அகானா – 100
“நித்யா.. எல்லாம் சரியா இருக்கான்னு பாரு.. அங்க வந்துட்டு அதைக் காணோம், இதைக் காணோம்னு சொல்லி என்னை டென்சன் பண்ணக்கூடாது..” என வினோத் கத்துவதை காதில் வாங்கியதாக தெரியவில்லை நித்யா..
நெருக்கி கட்டிய செண்டு மல்லியை அழுங்காமல், ஒரு கவரில் சுற்றி பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
“அம்மா.. நான் இந்த ஆஃப் சாரிதான் கட்டணுமா? அக்கா எடுத்து கொடுத்த ப்ரவுன் லெகங்காவை போட்டுக்கட்டுமா?” என்று வந்த ஹரினியிடம்,
“ஒழுங்கா எடுத்து வச்சிருக்க ட்ரெசை போட்டா போதும்.. எல்லாம் எடுத்து வச்சிட்டா போய் தூங்கு, காலைல நேரமா எழுந்துக்கனும்..” என கண்டிப்பாக கூற,
“ம்மா…” என முறைத்தாலும், வேறு சொல்லாமல் உள்ளே செல்ல, ஹரீஷோ தாய்க்கு தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தான்.
அனைத்தையும் எடுத்து தனியாக வைத்துவிட்டு நிமிர்ந்தவர் மகனிடம் “ஹரிஷ் இதை கார்ல வச்சிடு.. பூ மட்டும் ஃப்ரிட்ஜ்ல வை. போகும் போது எடுத்துக்கலாம். மறக்காம அம்மாவுக்கு ஞாபகபடுத்து..” என்று தன் உடலை தளர்த்தி சோபாவில் சாய்ந்து அமர்ந்தார்.
அப்போதுதான் வினோத் தன்னையே முறைத்துக் கொண்டிருப்பதை பார்க்க, ‘என்ன?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினார்.
“இப்போ நான் பேசினது உன் காதுலயே விழல.. அப்படித்தானே.!”
“ம்ம்ம்.. கவனிக்கலயே! என்ன கேட்டீங்க?”
“எல்லாமே எடுத்து வச்சாச்சுத்தானே..”
“ஹ்ம்ம் எல்லாம் எடுத்து வச்சாச்சு.. கொஞ்ச நேரத்துல நீங்க மண்டபத்துக்கு போய் அண்ணிக்கிட்ட சொல்லிட்டு, வச்சிட்டு வந்துடுங்க..”
“சரி… ஆனா நித்தி.. அங்க என்ன நடந்தாலும் நீ சங்கடப்படக்கூடாது.. அம்முவுக்கு பிடிக்கலன்னா செய்ய வேண்டாம்..”
“ஹ்ம்ம்” என்ற பெருமூச்சை விட்டு, கணவனை நேராக பார்த்த நித்தி, “வேண்டாம்னு சொல்லமாட்டான்னு தான் தோணுது.. பார்ப்போம்..” என்றார் தளர்வாக.
“கண்டிப்பா நோ சொல்லமாட்டா தான். ஆனாலும் அண்ணிக்கு சங்கடம் ஆகிடக்கூடாதில்லையா? அதனாலதான் சொல்றேன்..” என்றான் வினோத்தும்..
“ம்ம் புரியுதுப்பா.. விடுங்க பார்த்துப்போம்..” என்ற இருவருக்கும் நாளை அகானா என்ன செய்வாளோ என்று சற்று பதட்டமாகத்தான் இருந்தது..
ஆம் நாளை அகானாவிற்கு சீமந்தம்..
பெற்றோரின் ஸ்தானத்திலிருந்து விஜயாவும் முருகானந்தமும் தான் அனைத்தையும் செய்கின்றனர்.
தாங்கள் செய்கிறோம் என்று வந்தவர்களிடம், மஞ்சரி மறுத்து விட்டதில் கவிதாவுக்கும், நித்தியாவுக்கும் ஏகப்பட்ட வருத்தம்.
கவிதாவிடம் “விஜி அக்கா அம்முவை தன்னோட மகளாகத்தான் நினைச்சு வளர்த்திருக்காங்க. நீங்க எல்லாம் எனக்காக வந்த பிறகு கூட, அவங்களோட பாசமும் அக்கறையும் குறைஞ்சதில்லை. அம்முவுக்கு செய்யனும்னு அவங்களுக்கும் கொள்ள ஆசை. அதை வேண்டாம்னு என்னால எப்படி மறுக்க முடியும். இன்னைக்கு நானும் அம்முவும் உயிரோட, ஒரு நிலையில் நிற்க அவங்க மட்டும்தான் காரணம். அதை யாராலும் மறுக்க முடியுமா சொல்லு.” என்ற தங்கையின் பேச்சுக்குப் பிறகு, கவிதா அடுத்து எதுவும் பேசவில்லை
ஆனால் நித்யாவால் அப்படி அமைதியாக அதை கடக்க முடியவில்லை. கணவனிடமும் ரஞ்சனியிடமும் புலம்பி தள்ளி விட்டாள். அவளால் புலம்ப மட்டுமே முடிந்தது. மஞ்சரியின் முடிவை யாராலும் மாற்ற முடியவில்லை.
“விடு நித்தி.. இந்த ஒன்னோடவா நிறுத்திட போறாங்க. அடுத்த பிள்ளைக்கு இந்த ஊரை மெச்சுற மாதிரி செய். இல்லைன்னாலும் இந்த குழந்தைக்கு தாய் மாமன் நம்ம ஹரிஷ் தான. அந்த உரிமையை விட்டுக் கொடுக்காத..” என கவிதாவும், ரஞ்சனியும் ஏன் மைதிலியும் கூட சொல்லிப் பார்த்து விட்டார்.
ஆனாலும் நித்தியா அமைதி அடையவில்லை. நேராக அகானாவிடம் சென்று “அவங்க செய்ற மாதிரி, நானும் சீர் செய்வேன். இது என்னோட உரிமை. அதை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்..” என கோபமாக சொல்லிவிட்டு வந்துவிட, அகானா அதை ஒரு புன்னகையுடன் கடந்தாலும், ஆகனுக்குத்தான் தலையிடியாக இருந்தது.
“என்னப்பா நித்யா அத்தை இவ்வளவு பிடிவாதமா இருக்காங்க..” என ஆகன் தந்தையிடம் புலம்ப,
“அந்தப் புள்ள சொல்றதிலையும் நியாயம் இருக்கு கண்ணா. நாம நித்தியையும் அந்த புள்ளையோட உணர்வுகளையும் புரிஞ்சுக்கணும். நீ அம்முகிட்ட இதையெல்லாம் சொல்லாதே. ஏற்கனவே ஏகப்பட்ட வேலை பளு அவளுக்கு. அதுல இதுவும் சேர்ந்து ஸ்ட்ரஸ் ஆகிட போகுது..” என மகனுக்கு சொல்லி, அவனையும் சமாதானம் செய்தார் சங்கர்.
விருதுநகர் மாவட்டத்தில் பெருகி வரும் பட்டாசு தொழிற்சாலை விபத்துகளும், ஆணவக் கொலைகளும் தான் இப்போது அகானாவிற்கு பெரிய தலைவலி.
இரண்டு நாட்களுக்கு முன் காதலனுடன் போனில் பேசியதால், அண்ணன் தட்டி கேட்டதற்கு தற்கொலை செய்து கொண்டதாக, 17 வயது இளம்பெண்ணை பற்றிய செய்தி வரவும், அகானாவிற்கு சந்தேகம் வந்துவிட, உடனே மதுரை மருத்துவ கல்லூரிக்கு, அந்தப் பெண்ணின் உடலை, உடற்கூறாய்வு செய்ய அனுப்பி வைத்துவிட்டாள்.
அவளின் சந்தேகம் சரி என்பது போல, அந்த பெண்ணை பெற்ற தாயும், கூட பிறந்த சகோதரனும் சேர்ந்து அடித்தே கொன்று, தூக்கில் தொங்க விட்டதாக தெரிய வந்தது.
உடனே அவர்களை அரஸ்ட் செய்து, நீதிமன்ற காவலில் வைத்து என முதல்நாள் இரவு வரைக்கும் அகானாவிற்கு ஓட்டம் தான்.
அடுத்த நாள் சீமந்தம்.. முதல் நாள் இரவு 3 மணிக்கு தான் தேனிக்கு அவளால் வர முடிந்தது.
இதையெல்லாம் யோசித்து தான் சங்கர் மகனிடம் கூறி சென்றார்.
ஆகனுக்கு மனைவியின் வேலை தெரியும் என்பதால், அவளை அதிகம் வற்புறுத்தவில்லை. மனைவியின் மனம் வருந்தும்படி நித்தியா அத்தை எதுவும் செய்து விடுவாரோ என்று ஒரு பதட்டத்திலேயே இருந்தான்.
ஆகனின் பதட்டம் எதுவும் இல்லை அவனின் மனைவியிடம்.
முதல் முறையாக மிகவும் ரசித்து, விரும்பி தனக்கான ஒரு விழாவை கொண்டாடுகிறாள் பெண்.
பழைய கோபம், வெறுப்பு, ஆத்திரம் அனைத்தும் இப்போது அவளிடம் குறைந்திருந்தது.
ஒருவேளை இந்த குனாதிசயங்களை தாய்மை கொடுத்ததோ?
“அம்மு…” என்ற மஞ்சரியின் அழைப்பில் மிகவும் சோம்பலாகவே விழித்தாள் பெண்..
“அம்மு.. சாதாரணமா ரெடியாகி வந்தா போதும். மண்டபத்துல போய்தான் மேக்கப் எல்லாம் போடனும். அதனால ஒரு கவுன் மட்டும் போட்டுட்டு கிளம்பு..” என அவளுக்கு சத்துமாவு கஞ்சியை நீட்ட,
“ம்மா.. மாமா எங்க?”
“கண்ணா மண்டபத்துக்கு போய்ட்டாங்க அம்மு.. நீ ரெடியாகிட்டு கால் பண்ணு, வந்து அழைச்சிட்டு போவாங்க..”
“ஹ்ம்ம்” என்றபடியே ப்ரஷ் செய்துவிட்டு, அந்த கஞ்சியைக் குடிக்க ஆரம்பித்தாள்.
“அம்மு..” என்ற மஞ்சரியின் தயக்கமான குரலில்,
“என்ன ம்மா..?”
“அது.. நித்தி ரொம்பவே பிடிவாதமா எல்லாம் செஞ்சிட்டு இருக்கா.. அவ செஞ்சா செய்யட்டும், சபையில வச்சு நீ எதுவும் கோபப்பட்டுடாத..” என அதே தயக்கமான குரலில் கூற,
“ஹ்ம்ம்.. அப்போ மிஸ்டர் ரவி ஃபேமிலியை அசிங்கப்படுத்த எனக்கொரு வாய்ப்பிருக்குனு சொல்றீங்க, அப்படியா?” என அகானா கிண்டலாக கேட்க
“அம்மு..” என கண்டிப்புடன் மகளை அதட்டினார் மஞ்சரி.
“இனி இந்த மாதிரி பேச்சுக்களை நீ பேசக்கூடாது..” என்று சத்தமாக பேசிய நேரம் அறைக்கதவைத் திறந்து கொண்டு பதட்டமாக வந்தான் ஆகன்.
அவனைப் பார்த்ததும் மஞ்சரி மகளை முறைத்துக்கொண்டே வெளியில் செல்ல, அகானாவிற்கு புன்னகை விரிந்தது.
மனைவியின் சிரிப்பு கணவனுக்கும் தொற்றிக்கொள்ள, “என்னடி..?” என்றான் பெண்ணவளை கைப்பிடித்து, தன்னோடு சேர்த்தனைத்து..
“ஹான்.. இந்த மஞ்சரி மேடம் உங்களுக்கு மாமியாரா? இல்ல எனக்கு மாமியாரானு யோசிச்சிட்டு இருக்கேன்..” என கிண்டலாக கூற, வாய்விட்டுச் சிரித்தான் ஆகன்.
எப்போது அகானா உண்டாகியிருக்கிறாள் என்று தெரிந்ததோ, அப்போதிருந்தே மஞ்சரி மிகவும் கண்டிப்புடன் தான் மகளிடம் நடந்து கொள்கிறார்.
அதிலும் வேலை தவிர்த்து மற்ற யாரிடமும் கோபமாகவோ, சத்தமாகவோ பேசவேக் கூடாது என கண்டிசனே போட்டிருக்கிறார்.
அதோடு மகிழினிக்கு ஏழாம் மாதம் சீமந்தம் செய்து, இங்கு அழைத்து வந்துவிட்டான் ஆகன்.
மஞ்சரிக்கும் இந்த நேரத்தில் மகளோடு இருக்க வேண்டும் என்று இருக்குமே, மகியைத் தனியாக விட்டு வர யோசித்து இருதலைக் கொள்ளி எரும்பாக தவித்தவருக்கு, மருமகனின் இந்த செயல் பெருத்த ஆறுதலைக் கொடுத்தது.
தங்கையை தாயின் பாதுகாப்பில் விட்டவன், மஞ்சரியை மனைவியிடம் விருதுநகருக்கு அழைத்து வந்துவிட்டான்.
அதோடு தேனியிலேயே தனி வீடு ஒன்றையும் வாங்கிவிட்டான்.
மகனின் செயலில் ரஞ்சனிக்கு அத்தனை கோபம் தான். ஆனால் அதை இப்போது வெளிக்காட்ட முடியாதே.
ஏற்கனவே ரவி ரஞ்சனியிடம் ‘ஆகனின் விசயத்தில் தலையிடாதே, அவன் என்ன செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்’ என்று சொல்லி முடித்திருந்தார்.
ஆனாலும் மனம் கேட்காமால் கணவனிடம் புலம்ப, “அம்மு எப்படி உன் கூட வந்து இருப்பான்னு நினைக்கிற? நீ செஞ்செதெல்லாம் மறந்து இந்த வீட்டுல வந்து இருக்க, அவ என்ன தியாகியா? இல்ல நீதான் ஒழுங்கா..? என் வாயைக் கிளறாம அமைதியா போயிடு.. அம்முவுக்கு எப்போ கோபம் குறைஞ்சு இங்க வரனும்னு நினைக்கிறாளோ அப்போ வரட்டும், அது வரைக்கும் இதைப்பத்தி யாருக்கிட்டயும் வாயைத் திறக்கக்கூடாது..” என கண்டிப்புடன் கூற, மனதில் புழுக்கம் இருந்தாலும், அடுத்து யாருடனும் இதுபற்றி பேசவில்லை ரஞ்சனி.
“அகானா எங்கு இருப்பாளோ, அங்குதானே நானும் இருப்பேன், இப்போ எதுக்கு வீடு?” என மஞ்சரி கேட்டாலும், அதற்கும் ஒரு புன்னகை மட்டுமே ஆகனிடம்.
தன் தாயை மனதில் வைத்து, அவரின் மனம் வருந்தாமல் தன் கணவன் செய்யும் ஒவ்வொரு செயலும், பெண்ணவளை மொத்தமாக அவன்பால் சாய்த்தது.
ஏற்கனவே அவன் மேல் பித்தாகி திரிந்தவள், இப்போது அந்த நிலையையும் கடந்து அவன் மேல் பைத்தியமாகிப் போனாள்.
“அம்மு… குளிச்சிட்டு கிளம்பு.. எல்லாரும் மண்டபத்துக்கு வர ஆரம்பிச்சிட்டாங்க..” என்றான் மனைவியின் அனைப்பை லேசாக தளர்த்தி,
ஆனால் அவளோ மேலும் கணவனோடு ஒட்டி நின்று அவனை நிமிர்ந்து பார்க்க, நிமிர்ந்த பெண்ணின் நெற்றியில், அந்த அலைப்புறும் விழிகளில் முத்தமிட்டு “என்ன ஓடுது இந்த மண்டையில..?” என மென்மையாக கேட்க,
“தெரில.. ஆனா என்னமோ மனசுக்கு கஷ்டமா இருக்கு..” என்றாள் மறைக்காமல்.
“மாமா மாதிரி நானும் பண்ணிடுவேன்னு உன் உள்மனசு சொல்லிட்டே இருக்குனு எனக்கு தெரியும். எந்த காரணம் சொல்லியோ, இல்ல ப்ராமிஸ் பண்ணியோ அதை சரி பண்ண முடியாது அம்மு.. நம்ம வாழ்ற வாழ்க்கையில நான் எப்படி இருக்கேன்னு உனக்குப் புரியும், தெரியும். அப்போ உனக்கு இந்த பயமெல்லாம் போயிடும்..” என்றான் அவள் வருத்தப்பட்டு விடக்கூடாதே என்ற மென்மை குரலில்.
“எனக்கு எல்லாம் புரியுது மாமா.. ஆனா எல்லாரும் சொல்ற மாதிரி குழந்தை பிறந்த பிறகு சரியாகிடும்னு கூட என்னால நம்ப முடியல.. ஏன்னா அவர் நான் பிறந்த பிறகுதானே போனார்..” என்றாள் குரல் கம்ம,
மனைவியின் இந்த பேச்சில் ஆகனுக்கு கோபம் தான் வந்திருக்க வேண்டும்.. ஆனால் அவனோ அவளின் தலையை வருடியபடியே “சரியாகிடும் குட்டி.. உன் காயமும் வலியும் எனக்குப் புரியும். அதனால மனசைப் போட்டுக் குழப்பிக்காம ரெடியாகு. இன்னைக்கு நமக்கான நாள். நம்ம பேபியை கொண்டாடப் போற நாள்.. சோ எல்லாத்தையும் மறந்து இந்த டேவை ஸ்பெசலாக்கலாம்..” என மனைவிக்கு எடுத்து சொல்ல,
“ஹ்ம்ம்..” என்றவள் அவனை இறுக்கி அனைத்துக் கொண்டாள்.
இங்கு ஆரியனின் வீட்டில் “மகியையும் பாப்பாவையும் நீ அழைச்சிட்டு நேரா மண்டபத்துக்கு வந்துடு ஆரி.. நானும் அப்பாவும் மஞ்சுவை கூட்டிட்டு வந்துடுறோம். அகியை மாப்பிள்ளை அழைச்சிட்டு வந்துடுவார்..” என்ற விஜயா மிகவும் பரபரப்பாக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்.
“ம்மா.. ஆல்ரெடி எல்லா திங்க்சும் பேக் பண்ணி மண்டபத்துக்கு போயாச்சு.. அங்க காயத்ரி அக்காவும், பெரிம்மாவும் பார்த்துப்பாங்க. நீங்க ஏன் இவ்ளோ டென்சன் ஆகுறீங்க..” என்றபடியே கார் சாவியை எடுத்துக்கொண்டு வந்த மகனை பார்த்த விஜயாவிற்கு தன் கண்ணே பட்டு விடும்போல இருந்தது.
பட்டு வேட்டி சட்டையில் ஆண்களுக்கே இலக்கணமான நிமிர்வுடன் வந்தவனை, ‘இன்னைக்கு மூனு பேரையும் நிக்க வச்சு சுத்தி போடனும், தாய்க்கண்ணே கொல்லிக்கண்ணுனு சொல்லுவாங்க..’ என மனதுக்குள் சொல்லிக்கொண்டு மகனை அனுப்பி வைத்துவிட்டு கணவனுடன் அவரும், மஞ்சரியை அழைக்கக் கிளம்பினார்.
*
வெண்ணெய் திருடிய கண்ணன், அவன் காதை திருகும் யசோதை, இவர்களை பார்த்தபடியே புன்னகையுடன் நிற்கும் வாசுதேவன் என்ற அழகான ஓவியத்தை, சீமந்தப் புடவையில் நெய்திருந்தான் ஆரியன்.
அகனாவின் திருமணத்திற்கு எதுவும் செய்ய முடியவில்லை என்ற குறையை இந்த வளைகாப்பின் விசேஷத்தில் செய்து கொண்டிருந்தான் ஆரியன்.
அவன் பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்வதைக் கவனித்த சொந்தங்கள் வியந்துதான் போயினர்.
ஆரியன் மகிழினிக்கு பெண் குழந்தை. பிறந்து மூன்று மாதங்கள்தான் ஆகிறது. இன்னும் தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்லவில்லை.
அகானாவின் சீமந்தம் முடியவும், இவர்கள் பாண்டிச்சேரி சென்று அங்கிருந்து சிங்கப்பூர் கிளம்புவதாகவும், இவர்களோடு விஜயா செல்வதாகவும் முடிவு செய்திருந்தனர்.
வெண்ணிற பட்டு புடவை.. முந்தனையில் மட்டும் அத்தனை அழகான வேலைப்படு நிறைந்த புடைவை. அகானாவிற்கு அத்தனை அழகாக இருந்தது. மேடையில் அமர்ந்திருந்த மனைவியின் தாய்மை அழகை ரசித்து பார்த்தபடியே தன் கேமராவுடன் நின்றிருந்தான் ஆகன்.
அவனை முறைக்க முடியாமல் பாவமா பார்த்து ‘என்ன பண்றீங்க.?’ என கேட்க, பதில் சொல்லாமல் சிரித்தாலும் தன் வேலையில் கவனமாக இருந்தான்.
முதலில் விஜயா பொட்டு வைத்து ஆரம்பிக்க, அப்படியே கவிதா, நித்யா, ரஞ்சனி, காயத்ரி, மகிழினி, ராகினி, மாலினி என வீட்டுப் பெண்கள் வைத்து முடிய, அதுவரைக்குமே மஞ்சரி மகளிடம் வரவில்லை.
அவரின் பயம் அங்கு எல்லாருக்கும் புரிந்தாலும், ‘இந்த காலத்தில் என்ன இது?’ என்று தான் யோசித்தனர்.
அதுவரை மிகவும் இனிமையாக கடந்த நிகழ்வு, மஞ்சரியின் ஒதுக்கத்தில் சற்றே இறுக்கமான சூழலாக மாற ஆரம்பிக்க, அதை உணர்ந்த ஆகன் “அத்தை வாங்க..” என அவரின் கைப்பிடித்து அழைத்து வந்து மனைவியின் முன் நிறுத்தினான்.
“அத்தை.. உங்க பொண்ணுக்கு உங்க ஆசிர்வாதம் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கு தெரியாதா? சரி உங்க பொண்ணுக்கு வேண்டாம். உள்ள இருக்குற என் பொண்ணுக்கும் வேண்டாமா?” என கேட்கவும் மஞ்சரிக்கு கண்கள் கலங்க ஆரம்பிக்க, அகானா சட்டென மனையில் இருந்து எழப்பார்க்க,
“என்ன பண்ற நீ..?” என கோபமாக வந்து நின்றார் ரவி.
1 comment
இப்ப இந்த ரவிக்கு எதுக்கு இம்புட்டு கோபம் வருது..?
😌😌😌
CRVS (or) CRVS2797