Home Anti Heroineஅகானா – 89

அகானா – 89

மைதிலியின் பிடிவாதத்தை யாராலும் சமாளிக்கவும் முடியவில்லை, அவரின் முடிவை யாராலும் மாற்றவும் முடியவில்லை. 

ரவிக்கு வேறு வழியும் இருக்கவில்லை. தனக்கு தெரிந்த வக்கீல் நண்பரின் மூலம் விவாகரத்துக்கான நடைமுறைகளை ஆரம்பிக்க சொன்னார்.

மைதிலியின் வேண்டுகோளுக்கிணங்க, வினோத்தின் குடும்பம் பெரிய வீட்டிற்கு மீண்டும் வந்திருந்தது.

அப்போது ரஞ்சனி தான் “வீட்டுல ரெண்டு பெரியவங்க அடுத்தடுத்து இறந்துட்டாங்க, அதுக்கான எந்த சடங்கும், சம்பிராதாயமும் நாம செய்யல, அது கூட பாவம் தான். பண்டாரத்துக்கிட்ட நாள் குறிச்சு, எல்லாரும் ராமேஸ்வரம் போய்ட்டு வந்துடலாம்..” என மைதிலி இருக்கும் போது நித்யாவிடம் கூற,

“அம்மாவும் சொல்லிட்டே இருந்தாங்க தான் அண்ணி.. மாமாகிட்ட பேசிட்டு முடிவு பண்ணுவோம். மகி சிங்கப்பூர் கிளம்புற்டதுக்குள்ள போய்ட்டு வந்துட்டா நல்லது.. இதுக்காக அவளை மறுபடியும் வர வைக்க முடியாது. மாப்பிள்ளையும் அனுப்புவாரா தெரியல..”

“ஏன் அந்த பையன் நல்ல மாதிரி தானே.. இல்ல வேற எதுவும் பிரச்சினை பண்றானா?” என இருவரின் பேச்சிலும் இடையில் வந்தார் மைதிலி.

“ரொம்ப நல்ல பையன் க்கா… நம்ம பொண்ணு செஞ்ச தப்பை இதுவரைக்கும் அவர் வெளியே சொன்னதே இல்லையே. மாப்பிள்ளைக்கும் பிடிச்சி தான் மேரேஜ் பண்ணிருக்கார். அவனுக்கு அங்க கிளினிக் இருக்கு.. அவங்க சித்தப்பா ஆரிக்காகவே ஆரம்பிச்சிருக்கார். அதோட ஒரு ரெசெர்ச் வேற பண்றார். அதுக்கு அங்க இருக்கணும்னுதான் நம்ம மகியையும் கையோட கூட்டிட்டு போறார்.” என நித்யா எடுத்து கூற,

“ம்ம்ம்.. ஆனா அந்த பொண்ணு மேல ரொம்ப பாசம் போல.. அவங்களுக்கு ஒரு பிரச்சினைனா உடனே ஓடிவந்து முன்னாடி நிக்கிறான்..” என்ற மைதிலிக்கு அப்போதும் ஏதோ முரண்டத்தான் செய்தது.

இதற்கு நித்தி பதில் சொல்லலாம், ஆனால் அது மைதிலிக்கு வருத்தத்தைக் கொடுக்கும் என அமைதியாக இருக்க, ரஞ்சனி தான் “மகியோட மாமியார் ஆரம்பத்துலயே இதுல எல்லாம் நீங்க தலையிடக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க.. அதைப்பத்தி என்ன பேசினாலும், அவங்க கேட்கவும் மாட்டாங்க..” என்றதும், மைதிலி பதில் பேசவில்லை.

“சரி அதை விடுங்க க்கா.. அந்த பண்டாரம் நம்பர் இருந்தா கொடுங்க, நாளைக்கு வரட்டுமான்னு கேட்கலாம்.” என நித்யா அந்த பேச்சை மாற்ற, மைதிலியும் அதை உணர்ந்து அமைதியாகிவிட்டார்.

அன்றே அவரிடம் பேசி செய்தியைக் கூற, அவரும் அடுத்தநாள் வர சொல்லிவிட்டார்.

ரவியிடம் இதுபற்றி நித்யா பேச, அவரும் சரியென்றுவிட, அடுத்தநாள் நித்யா, வினோத், ரஞ்சனி என மூவரும் மட்டும் சென்று வந்தனர்.

வந்ததில் இருந்து ரஞ்சனியின் முகம் அத்தனை மகிழ்வாக இல்லை. மிகவும் சோர்ந்து போயிருந்தார்.

நித்யாவுக்குமே சிறு பயம் தான். ஆனால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது.

ரஞ்சனியின் முகத்தை வைத்தே ஏதோ தவறு என புரிந்து கொண்ட ரவி, வினோத்திடம் கேட்க, 

“அது அண்ணா..” என தயங்கியவர் “நம்ம குடும்பத்துல பெண் சாபம் இருக்காம், அது கண்ணீர் வடிச்சதுனாலத்தான் இவ்வளவு பிரச்சினையாம். தூரம் தொலவுல இருந்த வரைக்கும் உங்களுக்கு பெருசா எந்த பாதிப்பும் இருந்திருக்காது. பக்கத்துல நெருங்க, நெருங்க அதோட கோபம் ஆக்ரோசமா மாறி, உங்க குடும்பத்தையே சிதைச்சிருக்கும். உங்க அம்மா இறந்தப்பவே நீங்க சுதாரிச்சிருக்க வேண்டாமானு கேட்டார்..” என்று கூற,

“ஹோ..” என்ற ரவிக்கு அடுத்து என்ன பேசுவது என தெரியவில்லை. பேய்க்கும் பாரு, நோய்க்கும் பாரு என்ற கேட்டகிரியில் சேர்ந்தவர் ரவி. அதனால் இதிலெல்லாம் நம்பிக்கையுள்ளவரும் கூட.

“அதுக்கு என்ன தீர்வுனு எதுவும் சொல்லிருக்காங்களா?”

“அது.. அம்மா அவங்க ஆயுசு முடியும் முன்னே இறந்துட்டாங்க. ஆனா அப்பா அவரோட ஆயுசு முடிஞ்சி தான் இறந்திருக்கார். அம்மாவோட இறப்பு அந்த பொண்ணுக்கான நீதினு சொன்னார். அது கொலைன்னும் சொன்னார்..” என்றதும், ரவியின் விழிகள் தாமாக மூடிக் கொண்டன.

அவருக்குத்தான் சரஸ்வதியின் இறப்பு எப்படியென்று முன்னமே தெரியுமே. மகளைக் காட்டிக்கொடுக்க மனமில்லாமல் அமைதியாக இருந்தார். இதயம் தாறுமாறாக துடித்தது. தன்னுடைய இயலாமையும், பேராசையும் தன்னுடைய குடும்பத்தை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்ற உண்மை அவரின் முகத்தில் வேகமாக அறைந்தது.

“அண்ணா..” என்ற வினோத்தின் உலுக்களில், “ஹ்ம்ம்..” என நிமிர்ந்து வினோத்தை பார்த்தார்.

“அம்மு கண்ணாவை கல்யாணம் செஞ்சதுனால தான் அடுத்து பெருசா எந்த அசம்பாவிதமும் நடக்கலையாம்.. இல்லைன்னா எல்லாருமே..” என இழுக்க,

“விடு வினோ..” என்றார் ரவி வேதனையாக.

“அண்ணா.. அம்மு இந்த வீட்டுக்கே வந்துட்டதால, இனி அவளோட கோபம் கொஞ்சம் கொஞ்சமா மட்டுப்படும், காலப்போக்குல எல்லாம் சரியாகும். அவங்களுக்கு வாரிசு வந்துட்டா குடும்பம் சுபிக்ஷம் ஆகிடும்னு சொன்னார்…”

“ஹ்ம்ம்… ஆகனுக்கு இதெல்லாம் தெரிய வேண்டாம். அம்முவே எல்லாம் புரிஞ்சு இங்க வந்தா வரட்டும். யாரும் கட்டாயப்படுத்த வேண்டாம்.”

“சரி ண்ணா..” என்று வினோத் கிளம்பிவிட, ரவிக்கு மனமெல்லாம் மகளின் நினவுகள் தான்.

தன் போனை எடுத்து ஆகன் அனுப்பிய போட்டோக்களை கண்களில் கண்ணீர் மின்ன, வலி நிரம்ப பார்க்கத் தொடங்கினார்.

அவர்கள் மாலத்தீவு போனதிலிருந்து ரவியின் ஒரே வேலை இதுமட்டும்தான்.

மகளின் முகத்தை வருடியவர் “அம்மு.. இந்த அப்பாவை மன்னிச்சிடுடா பாப்பா..” என வழக்கம்போல மனதுக்குள்ளே மன்னிப்பு கேட்க ஆரம்பித்தார்.

மூன்று பெண்களின் வாழ்க்கை இன்று அவரால் கேள்விக்குறியாகிப் போனது.

அனைத்தும் இருந்தும், அனைவரும் இருந்தும் அநாதையாகிப் போன உணர்வில் இருந்தார் ரவி.

***

சங்கர் வாங்கி குவித்த பொருட்களை பெட்டியில் அடக்கி கொண்டிருந்தாள் மகிழினி. மகளுக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வாங்கியிருந்தார் மனிதர்.

மிகவும் விமர்சையாக தன் பெண்ணின் திருமணத்தை நடத்த வேண்டும் என்று நினைத்திருக்க, அது எல்லாம் நடக்காமல் போனதில் மிகவும் வருத்தத்தில் தான் இருந்தார்.

என்னதான் அவளுக்காக செய்திருந்தாலும், இப்போது மகள் தங்களை விட்டு பிரிந்து கடல் கடந்து செல்வதில் சிறு பயம் முளைக்கவே செய்தது.

அதை பெண்ணிடம் காண்பித்துக் கொள்ளாமல், அங்கு போய் அவள் சிரமப்பட்டு விடக்கூடாது என்பதில் அனைத்தையும் பார்த்து பார்த்து செய்தார்.

முதல் நாள்தான் அவளுக்கு ஒரு பெருந்தொகையை வங்கிக் கணக்கிலும் மாற்றியிருந்தார். ஆகனும் தன் பங்கிற்கு தனியாக தங்கைக்கு பணத்தை மாற்றி இருந்தான்.

நித்தியாவும், ரஞ்சனியும் ஆடைகளாக வாங்கி குவித்திருந்தனர்.

இது எல்லாவற்றையும் ஒரு புன்னகையோடு உள்வாங்கிக் கொண்டிருந்தாள் மகிழினி.

ஆகன் இல்லாததால் ஆரியனுக்கு வழக்கம்பொல, அதிக வேலைப்பளு. அதனால் அவனாளும் மனைவியோடு நேரம் செலவிட முடியவில்லை.

விஜயாவும் இரண்டு நாட்களுக்கு முன் கிளம்பி இருக்க, மஞ்சரியைப் பார்த்துக்கொள்ளும் பெரும் பொறுப்பு மகிழினியிடம் வந்தது.

சுபாஷ் அங்கிருந்து, மஞ்சரியை சங்கடப்படுத்த வேண்டாம் என நினைத்து, அவருமே விஜயாவுடன் கிளம்பி விட்டார். இப்போது மகியும் மஞ்சரியுமே மட்டும் அந்த வீட்டில்.

அனைத்திற்கும் வேலை செய்ய ஆட்கள் இருந்தாலும், மஞ்சரிக்கானதை மகியே செய்து கொண்டிருந்தாள். அன்று மஞ்சரி உணவை முடித்து உறங்க சென்று விட, கணவனுக்காக காத்துக் கொண்டிருந்தாள் பெண்.

அன்றும் வெகு நேரம் கழித்து வர, முகத்தில் எந்த சுனக்கமும் காட்டாமல் அவனுக்கானதை செய்தாள் மகி..

ஆரியனுக்கும் மனைவியின் அமைதி புரிகிறதுதான். இங்கிருக்கும் வரை அவளை சரி செய்ய முடியாது என்றும், அங்கு போய் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் அவன் முடிவு செய்திருக்க, ஏனோ மனைவியின் இன்றைய அமைதி அவனை வெகுவாக தாக்கியது.

‘ஏதோ சரியில்லை முதலில் அவளை சரி செய்’ என்று மூளை எச்சரிக்க, அந்த எச்சரிக்கையை எப்போதும் போல் அசட்டை செய்ய முடியவில்லை ஆரியனால்..

இரவு குளியலை முடித்து வந்தவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஆரியன். 

அவளுக்கு அது உணரவில்லை என்று, அடுத்தடுத்து தன் வேலைகளை முடித்து, படுக்கையில் விழுந்ததை பார்த்ததும் புரிந்து கொண்டான்.

அவன் பார்த்த மகி, அகானா சொல்லி கேட்ட மகி, இவள் இல்லையே! துரு துருவென்று எப்போதும் சேட்டையும் சிரிப்புமாக திரிந்த அந்த மகி எங்கே? என மனம் யோசனையில் ஆழ்ந்தது.

இந்தக் கேள்விகளில் மனம் அலைப்புற, தூக்கம் வராமல் புரண்டு கொண்டே இருந்தான் ஆரியன்.

“தூங்கல நீங்க..” என்ற மனைவியின் குரலில் வேகமாக அவள் பக்கம் திரும்பியவன், “நீ தூங்கல..” என்றான் பதில் கேள்வியாக.

 “தூங்கணும்..” என்றாள் அமைதியாக.

“என்னாச்சு இனி.? ஏன் இப்போ எல்லாம் ரொம்பவே டல்லா இருக்க.? என் மேல கோவமா?” என என்னவென்று அறிந்துகொள்ள கேள்வியாய் கேட்க, 

“கோபமா? ஏன்? நீங்க என்ன செஞ்சீங்க கோபப்பட.?” என்றாள் அப்போதும் அமைதியான குரலில். 

“இதற்கு மேல் தனக்கு பொறுமை இருக்காது.” என்றவன் வேகமாக எழுந்து, அவளுக்கு மிக அருகில் நெருங்கியமர, அதில் மகியும் பட்டென எழுந்து அமர்ந்து விட்டாள்.

“என்ன? என்ன?” என பதறிக் கேட்க,

“நிஜமாவே கோபம் இல்லையா? நம்ம வெட்டிங் அப்புறம் உன்னோட நேச்சரே மாறிடுச்சு இனி. சுட்டிக் குழந்தை ஒன்னு சேட்டை செஞ்சுட்டே சுத்துமே, அப்படி உன்னை பார்த்துட்டு, இப்போ அமைதியா பாக்க கஷ்டமா இருக்கு. இது எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி வேற, என்னை கொல்லாமல் கொல்லுது.. நான் என்ன பண்ணட்டும்.?” என்றான் கலக்கமாக..

இப்போது மகியும் “நான் என்ன பண்ணட்டும்?” என பதில் கேள்வி கேட்டாள்.

அதில் ஆரியன் குழப்பமாக மனைவியைப் பார்க்க, 

“இல்ல.. நீங்களே ஒன்னு யோசிச்சு, நீங்களே ஒரு முடிவெடுத்துட்டு எங்கிட்ட புலம்பினா நான் என்ன பண்ணட்டும்னு கேட்டேன்..” என்றாள் கிண்டலாக.

“அடிப்பாவி.. நீ என்னை கிண்டல் பண்றியா?” என அதிர்ந்தவன், அவளை இழுத்து தன் மேல் மொத்தமாக போட்டுக்கொண்டான்.

“ஹேய் நோ.. நோ.. இப்போ எதுக்கு நீங்க என்னை உங்க மேல இழுத்துக்கிட்டீங்க?”

“ஹ்ம்ம் சட்டி பானை செஞ்சி விளையாட, யாருடி இவ?” என அவளின் மூக்கோடு மூக்குரசி கிண்டலடிக்க,

“ஆஹான்.. இது வேலைக்காகது..” என அவனை விளக்கித் தள்ளப் பார்க்க,

“ம்ஹூம்.. இன்னைக்கு உன்னை விடுறதா இல்லடி என் பொண்டாட்டி. இத்தனை நாளா உம்முனு இருந்து என்னை எவ்ளோ டார்ச்சர் பண்ணிருக்க, இன்னைக்கு அதுக்கெல்லாம் சேர்த்து மொத்தமா பனிஷ்மென்ட் இருக்கு..” என அவளின் இடையில் அழுத்தம் கொடுத்து, மார்பில் முகம் புதைத்தான் கணவன்.

அதுவரை அவனைத் தள்ளிக்கொண்டே இருந்தவள், அவனின் செய்கையில் சட்டென அமைதியாகிவிட, “ஸாரி இனி..” என்ற கணவனின் மன்னிப்பில் வெடித்து அழ ஆரம்பித்தாள் மகிழினி.

You may also like

Leave a Comment

About Me

Featured