17
காலை கதிரவன் தன் கடமைகளை செய்வதற்காக, கிழக்கு வானில் உதிக்க ஆரம்பித்தான். என்ன செய்வது, துன்பங்கள் எல்லோரையும் சேர்ந்ததுதான், இப்படியே தூங்கிக் கொண்டிருந்தால் துன்பம் போய்விடுமா? இல்லை, மாண்டவர்கள் மீண்டு வருவார்களா என்று, தன்னை தேற்றியபடியே எழுந்து வந்தாள் சாரு.
கீழே சிவகுரு, தான் ஊருக்கு புறப்படுவதற்கான ஆயத்தங்களுடன் இருந்தார். புகழும் என்ன செய்வது, சாருவிடம் எவ்வாறு பேசுவது என்று தெரியாமல், தனது தலையைக் குனிந்து கைகளில் தாங்கிப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தான்.
படிகளில் இறங்கி வந்த சாரு, முதலில் தனது தாத்தாவின் புகைப்படத்திற்கும் பின், செல்வம் மற்றும் ரெஜினாவின் புகைப்படத்திற்கு முன்னால் விளக்கேற்றி விட்டு மெல்ல வந்து புகழின் அருகில் அமர்ந்தாள்.
‘நீ பேசு’ என்று புகழிடம் தனது கண்ணைக் காட்டினார் சிவகுரு. புகழோ, ‘என்னால் முடியாது, நீங்கள் பேசுங்கள்.’ என்று சிவகுருவிடம் கூற, இருவரும் மாறி மாறி கண்களால் பேசிக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் இதைக் கண்டும் காணாமலும் இருந்த சாரு இப்போது பேச ஆரம்பித்தாள்.
“என்ன அங்கிள்? என்ன புகழ்? ஏன் ரெண்டு பேரும் மாறி மாறி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு இருக்கீங்க? நீங்க சொல்ல வர்றதை சொல்லுங்க.” என்றாள் இருவரையும் பார்த்து.
“அது வந்து சாரு, நீ இப்ப என்ன பண்ணலாம்னு இருக்க? பேசாம என்கூட பெங்களூர் வந்துடுறியா? அங்க வந்து உன்னோட படிப்பை கன்டினியூ பண்ணலாம் இல்ல…” என்றான் புகழ் தயக்கமாக.
“இல்ல புகழ், அது இப்போ சரி வராது. அது மட்டும் இல்ல, எனக்கு இப்ப படிக்கிற மூடும் இல்லை. எதுக்காக படிக்கணும், யாருக்காக நான் படிக்கணும்?” என்றாள் விரக்தியின் உச்சத்தில்.
“ஏய், என்ன பேசுற?” என புகழ் கோபமாக,
“புகழ் அமைதியா இரு நான் பேசுறேன்.” என்று, “இங்க பாரு சாருமா, இப்படி எல்லாம் நீ சொல்லக்கூடாது. நீ டாக்டர் ஆகணும்ங்கிறது உன் தாத்தாவோட கனவு, ஏன் இலட்சியம்னு கூட சொல்லலாம். அதை நிறைவேற்ற வேண்டியது உன்னோட கடமை. அதுக்காக நீ கட்டாயம் காலேஜுக்கு போயாகணும். அதை விட்டுட்டு, நீ வேறெதையும் யோசிக்கக்கூடாது.” என்ற சிவகுருவை பாவமாக பார்த்தாள் சாரு.
“சாருமா, அப்பா சொல்றதுதான் சரி. அது மட்டும் இல்ல, இப்ப உன்னை இங்க தனியா விட்டு என்னாலயும் போக முடியாது. என்ன செய்யலாம்னு சொல்லுடா…” என்றான் புகழும்.
“அங்கே பெங்களூர்ல உங்களோட நான் எப்படி வந்து இருக்கிறது?” என்றாள் சூழல் புரிந்து.
“என்ன சாருமா மறந்து போயிட்டியா? நமக்குதான் கல்யாணம் ஆயிடுச்சு. என்னோட நீ வரதுனால என்ன பிரச்சனை? யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் நமக்கில்லை. நீ வா, உன்னோட படிப்பு முடிக்கிற வரைக்கும் நான் உன்னை தொல்லை பண்ண மாட்டேன். நீ என்னை முழுசா நம்பலாம்.” என்று சீண்டியவனை முறைத்தாள்.
“ஆனாலும்… இந்த விஷயம் உங்களோட அம்மாக்கு…” எனவும் புகழ் முறைக்க, அதில் உணர்ந்து, “அது அத்தைக்கு தெரியாதுல்ல, அத்தை என்ன சொல்வாங்களோ…? பயமா இருக்கு…” என்றாள் தயங்கி.
“சாருமா, அது அப்புறம் பாத்துக்கலாம். நான் பேசிக்கிறேன், அத்தை இப்போ ஊர்லயும் இல்ல. அவ வந்த பிறகு அவகிட்ட எப்படி பேசணும்னு நான் பார்த்துக்கிறேன். நீ முதல்ல புகழோடு புறப்படு. புகழ், நீ வந்து காலேஜ்ல சாருக்கு தேவையானது எல்லாம் செஞ்சு கொடு சரியா?” என்றார் சிவகுரு.
“அங்கிள், புகழ் நான் சொன்னா நீங்க ரெண்டு பேரும் தப்பா எடுத்துக்க மாட்டீங்கல்ல…?” என்றாள் மீண்டும் தயக்கத்துடன்.
“சொல்லு சாருமா, என்ன உன் மூளையை குழப்புது?” என்றனர் இருவரும் சேர்ந்து.
“அது வந்து இப்போதைக்கு எங்களோட கல்யாண விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம்னு நினைக்கிறேன் அங்கிள். ப்ளீஸ் என்னை புரிஞ்சுக்கோங்க…” எனவும்,
“என்னம்மா இது….” என்ற சிவகுரு பின், இப்போது இவளிடம் எதுவும் பேச வேண்டாம். பின்னர் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்து மகனைப் பார்க்க, அவனும் யோசனையாகவே இருக்க, வேறு வழியில்லாமல் இருவரும் சரியென்று சம்மதம் கூறினர்.
“தேங்க்ஸ் அங்கிள்!” என்றவளிடம், “உனக்கு தேவையானதை எடுத்து வை சாரு.” என்று புகழ் கூற, அவளும் தனக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க அறைக்குச் சென்றாள்.
அங்கிருந்து அவள் சென்றதும், யோசனையில் இருந்த தன் மகனைப் பார்த்தவர், “என்ன புகழ் யோசிக்கிற?” என்றார் அவன் அருகில் அமர்ந்து.
“இல்லப்பா, சாரு அமைதியா இருக்கிற மாதிரி வெளியில தெரியுது. ஆனா அவ உள்ளுக்குள்ள ரொம்ப உடைஞ்சி போய் இருக்காப்பா. அவளை எப்படி இதுல இருந்து மீட்க போறேன்னு எனக்கு தெரியல.” என்றான் பயத்தில்.
“சாருவோட நிலையும் அப்படித்தானே புகழ். அவள் இழந்தது ரொம்ப பெரிசு கண்ணா. உன்னால மட்டும் தான் அவளை இதுல இருந்து, மீட்டுக் கொண்டு வர முடியும். அதனால தான் உங்கூட அவளை நான் அனுப்புறேன். அவள் எந்த தப்பு செஞ்சாலும் அதை பெருசா எடுத்துக்காதே, பொறுமையா சொல்லு புரிஞ்சிப்பா.” என்றார் மகன் தோளைத் தட்டி ஆறுதலாக.
“ஐ க்னோ ப்பா, இதை நீங்க எனக்கு சொல்லணுமா? நான் மேனேஜ் பண்ணிக்குவேன். அவள என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவேன். ஆனா என்ன, அம்மா என்ன சொல்லுவாங்கனு நினைச்சா தான் எனக்குமே பயமா இருக்கு.” என்றான் வசந்தாவை நினைத்து.
“உண்மைதான் புகழ், கண்டிப்பா பிரச்சனை பண்ணுவா. நீ எங்களுக்கு ஒரே பையன் கண்ணா. அதனால அவளை சமாளிக்கிறது கஷ்டம். பட் சமாளிச்சிக்கலாம். இப்போதைக்கு அவளுக்கு எதுவும் தெரிய வேண்டாம். எப்ப தெரிய வருமோ, அப்போ தெரிஞ்சுக்கட்டும் சரியா? நீ போய் மருமகளுக்கு ஹெல்ப் பண்ணு.” என சமாதானம் செய்து மகனை அனுப்ப நினைக்க,
“ஆனா அப்பா, அம்மா என்னை பார்க்க பெங்களூர் வந்தால், அது அவங்களுக்கு ரொம்ப ஷாக்கா இருக்கும். இப்பவே சொல்லிட்டா பரவாயில்லனு எனக்குத் தோனுது. கோபப்படுவாங்கதான், ஆனா புரிஞ்சிப்பாங்கனு தான் நினைக்கிறேன். ட்ரை பண்ணலாமேப்பா?” என்ற மகனிடம்,
“வேண்டாம் புகழ், அவ வரமாட்டா புகழ். எப்படியும் லேடிஸ் கிளப், மீட்டிங்க்னு சுத்திட்டு இருப்பா. அப்படி வர நினைச்சாலும் நான் பார்த்துக்குறேன்.” என்று தைரியம் சொல்ல,
“தேங்க்யூ சோ மச் டேட்!” என்றான் நெகிழ்ந்த குரலில்.
“போடா டேய்… அப்பாக்கிட்ட போய் தேங்க்யூ எல்லாம் சொல்லிட்டு இருப்பியா? போ, போய் என் மருமக என்ன பண்றானு பாரு.” என சிரித்துக் கொண்டே அவனை விரட்ட,
சாருவின் அறைக்குள் வந்த புகழ், எதுவும் பேசாமல் தனது உடமைகளை எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் தன் மனையாளை, சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது துளைக்கும் பார்வை சாருவை உறுத்த தொடங்க, மெல்ல திரும்பி அவனைப் பார்த்தாள்.
“என்ன பேபி, என்ன பார்க்கிற, ஏதாவது ஹெல்ப் வேண்டுமா?” என்றபடியே அருகில் வர,
அவனைப் பார்த்து, ‘இல்லை’ என்று தலை அசைத்தவள், மீண்டும் தனது வேலையைத் தொடர்ந்தாள்.
ஆனாலும் கேட்காமல் அவளுக்கு உதவி செய்து, தன்னுடைய பொருட்களையும் பேக் செய்துவிட்டு, இறுதியாக எல்லா வேலையும் முடிந்ததும், இருவரும் சிவகுருவிடம் சொல்லிக்கொண்டு பெங்களூர் நோக்கி பயணமானார்கள்.
***
இருவரும் புகழின் பிளாட்டிற்கு வந்து சேர்ந்தனர். அது இரண்டு பெட் ரூம், ஒரு சமையல் அறை, அழகான பால்கனி என இருவருக்கும் ஏற்றவாறு இருந்தது.
சாரு எதுவும் பேசாது, புகழின் அறையைத் தவிர்த்துவிட்டு, மற்றைய அறையை தான் எடுத்துக் கொண்டாள். புகழ் அவளையே பார்த்துக் கொண்டு இருந்தானேத் தவிர, எதுவும் கேட்கவில்லை.
இரவு நேரத்திற்கான உணவை ஆர்டர் பண்ணிவிட்டு, அங்கிருந்த சோபாவில் அமர்ந்திருந்து, இங்கு வந்தது முதல் மூடப்பட்டிருந்த சாருவின் அறையையே பார்த்துக் கொண்டு இருந்தான்.
சில நிமிடங்களில் யாரோ அழும் சத்தம் கேட்டது. அந்த சத்தம் சாருவின் அறையில் இருந்து வருவதை உணர்ந்தவன், வேகமாக எழுந்து அவளது அறைக் கதவைத் தட்ட பார்க்க, கதவு தானே திறந்து கொண்டது. ஆம், சாரு கதவைத் தாழிடவில்லை.
அங்கே அவனின் காதல் மனைவி அறையின் மூலையில், தனது கால்களின் இடையில் முகத்தை வைத்துக் கொண்டு அழுது கொண்டு இருந்தாள்.
அவளை அப்படி ஒரு நிலையில் பார்த்த புகழுக்கு, தன் உயிரையே வெறுக்கும் எண்ணம் வந்தது. நொடியில் அவளிடம் சென்று தனது கைக்குள் இழுத்து அணைத்துக் கொண்டான்.
அவனது அணைப்பில் இருந்த சாரு, மெல்ல மெல்ல தனது அழுகையை நிறுத்த முயன்றாள். இதைப் பார்த்த புகழ், அவளது முகத்தை தனது கைகளில் ஏந்தி, “இங்க பாருடி, எதுக்காக எங்கிட்ட அழுகையை மறைக்கிற? உன்னோட மனசு விட்டு நல்லா அழுடா. அப்போதான் மனசில இருக்கிற பாரம் கொஞ்சமாவது குறையும். உன்னை இந்த நிலையில பார்க்க என்னால முடியலடி. இப்படி உன்னை பார்க்கிற கொடுமையை இனியும் கொடுக்காதடி.” என்ற அவனின் வார்த்தை அவளை உடைத்தது.
அவனது மார்பில் விழுந்து கதறியழ ஆரம்பித்தாள். “புகழ், என்னால முடியலப்பா… தா… த்… தா… எனக்காக வாழ்ந்தாரு, அவரை எப்பிடி எல்லாம் பார்த்துக்கணும்னு நினைச்சேன். அவ… அவரு ஏன் என்னை விட்டுட்டு போனாரு? அவருக்கு தெரியும், நான் அவரை விட்டுட்டு இருக்க மாட்டேன்னு. உனக்கு ஒண்ணு தெரியுமா? நான் தாத்தா ஊட்டி விட்டாத்தான் சாப்பிடுவன். அவருக்கும் அதுதான் சந்தோசம். ஏன் போனாரு? என்னைவிட்டு ஏன் போனாரு?” என கதறி அழுதாள்.
மனைவியின் கதறலில் புகழ் கண்களிலும் நீர் துளிர்க்க, கண்ணீருடன் அவளது தலையை வருடியவாறு இருந்தான்.
பெண்ணவளோ அழுது அழுது அவனது நெஞ்சிலே தூங்கிவிட்டாள். அப்போது அவன் ஆர்டர் செய்த உணவுகள் வந்துவிட, அவளைத் தூக்கி பெட்டில் படுக்க வைத்துவிட்டு, ஒரு நன்றியோடு உணவை வாங்கி வந்தான்.
அவளுக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு மீண்டும் அறைக்குள் வந்தவன், தனது நெஞ்சில் சாய்த்துக் கொண்டு உணவை ஊட்ட ஆரம்பிக்க, அவளும் தூக்கத்திலே உணவை வாங்கிக் கொண்டாள். அதில் சிரித்தவன், மெல்லிய முத்தம் ஒன்றை அவள் நெற்றியில் வைத்துவிட்டு அங்கிருந்து சென்றான்.
மனைவிக்கோ ஆழ்ந்த உறக்கம். ஆனால், கணவனானவனுக்கோ அது அவனை எட்டிக்கூட பார்க்கவில்லை. மனைவியைப் பற்றிய சிந்தனையிலேயே அன்றைய இரவைக் கழித்தான். அடிக்கடி அவள் அறைக்குச் சென்று மனைவியைப் பார்த்தும் கொண்டான்.
காலை எழுந்ததும் சாருவின் முகம் தெளிவாக இருந்தது. குளித்துவிட்டு வந்த சாரு, புகழின் அருகில் வந்து அவனது தோளில் சாய்ந்து கொண்டாள்.
“என்ன பேபி, ஓகேவா இப்போ?” என்றான் தன்னுடலை நெட்டிமுறித்து.
“ம்ம்… இப்போ ஓகேதான் புகழ். உங்களாலதான் நான் இப்போ பெட்டரா ஃபீலாகிருக்கேன். தேங்க் யூ சோ மச் புகழ்! ஆனா…” என தயங்க,
“என்ன அம்மு, என்ன வேணும்? தயங்காம சொல்லுடா…” எனவும்,
“இல்ல… உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்துறேன், அதுதான் வருத்தமா இருக்கு.” எனவும்,
“ஹேய் என்னப்பா நீ… இப்படியெல்லாம் நீ வேற, நான் வேறன்னு யோசிக்கிறியா? உன்னோட இடத்துல நான் இருந்தா, நீ என்ன செஞ்சிருப்ப? அதேதான் நானும் செஞ்சிருக்கேன்.”
“நான் எப்பவும் சொல்றதுதுதான் பேபி, உனக்காக எப்பவும் நான் இருப்பேன். கண்டதையும் யோசிக்காம கிளம்பு, கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம். மைண்ட் ரிலாக்ஸ் ஆகும்.” எனவும்,
“எங்க?” என்றாள், ‘வேண்டாமே’ என்ற பாவனையோடு.
“ம்ச்… முதல்ல காலேஜ் போய் அங்க பேசிட்டு, ஃபார்மாலிடிஸ் எல்லாம் முடிச்சிடலாம். எப்படியும் அப்பா எல்லாமே பேசிருப்பார். இருந்தாலும் நாமளும் ஒன்ஸ் பேசிட்டு வந்துடுறது நல்லது. அப்படியே ஜஸ்ட் அவுட்டிங் முடிச்சிட்டு லன்ச் வெளியே பார்த்துக்கலாம்.”
“ம்ம் ஓகே தான்… அங்க காலேஜ்ல எதுவும் பிரச்சனை இருக்காதே? அங்கிள்தான் பாவம்.”
“அதெல்லாம் அப்பா பேசிட்டார். அவரே எல்லா ஃபார்மாலிடிசும் முடிச்சு, இந்த காலேஜ் டீன்கிட்ட பேசிட்டார். சோ, நீ டென்சன் ஆகாத. உன் ஃப்ரண்ட்ஸ மிஸ் பண்றியா?”
“ம்ம் ஆமா, கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு. பட், ட்ச்ல இருக்குற மாதிரி மெயின்டெயின் பண்ணிக்கிறேன். காலேஜ் போலாம், ஆனா அவுட்டிங் ஏன்?”
“உள்ளேயே இருந்தா நீ தாத்தாவையே நினைச்சிட்டு கவலைப்படுவ அம்மு. நீ கவலையா இருந்தா, நம்மளை பார்த்திட்டு இருக்கிற தாத்தாவும் கவலைப்படுவாரு, சரியா? அதனால ஜஸ்ட் ஒரு ரெஃப்ரெஷ் போல நினைச்சுக்கோ.” என்றவன் அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
இருவரும் முதலில் காலேஜ் சென்று அங்கிருந்த வேலைகளை முடித்து, வெளியே உணவையும் உண்டு, மாலை நேரம் கடற்கரைக்கு சென்று சிறிது நேரம், அவளை எதையும் யோசிக்க விடாமல் உலாவவிட்டு இரவு வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். அதுவே அவனுக்கு பெரும் சாதனைதான்.
அவரவர் அறைக்கு சென்று ரெஃப்ரெஷ் ஆனதும், ஹால் சோபாவில் அமர, புகழ் அவளையே பார்த்தான்.
“என்ன புகழ் அப்பிடி பார்க்குறீங்க?” என பெண்ணவள் யோசனையாக,
“சாரு, நான் ஃபைனல் இயர்னால ஹாஸ்பிடலுக்கு ட்ரெயினிங் போகணும். நான் உன்னை மார்னிங் காலேஜ்ல விட்டுட்டு போறேன். வரும் போது நீ ஹாஸ்பிடல் வந்திடு, ஈவ்னிங் சேர்ந்து வரலாம், உனக்கு ஓகேவா?”
ம், ஓகேதான். நானே இதை சொல்லணும்னு இருந்தேன் புகழ்.”
“மேடம் தெளிவாகிட்டீங்க… போங்க, போய் தூங்குங்க.” என கிண்டலடிக்க,
அதில் சிரித்தவள் “நீங்க தூங்கல?” என அவனைப் பார்க்க,
“இல்லம்மா, நாளைக்கு ஹாஸ்பிடல் போகணும்ல… அதுக்கு ரெடியாகணும். எல்லாம் எடுத்து வைக்கனும், நீ போய் தூங்குடா.” என அனுப்ப,
“எனக்கு தூக்கம் வரலையே… வேணும்னா ஒண்ணு பண்ணலாம். நீங்க வேலைய பாருங்க, நான் பக்கத்தில இருந்து நீங்க பண்றதை பார்த்திட்டு இருக்கேன். உங்களை தொல்லை பண்ணாம இருப்பேன்.” என்றாள்.
“ஓகே அம்மு, பட் தூக்கம் வந்தா ஓடிடணும். ஃபர்ஸ்ட் டே காலேஜ் லேட்டா போகக்கூடாது, ஓகே?” என்றவன், தனது லேப்டாப் எடுத்து வந்து வேலையைப் பார்க்க, அவன் தோளில் சாய்ந்துகொண்டு அதைப் பார்த்துக் கொண்டு இருந்த சாரு, சிறிது நேரத்தில் அப்படியே தூங்கிப் போனாள்.
அவளது எடை தன்மீது அதிகமாவதை உணர்ந்தவன், நிமிர்ந்து தன்னவளைப் பார்க்க, அவளோ மன்னவன் தோளில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள்.
‘தூக்கத்தோடத்தான் இத்தனை பேச்சா?’ எனச் சிரித்துவிட்டு லேப்டாப்பை அருகில் வைத்து, அவளைத் தன் மடி மீது கொண்டு வந்தான். அவனது இடுப்பை இறுக்கிக் கொண்டு, வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டு தூக்கத்தைத் தொடர்ந்தாள் பெண்.
புகழோ அவனது வேலையை முடித்துவிட்டு, மனைவியை அவளறையில் உறங்க வைத்துவிட்டு தனது அறைக்கு வந்தவனுக்கு, நாளைய நாளை தன் மனைவி எப்படி சமாளிப்பாள் என்ற யோசனையே அவனை படுத்தியது.
காலையில் நேரத்திற்கே எழுந்து, இருவருக்கும் சமைத்தான் புகழ். சமையலறையில் கேட்ட சத்தத்தில் எழுந்து வந்த சாருவிடம் காபியை கொடுக்க, எதுவும் சொல்லாமல் வாங்கி குடித்தவள் ரெடியாக சென்றாள். புகழும் சமைத்து, குளித்துவிட்டு வந்ததும் இருவரும் சேர்ந்து சாப்பிட்டு காலேஜ் சென்றனர்.
புதிய கல்லூரி மிகவும் தயக்கத்துடனே சென்றாள். சிறிது நேரத்திற்குப் பின் அங்கிருந்த மற்றவர்களுடன் இணைந்து கொண்டாள். இவளது காலேஜ் இவ்வாறு செல்ல, கல்லூரி வளாகத்திலே இருக்கும் ஹாஸ்பிடல் சென்ற புகழ், யாரையோ எதிர்பார்த்துக் கொண்டு ஹாஸ்பிடல் வாசலிலே நின்றிருந்தான்.
நேரம் சென்று கொண்டு இருக்க, புகழுக்கு கோபம் வந்தது. முதல் நாளே இப்படி லேட்டா போகலாமா என்று. அவனை நோக்கி ஓடி வந்த ஒருத்தன், “சாரி மச்சான், கொஞ்சம் லேட்டாயிடுச்சி.” என்றான்.
“எது, இது கொஞ்சம் லேட்டா? ஏன்டா, முதல் நாளே இப்படி லேட்டா போனா, நம்மளை என்ன நினைப்பாங்க?” எனப் பல்லைக் கடிக்க,
“சரி மச்சான், அதுதான் ஐந்து நிமிஷம் இருக்குல்ல… வா.” என்றவன், புகழை உள்ளே அழைத்துச் சென்றான்.
***
1 comment
எவன் அவன்..? முதல் நாள் என்கிற பயம் கூட இல்லையோ..?
😀😀😀
CRVS (or) CRVS 2797