21
“என்ன வசு, ஏன் ஒரு மாதிரி இருக்க? நான் அந்த பொண்ணை கூட்டிட்டு வந்தது உனக்கு பிடிக்கலைன்னு எனக்கு தெரியுது. நானும் வேணும்னு செய்யலை, என்கிட்ட ஒருத்தர் உதவி கேட்டு அதை என்னால மறுக்க முடியலை. வேணும்னா நாளைக்கு காலையில் அந்த பொண்ணை ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுடுறேன்.” என்றார் மனைவியை அறிந்தவராக சிவகுரு.
சட்டென்று திரும்பி கணவரை முறைத்தார் வசந்தா. “ஒண்ணும் தேவையில்லை, அதான் இருக்க சொல்லியாச்சுல…” என்றவரின் முகம் இன்னமும் தெளிவில்லாமல் தான் இருந்தது.
“என்ன யோசனை உனக்கு?”
“என்னமோ எனக்கு சொல்லத் தெரியலை, மனசெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு, பிடிக்கலை.” என்றார் பளிச்சென்று.
“அந்த பொண்ணையா?”
“இருக்கலாம்…” என்ற மனைவியின் உடைந்த பேச்சு, இன்னும் அவருக்கு கலக்கத்தை தான் கொடுத்தது.
“ஏன்?”
“தெரியலை.” என்றவர் தொடர்ந்து, “நீங்க அந்த பொண்ணை அடுத்த வாரம் கூட கூட்டிட்டு வந்திருக்கலாம்.”
“ஏன்?”
“புகழ் இங்க இருக்கான், ஒரு வயசு பையன் இருக்க வீட்டுல வயசு வந்த பொண்ணை யாரும் தங்க வைப்பாங்களா?” என்றார் கணவரை முறைத்தவாறே.
‘அடடே! இதுதான் இவ பிரச்சனையா? அதான் நம்ம புள்ளைக்கு அந்த புள்ளைய புடிச்சு போய் கல்யாணமும் முடிஞ்சு போச்சே. இது தெரியாம இவ வேற…’ என்று எண்ணியவர், “வீட்டுல அவங்க ரெண்டு பேரு மட்டுமாவா இருக்க போறாங்க? நான், நீ, வீட்டு வேலையாளுங்க எல்லாரும் தானே இருக்கோம்.”
“இருந்தா… இல்ல இருந்தா, இப்போ என்ன? பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்காதா?”
“ஓ! நம்ம பிள்ளைய பத்தி நீ இப்படித்தான் நினைக்கிறியா?”
“சும்மா இருங்க சொல்லிட்டேன், நான் ஒண்ணும் என் பிள்ளையை சொல்லலை.”
“அப்போ யாருன்னே தெரியாத அந்த பொண்ணைப் பத்தி சொல்றியா?”
“பேசாம படுங்க, வாயை கொடுத்து வாங்கி கட்டிக்காதீங்க.” என்றுவிட்டு படுத்துவிட்டார் வசந்தா. சிவகுருவும் மேற்கொண்டு பேச்சை வளர்க்கவில்லை.
தாயும் தந்தையும் மகனைக் குறித்த பேச்சில் அவர்கள் அறையில் இருக்க, இங்க நெருப்பு பஞ்சைப் பத்திக்கொள்ள பூனையை போல நடை போட்டு, கீழே இருந்த அறைக்கு வந்து கதவைத் தட்டியது. இந்த நேரம் யாரு என்று யோசித்தவளுக்கு தன் கணவன் முகமே வர, கொஞ்சம் பயத்துடனே மெல்ல கதவைத் திறக்க, வேகமாய் முன்னேறியவன் அறைக்குள் நுழைந்து தாழிட்டான் முதலில்.
“என்ன பண்றீங்க?”
“என்னடி பண்ணேன் உன்னை?” என்றவன் ஆசுவாசமாய் கட்டிலில் வந்தமர்ந்தான்.
“அத்தை பார்த்தா என்னாகுறது? ஏற்கனவே அவங்களுக்கு என்னை பிடிக்கலை.”
“அப்படி அவங்க வாயால சொன்னாங்களா உன்னை?” என்று முறைத்தவன் அவள் கையை சுண்டியிழுக்க, தொப்பென்று அவனருகே விழுந்தாள்.
“இன்னும் ஒரு வாரம் தான்…” என்றவன், அவளருகே அவனும் கட்டிலில் சாய்ந்தான்.
“அதுக்கு…?” என்றவள் அவனைப் பார்த்தவாறு திரும்பியிருந்தாள்.
அவளை ஒரு மார்க்கமாக அவன் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன பேச்சே…” என்றவள், அப்போதுதான் அவன் பார்வை போகும் திக்கை கவனித்து, சட்டென்று எழுந்து அமர்ந்தாள் உடையை சரி செய்தவாறே.
அதில் எரிச்சல் கொண்டவன், “இப்போ என்னடி?” என்றான்.
“நீங்க மேல உங்க ரூமுக்கு போங்க.”
“இன்னும் ஒரு வாரம்தான் சாரு நான் இங்க இருப்பேன். உன்கூட இருக்கலாம்னு ஆசையா வந்தா துரத்துற?”
“இப்போ மட்டும் என்ன, என் கூட ஒரே வீட்டில தானே இருக்கீங்க? பெங்களூர்ல எப்படி இருந்தோமோ அப்படித் தானே இருக்கோம்.” என்று அவள் நியாயம் பேச, அநியாயத்திற்கு அந்த நியாயம் அவனுக்கு பிடிக்காமல் போனது.
“காலம் பூரா ஒரே வீட்டில இருந்தா மட்டும் போதுமா? அப்படியே இருந்தா வீட்டில நீயும் நானும் மட்டும்தான் இருப்போம். நமக்கு வாரிசுனு ஒண்ணு இல்லாமலே போய்டும்.”
“இப்போ என்ன பண்ணணுங்குறீங்க?”
“ஒண்ணும் பண்ண வேண்டாம், போ.” என்றவன் வேகமாய் கட்டிலில் இருந்து எழுந்து வெளியே செல்லப் போக, ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள்.
“கோவமாப்பா?” என்க, அவன் திரும்பாமலே நின்றிருந்தான்.
“எனக்கு உங்களைவிட வேற எதுவும் பெரிசில்லை. உங்க உரிமையை நான் தடுக்க மாட்டேன்.” என்று அவனை சுற்றி வளைத்திருந்தவளின் இறுக்கம் அதிகரிக்க, அவனின் இறுக்கம் முற்றிலும் தகர்ந்தது.
மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான். அவன் மார்பிலேயே மேலும் ஒன்றினாள் அவள். “உன் விருப்பம் இல்லாம உன்னை எடுத்துக்க மாட்டேன் சாரும்மா. இப்பவும் நான் எதுவும் செய்ய வரலை. உன் கூட இருக்கலாம்னு தான் வந்தேன். இருக்கவா, போகவா?” என்றான் அவளை ஆழப் பார்த்து.
“ஹ்ம்ம்… என்னோடவே இருங்க.” என்று அவள் சொல்ல, அவளுடனே வந்து படுக்கையில் அமர்ந்தான். “தூங்கலாமா?”
“காலையில அத்தை பார்த்தா?”
“அதுக்கு முன்ன நான் எழுந்து ரூமுக்கு போய்டுவேன். அப்பாக்கு நான் இங்க வந்தது தெரியும், சொல்லிட்டு தான் வந்தேன்.” என்றவனை திகைப்பாய் பார்த்தாள்.
“மாமா என்னை என்ன நினைப்பாங்க?”
“என்ன நினைப்பாங்க, மகனும் மருமகளும் சந்தோசமா இருக்கட்டும்னு தான் நினைப்பாங்க. நீ பேசாம படு.” என்றவன் படுத்துவிட, அவளையும் இழுத்து தன்னுடன் படுக்க வைத்து விளக்கணைத்து, விடி விளக்கை போட்டு அவளை அணைத்தவாறே உறங்க ஆரம்பித்தான்.
தினமும் அவர்களின் இரவு பொழுது அப்படியே சென்றது. பகலில் கேம்ப் என்று சொல்லி சாருகேஷி வெளியில் கிளம்பிவிட, தாமதமாய் மகன் நண்பர்களைப் பார்த்து வர என்று கிளம்பி சாருவுடன் இணைந்துக் கொள்வது, சிவகுருவிற்கும் செல்வினுக்கும் மட்டுமே தெரியும்.
மகனும் சாருவும் வீட்டில் இருக்கும் போது, ஒருவரின் பார்வை மற்றவரைத் தீண்டாது இருந்ததால் நிம்மதியுற்றார் வசந்தா. பின்னே அழகான பெண் வீட்டில் இருந்தால், சும்மாவாது ஆண்களின் கவனம் அவர்களை நோக்கிச் செல்லும் தானே?!
மகனின் கவனம் அதில் கலையவில்லை என்பதில், பெருத்த நிம்மதி அன்னைக்கு. உடன் சாருவும் அவனை ஏறிட்டு பார்க்காததால், பெரிதாய் அவரை எந்த சந்தேகமும் ஆட்கொண்டிருக்கவில்லை.
புகழ் ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. சாரு அன்று காலையிலேயே கிளம்பிவிட்டாள் ஊருக்கு. அப்படித்தான் வசந்தாவிற்கு சொல்லப்பட்டது. புகழுக்கு நள்ளிரவு தான் ஃப்ளைட் என்பதால், அவளை அழைத்துச் செல்லத்தான் அந்த ஏற்பாடு.
மனைவியை வீட்டில் விட்டுவிட்டு மகனை தானே விமானம் ஏற்றிவிட்டு வருவதாகச் சொல்லி, சாருவை அவனுடன் இருக்க வைக்க சிவகுரு நினைக்க, வசந்தா உடன் வந்தே தீருவேன் என்று அடம் செய்து வந்துவிட்டார்.
அப்பாவும் மகனும் விழி பிதுங்கி நிற்க, செல்வின் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான். அப்போதே அவனுக்கு புரிந்து போனது, மனைவி வந்துவிட்டாள் என்று. கண்கள் அவளை அங்குமிங்கும் தேட கண்ணில்தான் படவில்லை பெண்ணவள்.
“வசு நாம கிளம்பலாம், டைமாச்சு.”
“என்ன டைமாச்சு? அவனுக்கு ஃப்ளைட் இரண்டு மணிக்கு தானே, மணி பதினொண்ணு தானே ஆகுது?”
“அம்மா, அப்பா சொல்றது தான் சரி. எனக்கு இமிக்ரேஷன், செக்கிங் எல்லாம் இருக்கும்மா. நான் இப்போவே உள்ள போய்டுவேன். நீங்க இங்க இருந்து என்ன செய்யப் போறீங்க?” என்று மகனும் சொல்ல, வேறு வழியில்லாது மகனுக்கு ஆயிரம் பத்திரம் சொல்லி அங்கிருந்து கிளம்பினார் வசந்தா.
“நீ இங்க என்ன பண்ணப்போற, கிளம்ப வேண்டியது தானே?” என்று செல்வினைப் பார்த்து சிடுசிடுத்தார்.
“நான் பத்து நிமிஷம் பேசிட்டு கிளம்பிடுவேன்.” என்றான் அவன்.
“அவன் மட்டும் பத்து நிமிஷம் பேசுவானா? நான் என் மகன் கூட பேசக்கூடாதா?” என்ற வசந்தாவின் பிடிவாதம், சிவகுருவை மலைக்க வைத்தது.
“ஃப்ரண்ட்ஸ் பேசிக்க ஆயிரம் விஷயம் இருக்கும். வயசு பசங்க, நீ பேசாம வாயேன் வசு.” என்று அதட்டியவர், மனைவியை அழைத்து சென்றிருக்க, புகழின் மனைவியை செல்வின் மனைவி அழைத்து வந்தாள்.
சாருவை கண்களில் முழுதாய் புகழ் நிறைத்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு தனிமை கொடுத்து கணவனும் மனைவியும் விலகினர்.
நேரம் எப்படி போனதென்றே தெரியாது போக, அவன் கிளம்பும் நேரம் என்ன முயன்றும் அவளால் அழுகையை அடக்கவே முடியவில்லை. அவள் கேவலை அடக்க முயல, தொண்டையில் பெரிதாய் வலி எழுந்தது.
செல்வினை அலைபேசியில் அழைத்தவன், அவர்களை உடனே கிளம்ப சொல்லிவிட்டான். மனைவியின் அழுத முகம் கண்டு, அவன் கிளம்ப விரும்பவில்லை. மேலும் ஒரு நொடி தாமதித்தாலும், உடனே தன் பயணத்தை தவிர்த்திடுவோம் என்று உணர்ந்துதான் கிளம்ப சொன்னான்.
மனம் இப்போதும் மனம் கவர்ந்தவளின் நினைவிலேயே உழன்றது. தினமும் வீடியோ காலில் அவளைப் பார்த்தாலும், நேரில் பார்ப்பது போல இருக்காது தானே!? அவளின் தேக மெலிவு அவனுக்கு வருத்தமாயிருந்தது.
ஓடிவிட்டது, இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. இடையில் ஒருமுறை இந்தியாவிற்கு சென்று, ஒரு வாரம் இருந்து வந்தான். அன்னைக்கு இரண்டு நாட்கள், மனைவிக்கு நான்கு நாட்கள் என ஒதுக்கி அவன் இருந்து சென்றிருக்க, இருவருக்குமே அவன் தங்களுடன் அதிக நாட்கள் இருக்கவில்லை என்ற வருத்தம்.
செல்வின்தான் அவளை முழுதாய் கவனித்துக் கொண்டான். பெங்களூர் அலுவலகத்தை அவன் பொறுப்பில் மாற்றி வைத்திருந்தார் சிவகுரு. செல்வினின் மனைவி நிறை மாதத்தில் இருக்க, தற்செயலாய் வீட்டிற்கு சாருகேஷி வந்த அன்று, அவளுக்கு பிரசவ வலி கண்டது.
ஜெனிக்கு அரிய வகை ரத்தம் ஏபி நெகட்டிவ் என்பதால், மருத்துவர் அவளை அதிக கவனத்துடன் கவனித்துக் கொள்ள சொல்லியிருந்தார். பிரசவத்தில் அதிகமான ரத்தப்போக்கு இருந்தால், அவளுக்கு ரத்தம் ஏற்ற நேரிடலாம். அதனால் அவளை பிரசவத்திற்கு ஒரு வாரம் முன்பே மருத்துவமனையில் அனுமதிக்க கூறியிருந்தனர்.
ஜெனிக்கோ அவர்கள் எதிர்பார்த்ததை விடவும் பத்து நாட்கள் முன்பே பிரசவ வலி கண்டிருக்க, சாருகேஷி தான் அவளை மருத்துவமனை அழைத்து சென்றாள். வீட்டில் ஜெனியுடன் இருக்கும் நபருக்கு, விபரம் சொல்லி செல்வினுக்கு சொல்லச் சொல்லி இருந்தாள்.
வேலை விஷயமாக அவன் சென்னைக்கு அன்று காலையில் தான் கிளம்பியிருந்தான். அதனால் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை, அலைபேசியும் அணைத்து வைத்திருந்தான் போலும்.
சிவகுருவிற்கு அழைத்து போனில் அவள் சொல்லியிருக்க, இதோ ஜெனியுடன் அவள் மருத்துவமனையில். அவளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஜெனிக்கு இரத்தப்போக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகியிருக்க, உடனே ரத்தம் தேவைப்பட்டது.
மருத்துவர்கள் என்ன செய்வது என்று திணற, குழந்தைக்கு உடைகள் வாங்க சென்றிருந்த சாருகேஷி உள்ளே வந்தாள். உடைகளை ஜெனிக்கு துணையிருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, இவள் உள்ளே போக மருத்துவர் வெளியில் வந்தார்.
“சாரு, ரைட்?”
“எஸ் டாக்டர்!”
“பீடியா படிக்குறீங்க தானே?”
“ஆமா டாக்டர், எனி ப்ராப்ளம்?”
“எஸ்மா.”
“பேபிக்கு…” என்று சொல்லும் போதே அவள் குரல் உள்ளே போனது.
“பேபி இஸ் ஃபைன், மதர்க்கு தான்…”
“என்னாச்சு?” என்று பதறினாள் அவள்.
“ப்ளீடிங் ரொம்ப அதிகமா இருக்கு. அவங்க பிளட் குரூப் ரொம்ப ரேர். முன்னாடி அட்மிட் பண்ணிட்டு பிளட் அரேன்ஜ் பண்ண நினைச்சோம், பட் லேபர் பெயின் ரொம்ப ஏர்லியா வந்திட்டு.”
“என்ன பிளட் குரூப் டாக்டர்?”
அவர் சொல்லவும் முகம் மலர்ந்தவள், “எனக்கும் அந்த பிளட் தான், நான் கொடுக்கலாம் தானே?”
“அஃப்கோர்ஸ்! எஸ், இருந்தாலும் பிளட் பத்தாது. நான் வெளிய அரேன்ஜ் பண்றேன். இம்மிடியேட்டா தேவைப்படுறதை நீங்க கொடுங்க.” என்றவர் நிம்மதியுடன் நகர்ந்தார்.
விஷயம் கேள்விப்பட்டு அடித்து பிடித்து மருத்துவமனைக்கு ஓடிவந்த செல்வின், சாருவின் கையைப் பிடித்து கதறிவிட்டான். அது முதல் சாரு, அவனுக்கும் அவன் மனைவி ஜெனிக்கும் இன்றியமையாதவளாகிப் போனாள்.
திருப்புகழ் இந்தியா வருவதற்கு ஒரு மாதம் இருந்த வேளையில், நள்ளிரவு நேரம் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தவனை கலைத்தது அலைபேசியின் அழைப்பு மணி.
கண்ணைக் கசக்கி எழுந்தவன் நேரத்தைப் பார்க்க, மணி மூன்று என்றது. இந்திய நேரம் மாலையைக் காட்ட, அலைபேசி எடுத்து பார்க்க அன்னையின் அழைப்பு. பொத்தானை அழுத்தி காதுக்குக் கொடுத்தவன் காதில் விழுந்தது அன்னையின் கதறலே.
உடலலெல்லாம் பதறிப்போக, அன்னை சொன்னதை அப்படியே கேட்டவன் மனைவியிடத்தில் வார்த்தையை விட்டிருக்க, நீண்டதொரு பிரிவு அவர்களிடத்தில். அவன் திரும்ப வந்த வேளை, மனைவி கண் காணாது எங்கோ சென்று விட்டிருந்தாள், அவன் கண்ணில் இருந்து.
***
1 comment
அப்படி என்னாத்தை சொன்னாங்க இந்த வசந்தாம்மான்னு தெரியலையே..?
😔😔😔
CRVS (or) CRVS 2797