Home Love - Family - Romanceஓடங்கள் – 18

18

செல்வினை அழைத்துக்கொண்டு புகழ் கல்லூரி பகுதிக்குள் செல்ல, பின்னர் இருவருக்கும் வேலை சரியாக இருந்தது. அங்குள்ள டீனிடம் பேசிவிட்டு, சாருவின் டாகுமென்ட்சையும் கொடுத்து, வேறு என்ன வேண்டும் என அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டு வெளியில் வந்தனர்.

நிச்சயம் இது மலையை புரட்டிய வேலைதான். ஒரு கல்லூரியில் இருந்து, அதிலும் கடைசி ஆண்டில் இருக்கும் ஒரு மாணவியை மற்றொரு கல்லூரிக்கு மாற்றுவது என்பது சாதாரனம் இல்லையே. அதையும் இரண்டே நாளில் முடித்திருந்தார் சிவகுரு.

சென்னையில் உள்ள கல்லூரியில் செல்வினை வைத்து, சில லட்சங்களை இரண்டு கல்லூரியிலும் கொட்டி, அனைத்து வேலையையும் முடித்திருந்தார்.

இங்கு வகுப்பறையில் முதலில் தயங்கினாலும், பின் நட்புகள் கிடைக்க, சாருவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். மாலை காலேஜ் முடிந்ததும் புகழ் கூறிச் சென்ற அந்த ஹாஸ்பிடல் முன்னால் சென்று, அவனுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.

புகழும் தனது வேலைகளை முடித்து, சீஃப் டாக்டரிடம் சொல்லிக்கொண்டு செல்வினுடன் வெளியில் வர, “எதுக்குடா இவ்வளவு பரபரப்பு? நான் முன்னமே போறேன்னு சொன்னேன்ல…” என செல்வின் கிண்டலடிக்க,

“ம்ச்… ஃபர்ஸ்ட் டே க்ளாஸ் அவளுக்கு. எப்படி மேனேஜ் பண்ணாளோ தெரியல. நானே பதட்டத்துல இருக்கேன், நீ வேற ஏன்டா…” என செல்வினைத் திட்டிக்கொண்டே, வெளியே நின்ற சாருவைப் பார்த்து புன்னகைத்தபடி தனது கையை அசைக்க, சாருவும் அவர்களைப் பார்த்து பதிலுக்கு கையசைத்து புன்னகைத்தாள்.

அவளிடம் வந்தவன், “இவனை உனக்குத் தெரியுமில்ல, நான் சொல்லிருக்கேன்ல செல்வின். என்னோட க்ளோஸ் ஃப்ரண்ட். அப்பாவோட ரைட் ஹேண்ட்.” என்று அறிமுகப்படுத்த,

“ஹாய் அண்ணா!” என சாருவும் புன்னகைக்க,

“ஸாரிடாம்மா! நானும் வரணும்னு இருந்தேன். சார்தான் உன்னோட காலேஜ் வேலை பார்க்கணும்னு இருக்க வச்சுட்டார். இப்போ ஓகேவா? எதையும் யோசிக்கக்கூடாது, சரியா? புகழ் இருக்கான், நான் இருக்கேன், தைரியமா இருக்கணும், ஓகே?” என படபடவென பேச,

“ம்ம் அண்ணா… எல்லாம் சரியாக கொஞ்ச நாளாகும் இல்லையா? சரியாகிடுவேன்.” என்றாள் வலிந்த புன்னகையோடு. அந்த சிரிப்பிற்கு பின் இருக்கும் வலி அவர்களுக்குப் புரியாமல் இல்லையே!

அவளே எல்லாவற்றையும் மறந்து சரியாக வேண்டும் என்று நினைக்கும்போது, முடிந்ததை பேசி அவள் வலியைக் கிளற வேண்டாம் என முடிவெடுத்த இருவரும், முதல் நாள் கல்லூரி எப்படி இருந்தது என கேட்க ஆரம்பிக்க, பின் பேச்சு அதில் சென்றது.

“சரி மேரேஜ்தான் யாருக்கும் சொல்லல, நானும் இல்ல. புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து எனக்கு ட்ரீட் வச்சா, அப்படியே என்ஜாய் பண்ணிட்டு ஃப்ளைட் ஏறிடுவேன்.” என செல்வின் இருவரையும் கிண்டலடிக்க,

“சோத்துக்கு அலைஞ்சவனே… வந்து தொல.” என புகழும் அவனை நக்கலடித்தபடியே காரை எடுக்க, இவர்களைப் பார்த்து சிரித்தபடியே சாருவும் கிளம்பினாள்.

“அடுத்து என்ன ப்ளான் புகழ், சென்னை எப்போ வரீங்க? மேடம்கிட்ட எப்போ சொல்ல போறீங்க?” என்ற செல்வினிடம்,

“தெரில மச்சான், எனக்கு இப்பவும் ஓகேதான். இவதான் வேண்டாம்னு சொல்றா. சரி, கொஞ்சநாள் அவளும் யோசிக்கட்டும். பார்க்கலாம்…” என்ற புகழ், சாருவைப் பார்க்க, அவளோ எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.

“ஏன் சாரும்மா…” என ஏதோ பேச வந்த செல்வின், புகழின் முகத்தைப் பார்த்து நிறுத்திக்கொண்டான்.

“ரொம்பவே பயப்படுறாடா, இப்படியே இருக்க முடியாது. சரி விடு, அவளே புரிஞ்சிக்குவா. ஃபோர்ஸ் பண்ண வேண்டாம்.” என்றவன் மனைவியிடம்,

“பேபிமா, நீ என்னை காண்டாக்ட் பண்ண முடியாமல் போனா, உடனே செல்வினுக்கு கூப்பிட்டு தயங்காமல் உதவி கேட்கலாம். யோசிக்கவே வேண்டாம், சரியாடா?” என்றதும், அவளும் சரியென்று தலையாட்டிக் கொண்டாள்.

மூவரும் பேசிக் கொண்டே ஹோட்டல் சென்று சாப்பிட்டு, செல்வினை ஏர்போர்ட்டில் இறக்கி விட்டபின், தங்கள் பிளாட்டிற்கு சென்றனர்.

அடுத்து வந்த நாட்கள் வழக்கம் போல அவர்களது வாழ்க்கை சென்றது. காலையில் காலேஜில் சாருவை இறக்கி விடுவதும் பின் மாலையில் அவளுடன் சேர்ந்து வருவதுமாக இருந்தான் புகழ்.

சிவகுருவும் தினமும் அழைத்து இருவரிடமும் பேசி விடுவார். செல்வின், சாரு அண்ணன், தங்கை உறவு மிக அழகாக சென்று கொண்டிருந்தது. சாருவும் மெல்ல மெல்ல புகழுடன் நெருங்கியிருந்தாள்.

ஈரோப்பில் தனது சுற்றுலாவை முடித்துக் கொண்டு சென்னை வந்த வசந்தா சிவகுருவிடம், “ஏங்க, எனக்கு புகழை பார்க்கணும் போல இருக்கு.” என்று ஆரம்பித்தார்.

“இப்போ எதுக்கும்மா அவனை பார்க்கணும்? அதுதான் டெய்லி வீடியோ கால்ல பேசிட்டுதானே இருக்க?” என்றார் பதட்டத்தைக் காட்டாமல்.

“இல்லங்க, வீடியோல பார்த்தாலும் என் பையனை நேர்ல பார்க்கிற மாதிரி இருக்குமா? முன்னாடி எல்லாம் ரெண்டு வாரத்திற்கு ஒரு தடவை வந்திட்டு போவான். இப்போ ஒரு வருசம் ஆகிட்டு, அவன் இங்க வந்து.” என்று கண் கலங்கினார்.

“அதுதான் இப்போ அவன் ஹாஸ்பிடல்ல ட்ரெயினிங் போறான்லமா. ஃபைனல் யேர் வேற, வொர்க்கும் நிறைய, அதனால நேரம் கிடைக்காது. ட்ரெயினிங் முடிஞ்சதும் உங்கிட்டயே வந்திடுவான். கவலைப்படாத வசந்தா, கொஞ்சநாள் தானே…” என சமாதானம் செய்ய,

“ம்ம்ச்… நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் என்னால ஏத்துக்க முடியாது. எனக்கு புகழை பார்த்தே ஆகணும். அவன் வரலைன்னா என்ன, நாம போயிட்டு வந்துடலாம்.” என்று மீண்டும் ஆரம்பிக்க,

“அதெல்லாம் வேண்டாம் வசு, நீயே இப்போதான் வந்துருக்க. மறுபடியும் ஏன் அலைச்சல்? அவனையே லீவ் போட்டு வர சொல்லலாம்.” என்று முடித்துவிட,

“ம்ம் சரி, சீக்கிரமா அவன்கிட்ட சொல்லுங்க. இந்த வீக்கென்ட்டே வரச் சொல்லிடுங்க.” என அவரும் இறுதியாக முடித்துவிட,

இனி என்ன சொன்னாலும் மனைவி கேட்கமாட்டாள் என்று புரிய, “சரி, நான் புகழ்கிட்ட பேசி வர சொல்றேன்.” என்று போனோடு நகர்ந்து விட்டார்.

அவருக்கு இனி என்ன சொன்னாலும் வசந்தா கேட்கமாட்டார் என்று தெரியும். மேலும் வேண்டாம் வேண்டாம் என்றால் ஏன், எதற்கு என்று குடைவதோடு இல்லாமல், நேராக அங்கேயே போய் நின்றும் விடுவார். அது சாருவுக்கும் பிரச்சனையாகி விடும். அதனால் அன்றிரவு மனைவி உறங்கியபின் மகனுக்கு அழைத்தார் சிவகுரு.

இறுதிப் பரீட்சைக்காக படித்துக் கொண்டிருந்தாள் சாரு. புகழ் இரவு உணவை சமைத்துக் கொண்டிருக்க, அந்த நேரம் அவனின் போன் ஒலிக்கவும் எடுத்துப் பார்த்தான். தன் தந்தையிடம் இருந்து அழைப்பு வந்தது.

யோசனையோடே எடுத்தவன், “ஹாய் ப்பா, எப்படி இருக்கிறீங்க?” என்றதும்,

“நான் ஓகே புகழ், நீயும் சாருவும் எப்படி இருக்கீங்க?” என நலம் விசாரிக்க,

“நாங்களும் ஓகேதான் ப்பா, உங்களுக்கு என்னாச்சு? ஏன், உங்க வாய்ஸ் உள்ள போகுது?”

“நத்திங் கண்ணா, நீ எப்போ யுஎஸ் போற?”

“இன்னும் டூ மன்த்ஸ் இருக்கேப்பா, சாருவுக்கும் காலேஜ் முடிஞ்சிடும். அவளை பிஜில ஜாயின் பண்ண வச்சி எல்லாம் செட்டில் பண்ணிட்டு கிளம்பிடலாம்.”

“ம்ம் ஓகே கண்ணா, இந்த வீக் நீ வீட்டுக்கு வந்திட்டு போ புகழ்.”

“என்னாச்சிப்பா? ஏதாவது பிரச்சினையா? என்ன திடீர்னு வரச் சொல்றீங்க? அம்மா… அம்மா நல்லா இருக்காங்க தானே?”

“இங்க ஒரு பிரச்சனையும் இல்லை புகழ். உன்னோட அம்மா தான் உன்னை பார்க்கணும்னு சொல்லிட்டு பிரச்சனை பண்ணிட்டு இருக்கா.”

“அம்மாகூட நான் தினமும் வீடியோ கால் பேசிட்டு தானே இருக்கேன். என்னாச்சுப்பா, சாரு பத்தி தெரிஞ்சிடுச்சா?”

“நோ கண்ணா, அதுக்கு வாய்ப்பே இல்ல. பார்க்கணும் சொல்றா, வந்துட்டு போ. இல்லை, அங்க வந்து நிப்பா.”

“ம்ம் ப்பா… சாருவை எப்படி தனியா விட?”

“புகழ் உனக்குதான் அவளை பற்றி தெரியுமே. உன் மேல ரொம்ப பாசம் வச்சிருக்கா. உன்னை நேர்ல பார்த்து ரொம்ப நாளாச்சு. அதுதான் உன்னை பார்த்தே ஆகணும்னு பிடிவாதமா இருக்கா. ரீசன் சொல்ல முடியாது.”

“அப்பா எனக்கு புரியுது, ஆனால் இங்க சாருவை தனியாக விட்டுட்டு எப்பிடி நான் அங்க வர முடியும்? ம்ம்… ஓகே ப்பா, நான் அவக்கிட்ட பேசிட்டு சொல்றேன்.”

“ஒரு ரெண்டு நாள் மட்டும் வந்திட்டு போ புகழ். சாரு சமாளிச்சிடுவா, இல்லைனா உன் அம்மா அங்க வந்திடுவா. அப்புறம் பெரிய பிரச்சனையாகிடும்.”

“சரிப்பா, நான் சாருக்கிட்ட பேசிட்டு சொல்றேன்.”

“சரி கண்ணா, சாருவை கேட்டதா சொல்லு, மார்னிங் பேசுறேன்.” என்றவர் போனை வைத்தார்.

புகழோ யோசனையோடு சமைத்துவிட்டு, மனைவியை சாப்பிட அழைத்தான்.

“கொஞ்சம்தான் இருக்கு புகழ், முடிச்சிட்டு வந்துடுறேன். இப்போ எழுந்தா கஷ்டம், ப்ளீஸ்… நீங்க சாப்பிடுங்க. நான் இதை முடிச்சிட்டு சாப்பிடுறன்.” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்ட புகழ், சிரித்துக்கொண்டே எதுவும் பேசாது உள்ளே சென்று, ஒரு தட்டில் சாப்பாட்டை எடுத்து வந்து அவளருகில் சோபாவில் அமர்ந்தான்.

கண்களை புத்தகத்தில் பதித்திருந்த சாருவின் வாய் அருகே உணவு நீட்டப்பட, நிமிர்ந்து பார்த்த சாரு கண்களால் அவனைப் பார்த்து சிரித்தாள்.

“சாப்பிடுடி.” என்றவன் உணவை எடுத்துக் கொடுக்க, சிரித்துக் கொண்டே சாப்பிட்டாள். இது இவர்களுக்கிடையே அடிக்கடி நடப்பதுதான். அவனுக்கு வேலையாக இருக்கும் நேரத்தில் இவளும், இவளுக்கு வேலையாக இருக்கும் நேரத்தில் அவனும் உணவை ஊட்டிவிடுவர்.

ஒரு வழியாக அவளுக்கு ஊட்டிவிட்டு, அவனும் உண்டுவிட்டு மீண்டும் அவளருகே வந்தமர்ந்தான்.

“பேபி, எல்லாம் படிச்சி முடிச்சிட்டியா?” என்றான் மெதுவாக.

“ஆ… முடிச்சிட்டேன்ப்பா. சொல்லுங்க, என்னாச்சு? ஃபேஸ் டல்லடிக்குது.” என அவன் தோளில் சாய,

“ம்ம்… அப்பா போன் பண்ணாங்கடா.” என்றான், அவளுக்கு தோதாக தன் தோளை சாய்த்தபடி.

“மாமாவா? எப்பவும் பண்றது தானேப்பா, என்ன சொன்னாங்க? எப்பிடி இருக்காங்க, அங்க எதும் பிரச்சனை இல்லையே?” என்றாள் கொஞ்சம் பதட்டமாக.

“ஹேய்… அதெல்லாம் இல்லம்மா, நல்லா இருக்காங்கடா. என்னை ஊருக்கு வரச் சொல்றார்.” என்றதும்,

“ஓ…” என்றவள், “ஏன்ப்பா திடீர்னு…?” என யோசனையாக,

“இல்லை, அம்மா வந்துட்டாங்கடா. என்னை பார்த்து ரொம்ப நாளாச்சா? அதனால பார்க்கணும்னு சொன்னாங்களாம்டா. நான் போகலன்னா அவங்க இங்க வந்திடுவாங்க, அதான் யோசிக்குறேன்.” என்றான் அவளது தலையை வருடியபடியே.

“ஓ வந்துட்டாங்களா? அப்போ போயிட்டு வாங்க புகழ். எப்படியும் போகத்தானே வேணும்.” என்றாள் சாதாரணமாக.

“உன்னை இங்க தனியாக விட்டுட்டு எப்படி போக அம்மு? உனக்கு தனியா இருக்க முடியுமா?” என்றான் பதட்டமாக.

“அதெல்லாம் நான் இருந்துப்பேன். எப்படியும் நீங்க யுஎஸ் போனதும் இப்படித்தானே இருக்க முடியும், பழகிக்கலாம். ஏதாச்சும்னா உங்களுக்கு போன் பண்றேன். நீங்க போயிட்டு வாங்க. எப்படியும் அவங்களையும் பார்க்கணும் தானே?” என்றாள் சமாதானமான குரலில்.

“சாரும்மா, எனக்கு உன்னை விட்டுட்டு போகவே பிடிக்கலை பேபி. ரெண்டு நாள்தான், பட் மனசுக்கு கஷ்டமா இருக்கு. நீ இருந்துப்ப இல்ல?” என்றான் வருத்தமாக.

“ரெண்டு நாள்தானே? நான் பத்திரமா இருப்பேன் புகழ். அடுத்து ரெண்டு வருசம் நீங்க போவிங்க, அதுக்கு இது பரவாயில்ல, போயிட்டு வாங்க.” என்று அவனை ஒருவழியாக சமாதானம் செய்தாள் சாரு.

அடுத்த நாள் காலையில் செல்வினை அழைத்து, சாருவின் துணைக்கு ஒரு பெண்ணை பார்க்க சொல்லி இருந்தான். ஜெயா என்ற பெண்ணும் கிடைக்க, அவர் வரவுமே அந்த வார இறுதியில் மனைவியை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தன்னவளை அணைத்து ஆறுதலாக நெற்றியில் முத்தமிட்டு சென்னை கிளம்பினான் புகழ்.

கணவன் கிளம்பும் வரை தன்னை தைரியமாகக் காட்டிக் கொண்ட பெண்ணவள், அவன் அந்தப்பக்கம் நகர்ந்ததுமே வெடித்து அழ ஆரம்பித்தாள். அதைப் பார்த்த ஜெயாவுக்குமே மிகுந்த வருத்தமாக போய்விட்டது.

“சாரும்மா, இப்படி நீ அழறது மட்டும் தம்பிக்கு தெரிஞ்சது ரொம்பவே கஷ்டப்படும். நீதானே போய்ட்டு வாங்கனு சொன்ன, இப்போ இப்படி அழுதா என்ன செய்ய?” என ஜெயா அவளை சமாதானம் செய்ய,

“புரியுது ஜெயாம்மா, ஆனா அவங்க அம்மாவை நினைச்சுத்தான் பயமா இருக்கு. என்னமோ மனசே சரியில்ல, இன்னைக்கு கோவிலுக்கு போய்ட்டு வரலாமா?” என அழுத முகத்தைத் துடைத்தபடியே கேட்க,

“போகலாம், போகலாம். முதல்ல முகத்தை கழுவிட்டு வா. எப்படி சிவந்து போச்சு பாரு. இனி இப்படி ஊருக்கு அனுப்பிட்டு அழக்கூடாது சரியா? அது தப்பு… வா, சாப்பிட்டு கிளம்பலாம். இன்னைக்கு காலேஜ் லீவா, இல்லை நீ லீவா?” என்றபடியே அவளுக்கு சாப்பாட்டை எடுத்து வைக்க,

“நான்தான் லீவ். க்ளாஸ் போனாலும் கவனம் இருக்காது ஜெயாம்மா. இன்னைக்கு எனக்கு கோவில் போகணும் போல இருக்கு, போகலாம்.” என்று முடித்துவிட,

“சரிம்மா, தம்பிக்கு சொல்லிட்டு கிளம்பு. சீக்கிரம் போய்ட்டு வந்துடலாம்.” எனவும், சாருவும் புகழுக்கு ஒரு மெசேஜை தட்டிவிட்டு இருவரும் இஸ்கான் டெம்பிள் கிளம்பி சென்றனர்.

***

You may also like

1 comment

M. Sarathi Rio May 29, 2026 - 6:41 pm

புகழுக்கு ஏதாவது பணக்கார வீட்டு அலையன்ஸ் பார்த்திருக்கிறாங்களோ வசந்தாம்மா…?

😀😀😀
CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured