ரவி என்னைக்காவது பேசியிருக்காரா?” என்று நிறுத்த,
மைதிலியின் தலை ‘இல்லை’ எனும் விதமாக ஆடியது.
“அவர் உங்களை அப்படியே ஏத்துக்கும் போது உங்களால ஏன் முடியாம போச்சு. அப்போ எங்க இருந்து அவர் மேல லவ் இருக்குனு நீங்க சொல்றீங்க? அதுவே பொய்தானே..” என்றார் நிறுத்தி நிதானமாக.
“அவர் தான் எனக்கு எல்லாம்..” என மைதிலி திணற,
“கண்டிப்பா இல்ல மேம். அப்படி இருந்திருந்தா அவரோட தப்புகளை மன்னிக்க வைக்கும், மறக்க வைக்கும். இப்படி பழிவாங்கிற அளவுக்கு போகாது.”
“இல்ல..” என மைதிலி ஏதோ சொல்ல வர,
“சில உண்மைகளை வெளிப்படையா பேசிடலாம்னு நினைக்கிறேன்.” என்றவர் “உங்களுக்கு ரவி மேல ஒரு ஆர்வ இருந்திருக்கு, அவர் எப்படியும் உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணுவாருனு நீங்க அதிகமா எதிர்பார்த்திருக்கீங்க. ஆனா ரவி மஞ்சரியை விரும்பியிருக்கார், அதை ஒரு ஃப்ரண்டா உங்ககிட்டயும் ஷேர் பண்ணிருக்கார். ஆனா நீங்க அப்படியென்ன நான் அவளை விட குறைஞ்சிப்போயிட்டேனு யோசிச்சு இவ்ளோவும் பண்ணிட்டீங்க. இது ரவி மேல இருந்த காதல்ல பண்ணல, மஞ்சரி மேல இருந்த பொறாமையில பண்ணது..” என மைதிலியைப் பார்த்து நேருக்கு நேராக சொல்ல, மைதிலியால் அந்த லாயரை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
“நான்.. அந்த மாதிரி எல்லாம் யோசிக்கல..”
“ஆனா அதுதான் உண்மை. உங்க வாழ்க்கையை கெடுத்துக்கிட்டதும் இல்லாம, ரவியோட வாழ்க்கையையும் சேர்த்து கெடுத்துட்டீங்க. நீங்க அவரோட லைப்ல இன்வால்வ் ஆகலன்னா, கண்டிப்பா ரவி மனைவி குழந்தையைத் தேடி போயிருப்பார். இவ்ளோ பெரிய பாவத்துக்கு துணை போயிருக்கமாட்டார்..” என முகத்துக்கு நேரே குற்றம் சாட்ட, மைதிலிக்கு அவமானத்தில் முகமே கன்றிப் போனது.
“அடுத்தவங்களுக்கு நாம என்ன செய்றோமோ? அதுதான் நமக்கும் திருப்பி கிடைக்கும்.. இப்போ ரொம்ப குழப்பத்துல இருக்கீங்க. பொறுமையா யோசிச்சி, அடுத்து என்ன செய்றதுனு முடிவு எடுத்துட்டு எனக்கு சொல்லுங்க. அதுக்குப் பிறகு நாம ப்ரொசீட் பண்ணலாம். இப்போ கிளம்புங்க..” என்றார் லாயர்.
“இல்ல சார்.. என் முடிவுல…..” என மைதிலி ஆரம்பிக்கும் போதே,
“ப்ளீஸ் மேடம்.. நீங்க உங்க ஹஸ்பண்டோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுங்க. அவர் உங்களை யோசிச்சுதான் முடிவெடுத்திருக்கார். இதுக்கு மேல நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்க.. நான் சொல்றதை சொல்லிட்டேன். இனி நீங்கதான் முடிவெடுக்கனும்..” என அவரும் முடித்துவிட, அமைதியாக அங்கிருந்து கிளம்பினார் மைதிலி.
***
இங்கு கனலியின் அரசு அலுவலகத்தில் அமர்ந்திருந்தாள் அகானா. (முட்டக்கண்ணி முழியழகி கதையின் நாயகி) இப்போது தேனி மாவட்டத்தின்மகிளா விரைவு நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தாள் கனலி.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பிற்கான, சட்ட திருத்தங்கள் மற்றும் முன்னேற்பாடுகளுக்கான மீட்டிங்க் ஒன்று இருக்க, அந்த மாவட்டத்தின் ஆட்சியர் என்ற முறையில் அங்கு வந்திருந்தாள் அகானா.
அவளைப் பார்த்ததும் புன்னகைத்த கனலி, நடந்து கொண்டிருக்கும் கூட்டத்தில் தன் கவனத்தை பதித்தாள்.
அகானாவும் பதிலுக்கு ஒரு புன்னகையைக் கொடுத்துவிட்டு, அந்த மீட்டிங்கை கவனித்தாள்.
கவனித்தாள் என்று சொல்ல முடியாது. அங்கு உள்ளவர்களை தன் கேள்வியால் திணறடித்துக் கொண்டிருந்தாள்.
சமூக ஆர்வலர்கள் இருவருக்கும் அந்த மீட்டிங்க் அட்டென்ட் செய்ய அழைப்பு இருக்க, அவர்களும் வந்திருக்க, அகானாவின் முகத்தில் கிண்டல் புன்னகை.
அதைப் பார்த்ததுமே கண்ணனுக்கு பக்கென்றானது. இன்றைக்கு இவர்கள் இருவரையும் ஒருவழி செய்யப் போகிறாள் என்று புரிந்து போனது.
அதற்கு தகுந்தாற் போலவே, அவர்களின் நேரம் வர, அவர்களும் கேள்வி கேட்க, அதற்காகவே காத்திருந்ததைப் போல, இருவரையும் சற்றும் பாரபட்சம் பார்க்காமல் வைத்து வாங்கிவிட்டாள்.
எஸ்பியில் இருந்து ஏட்டு வரைக்கும் அகானாவை ஆவென்று பார்த்துக் கொண்டிருந்தாலும், உள்ளுக்குள் ‘இவனுங்களுக்கு நல்லா வேணும்’ என சபாஷ் போட்டுக்கொண்டனர்.
சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் உண்மையை கண்டறியாமல், எதையாவது எழுதுவது, அல்லது வீடியோ எடுத்துப் போட்டு மக்கள் மத்தியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று காண்பிப்பதும் தான் இவர்கள் வேலையே.
பலமுறை அவர்களை தனிப்பட்ட முறையில் எச்சரித்திருக்கிறாள், அதோடு மணல் கொள்ளை கேசில் தேவையில்லாமல் ஆகனையும் இதில் இழுத்து எழுதியிருக்க, பெண்ணிற்கு பொறுமையே போய்விட்டது.
இன்றைக்கு அவர்களாகவே வந்து சிக்க, மொத்தமாக முடித்துவிட்டாள்.
கூட்டம் முடிந்து இருவரும் அகானாவை முறைத்துவிட்டு போக, அவளோ உதயிடம் அவர்களை கண்காட்ட, புரிந்தது என்பது போல உதயும் அவர்களுக்கு பின்னால் நடக்க,
‘அய்யோ.. இது பொம்பளை எல்லாம் இல்லடா.. சரியான ரவுடி..’ என இருவரும் புலம்பிக்கொண்டே உதய் நெருங்கும் முன்னே ஓடிவிட்டனர்.
இங்கு அகானாவின் செயலை மெச்சியபடியே அமர்ந்திருந்தார் கனலி..
டீ-ஸ்னேக்ஸோடு அனைவரும் ஆங்காங்கே அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்க, கனலியிடம் வந்தாள் அகானா.
அவளைப் பார்த்ததுமே விரிந்த சிரிப்பு கனலியிடம். பல வருடங்களுக்கு முன் தன்னையே பார்த்தது போல் இருந்தது கனலிக்கு.
அன்றைக்கும் இதே மணற் கொள்ளைக்காகத்தானே முதல் முறையாக அவள் வழக்கறிஞர் ஆகவேண்டும் என்ற முடிவையே எடுத்தாள்.
நிலவனின் துணை இருக்க, அவளால் அனைத்திலும் சாதிக்க முடிந்தது.
சிறு புன்னகையுடன் தன்னெதிர நின்ற அகானாவிடம் “ஹேய் கேர்ள்.. நானே உன்னை பெர்சனலா பார்க்கணும்னு இருந்தேன். நாளைக்கு எங்க வீட்டுல ஒரு சின்ன ஃபங்க்ஷன் நீயும் உன் ஹஸ்பண்டும் கண்டிப்பா வரணும்..” என வரவேற்க,
அகானாவிற்கு என்ன பதில் சொல்ல என தெரியாமல் சிரித்து வைக்க, “நீங்க இந்த மாதிரி பார்டி எல்லாம் அட்டென் பண்ணதில்லனு தெரியும். பட் இது ஃபேமிலி ஃபங்க்ஷன் தான், கண்டிப்பா வரனும். அதுவும் ஃபேமிலியோட.. நான் வெய்ட் பண்ணுவேன்..” என மீண்டும் வற்புறுத்த, அகானாவும் வேறுவழியில்லாமல் தலையாட்ட,
“இப்போ நான் கிளம்பனும் கேர்ள்.. நாளைக்கு ஃபங்க்ஷன்ல பார்க்கலாம்..” என அவர் விடைபெற, அவரோடு கார் வரைச் சென்று வழியனுப்பி வைத்தாள் அகானா.
கனலி கிளம்பியதுமே, அவள் முகம் யோசனைக்கு சென்றது. திரும்பி கண்ணனைப் பார்க்க, “அந்த லாயர்கிட்டத்தான் போயிருக்காங்க பாப்பா.. நீங்க சொன்ன மாதிரிதான் பேசியும் அனுப்பிருக்கார்..” என அவள் எதிர்பார்த்த பதிலைக் கூற, ‘ம்ம்’ என தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்.
அவளுக்கு இரண்டு நாட்களுக்கு முன் ரஞ்சனி தன்னிடம் பேசியது மனதுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
1 comment
இப்ப எதுக்கு இந்த முட்டகன்னி முழி அழகியோட என்ட்ரீன்னு தெரியலையே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797