15
இரும்பாக்கிக் கொண்டாலும்
மனம் என்னவோ
உன்னை நோக்கியே இழுக்கிறது
காந்தமோ
காதலின் சக்தியோ…?
சூரனை வதம் செய்த திருச்செந்தூர் தான் அவர்களின் முதல் ஷூட்டிங் ஸ்பாட். ஷஸ்டி கவசம் முதல் முருகப் பெருமானின் அனைத்துப் பாடல்களையும் சாருகேஷி பாட, சிவகுரு அந்தக் குரலில் மயங்கித்தான் போனார்.
அடுத்த பதினைந்து நாட்களும் முருகக் கடவுள் வாசம் செய்யும், அறுபடை வீடுகளுக்குப் பயணித்து, ஒருவழியாக அனைத்து வேலைகளையும் முடிக்க, சாரு சென்னை வந்தபின் இரண்டு நாட்களில் ரெக்கார்டிங்கின், ஃபைனல் செட்டப்பை முடித்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து, சிவகுருவும் புகழும் கிளம்பியிருந்தனர்.
புகழ் அவளுடன் இருந்த இரண்டு வாரத்தில் மூன்று முறை சென்னை சென்று வந்திருந்தான். சிவகுருவும் ஒருமுறை போய் வந்திருந்தார். வசந்தாவிற்கு எதுவும் தெரிய வேண்டாம் என்ற எண்ணம் தான், அவர்களை இவ்வாறு யோசிக்க வைத்தது.
ஊரிலிருந்து வந்த அன்று சாருவை சீண்டியது தான், அதன்பிறகு அவளுக்கு புகழ் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. சாருவுக்கே இது அதிசயம் தான். முதல் நாள் அவன் பேசியதில், எப்படி இந்த இரண்டு வாரங்களைக் கடத்தப் போகிறோம் என்று எண்ணி பயந்தவளுக்கு, புகழின் நடவடிக்கை முதலில் நிம்மதியைக் கொடுத்தாலும், தொடர்ந்த அவனது அலட்சியத்தில் ஒருவித வலி உருவாவதை உணர்ந்து கொண்டாள். எதனால் இந்த வலி, வேதனை என்று அறிந்துகொள்ள முடியாத அளவிற்கு, அவள் சிறு குழந்தை அல்லவே!
தன்னையும் அறியாமல் அவனை விரும்ப ஆரம்பித்து விட்டாள் என்று புரிந்து கொண்டாள். ஆனால் புகழ் இவளைத் திரும்பிக் கூடப் பார்க்காமல், தன் வேலையை மட்டும் பார்ப்பதைக் கவனித்தவள், ஒருவேளை அவன் தன்னை சும்மா சீண்டியிருப்பானோ, காதல் போல் எதுவும் இல்லையோ? நானாக அவன் மேல் காதலை வளர்த்துக் கொண்டேனோ என, பலவாறாக யோசித்துத் தனக்குள்ளே குழம்பிக் கொண்டாள்.
இப்படியே நாட்கள் கடக்க, சாரு சென்னை செல்லும் நாளும் வந்தது. இப்போது அவளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு, விஸ்வநாதனை ஊரில் தங்களுடனே வைத்துக் கொள்ளலாம் என, செல்வம் தம்பதியினர் யோசித்தனர். அவரின் வயதை முன்னிட்டுத்தான் இந்த யோசனை.
ஆனால் அதற்கு விஸ்வநாதன் ஒத்துக் கொள்ளவே இல்லை. பல வருடங்களாக பிரிந்து, பல கஷ்டங்களைக் கடந்து இப்போது தான் சேர்ந்து வாழ்கின்றனர். அப்படி இருக்க, அவர்களுக்கு இடைஞ்சலாக தான் ஏன் இருக்க வேண்டும் என அவரும் யோசித்து மறுத்துவிட்டார்.
ரெஜினா முகத்தைத் தூக்க, “இல்லம்மா, சாருவுக்கு இந்த வருஷம் படிப்பு முடியுது. அடுத்து மேல்படிப்புக்கு எப்படியும் வேற ஊரு போய்டுவா. அப்போ வேற வழியில்லாம ஹாஸ்டல் தான விட முடியும். அப்போ தனியா போகட்டுமே, கொஞ்ச நாளைக்கு நான் அவ கூட இருந்துட்டு வர்றேன்.” என சொல்லிவிட, அவர்களுக்கும் அதுவே சரியெனப்பட, தாத்தாவும் பேத்தியும் சென்னை வந்துவிட்டனர்.
சென்னையில் அவளின் நாட்கள் சற்று கடுமையாகத்தான் சென்றது. தன் மனதில் தோன்றிய இந்த ஆசைகளை அவளால் யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. அந்த ஆசைக்கு சொந்தக்காரனோ அதுபற்றி அவளிடம் வாயைத் திறக்கவில்லை. அவனைப் பார்ப்பதே அரிதாகியிருந்தது.
இரண்டாவது வாரத்தில் ஒரு நாள் ரெக்கார்டிங் செட்டப்பிற்காக சாருவை வரச் சொல்லியிருக்க, ஒருவேளை அவன் வந்திருப்பானோ என்ற ஆர்வத்தில் சென்றவளுக்கு, அங்கு கிடைத்தது ஏமாற்றமே. தன் ஏமாற்றத்தை வெளியில் காட்டாமல் வேலையை முடித்து வர, பெருமளவில் கஷ்டப்பட்டுவிட்டாள் சாருகேஷி.
விட்டால் போதுமென்று வெளியில் வர, அப்போது ஒரு கவருடன் நின்றிருந்தான் செல்வின். ‘என்ன’ என்பது போல் பார்க்க, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்த கவரை அவளிடம் கொடுத்தான். சாருவால் அதை வேண்டாமென்றும் மறுக்க முடியவில்லை. காரணம், அதைக் கொடுத்தது சிவகுரு என்றிருந்தான்.
அவனிடம் ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு வந்தவளுக்கு, அதைப் பிரிக்கக் கூடப் பிடிக்கவில்லை. அன்றிரவு வேலையெல்லாம் முடித்து உறங்கலாம் என்றிருக்க, புகழின் எண்ணில் இருந்து அழைப்பு வர, அவளோ அதை எடுக்காமல் அந்த போனையே வெறித்திருந்தாள்.
இத்தனை நாள் எதிர்பார்த்து, ஏமாந்து போனது மனதைக் கசங்க வைக்க, பார்த்தது பார்த்தபடியே இருந்தாள். இப்போது அழைப்பு இரண்டாவது முறையாக வர, எதற்கு இப்படி விடாமல் அழைக்கிறான்? எடுக்கலாமா, வேண்டாமா என மூளை பட்டிமன்றம் நடத்த, அந்த அழைப்பும் நின்றுவிட்டது.
இப்போது தொடர்ந்து மெசேஜ் வந்து விழும் சத்தம். அதைப் பார்த்தவள் வேகமாக வாட்ஸாப்பில் சென்று பார்க்க, அனைத்தும் புகழிடமிருந்து தான். அதுவரை இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் மெல்ல மெல்ல கரைய, அதை ஓபன் செய்து பார்த்தவளுக்கு என்ன உணர்வு என்றே புரியவில்லை.
அனைத்தும் அவளும் அவனும் மட்டும் இருக்கும் புகைப்படங்கள். ஒவ்வொன்றிலும் இருவரும் அவ்வளவு பாந்தமாக பொருந்தியிருந்தனர். கிட்டத்தட்ட ப்ரீ வெட்டிங் சூட் போலான புகைப்படங்கள். முகம் முழுவதும் சிவப்பு ஏற, தன்னால் ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது அவள் முகத்தில்.
இரசனையாக அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, “என்னாச்சு பேபி, ஆர் யூ ஓகே?” என டெக்ஸ்ட் மெசேஜ் வர,
‘நோ, ஐம் நாட் ஓகே. யூ ஆர் சீட்டர்.’ என இவளும் பதிலுக்கு அனுப்ப,
‘வாட்! வாட் டு யூ மீன்? சீட்டர்… மீ? ஓகே, ஐம் எ சீட்டர். பட், யூ ஆல்வேஸ் தீஃப். யூ ஆர் தீஃப்ட் மை லிட்டில் ஹார்ட்.’ என அனுப்பவும்,
‘வாட்! நோ… இட்ஸ் ராங்க். யூ ஆர் த தீஃப். யூ ஜஸ்ட் ஸ்டோல் மை ஹார்ட் அன்ட் டிசப்பியர்ட்.’ என அவளும் பதிலுக்கு அனுப்ப, இருவருக்கும் தங்களைப்பற்றி அறிந்து கொண்டதில் நிம்மதி, கூடவே புன்னகையும். இருவர் முகத்திலும் ஒரு வாடா புன்னகை. இப்போது அவன் மீண்டும் போன் செய்துவிட்டான்.
மெசேஜில் நீண்ட நாள் பழக்கம் போல பேசிக் கொண்டாலும், போனில் அப்படி பேச முடியும் போலத் தோன்றவில்லை. அதனால் அமைதியாக இருக்க, “ப்ளீஸ் கால் அட்டன் பண்ணு, உங்கிட்ட பேசாம எனக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல…” என மெசேஜ் வர,
இதற்கு அவள் பதிலனுப்பவில்லை. கிட்டத்தட்ட அவனைப் போலத்தானே அவளது நிலையும். பிடிப்பது போலத்தான் அவனுக்கு இருந்தது. ஆனால் அவளுக்கோ பைத்தியமே பிடித்திருந்ததே, இதை எப்படி சொல்ல அவனிடம்?
இப்போது மீண்டும் அவனிடமிருந்து ஒரு மெசெஜ், ‘நீ பேசவில்லை என்றாலும் பரவாயில்லை, உன்னிடம் கொடுத்த கவரையாவது பிரித்துப்பார்.” என்றிருக்க, ‘கவரா, எது?’ என யோசித்தவள், காலையில் செல்வின் தன்னிடம் கொடுத்தது ஞாபகம் வர, வேகமாக அந்த கவரை கையில் எடுத்தவள், ‘இது நீங்களா கொடுத்தீங்க?’ என்ற மெசேஜை தட்ட,
‘ம்ம், இந்த பார்சலை ஓப்பன் செஞ்சதும் எனக்கு கால் பண்ணுவனு வெயிட் பண்ணிட்டு இருந்தேன். நீ கூப்பிடலன்னதுமே புரிஞ்சது, நீ இன்னும் அந்த கவரை திறந்து பார்க்கலைன்னு. அதான் நானே கால் பண்ணேன்.’ என நீண்ட விளக்கமாக ஒரு குறுஞ்செய்தி வந்து விழ, அவனுக்குப் பதிலேதும் சொல்லாமல் வேகமாக அந்த கவரை பிரித்திருந்தாள்.
பிரித்தவளின் பார்வை அதிலேயே நிலைத்திருக்க, கண்கள் இரண்டிலும் நீர் அருவியாகக் கொட்டியது. அது ஒரு பட்டுப்புடவை, அத்தனை வழுவழுப்பு புடவையில். பார்த்ததுமே தெரிந்தது, அதன் தரம். உடல் முழுவதும் வானவில்லின் வண்ணங்கள், வேறெந்த டிசைனும் இல்லை. முந்தானை முழுவதும் சந்தன நிறம், அதில் சாருவின் பெற்றோரின் புகைப்படத்தை நெய்திருந்தனர்.
மிகவும் சவாலான வேலைதான். எப்படியும் இதற்கு சில மாதங்கள் வேலை எடுத்திருக்கும் என அவளுக்குப் புரிந்தது. புடவையை கசங்காமல் எடுத்து மென்மையாக வருடியவள், அதைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள். அந்த உணர்விலிருந்து வெளிவர சில நிமிடங்கள் தேவைப்பட்டது பெண்ணுக்கு.
முழுதாக பத்து நிமிடங்கள் கழிந்து விட, இப்போது மீண்டும் புகழ் அழைத்திருந்தான். இந்த முறை ஒரு ரிங்லயே எடுத்தவள், “தேங்க்ஸ்… தேங்க்ஸ்… தேங்க்ஸ்…” என விடாமல் சொல்லிக் கொண்டிருக்க,
“ஹேய், ஸ்டாப்! ஸ்டாப்! நான் ஹலோ கூட சொல்லல…” என கத்தினாலும் அவளுக்கு கேட்கவில்லை. விடாமல் சொல்லிக்கொண்டே இருக்க, “ப்ச்!” என்று சத்தமாக ஒரு முத்தம் வைக்க, அதில் அவள் சத்தம் நிற்க, “உன் வாயை இப்படித்தான் அடைக்கணுமா? சூப்பர்ல…” என்று சிரித்தவன், “நீ தேங்க்ஸ் சொல்லணும்னு எல்லாம் நான் உனக்கு செய்யல, எனக்கு அது தேவையும் இல்ல…” என்றவனின் குரல் தேங்கி நிற்க,
அவன் கொடுத்த சத்தமான முத்தத்தில் உடலெங்கும் ஒருவகை மின்சாரம் பாய, விழிகள் மயக்கத்திற்கு செல்ல, உடல் முழுவதும் அப்படியே நடுங்கிவிட, இப்போது என்ன நடந்தது என இவள் புரிந்து கொள்ளும் முன்பே அவன் தொடர்ந்து பேச, சாருவுக்குத்தான் என்ன செய்வது என்றே தெரியாமல் செம்பருத்தியாகிப் போனாள்.
“பேபி, ஆர் யு தேர்?” என்ற புகழின் கேள்விக்கு, தான் இருப்பதை உணர்த்த, “ம்…” என்று தனக்கே கேட்காத குரலில் கூறினாள் சாரு. அவளுக்கே கேட்காத குரல், அவனது செவிகளைத் தீண்டிச் சென்றது.
“பேபி, உனக்கு அனுப்பின புடவையை நீ நம்மளோட முக்கியமான தருணத்தில, அதாவது நம்மளோட வெட்டிங் டே அன்னைக்கு கட்டணும், சரியா?”
“ம்…” என்றாள், தனது சிவந்த முகத்தை எதிரில் இருந்த கண்ணாடியில் பார்த்து மீண்டும் சிவந்தவாறே.
இப்படியாக இருவருக்குமான சுவாரஸ்யமான உரையாடல்கள் அந்த இரவு முழுவதும் தொடர்ந்தது.
காலையில் விஸ்வநாதன் வந்து அவளது கதவைத் தட்டும் போது எழுந்த சாரு, தான் படுத்திருக்கும் நிலையைப் பார்த்து வெட்கப்பட்டாள். காதில் போனை வைத்துக் கொண்டு, அறையில் இருந்த சோபாவில் போன் பேசியவாறே உறங்கியிருந்தாள்.
தாத்தாவின் அழைப்பில் நினைவுக்கு வந்தவள், எழுந்து வந்து கதவைத் திறந்தாள்.
“குட் மார்னிங் சாரும்மா!”
“வெரி குட் மார்னிங் தாத்தா!”
“சாருமா, நம்ம வீட்டுல வேலை செய்ற குமாரசாமியோட மகளுக்கு ரெண்டு நாள்ல கல்யாணம்டா. அதுக்கு நமக்கு பத்திரிகை வச்சிட்டு போயிருக்கிறாரு. பத்திரிகையே இல்லைன்னாலும் நாம கண்டிப்பா போகணும், நாம ஊருக்கு போயிட்டு வரலாமா?”
“ஐயோ தாத்தா! எனக்கு வரமுடியாதே, எனக்கு காலேஜ்ல எக்ஸாம் இருக்கே. கண்டிப்பா நான் இங்க இருந்தாகணும் தாத்தா. என்ன செய்ய?”
“அப்படியா கண்ணா? நீ அப்போ படிப்பை கவனி, நான் ஊருக்கு போயிட்டு வர்றேன். எனக்கும் அங்க வேலை இருக்கு.”
“சரி தாத்தா, ஆனால் எனக்கு நீங்க தனியாக போறது மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு தாத்தா. ஒரு மாதிரி படபடப்பா… ஏன் தாத்தா, எனக்கு எக்ஸாம் முடிஞ்ச அப்புறம் ரெண்டு பேரும் சேர்ந்து போகலாமே…”
“இல்லை கண்ணா, அவன் நம்மளோட விசுவாசி. நமக்கு உண்மையா இருக்கிறவன். போகலனா தப்பாயிடும்டா. நான் போயிட்டு மூணு நாள்ல திரும்ப வந்திடுவேன். நீ கவனமா இருந்தா போதும்.”
ஏனோ சாருவின் மனசுக்கு தவிப்பாக இருக்க, “சரி தாத்தா.” என்று அவரை அணைத்துக் கொண்டாள்.
அவளது தலையை வருடிவிட்ட விஸ்வநாதன், “என்னோட வெல்லக்கட்டில, இங்க பாருடா… நான் தனியா போகல, செல்வமும் ரெஜினாவும் உன்னை பார்க்க வர்றாங்க. உனக்கு நகை வாங்கணும்னு ரெஜி சொல்லிட்டே இருந்தா. அதுக்குத்தான் வர்றாங்க, ஈவ்னிங் அவங்களோட நானும் போயிட்டு வந்திடுறேன்.”
“ஓ… சூப்பர்! மாமாவும் அத்தையும் வர்றாங்களா? அப்போ நீங்க அவங்களோட போயிட்டு வந்திடுங்க தாத்தா. ஆனா நகை எதுக்கு? ஏற்கனவே பாட்டியோடது, அம்மாவோடதுனு நிறையவே இருக்கே. சரி, நான் அத்தைக்கிட்ட சொல்றேன். எனக்கு இப்ப காலேஜ்க்கு லேட்டாயிடுச்சி. அத்தையையும் மாமாவையும் நான் ஈவ்னிங் வந்து பார்க்கிறேன்.”
“சரிடாமா, நீ போய் ரெடியாகு. ஹான்! சாருமா, நானும் அவங்களோட போகும் போது, கல்யாணப் பொண்ணுக்கு சீர் செய்ய தேவையானதை வாங்கிட்டு வந்துடுறேன்.”
“சரி தாத்தா, பத்திரம்.” என்ற சாரு குளித்து ரெடியாகி, கீழே வந்து தாத்தாவுடன் சேர்ந்து சாப்பிட்டுவிட்டு, தாத்தாவிடம் சொல்லிக்கொண்டு அவரது சிரித்த முகத்தைப் பார்த்து கையை அசைத்தவாறு சென்றாள்.
ஏனோ காலேஜ்க்கு வந்த சாருவுக்கு மனசே சரியில்லாமல் இருந்தது. அவளைச் சார்ந்த யாருக்கோ ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்று அவளது உள்மனம் கூறிக் கொண்டே இருந்தது.
அவளுக்கு திடீரென புகழின் ஞாபகம் வந்தது. ஒருவேளை அவனுக்கு ஏதும் ஆபத்தாக இருக்குமோ என்று நினைத்த நொடி, அவளது கண்களில் இருந்து கண்ணீர் உருண்டோடியது.
சற்றும் தாமதிக்காமல் புகழின் நம்பருக்கு அழைத்தாள். புகழ் க்ளாசில் இருந்ததால், அவனது போன் சைலண்டில் இருந்தது. அதனால் அவளது அழைப்பை ஏற்கவில்லை. இங்கு சாருவோ அவனுக்கு என்னவாயிற்றோ என்று தவித்து விட்டாள்.
தனது வேலைகளை முடித்துவிட்டு வந்து போனை எடுத்து பார்க்க, அதில் அவனது சாருவின் எண்ணற்ற அழைப்பு வந்திருக்க, ‘என்ன ஆச்சரியமா இருக்கு, சாரு இத்தனை தடவை கால் பண்ணிருக்கா?’ என்று யோசித்தபடியே சாருவுக்கு போன் செய்தான்.
அவனது அழைப்பை ஒரு ரிங்கில் எடுத்த சாரு, “உங்… உங்களுக்கு… ஒண்ணும் இல்லை தானே? நல்லா இருக்கீங்களா? எதுக்கு கால் அட்டன் பண்ணல?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.
“பேபி, ரிலாக்ஸ்டா! எனக்கு ஒண்ணும் இல்லை. நான் ரொம்ப நல்லா இருக்கேன். நீ எதுக்காக இவ்வளவு டென்சனாகுற? உனக்கு என்னாச்சுடா?” என்றான் அவனும் பதட்டத்துடன்.
“அதுவந்து… காலையில இருந்து எனக்கு மனசே சரியில்லைப்பா. யாருக்கோ ஏதோ தப்பா நடக்க போறது மாதிரியே இருக்கு. அதுதான் உங்களுக்கு போன் பண்னேன். இங்க வரமுடியுமா?” என்றாள் நலிந்த குரலில்.
“நான் நல்லா இருக்கேன் கண்ணா, இப்போ முடியாதுடா. க்ளாஸ் இருக்கே, உன்னை ஈவ்னிங் வந்து பார்க்கிறேன், ஓகே?” என்று சமாதானம் செய்ய,
“ஓகேப்பா, எனக்கும் கிளாஸ்க்கு டைமாச்சு. நான் அப்புறம் பேசுறேன்.” என்று வைத்துவிட்டு கிளாஸ்க்கு சென்றுவிட்டாள்.
அவள் பயந்ததை போலவே அனைத்தும் நடந்து, அவளைத் தனியாக்கி விதி அவளைப் பார்த்து சிரித்தது.
***
1 comment
அப்படின்னா… இந்த ததவை தாத்தா, மாமா, அத்தைன்னு
ஒட்டுமொத்த பேரும் போயிட்டாங்களோ…?
😔😔😔
CRVS (or) CRVS 2797