அகானா – 98
மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பான விசாரணைக்குப் பிறகு, அனைவரின் வாழ்க்கையிலும் மெல்ல மெல்ல அமைதி திரும்பத் தொடங்கியது.
பல வருடங்களாக வெளியில் தெரியாமல் நடந்து கொண்டிருந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்திருந்தன.
சில உறவுகள் உடைந்திருந்தன.
சில உறவுகள் புதிதாக அர்த்தம் பெற்றிருந்தன.
ஆனால்… சில காயங்கள் மட்டும் இன்னும் ஆறாமல் அப்படியே இருந்தன.
அகானாவிற்கு ட்ரான்ஃபர் உறுதியாகியிருந்தது. நிலவன் கூறியது போல விருதுநகர் மாவட்டம் என்று தலைமை தெரிவித்திருந்தது.
ஆகன் தான் மிகவும் தவித்துப் போனான், அகானாவிற்கும் வேதனை இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் இரும்பைப் போலவே இருந்தாள்.
ஒரு வாரத்தில் விருதுநகரில் பதவி ஏற்க வேண்டும். அதற்கான வேலைகளில் இருந்தாள் பெண். நேரம் கடுகென சுருங்கிக் கொண்டிருந்தது.
ஆரியனும், மஞ்சரியும் ஒரு நாளில் இரண்டு முறையாவது அழைத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
மகளின் சாதனையை செய்தியில் பார்த்து, ஒரு அன்னையாக பூரித்துப் போயிருந்தார் மஞ்சரி.
மகள் சொன்னது போல தன்னைப் பார்க்க பார்க்கத்தான் அவர்கள் மேல் பழிவெறி அதிகம் ஆகியிருக்கிறதோ என்பதை உண்மை என்று நம்பிவிட்டார்.
இப்போது மகளை விட்டுத் தூரமாக வந்த பிறகு, அவர்களைப்பற்றி யோசிக்காமல் தன் வேலையில் கவனம் செலுத்தியிருக்கிறாளே என்று மனதை சமன் செய்து கொண்டார்.
இனி அடிக்கடி அவர்கள் குடும்பத்திற்கு முன் தான் செல்லக்கூடாது என்று உறுதியே எடுத்துக்கொண்டார், மகளின் வாழ்விற்காக.
அன்றும் அப்படியே மகளிடம் பேசிய பிறகு.. தன்னறையின் பால்கனியில் நின்று கொண்டிருந்தாள் மஞ்சரி.
நகர விளக்குகள் ஒளிரத் தொடங்கியிருந்தன. சிந்தனைகள் மகளைப்பற்றியே சுற்றிக் கொண்டிருந்தது.
அவரின் சிந்தனையைக் கலைப்பதைப் போலவே, அப்போது அங்கே வந்தார் சுபாஷ்.
“வாங்க சுபாஷ்..”
“என்ன யோசனை?”
“ஒன்னுமில்லை.”
“அம்முப்பத்தியா?”
மஞ்சரி சிரித்தார். “நீங்க இன்னும் மாறவே இல்ல.”
“மாற வேண்டிய அவசியம் வரல.” சுபாஷின் பதிலில் சில நொடிகள் அமைதி.
அந்த அமைதியைக் கலைத்தார் மஞ்சரி. “சுபாஷ்…”
“ம்ம்?”
“எனக்கு இன்னொரு கல்யாண வாழ்க்கையில விருப்பம் இல்லை.” என்றார் அமைதியாக.
சுபாஷும் அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தார்.
“என்னால யாருக்கும் பொய்யான நம்பிக்கை கொடுக்க முடியாது. நான் இன்னும் அந்த மனநிலையிலயும் இல்லை.” என்றார் தவிப்பு நிறைந்த குரலில்.
சுபாஷ் மெதுவாக தலையசைத்தார். “எனக்கு தெரியும், புரியும்.” என்றார் பொறுமையாக.
“தெரியுமா?”
“ஆமா. அதனாலதான் நான் உங்களை வற்புறுத்தல மஞ்சரி.”
அவரது குரலில் வழக்கமான அமைதி இருந்தது.
“எனக்கு நீ சந்தோஷமா இருக்கணும். அது என் மனைவியா இருந்தாலும் சரி…” என்று நிறுத்தியவர் “இல்ல என் நல்ல நண்பரா இருந்தாலும் சரி.” என்று மஞ்சரியின் கண்களைப் பார்த்து கூற,
மஞ்சரியின் கண்கள் கலங்கின.”தேங்க்ஸ்.” விழிகளில் வலிந்த நீரைத் துடைத்தபடியே..
சுபாஷ் சிரித்தபடியே, “வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது மஞ்சு. நாளை என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும்… நாம நல்ல நண்பர்களா இருக்கலாம்.” என்றார் மஞ்சரியின் மனதை புரிந்ததை போல, மஞ்சரி அமைதியாக தலையசைத்தாள். அந்த தலையசைப்பில் ஒரு நிம்மதியும், ஆசுவாசமும் தெரிந்ததை சுபாஷால் புரிந்து கொள்ள முடிந்தது.
அந்த உறவுக்கு அதுவே போதுமானதாக இருந்தது.
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே!
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும் சூட்டுவேன்
இங்கு ரவியின் வீட்டில்.
பால்கனியில் நின்றபடி தொடுவானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ரவி.
இந்த இரண்டு நாட்களில் மைதிலி தன் விவாகரத்து பேச்சை நிறுத்தினா. ரவியும் வெளிநாடு செல்லும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.
ஆரியனும் இல்லை, ஆகனும் இனி வாரக் கடைசியில் மனைவியிடம் சென்று விடுவான், அப்போது மருத்துவமனையைப் பார்த்துக்கொள்ள ஆள் வேண்டுமே என யோசித்து இந்த முடிவை எடுத்திருந்தார்.
யோசிக்க வைத்திருந்தான் ஆகன். “மாமா.. இனி இப்படித்தான் இருக்க முடியும்.. அம்முவோட ஜாபை நாம ரிசைன் பண்ணுனு சொல்ல முடியாது. அவளுக்கே எப்போத் தோனுதோ அப்ப பண்ணட்டும், அதுவரைக்கும் நான் வீக்கென்ட் அவக்கூடத்தான், நாளைக்கே பேபின்னு ஆகிட்டா, ஃபுல்டைம் அவக்கூட இருக்கனும், சோ என்னை நம்பாம நீங்க கொஞ்சம் இருந்து பாருங்க..” என்று முடித்திருந்தான்.
ரவிக்கும் இது புரிந்தது.. மஞ்சரி இங்கே இருந்திருந்தால் கூட அவரால் மறுத்துப் பேசியிருக்க முடியும், அவரும் இல்லை எனும் போது மகள் தனியாக திணறிப் போவாளே, அவளுக்காகவேனும் இவன் சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று நினைத்து சரியென்றிருந்தார்.
சிந்தனைகள் மகளிடம் சென்று கொண்டிருக்க, அப்போது மெதுவாக அறைக்குள் நுழைந்தார் மைதிலி.
இருவருக்கும் இடையே சில நொடிகள் அமைதி நிலவியது.
அதை உடைத்தது ரவிதான்.
“உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும் மைத்தி.”
“கேளுங்க.”
“நீ ஏன் இவ்வளவு தூரம் மோசமா நட்டந்துக்கிட்ட.?”
மைதிலி அமைதியாக அவனைப் பார்த்தாள்.
“அகானாவை வெறுத்தது… மஞ்சரியை காயப்படுத்தியது… எல்லாத்தையும் தான் சொல்றேன்.”
அவர் மெதுவாக மூச்சை இழுத்தார்.
“ஏன்னு உங்களுக்கேத் தெரியும், யார் என்னை என்ன சொன்னாலும், எனக்கு கவலையில்லை. நான் உங்களை விரும்பினேன். உங்களை மேரேஜ் பண்ணிக்க ஒரு வாய்ப்பு கிடைச்சது, அதை யூஸ் பண்ணிக்கிட்டேன், இதை தப்புன்னு என்னால ஏத்துக்க முடியல. அதோட அவங்க திரும்பி வந்தா, நீங்க அவங்ககிட்டயே போயிடுவீங்கனு நான் ரொம்ப பயந்தேன்.” என்றார் மெதுவாக.
ரவியின் புருவம் சுருங்கியது. பின் அவரது பார்வை மாறியது.
“நீங்க ரொம்ப நல்லவர். அதனாலதான் எனக்கு பயம். ஒருநாள் மஞ்சரியும் அகானாவும் உங்க வாழ்க்கைக்குள்ள திரும்பி வந்தா… நான் தனியா நின்னுடுவேனோன்னு தோணிச்சு.”
ரவியின் முகத்தில் வலி தெரிந்தது.
“அதனால தப்பான முடிவுகளை எடுத்தேன். அகானாவை காயப்படுத்தினேன். அவ எனக்கு என்ன பண்ணுனா? ஒன்னுமே பண்ணல. ஆனா… நான் அவளை காயப்படுத்திட்டேன். தப்புனு புரிஞ்சது, விலகிடனும்னு கூட தோனுச்சு, ஆனா முடில..” முதல் முறையாக மைதிலியின் குரல் உடைந்தது.
சில நொடிகள் அமைதி நிலவியது.
மனைவியின் அழுகை பொறுக்காமல் “நம்ம ரெண்டு பேருமே தப்பு பண்ணியிருக்கோம் மைத்தி. அதிலும் நான்..” என்றார் ரவி.
அவள் நிமிர்ந்து பார்த்தார். “மஞ்சரியை பத்தி இனி நான் பேச விரும்பல, அது எனக்கு மட்டும் இல்ல, அவங்களுக்கும் அது சங்கடத்தைக் கொடுக்கும். ஆனா அம்முவை விட்டுருக்கக்கூடாது.. என் அம்மாவுக்கும், ரஞ்சிக்கும் பயந்து தான் பார்க்கல.. ஆனா உன்கிட்டயாச்சும் சொல்லிருக்கனும்..” என்றார் வேதனையாக.
“நீ பயந்ததுக்கு இதெல்லாம் தானே காரணம். நான் உன்னை புரிஞ்சுக்காம இருந்தேன். அதான் நம்ம வாழ்க்கையை இந்த நிலைக்கு கொண்டு வந்துடுச்சு.”
மைதிலியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
“அம்முவை இனி எப்போதும் என்னால விடமுடியாது மைத்தி. என் பொண்ணா உன்னால ஏத்துக்க முடிலன்னா, ஆகனோட மனைவியா ஏத்துக்க பழகு.. அதுதான் நம்ம குடும்பத்துக்கு நல்லது.. இந்த சின்ன வயசுல ரெண்டு பேருமே ரொம்ப கஷ்டப்பட்டுடாங்க. இனி நாம அவங்களுக்கு சப்போர்ட்டாதான் இருக்கனும்..” என்றார் மனைவிக்கு புரிய வேண்டும் என்ற சிறு அதிகார தொனியில்.
“புரிஞ்சது..” என்ற மைதிலியின் மனம் வேதனையை அளவுக்கதிகமாக சுமந்தது. ஆனால் இதுதானே நிதர்சனம். நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ள வெகுவாக போரட வேண்டும் என்று அவருக்கும் புரிந்தது.
ரவியின் உதடுகளில் சிறிய புன்னகை மலர்ந்தது. மைதிலி எதுவும் பேசவில்லை.
ஆனால் அவளது கண்களில் பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நிம்மதி தெரிந்தது.
என் பாடலில் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்றுதான் எங்கே பிரிவது
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
அதே தேனி வருசநாடு நெடுஞ்சாலை…
மாலை நேரம். இளையராஜாவின் இதமான பாடல்கள்..
சாலையில் கார் மெதுவாக பயணித்துக் கொண்டிருந்தது.
ஸ்டீயரிங்கில் ஆகனின் விரல்கள் தாளமிட்டுக் கொண்டிருந்தன.
அருகில் அமைதியாக அமர்ந்திருந்தாள் அகானா.
பல நாட்களாக ஓய்வில்லாமல் ஓடிய மனம் இன்று தான் சற்று அமைதியாக இருந்தது.
ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தவளை ஒரு நொடி திரும்பிப் பார்த்தான் ஆகன்.
அவன் அசைவை உணர்ந்து “என்ன?” என்று பார்வையால் கேள்வி கேட்டாள்.
“ஒன்னுமில்லை.” என்பது போல் அவனும் புருவத்தை சுருக்கி தோள்களைக் குலுக்கி காண்பித்தான்.
“பொய்.” என பெண் முறைக்க, ஆகன் வாய்விட்டு சிரித்தான்.
“இப்போ தான் நீ பழைய அகானா மாதிரி இருக்க. என் அம்மு எனக்கு கிடைச்சிட்டா..” என்றான் சந்தோசமாக.
“எப்படி?” என மீண்டும் பார்வையால் கேட்க,
“மனசு விட்டு சிரிக்கிறா.” என்றான் ஆத்மார்த்தமாக.
அந்த ஒரு வார்த்தையில் அவளது புன்னகை சற்றே மங்கியது. சில நொடிகள் அமைதி அகானாவிடம்.
“நான் ரொம்ப மாறிட்டேனா மாமா?” என்றாள் சிறுபிள்ளை போல்.
ஆகன் அவளைப் பார்த்தான். பின் “நீ மாறல, நாங்க எல்லாரும் தான் மாத்திட்டோம்..” என்றான் குற்றவுணர்வோடு.
“ம்ச்..” என அந்த பேச்சை அகானா ரசிக்கவில்லை என்பது போல் சலிப்பாக உச்சுக் கொட்டினாள்.
அந்த சலிப்பை உடனே போக்கும் வேகம் அவனுக்கு “அம்மு.. நீ மாறினதான்..” என்றதும் அகானாவின் முகம் உடனே வாடியது.
“ஆனா கெட்டதுக்காக இல்ல. உன்னை காயப்படுத்தினவங்களுக்கு எதிரா,, உன் அம்மாவுக்காக போராடின. உண்மைக்காக நின்ன. அதுல நான் பெருமைதான் படுறேன். இடைல நானும் நிறைய கிறுக்குத்தனம் பண்ணிருக்கேன். அது எல்லாத்துக்கும் சாரி..” என்றான் அவள் கையைப் பிடித்தபடி.
அகானாவின் கண்கள் மெதுவாக கலங்கின. “ஆனா சில நேரம் நான் எக்ஸ்ட்ரீம் லெவெலுக்கு போயிட்டேன்னு தோணும்.” என்றாள் மெதுவாக.
ஆகன் சிரித்தான்.
“அதுக்குத்தான் நான் இருக்கேன். நீ எவ்வளவு தூரம் போனாலும் திரும்பி வர ஒரு வீடு இருக்குன்னு ஞாபகப்படுத்த. உன்னோட வீடு உனக்கு இருக்குனு ஞாபகப்படுத்த, உனக்காக நான் இருக்கேனு ஞாபகப்படுத்த..” என்று அவளின் இதயத்தை வார்த்தைகளால் வருட, அந்த வார்த்தைகள் அகானாவின் இதயத்தை நிஜமாகவே வருடின.
பல வருடங்களாக யாரிடமும் சாய்ந்து அழாதவள்…
“தேங்க்ஸ்.” என்ற்படியே மெதுவாக அவன் தோளில் சாய்ந்தாள்.
“எதுக்கு?”
“என்னை விட்டுப் போகாம இருந்ததுக்கு.”
ஆகன் சிரித்தான்.
“நீங்க கலெக்டர்தான் மேடம். ஆனா நான் உங்க ஹஸ்பன்ட், நீங்க ஆர்டர் போட்டா கூட நான் உங்களை விட்டு போக முடியாது.”
சட்டென அகானா சிரித்துவிட்டாள். பல மாதங்களுக்குப் பிறகு… மனம் விட்டு மன்னவனின் தோல் சாய்ந்து.
அதே இதமான மனநிலையில் இருவரும் நிலவனின் வீடு வந்து சேர்ந்தனர்.
ஆகனும் அகானாவும் காரை விட்டிறங்க, கனலியின் பாட்டி பேச்சி, இருவருக்கும் திருஷ்டி சுற்றினார்.
“ஊர் கண்ணே உங்க மேலத்தான்..” என்றவர் நகர,
“மேம் என்ன இது..?” என்றவளுக்கு கூச்சமே வந்துவிட்டது.
அவர்களை பார்த்ததும் கனலி மகிழ்ச்சியுடன் வரவேற்றாள்.
“வாங்க கலெக்டர் மேடம்.”என்ற கனலியின் கிண்டலில் அகானா சிரித்தாள்.
“அக்கா… இப்பவும் கலெக்டர் மேடமா?”
“அது பழக்கமாயிடுச்சு.” இப்போது அனைவரும் சிரித்தனர்.
சில நிமிடங்கள் நலம் விசாரிப்புகள் முடிய, கனலி அகானாவின் கைகளைப் பற்றிக் கொண்டாள்.
“ஒரு விஷயம் சொல்லணும்.” அகானா அமைதியாக பார்த்தாள்.
“நான் கொடுத்த வேலையை நீ இவ்வளவு சீக்கிரமா முடிச்சு கொடுப்பேன்னு நினைக்கல. எத்தனை பேரோட வாழ்க்கையையும் நீ காப்பாத்தியிருக்க தெரியுமா.? ரொம்ப நன்றிமா?” என உணர்ச்சிப் பெருக்கில் கனலி கூற அகானா மெதுவாக சிரித்தாள்.
“நன்றி சொல்ல வேண்டியது நான் தான்.”
“நீங்க நம்பிக்கை வைக்கலன்னா இந்த உண்மை வெளியே வந்திருக்காது.”
அப்போது நிலவன் “ஸ்ரீகாந்த் பத்தின உண்மை தெரியாம போயிருந்தா, ரவி சார் தான் அகியுஸ்ட் கன்ஃபார்ம் ஆகிருக்கும்.” என்றதும்,
ஆகனும் “ஆம்” என்பது போல் தலையசைத்தான்
“ஆனா உண்மை ஜெயிக்க கொஞ்சம் தாமதம் ஆகலாம். ஆனா அது தோற்காது.” அந்த வார்த்தைகளைக் கேட்ட அனைவரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.
ஆகன் அருகில் நின்றிருந்த அகானாவை பார்த்தான்.
பல வருடங்களாக அவள் சுமந்து வந்த பாரம் இன்று இறங்கியிருந்தது.
அவளும் அதை உணர்ந்தாள். மறைந்து கொண்டிருந்த மாலையைப் பார்த்தபடி அமைதியாக நின்றாள்.
பழிவாங்கும் பயணம் முடிந்திருந்தது.
காயங்கள் இருந்தன.
நினைவுகள் இருந்தன.
ஆனால்… அவற்றைத் தாண்டி வாழ்க்கை முன்னே செல்லத் தயாராக இருந்தது. அவளும் தயாராக இருந்தாள்.
நீயும் நானும் போவது
காதல் என்னும் பாதையில்
சேரும் நேரம் வந்தது
மீதி தூரம் பாதியில்
பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா
எனது பாதை வேறு உனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாளே
தொடரும்… ❤️📖
1 comment
அகானா ஆகக் பாதை ஒண்ணுத்தானே, அப்புறம் எதுக்கு கடைசி அந்த வரிகள்..
சம்பந்தமே இல்லாமல்..?
😀😀😀
CRVS (or) CRVS 2797